என்னை கவனிப்பவர்கள்

புதன், 4 ஜூன், 2014

பெட்டிக்கடை-சூப்பர் சிங்கரில் சித்ராவின் கோபம்+புதிர்+தெலுங்கானா .


பெட்டிக்கடை 7

குட்டியா ஈசியா ஒரு புதிர் போடுவோமா ? 
புதிர் வேண்டாம்னு நினைத்தால் அடுத்ததற்கு தாவலாம்
  பள்ளி வயசுல இருக்கிற உங்க  தம்பி தங்கை, பிள்ளைகள் கிட்ட இந்த கேள்விய கேளுங்க .   பெருக்கினாலும் கூட்டினாலும் ஒரே விடை .ரெண்டு எண்களை கண்டு பிடிக்க முடியுமா? .
உடனே அவங்க சொலுவாங்க இது என்ன ஜுஜுபி . 2 + 2= 4  2 x 2 =4ன்னு  சொல்வாங்க 
உடனே நீங்க சொல்லணும் ரெண்டும் ஒரே எண்ணா இருக்கக் கூடாதுன்னு  ஒரு கண்டிஷன் போடுங்க. அப்படி இருந்தால் அந்த மாதிரி எத்தனை எண்கள் இருக்கும்
வேணும்னா ரெண்டு க்ளூ குடுங்க.
1.ரெண்டும் ஒரே எண்ணா  இருக்க வேண்டிய அவசியம் இல்ல 
2. ரெண்டு எண்களும் முழு எண்களாகத்தான்  இருக்க வேண்டிய காட்டாயம் இல்ல.
நீங்க கண்டு பிடிச்சிட்டீங்களா?  ஒரே ஒரு நிபந்தனை 
இணையத்தில தேடி பதில் சொல்லக் கூடாது.

( விடை விரைவில்)

******************************************************************************************
தமிழ்மணம் 
    சமீப காலமாக தமிழ்மணம் திரட்டி புதிய பதிவுகளை இணைக்காதது குறித்து பலரும் எழுதி விட்டனர் . நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ்மணம் பதிவுகளை இணைத்துள்ளது . திரட்டிகளால் பதிவர்களுக்கு நன்மையா அல்லது பதிவர்களால் திரட்டிகளுக்கு நன்மையா என்றால் இரண்டுக்கும் ஆம் என்று சொல்ல வேண்டும். இந்த மாதத்தில் இணைக்கப் பட்ட ஐந்து வலைப்பூக்களே தமிழ்மணத்தின் சேர்க்கை அனுமதிக்கு காத்திருக்கின்றன. முன்பு தமிழ் மணத்தில் நட்சத்திரப் பதிவர் என்று ஒருபதிவரை தேர்ந்தெடுத்து அவரது பதிவுகளை ஒருவார காலத்திற்கு நட்சத்திரப் பதிவர் என்ற தலைப்பில் முகப்பிலேயே தொடர்ந்து தெரியும்படி அமைத்திருப்பார்கள். இப்போது நட்சத்திரப்பதிவர் பகுதி இடம் பெறுவதில்லை. 2012  இல் நானும் நட்சத்திரப் பதிவராக இருந்தேன். அப்போது பதிவு எழுதிய ஒரு வார காலத்தில் எனது வலைப்பூவை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்தது என்பது உண்மை. அப்போது எழுதிய பதிவுகளில் ஒன்றான நான் கழுதை என்ற கவிதை நல்ல வரவேற்பைப் பெற்றது பதிவை நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள்

தற்போது தமிழ் மணத்தில் தினமும் சராசரி பதிவுகளின் எண்ணிக்கை 127 ஆக உள்ளது.சில மாதங்களுக்கு  முன்பு 170  ஆக இருந்தது. பதிவு எழுதுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இதனை பலரும் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். அல்லது தமிழ் மணத்தில் இணைப்பவர்கள் எண்ணிகை குறைந்திருக்க வேண்டும்.
நிறையப் பேர் நல்ல பதிவுகள் எழுத முன்வரவேண்டும் . வலைப்பூவில் ஏற்பட்டுள்ள தொய்வு நீங்க வேண்டும்.

****************************************************************************************
தெலுங்கானா
அரசியலில் மேலோட்டமான ஆர்வம் மட்டுமே உடையவன். இருந்தாலும் தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதை என் மனது ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்காக பல போராட்டங்களை நடத்தி ஆந்திராவையே ஸ்தம்பிக்க வைத்து தெலுங்கானாவை உருவாக்கி விட்டார் சந்திர சேகர ராவ். தெலுங்கானா என்ற புதிய மாநிலத்தின் தேவைக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையான  காரணம் என்ன என்பது என் மரமண்டைக்கு இப்போதுதான் புரிந்தது. நீங்களும் என்னைப் போல்தானா? இந்த செய்தியப் பாருங்க

*******************************************************************
மனம் கவர்ந்த கவிதை 

எத்தனையோ கதை கவிதை கட்டுரை படிக்கிறோம். ஆனால் அவற்றில் சில மனதில் பச்சென்று இடம் பிடித்துக் கொள்கிறது. அவை பெரும்பாலும்  பெரும்பாலும் அந்தப் படைப்புகள் அனைத்தும் பிரபலங்கள் சொல்லியதாக இருக்கும்.
ஆனால் சமீபத்தில் மகிழ் நிறை என்ற தளத்தில் எழுதி வரும் சகோதரி மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்களின் ஒரு கவிதை அத்தகைய உணர்வை ஏற்படுத்தியது. மூன்றே பத்திகளில் கவிதை முடிந்து போனாலும் நம்பிக்கையைத் தூவி  மெஸ்மரைஸ் செய்து போனது, அந்தக் கவிதையில் வரும் வீழ்ந்தவனின் புன்னகை வீழ்த்தியவனை நிலைகுலைக்கும் . என்ற வரிகள் பல்வேறு எண்ண உணர்வுகளை ஏற்படுத்தியது. இந்த வரிகள்  ஒரு  பேரறிஞனின் பொன்மொழிபோல அமைந்திருக்கிறது.
வாழ்த்துக்கள் சகோதரி  
முழுக் கவிதை கீழே !

