திருவள்ளூர் மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக “நூலகம் உறங்கலாமா?” என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடத்தப்பட்டது. வட்டார அளவில் கவிதையைப் போட்டியை துவக்கி வைத்து மாணவர்களுக்காக நான் வாசித்த கவிதை
நூலகம் உறங்கலாமா?
டி.என்.முரளிதரன்
ஆறும் உறங்கலாம்
ஊரும் உறங்கலாம்
நீரும் உறங்கலாம்
நிலமும் உறங்கலாம்
நல்லொளி காட்டும்
அந்த
நூலகம் உறங்கலாமா?
1
சீறிடும் சிங்கம்
உறங்கலாம்
சிறுநரி கூட
உறங்கலாம்
ஆடிடும் மயில்கள்
உறங்கலாம்
பாடிடும் குயில்கள்
உறங்கலாம்
பண்பாட்டு அகமாய்
திகழும்
ஓர்நூலகம் உறங்கலாமா?
2
மலர்ந்திடும்
மலர்கள் உறங்கலாம்
மழைதரும் மரமும்
உறங்கலாம்
வளர்ந்திடும்
நிலவும் உறங்கலாம்
வானத்து மீன்கள்
உறங்கலாம்
எத்தனையோ அறிஞர் தந்த அந்த
நூலகம் உறங்கலாமா?
3
ஆலைகள் உறங்கலாம்-ஏன்
ஆலயமும் உறங்கலாம்
அகலச் சாலைகள்
உறங்கலாம்
அன்ன சத்திரம்
உறங்கலாம்
அறிவினை ஊட்டும்
ஒர்
நூலகம் உறங்கலாமா?
4
கதிரவன் உறங்கலாம்
கவின்முகில்
உறங்கலாம்
காற்றும் உறங்கலாம்
நாற்றும் உறங்கலாம்
வெற்றிடம் போல்
மூடி வைத்து- அந்த
நூலகம் உறங்கலாமா?
5
விதைகள் உறங்கலாம்-
நல்ல
கதைகள் உறங்கலாம்
அலைகடல் உறங்கலாம்
ஆழிசூழ் நிலமும்
உறங்கலாம்
பாழ்மனம் பண்படவைக்கும்
புத்தகம் நிறைந்து
கிடக்கும் –அந்த
நூலகம் உறங்கலாமா?
6
மீன்களும் உறங்கலாம்-மெல்லின
மான்களும் உறங்கலாம்
எருதும் உறங்கலாம்
எறும்புகள் உறங்கலாம்
மனிதம் வளர்த்தோங்க
புனிதர் பலர்
போற்றும் -அந்த
நூலகம் உறங்கலாமா?
7
விண்ணும்
உறங்கலாம்
மண்ணும்
உறங்கலாம்
எரி-மலையும் உறங்கலாம்
தாழ் மடுவும்
உறங்கலாம்
மாண்பினை வளர்க்கும்
நல்ல
நூலகம் உறங்கலாமா?
8
வாயிலில் ஓர்
நாள் முழுதும்
உட்கார நேரமும்
இன்றி
காவல் பணி செய்யும் ‘
காவலர் கூட உறங்கலாம்
அறிவினை மனிதர்க்கு
தந்து
அரும்பணி புரியும்
அந்த
நூலகம் உறங்கலாமா?
9
சீரிய குற்றம்
செய்வேர்
திருந்தவே சிறைகள்
உண்டு
நூலகம் அப்பணி
செய்யும்
நூறு சிறை மூட
உதவும்
சமூகம் செழிக்க
நூல்கள்
சீர் அகம் செய்யும்
அந்த
நூலகம் உறங்கலாமா?
10
புத்தகம் படிக்கும்போது
பசி தாகம் மறந்து
போகும்
சித்தமும் சீர்மை
பெறவே
நித்தமும் ஒர்
நூல் படிக்க
வய்ப்பினை தந்து
நம்மை
வாவா என்றழைத்துக்
கெஞ்சும் அந்த
நூலகம் தூங்கலாமா?
