என்னை கவனிப்பவர்கள்

ஒற்றுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒற்றுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 ஆகஸ்ட், 2012

சிந்தித்ததும் சந்தித்ததும் தித்தித்தது


சிந்தித்தவை .

  சிறிய அளவில் எளிமையாக நடத்தப் பட இருந்த பதிவர் சந்திப்பு பிரம்மாண்டமாக 26.08.2012 அன்று  நடந்தேறியதை பற்றி பதிவுகள் வந்த வண்ணம் இருக்கிறது. டிஸ்கவரி பேலசில் முளைத்த சிந்தனை உலக தமிழ்ப் பதிவர்களை ஒருங்கிணைப்பட வேண்டும் என்பதே அனைவரும் ஒரு அமைப்பாக செயல்பட வேண்டும் என்ற சிந்தனையை வெளியிட்டவர் புலவர் ராமானுஜம் ஐயா அவர்கள். ஈரோடு கோயம்பத்தூர் என்று பதிவுகள் சந்திப்புகள் நடந்தாலும் தலைமை இடமான சென்னையில் பெரிய அளவில் பதிவர் சந்திப்பு நடைபெற்றதில்லை என்று கூறப்பட்டது. அந்தக் குறையை போக்கும் வண்ணம் தமிழ்ப் பதிவுலகமே திரண்டு வருகை தர வைக்க  என்னவெல்லாம் செய்யலாம் என்று இரவும் பகலும் சிந்தித்து திட்டமிட்டனர். விழா நடத்துவதற்கு தேவையான நிதி இடவசதி இன்னும் எழக்கூடிய பல்வேறு சிக்கல்கள் இவற்றையும் கருத்தில் கொண்டு புலவர்  ராமானுஜம் அவர்களின் ஆலோசனையோடு தூரிகையின் தூறல் மதுமதி, பட்டிகாட்டான் பட்டணத்தில் ஜெயக்குமார்,வீடு திரும்பல் மோகன்குமார், மின்னல் வரிகள் பாலகணேஷ் ,மெட்ராஸ் பவன்  சிவகுமார்,அஞ்சா நெஞ்சன் உள்ளிட்ட பலரும்  தங்கள் சொந்தப் பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு விழாப் பணியில் ஈடுபட்டனர்..அனைவரும் சென்னையில் நடத்தினாலும் மற்ற தமிழகத்தின் மற்ற பகுதியில் உள்ள பதிவர்கள், பழைய புகழ் பெற்ற பதிவர்கள் எந்த விதத்திலும் வருத்தமடைந்து விடக் கூடாது என்ற சிந்தனையுடனே செயல் பட்டனர்.அதில் வெற்றியும் கண்டனர் 

   அமைப்பு ரீதியாக செயல் படுவதில் என்ன நன்மை?எந்த நோக்கத்திற்காக?

   தனிப்பட்ட ஒருவருக்கு எந்த நன்மையும் இல்லை. ஆனால் புதிய பதிவர்களை உருவாக்காலாம்.அவர்களுக்கு வழி காட்டலாம். இயன்ற சமுதாய நற்பணிகளை செய்யலாம்.ஒருவர் தனியாக செய்வதை விட அனைவரும் சேர்ந்து செய்தால் சற்று பெரிய அளவில் செய்ய முடியும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கண்டபடி எழுதுவதை தவிர்த்து நமக்கு நாமே வரையறை செய்து கொள்ள முடியும்.தமிழ் மென்பொருள்கள் குறிப்பாக எழுத்துருக்கள்  தொடர்பாக அரசுக்கு கோரிக்கை வைக்க முடியும்.இதன் மூலம் கூகுள் மைக்ரோ சாப்ட் நிறுவனங்களையும் நம்மை கவனிக்க வைக்க முடியும்.நமது தமிழ் மொழி வளர்ச்சிக்கு நம்மாலான பணிகளை ஒன்று சேர்ந்து செய்ய முடியும். பத்திரிகைகள் பதிவுலகை கவனித்து வருவது குறிப்பிடத்த தக்கது. பல எழுத்தாளர்கள் கவிஞர்களுக்கு தக்க வாய்ப்புகள் ஏற்படுத்தித் தர இயலும்.ஆரோக்கியமான விவாதங்கள் நடத்த முடியும்.தரமான ஆரோக்கியமான ஊடகமாக செயல்பட தமிழ்ப் பதிவுலக அமைப்பு தேவை. இவ்வாறெல்லாம் சென்ற சிந்தனையின் முதற் படியாக பதிவர் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.

