என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 30 மே, 2013

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி சரியான முடிவா?


நம்புங்க! அரசு பள்ளிதான்
  வரும்கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும ஆங்கில வழிக் கல்வி தொடங்கலாம் என்ற அரசு அறிவித்துள்ளது  குறைந்தது 20 மாணவர்கள் இருந்தால் போதும் ஆங்கில வழி தொடங்க அனுமதிக்கலாம் என்ற செய்தி  அனைவரும் அறிந்ததே! 

   ஏற்கனவே பல ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் ஆங்கிலம்  மூன்றாம் வகுப்பில்தான் கற்றுத் தரப்பட்டது. பின்னர் ஜெயலலிதா தான் அரசு பள்ளிகளில் முதல்  வகுப்பில் இருந்தே கற்பிக்கப் படவேண்டும் என்று மாற்றி அமைத்தார் . இதற்கு ஆசிரியர்கள் மற்றும் பொது மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது 

  தற்போது ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு ஆசிரியர்களிடையே வரவேற்பு இருக்குமா?  பொது மக்கள்  இதை வரவேற்கிறார்களா? அரசியல்வாதிகளின் நிலை என்ன?  இன்று இவை விவாதப் பொருளாக மாறி இருக்கின்றது.
   கடந்த ஆண்டே தேர்ந்தெடுக்கப்பட்ட சில பள்ளிகளில் ஆங்கில வழி பரிட்சார்த்தமாக கொண்டு வரப்பட்டது.அதன் விரிவாக்கமாக இன்று எல்லா அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி தொடங்கப் பட இருக்கிறது
.
  உண்மையில் இது திடீரென்று முதல் அமைச்சர் எடுத்த முடிவு அல்ல என்றே நினைக்கறேன். காரணம் கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் குறைந்து வருகிறது. இலவச புத்தகம், சீருடை,நோட்டுப் புத்தகங்கள், கல்வி உதவித் தொகை என பல்வேறு நலத் திட்டங்கள் மாணவர்களுக்காக  செயல்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கும்போதும் ஏன் மாணவர்கள் பள்ளியில் சேர்வதில்லை. அரசு பள்ளிகளில் பின்பற்றப்படும் செயல்வழிக் கற்றல் படைப்பாற்றல் கல்விமுறை மிகச் சிறப்பானது இந்த முறை எந்த பெரிய புகழ்பெற்ற பள்ளிகளிலும் பின்பற்றப் படுவதில்லை. பின்னர் ஏன் மாணவர்கள் சரியாகப் படிக்கவில்லை. பல்வேறு சலுகைகள் இருந்தும் மாணவர்கள் சேர்க்கை குறைவு ஏன்? என்ற கேள்வியை  கல்வித்துறை அதிகாரிகள் எழுப்பி வருகிறார்கள்.
   இதற்குமுக்கிய காரணம் மக்கள் ஆங்கில வழிக் கல்வியை விரும்புவதுதான்,  என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டது.  ஆங்கில வழியில் படித்தால்தான் எதிர்காலத்திற்கு நல்லது என்று பெரும்பாலோர் நினைப்பது கண்கூடு. தமிழ் வழியில் படித்த முந்தைய தலைமுறையினர் தன் பிள்ளைகளை எவ்வளவு செலவானாலும் ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்க வைக்கவேண்டும். வசதி வாய்ப்பு அற்றவர்களும், படிப்பு வராத மாணவர்களும்தான் அரசுப் பள்ளிகளில்தான் படிப்பார்கள். அவர்களுக்காகத்தான் அந்தப் பள்ளிகள். நாம் அப்போது வசதி குறைவானவர்களாக இருந்ததால் அரசு பள்ளியில் படித்தோம். ஆனால் அதற்கு இப்போது அவசியம் இல்லை. நம் அரசு பள்ளியில் சேர்ப்பது கௌரவத்திற்கு இழுக்கானது  போன்ற எண்ணங்கள்  பல பெற்றோர்களின் மத்தியில் காணப்படுகிறது.

. இந்த சூழ்நிலையில்தான் கடந்த ஆண்டு முன்னோட்டமாக தேர்ந்தெடுக்கப் பட்ட சில பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அப்பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் முதல் வகுப்பில் ஆங்கில வழியில்  சேர்க்கப் பட்டனர். தமிழ்வழிக் கல்வி இருந்தும் பெற்றோர்கள் ஆங்கில வழியையே தேர்ந்தெடுத்தனர். ஒருவர் கூட தமிழ் வழியில் சேராத பள்ளிகளும்  உண்டு. சென்னையில் இப்படி சில மாநகராட்சி பள்ளிகள் உள்ளன.

   இதை கருத்தில் கொண்டே இந்த ஆண்டு 20 க்கு மேற்பட்ட மாணவர்கள் இருந்தால் ஆங்கில வழிக் கல்வி தொடங்கலாம் என்ற அரசு அனுமதித்திருக்கக் கூடும். சாதரணமாக 1:40(அதாவது ஒரு ஆசிரியருக்கு 40 மாணவர்கள்) என்பது அரசு பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதமாகும். ஆனால் இப்போது 1:20 அளவுக்கு குறைந்து விட்டது. இதனால் பல பள்ளிகளில் (அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் உட்பட) பல பள்ளிகளில் ஆசிரியர்கள் உபரி என்று கணக்கிடப் பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அபாயகரமான அளவுக்கு அதிகரித்துக் கொண்டே வர, மாணவர் எண்ணிக்கையோ குறைந்து வர ஒரு மாணவனுக்கு அரசு செலவிடும் தொகை மிக தனியார் பள்ளிகளில் அவர்கள் செலுத்தும் கட்டணத்தைவிட அதிகமாக உள்ளது. அதுவும் நகர்ப்புறத்தை  ஒட்டியுள்ள பகுதிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கடந்த ஆண்டு கணிசமான அளவுக்கு உபரி ஆசிரியர்கள் கிராமப்புற பள்ளிகளுக்கு  கட்டாய மாறுதல் செய்யப்பட்டனர். அங்காவது  மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. எவ்வளவு குறைவாக மாணவர்கள் இருந்தாலும் ஒராசிரியர் பள்ளிகள் கூடாது என்ற விதியின் படி இரண்டு ஆசிரியர்கள்  அப்பள்ளிகளில் பணி புரிகின்றனர். மாணவர் எண்ணிக்கை 40 க்கும் குறைவாகவே இருக்கும். ஒவ்வோர் ஆண்டும் ஒரு ஆசிரியர் ஒய்வு பெற்று விட்டால் அப்பணியிடம் நீக்கப்பட்டுவிடும்

   தொடக்கக் கல்வியைப் பொருத்தவரை 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆசிரியர்களின் எண்ணிக்கையை விட இப்போது உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கையோ அதைவிட வேகமாக குறைந்து வருவதால் உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. அதன் காரணமாகவே ஆங்கில மீடியம் தொடங்கப் பட்டால் மாணவர் எண்ணிக்கை கூடும். உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறையும்.  ஆசிரியர்களுக்கு அரசால் வழங்கப்படும் ஊதியத் தொகை  வீணாகாமல் இருக்கும். உபரி ஆசிரியர்கள் என்பதால் இவர்களை வீட்டுக்கு அனுப்பவும் முடியாது. பணிப்பாதுகாப்பு  அளிக்கப்படவேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது. இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைவது உபரி  ஆசிரியர்கள்தான். ஆனால் அவர்கள் மகிழ்ச்சி நிலைக்குமா என்பது இந்த ஆண்டு சேரும் மாணவர் எண்ணிக்கையை  பொறுத்தே  அமையும். லட்சங்கள் கொடுத்து நகர்ப்புறங்களுக்கு மாறுதல் பெரும் ஆசிரியர்கள் எப்போது வேறு ஒன்றியத்திற்கோ அல்லது மாவட்டத்திற்கோ தூக்கி அடிக்கப் படுவோமா என்ற அச்சத்துடன் உள்ளனர்  
  அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை மாணவர்கள் அதிகம் உள்ள பள்ளிக்கு மாறுதல் செய்து விட முடியும். ஆனால் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் இதுபோன்ற மாறுததல்களுக்கு அதிக வாய்ப்பில்லை. பணிப்பாதுகாப்பு இருப்பதால் ஒய்வு பெறும் வரை உபரி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
   ஆங்கில வழிக் கல்வியால் அதிக மாணவர்கள் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தனியார் பள்ளிகளைப் போல பல்வேறு விளம்பரங்கள் மூலம் அரசு பள்ளிகள் மாணவர் பிடிக்கும் வேலையில் இறங்கி வருகிறது. மாணவர் இன்றி  சில பள்ளிகள் மூடும் நிலைக்குக் கூட  தள்ளப்பட்டுள்ளன. ஆங்கில வழிக் கல்வி ஓரளவிற்காவது அப் பள்ளிகளை மீட்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆசிரியர்களும் தங்கள் பணி இடத்தை  தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

  ஆனால் ஆங்கில வழிக் கல்வி நிதி உதவி பள்ளிகளில் தொடங்க அனுமதி அளிக்கப்படவில்லை. அவர்களுக்கு ஆங்கில வழிக் கல்விக்கு அனுமதி  அளித்தால் ஏராளமான உபரி  ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள். ஆனால் இப்பள்ளிளுக்கு அனுமதி வழங்கப்பட்டால் அரசு பள்ளிகளில்சேரும் மாணவர்களை இவர்கள் கவர்ந்து இழுத்து விடுவார்கள் என்ற கருத்தும் உண்டு.

