என்னை கவனிப்பவர்கள்

குமுதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குமுதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 ஏப்ரல், 2021

மறக்கமுடியாத பத்திரிகையாளர் கோசல்ராம்

  ர

 பத்திரிகையாளர் திரு கோசல்ராம் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி யுற்றேன். அவரை நான் பார்த்தது கூட இல்லை ஒரு பத்திரிகையாளர் செய்திகேட்டு  நான் ஏன் அதிர்ச்சி அடைய வேண்டும். அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு?

     நான் 2011 இன் இறுதியில் வலைப்பூக்களில்  எழுதத் தொடங்கினேன். வலைப்பூக்கள் உச்சத்தைத் தொட்டு கொஞ்சம் மங்கத் தொடங்கிய காலம். ஆனாலும் அதற்கென்று தனி இடம் இருந்தது. ஓரளவுக்கு வலைப்பதிவர்களுக்கு அறிமுகமானவனாக இருந்தேன். 

கதைகள், கவிதகள், கட்டுரைகள் என்று மனதில் தோன்றியவற்றையெல்லாம் எழுதிக் கொண்டிருந்தேன். ஒரு பழைய பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் சற்று வித்தியாசமான சிறு கதை ஒன்றை எழுதி பதிவிட்டுவிட்டு அலுவலகத்துக்கு புறப்பட்டுவிட்டேன். திடீரென்று ஒரு ஃபோன் கால். ,”நான் பிரியா கல்யாண ராமன். பேசுகிறேன். என்னைத் தெரியுமா? என்றார் 
”குமுதம் ஆசிரியரும் எழுத்தாளருமான உங்களைத் தெரியாதவர்கள் யார் சார் இருக்க முடியும்”  என்றேன்.

”உங்கள் வலைப்பதிவில் வெளியிட்டுள்ள கதையைப் படித்தேன். நன்றாக இருக்கிறது. அது நீங்கள் எழுதியதுதானா? ”என்று கேட்டார்.

”ஆம்” என்றேன்.

குமுதத்தில் வெளியிட சம்மதமா என்று கேட்க 

கரும்பு தின்னக் கூலிவேண்டுமா என்ன?  மகிழ்ச்சியுடன் சம்மதம் சொன்னேன்/

உங்கள் பக்கத்தில் இருந்து அதனை இப்போது நீக்கி விட்டு எனக்கு அனுப்புங்கள் என்றார். 

நான் உடனடியாக அதனை நீக்கி விட்டு குமுதத்திற்கு அனுப்பினேன். 3 வாரங்களில் என் சிறுகதை வெளியாகிவிட்டது. முதன்முதல் எனது கதை குமுதத்தில் வெளியானது கண்டு அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். அதன் பின்னர்  அவ்வப்போது குமுதத்தில் எனது கதைகள் பிரசுரமாகின்றன 

    வலைப்பூக்களை பத்திரிகைகள் கவனித்து வருகின்றன என்பதை அப்போதுதான் நான் அறிந்து  கொண்டேன். அப்போதுஅவர் தெரிவித்த இன்னொரு  செய்தி எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.  அப்போது குமுதத்தில் திரு கோசல்ராம் பாணியாற்றி வந்தார்.
     வலைப்பூவில் நான் புதிர்ப் பதிவுகள் எழுதுவேன். புதிர்களை அப்படியே கூறாமல் வடிவேலுவை பாத்திரமாகக் கொண்டு நகைச்சுவைக் கதைகளாக எழுதிவந்தேன். அக்கதைகள் அனைத்தும்   கோசல்ராம் அவர்கள் விரும்பிப் படித்துப் பாராட்டுகிறார் என்று பிரியா கல்யாணராமன் தெரிவித்தார்.
     அவரிடம் தொடர்புகொண்டு புதிர்களை அடிப்படையாக வைத்து இதே போல நகைச்சுவை தொடர் எழுத டிஸ்கஸ் செய்யுங்கள் என்றார்.  அப்போது வடிவேலுவின் ஆதிக்கம் குறைந்து சந்தானம் பிரபலமாகத் தொடங்கினார். அதனால் சந்தானத்தை பாத்திரமாகக் கொண்டு எழுதுங்கள் என்றார்.

    அப்போதைய சூழலில்  எதிர்பாரா அலுவலக பிரச்சனைகள் காரணமாக என்னால் அதில் கவனம் செலுத்த இயலவில்லை.

