என்னை கவனிப்பவர்கள்

பதிவர் சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர் சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 நவம்பர், 2014

மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப் பதிவர் திருவிழா 2014 எப்படி?

   

   கடந்த ஞாயிறு  மூன்றாம் ஆண்டு வலைப் பதிவர் திருவிழா வெற்றிகரமாக நடந்து முடிந்தது. வலைச்சரம் சீனா அவர்கள்,தீதும் நன்றும் பிறர் தர வாரா ரமணி அவர்கள்,திண்டுக்கல் தனபாலன்,தமிழ்வாசி பிரகாஷ் மதுரை சரவணன் உள்ளிட்ட மதுரை பகுதி வாழ் பதிவர்களின் அரும் உழைப்பிலும் சக பதிவர்களின் ஒத்துழைப்பினாலும் பதிவர் சந்திப்பு என்றும் நினவு கூறத் தக்க வகையில் சிறப்பாகவே நடந்தது. என்னைப் பொறுத்தவரை இது முக்கியமான நிகழ்வு . ஏனென்றால்  என்னையும் ஒரு தொழில் நுட்ப வலைப் பதிவர்(தப்பா லிஸ்ட்ல சேத்துட்டாங்களோ) 'வந்தே மாதரம்'சசிகுமார்,'ப்ளாகர் நண்பன்' அப்துல் பாசித், 'கற்போம்' பிரபு கிருஷ்ணா,திண்டுக்கல் தனபாலன் போன்றவர்களுக்கு இணையாக   எனக்கும்  ஒரு  சால்வையும போட்டு கேடயமும் கொடுத்தனர்... நிறையப் பேர் நிச்சயம் குழம்பிப் போய் இருப்பார்கள் இவனுக்கு எதுக்கு இதெல்லாம் என்று.. 

      இதற்கான நிபந்தனை சில தொழில் நுட்ப பதிவுகளாவது எழுதி இருக்க வேண்டும். வலைப்பூ தொடர்பாக மற்றவர்களுக்கு உதவி இருகவேண்டும் என்பதே..  . என்பெயரை தனபாலன் மற்றும் ஸ்கூல் பையன் பரிந்துரைத்ததாகத் தெரிகிறது. இருப்பினும்   தமிழ்வாசி பிரகாஷுக்கு ஐயம் ஏற்பட , வலைப்பூ நுட்பம் சார்ந்து நான் எழுதிய சில பதிவுகளை மின்னஞ்சல் அனுப்பும்படி கேட்டுக் கொண்டார்.அனுப்பி வைத்தேன். நான் கணினி படித்தவன் அல்ல. பயன்பாட்டு அனுபவத்தைக் கொண்டே யாரேனும் ஒருவருக்காவது பயன் தரும் என்று இணைத்தே கற்றுக்  குட்டியின் கணினிக் குறிப்புக்கள் என்ற தலைப்பில் அவ்வப்போது எழுதுவது உண்டு. அவற்றை ஒரு மாணவன் சக மாணவனுக்கு உதவும் அடிப்படையில்தான் பதிவிட்டேன். குறைந்து இருபது பேருக்காவது புதிய வலைப்பூ அமைத்தல், திரட்டிகளில் இணைத்தல், விட்ஜெட் சேர்த்தல், பேக் அப் எடுத்தல் போன்றவற்றில் உதவி இருகிறேன்.. திண்டுக்கல் தனபாலன் என்னை விட பலருக்கும் உதவி செய்தவண்ணம் இருக்கிறார். மற்ற தொழில் நுட்பப் பதிவர்கள் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இப்படி செய்பவர்கள் இன்னும் பலரும் இருக்கலாம்.அவர்களை கௌரவப் படுத்தியது,  ஏராளமான அனுபவமும் திறமையும்   இருந்தும் தொழில் நுட்பம் அதிகம் அறியாமை  காரணமாகவும் எழுத முடியாமல் இருப்பவர்க்கும் வலைப் பக்கத்தை மேம்படுத்துவதற்கும் உதவுவதன் மூலம் நல்ல பதிவுகள் உருவாவதற்கு இந்த தொழில்நுட்பப் பதிவர்கள் காரணமாக இருக்கிறார்கள்.என்ற  வகையில்தான்.

விழாவைப் பற்றி நிறையப் பேர் விளக்கமாக படங்களுடன் எழுதி விட்டார்கள் எனினும்

சுருக்கம் 
  • முந்தைய தினம் வந்தவர்கள் தங்குவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்ததன
  • முன்னமே அறிமுகமான பல பதிவர்களை சந்திக்க முடிந்தது மகிழ்ச்சியாக இருந்தது.  புதியவர்களோடும் பேசிக் கொண்டிருந்தது நிறைவாக இருந்தது.. வருவார்கள் என்று நினைத்த ஒரு சிலர் வராதது ஏமாற்றமளித்தது.
  • மேடை வடிவமைப்பு அற்புதமாக இருந்தது
  • வசந்தமண்டபம் மகேந்திரன் கவிதைத் தமிழில் நிகழ்ச்சி தொகுத்தளித்தார்.
  • சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது.
  • அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த சிறப்பு அழைப்பாளர் தா.கு சுப்பிரமணியம் உடல் நலமின்மை காரணமாக வரவில்லை.. அதற்கு பதிலாக கவிஞர் முத்து நிலவன் உரையாற்றினார்.
  • இன்னொருசிறப்பு அழைப்பாளர் இந்திரா சவுந்திரராஜன் அவர்கள் நீண்ட நேரம் பேசினார்.பேசிய கருத்துக்கள் தொழில் நுட்பத்திற்கு  எதிராகவும் குறை கூறும் வகையிலும் அமைந்திருந்தது   சற்று ஏமாற்றமாகத்தான்  இருந்தது .
  • பிற்பகலுக்குப் பின்னும் வந்திருந்தோர் விழா முடிவடையும் வரை அமைதி காத்து தங்கள் பண்பை வெளிப்படுத்தினர்.
  • குடந்தையூர் சரவணன் அவர்களின் சில நொடி சிநேகம் குறும்படம்  வெளியிடப்பட்டது.
  • நான்கு நூல்கள் வெளியீடு நடந்தது..அவற்றில் மூன்று புதுக்கோட்டைப் பகுதி பதிவர்களுடையது.. பெரிய அளவு புத்தக மாதிரி அனைவரையும் கவரந்தது
  • நூல் வெளியீட்டில் வாழ்த்துரை வழங்கியோர் சிறப்பாக பேசினர்.
  • கோவை ஆவி சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்தார்.
  • அடுத்த வலைப் பதிவர் சந்திப்பு புதுக்கோட்டையில் என அறிவிக்கப் பட்டது 
  • திருமணத்திற்கு செல்பவர்களுக்கு தாம்பூலப் பை வழங்குவது போல வந்திருந்த அனைவர்க்கும் பர்ஸ் ஒன்றை பைக்குள் வைத்து கொடுத்தனர்.

     கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த  வலைப்பதிவர் சந்திப்பை மட்டுமே பலரும் குறிப்பிடுகிறார்கள் என்றும்  அதற்கு முன்னர் நடந்த சந்திப்புகளை  குறிப்பிடுவதில்லை என்று ஒருவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டிருந்தார். அதற்கான விவாதங்கள் இப்போதுதான் ஓய்ந்து இருக்கிறது.  இந்த மூன்று வலைப்பதிவு திருவிழாக்களுக்கு முன்னதாக ஈரோடு பதிவர்கள் சந்திப்பு,நெல்லை கோயம்புத்தூர் சென்னை என்று  பதிவர் சந்திப்புகள் அவ்வப்போது  நடைபெற்று வந்துள்ளன என்பதைஅறிய முடிகிறது. சந்திப்பு சிறிய அளவோ? பெரிய அளவோ? மகிழ்ச்சி தரக் கூடியது என்பதில் ஐயமில்லை.

