என்னை கவனிப்பவர்கள்

தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

சிறப்பு நீயா நானா?தமிழர்களின் அடையாளங்கள் மறைந்து வருகிறதா?

    மாட்டுப் பொங்கல் அன்று நீயா? நானா? ஒரு சிறப்பு நிகழ்ச்சியை விஜய் டிவி ஒளி பரப்பியது. தமிழர்களின் அடையாளங்கள் இன்றும் இருக்கிறதா மறைந்து வருகிறதா என்பது தலைப்பு. சென்னையில் வசிக்கும் இளைஞர் இளைஞிகளைக் கொண்டு நிகழ்ச்சி நடத்தப் பட்டாலும் ஓரளவிற்கு ஒட்டு மொத்த தமிழர்களின் பிரதிபலிப்பாகவே அமைந்தது என்று கொள்ளலாம். சிறப்பு விருந்தினர்கள் நீயா நானாவில் அடிக்கடி வந்து போய்க்கொண்டிருப்பவர்கள இந்த நிகழ்ச்சியிலும்  சாரு, மோகன்,சன்ஷைன் இளங்கோ கல்லானை.

    தாத்தா பாட்டியின் பெயர்கள் கேட்டு தொடங்கப் பட்டது நிகழ்ச்சி. நல்ல காலம் பலரும் தாய் வழி தந்தைவழி தத்தா பாட்டியின் பெயர்களை சரியாகவே சொன்னார்கள். அப்பாவழி தாத்தாவின் பெயர் ஒரு பெண்ணுக்கு தெரியவில்லை. (தற்காலத்தில் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய் வழி உறவையே முன்னிலைப் படுத்துவதும், முக்கியத்துவம் கொடுப்பதும் இதற்கு ஒரு காரணமாக என்று நண்பர் ஒருவர் சொன்னார். குழந்தைகளிடம் தந்தை வழி உறவினர்களைப் பற்றி தவறான அபிப்ராயத்தை  ஒரு சில அம்மாக்கள் விதைக்கின்றனாராம். குட்டீஸ் சுட்டீஸ் பாருங்க தெரியும் என்றார். )
தாத்தா பாட்டிகளின் பெயர்களை பேரன் பேத்திகளுக்கு வைக்கும் வழக்கமும் இன்று வெகுவாக குறைந்து விட்டது. கலந்து கொண்ட பெண்களின் பெயர்களின் ஒரே ஒரே ஒரு பெண்ணுக்கு  மட்டுமே பாட்டியின் பெயர் வைக்கப் பட்டிருந்தது. தற்போது குழந்தைகளுக்கு  தமிழ்ப் பெயர் வைக்கும் பழக்கமே குறைந்து வருவதைப் பற்றியும் பேசி இருக்கலாம்.

    பள்ளியில் தமிழ்படிப்பது பற்றிய கேள்வி எழுந்தது. செகண்ட் லாங்வேஜாக எதை படிக்கிறீர்கள் என்று கேட்டபோது பெரும்பாலானவர்கள் தமிழையே தேர்ந்தெடுத்திருந்தது ஆறுதல் அளிப்பதாக இருந்தது. ஒன்றிரண்டு பேர் ஹிந்தி,பிரெஞ்ச் போன்ற மொழிகளை தேர்ந்தெடுத்திருந்தனர்.

    உண்மையில் தமிழக கல்வி திட்டத்தில் செகண்ட் லாங்வேஜ் என்பது ஆங்கிலம்தான். First language ல்தான் அரசால் அங்கீகரிக்கப் பட்ட மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க வாய்ப்பு உண்டு. முதல் மொழி ஆங்கிலம்தான் என்று நினைத்து, அனைவரும் அறியாமலே பேசினர்.

   தமிழ்நாடு அரசு கல்வி திட்டத்தில் வழக்கமாக Part I. தமிழ் மற்றும் பிற மொழிகள் Part II ஆங்கிலம்தான் வேறு மொழி தேர்ந்தெடுக்க வாய்ப்பு இல்லை. ஆங்கில வழிக் கல்வி என்பதால் முதல் மொழி ஆங்கிலம் என்று தவறான புரிதல் காணப்படுகிறது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இது போன்ற மனநிலையை வளர்த்திருக்கின்றன. கோபிநாத் இதை அறியாதது ஆச்சர்யமே.