வாழ்க்கையோடு ஒரு உடன்படிக்கை!


இரவின் இருள்நிறக்கோப்பையில்
இசை நிரப்பி
புத்தகம் நுகர்ந்து, போதையில்
தலை சுற்ற
எத்தனை துயரும், வலியும்
எதிர்க்கொள்வேன்
வாழ்க்கையே வா விளையாடிப்பார்க்கலாம் !!
உன் விஷமங்கள் எல்லாம்
ஒரு மந்திரச்சொடுக்கில் மாற்றிவிடும்
வித்தை அறிந்தவள் நான்
கரைபொருளாகவும், கரைப்பானாகவும்
கண்கட்டு வித்தை காட்டும் இசைக்கு
காது கொடுத்துப்பார்
இறந்திறந்து மீளும் வழியறிவாய்
என்னை போலவே!!

வீழ்ந்தவனின் புன்னகை
வீழ்த்தியவனை நிலைகுலைக்கும் -என்ற
புத்தியை புத்தகச்சங்கு
 புகட்டியிருக்கிறது எனக்கு
நான் நீட்டிய நட்புக்கரத்தை
தவறாது பற்றிக்கொள் வாழ்க்கையை 
நட்புக்கு பரிசாய் தருகிறேன்
இசை சரிகை சுற்றிய இனிப்பு புத்தகம் ஒன்று!!



நன்றி: மைதிலி கஸ்தூரி ரங்கன் 

*****************************************************************************
 இவரா பார்வையற்றவர்?
   தினந்தோறும் மின்சார ரயிலில் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. விதம் விதமான மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பை அது தந்திருக்கிறது. எழும்பூர் ரயில் நிலையத்தில் யாரோ பைபிள் வாசங்களை கதைகளை  வாசிக்கும் குரல் கேட்டது. ஏற்ற இறக்கத்துடன் படித்துக் கொண்டிருந்தார் ஒருவர்.  அவ்வழியே செல்லும் அனைவரும் ஒரு வினாடியாவது  அவரை நோக்கி பார்வையை செலுத்தி விட்டு சென்றனர். அப்படிப் பார்க்கும்போதுதான் தெரிந்தது அவர் பார்வை அற்றவர் என்று. ப்ரெயில் முறையில் புத்தகத்தில் உள்ளதை அவர் வேகமாக வாசித்தது ஆச்சர்யத்தை அளித்தது. ப்ரெயில் புள்ளிகளை தடவி உணர்ந்து  அவர் சரளமாக வாசித்த விதம் நம்மை வெட்கப் பட வைத்தது.   உண்மையில் மாற்றுத் திறனாளி என்பதை நிரூபித்து விட்டார்  அவர் . 
அரசாங்கம் இவர்களுக்கு ஏற்ற வேலை கொடுக்கலாம். நிச்சயமாக சாதாரண மனிதர்களை விட சிறப்பாக  இவர்களால் செய்ய முடியும்.


**************************************
சித்ராவின் கோபம் 
 

ஐபிஎல் போலவே இப்போதெல்லாம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மீதான ஈர்ப்பு குறைந்து விட்டது. எப்போதாவதுதான் பார்ப்பது உண்டு.

    சில நாட்களுக்கு முன்பு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய  ஜெஸ்ஸிகா என்ற பெண் தமிழ் தெரியாது என்று சொல்ல நடுவராக இருந்த சித்ரா அவளைப் பார்த்து கேட்டார் உன் தாய் மொழி என்ன என்று. தமிழ் என்று சொன்னதும் சித்ரா,"தாய்மொழி பேச தெரியாதுன்னு சொல்றது அசிங்கமா இல்லையா என்று கோபத்துடன் கேட்டார். எப்போதும் மென்மையாக பேசும் சித்ரா எதிர்பாரா விதமாக சற்று கோபமாக பேசியது ஆச்சர்யமாக இருந்து. யாரும் சித்ரா அப்படிக் கேட்பார் என்று எதிர்பார்க்கவில்லை ஆனால் அந்த கோபத்தில் நியாயம் இருந்தது. வெளியில் நண்பர்களுடன் மற்றவர்களுடன் எந்த மொழியில் பேசினாலும் வீட்டில் தாய்மொழி பேசக் கூடாதா  என்று நறுக்கென்று கேட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.  பதில் சொல்ல முடியாமல் பரிதாபமாக விழித்தாள்  அந்த சிறுமி.  சிறுமியின் பெற்றோர் உண்மையில் வெட்கப்பட வேண்டும் . ஜெசிகாவை கண்டிப்பதற்கு பதிலாக பெற்றோரை அழைத்து கண்டித்திருக்கலாம். 
தமிழ் பேசத் தெரியாதவர்களை தேர்ந்தெடுப்பதை விஜய் டிவி தவிர்க்க வேண்டும் 

***************************************************************************************

நினைவிற்கு: இது எனது வழக்கமான பெட்டிக்கடைதான் தலைப்பில்  பெட்டிக்கடையை சேர்க்காமல் வெளியிட்டுவிட்டேன். சரி செய்வதற்குள்  கரண்ட் போய் விட்டது. காலையில்தான் திருத்தம் செய்தேன்.