    வட்டார அளவில் குழுக்களாக அல்லாமல்  தமிழ் வலைப்பதிவர் அனைவரும் ஒரே குழுமமாக செயப்பட வேண்டும். அதனை ஒரு அமைப்பாக பதிவு செய்து முறையாக  செயல்படவேண்டும் என்று அவ்வப்போது வலியுறுத்தி வந்தார் மூத்த பதிவர் புலவர் இராமனுசம் அவர்கள். அதனாலேயே தமிழ் வலைப் பதிவர் குழுமம் என்ற பெயரில் தமிழ்ப் பதிவர்கள் ஒருங்கிணைக்கப் படவேண்டும் என்ற நோக்கத்துடன் 2012 இல் முதல் பதிவர் சந்திப்பு நடந்தது... முடிந்தவரை கவனத்துடன் அனைத்து மாவட்ட பிரபல  பதிவர்களையும் தொடர்பு கொண்டு விழா நடத்த  முடிவு செய்தனர். புலவர் அவர்களின் தலைமையில், கவிஞர் மதுமதி,பட்டிக்காட்டான், மோகன்குமார், அரசன்,ஆரூர் மூனா செந்தில், அரசன்,மெட்ராஸ்பவன் சிவகுமார் உள்ளிட்ட நான் அறிந்த மற்றும் அறிந்திராத  பலரும் ஆர்வத்துடன் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர். உள்ளூர், வெளியூர் அயல்நாடு வாழ் பதிவர்கள் என்று ,பலரும் தானாக முன்வந்து நிதி அளிக்க முன் வந்தனர். கணக்கு வழக்குகளும் சிறப்பாகவே பராமரிக்கப்பட்டது. விழா நல்லபடியாக நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்த பின்னர் அமைப்பை உருவாக்க   சீனியர் பதிவர்களோடும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.,  ஒருசிலர் ஆதரவு தெரிவித்தனர். இதில் பிரச்சனைகள் வரும் .இது தேவையற்ற வேலை என்றும் பலர்  கருத்து தெரிவித்தனர்.. சங்கம்  நடத்த நிதி தேவைப்படும். பொறுப்பாளர்கள் தேவை;   நிதி கையாளப்படும்  இடங்களில் சிக்கல்களை எதிர் கொள்ள நேரிடும் என்றும் வாதிட்டனர். ஏற்கனவே நாங்கள் முயன்று தோற்றிருக்கிறோம், என்றும் அச்சுறுத்தினர்.

    புலவர் அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை. இப்படியே நாட்கள் கடக்க அடுத்த 2013 வலைப்பதிவர் சந்திப்பும் திட்டமிடப் பட்டது. அப்போதும் இதே கருத்தை வலியுறுத்தினார் புலவர். அதன் நடைமுறைகளுக்கான செலவையும் தான் ஏற்றுக் கொள்வதாகக் கூறினர். ஏற்கனவே முந்தைய விழாவின் நோக்கமே இதற்கும் அடிப்படையாக அமைந்ததால் இதனை இரண்டாம் ஆண்டு வலைப் பதிவர் திருவிழா என்று குறிப்பிட்டனர். இவ்விழாவும் சிறப்புறவே நடந்தேறியது. இப்பதிவர் விழா பொதுவானது; வட்டார ரீதியாகக் கொள்ளாமல்  ஒட்டு மொத்த அமைப்பின் சார்பாக எந்த மாவட்டத்திலும் கொண்டாடலாம் என்ற கருத்து முன் வைக்கப் பட்டது. இதன் தொடர்ச்சியாகக் கொண்டாட எந்த  மாவட்டத்தினரும் விருப்பம் தெரிவிக்கலாம் என்ற போது மதுரை மாவட்டம் என்று அறிவிக்கப் பட்டது.
   அதன் விளைவாக மதுரையில் இந்த வலச்சரம் சீனா அவர்கள் மற்றும்  ரமணி அவர்களின் வழி காட்டுதலோடு மூன்றாம் ஆண்டு வலைப் பதிவர் திருவிழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு நல்லமுறையில் கொண்டாடப் பட்டது. 

    கவிஞர் முத்துநிலவன் அவர்களின் தலைமையில் வந்திருந்த புதுக்கோட்டை பதிவர்கள்  இச்சந்திப்பின் போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். அடுத்த பதிவர் சந்திப்பு புதுக்கோட்டையில் நடத்த விருப்பம் தெரிவிக்க அவ்வாறே அறிவிக்கப் பட்டது. கவிஞரும் பட்டிமன்றப்  பேச்சாளருமான முத்துநிலவன் அவர்கள் விழாக்கள் நடத்துவதில் அனுபவம் மிக்கவர். தமிழ் வலைப்பூக்களை வளர்க்க வேண்டும் என்பதில் அதீத ஆர்வம் உடையவர்.  ஏற்கனவே புதுக்கோட்டையில் இரண்டு முறை பதிவர் பட்டறைகள் நடத்தி வலைப்பூக்கள் எழுத ஊக்கம் கொடுத்தவர். 'தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற நோக்கத்துடனும்  இணையத்  தமிழ் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் செயல்படுபவர். அச் சந்திப்பு அசத்தலாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்

     மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப் பதிவர் திருவிழாவிற்கு வந்திருந்தோர் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. இருந்தாலும் சற்று குறைவாக இருந்ததது போல் தோன்றியது. கடந்த இரண்டு  சந்திப்புகளின்போது  நிறையப் பதிவர்கள் தங்கள் தளத்தில் விழா பற்றிய பகிர்வுகள் செய்து அழைப்பு விடுத்தனர். ஆனால் இம்முறை விழா தொடர்பான பதிவுகள் அதிகம் எழுதப் படவில்லை என்றே நினைக்கிறேன். திண்டுக்கல் தனபாலனும், தமிழ்வாசி பிரகாஷ் போன்றோர் மட்டுமே பதிவுகள் இட்டு உற்சாகப் படுத்தினர்.. உதாரணமாக  சென்ற ஆண்டு பதிவர் சந்திப்பு பற்றி இரண்டு பதிவுகள் இட்டேன். இந்த  ஆண்டு ஒரே ஒரு பதிவுதான் எழுதினேன். முந்தைய இரண்டு விழாக்களுக்கு அதிக பார்வையாளர்களைக் கொண்டிருந்த வீடு திரும்பல் மோகன்குமார் போன்றவர்கள் நிறைப் பதிவுகள் எழுதி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்கள். இம்முறை விழா நடந்ததது  பற்றி அவருக்கு தெரியுமா தெரியாதா என்று கூட தெரியவில்லை.. இன்னும் நிறையப்பதிவர்கள் இன்னும் கொஞ்சம் உற்சாகமாக நிகழ்வுகள் பற்றி எழுதி இருந்தால் கலந்து கொண்டோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.( சீனு! நீ ஒரு (முன்)பதிவு கூட போட்ட மாதிரி தெரியலையே! (எப்பூடி? நல்லா போட்டு குடுத்துட்டனா? ))

அப்படி இருந்தும் மூன்றாவது வலைப் பதிவர் திருவிழாவை குறிப்பிடத் தக்க அளவுக்கு வெற்றிகரமாக  நடத்திக் காட்டிய விழாக் குழுவினருக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கிறேன்.


    
********************************************************************************
தேவைப் பட்டால் படியங்கள்!

  • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி?
  • முன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்...
  • உங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி?
  • உங்கள் வலையின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டுமா?
  • காபி,பேஸ்ட் செய்யப்பட்டதை அறிவது எப்படி?-பகுதி 2(250 வது பதிவு)
  •  இன்ட்லியால் ஒரு இன்னல்
  • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி? 
  • .காபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது?
  • தமிழ்மணம்,தமிழ் 10 இல் ஒட்டு போட்டவர்களை அறிய முடியுமா?



  • வெள்ளி, 24 அக்டோபர், 2014

    அதிரப் போகும் மதுரை


     இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது.தீபாவளித் திருவிழா  கண்ட மதுரை . உடனேயே இன்னொரு திருவிழாவைக் காண இருக்கிறது. ஆம்!மூன்றாம் ஆண்டு  தமிழ் வலைப்பதிவர்  திருவிழாவைத்தான் குறிப்பிடுகிறேன். அந்நாளில் (26.10.2014)  தமிழ் வலைப் பதிவுகள் எழுதுபவர் மதுரை  கீதா நடன கோபால்  நாயக் மண்டபத்தில் கூடி மகிழ்ந்து அளவளாவ இருக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக வலைப்பதிவர் சந்திப்பு ஒரு திருவிழாவாக சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இம்முறை  கூடல் மாநகர் மதுரையில் நாம் ஒன்றிணைய சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பதிவுலகில் நாம் விரும்பிப் படிக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர்களையும், நமது படைப்புகளை விரும்பிப் படிப்பவர்களையும் சந்திக்க  ஒரு அருமையான வாய்ப்பு.. இதுவரை வருகையை உறுதி செய்யாதாவர்கள் உடனடியாக  உறுதி செய்து கொள்ளவும். ஏற்கனவே நூற்றுக்கும் மேற்ப்பட்ட பதிவர்கள் மதுரைக்கு புறப்படத் தயாராக இருக்கிறார்கள்.