   ஹிந்தியை எடுத்துப் படித்த ஒரு பெண்ணிடம் நிகழ்ச்சி பற்றி வாழ்த்து சொல்லும்படி கேட்க அந்தப் பெண் தடுமாறினார்.மதிப்பெண்களுக்காக பிற மொழி எடுப்பவர்களை, அது அந்த மொழியையும் ஏமாற்றும் செயல் என்று  கோபிநாத் கண்டித்தது ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

 பள்ளியில் பாடப் புத்தகத்தில் படித்த திருக்குறளை தவிர வேறு குறட்பாக்களை அறியாதவர்களாகவே பலரும் இருந்தனர்..அவர்கள் மட்டுமல்ல நம்முடைய நிலையும் அதுதான்.. எளிதில் மனப்பாடம் செய்யக் கூடியதாகவும் முழு மதிப்பெண்கள் கிடைக்கும் என்பதாலும் திருக்குறள் இந்த அளவுக்காவது தெரிந்து வைத்துக் கொள்ளப் பட்டிருக்கிறது..(12ம் வகுப்புவரை ஒவொரு வகுப்பிலும் 50 திருக்குறளாவது மனப் பாடப் பகுதியாக வைத்து விடலாம்) 

  பாரதி பாடல்களைப் பற்றிக் கேட்டபோது இன்னும் மோசம்.எத்தனையோ திரைப்படங்களில் பாரதியின் பாடல்கள் இடம் பெற்றிருந்தபோதிலும் அவற்றை நினைவு கூற முடியாமல் தடுமாறியது ஏமாற்றம் அளித்தது 

    உணவு முறையில் நகர்ப் பகுதிகளில் கூட இட்லி தோசை சாப்பிடும் பழக்கமே இன்னும் இருப்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது என்பதை கோபி குறிப்பிட்டபோது சாரு நிவேதிதா நமது பார்பரிய உணவான கம்பு,கேழ்வரகு,திணை வகைகளை நாம் மறந்து விட்டோம் என்றார்.

   மேலும் சாரு  இன்றைய தலைமுறையினர் இலக்கியம் படிப்பது இல்லை  என்று ஆதங்கப் பட்டார். ஒரு மொழியின்  அடையாளமே இலக்கியம்தான். அதை இன்றைய தலை முறையினர் விரும்பவதில்லை. சினிமா, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் தமிழர்களின் அடையாளங்களை தொலைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று பெரும்பாலான  அறிவு ஜீவிகளைப் ( என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களைப்) போல குற்றம் சாட்டினார். எவ்வளவு புகழ்பெற்ற எழுத்தாளர்களாக  இருந்தாலும் எந்த பதிப்பகமாக இருந்தாலும் 2000 பிரதிகளுக்கு மேல் விற்பதில்லையாம் (பாவம் அவர் கவலை அவருக்கு).இலக்கியம் படிக்காதவர்களை என்னதான் பட்டங்கள் பெற்றிருந்தாலும் Illiterate என்று தன் வழக்கமான பாணியில் தாக்கினார்.

    சிறப்பு அழைப்பாளர் இளங்கோ தமிழர் அடையாளங்கள் முற்றிலுமாக அழிந்து விடவில்லை என்றார். மராத்தி போன்ற மொழிகள் தங்கள் எழுத்துருக்களைக் கூட இழந்து விட்டன. ( அப்படி தமிழும் தன் எழுத்துருவை  இழப்பதற்கான வழிமுறைய தமிழ் ஹிந்துவில்  நமது ஜெ.மோ குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது) ஆனால் தமிழ் பல்வேறு தாக்குதல்களையும் இன்று வரை சமாளித்து நிலைத்திருப்பது உண்மையில் தமிழ் மொழியின் சிறப்பே!

  தொன்மை வாய்ந்த இலக்கியங்கள் உள்ளதாக கூறப்படும் லத்தின் வடமொழி போன்றவை செம்மையான இலக்கியங்களைப் பெற்றிருந்தும் பேச்சு மொழியாக நிலைக்க முடியவில்லை என்பது உண்மைதானே! பிற மதங்களை பரப்புவதற்கு தமிழையே பயன்படுத்த வேண்டிய சூழல் இருந்ததற்கு காரணம் தமிழரின் மொழி அடையாளமே என்பது அவரது வாதம்
சிறப்பு அழைப்பாளர் சன்ஷைன்(அது என்ன பேரோ?) முன்னுக்குப் பின் முரணாக ஏதோ உளறிக் கொட்டியது பரிதாபமாக இருந்தது.