   அரசு பள்ளிகளில்ஆங்கில வழிக் கல்வி நடைமுறைப் படுத்துவதால் காலப் போக்கில் தமிழ் வழிக் கல்வி முறையே இருக்காது. இது அரசே தமிழை அழிக்கும் செயலாக மாறிவிட வாய்ப்பு உண்டு என்று கருணாநிதி வைகோ உட்பட பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
     இதற்கு எதிரான கருத்தைக் கூறுவோர் அரசுபள்ளிகளில்  ஆங்கில வழியை எதிர்ப்பவர்கள் ஒருவர்கூட தங்கள் பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைப்பதில்லை. தாய்மொழி மூலமே சிறந்த கற்றல் திறனை பெறமுடியும் என்பவர்கள் முதலில் அதற்கு முன் உதாரணமாக விளங்கட்டும் பின்னர் ஆங்கில வழியை எதிர்க்கட்டும். தன் பிள்ளைகள் மட்டும் ஆங்கிலத்தில் சிறந்து விளங்கவேண்டும் ஏழை மக்களுக்கு மட்டும் தமிழ் வழிக் கல்வி என்பது எவ்விதத்தில் நியாயம் என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். தாய்மொழிக் கல்வி என்ற பெயரில் அவர்கள்  முன்னேற்றத்தை தடை செய்வது சரியா என்று கேட்கின்றனர்.

  பத்தாம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு +2 ஆங்கில வழி படிப்பவர் நிறையபேர் உண்டு. ஏன் ஆங்கில வழியில் சேர்ந்தோம் என்று எண்ணி வருந்தக் கூடிய அளவுக்கு அவர்களுக்கு ஆங்கில வழி கடினமாக இருக்கும் . அவர்களால் +2  வில் குறைந்த மதிப்பெண்ணே பெற முடிகிறது. முதலில் இருந்தே ஆங்கிலத்தில் படித்தால் இந்த கஷ்டங்கள் இருக்காது என்று பெற்றோர்கள் நம்புகிறார்கள்.தாய்மொழி வழியாக பெறக்கூடிய கல்வியே சிறந்தது. என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். மகாத்மா காந்திகூட தாய்மொழி வழிக் கல்வியையே ஆதரித்தார். அது உண்மைதான் என்றாலும் உயர் கல்வி பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் படிக்க வேண்டி இருக்கிறது. ஆங்கில வழியில் படித்தவர்களே வேலை வாய்ப்பை அதிக அளவில் பெற முடிகிறது என்று நம்பப்படுவதும் ஆங்கில வழியைவிரும்புவதகு ஒரு காரணமாக அமைகிறது 
  ஆனால் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்துவிட்டு அதற்கு மேல் பணம்கட்ட வழியின்றியோ அல்லது சரியாக படிக்காத காரணத்தாலோ தமிழ் வழியில் சேருபவர்கள், தமிழும் வராமல் ஆங்கிலமும் வராமல் தவிப்பதையும் பார்க்க முடிகிறது
 
  பட்டப் படிப்பு வரை கூட ஆங்கிலத்தில் படித்து விட்டாலும் ஆங்கிலம் சரளமாக பேச முடியாதவர் பலர் உள்ளனர். வீட்டில் ஆங்கிலத்தை  பயன்படுத்துபவர்கள்தான் ஆங்கிலத்தில்  சரளமாக உரையாட முடிகிறது.

  இந்நிலையில் ஆங்கிலவழிக் கல்வி எந்த விளைவுகளை ஏற்படுத்தும், இடைநிலை ஆசிரியர்களால் ஆங்கில வழியில் கற்பிக்க முடியமா?  ஆங்கில வழியிக் கல்வியின் மூலம்தான்  தரமான   கல்வியை அளிக்க முடியுமா? அது உண்மையிலேயே சிறந்ததுதானா? தாய்மொழிக் கல்வியை மக்கள் ஏன் விரும்புவதில்லை? இவற்றை இன்னும் கொஞ்சம் ஆராய்வோம்.  இதனால்  சமுதாயத்தில் ஏற்பட இருக்கிற சிக்கல்கள் - இடர்பாடுகள் என்ன? இவற்றை இன்னொரு பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

(தொடரும் ) 
*****************************************************************************************

ஞாயிறு, 26 மே, 2013

காபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது?

*
படம்:கூகிள் தேடுதல்
கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்:
   எனது பதிவை என்னைக் கேட்காமல் அவர்கள் பெயரில் காப்பி பேஸ்ட் செய்துவிட்டார்கள் என்று அவ்வப்போது  பதிவர்கள் புலம்புவது வழக்கம். பழைய பதிவர்கள் இதை ஒன்றும் செய்ய இயலாது என்பதை உணர்ந்துள்ளனர். சமீபத்தில் இதயத்தின் குரல் என்ற வலைப்பூ எழுதிவரும்  எழுதி வரும் ஹமீத்(என்ன சிக்கலோ அவரது வலைப் பக்கம் வேலை செய்யவில்லை.)அவரது பல பதிவுகள் அடுத்த சில நிமிடங்களில் காப்பி அடிக்கப்பட்டு வேறு பதிவர் பெயரில் தமிழ் மணத்தில் இணைக்கப் பட்டுள்ளதை சுட்டிக் காட்டி ஒரு பதிவிட்டிருந்தார். அவர் சொன்னது முற்றிலும் உண்மை. ஒரே நாளில் ஒரிஜினல் பதிவும் காப்பி அடிக்கப் பட்ட பதிவுகளும்  தமிழ் மணத்தில் காணப்பட்டது. ஆனால் இவரது சில  பதிவுகளுமே நாளிதழ்களில் வந்த செய்திகளை அப்படியே  காப்பி செய்யப்பட்டிருந்தது.

   யாருமே ஒரிஜனல் கிடையாது எங்கேயோ, யாரோ சொன்னது, எழுதியதுதானே! பெரும்பாலான பதிவுகள் வேறொரு செய்தியின் மறு ஆக்கமாகவோ தழுவலாகவோ அமையவே வாய்ப்புகள் அதிகம் கவிதைகள்,கதைகள் போன்ற படைப்புகளும் நம்மை அறிந்தோ அறியாமலோ ஏதோ ஒரு படைப்பைப் போலவே இருப்பது தவிர்க்க இயலாது  என்று வாதத்தையும் மறுக்க முடியாது. அது உண்மைதான் என்றாலும் நாம் பார்த்தவற்றை கேட்டவற்றை,படித்தவற்றை அனுபவங்களை நமது சொந்த வார்த்தைகள் போட்டு பல மணிநேரம் சிந்தித்து எழுதியவற்றை எந்தவித கஷ்டமும் இல்லாமல் ஒரு சில நிமிடங்களில் பறிபோவதையும் வேறு பெயரில் வெளியாவதையும் பொறுத்துக் கொள்வது என்பது கடினமானதுதான். இதை முழுமையாக தடுக்க முடியாது என்பதே உண்மை. ஓரளவிற்கு தடுக்கலாம்.

  மென்பொருள் ஜாம்பவான் மைக்ரோசாப்ட் போன்றவற்றால் கூட மென்பொருள் நகலெடுப்பை கட்டுப் படுத்த முடியவில்லையே! கண்டறிந்தவற்றை இது காப்பி என்று உரைக்கலாம். தமிழ் மணம் உள்ளிட்ட அனைத்து திரட்டிகளுமே காப்பி பேஸ்ட் பதிவுகளை ஏற்றுக் கொள்வதில்லை . ஆனால் தானியங்கி முறையில் பதிவுகள் திரட்டப் படுவதால் பதிவுகள் காப்பியா என்பதை திரட்டிகள் அறிய முடியாது. தகவல் தெரிந்து  புகார் தெரிவித்தால் பதிவை திரட்டிகள்  நீக்கி விடும்.