        வலைச்சரம் சீனா ஐயா, தீதும் நன்றும் பிறர் தர வாரா ரமணி சார் , திண்டுக்கல் தனபாலன், தமிழ்வாசி பிரகாஷ் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை சிரமேற்கொண்டு செய்து வருகின்றனர். தாமதமாக சென்றதால் கடந்த பதிவர் சந்திப்பின்போது பலபதிவர்களை சந்தித்து உரையாட முடியவில்லை. இம்முறை அனைவருடனும் பேசி கருத்துக்களை பரிமாறிக் கொள்ள ஆவலுடன் உள்ளேன்.


        இது போன்ற சந்திப்புகளை நடத்துவது எளிதான செயலல்ல. ஏராளமான உழைப்பும் செலவும் பிடிக்கக் கூடியது. தங்கள் சொந்த வேலைகளை தள்ளி வைத்து விட்டு இதற்காக உழைக்கவேண்டும். ஒரு நல்ல இடத்தில் வசதிகளுடன் அரங்கம் அமைவது மிகக் கடினம். மதுரை வலைப்பதிவர் திருவிழா நடக்கும் அரங்கம் பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது. அதுவும் நகரின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ளது சிறப்பு. இதைமுன்னின்று நடத்துபவர்களுக்கு எந்தவிதமான லாபமும் கிடைக்கப் போவதில்லை. ஆனாலும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். முக்கிய நோக்கம் அனைத்துப் பதிவர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதே. ஒவ்வொரு பதிவருடைய கருத்துக்களும் கொள்கைகளும் மாறுபடலாம். பதிவுலகம் தங்கள் கருத்தை சுதந்திரமாகப் பதிவு செய்ய வாய்ப்பளிக்கிறது.விவாதங்களும் கருத்து மோதல்களும் நாள் தோறும் உண்டு. ஆனால் அனைவரும் ஒன்று கூடி மகிழ்வதற்கு அவை தடையாக இருக்கப் போவதில்லை என்பதை உணர்த்தும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் ஐயமில்லை .

       தற்போது பதிவுலகம் சற்று டல்லடித்தது வருவதாக கருத்து நிலவுகிறது. பதிவு எழுத வந்த பலர் முகநூல் ,   ட்விட்டர்  என்று சென்று விட்டார்கள் என்று கூறப்ப் படுகிறது. ஆனால் அது உண்மையல்ல எனபதே என் கருத்து.

        முகநூல் டுவிட்டர் எல்லாம் பாஸ்ட் புட் வகையை சார்ந்தது. பதிவுலகம் ஆற அமர் சாப்பிடும் புல் மீல்ஸ் வகையை சேர்ந்தது. ஒரு நாளைக்கு ஒருமுறையாவது முழு சாப்பாடு தேவை அல்லவா ?  ப்ளாக் எழுதுபவர்கள் பலர் முகநூலையும் திறம்படப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் முகநூல் பயன்படுத்துபவர்களில் பலர் ப்ளாக் பற்றி அறிந்திருக்காத நிலையும் இருக்கிறது. வலைப்பூ என்று ஒன்று இருப்பதையே அறியாமல் முகநூலில் படைப்புகளை வெளியிடுகிறார்கள். அது அவர்களது சொந்தப் படைப்பா பகிர்வு செய்யப்பட்டதா என்பதை அறிய முடிவதில்லை. வலப்பூவின் சிறப்பு அம்சங்களை உணர வைக்கவும் முக நூல் பதிவர்களை வலைப்பக்கம் திருப்பவும்  இந்த திருவிழா உதவக் கூடும்.

          வலைப்பூ தொடங்குபவர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.கடந்த மூன்று மாதங்களில் 100 க்கும் மேற்பட்டபுதிய வலைப்பூக்கள்  தமிழ் மண இணைப்புக்காகக் காத்துக் கிடக்கின்றன. பொதுவாக சினிமா பற்றி எழுதப்படும் பதிவுகளுக்கு வரவேற்பு அதிகம் இருந்தாலும் சமூகப் பிரச்சனைகள், இலக்கியப் பதிவுகள்,நகைச்சுவைப் பதிவுகள்,அரசியல் பதிவுகள்,சமையல் குறிப்புகள், பயணப் பதிவுகள் தொழில்நுட்பப் பதிவுகள் போன்றவற்றிற்கு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.இப்படி பலகைப் பட்ட பதிவுகளைப் படைக்கும் பதிவர்களை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது  இவ்விழா

        பலர் அற்புதமான பதிவுகள் படைக்கிறார்கள் ஆனால் அவை பலரின் கண்களில் படுவதில்லை. படைப்புகளின் நோக்கம் பிறரை சென்றடைய வேண்டும் என்பதே. ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன் என்று சொல்லிக்கொண்டாலும்  பெரும்பாலோரின் உண்மையான விருப்பம் நிறையப் பேர் தங்கள் படைப்புகளைப் படிக்க வேண்டும் என்பதே. அதற்கு அடிப்படை வலை நுட்ப அறிவை  வளர்த்துக் கொள்ளுதல் அவசியம்   அவற்றிற்கு  இது போன்ற பதிவர் திருவிழாக்கள் நிச்சயம் உதவும்.
    புதியவர்களை வலைப் பதிவு எழுத ஊக்குவிக்கவும் நல்ல படைப்பாளிகளை அடையாளம் கண்டு அறிமுகப் படுத்திக் கொள்ளவும் இந்த மாபெரும் வலைபதிவர் திருவிழாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.


        தமிழ் வலைப் பதிவர்கள் ஒரு பதிவு செய்யப் பட்ட அமைப்பாக செயல் படவேண்டும் என்று மூத்த பதிவர் புலவர் இராமனுஜம் ஐயா அவர்கள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். அதற்கான முயற்சிகளும்  நடைபெற்றுக் கொண்டிருந்தது. பின்னாளில் இவ்வமைப்பு பதிவர்களுக்கு உதவியாக அமைய வாய்ப்பு உண்டு.
    தமிழ்ப் பதிவுலகிற்கு  மேலும் வலு சேர்க்கும் வகையில் இச் சந்திப்பு அமையும் என்பதில் ஐயமில்லை.

    மதுர! சும்மா அதிரப் போகுதில்ல!
     கவுன்ட் டவுன் கடிகாரம் 
    **********
    மேலதிக விவரங்களுக்கு தொடர்பு கொள்க
    பதிவர்கள்  தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் (சனிக்கிழமை காலை முதல்):
    பகவான்ஜி: 8903694875
    மனசாலி: 9150023966


    பெண்  பதிவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் (சனிக்கிழமை காலை முதல்):
    திண்டுக்கல் தனபாலன்: 9043930051
    பால கணேஷ்: 9003036166




    செவ்வாய், 10 செப்டம்பர், 2013

    பதிவர்களை டான்ஸ் ஆட வைத்தது யார்?-கணினிக் குறிப்பு

    .
    இந்த கலை நிகழ்ச்சி எப்ப நடந்தது?
          படத்துக்கு பொருத்தமான பஞ்ச் டயலாக்  சொல்லலாம்
     கற்றுக் குட்டின் கணினிக் குறிப்புகள் ( புதியவர்களுக்காக)
    பிரபல பதிவர் கவியாழி கண்ணதாசனின் Google + பக்கத்திலிருந்து பிரபல பதிவர்கள் டான்ஸ் ஆடுவது போன்ற படத்தை ஸ்கூல் பையன் தனது பதிவில் பகிர்ந்திருந்தார். பார்க்க சுவாரசியமாக இருந்தது.அதை யார் உருவாக்கினார்கள் என்று கண்ணதாசனிடம் கேட்டேன். என் மொபைல் கேமராவில் எடுக்கப் பாத்தது என்றார்..நிச்சயமாக அது கேமராவினால் ஒரே படமாக நேரடியாக எடுக்கப் பட்டிருக்க முடியாது. அது ஒரு animated புகைப்படம். gif வகையை சார்ந்தது. ஒன்றுக்குமேற்பட்ட இணைத்துத் தான் இப்படத்தை உருவாக்கி இருக்க முடியும். படங்களை jpeg, bmp, png, gif என்ற பல்வேறு Format களில் சேமிக்க முடியும். அசைவுப் படங்களை உருவாக்க gif Format பயன்படுகிறது
    சற்று  ஆர்வம் ஏற்பட்டு அதில் உள்ள படங்களை பிரித்து எடுத்தேன். 
    மொத்தம் 7 படங்கள் அதில் இருந்தன. இவை இணைக்கப்பட்டே பதிவர்கள் டான்ஸ் ஆடிய புகைப்படம் உருவாக்கப் பட்டுள்ளது அந்த ஏழு படங்களும் உங்கள் பார்வைக்கு 

    படம் 1

    படம் 2


    படம் 3



    படம் 4

    படம் 5
    படம் 6
    படம் 7

    மேற்கண்ட  ஏழு JPEG படங்களை இணைத்துத்தான் கண்ணதாசனின் படம் உருவாக்கப் பட்டிருக்கவேண்டும். சரியா என்று அவர்தான் சொல்லவேண்டும். பதிவின் தொடக்கத்தில் உள்ள அசைவுப் படம்  மேலுள்ள படங்களை சேர்த்து நான் உருவாக்கியது
    gif பைல்களை உருவாக்குவதற்கும் ஏற்கனவே இருக்கிற gif படங்களை பிரித்தடுப்பதற்கும் நிறைய ஆன்லைன் tool கள் உள்ளன அவற்றில் ஒன்று http://gifmaker.me
    இந்த முகவரிக்கு சென்று படங்களை பதிவேற்றி,அசைவுப் படங்களை உருவாக்கலாம் ஏற்கனவே உள்ள gif படத்திலிருந்து தனித்தனியாக படங்களை பிரித்துவைத்து சேமித்தும் கொள்ளலாம். 

