நேற்று மாலை முகநூலுக்குள் நுழைந்த எனக்கு எழுத்தாளர் இந்துமதி அவர்களின் பதிவு கண்டு அதிர்ச்சி அடைந்தேன். குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாண ராமன் மறைந்து விட்டார் என்ற செய்தியை உருக்கமாகப் பகிர்ந்து இருந்தார். உண்மையில் நம்ப முடியவில்லை. தொடர்ந்து பிரபலங்கள் அஞ்சலிப் பதிவுகள் எழுத ஆர்மபித்துள்ளனர். பிரபல எழுத்தாளர்களுக்கு அவருடனான தொடர்பு இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் என்னைப் போன்ற அறிமுகமில்லாத ஆட்களின் அன்பைப் பெற்று எளிதானவராகத்தான் இருந்தார்.
எழுத்தார்வம் கொண்டவர்களுக்கு பத்திரிகைகளில் எழுத வாய்ப்பு கிடைக்காத நிலையில் வலைப்பூக்கள் வரப்பிரசாதமாக அமைந்தது, கதை கவிதை என அனைத்துக்கும் களம் அமைத்துக்கொடுத்து ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொடுத்தது. மனம் போன போக்கில் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் தொலைபேசி அழைப்பிசை ஒலிக்க ஏதோ அலுவலக அழைப்பாக இருக்கும் என்று நினைக்க நான் பிரியா கல்யாணராமன் பேசுகிறேன். என்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
நான் வலைப்பூவில் அப்போதுதான் சற்று வித்தியாசமாக(?) ”என்ன செய்யப் போகிறாய்” என்று ஒரு சிறுகதை எழுதி இருந்தேன். அதைப் படித்துவிட்டுத்தான் எனக்கு கால் செய்திருந்தார். அந்தக் சிறுகதையை வலைப்பூவில் இருந்தி நீக்கி விட்டு குமுதத்திற்கு அனுப்புமாறு கூறினார். நானும் சரி என்றேன்.
அனுப்பி 3 வாரத்தில் எனது புகைப்படத்துடன் சிறுகதை பிரசுரித்தார்..750 ரூபாய் சன்மானமும் எனது வங்கிக் கணக்குக்கு வந்து சேர்ந்தது
. மேலும் என் வலைப்பக்கத்தை எப்போதாவது படிப்பது உண்டு என்று கூறி மேலும் ஆச்சர்யத்தை கொடுத்தார். நான் அவ்வப்போது வடிவேலுவை பாத்திரமாக வைத்து புதிர்களை இணைத்து நகைச்சுவைக் கதைகளை எழுதி வந்தேன். அதனை அவரும் அப்போது குமுதத்தில் பணியாற்றிய கோசல்ராமும் ரசித்துப் படித்துவருவதாகக் கூறினார். சினிமாவுக்கு முயற்சி செய்கிறீர்களா என்றும் கேட்டார். அப்போதைய பிரபலம் சந்தானத்தை பாத்திரமாக வைத்து எழுதுங்கள். 4 அத்தியாயங்கள் எழுதி அனுப்புங்கள் ஒரு எண்ணைக் கொடுத்து டிஸ்கஸ் செய்யுங்கள் என்றார். பின்னர் ஏதோ காரணங்களால் அது தடைபட்டுவிட்டது.
அதன் பின்னர் சில ஒரு பக்கக்கதைகளை குமுதத்தில் வெளியிட்டார். முதலில் அவரது தனி மின்னஞ்சலுக்குத்தான் கதைகளை அனுப்பி வந்தேன். ஆனாலும் அதனை தொந்தரவாகக் கருதாமல் பிரசுரித்தார். அதன் பின்னர் நானே குமுதம் மின்னஞ்சலுக்கு அனுப்ப ஆரம்பித்தேன். .
நான் டிபிஐ வளாகத்தில் பணியாற்றிய போது தனது மகளுக்கு +2 பாடப்புத்தகங்கள் சில வாங்கித்தருமாறு கூறினார். நானும் வாங்கி வைத்திருந்தேன். டிபிஐ வந்தவர் நான் பார்க்கும் முன்பே கதைக்கு அனுப்பிய ஃபோட்டோவை நினைவில் வைத்து என்னைக் கண்டுபிடித்து விட்டார்.. புத்தகங்கள் பெற்றுக் கொண்டு அதற்குரிய பணத்தைக் கொடுத்தார். நான் எவ்வளவோ மறுத்தும் பணத்தை திணித்துவிட்டுத்தான் போனார்.
என்னைப் போல எத்தனையோ வாசகர்களை எழுத்தாளர்களாக ஆக்கிய பெருமை அவருக்கு உண்டு. யாராக இருந்தாலும் திறமையை அடையாளம் கண்டு வாய்ப்பளித்தவர் அவர்.
பல்வேறு கதைகளை எழுதி இருந்தாலும் ஆன்மீகம் அவரை உள்ளிழுத்துக் கொண்டது. அதனையும் அவர் சுவாரசியத்தோடும் வித்தியாசமாகவும் எழுதி வந்தார்.
எழுத்தாளர்கள்,பத்திரிகையாளர்கள், மட்டுமல்லாது வாசகர்களின் அன்பைப் பெற்ற பிரியா கல்யாணராமன் மறைந்தது பேரிழப்பாகும். வார இதழ்கள் செல்வாக்கிழந்த நிலையில் குமுதத்தின் சர்குலேஷன் மட்டும் குறையாமல் இருப்பதற்குக் காரணம் இவரது கடின உழைப்பே.
என்னைப் போன்ற எளிய வாசகர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
அவரது குடும்பத்தார்க்கு இதனை தாங்கிக் கொள்ளும் வல்லமையை இறைவன் அருளட்டும்