 தமிழ்மணத்தைப் பொறுத்தவரையில் அதன் பட்டியலில் ஒரு பதிவு ஆபாசப் பதிவாகவோ,உங்கள் பதிவை காப்பி செய்யப் பட்டதாகவோ இருந்தால் அல்லது வேறு காரணங்களுக்காக தமிழ் மணத்தில் வெளியிடப்பட்ட இடுகை தொடர்பாக ஆட்சேபம் தெரிவிக்க விரும்பினால் தெரிவிக்கலாம். 
எப்படி தெரிவிக்கலாம் என்பதற்கு உதாரணத்திற்கு கீழுள்ள படத்தை பாருங்கள்.

எனது பதிவு தமிழ்மண பட்டியலில் உள்ளது. இந்த பதிவுக்கு ஆட்சேபம் தெரிவிக்க விரும்பினால் மஞ்சள் நிற முக்கோணத்தை கிளிக் செய்து கீழுள்ள விவரங்களை தர வேண்டும். நான்குகாரணங்கள் தெரிவிக்கப் பட்டிருக்கும். பொருத்தமான காரணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அது  நிர்வாகிக்கு சென்று விடும் நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில் பதிவை நீக்கி விடுவார்கள்.

 தொடர்ந்து அதே வலைதளத்திற்கு புகார்கள் வந்தால் தமிழ்மணத்திலிருந்தே நீக்குவதற்கும். வாய்ப்பு உள்ளது.பிற திரட்டிகளில் ஆட்சேபம் தெரிவிப்பது சற்று கடினம்.
 
  சமீபத்தில் எனது இப்படியும் கிராமம் இப்படியும் ஒரு தலைவர் என்ற பதிவை முகநூலில் என் பெயரோடு வெளியிடவே என் சம்மதத்தை  கேட்டார் பிரபல தொழில் நுட்பப் பதிவர் நண்பர் பிரபு கிருஷ்ணா. நான் சரி என்று சொன்ன பின்னரே முகநூல் பக்கத்தில் என் பெயரோடு வெளியிட்டார். 

  சம்மதம் கேட்கவில்லை என்றாலும் ஒரிஜினல் பக்கத்தின் முகவரியையும், எழுதியவர் பெயரையும் வெளியிட்டால் பெரும்பாலும் ஆட்சேபம் ஏதும் இருக்காது. அது பதிவை பகிர்ந்ததாக கொள்ள முடியும்.

   எனக்கும்  எனது பதிவுகள் ஏதேனும் காப்பி அடிக்கப் பட்டிருக்கின்றனவா என்று தெரிந்து கொள்ள திடீரென்று ஒரு ஆசை ஏற்பட்டது. (நம்ம பதிவை நாலு பேரு காப்பி அடிச்சா நாம  நல்லா எழுதி இருக்கோம்னு அர்த்தம்)சும்மா ஒரு பதிவை வைத்து தேடித் பார்த்தேன்.என்ன ஆச்சர்யம் அதையும் சிலபேர் தன் பெயர் போட்டு  காப்பி அடித்திருந்தார்கள்.
நான் எழுதியது
நுகர்வோரின் குறைகளை எங்கு முறையிடுவது.?
இந்தப்  பதிவை ஈகரை தமிழ்க் களஞ்சியத்தில் அப்படியே சுட்டு போட்டிருக்கார் பவுன்ராஜ் என்பவர்.
http://www.eegarai.net/t97719-topic



இதே பதிவை முத்து முஹம்மது என்பவர் சேனை தமிழ்உலாவில் சூப்பரா காபி அடிச்சிருக்கார்.
http://www.chenaitamilulaa.net/t37736-topic

"இந்தப்  பதிவை இவர் வலைப் பக்கத்துக்கு வந்து  யார் படித்திருக்கப் போகிறார்கள் காப்பி அடித்தால் என்ன  தெரியவா போகிறது. அப்படித்தான் தெரிந்தாலும்  என்ன செய்ய முடியும்னு என்று நினைத்திருக்கலாம்  இந்த நண்பர்கள்.எப்படியோ நம் பதிவையும் காப்பி அடித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது கொஞ்சம் மகிழ்ச்சியும் ஏற்படத்தான் செய்கிறது 
சரி  போகட்டும்.
நம் பதிவை யாராவது காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார்களா என்பதை எப்படி கண்டு பிடிப்பது?
காப்பி செய்வதை   கொஞ்சமாவது தடுக்க என்ன வழி இருக்கிறது?
இது பற்றி எனக்கு தெரிந்த விஷயங்களை இன்னொரு பதிவில் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.
ஒருவேளை புதியவர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கலாம்.

************************************************************************************** 
இதைப்  படிச்சிருக்கீங்களா?
பதிவர்குறள்  பத்து

புதன், 22 மே, 2013

சூது கவ்விய ஸ்ரீசாந்த், இல்லை! சீ! சாந்த்


அன்புள்ள ஸ்ரீசாந்த்!
    கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் பக்கத்துக்குப் பக்கம் இடம் பெற்று வருகிறாய். வாழ்த்து சொல்லக் கூடிய சாதனையையா செய்திருக்கிறாய்?  வேதனையுடன் வசைபாடக் கூடிய  சூதினை  அல்லவா செய்திருக்கிறாய்.!

   சூதாட்டம் தற்காலிகமாக வாழ்க்கையை வளப் படுத்தலாம். இறுதியில் நாசம் செய்து விட்டு அல்லவா நகர்ந்து போகும்!.பார்த்துக் கொண்டிருக்கும் பல்லாயிரக் கணக்கான கண்கள் காண்பதெல்லாம் நிசம் என்று நம்பிக் கொண்டிருக்க மண் தூவுவது தெரியாமலேயே கண்ணில் மண்தூவும் உன்னைப் போன்றவர்களைப் பார்க்கும் போதெல்லாம், இப்படிப்பட்ட கிரிக்கெட்டையா ரசிக்கிறோம் என்று வெட்கமாகத்தான் இருக்கிறது.
   பணம் உன் கண்ணை மறைத்ததால் நீ எங்கள் கண்களை மறைக்க  முற்பட்டாயே! நியாம்தானா? அப்படி என்ன உனக்கு சோற்றுக்கே வழி இல்லையா? ஒரு முறை ஹர்பஜன் உன்னை அறைந்தார். அதற்கு பழி வாங்கவோ நீ கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில்  அறைந்தாய்.  உன் சுயநலத்துக்காக ஆட்டத்தையா அடமானம் வைப்பது? தடை விதிக்கப் பட்ட அசாருதீன் ஜடேஜா போன்றவர்களைக் கண்டும் உனக்கு அச்சம் ஏற்படவில்லையா?

   உன்னை நம்பி உன்னை ஒருவர் உன் திறமைக்காக ஏலம் எடுத்த பின் அவர்களுத் தெரியாமல் இன்னொருவருக்கு ஏன் ஏலம் போனாய்.  தொழில்நுட்பக் கண்கள் உன்னைக் கண்டறியும் என்று உனக்கு தோன்றவில்லையா? நீ குற்றமற்றவன் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும்   உன் பெற்றோர்கள் இந்த செய்தியைக் கேட்டதும் ஈன்ற பொழுதினும் பெரிதுவந்திருப்பார்களா? உன் திறமையை வெளிப்படுத்தி  கூலி பெறுவது நேர்மையான ஆட்டம்.  திறமையை வெளிபடுத்தாமல் இருப்பதற்காக கூலி பெறுவது சூதாட்டம். மேட்ச் பிக்சிங் தானே செய்யக் கூடாது; ஸ்பாட் பிக்சிங் செய்தால் தவறு இல்லை என்று உன்னை யாரேனும் மனம் மாற்றி இருக்கலாம். அதற்கு நீ மயங்கிப் போனது உன்வாழ்க்கைக்கே வேட்டு வைத்து விட்டதே!. இது உன்னுடைய குற்றம் மட்டுமல்ல. விளையாட்டு கோடிகள் புழங்கும் வியாபாரமாக மாறியதும் ஒரு காரணமே. பொருட்களைப்  போல வீரர்களை விற்பதும் வாங்குவது ஏலம் போடுவதுமே  சூதாட்டம் போலத்தானே!

   உன்னைப் போல் இன்னும் பலர் இருக்கலாம்.நீ மாட்டிக் கொண்டாய் அவ்வளவுதான்! மாட்டிக் கொள்ளாதவரை அனைவரும் உத்தமர்களே! சச்சினைப் பார்! திராவிடைப் பார்த்து கற்றுக் கொள்! என்று சொல்லக்கூட தயக்கமாகத்தான் இருக்கிறது. எந்த நேரத்தில் எந்த உண்மை வெளியாகுமா தெரியாது. இன்னும் பல வீரர்களின் அந்நியன் முகங்கள் வெளிப்படலாம்.