    பறக்கும் கொடி, மலரும் பூ, சுற்றும் கடிகாரமுள் இவற்றை gif பார்மேட்டில் உருவாக்கலாம்.
    நான்  பயன் படுத்தியது  http://picasion.com/ இல் உள்ள ஆன் லைன் மென்பொருள். 
    ஆர்வம் இருந்தா நீங்களும் முயற்சி செய்து  பார்க்கலாம் 
    இது புதியவர்களுக்குத்தான். இதெல்லாம் ஏற்கனவே தெரிஞ்சவங்க எஸ்கேப் ஆகலாம்.

    ***************************

    எச்சரிக்கை: யாரேனும் ஒருவர் விருப்பம் தெரிவித்தால் கூட இது போன்று வேறு சில அசைவுப் படங்களை எப்படி உருவாக்குவதென்று 
    பதிவிடப்படும்  
    ***********************************************************************************
    படித்து  விட்டீர்களா?



    புதன், 28 ஆகஸ்ட், 2013

    பதிவர் சந்திப்பு அவசியமா?


       
      என்னதான் கோப்பெரும் சோழன் பிசிராந்தையார் போல முகம்பாரா நட்பை பதிவர்களுக்கிடையே தகவல் தொடர்பு சாதனங்கள் ஏற்படுத்தித் தந்திருந்தாலும் நேரில் பார்த்து பேசி மகிழ்வது போல் ஆகுமா? அதனால் பதிவர் சந்திப்பு அவசியம் என்பது நாள் சொல்லித்தானா தெரிய வேண்டும்? அத்தகைய வாய்ப்பை வழங்குகிறது, தமிழ் வலைப்பதிவர் திருவிழா. 01.09.2013 அன்று சென்னை வடபழனி திரை இசைக் கலைஞர்கள் சங்க அரங்கில் கோலாகலமாக நடக்க இருக்கும் இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

      சிறப்பாக எழுதி பதிவுலகைக் கலக்கி கொண்டிருக்கும் பதிவர்கள் பலரைக் காணப் போகிறோம் என்று நினைக்கும்போதே மனம் மகிழ்ச்சியில் துள்ளத்தான் செய்கிறது. நான் பதிவெழுதத் தொடங்கி ஓராண்டு  கூட நிறைவடையாத நிலையில் கடந்த பதிவர் திருவிழாவில் கலந்து கொண்டேன். அதற்கு முன்னர் நான் அறிந்த மற்றும் அறிந்திராத பல பதிவர்களை நேரில் காண அற்புத வாய்ப்பாக அமைந்தது. அதே போல  இந்த சந்திப்பும் ஒரு மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் என்றே நம்புகிறேன்.  கருத்துகளில் எண்ண ஓட்டங்களில் வேறுபாடுகள் இருந்தாலும், அனவைரும் தமிழ்ப் பதிவர் என்ற நிலையில் ஒன்றுபடுவதே இத் திருவிழாவின் முக்கிய நோக்கம் எனலாம்.

        இது போன்ற விழாவை நடத்துவது என்பது எளிதல்ல. ஆரூர் மூனா செந்தில், மதுமதி, சீனு,அரசன், ஜெயக்குமார் போன்றவர்கள் நேரம் காலம் கருதாது, விழா வெற்றி பெறவேண்டும் என்பதே குறிக்கோளாக ஏற்பாடுகளை முழு மூச்சாக செய்துவருகிறார்கள்.  புலவர் இராமானுசம் ஐயா அவர்கள் தக்க ஆலோசனைகளை வழங்குவதோடு,  இந்தப் பதிவர் சந்திப்பை ஏதோ கூடினோம் பேசினோம் மகிழ்ந்தோம், கலைந்தோம் என்றில்லாமல், ஒரு நல்ல முறையான பதிவு செய்யப்பட்ட அமைப்பாக மாற்றவேண்டும் என்பதை அவ்வப்போது வலியுறுத்தி வந்திருக்கிறார்.  அதற்கான காலம் கைகூடி வருவதாகவே தெரிகிறது.

       இந்த விழாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்று பதிவர்கள் நூல் வெளியிடுவது. பெரும்பாலும் பதிவர்கள் நூல் வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தோடு பதிவிடுவதில்லை. தம் பதிவுகளில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து பின்னர் சில திருத்தங்கள் செய்தோ செய்யாமலோ அதை புத்தகமாக்குகிறார்கள். பதிவர்களுக்கெல்லாம கிடைக்கக் கூடிய நன்மை என்னவெனில் பதிவெழுதும்போதே பின்னூட்டங்களில் அதற்கு கிடைக்கும் விமர்சனம் மற்றும் வரவேற்பே, பதிவுகள்  நூல் வடிவம் பெற  தூண்டு கோலாக அமையும்.. மேலும் தவறுகளையும் கவனிக்கப்படாத கருத்துப் பிழைகளையும் புத்தக ஆக்கத்திற்கு முன்னர சரி செய்து விடமுடியும். வலையில் பதிவாக வெளியிடப்படாத கருத்தை கொண்டதாக நூல் இருந்தாலும் முன்னரே வலையுலகில் பரிச்சயமாகி இருப்பது  நூலாசிரியருக்கும் நூலுக்கும் கூடுதல் வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

       அந்த வகையில் முன்னிலைப் பதிவரான நண்பர் வீடுதிரும்பல் மோகன் குமாரின் வெற்றிக் கோடு புத்தகம் வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்படுவதில் மிக்க மகிழ்ச்சி.இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளவற்றில் முதல் 10 அத்தியாயங்கள் மட்டுமே வலையில் விளைந்தவை. இன்னும் சில அத்தியாயங்கள் சேர்க்கப் பட்டு வெளியிடப்படவுள்ளதாக மோகன் குமார் தெரிவித்திருக்கிறார். இதன் முதல் பகுதியை மட்டும் வலையில் பின்னோக்கி சென்று படித்தேன். சிறப்பாகவும் சுவாரசியமாகவும் தொடங்கி இருக்கிறார்.  
    பொழுது போக்கு அம்சங்கள், நல்ல தகவல்கள்,பயணக் கட்டுரைகள், பேட்டிகள் இவற்றோடு மேலும்   பத்திரிகைக்குரிய பல அம்சங்களுடன் அமைந்துள்ள இவரது "வீடு திரும்பல்" ஏராளமானவர்களை கவர்ந்தது  போலவே  முதல் நூல் வெற்றிக் கோடு நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும். வாழ்த்துக்கள்!

       கடந்த பதிவர் சந்திப்பின் போதுதான் சேட்டைக்காரன் அவர்களை  முதன் முறையாக பார்த்தேன். அவரது வலைப் பக்கத்தையும் நான் அறிந்ததில்லை. தனது சுய அறிமுகத்தின்போது நான் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வருகிறேன். என்றார். அனைவரும்  ஆச்சர்யத்துடன் பார்க்க  பின் சொன்னார். ஆம் நான் கவிதைகள் எழுதுவதில்லை. கவிதை என்று எதையும் எழுதாமலிருப்பதே தொண்டல்லவா என்று பஞ்ச் அடிக்க அரங்கம் அதிர்ந்தது. பின்னர்தான் தெரிந்தது அவர் சிறந்த நகைச்சுவை பதிவர் என்பது. அவரது "மொட்டைத் தலையும் முழங்காலும்" என்ற நூலும் விழாவின்போது வெளியிடப்படுவது  மகிழ்ச்சிக்குரியது.
    வாழ்த்துக்கள்! 