சந்தித்தவை  : 

       ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாளும் வந்தது. பதிவர்களின் எழுத்துக்களை மட்டுமே பார்த்த நான் அவற்றை எழுதியவர்களை பார்த்தபோது மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். எல்லோருக்கும் அவரவர் பெயர் வலைப் பதிவின் பெயர் எழுதப்பட்ட அடையாள அட்டையை கொடுத்து அசத்தினர். ஒரு சிலர் சட்டையில் மாட்டி இருந்த அடையாள அட்டையை உற்றுப் பார்த்து கொண்டிருந்தனர். தனக்கு பரிச்சியமான வலைப்பதிவாக இருந்தால் அறிமுகப் படுத்திகொண்டு பேசிக் கொண்டிருந்தது ரசிக்கும்படி இருந்தது.  சிலரை புகைப் படத்தில் பார்த்ததற்கும் நேரில் பார்த்ததற்கும் வித்தியாசம் இருந்தது. திண்டுக்கல் தனபாலன் நேரிலும் புகைப் படத்திலும் ஒரே மாதிரியாக அழகாக இருந்தார். தீதும் நன்றும் பிறர்தர வாரா ரமணிசாரைப் பார்த்து என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். முரளிதரன்னு இன்னொருத்தரும் இருக்காரே என்றார். அது நான்தான் என்று சொல்ல,வெள்ளை வேட்டி சட்டை போட்டுக்கொண்டு இருப்பீர்கள் என்றுதான் கற்பனை செய்து வைத்திருந்தேன்  என்றார்.

   வசந்த மண்டபம் மகேந்திரன்,மூத்த பதிவர் நடன சபாபதி அவர்கள் , வலைச்சரம் சீனா அவர்கள் , சிபி செந்தில்குமார்  மற்றும் பலரையும் முதன் முதலாக  சந்தித்து பேசியது மகழ்ச்சி அளித்தது. +2 மாணவன் போல இங்கும் அங்கும் சுற்றிக் கொண்டிருந்தார் ஒருவர். அவர்தான் ஃ பிலாசபி பிரபாகரன் என்று தெரிந்து கொண்டேன்.அவர் பலபேரால் அறியப்பட்டிருந்தார். கடற்கரை விஜயனும் கல்லூரி மாணவர் போலவே இருந்தார். ஜாக்கி சேகரும், கேபிள் சங்கரும் பதிவர் ஸ்டார்  அந்தஸ்துடன்  வலம்  வந்தனர்.

   தமிழ்வாசி பிரகாஷ் பேரைக் கேள்விப் பட்டிருந்த நான் அவர் நடுத்த வயதுடையவராக இருப்பார் என்று நினைத்தேன்.அவர் இளைஞராக வந்து நின்றார். டீன் வயது முதல் டி வயதுகள்  வரை பலதரப்பட்டவர்  பதிவர்களாக இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. பெண் பதிவர்கள்  பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது. 

  மூத்த பதிவர்கள் இந்த வயதில் கணினியைக் கையாண்டு இளைஞர்களுக்கு இணையாக பதிவுகள் மூலம் நிரூபித்திருப்பது உண்மையிலேயே பாரட்டப் படவேண்டிய ஒன்றுதான். சந்தித்தவை எல்லாம் சந்தோஷத்தையே தந்தது.

தித்தித்தவை   ;

1. இனிமையான வரவேற்பு  மகிழ்ச்சி அளித்தது 
2. பதிவர்  அறிமுகம் பாந்தமாய் இருந்தது 
3.  சுவையான மதிய உணவு  நெஞ்சில் நின்றது
4. சுரேகாவின் தொகுப்பு  சொக்க வைப்பதாக இருந்தது 
5. பட்டுக்கோட்டை பிரபாகரின் பேச்சு பிரமாதமாக இருந்தது
6. சரியான நேரத்தில் தேநீர்,மற்றும் காபி, நினைத்துப் பார்க்க வைத்தது 
7. மாலை போண்டோ ருசித்தது 
8. தென்றல் சசிகலாவின் நூல் வெளியீடு இதமாய் இருந்தது 
9. கவியரங்கம் , குறிப்பாக மருத்துவர் மயிலனின்  கவிதை, லதானந்த்   அவர்களின் நகம்  பற்றிய கவிதை கைதட்ட  வைத்தது.
10 மக்கள் சந்தையின் போட்டி அறிவிப்பு மனதைக் கவர்ந்தது.

   மொத்தத்தில் அடுத்த பதிவர் சந்திப்பை ஆவலுடன் எதிர் பார்க்க வைத்து விட்டது . 

  இந்த விழாவிற்காக பாடுப்பட்ட பதிவர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய அத்தனை பேருக்கும் தமிழ்ப் பதிவுலகம் சார்பில் பலமாக நன்றிகள்  உரைப்போம்.
   
                                *****************
இதைப் படித்தீர்களா?


வெள்ளி, 23 மார்ச், 2012

தெலுங்கை தாய்மொழியாக உடையவர்கள் தமிழர்களா?