   உனக்குத் தெரியும்! தெருவோரா கிரிக்கேட்டிலேயே .பால் மேட்ச் , பெட் மேட்ச் நடக்கும். அதை சூதாட்டத்தின் தொடக்கம்  என்று அறிந்திருக்க முடியாது. 

    இதுவும் நடப்பதுதான். சில நேரங்களில் ஒரு அணியில் ஆட்கள் குறைவாக இருக்கும்போது அதிகமாக உள்ள எதிர் அணியினரின் கூடுதலாக வந்திருக்கும்  ஒரு சிலரை தன் அணியில் விளையாட அழைப்பார்கள். அவர்கள் கூட தான் ஆடும் அணிக்காக உண்மையாகத்தான் விளையாடுவார்கள். தன் சொந்த அணி வெல்ல வேண்டும் என்பதற்காக தான் சொந்த அணி தோல்வி பெறும் நிலையில் இருந்தாலும், தான் விளையாடும் அணியில்  காட்ச விடுவது,  ரன் அவுட் ஆவது போன்ற எந்த செயல்களையும்  செய்ய மாட்டார்கள். தன் அணியில் ஆடும்போது ஏராளமான காட்சுகளை விடுவானே! எதிரணிக்கு ஆடும்போது மட்டும் இப்படிப் சரியாக பிடித்து விடுகிறானே என்று அங்கலாய்த்துக் கொள்வதும் நடப்பதுண்டு. சிறுவர்களாய் இருக்கும்போது இருந்த அந்த நேர்மை பிற்காலத்தில் பணத்துக்காக  மாறிவிடும் போலிருக்கிறது.  உனக்கும் அப்படித்தான் நிகழ்ந்திருக்கும்.


  11 முட்டாள்கள் ஆடுகிறார்கள் 11000 முட்டாள்கள் பார்க்கிறார்கள் என்றார் பெர்னாட் ஷா. உண்மையில் பார்க்கும் பல ஆயிரம் பேர்கள்தான் மட்டும்தான் முட்டாள்கள் என்பதை உன்னைப் போன்றவர்கள் எங்களுக்கு உணர்த்தி இருக்கிறீர்கள் . உங்களை  பார்க்கும் பிஞ்சு மனங்களிலும் நஞ்சை அல்லவா  விதைக்கிறீர்கள்.

   இவற்றையெல்லாம்  தவிர்க்க அரசாங்கமே சூதாட்டத்தை  அனுமதிக்கலாம்; அரசுக்கு வருமானம் கிடைக்கும்  என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். சூதாட்டம் தவறு எனும்போது அரசாங்கம் அனுமதித்தால் மட்டும் அது எப்படி சரியாகும் என்று தெரியவில்லை. 

   நாம் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்ற அசட்டு தைரியமும் மாட்டிக் கொண்டாலும் சட்டத்தில் ஒட்டைகளா இல்லை. வெளிவருவதற்கு என்ற எண்ணமும் இத் தவறுகளை செய்யத் உன்னை தூண்டி இருக்கலாம்.  மக்களின் மறதியும் அலட்சியமும் தானே ஊழலின் ஊற்று.

   நீ மீண்டும் வந்து ஆடினாலும் காலரியில் நின்று கைதட்ட நாங்கள் இருக்கும்போது உங்களைப் போன்றவர்களுக்கு என்ன கவலை?

  நேரம், மின்சாரம், மக்களின் நம்பிக்கை இவற்றை வீணாக்கும்  ஐபிஎல் கூடிய விரைவில் கிரிக்கெட்டை அழிவுப் பாதைக்கு அழைத்து செல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை.கோபமும் வருத்தமும் ஏற்படத்தான் செய்கிறது என்ன செய்ய?

ஸ்ரீசாந்த் உன்னை  சீ!....சாந்த்  என்று அழைக்க வைத்து விட்டாயே!
                        
              கிரிக்கெட்டெனும்ஆட்டத்தை சூது கவ்வ
                    கிறுக்கரென ரசிகர்களை நினைத்து விட்டாய் 
              சருக்கிவிட்டாய்  நேர்மைஎனும் பாதையி லிருந்து 
                  சஞ்சலமே சங்கடமோ துளியும் இன்றி; 
              வெறுக்கட்டும் கிரிகெட்டை இனிமேல் மக்கள்
                    விலைபோனாய் பணத்துக்கு இன்று நீயே 
              சிரிக்கட்டும் உலகம்இனி உன்னைப் பார்த்து 
                     சிந்திப்பாய் எதிர்காலம் கேள்விக் குறியே!
    
                                              இப்படிக்கு  
                   இனிமேல்  கிரிக்கெட்டை வெறுக்க இருக்கும் ரசிகர்கள் 


*****************************************************************************************

திங்கள், 20 மே, 2013

இப்படியும் ஒரு கிராமம்!இப்படியும் ஒரு தலைவர்!

   நம்ப முடியாத நிகழ்வுகள் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நம்ப முடியாத நிகழ்வுகளை தனி மனிதர் சிலர் பின்(முன்)நின்று நடத்திக் காட்டுகிறார்கள் அப்படிப்பட்ட ஒருவர்தான் பொப்பட் ராவ் பாகுஜி பவார் என்ற அதிசய மனிதர்தான் அவர். ஒளிர வேண்டிய இவர்களோ எங்கோ விளம்பரமின்றி அமைதியாக பணியாற்றிக்  கொண்டிருக்கிறார்கள். வெத்து வேட்டுகளோ  வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்று ப்ளக்சுகளில் மின்னிக் கொண்டிருக்கின்றனர்

  எங்கும் ஊழல் எதிலும் ஊழல் தினந்தோறும் பத்திரிகையைத் திறந்தால் ஊழல் செய்திகளே பல பக்கங்களை ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன. மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்  படுபவர்கள் தங்கள் பதவிக் காலத்திற்குள் பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து விடுகிறார்கள்.பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை உண்மையான மக்கள் நலனுக்காக உழைப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு. ஆனால் கிராமங்களோ வறுமை,வறட்சி,நோய்கள் அறியாமை இவற்றின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. நாளுக்கு நாள் கிராம மக்கள் பிழைப்புக்காக நகரங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். கிராமத்தை வளப்படுத்த வேண்டியவர்களோ தங்களை மட்டும் வளப்படுத்திக் கொள்கிறார்கள்.

   இப்படி பட்டவர்களுக்கு மத்தியிலே இப்படி ஒரு மனிதர் எப்படி உருவானார்?. எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தையே குற்றம் சொல்வதற்கு பதிலாக அரசு திட்டங்களை பயன்படுத்திகொள்வதோடு மகாத்மா காந்தியின் கொள்கைகளான சுயசார்பு, சுயகட்டுப்பாடு சுயஆட்சி முறையை பின்பற்றி  ஹிவாரே பசார் என்ற தனது கிராமத்தை இந்தியாவின் மாதிரி கிராமங்களில் ஒன்றாக மாற்றிக் காட்டி இருக்கிறார் பொப்பட் ராவ் பாகுஜி பவார். இது ஒரு நாளில் நிகழ்ந்த மாயாஜாலமல்ல. அயராத முயற்சியும் தளராத தன்னபிக்கையுமே இந்த  இந்த கிராமத்தின் உயர்வுக்கு காரணம். கிராம மக்கள் இவர் மீது அபார நம்பிக்கை வைத்து உழைத்தனர்: இன்று உயர்ந்தனர்,

  அப்படி என்னதான் செய்தார் இவர்? வியக்கும் அளவுக்கு என்ன மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டது?
  மகாராஷ்டிரா  மாநிலத்தில் அகமத்நகர் மாவட்டத்தில் சஹ்யாத்ரி மலைப் பகுதிக்கு அருகிள் உள்ள மழை மறைவுப் பிரதேச கிராமங்களில் ஒன்று ஹிவாரே பசார். இந்த கிராமத்து மக்களின் சராசரி வருமானம் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 20 மடங்கு அதிகம்.முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த அனைத்து தடைக் கற்களையும் தகர்த்தெறிந்து  கல்வி சுகாதாரம் வேலை வாய்ப்பு அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற்று முன் மாதிரி கிராமமாக திகழவைத்த சாதனையாளரின் வெற்றிக் கதை இதோ 

இதோ இந்த புகைப்படங்களை பாருங்கள்

  சிறந்த தலைவர் உட்பட ஏராளமான விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிற பொப்பட்ராவ் பாகுஜி பவார் அகமத் நகரில் பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வியை முடித்தார். வணிகவியலில் முதுகலை பட்டம் பெற்றிருந்தும் வணிக எண்ணம் தோன்றவில்லை. மகாத்மா காந்தி,வினோபாபாவே,அண்ணா ஹசாரே,பாபா ஆம்டே கொள்கைகளால் கவர்ப்பட்ட பொப்பட் ராவ் மோசமான நிலையில் இருந்த தன கிராமத்தை எப்படியாவது முன்னேற்ற வேண்டும் என்று விரும்பினார். 1990 இல் மக்களால் ஒரு மனதாக கிராமத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் அன்று முதல்   ஓய்வை ஒதுக்கி வைத்து விட்டு உழைக்கத் தொடங்கினார்.