       பதிவர் சங்கவி அவர்களின் "இதழில் எழுதிய கவிதைகள்" என்ற நூலும் வெளிவர உள்ளதற்கு பாராட்டுக்கள். சமீபகாலமாகத்தான் அவரது வலைப்பக்கம் செல்கிறேன். சிறப்பாக எழுதுகிறார்.  வாழ்த்துக்கள்

       எனக்கு புதியவரான யாமிதாஷா என்பவரின் "அவன் ஆண் தேவதை" என்ற வித்தியாசமான தலைப்பைக் கொண்ட நூலும் வெளியிடத் தயாராக உள்ளது. அவருக்கும் வாழ்த்துக்கள்.
      இனிவரும் காலங்களில் பதிப்புலகம் தமிழ்ப்பதிவுலகையும் உற்றுநோக்கி நல்ல படைப்புகளை புத்தகமாக வெளியிடும் என்றும் நம்பலாம். 
     அடுத்தடுத்த பதிவர் திருவிழாக்களில்  இன்னும் பல பதிவர்களின்  புத்த வெளியீடுகள் நடைபெறுவதற்கு இது நிச்சயம் முன் முன்னுதாரணமாகத் திகழும் என்று எதிர்பார்க்கலாம்
      (அப்புறம் நம் தமிழ்ப்பதிவர்கள் எதைக் கண்டும் அஞ்சாதவர்கள் என்பதால் சில  பதிவர்கள் தங்கள் தனிப்பட்ட  திறமைகளை வேறு வெளிக்காட்டப்போகிறார்களாம். பயந்த சுபாவம் கொண்டவர்கள் துணையுடன் வரவும். ஹிஹிஹி )

    ******************************************************************************** 

    அனைவரும்  வருக! வருக!

    செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

    சென்னை எக்ஸ்பிரஸ் -க்கு புக் பண்ணிட்டீங்களா?

    பதிவர் திருவிழா
       சென்னை எக்ஸ்ப்ரெஸ் என்றதும் ஷாருக்கான்படம் என்று நினைத்tதிருக்கக் கூடும். மன்னிக்கவும்.  01.09.2013 அன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள பதிவர் விழாவிற்கு வருகை தருவதற்காக  சென்னை எக்ஸ்ப்ரசில் முன்பதிவு செய்துவிட்டீர்களா என்பதைத்தான்  குறிப்பிட்டேன்.  நண்பர்களே!
       வலைப்பூக்கள் எழுதுபவர்கள். முகநூல் நண்பர்கள், டுவிட்டர்கள். கூகுள்+ பதிவர்கள் அனைவரும் கலந்து கொள்ள, ஏன் இதுவரை எழுதாமலிருந்தாலும்  இனி எழுத ஆர்வம உள்ளவர்களும் இனைந்து மகிழ்வதற்காக  சிறப்பான இரண்டாம் ஆண்டு  தமிழ் வலைப் பதிவர்கள் திருவிழா உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. 

       இதற்கான ஏற்பாடுகளை பதிவர்கள் மதுமதி,பட்டிக்காட்டான் பட்டணத்தில் ஜெயகுமார்,ஆரூர் மூனா செந்தில், அரசன், பாலகணேஷ், திடம கொண்டு போராடு சீனு உள்ளிட்ட பலரும் ஒருங்கிணைந்து நேரம் காலம் கருதாது செயல்பட்டுக் கொண்டிருகிறார்கள்.

      இதுவரை வலையில் நட்புகொண்டவர்கள் நேரில் சந்தித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக இந்த பதிவர் திருவிழா ஒரு நாள் முழுக்க  01.09.2013   நடைபெற  அன்று  வடபழனியில் உள்ள Cine Musicians Auditorium தயாராக உள்ளது

      வலையில் மூலமே தொடர்பு கொண்ட முகம் அறியாத . உங்களுக்குப் பிடித்த, ,உங்களைப் பிடித்த, பதிவர்களையும்  கண்டு மகிழ்ந்து களிப்போடு உரையாட சென்னை பதிவர் சந்திப்புக்கு புறப்படுவதற்கான ஆயத்தம் செய்து விட்டீர்களா?
       உங்களை வரவேற்க விழா ஒருங்கிணைப்பாளர்கள் காத்திருக்கிறார்கள். உங்கள் வருகையை கீழ்க்கண்ட பதிவர்களை தொடர்பு கொண்டு உறுதி  செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். வெளியூரில் இருந்து வரும் நண்பர்களுக்கு தேவைப்படின் முன் தினம் தங்குவதற்கான இட வசதி ஏற்பாடு செய்யப் படவும் விழா அன்று உணவு உள்ளிட்ட பிற ஏற்பாடுகளை செய்யவும் உங்கள் வருகையை உறுதி செய்ய பதிவரும் விழா ஒருங்கினைப்பளர்களில் ஒருவரான மதுமதி  9894124021(மதுமதி) என்ற என்ணில் தொடர்புகொள்ளவும். ஏனைய விபரங்களை kavimadhumathi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
    இத் திருவிழாவின்போது நூல் வெளியிடல் மற்றும் பதிவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இவ்வாண்டு பதிவர்கள் மோகன்குமார், சங்கவி, சேட்டைக்காரன்,   ஆகியோரின் நூல்கள் வெளியிடப்பட உள்ளன.. வேறு யாரேனும் தங்கள் நூல்களை வெளியிட விரும்பினால், மதுமதி அவர்களை தொடர்பு கொள்ளவும்.
         பதிவர்கள்  பாட்டுப் பாடுதல், நாட்டியம் ஆடுதல்,மிமிக்ரி செய்தல்,குழுவாக இணைத்து நடித்தல், போன்ற பல்வேறு திறமைகளை இந்த  நிகழ்வின்போது வெளிப்படுத்தலாம்.இதற்கான  மேலதிக விவரங்களுக்கு மதுமதி அவர்களையே தொடர்பு கொள்ளவும்.
        கடந்த முறை இந்நிகழ்வு நடைபெற "மக்கள் சந்தை" வலைத்தளம் பெருமளவுக்கு உதவி செய்ததால் நிதி சுமை ஏற்படவில்லை. இம்முறை அதற்கான வாய்ப்பு இல்லாததால் பதிவர் திருவிழா சிறப்புற நடைபெற பதிவர்கள் தாங்களே முன்வந்து  தங்களால் இயன்ற தொகையினை அளித்து வருகின்றனர். நீங்களும் உங்களால் இயன்றதை-விரும்பியதை அளித்து உதவலாம். இதற்காக கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாம்
    First Name: Raja
    Last Name: Sekar
    Display Name: RAJA. S
    Account Number: 30694397853
    Branch Code: 006850
    CIF No. : 85462623959
    IFS Code : SBIN0006850
    MICR Code : 600002047
    Branch : SBI Saligramam Branch
    Address: 49, Arcot Road, Saligramam , Chennai, City Pin - 600093
    Contact :044- 24849775
    தொடர்புக்கு
    அரசன்(ராஜா) அலைபேசி எண் - 9952967645
    நன்கொடையை வங்கியில் செலுத்தியவர்கள் tamilbloggersinfo@gmail.com என்ற முகவரிக்கு தகவல் தெரிவிக்கவும்  அம் மின்னஞ்சலில் இருந்து பணம் பெற்றுக் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை அனுப்பப் படும். வரவு செலவு கணக்கு விவரமும் பின்னர் வெளியிடப்படும். இது தொடர்பாக மேலும் விவரம் வேண்டுவோர் மேற்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

        தமிழ் வலைப் பதிவர்களே வலைப்பதிவர் திருவிழா சிறப்புற திரளாகக் கலந்து கொள்வீர். தங்கள் வருகையை இன்றே உறுதி செய்வீர்.

    வருக! வருக! இணையத்தால் இணைப்புக் கொண்டிருந்த நாம் நேரில் சந்தித்து மகிழ்வோம்.

    *********************************************************************************************
    கொசுறு: ( பதிவர்கள் அனைவரும் அறிந்த ,பதிவுலக மந்திரவாதி, பின்னூட்டப் புயல், திரு திண்டுக்கல் தனபாலனை சந்திக்க நிறையப் பதிவர்கள் ஆவலாக உள்ளதாக செய்திகள் வந்துள்ளன)




    புதன், 29 ஆகஸ்ட், 2012

    சிந்தித்ததும் சந்தித்ததும் தித்தித்தது


    சிந்தித்தவை .