    பின்னர் கோசல்ராம் அவர்கள் ஒரு நாள் ஃபோன் செய்தார்.தான் தற்போது குமுதத்தில் இல்லை என்றும்.’ ”நமது அடையாளம்” என்ற பத்திரிகையை தொடங்கி இருப்பதாகவும். அதில் முன்பு  நகைச்சுவைத் தொடர் எழுதும்படி கூறினார். .  

 அப்புசாமி சீதாப்பாட்டிபோன்ற கேரக்டர்களை உருவாக்கி வேறு பாணியில் எழுதி அனுப்புங்கள் என்றார். சரி என்றேன்

”நமது அடையாளம்” அரசியல் புலனாய்வுப் பத்திரிகை என்பதை அறிந்தேன். அரசு பணியில் இருப்பவர்கள் அதில் எழுதலாமா என்ற ஐயம் ஏற்பட யோசித்துக் கொண்டிருந்தேன். பத்திரிக்கையும்  ஏதோ காரணத்தால்  நின்று போனது. பின்னர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தேன்.

       இன்று பத்திரிகையில் அவரைப் பற்றி படிக்கும்போதுதான் தெரிந்து கொண்டேன் ஸ்டாலின் அவர்கள், தமிழிசை சவுந்தரராஜன் போன்ற பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.அவரது சிறப்புகளை.  பலரும்  புகழ்ந்துள்ளனர். அவரா என்னிடம் சர்வ சாதரணமாக பேசினார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

பத்திரிகையாளர்களில் சிலர் மட்டுமே சாதாரணர்களையும் கவனித்து அவர்களின் திறமையை அங்கீகரிப்பவர்கள் பிரியா கல்யாணராமன், கோசல்ராம் போன்ற சிலரே.  என்னையும் மதித்து அங்கீகாரம் தந்த கோசல்ராம் அவர்களை நான் நேரில் பார்த்தது இல்லை.  அவருக்கு வயதும்  ஒன்றும் அதிகமில்லை 49 தான். இந்த மரணம் எதிர்பாராத ஒன்று. அன்னாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-----------------------------------------------------------------------------------------------


வியாழன், 24 ஏப்ரல், 2014

குமுதத்தில் என் சிறுகதை! வலைப் பதிவு எழுதுவதால் பயன் உண்டா?

      செவ்வாய்க் கிழமை காலையில் ஒரு தொலை பேசி அழைப்பு. பேசுவது யாரென்று சொல்லாமல் உங்கள் "என்ன செய்யப் போகிறாய்" கதை குமுதத்தில் வந்திருக்கிறது. இன்னும் படிக்கக் கூட இல்லை. உங்கள் பெயரைப்பார்த்ததும் வாழ்த்து தெரிவிக்க உடனே அழைத்துவிட்டேன். வாழ்த்துக்கள் என்று  இன்ப அதிர்ச்சி தந்துவிட்டு "நான் யாரென்று  அறிந்து கொள்ள முடிகிறதா" என்றார். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரே சொன்னார் "நான் உங்களுக்கு தெரிந்தவன்தான் என்னை சென்னை பித்தன் என்று அழைப்பார்கள் என்று மென்மையாக சொன்னார். ஒரு மூத்த பதிவர், பதிவுலகில் இளைஞர்களுக்கு இணையாக வெற்றிக் கொடி நாட்டியவரின் பண்பு என்னை ஆச்சர்யப் படுத்தியது.
2012 ஜனவரியில் வலைச்சரத்தில் முதன் முதலாக என்னை அறிமுகப்படுத்தியவர் இவரே. அவரே கதை வெளியான முதல் தகவல் அளித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து பலரும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர். இடைவிடாத அலுவலக வேலைகள் காரணமாக அடுத்த நாள்தான் நான் குமுதம் வாங்கிப் படிக்க முடிந்தது. ஏற்கனவே வலையுலக நண்பர்கள் பலருக்கும் மின்னல்வரிகள் பாலகணேஷ் அவர்கள் மூலம் தெரிந்து விட்டதால் இதைப் பற்றி எழுதலாமா வேண்டாமா என்று யோசித்தேன்.  வவ்வால்ஜி 'அறியாதன அறிந்தேன் ' என்று கலாய்த்தல் கம்மென்ட் போடுவார் என்றாலும் இதனை (அவருடனும்) பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்ற முடிவுக்கு வந்தேன். 

30.04.2014 தேதியிட்ட குமுதம் இதழில் கதை வெளிவந்துள்ளது. இந்த இதழ் 22.04.2014 அன்றே வெளிவந்துவிட்டது.