*************************************************************************************

சரியான விடையை முதலில் சொன்ன ராபின்சன் எட்வர்டுக்கு பாராட்டுக்கள் 

*************************************************************************************


முந்தைய பெட்டிகடை பதிவுகள் 
பெட்டிக்கடை - 1-திருக்குறளில் இலக்கணப் பிழையா? 
பெட்டிக் கடை-2- ஆடி(யோ) மாதம்,வளர்பிறையும் தேய்பிறையும்  

65 கருத்துகள்:

  1. வணக்கம்
    முரளி (அண்ணா)

    ஒரே பதிவில் பல தலைப்புக்களில் கருத்துச் சொல்லியுள்ளீர்கள் எல்லாக கருத்துக்களும் நன்றாக உள்ளது
    கவிதையின் வரிகளை ரசித்து ரசித்துப் படித்தேன்....வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. முரளி அய்யா... கலக்கிட்டீங்க...
    நாலஞ்சு செய்திகளை அருமையாகக் கலந்துதந்து கலக்கிட்டீங்கன்னேன்..
    (புதிய பதிவர்களே... பார்த்துக்கோங்க... இணைய வகுப்பில் சரியான நேரம் தந்திருந்தால் எதை எப்படி எழுதுவதுன்னும் சொன்னமாதிரி இருக்குல்ல..?)
    அருமை அய்யா சரி ஒவ்வொன்னாப் பார்ப்போம் -
    1.கணக்கு -நமக்குச் சம்பந்தமில்லாதது (பாரதியிடம் நமக்குப் பற்றுவர முதல்காரணமே இதுதானே? அவனுக்கும் கணக்குப் பிடிக்காதாமே?)
    2.தமிழ்மணம் - இதுதான் நமக்கும் புரியாத புதிர். சிலநேரம் மொக்கைகள் கூட முதல்பத்தில் வரும்போது எரிச்சலாவதும், நமது பதிவை அதேமாதிரி பார்க்கும்போது மகிழ்ச்சியாவதும் எப்படி என்று புரியவே இல்லை அ்யயா..
    3.தெலுங்கானா - படத்திலேயே விமர்சனம் செய்வது எப்படி என்பதற்குச் ச்ரியான உதாரணம் கட்சியைவிட்டுப் போன நடிகையைச் சேர்ததுப் போட்டதிலிருந்தே அந்தக் கட்சியின் லட்சணம் தெரியுது.. தெலுங்கானா.. பாவம் பாலாஜி!
    4.பார்வையற்றவரையும் பார்த்த பார்வை நெகிழவைத்தது..
    5.சித்ரா அதிகம் பேசவும் மாட்டார். பேசினால் இப்படித்தான். நம் டமில் மம்மிகளும் டாடிகளும் திருந்துகிறார்களோ இல்லையோ வருந்தும்படி கொடுத்த அடி சரிதான். சின்னக்குயில் தன் சோகம் மறந்து சிரிப்பதைப் பார்க்க மகிழ்ச்சி, கோவப்படடதைப் பார்க்கப் பெருமையாக இருந்தது.. சித்ரா மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொணடதால்தான் இவ்வளவு தெளிவாகத் தாய்மொழிப்பற்றாளராக இருக்கிறார்.
    மொத்தத்தில் கட்லெட்-காக்டெயில்-கலக்கல் ரொம்ப ரொம்ப அருமை அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா இது எனது வழக்கமான பெட்டிக்கடைதான். தலைப்பிட மறந்துவிட்டேன்.

      நீக்கு
  4. என் தங்கையின் கவிதையை நான் புகழக் கூடாது.. நீங்கள் சொன்னதை நான் அப்படியே 200விழுக்காடு வழிமொழிகிறேன் என்பதால் அதை மட்டும் பின்னூட்டமிடவில்லை.

    பதிலளிநீக்கு
  5. முரளீ,

    //இருந்தாலும் தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதை என் மனது ஏற்றுக் கொள்ளவில்லை. //

    ஏன்? பிரிப்பதால் உங்களூக்கு எதுவும் இழப்பா?

    # அரசியல் என்றாலே வாரிசு தானே? ராவ் காரு அப்படி செய்யாம இருந்தால் தான் ஆச்சர்யப்படணும் அவ்வ்!

    ------------

    பிரெயில் படிக்க தெரிந்திருப்பது " பார்வையற்றோரில் கல்வி" அறிவு பெற்றதற்கு சமம், அப்படி இருந்தும் ,ரயில்வே நிலையத்தில் பிச்சை எடுக்கும் நிலை தான் என்றால், இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எல்லாம் மக்களுக்கு சேவை செய்துக்கொண்டிருப்பதாக சொல்கிறார்களே ,அதெல்லாம் யாருக்கு போய் சேருகிறது?

    #//ஐபிஎல் போலவே இப்போதெல்லாம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மீதான ஈர்ப்பு குறைந்து விட்டது. எப்போதாவதுதான் பார்ப்பது உண்டு.//

    ஈர்ப்பு குறைஞ்சாலும் பதிவு எழுத என்றே பார்க்கிறிங்க போல :-))

    தமிழ் தெரியாது என சொல்வது ஃபேஷன் ஆகிடுச்சு ,அப்படி சொன்னால் தமிழ் தெரியாமலே நல்லா பாடுதுனு சொல்வாங்கனு நினைச்சு சொல்லி இருக்கும் பாப்பா, ஆனால் "Backfire" ஆகிடுச்சு அவ்வ்.

    # தமிழ் தெரிஞ்சவங்க தான் தமிழில் பாடனும் என்றால் மலையாள சித்ரா எல்லாம் தமிழில் பாடியிருக்க முடியாது, அவங்க இன்னும் மலையாளத்தில் தமிழ்ப்பாடலை எழுதி வச்சுத்தான் பாடுறாங்க :-))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். தெலுங்கானா பிரிச்சதும் ஆந்திரா பக்கம் போக இருந்த டூர் தெலுங்கானா பிரச்சனையால ரேசர்வே பண்ண டிக்கெட்டை கேன்சல் பண்ண வேண்டியதா போயிடுச்சு. ஹிஹி

      ****************
      தொண்டு நிறுவனங்களினால் உண்மையில் நன்மை இவர்களைப் போன்றவர்களுக்கு அல்ல. அவர்கள் பிழைப்புக்கு வழி அவ்வளவுதான். சுனாமியை வைத்து செம்மஞ்சேரி பகுதியில் இன்னும் பல தொண்டு நிறுவனங்கள் பிழைத்துக் கொண்டிருக்கின்றன.