      சிறிய அளவில் எளிமையாக நடத்தப் பட இருந்த பதிவர் சந்திப்பு பிரம்மாண்டமாக 26.08.2012 அன்று  நடந்தேறியதை பற்றி பதிவுகள் வந்த வண்ணம் இருக்கிறது. டிஸ்கவரி பேலசில் முளைத்த சிந்தனை உலக தமிழ்ப் பதிவர்களை ஒருங்கிணைப்பட வேண்டும் என்பதே அனைவரும் ஒரு அமைப்பாக செயல்பட வேண்டும் என்ற சிந்தனையை வெளியிட்டவர் புலவர் ராமானுஜம் ஐயா அவர்கள். ஈரோடு கோயம்பத்தூர் என்று பதிவுகள் சந்திப்புகள் நடந்தாலும் தலைமை இடமான சென்னையில் பெரிய அளவில் பதிவர் சந்திப்பு நடைபெற்றதில்லை என்று கூறப்பட்டது. அந்தக் குறையை போக்கும் வண்ணம் தமிழ்ப் பதிவுலகமே திரண்டு வருகை தர வைக்க  என்னவெல்லாம் செய்யலாம் என்று இரவும் பகலும் சிந்தித்து திட்டமிட்டனர். விழா நடத்துவதற்கு தேவையான நிதி இடவசதி இன்னும் எழக்கூடிய பல்வேறு சிக்கல்கள் இவற்றையும் கருத்தில் கொண்டு புலவர்  ராமானுஜம் அவர்களின் ஆலோசனையோடு தூரிகையின் தூறல் மதுமதி, பட்டிகாட்டான் பட்டணத்தில் ஜெயக்குமார்,வீடு திரும்பல் மோகன்குமார், மின்னல் வரிகள் பாலகணேஷ் ,மெட்ராஸ் பவன்  சிவகுமார்,அஞ்சா நெஞ்சன் உள்ளிட்ட பலரும்  தங்கள் சொந்தப் பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு விழாப் பணியில் ஈடுபட்டனர்..அனைவரும் சென்னையில் நடத்தினாலும் மற்ற தமிழகத்தின் மற்ற பகுதியில் உள்ள பதிவர்கள், பழைய புகழ் பெற்ற பதிவர்கள் எந்த விதத்திலும் வருத்தமடைந்து விடக் கூடாது என்ற சிந்தனையுடனே செயல் பட்டனர்.அதில் வெற்றியும் கண்டனர் 

       அமைப்பு ரீதியாக செயல் படுவதில் என்ன நன்மை?எந்த நோக்கத்திற்காக?

       தனிப்பட்ட ஒருவருக்கு எந்த நன்மையும் இல்லை. ஆனால் புதிய பதிவர்களை உருவாக்காலாம்.அவர்களுக்கு வழி காட்டலாம். இயன்ற சமுதாய நற்பணிகளை செய்யலாம்.ஒருவர் தனியாக செய்வதை விட அனைவரும் சேர்ந்து செய்தால் சற்று பெரிய அளவில் செய்ய முடியும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கண்டபடி எழுதுவதை தவிர்த்து நமக்கு நாமே வரையறை செய்து கொள்ள முடியும்.தமிழ் மென்பொருள்கள் குறிப்பாக எழுத்துருக்கள்  தொடர்பாக அரசுக்கு கோரிக்கை வைக்க முடியும்.இதன் மூலம் கூகுள் மைக்ரோ சாப்ட் நிறுவனங்களையும் நம்மை கவனிக்க வைக்க முடியும்.நமது தமிழ் மொழி வளர்ச்சிக்கு நம்மாலான பணிகளை ஒன்று சேர்ந்து செய்ய முடியும். பத்திரிகைகள் பதிவுலகை கவனித்து வருவது குறிப்பிடத்த தக்கது. பல எழுத்தாளர்கள் கவிஞர்களுக்கு தக்க வாய்ப்புகள் ஏற்படுத்தித் தர இயலும்.ஆரோக்கியமான விவாதங்கள் நடத்த முடியும்.தரமான ஆரோக்கியமான ஊடகமாக செயல்பட தமிழ்ப் பதிவுலக அமைப்பு தேவை. இவ்வாறெல்லாம் சென்ற சிந்தனையின் முதற் படியாக பதிவர் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.

    சந்தித்தவை 

           ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாளும் வந்தது. பதிவர்களின் எழுத்துக்களை மட்டுமே பார்த்த நான் அவற்றை எழுதியவர்களை பார்த்தபோது மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். எல்லோருக்கும் அவரவர் பெயர் வலைப் பதிவின் பெயர் எழுதப்பட்ட அடையாள அட்டையை கொடுத்து அசத்தினர். ஒரு சிலர் சட்டையில் மாட்டி இருந்த அடையாள அட்டையை உற்றுப் பார்த்து கொண்டிருந்தனர். தனக்கு பரிச்சியமான வலைப்பதிவாக இருந்தால் அறிமுகப் படுத்திகொண்டு பேசிக் கொண்டிருந்தது ரசிக்கும்படி இருந்தது.  சிலரை புகைப் படத்தில் பார்த்ததற்கும் நேரில் பார்த்ததற்கும் வித்தியாசம் இருந்தது. திண்டுக்கல் தனபாலன் நேரிலும் புகைப் படத்திலும் ஒரே மாதிரியாக அழகாக இருந்தார். தீதும் நன்றும் பிறர்தர வாரா ரமணிசாரைப் பார்த்து என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். முரளிதரன்னு இன்னொருத்தரும் இருக்காரே என்றார். அது நான்தான் என்று சொல்ல,வெள்ளை வேட்டி சட்டை போட்டுக்கொண்டு இருப்பீர்கள் என்றுதான் கற்பனை செய்து வைத்திருந்தேன்  என்றார்.

       வசந்த மண்டபம் மகேந்திரன்,மூத்த பதிவர் நடன சபாபதி அவர்கள் , வலைச்சரம் சீனா அவர்கள் , சிபி செந்தில்குமார்  மற்றும் பலரையும் முதன் முதலாக  சந்தித்து பேசியது மகழ்ச்சி அளித்தது. +2 மாணவன் போல இங்கும் அங்கும் சுற்றிக் கொண்டிருந்தார் ஒருவர். அவர்தான் ஃ பிலாசபி பிரபாகரன் என்று தெரிந்து கொண்டேன்.அவர் பலபேரால் அறியப்பட்டிருந்தார். கடற்கரை விஜயனும் கல்லூரி மாணவர் போலவே இருந்தார். ஜாக்கி சேகரும், கேபிள் சங்கரும் பதிவர் ஸ்டார்  அந்தஸ்துடன்  வலம்  வந்தனர்.

       தமிழ்வாசி பிரகாஷ் பேரைக் கேள்விப் பட்டிருந்த நான் அவர் நடுத்த வயதுடையவராக இருப்பார் என்று நினைத்தேன்.அவர் இளைஞராக வந்து நின்றார். டீன் வயது முதல் டி வயதுகள்  வரை பலதரப்பட்டவர்  பதிவர்களாக இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. பெண் பதிவர்கள்  பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது. 

      மூத்த பதிவர்கள் இந்த வயதில் கணினியைக் கையாண்டு இளைஞர்களுக்கு இணையாக பதிவுகள் மூலம் நிரூபித்திருப்பது உண்மையிலேயே பாரட்டப் படவேண்டிய ஒன்றுதான். சந்தித்தவை எல்லாம் சந்தோஷத்தையே தந்தது.

    தித்தித்தவை   ;

    1. இனிமையான வரவேற்பு  மகிழ்ச்சி அளித்தது 
    2. பதிவர்  அறிமுகம் பாந்தமாய் இருந்தது 
    3.  சுவையான மதிய உணவு  நெஞ்சில் நின்றது
    4. சுரேகாவின் தொகுப்பு  சொக்க வைப்பதாக இருந்தது 
    5. பட்டுக்கோட்டை பிரபாகரின் பேச்சு பிரமாதமாக இருந்தது
    6. சரியான நேரத்தில் தேநீர்,மற்றும் காபி, நினைத்துப் பார்க்க வைத்தது 
    7. மாலை போண்டோ ருசித்தது 
    8. தென்றல் சசிகலாவின் நூல் வெளியீடு இதமாய் இருந்தது 
    9. கவியரங்கம் , குறிப்பாக மருத்துவர் மயிலனின்  கவிதை, லதானந்த்   அவர்களின் நகம்  பற்றிய கவிதை கைதட்ட  வைத்தது.
    10 மக்கள் சந்தையின் போட்டி அறிவிப்பு மனதைக் கவர்ந்தது.

       மொத்தத்தில் அடுத்த பதிவர் சந்திப்பை ஆவலுடன் எதிர் பார்க்க வைத்து விட்டது . 