          
    தமிழகத்தில் வாழும் தெலுங்கு பேசும் மக்களுக்கு எனது உகாதி தின வாழ்த்துக்கள். தமிழ் நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்கு அடுத்தபடியாக தெலுங்கு பேசும் மக்கள்தான் வாழ்கிறார்கள் என்று நினைக்கிறேன். தெலுங்கு  மொழி பேசும் மக்கள்  தமிழ் பேசும் மக்களுடன் இணக்கத்தோடு வாழ்பவர்கள்  (அதற்காக மற்ற மொழி  பேசுபவர்கள் அப்படி இல்லைன்னு சொல்லக் கூடாது.) இதற்கு அடையாளமாக தமிழ்நாட்டில் தெலுங்கு வருடப் பிறப்பிற்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது.  
    இவர்கள் தமிழர்கள் என்ற உணர்வோடுதான் வாழுகிறார்கள். இவர்களது தாய் மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ் மொழியையே அதிகம் விரும்புகிறார்கள். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் தமிழில் புலமை பெற்றிருக்கிறார்கள். வீட்டில் தெலுங்கு பேசினாலும் நிறையப் பேருக்கு தெலுங்கில் எழுதப் படிக்கத் தெரியாது. அதுவும் இவர்கள் பேசும் தெலுங்கில் தமிழே அதிகம் இடம் பெறும். பெரும்பாலும் தமிழ் படங்களையே விரும்பிப் பார்ப்பார்கள். பள்ளிகளிலும் தமிழையே முதற் பாடமாக எடுத்துப் படிப்பவர்களாக இருக்கிறார்கள்.இப்போது உள்ள இளந் தலைமுறையினர் தெலுங்கு அதிகமாகப் பேசுவதில்லை. சில குடும்பங்களில் குழந்தைகள் தாயிடம் தெலுங்கு பேசுவார்கள் ஆனால் தந்தையிடம் தமிழ்தான் பேசுவார்கள். இவர்கள் பேசும் தெலுங்கை தெலுங்கு அறியாத தமிழர்களும் புரிந்துகொள்ள முடியும்.
    தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் தெலுங்கு பேசும் மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஆந்திரப் பகுதிகளில் இருந்து   குடிபெயர்ந்து வந்திருக்கலாம். கிருஷ்ண தேவராயர் காலத்தில் அதிகமாக தமிழகத்திற்கு வந்திருக்கக்  கூடும். இவர்களுக்கே இது நினைவில் இருக்குமா என்பது ஐயமே!
  இவர்கள் அனைவரும் தங்களை தமிழர்களாகத்தான் நினைக்கிறார்கள். பெரும்பாலும் தமிழின்மீது ஆர்வம் உடையவர்களாகவும் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் இவர்கள் தெலுங்கைவிட அதிகம் தமிழை நேசிப்பவர்களாக இருப்பதைக் காண முடியும். இங்குள்ள தமிழ் பேசும் மக்களும் இவர்களை வேற்று மொழியினர் என்ற மனோபாவத்துடம் பார்ப்பதில்லை.
        சர்வபள்ளி டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆசிரியாக பணியைத் தொடங்கி குடியரசுத் தலைவராக உயர்ந்தவர்தான். தாய்மொழி தெலுங்காக இருப்பினும் தமிழகத்தில் வாழ்ந்து பெருமை சேர்த்தவர். 
    திரு கா.ம.வேங்கட ராமையா என்பவர் சிறந்த தமிழறிஞர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப் பட்டபோது கை எழுத்து  சுவடித் துறையின் முதல் தலைவராகப் பணியாற்றியவர். கல்வெட்டாராய்ச்சிப் புலவர், செந்தமிழ் கலாநிதி, தமிழ் மாமணி முதலிய பட்டங்களைப் பெற்றவர். இவரது தாய் மொழி தெலுங்கு.
     இன்றுவரை தமிழர்களின் நலனுக்காக குரல் கொடுத்துவரும் ம.தி.மு.க. தலைவர் திரு வைகோ. தமிழில் புலமை பெற்றவர் என்பது நமக்குத் தெரியும். அவர் சிறந்த தமிழ் பேச்சாளர் என்பதையும் அறிவோம். இளையராஜா திருவாசகம் சிம்போனி வடிவில் வெளியிட்டபோது தமிழ் இசை பற்றி அவர் ஆற்றிய உரை கட்சி பேதமின்றி அனைவராலும் பாராட்டப்பட்டது. இவரும் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர் என்பது நமக்குத் தெரிந்ததுதான்.
       நமது கேப்டன் விஜயகாந்தும் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்தான். இவர்கள் யாவரையும் தமிழினத்துடன் இருந்து பிரித்துவிட முடியாது.
      சுந்தரத் தெலுங்கு வீட்டுக்குள் பேசினாலும் உணர்வால் தமிழர்களாக வாழ்ந்து  கொண்டிருக்கும் அனைவருக்கும் இன்றைய தெலுங்கு வருடப் பிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.          
 எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழின்மீதும் தமிழர் மீதும் பற்றுக்கொண்டவர் அனைவரும் தமிழர்களே.
*************************************************************
  இதையும் படித்தால் மகிழ்வேன்.  
  வெள்ளைத்தாள்