   சிறப்புவிருந்தினர் மோகன் சொன்னதுஉண்மையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. பொதுவாக இலக்கியம்  படிப்பவர்கள் அல்லது படைப்பவர்கள் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களை ஏளனமாகப் பார்ப்பதும் தாங்கள்தான் மொழியை, அதன் செழுமையை, அடையாளங்களை காப்பாற்றி வருவது போல நினைத்துக் கொள்வதும் தவறானது என்று குறிப்பிட்டார்.பெரும்பான்மையோர் விரும்பும் சினிமாவை தகாத ஒன்றாகக்  கருதுவதும் இவர்களின் குணமாக அமைந்திருக்கிறது.
உண்மைதான்! இலக்கிய  பெருந்தகைகள் சினிமாவை (அது அசட்டுத் தனமாக இருந்தாலும்)முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டிய அவசியம் இல்லை.எழுத்திலக்கியங்களை படித்தறியாத சினிமாவை ரசிக்கும் பாமர மக்களை சார்ந்தும் மொழி இன அடையாளங்கள் அமையும் என்பது உணரப்படவேண்டியதே!

   எழுத்திலக்கியம் மட்டுமே மொழியை, ஒரு இனத்தின் அடையாளங்களை  வாழ வைத்துவிடாது. வாசிக்கும் பழக்கம் இல்லாத இன்னும் சொல்லப்போனால் வாசிக்கத் தெரியாத ஏராளமானோர் இருந்திருக்கிறார்கள். இன்னும் இருக்கவும் செய்கிறார்கள். அவர்களும் உண்மையில் மொழி இன சிறப்புக்களுக்கு காரணமாக  இருந்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. 

  விளையாட்டுக்கள், பழக்க வழக்கங்கள், உணவு முறைகள் ஆடைகள் இவை எப்போது தொடர்ந்து பல காலங்களுக்கு ஒரு இனத்திற்கு அடையாளமாக அமைவது இல்லை. காலத்திற்கேற்ற அவ்வப்போது இவற்றில் மாறுதல் வருவது இயல்பானதே. 
  ஆனாலும் முற்றிலுமாக தமிழன் தன் அடையாளங்களை இழந்து விடமாட்டான் என்றே நம்புகிறேன்.
நிகழ்ச்சி உணர்த்தியதும் இதுவாகவே இருக்கவேண்டும் என்றே கருதுகிறேன்.

**********************************************************************************************
கொசுறு: சிறப்பு விருந்தினர் மோகனின் தாய்மொழி தெலுங்கு. பன்னிரண்டு வயதில் தமிழ்நாட்டுக்கு வந்தாராம்.   நான்கு ஆண்டுகள் தமிழ் கற்கமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தாராம். அதன் பின்னர் தமிழின் பால் ஈர்க்கப்பட்டு தமிழ் கற்று எழுத்தாளராகவும் திகழ்கிறார். தன் ஆழமான சிந்தனைகள்  தமிழில்தான் தோன்றுவதாகவும் அதுதான் தமிழின் வலிமை என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மகிழ்ச்சியாக  இருந்தது.

************************************************************************************************************

வியாழன், 5 ஏப்ரல், 2012

இவர்கள் தமிழர்கள் இல்லையாம்!

           எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களாக 85 பதிவுகளை இட்டிருக்கிறேன்.இருந்தபோதிலும் எனது வேறு எந்தப் பதிவிற்கும் கிடைக்காத வரவேற்பு தெலுங்கை தாய்மொழியாக உடையவர்கள் தமிழர்களா? என்ற பதிவிற்கு கிடைத்தது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது. பதிவிட்ட இரண்டே நாளில் 2000 பேருக்கு மேல் வாசித்திருக்கிறார்கள்.
  
வடிவேலு சொன்ன கருத்து,
ஏ.ஆர்.ரஹ்மான்,இளையராஜா,எம்.எஸ்.வி:பலங்கள்-பலவீனங்கள்- குறைகள்  
ஆங்கிலம்- Funny Language   
போன்ற ஒரு சில பதிவுகள் மட்டுமே 500 பேருக்கு மேற்பட்டவர்களால் பார்வையிடப் பட்டிருக்கிறது. தமிழையும் தமிழரையும் நேசிக்கும் அனைவரையும் தமிழ்மக்கள் விரும்புகிறார்கள் என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். இப்பதிவிற்கு பின்னூட்டம் இட்டவர்கள் அனைவரும் இப்பதிவின் கருத்தை ஆதரித்து பாராட்டியிருக்கிறார்கள். பின்னூட்டமிட்டு பாராட்டி ஊக்கப் படுத்திய  பல்வேறு பதிவுலக நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
        நான் சொன்ன கருத்துக்கு எதிர் கருத்து  உடையவர்களும் இப்பதிவைப் படித்திருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும் ஒவ்வொரு பதிவையும் முகநூலில் இணைப்பது வழக்கம். எனக்கு முக நூல் நண்பர் ஒருவர் சொன்ன கருத்து எனக்கு லேசான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தலைப்பு இணைப்புடன் இருந்தது. 
     அதற்கு நண்பர் தெரிவித்த கருத்து 
"எப்படிக் கேட்கத் தோன்றுகிறது! இப்படியொரு  கேள்வி! ஒருவர் எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொள்கிறாரோ அவர் அந்த மொழியர் தானே?"(கோபத்துடன் கேட்பது போல் தோன்றியது.)

