காந்தியின்மீது தீவிர பற்றுக் கொண்டவர் வெங்கடாசலபதி.மதுரை டி.கல்லுப் பட்டியில் காந்திநிகேதன் என்ற ஆசிரமத்தை நிறுவி சேவை செய்து வந்தார் .இன்றும் காந்தியின் அறிவுரைப் படி கிராம வளர்ச்சிக்காக பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்து வந்தது காந்தி நிகேதன்.
இந்த ஊருக்கு காந்தி ஒருமுறை வந்திருந்தார். அவரை காந்தி நிகேதனுக்கு அழைத்து சென்றனர். ஆசிரமத்தில் அனைத்து இனத்தை சேர்ந்த சிறுவர்களும் ஒன்றாக தங்கி இருந்ததைக் கண்ட காந்தி பெரிதும் மகிழ்ந்தார் . அப்போது ஆசிரம நிர்வாகிகள் காந்திஜிக்கு ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தேன் கொடுத்தனர். அது மாணவர்களால் தயாரிக்கப்பட்ட தேன் என்றும் கூறினர். மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்ட அண்ணல் அதை கொஞ்சம் ஸ்பூனில் எடுத்து அருந்துவதற்காக வாய்க்கருகே கொண்டு சென்றார். ஏதோ நினைவு வந்தவராக நிர்வாகிகளிடம் ,"இந்த தேனை எப்போதாவது இந்த சிறுவர்கள் சுவைத்திருக்கிறார்களா" என்று கேட்டார் நிர்வாகிகள் ஒருவரை பார்த்துக்கொண்டு மௌனம் சாதித்தனர். அந்த சிறுவர்கள் தேனை பருகியதே இல்லை என்பதை புரிந்து கொண்டார். உடனே தேன்கிண்ணத்தையும் ஸ்பூனை யும் கீழே வைத்துவிட்டு எழுந்தார்.
நிர்வாகிகளிடம்" ஒரு பொருளை உற்பத்தி செய்தவனுக்கு அப்பொருளின் மீது இல்லாத உரிமை அடுத்தவனுக்கு கிடையாது " என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றார் அண்ணல். காந்தியின் நினைவு நாளான இன்று எங்கோ படித்த இந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது.
இந்த நாளில்தானே அகிம்சை அண்ணல் மதவெறிக்கு பலியானார். 30.01.1948 மாலை ஐந்து மணி கடந்துவிட்டது பிரார்த்தனை செய்ய இந்துக்கள் முஸ்லீம்கள்,சீக்கியர்கள் என்று சர்வ மதத்தினரும் காத்திருந்தனர். பாபுஜி இன்னும் வரவில்லை. ஏன் இன்னும் காந்தி வரவில்லை. அண்ணல் நேரந் தவறாமையை கடைபிடிப்பவர் ஆயிற்றே. உள்ளே ஏதேனும் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறதோ என்று மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். படேலுடன் பேசிக் கொண்டிருந்த காந்தி நேரமாகி விட்டதை உணர்ந்து அவசரமாக பிரார்த்தனைக்காக எழுந்தார்.
காலந்தவறாமையை கடைபிடிக்காதவர்களுக்கு கடுந்தண்டனை உண்டு என்று சிரித்துக்கொண்டே காந்தி சொன்னதைக் கேட்ட அருகில் இருந்தவர்கள் ஒரு கணம் திகைத்தனர். மகாத்மா பிரார்த்தனை மேடை நோக்கி நடந்தார். அவரை தாங்கிப் பிடித்துக்கொண்டு ஆபா, மனு இருவரும் உடன் வந்தனர்.
பிரார்த்தனைக் கூடத்துக்கு முன்பாக காந்தி மக்களை கரம் கூப்பி வணங்க மக்களும் அமைதியாக அண்ணலை வணங்கினர். அப்போது அனைவரையும் விலக்கிக் கொண்டு அண்ணலின் எதிரே வந்தான் கொடுமனம் கொண்ட கோட்சே. காந்தியை நோக்கி கைகூப்பி வணங்கினான். மகாத்மாவும் நிகழப் போகும் ஆபத்தை அறியாமல் அவருக்கே உரிய புன்னகையுடன் பதிலுக்கு வணங்க, காலில்விழுவது போல விழுந்து எழுந்த கோட்சே மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவர் முன் நீட்டி அந்த அநியாயத்தை செய்தான்.
ஹே! ராம்! என்று சொல்லிக் கொண்டே சுருண்டு விழுந்தார் மகாத்மா. கூடவே விழுந்த அகிம்சை இன்று வரை எழுந்திருக்க வில்லை. ஒரு சில வினாடிகளுக்குள் நடந்த முடிந்த துயரத்தை தடுக்க முடியவில்லையே புலம்பித் திகைத்தனர் அருகில் இருந்தவர்கள்.