  தனது கிராமத்தை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்ல பஞ்சசூத்ரம் என்ற ஐந்து வழிமுறைகளை கிராம மக்கள் அனைவரும் பின்பற்ற வலியுறுத்தினார்
  1. ஷ்ரம்தான்-அனைவரும் தனது உழைப்பை கிராமத்திற்காக  இலவசமாக தருவது
  2. கிராமத்தில் ஆடு மாடுகள்  நீர்பிடிப்புப் பகுதிகளில் உள்ள தாவரங்களை மேய்ச்சலை தடுப்பது
  3. மரங்கள் வெட்டுவதை முழுமையாக தடை செய்வது
  4. கிராமத்தில் மது விலக்கை கடை பிடிப்பது
  5.  குடும்ப கட்டுப்பாடு 
    முதலில் சிரமப்பட்டாலும் பின்னர் இதில் உள்ள நன்மைகளை உணர்ந்து ஒற்றுமையுடன் செயல் பட்டனர்.கிராம மக்கள். ஏரி குளங்கள், கால்வாய்களை சீரமைத்தல்,மரம் நடுதல் போன்றவற்றிக்கு கூலி இன்றி தங்கள் உழைப்பை தந்தனர். கண்டபடி புல்வெளிகளையும் தாவரங்களையும் ஆடுகள் மேய்வதை கட்டுப்[ படுத்தினர். 94-95 இல் 200 டன்னாக இருந்த புல் உற்பத்தி 2001-2002 இல் 5000 டன்னாக உயர்ந்தது  மரம் வெட்டுவதை முழுமையாக தடை செய்திருந்ததால் மரங்களின் எண்ணிக்கை 9 லட்சமாக உயர்ந்தது. மதுவிலக்கை கண்டிப்பாக கடை பிடித்ததால் மனித வளத்தின் ஆற்றல் உய்ரந்ததோடு குற்றசெயல்கள் முற்றிலும்  ஒழிந்திருந்தது. குடும்பக் கட்டுப்பாடு முறையை மக்கள் ஏற்றுக் கொண்டதால் பிறப்பு விகிதம் குறைந்தது. வறுமை ஒழியவும்  தன்னிறைவு அடையவும் இது உதவியது. கிராமத்தை சேராதவர்களுக்கு நிலங்கள் விற்பது தடுக்கப்பட்டது. இதனால் வணிக நோக்கம் முற்றிலுமாக தவிர்க்கப் பட்டது.

  நீர் வளத்தை அதிகப்படுத்த திட்டம் தீட்டப் பட்டு முறையாக செயல்படுத்தப் பட்டது. அதிக நீர் உறிஞ்சும் பயிர்களான கரும்பு போன்றவை பயிர் செய்தல் தவிர்க்கப் பட்டது. ஆழ்துளைக் கிணறுகள் மூலம் கண்டபடி நீர்உறிஞ்சி பயன்படுத்துவது தடை செய்யப் பட்டது. 1995 முதல் 2005 வரை நிலத்தடி நீர் சேகரித்தல்,மழைநீரை தேக்கி வைத்தல் போன்றவற்றை மக்கள் பங்கேற்புடன்   திட்டமிட்டு செயல் படுத்தியதால் நிலத்தடி நீர்மட்டம் நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்தது 70 -80 அடியில் இருந்த நீர்மட்டம் 20-25 அடியாக அதிகரித்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். பால் உற்பத்தி ஒரு நாளைக்கு 300 லிட்டரில் இருந்து 3000 லிட்டராக உயர்ந்துள்ளதாம்.தங்கள் கிராமத்தில் தயாரிக்கப் படும்  பால் பொருட்களுக்கென்று தனி ட்ரேட் மார்க் பெறவும் திட்டமிடப் பட்டுள்ளது ஆச்சர்யம் அளிக்கிறது.
 
  பெரிய அளவில் தொழில் நுட்பங்களோ  முதலீடோ இல்லாமல் கிடைப்பதை வைத்து சுய உழைப்பு,கூட்டுறவு,கட்டுப்பாடு,ஒற்றுமை  இவற்றின் மூலமே முன்னேற முடியும் என்பதற்கு முன் உதாரணமாகத் திகழ்ந்து இந்த கிராமம். வேலை வாய்ப்பு கல்வி, சுகாதாரம், அடிப்படைவசதிகள் எல்லாம் இங்கேயே கிடைத்ததால்  கிராமத்தை விட்டு பிழைக்க சென்ற  குடும்பங்கள் மீண்டும் ஹிவாரே பஜாருக்கே திரும்பி விட்டார்களாம். அருகிலுள்ள கிராமங்கள் ஹிவாரே பஜாரின் வளர்ச்சியை ஆச்சர்யத்துடன் பார்த்தன.

   இது போன்று இன்னும் சில கிராமங்கள் இருக்கக் கூடும். நம் நாட்டில் உள்ள கிராமத் தலைவர்களை  இந்த கிராமங்களுக்கு அழைத்துச் சென்று காட்டவேண்டும். அதிலும் ஓர் ஆபத்து உள்ளது. அந்த கிராமத்தை இவர்கள் கெடுத்து விடாமல் இருக்கவேண்டும்.

  ஒரு கூட்டு முயற்சியால்  சிகரத்தை எட்டியுள்ளது என்றாலும் சுயநலமின்றி நல்ல தலைவராக இருந்து பல திட்டங்களை தீட்டி  வழிகாட்டிய  பொப்பட் ராவ் பாகுஜி பவாரே அத்தனை சாதனைகளுக்கும் உரித்தானவர்.
  ஒரு நல்லதலைவர் இருந்தால் எதையும் சாதித்துக் காட்டலாம். ஹிவாரே பஜார் கிராமத்துக்கு ராவ் பாகுஜி பவார் என்ற சிற்பி கிடைத்தார்.
   நாட்டுக்கு இப்படி ஒருவர் கிடைப்பாரா? கிடைத்தாலும் விடுவார்களா? 

*****************************************************************************************************************
கொசுறு: இந்த கிராமத்துக்கென்று வலைப்பக்கமும் உண்டு 
அதன் முகவரி


சனி, 18 மே, 2013

இந்த ரகசியம் தெரியுமா?

 

இரகசியம் 

அது எப்படி?
உன் முகம் மட்டும் 
நிலவு போல்!

நீ 
மஞ்சளுக்கு பதிலாக 
நிலவைப் 
பயன் படுத்துகிறாயோ!

ஒ!
இப்போதல்லவா தெரிகிறது 
நிலவு தேய்வதன் 
ரகசியம்!

******************************************************
*******************************

கொசுறு: அப்ப நிலவு எதுக்கு வளரதுன்னு கேக்கறீங்களா? இப்படியெல்லாம் கேட்டா  அந்த ரகசியத்தையும் சொல்லிடுவேன். ஹிஹி 

புதன், 15 மே, 2013

சாதி வன்முறைகள் பற்றி வைரமுத்து

    தமிழனின் தோலோடு தோலாக ஓட்டிக்கொண்டிருக்கிறது  சாதிச் சட்டை .அது கழற்றப் படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன சாதிக் கட்சிகள். பொதுநலப் போர்வையில் சுய நல அரசியலுக்காக சாதீயை அணைக்க விடாமல் அடம் பிடித்துக் கொண்டிருக்கிறது சுய நல அரசியல்.  மறக்க விரும்பினாலும் அது முடியாது என்பதை  உரைத்துக் கொண்டிருக்கின்றன மரக்காணம் வன்முறைகள் 

  இந்த சம்பவங்களை நினைத்து மனம் வெதும்பிக் கொண்டிருக்கையில் சமீபத்தில் படித்த கவிப் பேரரசு வைரமுத்துவின் பெய்யெனப் பெய்யும்  மழை கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் தீ அணையட்டும் என்ற கவிதை நினைவுக்கு வந்தது. இந்தக் கவிதைதான் சாதிக்கு எதிரான இறுதிக் கவிதையாக இருக்கவேண்டும் என்று விரும்புவதாகக் கூறி தொடங்குகிறார்.