     ஒருவேளை முழுப் பதிவையும் படிக்காமல் தலைப்பைமட்டும் படித்து கருத்து கூறுகிறாரோ என்று நினைத்து முழுப்பதிவையும் அதில் பகிர முயன்றேன். ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் சுவற்றில் இணைக்க முடியவில்லை. 
      பின்னர் நான் செய்த தவறு "தமிழ் நாட்டில் வாழும் பெரும்பாலான தெலுங்கர்கள் ஆந்திராவோடு எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள் தெலுங்குத் தமிழர் என்று இவர்களைக் கூறலாம் என்பதை இக் கட்டுரையில் தெரிவித்துள்ளேன் அய்யா!" என்றும் கருத்திட்டேன். இதற்கு அவர் கூறிய பதில்  

"ஆங்கிலேயர்களுடன் கூடிப் பிறந்தவர்கள் தங்களை ஆங்கிலோ-இந்தியர் என்று கூறிக் கொண்டார்களே அதைப் போலவா?"

     இந்த  பதிலைப் படித்ததும். நான் உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்தேன். இப்படி கருத்திடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கிண்டலாகக் கூறினாரா அல்லது உண்மையாகவே சொன்னாரா என்பதை அறிய இயலவில்லை. இது தமிழ் பேசுபவர்கள், தெலுங்கு பேசுபவர்கள் ஆங்கிலோ இந்தியர்கள் மூவரையும் இழிவுபடுத்துவதாகாவே என் மனதிற்குப் பட்டது அது தவறாகக் கூட இருக்கலாம். 

 ஒரு கவிஞரான அவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வைகோ, போன்றவர்களை தமிழர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதானே இதன் பொருள்?
    
   தெலுங்கு பேசுபவர்கள் தமிழர்கள் அல்ல என்று அவர் கருத்தை அதோடு விடாமல் என் கருத்தை வலுப்படுத்துவதாக நினைத்து நான் கருத்திட, அக்கருத்தை வேறொன்றாக புரிந்துகொள்ளப் படுவதை நினைத்து என்னை நானே நொந்து கொண்டேன். பதிலளிக்கும்போது கவனமாக இருக்கவேண்டும் என்ற பாடமும் கற்றேன். 
    முகநூலில் பகிரப்படும் பதிவுகள் குறிப்பாக (இணைக்கப்படும் வலைப்பதிவுகள்)  சில  சமயங்களில் முழுவதும் படிக்கப்படாமலேயே லைக் இடப்படுகின்றன  என்றும் நினைக்கிறேன். 
       எனது வலைப்பக்கத்திற்கு வருகை தந்து பதிவை படித்த அத்துணை பேருக்கும் மீண்டும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

உங்கள் ஆதரவே என் வளர்ச்சி!
*******************************************************************************

வெள்ளி, 23 மார்ச், 2012

தெலுங்கை தாய்மொழியாக உடையவர்கள் தமிழர்களா?

