என்னை கவனிப்பவர்கள்

சூதாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சூதாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 மே, 2013

சூது கவ்விய ஸ்ரீசாந்த், இல்லை! சீ! சாந்த்


அன்புள்ள ஸ்ரீசாந்த்!
    கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் பக்கத்துக்குப் பக்கம் இடம் பெற்று வருகிறாய். வாழ்த்து சொல்லக் கூடிய சாதனையையா செய்திருக்கிறாய்?  வேதனையுடன் வசைபாடக் கூடிய  சூதினை  அல்லவா செய்திருக்கிறாய்.!

   சூதாட்டம் தற்காலிகமாக வாழ்க்கையை வளப் படுத்தலாம். இறுதியில் நாசம் செய்து விட்டு அல்லவா நகர்ந்து போகும்!.பார்த்துக் கொண்டிருக்கும் பல்லாயிரக் கணக்கான கண்கள் காண்பதெல்லாம் நிசம் என்று நம்பிக் கொண்டிருக்க மண் தூவுவது தெரியாமலேயே கண்ணில் மண்தூவும் உன்னைப் போன்றவர்களைப் பார்க்கும் போதெல்லாம், இப்படிப்பட்ட கிரிக்கெட்டையா ரசிக்கிறோம் என்று வெட்கமாகத்தான் இருக்கிறது.
   பணம் உன் கண்ணை மறைத்ததால் நீ எங்கள் கண்களை மறைக்க  முற்பட்டாயே! நியாம்தானா? அப்படி என்ன உனக்கு சோற்றுக்கே வழி இல்லையா? ஒரு முறை ஹர்பஜன் உன்னை அறைந்தார். அதற்கு பழி வாங்கவோ நீ கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில்  அறைந்தாய்.  உன் சுயநலத்துக்காக ஆட்டத்தையா அடமானம் வைப்பது? தடை விதிக்கப் பட்ட அசாருதீன் ஜடேஜா போன்றவர்களைக் கண்டும் உனக்கு அச்சம் ஏற்படவில்லையா?

   உன்னை நம்பி உன்னை ஒருவர் உன் திறமைக்காக ஏலம் எடுத்த பின் அவர்களுத் தெரியாமல் இன்னொருவருக்கு ஏன் ஏலம் போனாய்.  தொழில்நுட்பக் கண்கள் உன்னைக் கண்டறியும் என்று உனக்கு தோன்றவில்லையா? நீ குற்றமற்றவன் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும்   உன் பெற்றோர்கள் இந்த செய்தியைக் கேட்டதும் ஈன்ற பொழுதினும் பெரிதுவந்திருப்பார்களா? உன் திறமையை வெளிப்படுத்தி  கூலி பெறுவது நேர்மையான ஆட்டம்.  திறமையை வெளிபடுத்தாமல் இருப்பதற்காக கூலி பெறுவது சூதாட்டம். மேட்ச் பிக்சிங் தானே செய்யக் கூடாது; ஸ்பாட் பிக்சிங் செய்தால் தவறு இல்லை என்று உன்னை யாரேனும் மனம் மாற்றி இருக்கலாம். அதற்கு நீ மயங்கிப் போனது உன்வாழ்க்கைக்கே வேட்டு வைத்து விட்டதே!. இது உன்னுடைய குற்றம் மட்டுமல்ல. விளையாட்டு கோடிகள் புழங்கும் வியாபாரமாக மாறியதும் ஒரு காரணமே. பொருட்களைப்  போல வீரர்களை விற்பதும் வாங்குவது ஏலம் போடுவதுமே  சூதாட்டம் போலத்தானே!

   உன்னைப் போல் இன்னும் பலர் இருக்கலாம்.நீ மாட்டிக் கொண்டாய் அவ்வளவுதான்! மாட்டிக் கொள்ளாதவரை அனைவரும் உத்தமர்களே! சச்சினைப் பார்! திராவிடைப் பார்த்து கற்றுக் கொள்! என்று சொல்லக்கூட தயக்கமாகத்தான் இருக்கிறது. எந்த நேரத்தில் எந்த உண்மை வெளியாகுமா தெரியாது. இன்னும் பல வீரர்களின் அந்நியன் முகங்கள் வெளிப்படலாம்.