      இந்த விழாவிற்காக பாடுப்பட்ட பதிவர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய அத்தனை பேருக்கும் தமிழ்ப் பதிவுலகம் சார்பில் பலமாக நன்றிகள்  உரைப்போம்.
       
                                    *****************
    இதைப் படித்தீர்களா?


    திங்கள், 27 ஆகஸ்ட், 2012

    பதிவர் சந்திப்பால் ஏமாற்றம்


    என்னோட ரசிகர்கள்தான் சார்! நம்புங்க! (புகைப்படம்  அனுப்பியவர் திரு மோகன்குமார்)
        பின்ன என்ன சார்! நீங்களே நியாயத்தை சொல்லுங்க. நான் 20 ந் தேதியிலிருந்து தமிழ் மண நட்சத்திரப் பதிவரா இருக்கேன். இதை யாரும் அவ்வளவா கண்டுக்கலன்னா அதுக்கு காரணம் பதிவர் திருவிழாதான்!
       நானும் முதல் அதிர்ச்சி செய்திய வெளிட்டப்ப  அதை ஹிட்டாக்கினீங்க. அப்புறம்  நான் கழுதை ன்னு (அதுதான் ஏற்கனேவே தெரியுமேன்னு சொன்னீங்க) ஒருபதிவைப் போட்டேன். சரின்னு சொல்லி நீங்களும் அந்தக் கழுதைய, சாரி! கவிதைய போனாப் போகட்டும் ரொம்ப நல்ல கழுதை ன்னு பாராட்டினீங்க.அதையும் நான் உண்மைன்னு நினச்சு வடிவேலு வாங்கிய கழுதைன்னு இன்னொரு பதிவைப் போட்டேன்.அதையும் நீங்க ஹிட் ஆக்கினீங்க 
      
      வாருங்கள்!வரலாற்றில் இடம் பெறலாம்!.   ன்னு பதிவப் போட்டு கூப்பிட்டேன். நீங்களும் மொத்தமா கிளம்ப ஆரம்பிச்சீங்க. அதுக்கப்புறம் சுஜாதா சொன்ன பச்சைப் பொய்கள் பதிவை எழுதினேன். சுஜாதா ரசிகர்கள் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டாலும் நிறையப் பேர் அதை படிச்சாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆவலுடன் அந்தரங்கம்னு அடுத்த பதிவை வெளியிட அதையும் ஆவலாத்தான் பாத்தீங்க!
        அப்புறம் முன்னணிப் பதிவர்களின் அலக்சா  தர வரிசை பின்னிலை ஏன்?அப்படின்னு பதிவைப் பாத்துட்டு இவனுக்கு ஏன் இந்த தொழில் நுட்ப பதிவு ஆசைன்னு கேட்டாலும், சரி பரவாயில்ல;  ஏதோ சுமாரா இருக்குன்னு ஒத்துக்கிட்டீங்க.

     அதுக்குள்ள 26 தேதி வந்துடுச்சா.பதிவர் திருவிழாவுக்கு போகணும்னு காலையில சீக்கிரம் எழுந்து ஒரு பதிவ போடலாமேன்னு மேகம் எனக்கொரு கவிதை தரும்  கவிதையைப் போட்டுட்டு (வித்தியாசமா பண்ணறேன்னு நினச்சி கட்டம் கட்டி கவிதை போட்டேன்) கிளம்பிட்டேன். சாயந்திரம் வீட்டுக்கு வந்து பாத்தா ஏமாந்திட்டேன் சார்! ஏமாந்துட்டேன்.
     
       நீ எல்லாம் எதுக்குடா கவிதை எழுதறன்னு கேக்காம கேட்டுட்டாங்க சார்!

      சரி இவ்வளவு நாள் எப்படி சகிச்சிட்டாங்கன்னு ஆராய்ச்சி பண்ணப்பதான் தெரிஞ்சுது என்பதிவைப்  பாக்கறவங்கல்லாம்  பதிவர் திருவிழாவுக்கு வந்துட்டங்கன்னு. அத்தனை பேரும் அங்க வந்துட்டதால (என்னா கூட்டம்! பார்க்க படம்) என்  கவிதைய படிக்கறதுக்கு ஆளில்லாம போச்சு சார். இதுவும் பத்தாதுன்னு இணையத்துலநேரடி ஒளிபாப்பு வேற. எப்படி என் பதிவு பக்கம் வருவாங்க! அதுவும் இல்லாம அங்க கவியரங்கத்தில கவிதை வேற வாசிச்சிட்டனா  இனிமே நம்ம பக்கம் வருவாங்களான்னு சந்தேகமாயிடுச்சி  சார்!

       இப்ப சொல்லுங்க எனக்கு நேத்து (26.08.2012) ஏமாற்றம் ஏற்பட்டதுக்கு  காரணம் இந்தப் பதிவர் திருவிழாதான் சார்! 

      ஆனா ஒண்னு சார்! இதுக்கெல்லாம் பயந்து கவிதை எழுதறத நிறுத்திடுவேன்னு மட்டும் நினச்சிடாதீங்க. இன்னொரு முடிவு பண்ணிட்டேன். இந்த மாதிரி பிரம்மாண்ட திருவிழா வரும்போது பதிவு எதுவும் போடக் கூடாது. குறிப்பா கவிதையை போட்டு ஏமாறக் கூடாதுன்னு.

    என்ன சார்! நான் சொல்றது சரிதானே!

    ********************************************************

      நன்றி!
      கடந்த ஒரு வாரமாக தமிழ்மணம் நட்சத்திரப் பதிவராக பதிவுகளை இடும் அருமையான வாய்ப்பு கிடைத்தது. எட்டு பதிவுகள் மட்டுமே இட முடிந்தது. கடந்த ஒரு வாரமாக இதுவரை இல்லாத அளவிற்கு என் வலைப்பக்கத்திற்கு மூன்று மடங்கு அதிக பார்வையாளர்கள் வந்ததற்கு முக்கிய காரணம் தமிழ்மணமே.இந்த அங்கீகாரத்தை  நல்கிய தமிழ்மணத்திற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

        மேலும் இவ்வாய்ப்பை பெருவதற்கு   முக்கியக்  காரணமாக இருந்தவர்    திரு கோவி.கண்ணன் அவர்கள். முன்பின் தெரியாத என்னை  அவர் தமிழ்மணத்திற்கு பரிந்துரை செய்ததால்தான் இந்த அரிய  வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

        எனது பதிவுகளை படித்து கருத்தளித்து  வாக்கிட்டு,ஆலோசனை வழங்கியவர்களுக்கும்  பிற பார்வையாளர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
       இந்த ஒரு வாரம் என் பதிவுலக வாழ்க்கையில் மறக்க முடியாத வாரம். 

    மீண்டும் சந்திப்போம்.

    *****************************************



    வியாழன், 23 ஆகஸ்ட், 2012

    வாருங்கள்!வரலாற்றில் இடம் பெறலாம்!


       26.08.2012 அன்று  வரலாறு காணாத அளவில் சிறப்பான முறையில் பதிவர் திருவிழா நடைபெற உள்ளது. மாபெரும் சக்தியாக உருவெடுக்க அனைவரும் ஒன்று கூடுவோம்.பதிவர்களின் எழுத்தைப் பார்த்த நாம்  அவர்களின் முகங்களைப்  பார்ப்போம். பதிவுகளைப் பகிர்ந்து பழகிய நாம்  ஒருநாள் நேரில் பழகிப் பகிர்வோம் 

    இந்த வரலாற்று நிகழ்வில் இடம் பெற உள்ளோர் பட்டியல்.
    நீங்களும் உங்கள் வருகையை உறுதிப்படுத்துவீர்.

    ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
    தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்னை
    அகரன்(பெரியார் தளம்) சென்னை
    ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை
    மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்) 
    குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை
    கார்க்கி(சாளரம்) சென்னை  
    விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை 
    மென்பொருள்பிரபு,சென்னை 
    அமைதி அப்பா,சென்னை 
    ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை
    சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை
    கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை
    பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை
    ராமு,சென்னை
    ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி 
    தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
    சுந்தர்ராஜ் தயாளன்,பெங்களூரு
    சைத அஜீஸ்,துபாய் 


    அகிலா (கோயம்புத்தூர்) 
    இரா.தெ.முத்து(திசைச்சொல்
    வடிவேலன். ஆர்



    மூத்த பதிவர்கள்


    உங்களுக்கு தெரிந்து 60 வயது கடந்த மூத்தர்வர்கள் விடுபட்டிருந்தால் அவர்கள் வர இசைந்துள்ளார்களா? என்ற விபரத்தோடு தெரிவித்தால் உதவியாக இருக்கும்.