      *********************
      தமிழ் தெரிஞ்சவங்க பாடணும்னு சொல்லலை. தமிழ்நிகழ்ச்சியில தாய் மொழி தமிழாக இருந்தும் பேசத் தெரியலையே என்பதுதான் சித்ராவின் எண்ணம்.தாய் மொழிகூட பேசத் தெரியவில்லையே என்பதைத்தான் சுட்டிக் காட்டினார் . சித்ரா வக்காலத்து வாங்கியது தமிழுக்காக அல்ல. அவரவர் தாய் மொழிக்காக.
      இதே நிகழ்ச்சியில் வேறு மொழிகளை தாய் மொழியாக உடையவாராலும் பாடுகிறார்கள்.அவர்களை சித்ரா கேட்கவில்லை.

      //தமிழ் தெரிஞ்சவங்க தான் தமிழில் பாடனும் என்றால் மலையாள சித்ரா எல்லாம் தமிழில் பாடியிருக்க முடியாது, அவங்க இன்னும் மலையாளத்தில் தமிழ்ப்பாடலை எழுதி வச்சுத்தான் பாடுறாங்க :-))//
      எஸ்பிபி கூட அப்படித்தான் தெலுங்கில் எழுதிவைத்துப் பாடுவார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அவங்க யாரும் தன்னுடைய தாய் மொழி பேசத் தெரியாதுன்னு சொல்லலை. எழுதத் தெரியலன்னாலும் பரவாயில்லை.

      நீக்கு
  6. ஆம் வாரிசு அரசியல் இனிப் புதுவடிவம் எடுக்குமோ என்னவோ. திருவாளர் சந்திரசேகர் செய்வதைப் பார்த்தால் அதுவே தோன்றுகிறது. பார்வையற்றவர் பைபிள் வாசிப்பது இனிமை..என்ன கடமை என்று இதை எடுத்துக் கொண்டிருக்கிறாரோ. வாழ்ட்டும் அவர். பாடகி சித்ராவின் கோபம் நல்லதுதான். சொன்னபடி பெற்றோரைக் கேட்டிருக்க வேண்டும்.பாவம் சிறுமி என்ன செய்வாள். மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  7. ஆஹா.. தங்கை மைதிலியின் கவிதையை படிக்காம மிஸ் பண்ணிட்டேன் இங்க பார்த்ததுல சந்தோஷம், சூப்பரு. சித்ராவுக்கு வந்த கோபம் நியாயமானதே. ப்ரெய்லியில் பைபிள் படித்த பார்வையற்றவர் தந்தார் பிரமிப்பு. நம்மூரு அரசியல்வாதிகள் மாதிரி ஆந்திராவுலயும் குடும்பத்துக்குப் பதவி தந்திருக்காங்க போலருக்கு....

    பதிலளிநீக்கு
  8. மாற்றுத் திறனாளி - இவர் தான் திறமைசாலி...!

    சகோதரியின் கவிதையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    // பெற்றோரை அழைத்து கண்டித்திருக்கலாம்... // அப்படி சொல்லுங்க...!

    பதிலளிநீக்கு
  9. வாரிசு அரசியல் பற்றிப் படித்தபோது, இவர்கள் எல்லாம் மாறவே மாட்டார்களா என்ற ஆதங்கம்தான் வருகிறது. விஜயசாந்தி பற்றி சமீபத்தில்தான் படித்தேன். பார்வை அற்றவர் ஆச்சர்யப்பட வைக்கிறார். கவிதை தூள்! மொத்தத்தில் பல்சுவையில் படைப்பு சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  10. சித்ராவின் கோவம் நியாயமானதுதான். ஆனா, கோவத்தை வெளிப்படுத்திய இடம்தான் தவறு.

    பதிலளிநீக்கு
  11. சிறந்த அலசல்
    "தமிழ் மணத்தில் இணைப்பவர்கள் எண்ணிகை குறைந்திருக்க வேண்டும்.
    நிறையப் பேர் நல்ல பதிவுகள் எழுத முன்வரவேண்டும் . வலைப்பூவில் ஏற்பட்டுள்ள தொய்வு நீங்க வேண்டும்.
    " என்ற வழிகாட்டலை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. வீட்டிலும் கூட ஆங்கிலத்தில் உரையாடுவது இப்போதெல்லாம் ஃபேஷனாகிவிட்டது. ஆகவேதான் குழந்தைகளுக்கு தமிழ் பேச வருவதில்லை. ஒருவேளை அவருடைய பெற்றோர் வெவ்வேறு மொழி பேசுபவர்களாக இருக்கலாம். அந்த சூழலிலும் வீட்டிலும் ஆங்கிலத்தில் பேசுவதைத் தவிர வேறு வழி இருக்காது. இசை நிகழ்ச்சிகளில் மொழி ஒரு தடையே இல்லை. பாடத் தெரிந்தால் போதும். இதற்குப் போய் சித்ரா இப்படி கோபப்பட்டிருக்க தேவையில்லை. அவருடைய தமிழே அத்தனை சுத்தமாக இருக்காது. தமிழை தாய் மொழியாக கொண்டிராத ஒருவர் ஒரு தமிழ் தொலைக்காட்சியில் நடக்கும் தமிழ் நிகழ்ச்சியில் நடுவராக பங்குபெறும்போது தமிழ் பேசத் தெரியாத ஒருவர் பங்கெடுப்பது தவறா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //// ஒருவேளை அவருடைய பெற்றோர் வெவ்வேறு மொழி பேசுபவர்களாக இருக்கலாம். அந்த சூழலிலும் வீட்டிலும் ஆங்கிலத்தில் பேசுவதைத் தவிர வேறு வழி இருக்காது. ///

      இது உங்கள் வீட்டு பேர குழந்தைகளின் நிலையா ? அப்போ தாய் மொழி இங்கிலீஷ் எனலாம். எதுக்கு தமிழ் என்று சொல்லணும் ? தாய் மொழி தமிழ் என்று சொன்னதால் தான் அவர் கண்டித்தார்.