   உனக்குத் தெரியும்! தெருவோரா கிரிக்கேட்டிலேயே .பால் மேட்ச் , பெட் மேட்ச் நடக்கும். அதை சூதாட்டத்தின் தொடக்கம்  என்று அறிந்திருக்க முடியாது. 

    இதுவும் நடப்பதுதான். சில நேரங்களில் ஒரு அணியில் ஆட்கள் குறைவாக இருக்கும்போது அதிகமாக உள்ள எதிர் அணியினரின் கூடுதலாக வந்திருக்கும்  ஒரு சிலரை தன் அணியில் விளையாட அழைப்பார்கள். அவர்கள் கூட தான் ஆடும் அணிக்காக உண்மையாகத்தான் விளையாடுவார்கள். தன் சொந்த அணி வெல்ல வேண்டும் என்பதற்காக தான் சொந்த அணி தோல்வி பெறும் நிலையில் இருந்தாலும், தான் விளையாடும் அணியில்  காட்ச விடுவது,  ரன் அவுட் ஆவது போன்ற எந்த செயல்களையும்  செய்ய மாட்டார்கள். தன் அணியில் ஆடும்போது ஏராளமான காட்சுகளை விடுவானே! எதிரணிக்கு ஆடும்போது மட்டும் இப்படிப் சரியாக பிடித்து விடுகிறானே என்று அங்கலாய்த்துக் கொள்வதும் நடப்பதுண்டு. சிறுவர்களாய் இருக்கும்போது இருந்த அந்த நேர்மை பிற்காலத்தில் பணத்துக்காக  மாறிவிடும் போலிருக்கிறது.  உனக்கும் அப்படித்தான் நிகழ்ந்திருக்கும்.


  11 முட்டாள்கள் ஆடுகிறார்கள் 11000 முட்டாள்கள் பார்க்கிறார்கள் என்றார் பெர்னாட் ஷா. உண்மையில் பார்க்கும் பல ஆயிரம் பேர்கள்தான் மட்டும்தான் முட்டாள்கள் என்பதை உன்னைப் போன்றவர்கள் எங்களுக்கு உணர்த்தி இருக்கிறீர்கள் . உங்களை  பார்க்கும் பிஞ்சு மனங்களிலும் நஞ்சை அல்லவா  விதைக்கிறீர்கள்.

   இவற்றையெல்லாம்  தவிர்க்க அரசாங்கமே சூதாட்டத்தை  அனுமதிக்கலாம்; அரசுக்கு வருமானம் கிடைக்கும்  என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். சூதாட்டம் தவறு எனும்போது அரசாங்கம் அனுமதித்தால் மட்டும் அது எப்படி சரியாகும் என்று தெரியவில்லை. 

   நாம் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்ற அசட்டு தைரியமும் மாட்டிக் கொண்டாலும் சட்டத்தில் ஒட்டைகளா இல்லை. வெளிவருவதற்கு என்ற எண்ணமும் இத் தவறுகளை செய்யத் உன்னை தூண்டி இருக்கலாம்.  மக்களின் மறதியும் அலட்சியமும் தானே ஊழலின் ஊற்று.

   நீ மீண்டும் வந்து ஆடினாலும் காலரியில் நின்று கைதட்ட நாங்கள் இருக்கும்போது உங்களைப் போன்றவர்களுக்கு என்ன கவலை?

  நேரம், மின்சாரம், மக்களின் நம்பிக்கை இவற்றை வீணாக்கும்  ஐபிஎல் கூடிய விரைவில் கிரிக்கெட்டை அழிவுப் பாதைக்கு அழைத்து செல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை.கோபமும் வருத்தமும் ஏற்படத்தான் செய்கிறது என்ன செய்ய?

ஸ்ரீசாந்த் உன்னை  சீ!....சாந்த்  என்று அழைக்க வைத்து விட்டாயே!
                        