******************************

    பாலகணேஷ் அவர்களின் சரிதாயணம்  கதைகள் வலையுலகில் பிரசித்தமானவை. இயல்பான நகைச்சுவை அவருக்கு கைவந்த கலை. தன்னையே நாயகனாகக் கொண்டு சரிதா என்ற கற்பனை கதாபாத்திரத்துடன் இணைந்து  நகைச்சுவை விருந்து படைத்து வருபவர்  அவர். அந்தப் பாத்திரத்தைக் கொண்டு அதே பாணியில் ஒருகதை எழுத வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு நினைத்திருந்தேன். வேறு ஒரு  கதைக் களத்தைக் கொண்டு கதையும் தொடங்கி விட்டேன். பின்னர் தற்போதைய சூழலில் தேர்தலை வைத்து எழுதினால் நன்றாக இருக்குமே என்று நினைத்து அவசர அவசரமாக எழுதி முடித்து விட்டு அதை பாலகணேஷ் மின்னஞ்சலுக்கு அனுப்பிவிட்டு இரவு 9.30 மணிக்கு போன் செய்து மெயில் அனுப்பியதை தயக்கத்துடன்   சொன்னேன். சிறிது நேரத்திலேயே என்னுடன் தொடர்பு கொண்டு மிக நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். அவருடைய என் பெயரைத் தெரிவிக்காமல் வலைத்தளத்தில் வேண்டிய திருத்தம் செய்து வெளியிடும்படி கேட்டுக் கொண்டேன்.   நான் எழுதியதில் எதுவும் விட்டதாகவும் சேர்த்ததாகவும் தெரியாமல் அற்புதமாக எடிட் செய்துவெளியிட்டார் 

   எனக்கும் நகைச்சுவைக்கும் ரொம்ப தூரம் என்று நினைத்து ஒருவரும் என்பெயரை யூகிக்கவில்லை என்பது ஏமாற்றத்தை தந்தாலும்  கண்டு பிடிக்கமுடியாத அளவுக்கு இருந்தது என்பதில் சற்று மகிழ்ச்சியே! அதற்கு கிடைத்த வரவேற்பு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நான்தான் எழுதினேன் என்று முன்னரே  தெரிந்திருந்தால் வரவேற்பு ஒரு வேளை குறைந்திருக்கக்கூடும். கருத்திட்டு பாராட்டும் தெரிவித்த அனைவருக்கும்  
 வேறு ஒரு ஸ்டைலில் எழுதுவதில் ஒருசவால் இருக்கிறது.
அதுபோல எழுதி "திடம் கொண்டு போராடு" சீனு நடத்திய காதல் கடிதப் போட்டியில் என்னைக் கவுத்திட்டாயே சரோ என்ற கடிதம் எழுதி பரிசு பெற்றதும் ஒரு வித்தியாசமான அனுபவம்.  
நன்றி 


*********************************************************************************
 வலைப் பதிவு எழுதுவதால் பயன் உண்டா?

  கதை கவிதை  கட்டுரை ஆர்வத்துடன் படிப்போர் பலருக்கும் எழுதவேண்டும் என்ற ஆசையும் வரும். சிலர்  அந்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வெற்றி பெறுகிறார்கள். நல்ல திறமை இருந்தும் வேலை, குடும்பம் சூழலில் தனக்கு படைப்பாற்றல் இருப்பதையே மறந்து போனவர் நிறையப் பேர் உண்டு. ஆரம்பத்தில்  பத்திரிகைகளுக்கு தங்கள் ஆக்கங்களை அனுப்பிவிட்டு அடுத்த வாரமே வந்து விடும் என்று ஆர்வக் கோளாறால் வாரா ரம் வாங்கிப் பார்த்து ஏமாற்றம் அடைந்த அனுபவமும் உண்டு. கடைசியில் சீ சீ இந்தப் பழம் புளிக்கும் நிலைதான் .  

   வலை உலகைப் பொறுத்தவரை படிப்போரும் படைப்பளிகளாகவே உள்ளனர்.செய்திகளை படிப்பவர்களை விதி விலக்காகக் கொள்ளலாம் பத்திரிகைகளை படைப்போர் அல்லாதவரும் படிப்பது அதன் கூடுதல் பலம்.
 நம் எழுத்தை அச்சில் ,பத்தரிகைகளில்  பார்க்கும்போது ஏற்படும் பரவசம் ஒரு தனியே. அதுவும் அந்தப் பத்திரிகை பிரபலமானததாக இருந்தால் கூடுதல் மகிழ்ச்சிதான். எல்லா பிரபல பத்திரிகைகளும் வலைப் பதிவுகளை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன. வலையுலகம் இன்று முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. அச்சு ஊடங்களில் பிரபலமாக உள்ள பலரும் தங்களை மேலும் நிலை நிறுத்திக் கொள்ள இணையம் நோக்கி  (முகநூல், திரும்ப வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