    கவியரங்கில் பங்குபெறுவோர் 

    சசிகலா(தென்றல்)சென்னை
    கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
    ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
    மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய் 
    சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர் 
    தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன் 
    கணக்காயர்,சென்னை  
    டி.என்.முரளிதரன் 

     விடுபட்டோர் மற்றும் புதிதாக வர விரும்புவோர் கீழ்க்கன்டவர்களை தொடர்பு கொள்ளவும்
    உயர்திரு. சென்னைப்பித்தன் - 94445 12938
    உயர்திரு. புலவர் சா.இராமாநுசம் - 90947 66822
    மதுமதி 98941 24021
    பாலகணேஷ் 73058 36166
    ஜெயகுமார் 90949 69686

    உங்கள்  அனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்..

    வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

    வாங்க!வாங்க!எல்லாரும் வாங்க!

        26.08.2012 ஞாயிற்றுக்கிழமை தமிழ்ப் பதிவுலக வரலாற்றின் மகத்தான நாள். இதுவரை கலக்கிய பதிவர்கள்,தற்போதும் கலக்கிக் கொண்டிருக்கும் பதிவர்கள், இனி கலக்க இருக்கும் பதிவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கொண்டாட இருக்கும் நாள்தான் தமிழ் வலைபதிவர்கள் திருவிழா. தமிழகத்தின்  தலைநகரான சென்னையில் நடைபெற இருக்கும் இவ்விழாவிற்கான விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த விழாவிற்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்ப் பதிவர்கள் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த  வேண்டிய நேரம் இது. அவ்வப்போது ஆங்காங்கே பதிவர் சந்திப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் தமிழ்ப் பதிவர்கள்அனைவரும் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்குவது இன்றியமையாதது. இது பல்வேறு வகையில் பதிவர்களுக்கு உதவும் என்பதில் ஐயமில்லை.
        இந்தக் கருத்தை நீண்ட நாளாக வலியுறுத்தி வருபவர் நமது மதிப்பிற்குரிய புலவர் இராமானுசம் ஐயா அவர்கள். அதற்கான நேரம் தற்போது கைகூடி வந்துள்ளது. புலவர் அய்யா,சென்னைபித்தன் உள்ளிட்ட பல்வேறு மூத்த பதிவர்களின் ஆலோசனைகளின்படி அனைவரும் பிரமிக்கும் வண்ணம் நடைபெற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றான். 
         வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாது பலவேறு சமுதாய பிரச்சனைகளுக்கு விவாதங்களும்  தீர்வுகளும் தமிழ்ப் பதிவுலகில் முன் வைக்கப்டுகின்றன. இந்த விழா தமிழ் பதிவர்களுக்கு பத்திரிகைகள்,சமுதாய அமைப்புகள் பொதுமக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரம் பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை.

        உங்கள் மனம் கவர்ந்த பதிவுலக ஜாம்பவான்களைக் காணவும், ஜாம்பவான்கள் தங்கள் ரசிகர்களைக் காணும் அரிய வாய்ப்பாகவும் அமைய இருக்கும் இவ்விழாவிற்கு தவறாது கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம். ஒரு நாள் முழுவதும் நடைபெறும் இக் கொண்டாட்டத்தில் உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக கவியரங்கமும் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிப்பவர்கள் இவ்விழாவிற்காக நேரம் காலம் பாராது செயல்படும் கீழ்க்கண்ட(பின்னணியில் இன்னும் பலர் உள்ளனர்) பதிவர்களின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
            மதுமதி(தூரிகையின் தூறல்) 98941 24021  
    பாலகணேஷ்(மின்னல்வரிகள்)-7305836166 சென்னைப்பித்தன்(நான்பேசநினைப்பதெல்லாம்)- 94445 12938
     புலவர் சா.இராமாநுசம்(புலவர்கவிதைகள்)- 90947 66822
          சசிகலா(தென்றல்)- 99410 61575

            
              சமூக வலைத்தளங்களில் பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் இன்னும் பல பதிவர்களை சென்றடையட்டும்.. நன்றி.. 

    அற்புதமாக  அழைப்பிதழை வடிவமைத்த மின்னல் வரிகள் கணேஷ் அவர்களுக்கு நன்றி. அதுவும் லோகோ மிக அற்புதம்.

    டிஸ்கி: ஒரே ஒரு கஷ்டம் தான் உங்களுக்கு காத்திருக்கு ; அதாவது நானும் ஒரு கவிதை(?) வாசிக்கப் போகிறேன்.

                                     *************************


    வியாழன், 24 மே, 2012

    பதிவர் சந்திப்பில் அறிந்த 'பயன்படா மரங்கள்'

     
      பதிவர் சந்திப்பு அறிமுகப் படுத்திய அற்புத மனிதர்  யோகாநாதன். மரங்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்துக்  கொண்டவர்.பக்கத்து வீட்டு மரத்தின் கிளை நம் வீட்டை எட்டிப் பார்த்தாலே சண்டையிட்டு அதை வெட்டும் வரை ஓயாத மனிதர்கள்தான் இங்கே அதிகம். 
      ஆனால்  மரங்களை வெட்டினால் இவர் மனம் துடிக்கும். இவர் சொல்வதைக் கேட்டால் உலகம் பிழைக்கும். பசுமை தழைக்கும்.
       சுற்றுச்  சூழல்ஆர்வலரான இவர் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துகிறார். இடமும் மின்சாரமும் கொடுத்தால் போதும் பிஞ்சு நெஞ்சங்களில் மரங்கள் பற்றிய விழிப்புணர்வை என்னால் பதிய வைக்கமுடிய்ம் என்று அறுதியிட்டுக் கூறுகிறார். ஆர்வமுள்ள ஆசிரியர்கள்
    அவரை கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளாலாம்.
    M.Yoganathan
    Pr No : 3994,
    Tamilnadu State Transport Corporation,
    Maruthamalai Branch,
    Coimbatore.


    Home Address
    107, Thirumalai Samy Naidu Street,
    New Sidhapudur,
    Coimbatore - 44.
    Mobile
    : 09443091398.
    வலைத்தள  முகவரி 
    http://yogutree.com

     இதோ மரங்களைப் பற்றிய ஒரு கவிதை
                      பயன்படா மரங்கள் 

                 இயற்கைக்கு அழகு சேர்க்கும் 
                  அணிகலன் மரமேயாகும் 
                  இறைவன்  நமக்களித்த 
                  இனியதோர் வரமே யாகும்

                  மண்ணுக்கு மழையைத் தருமே
                  உலகுக்கு நிழலைத் தருமே
                  கண்ணுக்கு குளிர்ச்சி தருமே
                  உண்பதற்கு உணவு தருமே

                  மலைகளுக்கு ஆடையாகும் 
                  குயில்களுக்கு மேடையாகும்
                  பறவைகளுக்கு  கூடு ஆகும்
                  ஒரு சிலர்க்கு வீடும் ஆகும்
                  
                  விருந்தினர்  உணவுஉண்ண
                  விரும்பியே இலைகள்கொடுக்கும்
                  மருந்துகள்  பலவும் தந்து 
                  மன்னுயிர் வாழச் செய்யும் 

                  எரித்திட விறகைக் கொடுக்கும் 
                  அரித்திடும் மண்ணைத் தடுக்கும்
                  உண்ணவே கனிகள்  கொடுக்கும்
                  உயிர்வளி காற்றில் சேர்க்கும்

                  வெம்மையை தடுத்து விடும்
                  அசுத்தங்கள் எடுத்து விடும்
                  பலப்பல பொருட்கள் செய்ய 
                  பணிவுடன் தன்னைக் கொடுக்கும்

                  பயன்பெறும் மனிதன் மரத்தை 
                  ஒருநாளும் நினைப்பதில்லை 
                  சுயநல மனிதர் அவர்க்கு 
                  இயற்கையின்  மன்னிப் பில்லை

                  மக்கட்  பண்பில்லா மனிதர் 
                  மரம்போலே ஆவாரென்று
                  வான்புகழ் வள்ளுவன் ஏனோ
                  வாய் தவறி சொன்னான் அன்று 

                  பயன்படா மரங்கள் என்றும் 
                  மண்ணிலே முளைத்ததில்லை 
                  மடிந்தபின்னும் மனிதருக்குதவும் 
                  மரங்களுக்கு இணையே இல்லை.

                  மரங்களின்  மகிமை அறியா
                  மனிதரில்  சிலபேர் தன்னை 
                  பயன்படா மரங்கள் என்பேன் 
                  மறுப்பேதும் உண்டோ? சொல்வீர்!.


    ***********************************************************************************************
    இதை படிச்சிட்டீங்களா?