இந்தப் பதிவுக்கு முன்னால் இரண்டு சின்ன கேள்விகள்
1) ஒருவேட்பாளருக்கு தேர்தலில் எவ்வளவு ஒட்டு கிடைத்தால் செலுத்திய டெப்பாசிட் தொகை திரும்பக் கிடைக்கும்.
2) ஒரு தொகுதியில் போட்டியிட்ட அதிக வேட்பாளர் எண்ணிக்கை என்ன/
விடை கடைசியில்
**************************************************************************************************************
தமிழகத்தில் தேர்தல் முடிந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது. அடுத்த கட்ட தேர்தல்கள் இருப்பதால் முடிவு தெரிந்து கொள்ள காத்திருக்க வேண்டி இருக்கிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தல் நடத்தி முடிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை முதன் முதலாக அறியச் செய்தவர் டி.என்.சேஷன் என்று கூறலாம். ஆனால் அவரும் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின் பின்னர் ஒரு கட்சியில் சேர்ந்து தன் நடுநிலையை கேள்விக் குறி ஆக்கிவிட்டார். பொதுவாக தேர்தல் கமிஷன் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் என்ற கருத்து எப்போதும் உண்டு. ஏனெனில் தேர்தல் பணிக்கு பயன்பபடுத்தப்படும் உயர் நிலை அலுவலர்கள் ஊழியர்கள் பணியாளர்கள் அனைவரும் அரசுப் பணியாளர்களே என்பதால் சந்தேகக் கண் கொண்டே பார்க்கப் படுகிறது.
முன்பெல்லாம் விளம்பரம், பிரச்சாரம் , ஏகப்பட்ட பணம் செலவுசெய்தல் போன்றவற்றிக்கு கடுமையான கட்டுப் பாடுகள் இல்லை. தேர்தல் காலம் வந்துவிட்டாலே வீட்டு சுவர்களில் உரிமையாளரின் அனுமதி கேட்காமல் விளம்பரங்கள் செய்து சுவரை பாழடித்து விடுவார்கள். இதில் எந்தக் கட்சிகளும் விதி விலக்கல்ல. வேட்பாளர் தேர்வுக்கு முன்னதாகவே ஒவ்வொரு கட்சியும் சுவரை வெள்ளை அடித்து ரிசர்வ் செய்து விடும். இதில் அவர்களுக்குள் தகராறு வேறு நடக்கும். ஆனால் சமீப தேர்தல்களில் விளம்பரங்கள் ஏதுமில்லை. கொடி தோரணங்கள் அதிகம் காணப்படவில்லை. ஒலி பெருக்கிகள் காதை கிழிக்கவில்லை. இவையெல்லாம் செலவு கணக்கில் சேர்ந்து விடும் என்பதால் ஓரளவிற்கு அடக்கியே வாசித்தனர்.
அதற்கு முன்னர்தேர்தல் நடைபெறம் சமயங்களில் மட்டுமே வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படும் நரேஷ்குப்தா தேர்தல் ஆணையாளராக இருந்த காலத்தில் வாக்காளர் பட்டியல் சேர்க்கையை ஆண்டு முழுவதும் முடுக்கிவிட்டார். அரசு தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை BLO என்று அழைக்கப் படும் BOOTH LEVEL OFFICERS களாக நிரந்தரமாக நிர்ணயம் செய்து இவர்கள் மூலமாக ஆண்டுக்கு மூன்று முறைக்கு மேல் வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கம், திருத்தம் இவை செய்யப்பட்டன. ஆசிரியரால் ஆசிரியப் பணியை விட இந்தப் பணியையே பள்ளியில் செய்ய வேண்டி இருந்தது. இப்போதும் இந்நிலைதான் உள்ளது. கல்வி உரிமை சட்டத்தில் ஆசிரியருக்கு வேறு பணிகள் வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு தேர்தல் பணியும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியும் விதி விலக்குகள். ஆனால் அதிகப்படியான பணி தேர்தல் பணிமட்டுமே.
கிராமப் புறங்களில் இப்பணி எளிதானது ஆனால் நகர்ப் பகுதிகளில் குறிப்பாக சென்னை புறநகர்ப் பகுதிகளில் இப்பணி கடினமானது. நிறையப் பேர் வாடகைதாரர்கள் என்பதால் அடிக்கடி வீடு மாறி சென்று விடுவார்கள். குடிபெயர்ந்து செல்லும் ஒருவர் இங்கு வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பித்துவிட்டு வேறு ஒரு இடத்திற்கு இடம் மாறி விடுவார். அவர் அங்கும் போய் விண்ணப்பித்து விடுவார். அவர்கள் பெயர் இரண்டு பட்டியல்களிலும் இடம் பெற்றிருக்கும். சேர்க்கைக்கு விண்ணப்பிப்பார்களே தவிர நீக்குதலுக்கு இதுவரை விண்ணப்பித்ததை நான் பார்த்ததில்லை. மிகச் சிலர் செய்யக் கூடும்.