    மூன்றாவது படிக்கும்போது கதைப் புத்தகம் வாசிக்கத் தொடங்கிய நான்  9 வது படிக்கும்போது கதை எழுதத் தொடங்கினேன்.அப்போதே அது ஒரு சின்ன பத்திரிகையில் பிரசுரமானது ஆச்சர்யம்தான். ஒரு சில கதைகள் கவிதைகள், துணுக்குகள் அவ்வபோது இதழ்களில்  பிரசுரமானாலும் குறிப்பிடத் தக்கவையாக  அமைந்தது பாக்யாவில் வெளியான படைப்பும், தற்போது குமுதத்தில் வெளியாகி உள்ளது மட்டுமே.

   சினிமாவைப் பற்றி எழுதினால் மட்டுமே அதிக பார்வையாளர்கள் வருவார்கள் என்ற சூழலே இருக்கும் நிலையில் என்னால் ஒரு வருடம் கூட வலையில் தாக்குப் பிடிக்க முடியாது என்றே நினைத்தேன். திரட்டிகளின் சூட்சுமம் புரியாமல் திண்டாடினேன். (இன்னமும் புரியாமல்தான் இருக்கிறது) . எப்படிப்பட்ட பதிவுகள் எழுதுவது என்று ஆரம்பத்தில் குழப்பமாக இருந்தது. இணையத்தைப் பொறுத்தவரை ஒரே வகைப்  பதிவாக  தொடர்ந்து எழுதுவது என்பது என்னை போன்றவர்களுக்கு  ஒத்து வராத  ஒன்றாக இருப்பதை உணர்ந்தேன். எனவே கதை கட்டுரை, கவிதை,சமூகம்,  கணினி அனுபவங்கள்,எளிய அறிவியல் என்பதை என் தகுதிக்கேற்ற வகையில் பல்வகைப் பதிவுகளை  எழுதிவருகிறேன். சிறப்பாக எழுதுவதற்கு முயற்சியும்  செய்து வருகிறேன்.

   உண்மையில் பார்த்தால் வலைப் பதிவு எழுதுவதால் பொருளாதாரப் பயன்கள் ஏதுமில்லை என்பது அனைவரும் அறிந்ததே. பின் ஏன் எழுதிக் கொண்டிருக்கிறோம்.
  1.  நம்மிடம் இருக்கும் சின்ன எழுத்துத் திறமைக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது இணையம். கொஞ்சம் பேராவது நமது படைப்புகளை ரசிக்கிறார்கள். ஒரு அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. 
  2. பல நல்ல நட்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. 
  3. திறமையாளர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 
  4. உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் உள்ளவர்களும் நம்மை அறிந்து கொள்ள வாய்ப்பை அமைத்துக் கொடுத்திருக்கிறது
  5. நமது திறனை வளர்த்துக் கொள்ளும் மேடையாக வலைப்பூக்கள் அமைகின்றன. 
  6. உடனடியாக நமது படைப்பின் கருத்துக்களை அறிந்து கொள்ள முடிகிறது 
  7. எதிர்வினைகளை கையாள கற்றுக் கொடுக்கிறது 
  8. நம்மை புதுப்பித்துக்  கொள்ளவும் மேம்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது
  9. பலரையும் ஊக்கிவிக்க முடிகிறது
  10. நமது எண்ணங்களுக்கு ஒரு வடிகாலாக அமைகிறது.
  11. பத்திரிகையில் எழுதியது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது 
  12. பிரபல பத்திரிகைகளின் பார்வையில் படுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது 
  13. போட்டிகளில் கலந்து கொள்ளவும் வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கிறது.
   வலை உலகம் பல பாடங்களை கற்றுத்தரும் ஆசிரியராக இருக்கிறது. தொடக்கத்தில் எழுதியதற்கும் இப்போது எழுதுவதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடிகிறது.

  நாம் அறியாமல் நம்மை பிரபலங்கள் உட்பட பலரும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது என் அனுபவத்தின் மூலம் நான் உணர்ந்த பாடம்.   தொடர்ந்து வித்தியாசமாகவும் நல்ல முறையிலும்  எழுதி வந்தால் ஏதேனும் ஒரு வகையில் கவன ஈர்ப்பைப் பெற முடியும்   என்றே நம்புகிறேன். 
ஆதரவு அளித்து வரும் அத்துணை பேருக்கும் என் மனமார்ந்த நன்றி

*********************************************************************************