      //// இசை நிகழ்ச்சிகளில் மொழி ஒரு தடையே இல்லை. பாடத் தெரிந்தால் போதும். இதற்குப் போய் சித்ரா இப்படி கோபப்பட்டிருக்க தேவையில்லை////

      அவர் பாடத் தெரியாது என்று கோபப் பட வில்லையே? தாய் மொழி தெரியாமல் இருப்பது தவறு என்று நியாயமாக தானே சொன்னார்.
      நீங்களும் கேட்க மாட்டீங்க, யாரும் கேட்டாலும் குற்றம் சொல்வீங்க

      //// அவருடைய தமிழே அத்தனை சுத்தமாக இருக்காது ////

      சித்ராவின் தாய் மொழி தமிழ் இல்லையே .... ஆனால் அவர் பாடும் போது தெளிவாகப் பாடக் கூடியவர். தமிழை கடித்து துப்ப மாட்டார்.

      நீக்கு
  13. முரளி சார் எனக்கு ஐ.பி.எல் ஆரம்பத்தில் இருந்தே ஈர்ப்பு இல்லை. சூப்பர் சிங்கர் வீட்டில் பார்க்கும் போது தேமே என பார்ப்பேன் ( எனது அலுவலக நேரம் எந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்பதற்குமே ஒத்துவராது என்பது வேறு விசயம்)

    தமிழ்மணம் ஏதோ கடமைக்கு செயல்படுகிறது என நினைகிறேன். சரி அளவிலாவது செயல்படுகிறதே மகிழ்ச்சிதான்...

    தமிழ் அல்லது மற்ற மொழிகள் just a one another communication bridge என்ற அளவில் மட்டுமே பார்க்கப்படுவதால் கிடைக்கும் பலன்... தாய்மொழி பேச புரிய ஓரளவு படிக்க என்றளவில் போதுமானது என திருப்திபட்டுக்கொள்ளும் நண்பர்களுடன் பணிபுரிகிறேன்

    பதிலளிநீக்கு
  14. இதில் தமிழ் மணத் தகவலும், சித்திரா கோபம். மைதிலி கவிதையும் மிக மிக ரசித்தேன்.
    அனைவருக்கும் வாழ்த்துகள் மைதிலிக்கும்.
    நேரப் பிரகாரம் என் வலைக்கும் வருகை தரலாம்.
    நல் வரவு.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  15. புதிரைக் கண்டுபிடிக்க இந்த வயதில் மண்டையைப் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம் என்று நீங்கள் வெளியிட இருக்கும் விடைக்குக் காத்திருக்கிறேன்.
    தெலிங்கானா முதல்வருடன் இப்போது காங்கிரசில் இருக்கும் திருமதி விஜயசாந்தி புகைப் படத்தை வெளியுட்டுள்ளீர்களே! முதல்வரோடு அவரது மகனும் மருமகனும் உள்ள புகைப்படம் கிடைக்கவில்லையா?
    பதிவை இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  16. முரளி,

    //ஒரே ஒரு நிபந்தனை
    இணையத்தில தேடி பதில் சொல்லக் கூடாது.//

    புதிர்களை சொந்தமா உருவாக்கிட்டு இப்படி நிபந்தனைப்போடவும் :-))

    இதுல வேற இன்னும் யாரும் விடை சொல்லவில்லைனு "ஸ்கிராலிங் டெக்ஸ்ட்" அவ்வ்!

    நான் ஸ்கூல் படிக்கும் போது இது போல புதிர்கள் புத்தகங்கள் நிறைய வாங்கிப்படிப்பதுண்டு ,அதுல அப்பவே இந்த புதிர் இருந்தது , நீங்க இன்னும் அந்த புத்தகங்கள் எல்லாம் வச்சிருக்கிங்கனு நினைக்கிறென் அவ்வ்

    மின்னல்வேக கணிதம்னு ஒரு புக்கு 5 ரூபா தான் ,பேருலாம் நியாபகம் இருக்கு ,அதுல போட்டிருந்தது தான் மறந்து போச்சு அவ்வ்.

    நம்ம கிட்டேவும் இன்னும் அது போல புக்குலாம் லாஃப்ட்ல கிடக்குது ,தூசி தட்டி எடுத்தா நிறய பேருக்கு தும்மல வர வச்சிடலாம் :-))

    பள்ளிக்கூடத்துல சொல்ல வேன்டியதெல்லாம் பதிவுல சொல்லிட்டு இருக்காரேனு பதில் சொல்லலை , நீங்களெ ஆசைப்பட்டு விடை எங்கேனு ஏங்குவதால் சொல்லி வைக்குறேன்,

    9/3 + 9/6= 4.5

    9/3 X 9/6= 4.5

    அடியில் வரும் எண்களின் (denominator)கூட்டுத்தொகை மேல் வரும் எண்ணுக்கு(numerator) சமமாக வருவது போல பின்ன எண்கள் அமைத்துக்கொண்டால் போதும்.

    உ.ம்:

    13/6,13/7

    13/5 ,13/8

    13/4,13/9

    இப்படி எந்த பின்ன எண்ணின் காம்பினேஷனையும் கூட்டினாலும்,பெருக்கினால் ஒன்னா தான் வரும் ஹி...ஹி ஏன்னா துடைப்பத்தால கூட்டுறது ,பெருக்கிறது என சொன்னால் ஒன்னு தானே.

    கூகிளாண்டவர் இருக்க ஜயமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவ்வளோ லேட்டா வரும்போதே கூகுள் ஆண்டவரிடம் தஞ்சம் அடைந்திருப்பீர்கள் என்று தெரியும் . தெரியலன்னா ஒத்துக்கணும்.
      நீங்களா கண்டு புடிச்சி இருந்தா 9/3, 9/6 ன்னு சொல்லாம 3,3/2 ன்னுசொல்லி இருப்பீங்க
      கொஞ்சமாவது ட்ரை பண்ணி பாத்துட்டு முடியலன்னாதான் .
      கூகுளாரை துணைக்கு அழைக்கணும்.