இதோ அந்தக் கவிதை
சாதீ

                  தெற்கே வடக்கே  சாதிகள் மூட்டும்
                     தீயே பரவாதே -பழங்
                  கற்காலத்து பாம்பே எங்கள்
                     காலைச் சுற்றாதே

                  மண்பானைகளும் மண்பானைகளும்
                     மல்லுக்கு நிற்பதுவோ -இங்கே
                  கண்ணீர்த் துளிகளுள் கண்ணீர்த் துளிகளும்
                     கைகள் கலப்பதுவோ

                  முன்னூறாண்டை முன்னுக் கிழுக்குது
                      முரட்டு விஞ்ஞானம்-நாமோ
                  முன்னூறாண்டு பின்னே செல்வது
                      முழுக்க அஞ்ஞானம்

                  அந்நியரோடு சண்டை இட்டது
                     ஆறோ ஏழோதான்-சொந்த
                  மன்னவரோடுசண்டையிட்டது
                     மணலினும் அதிகம்தான்

                  செயற்கை மனிதன் செவ்வாயோடு
                      சிற்றில் ஆடுகையில் -இங்கே
                  இயற்கை மனிதர் சாதி சண்டையில்
                      இடுப்பு முறிவதுவோ

                  .நீண்ட நாள் முன் யாரோ விதைத்த
                      நெருப்பின் மிச்சத்தில்-மண்ணை 
                  ஆண்ட பரம்பரை இன்றுவரைக்கும் 
                      அழிந்து கருகுவதோ?

                   புதைந்த தமிழின் சங்கம் மூன்றை 
                      புதுக்க எண்ணாமல்-நம்மை 
                   புதைக்கும் சாதி சங்கத்துக்குள் 
                      புதைந்து போவீரோ?

                   வறுமை  ஏழ்மை பேதமைக் கெதிராய்
                       வாளை எடுக்காமல் -நாம் 
                   ஒருவரை ஒருவர் எரித்து மகிழும்
                       உற்சவம் நடத்துவதோ?

                    புத்தகம் தந்து கல்விச் சாலை 
                       போகும் சிறுபிள்ளை-கையில் 
                    கத்திகள் தந்து சாதிக் களத்தில் 
                       கருகச் செய்வீரோ?

                    மனிதன் எனும் நிஜத்தை நீங்கள் 
                        மறந்து தொலைத்து விட்டு-சாதி 
                    சனியன்  என்னும் கற்பனைக்காக 
                         சமர்கள் புரிகுவதோ?

                    ஆயு தங்களை  கட்டும் கையால் 
                         அணைகள் கட்டுங்கள்-அந்த 
                    ஆயதங்களைஉருகி உருக்கி 
                         ஆலைகள் எழுப்புங்கள் 

                     சிலைகள் எடுக்கும் செலவில் நீங்கள் 
                         சிறகுகள் வாங்குங்கள்-வீணே 
                     தரையில் சிதறும் ரத்தம் போதும் 
                         தானம் புரியுங்கள் 

                     முன்னே வள்ளுவன் பின்னே பாரதி 
                         முழங்கினர் ஊருக்கு- அட 
                     இன்னும் நீங்கள் திருந்தாவிட்டால் 
                         இலக்கியம் ஏதுக்கு?


***********************************************************************************************************************

வியாழன், 9 மே, 2013

+2 தேர்வு முடிவுகள் 2013 -பரபரப்பான நாள்

பெற்றோர்களே!,
   இன்னும் சிறிது நேரத்தில் +2 தேர்வு முடிவுகள்  வெளியாக உள்ளது. முடிவுகளை கீழ்க்கண்ட இணைய தளங்களில் காணலாம். உங்கள் குடும்பத்தினர் உறவினர் நண்பர்களின் +2 படிக்கும்  பிள்ளைகளின்  தேர்வு முடிவுகளை பார்க்க நீங்களும் உதவலாம் 

இதோ முடிவுகள் வெளியாக உள்ள இணைய தளங்களின் இணைப்புகள் 
கிளிக் செய்யுங்கள் முடிவுகளைப் பாருங்கள் 
http://www.tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.dge3.tn.nic.in/
   மாணவர்கள் என்ன மதிப்பெண் கிடைக்குமோ என்று பரபரப்புடன் இணையத்தின் முன் காத்துக் கொண்டிருப்பார்கள். பெற்றோர்களோ நம் மகன்/மகள் மற்றவர்களை அதிக மதிப்பெண் பெற வேண்டுமே என்று டென்ஷனுடன் இருப்பார்கள். +2 எழுதிய மாணவர்களின் பரபரப்புடனும்  அமைதியின்றியும் காணப்படுவார்கள்.   +2 மதிப்பெண் குறைந்து விட்டால் வாழ்க்கையே தொலைந்து விட்டது போன்ற பிரமையை ஏற்படுத்தி குழந்தைகளை அழுத்தத்திற்கு ஆளாக்கி விடுவார்கள். அதுவும் நடுத்தர குடும்பப்  பெற்றோர்கள்கிண்டி அண்ணா பலகலைக் கழகத்தில் படித்தால்தான் ஜென்ம சாபல்யம் அடையமுடியும் என்பதுபோலவும் வாழ்க்கையில் நன்கு செட்டில் ஆக முடியும்  என்பது போல   தோற்றத்தை  உருவாக்கி மார்க் குறைஞ்சுபோச்சுன்னா அவ்வளவுதான் என்று குழந்தைகளையும் மிரட்டுவார்கள்.
   ஆனால் +2 மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். ஒருவேளை  பிள்ளைகள் குறைவாக மதிப்பெண் பெற்றாலோ அல்லது தோல்வி அடைந்தாலோ திட்டவோ அடிக்கவோ செய்யாதீர்கள்.
   நேற்று முக நூலில் பார்த்தேன். மதிப்பெண் வருவதற்கு முன்பே குறைவாகத்தான் இருக்கும் என்று ஒருமாணவன் தற்கொலை செய்து கொண்டானாம்.
இவையெல்லாம் தவிர்க்கப் படவேண்டும். மதிப்பெண்கள் மட்டுமே மதிப்பை தருபவை அல்ல. அதையும் தண்டி வாழ்வில் சாதிக்க ஆயிரம் வழி உண்டு.
மாணவர்களுக்கு  வாழ்த்துக்கள்

**************************************************************************************************

செவ்வாய், 7 மே, 2013

நெஞ்சே எழு!ஏ.ஆர்.ரகுமானின் புது காம்பினேஷன் எப்படி?

  இந்தியத் திரையுலகில் 20 ஆண்டுகளாக யாருமே நெருங்க முடியாத இடத்தில் இருக்கும் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் வெளியிடும்போது திரை இசை ரசிகர்கள் மத்தியில்  ஒரு பரபரப்பு எழுவதுண்டு.   தனுஷ் நடிக்க பரத்பாலா இயக்கிய  மரியான் படத்தின் "நெஞ்சே எழு" பாடல் யூ டியூபில் (YOUTUBE-தமிழ்ல என்ன?) வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. 

  நான் ஒன்றும் பெரிய திரை இசை ரசிகன்  இல்லை என்றாலும் ரசிகர்களின் ஆர்வம் என்னையும் தொற்றிக் கொள்ள யூ டியூபுக்குள் நுழைந்தேன்.

  பாடலை முதல் முறை கேட்கும்போது ஒரு  புதிய கூட்டணியான  ஏ.ஆர்.ரகுமான்-குட்டி ரேவதி கூட்டணி என்னைப் பொருத்தவரை ஏமாற்றத்தையே தந்தது! ரகுமானிடம் சரக்கு குறைந்து வருகிறதோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தத் தவறவில்லை.  