          
    தமிழகத்தில் வாழும் தெலுங்கு பேசும் மக்களுக்கு எனது உகாதி தின வாழ்த்துக்கள். தமிழ் நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்கு அடுத்தபடியாக தெலுங்கு பேசும் மக்கள்தான் வாழ்கிறார்கள் என்று நினைக்கிறேன். தெலுங்கு  மொழி பேசும் மக்கள்  தமிழ் பேசும் மக்களுடன் இணக்கத்தோடு வாழ்பவர்கள்  (அதற்காக மற்ற மொழி  பேசுபவர்கள் அப்படி இல்லைன்னு சொல்லக் கூடாது.) இதற்கு அடையாளமாக தமிழ்நாட்டில் தெலுங்கு வருடப் பிறப்பிற்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது.  
    இவர்கள் தமிழர்கள் என்ற உணர்வோடுதான் வாழுகிறார்கள். இவர்களது தாய் மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ் மொழியையே அதிகம் விரும்புகிறார்கள். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் தமிழில் புலமை பெற்றிருக்கிறார்கள். வீட்டில் தெலுங்கு பேசினாலும் நிறையப் பேருக்கு தெலுங்கில் எழுதப் படிக்கத் தெரியாது. அதுவும் இவர்கள் பேசும் தெலுங்கில் தமிழே அதிகம் இடம் பெறும். பெரும்பாலும் தமிழ் படங்களையே விரும்பிப் பார்ப்பார்கள். பள்ளிகளிலும் தமிழையே முதற் பாடமாக எடுத்துப் படிப்பவர்களாக இருக்கிறார்கள்.இப்போது உள்ள இளந் தலைமுறையினர் தெலுங்கு அதிகமாகப் பேசுவதில்லை. சில குடும்பங்களில் குழந்தைகள் தாயிடம் தெலுங்கு பேசுவார்கள் ஆனால் தந்தையிடம் தமிழ்தான் பேசுவார்கள். இவர்கள் பேசும் தெலுங்கை தெலுங்கு அறியாத தமிழர்களும் புரிந்துகொள்ள முடியும்.
    தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் தெலுங்கு பேசும் மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஆந்திரப் பகுதிகளில் இருந்து   குடிபெயர்ந்து வந்திருக்கலாம். கிருஷ்ண தேவராயர் காலத்தில் அதிகமாக தமிழகத்திற்கு வந்திருக்கக்  கூடும். இவர்களுக்கே இது நினைவில் இருக்குமா என்பது ஐயமே!
  இவர்கள் அனைவரும் தங்களை தமிழர்களாகத்தான் நினைக்கிறார்கள். பெரும்பாலும் தமிழின்மீது ஆர்வம் உடையவர்களாகவும் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் இவர்கள் தெலுங்கைவிட அதிகம் தமிழை நேசிப்பவர்களாக இருப்பதைக் காண முடியும். இங்குள்ள தமிழ் பேசும் மக்களும் இவர்களை வேற்று மொழியினர் என்ற மனோபாவத்துடம் பார்ப்பதில்லை.
        சர்வபள்ளி டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆசிரியாக பணியைத் தொடங்கி குடியரசுத் தலைவராக உயர்ந்தவர்தான். தாய்மொழி தெலுங்காக இருப்பினும் தமிழகத்தில் வாழ்ந்து பெருமை சேர்த்தவர். 
    திரு கா.ம.வேங்கட ராமையா என்பவர் சிறந்த தமிழறிஞர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப் பட்டபோது கை எழுத்து  சுவடித் துறையின் முதல் தலைவராகப் பணியாற்றியவர். கல்வெட்டாராய்ச்சிப் புலவர், செந்தமிழ் கலாநிதி, தமிழ் மாமணி முதலிய பட்டங்களைப் பெற்றவர். இவரது தாய் மொழி தெலுங்கு.
     இன்றுவரை தமிழர்களின் நலனுக்காக குரல் கொடுத்துவரும் ம.தி.மு.க. தலைவர் திரு வைகோ. தமிழில் புலமை பெற்றவர் என்பது நமக்குத் தெரியும். அவர் சிறந்த தமிழ் பேச்சாளர் என்பதையும் அறிவோம். இளையராஜா திருவாசகம் சிம்போனி வடிவில் வெளியிட்டபோது தமிழ் இசை பற்றி அவர் ஆற்றிய உரை கட்சி பேதமின்றி அனைவராலும் பாராட்டப்பட்டது. இவரும் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர் என்பது நமக்குத் தெரிந்ததுதான்.
       நமது கேப்டன் விஜயகாந்தும் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்தான். இவர்கள் யாவரையும் தமிழினத்துடன் இருந்து பிரித்துவிட முடியாது.
      சுந்தரத் தெலுங்கு வீட்டுக்குள் பேசினாலும் உணர்வால் தமிழர்களாக வாழ்ந்து  கொண்டிருக்கும் அனைவருக்கும் இன்றைய தெலுங்கு வருடப் பிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.          
 எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழின்மீதும் தமிழர் மீதும் பற்றுக்கொண்டவர் அனைவரும் தமிழர்களே.
*************************************************************
  இதையும் படித்தால் மகிழ்வேன்.  
  வெள்ளைத்தாள்