11
தனிமையைப் போக்கும்
நூல்கள்
தனித்துவம் கொண்ட
நூல்கள்
தரணியே போற்றும்
நூல்கள்
அழகழகாய் அடுக்கி
வைத்து
நமக்காக் ககாத்துக்
கிடக்கும்-அந்த
நூலகம் தூங்கலாமா?
12
அறுசுவை உணவில்
உண்டு
அனைவரும் ரசித்து
உண்ண
ஆனாலும் அச்சுவை
எல்லாம்
நூற்சுவை போலே
ஆகா
பாற்சுவை தோற்கும்
நல்ல
சுவைமிகு நுல்கள்
கொண்ட
நூலகம் தூங்கலாமா?
13
நூலகம் சென்று
நாளும்
நூலினை மடியில்
வைத்து
படித்திடும்
நேரம் தன்னில்
உறங்கவும் செய்வார் சிலரே
ஆனாலும் பாதகமில்லை
–புத்தகம்
புரட்டியே பார்க்க
வைத்த
நூலகம் உறங்கலாமா?
14
திறந்திடும்
நேரம் நுழைந்து
முடிடும் நேரம்
வரையில்
நூலகம் தன்னில்
இருந்து
தன்னையும் செம்மைப்
படுத்தி
நிகரிலா தலைவர்கள்
சொன்ன அந்த
நூலகம் உறங்கலாமா?
15
பள்ளியில் நூலகம்
உண்டு
பயன்பெற சிறார்கள்
உண்டு
கிழிந்திடும் என்று நாமும்
அஞ்சிட த் தேவை
இல்லை
பிள்ளைகள் படித்துக்
கிழிக்கட்டும் –
கிழித்தும் படிக்கட்டும்-சிந்திப்பீர்
அந்த நூலகம்
தூங்கலாமா?
16
புரட்சிகள் நடப்பதற்கு’
புத்தகங்கள்
விதையாய் ஆகும்
புத்துணர்ச்சி
பெறுவதற்கும்
புத்தகம் மருந்தாய்
மாறும்
வாயில்லை என்றாலும்
நம்மிடம் நூல்கள்
பேசும் –அந்த
நூலகம் உறங்கலாமா?
17
கைகளே படாத நுல்கள்
கதறியே நம்மை
அழைக்கும்
காதினில் விழாது
போனால்-தன்னை
கரையான்கள் தின்னக்
கொடுக்கும்
பெரும்பாவம்
செய்தவர் ஆவோம்- கேட்கின்றேன்
நூலகம் உறங்கலாமா?
18
இலக்கிய இன்பம்
கொடுக்கும்
அறிவியல் அறிவைக்
கொடுக்கும்
வரலாறு நமக்கு
சொல்லும்
வாழ்க்கையை புரிய
வைக்கும்
புத்தகம் வழியைக் காட்டும்-
அந்த நூலகம் தூங்கலாமா?
19
காகித நூலின்
வடிவம்
கணினிக்கு மாறிப்
பின்னர்
கைபேசிக்குள்ளும்
நுழைந்து
விரல் நுனி பிடித்திழுத்து
எவ்வகையேனும்
கற்றிடச் சொல்லும் -அந்த
நூலகம் தூங்கலாமா?
20
நூலகம் உறங்கிக்
கிடந்தால்
சமுதாயம் முடங்கிப்
போகும்
நூலகம் உறங்கிக்
கிடந்தால் ‘
அறியாமை நோய்கள் பெருகும்
மாக்களை மக்களாக்கி
மாண்புறும்
அகமாய் திகழும்
நூலகம் உறங்கலாமா?
21
பிறப்பெடுப்போம் புதிதாய் இன்று
புறப்படுவோம் நூலகம் நோக்கி
நூல்களின் வாசம்
நுகர்ந்து
நூலக உறக்கம் கலைப்போம்
வளர்க நுலகம்! வாழ்க தமிழ்!
22
நன்றி
வணக்கம்