காந்தியடிகள் கொலை நிகழ்வை படிக்கும்போதும் கேட்கும்போதும் சினிமா தொலைக்காட்சிகளில் பார்க்கும்போதும் தமிழாசிரியர் கற்பித்த மெய்ப்பொருள் நாயனார் புராணத்தின் இந்த பாடல்கள் என் நினைவுக்கு வரும்.ஆயுதத்தை ஓலை சுவடிக்குள் மறைத்துவைத்துக் கொண்டு மெய்பொருள் நாயனாரை வணங்குவது போல் நடித்துக் கொன்ற முத்தநாதனின் கதை என்கண்முன் விரியும்
காந்தியடிகள் கொலை நிகழ்வை படிக்கும்போதும் கேட்கும்போதும் சினிமா தொலைக்காட்சிகளில் பார்க்கும்போதும் தமிழாசிரியர் கற்பித்த மெய்ப்பொருள் நாயனார் புராணத்தின் இந்த பாடல்கள் என் நினைவுக்கு வரும்.ஆயுதத்தை ஓலை சுவடிக்குள் மறைத்துவைத்துக் கொண்டு மெய்பொருள் நாயனாரை வணங்குவது போல் நடித்துக் கொன்ற முத்தநாதனின் கதை என்கண்முன் விரியும்
மெய்யெலாம்
நீறு பூசி
வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினில் படைக ரந்த
புத்தகக் கவளி ஏந்தி
மைபொதி விளக்கே என்ன
மனத்தின்உள் கறுப்பு வைத்துப்
பொய்த்தவ வேடம் கொண்டு
புகுந்தனன் முத்த நாதன்
வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினில் படைக ரந்த
புத்தகக் கவளி ஏந்தி
மைபொதி விளக்கே என்ன
மனத்தின்உள் கறுப்பு வைத்துப்
பொய்த்தவ வேடம் கொண்டு
புகுந்தனன் முத்த நாதன்
கைத்தலத்து
இருந்த வஞ்சக்
கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று
புரிந்துஅவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப்
பொருள்எனத் தொழுது வென்றார்
கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று
புரிந்துஅவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப்
பொருள்எனத் தொழுது வென்றார்
நினைத்ததை முடித்த கோட்சே பிடிபட்டான். இந்நிகழ்வுக்கு சில நாட்களுக்கு முன்பாக நடந்த கொலை முயற்சியில் ஈடுப்பட்டு மாட்டிக் கொண்ட மதன்லால் என்பவனையும் அண்ணல் மன்னிக்கவே விரும்பினார். ஒருவருடன் கருத்து வேறுபாடு கொள்பவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பதை அவன் உணர்ந்து கொள்வான் என்று உரைத்த அண்ணலின் மனதை என்னென்பது?
நேருவும் , படேலும் கதறி அழுதனர். அன்று வானொலியில் தழுதழுத்த குரலோடு உருக்கமான ஒரு உரை ஆற்றினார் நேரு. உலகையே கலங்க வைத்து விட்டது அந்த உத்தமரின் மரணம் .
காந்திக்கு நான்கு மகன்கள் உண்டு. காந்தியின் மீது கசப்புணர்வும் கடும் கருத்துவேறுபாடும் கொண்ட மூத்த மகன் ஹரிலால் காந்தி, காந்தியை விட்டு பிரிந்தே வாழ்ந்தார்.குடிப்பழக்கம் உட்பட பல்வேறு தீய பழக்கங்களுக்கு அடிமையான இவரை அண்ணலின் இறுதி சடங்கின் போதும் சுய நினைவின்றியே கிடந்தாராம். இன்னொரு மகனான ராமதாஸ் காந்தி, காந்தியின் சிதைக்கு தீ மூட்டினார். பின்னாளில் கோட்சேவுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்று கோரிய பெருமணம் படைத்தவராக இருந்தார் ராமதாஸ் காந்தி.
அகிம்சை போராட்டத்தின்மூலம் ஆங்கிலேயர்க்கு பெரும் தலைவலியாக இருந்த காந்தியை அவர்கள் கூட கொல்ல முயலவில்லை . ஆனால் விடுதலை பெற்று ஆறுமாதங்கள் கூட அவரை காப்பாற்ற முடியவில்லையே என்று உலகமே எள்ளி நகையாடியது போல் இருந்தது.
காந்தியின் கொள்கைகளுடன் ஒத்துப் போகாதவர்கள் இருக்கலாம். ஆனால் அவர் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்று என்பதை யாரால் மறுக்க முடியும்?
காந்தியின் கொள்கைகளுடன் ஒத்துப் போகாதவர்கள் இருக்கலாம். ஆனால் அவர் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்று என்பதை யாரால் மறுக்க முடியும்?
********************************************************************************************
(படித்தது,கேட்டதன் அடிப்படையில் எழுதப்பட்டது இந்தப் பதிவு )
தொடர்புடைய பதிவு
காந்தி தேசத் தந்தை இல்லையா?
தொடர்புடைய பதிவு
காந்தி தேசத் தந்தை இல்லையா?