      இந்த கணக்கை சொந்தமா உருவாக்கலதான் ஆனா சொந்தமாத்தான் சால்வ் பண்ணேன். 2003 ல என்னை கேட்டப்ப போட்டுப் பாத்துத்தான் பதில் சொன்னேன். நான் மட்டும்தான் சொன்னேன். அதுக்கு முன்னாடி அதப் பத்தி கேள்விப் பட்டது கூட இல்லை.


      நீக்கு
    2. //புதிர்களை சொந்தமா உருவாக்கிட்டு இப்படி நிபந்தனைப்போடவும்//
      நானே உருவாகியது என்றால் கூகளில் தேடக் கூடாது என்ற நிபந்தனை விதிக்க தேவையே இல்லையே

      நீக்கு
    3. நானே உருவாக்கனும்னுசொல்றீன்கள் உருவாக்கிட்டா போச்சு.
      கழிச்சாலும் வகுத்தாலும் ஒரே விடை வர்றே ரெண்டு எண்களை சொல்லுங்க
      4, 2 ம் தவிர
      இப்போ கண்டிஷனை ஞாபகம் வச்சுக்கோங்க

      நீக்கு
    4. முரளீ,

      //கொஞ்சமாவது ட்ரை பண்ணி பாத்துட்டு முடியலன்னாதான் .
      கூகுளாரை துணைக்கு அழைக்கணும்.//

      படிக்கிற காலத்துல இதெல்லாம் கேட்கப்பட்டிருந்தால் ஓ.கே இப்போலாம் பேப்பர்,பேனா எடுத்து கணக்குப்போட சொன்னால் எப்பூடி?

      # //நானே உருவாகியது என்றால் கூகளில் தேடக் கூடாது என்ற நிபந்தனை விதிக்க தேவையே இல்லையே //

      கூகிளையே புரிஞ்சிக்கலையே, நாமளே சொந்தமா "ரூம்ப்" போட்டு உருவாக்கினதுனு நாம தான் நினைச்சிட்டிருப்போம் ,கூகிள் செய்தால் நமக்கு முன்னரே தாத்தாக்கள் அதை பேசிட்டு போயிருப்பது தெரிய வரும், குறைந்தப்பட்சம் அதை ஒத்த மாதிரியாவது கிடைச்சிடும் , அப்ரகடபரா கூகிளாண்டவரேனு சொல்லிப்பாருங்க தெரியும் :-))

      #//நானே உருவாக்கனும்னுசொல்றீன்கள் உருவாக்கிட்டா போச்சு.
      கழிச்சாலும் வகுத்தாலும் ஒரே விடை வர்றே ரெண்டு எண்களை சொல்லுங்க
      4, 2 ம் தவிர
      இப்போ கண்டிஷனை ஞாபகம் வச்சுக்கோங்க//

      கிழிஞ்சுது லம்பாடி லுங்கி, பதிலுக்கு இதை உங்கக்கிட்டே கேட்கலாம்னு நினைச்சு வேணாம் கடுப்பாகிடுவார்னு விட்டது, நீங்களே கண்டுப்புடிச்சதுனு சொல்லிக்கிறிங்களே ,இதெல்லாம் நாமலாம் பொறக்கும் முன்னரே பொறந்த புதிர்கள் அவ்வ்!

      புதுசா கண்டுப்புடிங்க நோபெல் பரிசு கிடைச்சாலும் கிடைக்கும்!!!

      நீக்கு
    5. //.இதெல்லாம் நாமலாம் பொறக்கும் முன்னரே பொறந்த புதிர்கள் அவ்வ்!//
      உண்மைதான்.
      ஒரு பெரிய மாய சதுரம் உருவாக்கனும்னு நினச்சு கஷ்டப்பட்டு 300x300 மாய சதுரம் உருவாக்கினேன் அதையே பெருமையா நினைச்சேன். யாரோ ஒரு அப்பா டக்கர். 3000x3000 .மேல உருவாக்கி வச்சுருக்காராம்.எதுக்கு இந்த வெட்டி வேலைன்னு அப்பறம்தான் தெரிஞ்சுது. எல்லாம் ஒரு அல்ப சந்தோஷம்தான்,
      தகவலுக்கு நன்றி

      நீக்கு
    6. Hi Murali,

      Thank you for this post. Very interesting. Please keep posting some quiz like this.

           A / B    = A - B
           A         = (A - B) * B
           A         = AB - B*B
           A - AB  = - B*B
           A(1 - B) = - B*B

            A = (- B*B) / (1 - B)     // This is the equation

      Now, substitute any number for "B", you will get the value for "A".

      Am I correct?

      நீக்கு
    7. You are correct. You have given the perfect solution. Very few, like you use algebra to find the answers.
      congratulation
      Thank you

      நீக்கு
    8. This simplified equation is very nice and easy to handle.
      I didn't think of it.
      Thank you.

      நீக்கு
  17. மிக மிக மதிக்கத்தக்கவர் பாடகி சித்ரா அவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாய் மொழி மலையாளம் என்றாலும் தெளிவான உச்சரிப்பும் குரல் இனிமையும் கொண்டவர் நன்றி ஜோதிஜி சார்

      நீக்கு
  18. சித்ராவின் கோபம் மிகவும் நியாயமானதே! தமிழ் நாட்டில் பல குழந்தைகள் தமிழ் பேசுவதில்லை தாய்மொழி தமிழாக இருந்தாலும்....பெற்றொர்களே தங்கள் குழந்தைகள் தமிழ் பேசுவதைத் தரக் குறைவாக நினைக்கும் போது.......என்ன சொலவது?!! மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது நம் தமிழ் நாட்டில் இது சற்று அதிகம்தான்...நகரங்களில்....