   இப்பாடலின் முதல் வரியான "நெஞ்சே எழு!"( உண்மையில் முதல் வரி அல்ல பல முறை வரும் வரியே! மற்ற வரிகளின் மொத்த எண்ணிக்கை விட இதன் எண்ணிக்கை அதிகம்)  என்றதும் ஏதோ தன்னம்பிக்கைப் பாடல் என்று நினைத்து விட்டேன். இசை அமைப்பு பாடல் வரிகள் எல்லாம் அதை சரி என்று சொல்வது போல்தான் இருந்தது. சில சினிமாக்களுக்கும் அதன் தலைப்புகளுக்கும் பொருத்தம் இருக்காது. தலைப்பின் வரியை எங்கேயாவது ஒரு இடத்தில் திணிப்பார்கள் அது போல இந்தப் பாடலில் காதல் என்ற வார்த்தைதான் இதை காதல் பாடல் என்று நம்பவைக்கிறது. பரத்பாலாவின் படம் என்பதாலோ என்னவோ வந்தே மாதரம் பாடலின் இசையை நினைவு படுத்துகிறது. இதே பாடலை வேறு யாரேனும் இசை அமைத்திருந்தால் தாராளமாகப் பாராட்டலாம். ஆனால் ரகுமானிடம் எதிர் பார்ப்பது அதிகமாக இருப்பதால் பாடல் சாதாரணமாகவே படுகிறது. இப்பாடலில் அவரது பல பாடல்களின் சாயல் காணப்படுகிறது (மத்தவங்க சாயல் இருந்தாதானே தப்பு ) பெரும்பாலும் நல்ல மெட்டுக்குப் பாடல் எழுதப்பட்டால் அப்பாடல் சிறப்பாக அமையும். எழுதப் பட்டபாடலுக்கு மெட்டமைப்பது என்பது மிகக் கடினமானது. அப்படி மெட்டமைத்தாலும் வேறு ஒன்றின் சாயல் தன்னையும் அறியாமல் அமைந்து விடும். அதுவும் புதுக் கவிதைகளை மெட்டுக்குள் கொண்டு வருவது என்பது எவ்வளவு பெரிய இசை அமைப்பாளராக இருந்தாலும் கடினமே. இந்தப் பாடலும் எழுதிய பின்னர் இசை அமைத்துள்ளதாகவே தெரிகிறது. (ஒரு வேளை மெட்டுக்கு எழுதப்பட்டு இருந்தால் ரேவதிக்கு மெட்டுக்கு பாட்டெழுத இன்னும் பயிற்சி தேவையோ?) பல இடங்களில் ரகுமான் பாடல் வரிகளை மெட்டுக்குள் கொண்டுவர சிரமப்பட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. பாடலுக்கான பின்னிசையைவைத்து சமாளித்து விட்டார். தன்னைத் தவிர வேறு யாரும் இந்தப் பாடலை சரியாக பாடுவார்களா என்ற சந்தேகத்தில் தானே பாடி விட்டாரோ? பாடலை ரகுமானின் தீவிர ரசிகர்கள் வெற்றிபெற வைத்து விடுவார்கள் என்றாலும் பாமரர்களை எட்டுமா? படம் வரும் வரை காத்திருப்போம். 

   நீயா நானா போன்ற ஷோக்களில் குட்டி ரேவதியைப் பாத்திருக்கிறேன். நவீன பெண்ணியக் எழுத்தாளரும் கவிஞரான இவர் திரை இசைக்கு இப்போதைக்கு. பொருத்தமற்றவாராகவே தோன்றுகிறார். இந்தக் கவிதை தன்னம்பிக்கையா காதலா என்ற குழப்பத்தில் எழுதியது போல் காட்சி அளிக்கிறது. 

 காணொளியில்  உள்ள காட்சிகள் கவரும் விதத்தில் இருந்தாலும் திரைப்பட பாடல் வரிகளில் காணப்படும் காதல் ஈர்ப்பு குறைவாகவே காணப்படுகிறது, ஒருவேளை கதை தெரிந்தால்தான் அதை உணர முடியுமோ என்னவோ? பார்க்கலாம் . 

"ஆயிரம் சூரியன் சுட்டாலும் கருணையின் வர்ணம் கரைந்தாலும்" என்று தொடங்கும் இந்தப் பாடலில்  நவீனக் கவிஞர் குட்டி ரேவதி வர்ணம் அதர்மம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.  வண்ணம் என்று எழுதி இருக்கலாம். பாடல் வரிகள் மிக சாதாரணமாகவே உள்ளது. சில வரிகள் தொடர்பின்றி காணப்படுகின்றன. (உதாரணம்: குழந்தை சிரிக்க மறந்தாலும்) முதல் வாய்ப்பை இன்னமும் சரியாகப் பயன்படுத்தி இருக்கலாம்.

  இந்தப் பாடலுக்கு கவிஞரை நிச்சயம் ரகுமான் தேர்வு செய்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். பரத்பாலாவின் சாய்சாகத்தான் இருக்கும். ஒரு வேளை அவரது கவிதைகளால் ஈர்க்கப் பட்டிருக்கலாம். ஆணாதிக்கத்தின் மீதான கோபத்தை வெளிபடுத்தும் இவரது கவிதைகளின் கருத்துகளை வெளிப்படுத்த  ஆணாதிக்க உச்சத்தில் இருக்கும் திரைப்படத்துறை தொடர்ந்து வாய்ப்பளிக்குமா? "திரைப்படச் சுருளை தீக்குச்சிக்கு தின்னக் கொடுப்போம்" என்று சொல்லி விட்டு பின்னர் சமரசம் செய்து கொண்ட வைரமுத்துவைப் போல ஆவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம். 

பாடலின்  காணொளியும் பாடல் வரிகளும்


இதோ  பாடல் வரிகள்

ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வர்ணம் கரைந்தாலும்
வான்வரை அதர்மம் ஆண்டாலும்
மனிதன் அன்பை மறந்தாலும்
வலியால் உள் உயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே....

நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை...

இருவர் வானம் வேறென்றாலும்
உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும்
பருவங்கள் உருவம் மாறினாலும்
குழந்தை சிரிக்க மறந்தாலும்
இயற்கையில் விதித் தடம் புரண்டாலும்
உன் காதல் அழியாதே...

நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை...

அஞ்சாதே துஞ்சாதே
இனி என்றும் இல்லை வேதனை
புதிதாய் பிறப்பாய் வழியெங்கும்
உன்முன் பூமழை
எந்நாளும் உன் காதல்,
இது வாழும் சத்தியமே
தொலையாதே
எந்த இருளிலும் மறையாதே...

நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை...

ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வர்ணம் கரைந்தாலும்
வலியால் உள் உயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே....
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை...

*************************************************************************************************************


கொசுறு:1
குட்டி ரேவதி வலைப்பூ ஒன்றும் வைத்துள்ளார். இவர் மூன்று கவிதை தொகுப்புகள் எழுதி இருக்கிறார். அவற்றில் ஒன்றின் தலைப்பு ஏடா கூடமாக உள்ளது. இதனால் தான் புறக்கணிக்கப் படுவதாக குற்றம் சாட்டுகிறார்.
கொசுறு 2
யுவன்சங்கர்ராஜா இப்படத்தில் ரகுமானின் இசையில் பாடி இருக்கிறாராம். 
கொசுறு3 
குட்டி ரேவதியின் வலைப்பதிவு முகவரி http://kuttyrevathy.blogspot.in/


**********************************************************************

சனி, 4 மே, 2013

அந்த எண் எது?இது உங்களுக்கில்லை. தைரியமா வாங்க!


  பள்ளிகளுக்கெல்லாம் கோடை விடுமுறை விட்டுவிட்டிருப்பார்கள். உங்கள் வீட்டிலும் வாண்டுகள் அட்டகாசம் ஆரம்பித்திருக்கும் எப்போதும் கம்ப்யூட்டர் விளையாட்டு, டிவி என்று  பொழுது போக்கிக் கொண்டிருப்பார்கள் சில  குழந்தைகள். நமக்கு தொந்தரவு தராமல் எது செய்தாலும் சரின்னு விட்டு விடாமல் அவர்களுடன் நேரம் செலவழியுங்கள். வெளியிலும்  ஓடி ஆடும் விளையாட்டுக்களை விளையாடச் சொல்லுங்கள். விழுந்துடுவார்கள் என்று பயப்படாதீர்கள்.. சின்ன சின்ன சுற்றுலா அழைத்து செல்லுங்கள் சினிமாவிற்கு போகாமல் இருத்தல் நலம்.. 

   அவர்களுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக அவர்களுக்கு வேலை கொடுங்கள். புத்தகங்கள் கொடுத்து படிக்கச் சொல்லலாம். அவர்களுடைய மூளைக்கு வேலை கொடுக்கிற விதமாக சில புதிர் கணக்குகளைக் கொடுங்கள். 

  அப்படி ஒரு எளிமையான ஒரு கணக்கை சொல்கிறேன். இதை எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு கொடுக்கலாம். உங்கள் தம்பி தங்கைகள்,குழந்தைகள்,பேரன் பேத்திகள் இந்த வயதில் இருந்தால் அவர்களுக்கு இந்த புதிராக சொல்லி கண்டு பிடிக்க சொல்லுங்கள் சரியான விடை சொன்னால் பாராட்டுங்கள். சின்ன பரிசு ஏதாவது கொடுங்கள்.கண்டு டிக்க முடியவில்லை என்றால் குறிப்புகள் கொடுத்து முயற்சி செய்ய சொல்லுங்கள் . இவை அவர்களது சிந்தனை திறனை வளர்க்கும். 
(புதிர்ல ஆர்வம் இல்லாதவர்கள் கடைசியில இருக்கிற கொசுறு செய்தியை படிச்சிட்டு எஸ்கேப் ஆகலாம்)

இதோ அந்தப் புதிர் கணக்கு
அந்தப் பையன் ஓடி வந்தான் தன் அக்காவை நோக்கி,
"அக்கா! அக்கா!நான் ஒரு ஒரு அதிசய நம்பரை கண்டு பிடிச்சிருகேன்."

"அப்படியா! வெரிகுட்! என்ன அது சொல்லு!"