நிறையப் பேரின் பெயர்கள் இடம்பெறாமைக்குக் காரணம் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியும் ஒரு காரணம் இந்தத் தேதியில் பட்டியலை அறிவித்து விடுவோம் என்று சொல்லி விடுவார்கள். ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்த நிலையில் ஊழியர் பற்றாக்குறை ( இதற்கென தனி ஊழியர்கள் இல்லை. ஆசிரியர்களும், வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களும் அவர்கள் பணிகளையும் செய்து கொண்டு இதையும் செய்ய வேண்டி இருக்கிறது) காரணமாக அவசர அவசரமாக பரிசீலனை செய்து பட்டியலை வெளியிட்டு விடுவார்கள்.
நகர்ப் பகுதிகளில் சொந்த வீடு வைத்திருப்போரும் தங்கள் சொந்த ஊரிலும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பார்கள்.
சென்னையில் வாக்களிப்பு சதவீதம் குறைவு என்று கூறப்படுவதற்கு மேற் சொன்ன காரணங்கள் முக்கியமானவை. என்னை பொறுத்தவரை வாக்களிக்காதவர் சதவீதம் 10 க்குள்தான் இருக்கும் என்பது என் கருத்து.இதில் அரசு ஊழியர்கள் பெரும்பாலும் நடைமுறை சிக்கல் காரணமாக வாக்களிப்பதில்லை
மேலும் உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்களிப்போர் எண்ணிக்கை எப்போதும் அதிகமாக இருக்கும். போட்டியிடுவோர் அனைத்து வாக்காளர்களையும் சந்தித்து வாக்கு சாவடிக்கு வரவழைத்து விடுவர்.
சட்டமன்றத் தேர்தலில் வாக்கு சதவீதம் இதை விட சற்று குறைவாக இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலில்தான் வாக்கு சதவீதம் மிகக் குறைவாக இருக்கும். அந்தந்தக் கட்சியைத் சேர்ந்தவர்கள் கூட முந்தைய மற்ற தேர்தலில் காட்டிய ஆர்வத்தை காட்ட மாட்டார்கள்.
முன்பெல்லாம் பூத் ஸ்லிப்புகளை கட்சிக்காரர்கள்தான் வழங்குவார்கள் இப்போது BLO க்கள் மூலம் சில நாட்களுக்கு முன்னதாகவே வீட்டுக்கே வந்து சேர்ந்துவிட்டது. புதிதாக சேர்ந்தவர்களுக்கு பெயர் சேர்க்கப் பட்டது என்ற கடிதமும் அனுப்பபிய தேர்தல் கமிஷனின் சுறுசுறுப்பு ஆச்சர்யமாக இருந்தது. இணையத்தின் மூலம் வேட்பாளர் பெயர்களை சரிபார்த்துக் கொள்ளச்செய்தது, SMS மூலம்வாக்குச்சாவடிகளை எளிதாக அடையாளம்காண வசதி ஏற்படுத்திக் கொடுத்தது போன்றவை தேர்தல் கமிஷனுக்கு சபாஷ் போட வைத்தது.
வேட்பாளர்களின் செலவுத் தொகை அலுவலர்களால் கண்காணிக்கப் படுகிறது. இவ்வளவு கெடுபிடிகளையும் ஏமாற்றி பலவித விதி மீறல்களை அனைத்துக் கட்சிகளுமே செய்து வருகின்றன. எவ்வித சீர்த்திருத்தங்களாக இருந்தாலும் மக்கள் ஒத்துழைப்பின்றி செயல்படுத்த முடியாது
திருவிழா முடிந்து விட்டது. திருவிழாவில் காணாமல் போகப் போகிறார்கள் யார்? தோற்பவர் மட்டும்தானா? ஜெயிப்பவர்களும்தான் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொகுதி பக்கம் எங்கே தலை காட்டப்போகிறார்கள்?
*****************************************************
அதிக பட்ச ஜனநாயகக் கடமைகளை ஆற்றிய தொகுதிகளை அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்
*****************************************************************************************************************
முதலில் கேட்ட கேள்விகளுக்கு விடை
- பதிவான வோட்டுகளில் 6 இல் 1 பங்கு ஓட்டுக்கள் பெற்றால் செலுத்திய டெப்பாசிட் திரும்பக் கிடைக்கும்.
- 1996 இல் நடை பெற்ற தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் அதிகபட்ச வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிகமில்லை ஜென்டில்மென் 1033 பேர்தான்.
****************************************