    தமிழ் மணம் ...ஒரே ஒரு பயன் ....நமது பதிவுகளை உலகம் வாசிக்கின்றது எனப்து மட்டுமே! தாங்கள் சொல்லியிருப்பது போல வலைபூ தொய்ந்து விடக்கூடாது...இன்னும் பலர் எழுத வேண்டும்...

    தெலுங்கானா புரிந்தது...தங்களைப் போலவே ..இப்போதுதான்...

    பார்வையற்றவர் பைபிள் படிப்பது.....அதுவும் வேகமாக.....ப்ரெய்லி முறையில்...கண்டுகொள்ளப்படவேண்டியவர்!!

    பதிலளிநீக்கு
  19. இலந்தை வடை, பாக்கெட் நாவல் போன்ற க்யூட்டான பொருட்கள் பெட்டிகடையில் தானே கிடைக்கும். அது போலவே short and sweet விசயங்களுக்கு நடுவில் என் கவிதைக்கும் இடம் தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா. பிள்ளைகளுக்கு புதிய கல்வியாண்டு தொடங்கி இருப்பதால் கொஞ்சம் வேலை பளு. தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும். என்னை தங்கையாகவே ஏற்று வாஞ்சையோடு மகிழ்ந்திருக்கும் அண்ணன்களுக்கு மிக்க நன்றி. இனி நாங்களும் பெட்டிகடைக்கு வரமுடியுமே:)) யார் கேட்டாங்கன்னு விவாதிக்கிரத்தை, என்ன கேட்டாங்கன்னு யோசிச்சா மெல்ல தமிழ் இனி வாழும் இல்லையா அண்ணா! கடையில் எல்லா சரக்கும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  20. பெட்டிகடையில் உள்ள சரக்குகள் புதிதாகவும் தரமாகவும் இரூகிறது... மைதிலி கஸ்தூரி ரங்கன் எழுதிய கவிதையை படித்து அய்யோ கவிதை போட்டு கொல்லுறாங்களே என்று சொல்லிவிட்டேன் உங்களை மாதிரி உள்ள நல் ஆசிரியர் விளக்கம் கொடுத்த பின் தானே என் மரமண்டைக்கு ஏறுது... இனிமே கவிதை எழுதுறவங்க அதுக்கான விளக்கமும் அதன் கிழே போட வேண்டும் அப்பதான் என் மாதிரி உள்ள மரமண்டைகளுக்கு புரியும்

    பதிலளிநீக்கு
  21. //மொத்தத்தில் கட்லெட்-காக்டெயில்-கலக்கல் ரொம்ப ரொம்ப அருமை அய்யா.//
    நா.முத்துநிலவன்

    //கடையில் எல்லா சரக்கும் சூப்பர்.//
    மைதிலி கஸ்தூரி ரங்கன்


    சரக்கு பத்தி பேசுவது மதுரைத்தமிழன் மட்டும்தான் என்று இருந்த நிலமை மாறி இங்க பாருங்க அண்ணனும் தங்கையும் சரக்கை பாராட்டி பேசி இருக்கிறார்கள்.

    ஒரு வேளை இவர்கள் மதுரைத்தமிழன் பதிவுகளை படித்தகாரணத்தால் ஏற்பட்ட விளைவுகளோ என்னவோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.,,ஹா..ஹா..
      ஹலோ நான் அந்த சரக்கை சொல்லலைப்பா, பலசரக்குன்னு சொல்லுவாங்களே அதை சொன்னேன்.:) ஆனா நிலவன் அண்ணா கமெண்டை பார்த்தப்ப எனக்கும் இந்த டௌட் தான் வந்துச்சு:))) (இப்போயெல்லாம் classmates ஸ விட glassmateஸ் தான் க்ளோஸ் friends ஸா இருக்காங்க:))

      நீக்கு
  22. பெட்டிக்கடையில் நீங்கள் பகிர்ந்த அத்தனை விஷயங்களும் அருமை நண்பரே.....

    தொடரட்டும்..

    பதிலளிநீக்கு
  23. தாய்மொழி பேசத்தெரியாத பாடகியிடம் சித்ரா கோபித்ததில் நியாயம் உள்ளது! தமிழ்மணம் பற்றி எதுவும் சொல்வதற்கு இல்லை! நான் அதில் இணைப்பதும் இல்லை! கவிதை சகோதரியின் தளத்திலேயே படித்தது! மீண்டும் ஒருமுறை ரசித்தேன்! சிறப்பான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  24. மகனும் அமைச்சர்
    மருமகனும் அமைச்சர்
    ஆகா

    பதிலளிநீக்கு
  25. சித்ரா சொன்னதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஒருவர் எங்கே வாழ்ந்தாலும், அவரது தாய் மொழி தெரிந்திருப்பது மிக அவசியம். நீங்கள் முழுமையாக ஆங்கிலம் பேசிக் கொண்டு, ஆங்கிலேயே போல உடுத்திக் கொண்டு வாழ்ந்தாலும், உங்களது உருவம், சிந்தனை, வாழ்வியல் என அனைத்தும் நீங்கள் ஆங்கிலேயே இல்லை என்பதைக் காட்டிவிடும். என்ன தான் தலைகீழா நின்றாலும் உங்களது அடையாளம் மாறாது. இதனைத் தான் visible identities என்பார்கள். ஒரு பிரஞ்சுக் காரன் இங்கிலாந்தில் வாழ்ந்து அவனது தலைமுறைகள் ஒன்றிரண்டு கடந்துவிட்டால் அவனை ஆங்கிலேயேனாக அச் சமூகம் ஏற்றுக் கொள்ளும். ஏனெனில் அவனது உருவமோ, உணவு முறையோ, வாழ்க்கை முறையோ காட்டிக் கொடுக்காது.