"நான் சொல்ல மாட்டேன்.  நீங்க தான் சொல்லணும்.
அந்த எண்ணை எந்த இரண்டு இலக்க எண்ணாலும் பெருக்கினாலும் இரண்டிலக்க எண்ணை இருமுறை பக்கத்தில பக்கத்தில எழுதி இருக்கிற மாதிரி இருக்கிற  நான்கு இலக்கஎண்ணா இருக்கும்.

"புரியலடா!தெளிவா சொல்லு"
"அதாவது 91 இருக்குன்னு வச்சுக்கோ அதை அந்த எண்ணால் பெருக்கினால் 9191 ன்னு கிடைக்கும்..புரியுதாக்கா? 10நிமிஷம்தான் டைம் .அதுக்குள்ள அந்த எண் என்னன்னு கண்டு புடிச்சி சொல்லணும். கேல்குலேட்டர் பயன்படுத்தக்கூடாது ஓ.கே யா? 
அக்கா  விடை கரெக்டா பத்து நிமிஷத்துகுள்ள சொல்லிட்டாங்களா? 
உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்சா நீங்களும் சொல்லலாம்?



*****************************************************************************************
இது  எளிமையான கணக்கு இதை விட கொஞ்சம் கடினமான புதிரை அடுத்த  வாரம் பாக்கலாம்...
கொசுறு : நமது சக வலைபதிவர் அற்புதமான மரபுக் கவிஞரான அருணா செல்வம் வெண்பாவுக்கு வித்தியாசமான ஈற்றடிக்கு வெண்பா எழுதி அவருடைய குருநாதரிடம் பாராட்டு பெற்றிருக்கிறார். அவர் கொடுத்த ஈற்றடி 

"சம்போடு ராமாநு சம்"

  நானும்  இந்த ஈற்றடிக்கு இரண்டு  வெண்பாக்கள் அவருடைய கருத்துப் பெட்டியில் எழுதி இருக்கிறேன். 
  ராமானுசம் என்று  சொன்னதும் கணிதமேதை  என் நினைவுக்கு வந்தார் 
  பேராசிரியர்  ஹார்டிதான் ராமானுஜனின் கணித திறமையை உலகுக்கு வெளிப் படுத்தினார் என்பது எல்லோருக்கும் தெரிததுதான்.
அவர் ஆங்கில வார்த்தைகளுடன் தமிழில் ராமானுஜத்தைப் பார்த்து சொல்கிற மாதிரி ஒரு   வெண்பா  தீவிர தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும். (சும்மா படிச்சிட்டு மறந்துடுங்க! )

ஹார்டிநான் நம்புகிறேன் உன்னை; கணிதத்தில்
ஹார்டென்று ஏதுமில்லை; உன்திறமை நம்பாதோர்
'கம்'போட்டு மூடுவார் அவர்வாயை; இக்கடின
'சம்'போடு ராமானு சம்


ஹார்ட்-கடினம்
கம்--GUM
சம்-SUM-கணக்கு
ஹிஹிஹி

இன்னொரு  வெண்பா.
இலையினைப் போட்டுவிட்டு நிற்காதே சும்மா
விலையிலா அன்போ டழைக்கவே வந்துநான்
தெம்போ டமர்ந்தேன்; முதலில் துளிபாய
சம்போடு ராமாநு சம்

**************

புதன், 1 மே, 2013

பதிவர் மூன்று! செய்திகள் மூன்று!

 செய்தி ஒன்று
ஏப்ரல் 26. -மே 2 பாக்யா இதழில் கவிஞரும் பதிவருமான மதுமதி அவர்களின் பேட்டியை அவரது வலைப் பக்கத்தில் படித்திருப்பீர்கள். கடந்த ஓராண்டாக அவரை நன்கு அறிந்த போதும் அவருடைய கல்லூரி வாழ்க்கை பற்றியும் தெளிவான காதல் வாழ்வு பற்றியும் தெரிந்து கொண்டதற்கு மகிழ்ச்சி அடைந்தேன். தமிழ்ப் பதிவர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்பதில் ஆர்வமுடைய இவரின் பேட்டியில் ஒரே ஒரு சிறு குறை என்னவெனில் தான் ஒரு முன்னணி பதிவர் என்பதை சொல்லாததே! அவரது அனைத்து லட்சியங்களும் கனவுகளும் நிறைவேறி உயர்ந்த இடத்தை அடைய வாழ்த்துக்கள்.

செய்தி இரண்டு

  . சமீபத்தில் மாநகராட்சி பள்ளி ஒன்றிற்கு  சென்றிருந்தபோது பெரிய அளவில் உணவு பழக்கம் சம்பந்தமான படத்தை மாணவர்கள் படிக்கும் வண்ணம் மாட்டி வைத்திருந்தார்கள்.அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரை கேட்டபோது இணையத்தில் இருந்து அந்தப் படத்தை எடுத்ததாகக் சொன்னார். உற்றுப் பார்த்தபோது
http://avargal-unmaigal.blogspot.com  என்று வலைதள முகவரி இருந்தது.அட நம்ம பிரபல பதிவர்  அவர்கள் உண்மைகள்-மதுரைத் தமிழனின் வலைப்பதிவில் இருந்து எடுக்கப் பட்ட படம். மகிழ்ச்சியாக இருந்தது.
அவர்கள் உண்மைகள் வலைப் பதிவில்  வித்தியாசமான செய்திகள்,நகைச்சுவை, படங்கள் என்று கலக்கிக் கொண்டிருக்கும் இந்த மதுரைத் தமிழன் பொழுதுபோக்குக்காக பதிவு எழுதுவதாக கூறினாலும் இவரது பல பதிவுகள் பயனுள்ளவையாக அமைந்திருக்கின்றன என்பதற்கு இது ஒர் உதாரணம்.

  அவரது சிறப்பு  படங்களை அதிக கவனம் எடுத்துக் கொண்டு படங்களை உருவாக்குவது . போட்டோ ஷாப் உள்ளிட்ட DTP கலை நன்கு அறிந்தவர் என்பதை அவரது தளத்தில் வெளியிடப்படும் தனித்தன்மை கொண்ட படங்கள் உணர்த்துகின்றன. இவ்வகையில் அவரது படம் பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தற்கு அவரை தாராளமாக பாராட்டலாம். வாழ்த்தலாம். தொப்பி தூக்கலாம் (Hats Off என்பதன் தமிழாக்கம்தாங்க! ஹிஹிஹி )

(இவர் 650க்கும் மேற்பட்ட  பதிவுகள் எழுதி  இருப்பதால்  எதில் இருந்து இந்தப் படம் எடுக்கப் பட்டது என்பதை அறிந்துகொள்ள இயலவில்லை.
இவரது பதிவுகளில் தேடிக் கொண்டிருக்கிறேன்.)

இன்னொரு மொக்கைசெய்தி: கவிஞர் மதுமதி பேட்டி வெளியான பாக்யா இதழில் எனது கீழே உள்ள நான்கு துளிக்கவிதைகளில்  ஒன்று வெளியாகி இருந்தது. ஏற்கனவே  கடந்த ஆண்டு மின்வெட்டுக் கவிதைகள் என்று இவற்றை பதிவாக வெளியிட்டிருந்தேன். இவற்றில் கடைசியாக உள்ளது மட்டும் பாக்கியாவில் பிரசுரமாகி இருந்தது. இதனை பத்திரிகைக்கு நான் அனுப்பவில்லை. நமது பதிவு சகோதரி திருமதி உஷா அன்பரசு அவர்கள் எனக்கு தெரியாமல் பாக்கியாவிற்கு அனுப்பிவிட்டார். அவர் சொன்ன பிறகே எனக்கும் தெரிந்தது. உஷா  அன்பரசு அவர்களுக்கு நன்றிகள். 

சாப்பிட உட்கார்ந்தேன்!
கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டவில்லை.
கரண்ட் கட்.
****************

மின்சாரம் இல்லாமல்
ஒரு
ஷாக் ட்ரீட்மென்ட்.
மின்வெட்டு.
******************

கல்யாணத்தில்
பந்தியின்போது
கரெக்டாக ஆனது 
கரண்ட் கட்டு.
என் கைக்கு வந்தது
பக்கத்து இலை லட்டு
******************

கைத்தான் ஃபேன்
வாங்குங்க!
டி.வி. யில் 
விளம்பரம்!
அட போங்கப்பா!
இனிமே 
கைதானே  ஃபேன்!

*******************************************************************************
உழைப்பாளர்  தின வாழ்த்துக்கள்!
கடந்த ஆண்டு இதே நாளில் பதிவிடப்பட்ட உழைப்பாளர் தினக் கவிதை 
இன்றாவது  நினைத்துப் பார்!
http://tnmurali.blogspot.com/2012/05/blog-post.html
********************************************************************************************************************