              கிரிக்கெட்டெனும்ஆட்டத்தை சூது கவ்வ
                    கிறுக்கரென ரசிகர்களை நினைத்து விட்டாய் 
              சருக்கிவிட்டாய்  நேர்மைஎனும் பாதையி லிருந்து 
                  சஞ்சலமே சங்கடமோ துளியும் இன்றி; 
              வெறுக்கட்டும் கிரிகெட்டை இனிமேல் மக்கள்
                    விலைபோனாய் பணத்துக்கு இன்று நீயே 
              சிரிக்கட்டும் உலகம்இனி உன்னைப் பார்த்து 
                     சிந்திப்பாய் எதிர்காலம் கேள்விக் குறியே!
    
                                              இப்படிக்கு  
                   இனிமேல்  கிரிக்கெட்டை வெறுக்க இருக்கும் ரசிகர்கள் 


*****************************************************************************************

வியாழன், 17 மே, 2012

IPL - ஒரு கிரிக்கெட் ரசிகரின் திருக்குறள்

   ஐ.பி.எல் தேவையா வேண்டாமா என்று ஒரு பக்கம் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. வேண்டாம் என்பவர்களுக்கு வலு சேர்க்கும் வகையில் சூதாட்டப் புகார்கள்.இவை  கிரிக்கெட் ரசிகர்களை வருத்தம் அடையைச் செய்கின்றன. இருந்தபோதும் இளைஞர்களின்  ஐ.பி.எல் ஆர்வம் இதனால் குறைந்து விடாது என்றே தோன்றுகிறது. உற்சாகம் கொப்பளிக்கும் ஐ.பி.எல் ஒரு திருவிழாவாகவே அமைந்துள்ளது. 
   பிரபல பதிவர் மோகன்குமார் சொல்வது போல ஐ.பி.எல் முழு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து (சண்டைக் காட்சிகள் கூட களத்தில் உண்டு)  காணப்படுகிறது. முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கூட ஐ.பி.எல் காலங்களில் திரைப்படங்கள் வெளியிடத் தயங்குகிறார்கள். திரை அரங்குகள் காலியாக காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
   இதெல்லாம்  எதற்கு சொல்கிறேன் என்றால் ஐ.பி.எல் நடந்து கொண்டிருக்கும்போதே  அதைப் பற்றி எழுதிய பத்து திருக்குறளை பதிவிடப் போகிறேன் என்று எச்சரிப்பதற்காகத்தான் (திருவள்ளுவர் எழுதியதுதான் திருக்குறள். நீ எழுதினா தெருக்குரல் என்றுயாரோ சொல்வது போல் இருக்கிறது.)

1.          தேவையா  ஐ.பி.எல் என்பார் சிலபேர்கள் 
             சொல்வதை  மறந்து  விடு.

2.          இளமைக்கே ஐ.பி.எல் என்றிருக்க வேண்டாம்
            தலை'மை' அடித்தாவது செல் 

3.          ஆண்டியும்  வந்திடுவார்  காண்பதற்கு ஐ.பி.எல்
             தூண்டும் கிரிக்கெட் வெறி

4.          ஒன்றும் இரண்டும் ஓடாதே  எப்போதும் 
            சிக்சரும் ஃபோரும் அடி.

5.           தடுப்பாட்டம் வேண்டாம் தம்பிகளே-அப்போது 
             கடுப்பாகி வீசுவார் கல்

6.           கேட்ச்கள் விடுதல் அழகல்ல அதனாலே
             மேட்ச்வெற்றி கைவிட்டுப் போம்.

7.           ஒருரன் ஒரு பந்து விக்கெட்டால் ஆட்டம்
             விறுவிறுப்பு கூடுமே பார்.

8.           ஏளனமாய் நினைக்காதே எதிரணியை அவ்வணியின்
             ஏப்பையும் எட்டுவார் இலக்கு.

9.           ஆட்டம் போரடிக்கும் நேரமுண்டு அப்போது 
             அழகியர்  ஆட்டம் ரசி.

10.          சூதாடும் ஜாக்கியிடம் சிக்காதே உன்வாழ்வு 
             சூனியமாய் ஆகிவிடும் சிந்தி.


( இதுக்கெல்லாம் இலக்கணம் பாக்கப்படாது.)

*********************************************************************************************************
பிடிச்சிருந்தா  தட்டலாம் 
பிடிக்கலன்னா திட்டலாம்  
கோவம்னா    குட்டலாம்
இதைப் படிச்சாச்சா?