    ஆனால் நீங்கள் இங்கிலாந்து போய் வாழ்ந்தாலும், சீனா போய் வாழ்ந்தாலும் நாம் இந்தியர்கள் தானே. அப்படி என்றால் நமது தாய் மொழி என்ன, நமது பூர்விகம் என்ன என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கும். அப்போது எனக்கு பூர்விகம் இல்லை, தாய் மொழி கிடையாது அல்லது தெரியாது எனச் சொல்ல இயலுமா.

    இல்லை என்றால் நாம் எந்த பெரும்பான்மை சமூகம் உள்ள பகுதியில் வாழ்கின்றோமோ, அவர்களது மொழி, பண்பாடு, மதம் அனைத்தையும் ஏற்று அவர்களுடனேயே மண உறவு கொண்டு வந்தால் ஒன்றிரண்டு தலைமுறையில் நாமும் அவர்களில் ஒருவராக மாறிவிடும். இதனை integration என்பார்கள். அல்லது அவர்களது மொழி, பண்பாடு, மதங்களை ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டு மதித்துக் கொண்டு நமது மொழி, பண்பாடு, அடையாளங்களையும் பேணி கொண்டு இரு அடையாளத்தோடு வாழ்ந்து வரலாம். இதனை assimilation என்பார்கள். இதன் மூலம் நம் நமது வேர்களோடு தொடர்புகளை வைத்திருப்பதோடு, நாம் போய் வாழும் பகுதியில் ஒரு விருந்தாளியைப் போலத் தான் வாழ முடியும். விருந்தாளிகள் மற்றொருவர் வீட்டுக்கு போய் கொஞ்ச காலம் வாழலாம், ஆனால் சொந்த வீட்டை மறந்துவிட்டேன் எனக் கூறினால் சிரிப்பார்கள். வாழும் வீட்டின் உரிமையாளன் நம்மை சொந்த வீட்டுக்குப் போ என அனுப்பினால் திரும்பி வந்து தான் ஆக வேண்டும். ஐரோப்பாவில் இரண்டாயிரம் ஆண்டு காலம் வாழ்ந்தாலும் யூதர்கள் integrate ஆகாதோர் விரட்டப்பட்டனர். அதே சமயம் ஐரோப்பியர்களோடு ஒன்றாக கலந்து கொண்டோர் விரப்பட்ட முடியவில்லை.

    மேற்கூறிய இருவகையில் மட்டுமே நாம் நமது தாயகத்துக்கு வெளியே போய் வசிக்க இயலும். நாம் அங்கு போய் அவர்களோடு ஒட்டாமல் அழையா விருந்தாளியாக நீண்ட காலம் வாழ இயலாது, அது பிணக்குகளை ஏற்படுத்தி என்றோ ஒரு நாள் விரைவாகவே விரட்டிவிடுவார்கள். ஐரோப்பாவில் பல முஸ்லிம் சமூகங்கள் இவ்வாறு தான் வாழ்கின்றனர். இது ஆபத்தை தரும்.

    ஜெசிகா என்ற இந்த பெண் கனடாவில் இலங்கைத் தமிழ் பெற்றோருக்கு பிறந்த பெண். கனடாவில் இலங்கைத் தமிழருக்கு இருக்கும் ஒரே பிரச்சனை அவர்கள் ஒருவித குழப்ப நிலையில் இருக்கின்றனர். ஒரு பக்கத்தில் கனேடியர்களாகவே தம்மை மாற்றிக் கொள்ளவும் முயல்கின்றனர். மறு பக்கம் பெயரளவில் தாம் தமிழர் என்ற ஒரு அடையாளத்தையும் நிறுவுகின்றனர்.

    தாம் முழுக் கனேடியர் என்ற நிலையில் ஆங்கிலம், கனடா கலாச்சாரம் என்பவை அவர்களது முதல் அடையாளமாகிவிடுகின்றன. இங்கு கணிசமான பிள்ளைகள் தமிழ் படிக்கின்ற போதும் அவை 33% மட்டுமாகவே இருக்கின்றது. ஏனையோருக்கு தமிழ் புரியும் பேச வராது, சிலருக்கு புரியவும் புரியாது.

    கிட்டத்தட்ட தென்னாப்பிரிக்கத் தமிழருக்கு ஏற்பட்ட நிலை தான் இங்கும் ஏற்படுகின்றது. முதல் தலைமுறையினர் தாம் தமிழர் என அடையாளப்படுத்திக் கொண்டாலும், இரண்டாம் தலைமுறையினர் confused identity crisis யில் இருக்கின்றனர். இதனால் விளையும் பின் விளைவுகளே. தமிழ் தெரியாத தமிழர் அடையாளம்.

    மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் குடியேறிய பல தமிழர்கள் எங்கே வாழ்ந்தாலும் தாம் தமிழர், இந்தியர் என்ற அடையாளத்தோடு வாழ்வதோடு, அவர்களது வேர் இந்தியா என்ற நிலையில் இருப்பதால் அவர்களுக்கு முதன்மை அடையாளம் இந்தியர் தமிழர் என்றாகிவிடுகின்றது. ஆனால் தென்னாப்பிரிக்கா, றியுனியன், பிரான்சு, கனடா, போன்ற நாடுகளில் அந்தந்த நாட்டோடு ஒன்றிணைந்தமையால் அவர்களுக்கு இந்தியர் தமிழர் என்ற அடையாளம் இரண்டாம் பட்சமாகின்றது.

    இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம், சூழல், வாய்ப்புக்களை பொறுத்தது. ஜெசிகா என்ற இந்த பெண் ஒன்று தமது தாய் மொழி ஆங்கிலம் என்று சொல்லி இருக்க வேண்டும், அல்லது தமிழை கற்றுக் கொண்டிருக்க வேண்டும். இரண்டுங்கெட்டானாய், ஆற்றிலும் சேற்றிலும் கால் வைத்தால் backfire ஆவது நிச்சயமே. எதாவது ஒன்றை முதன்மைப் படுத்தி அந்த அடையாளத்தோடு வாழப் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  26. தெலுங்கானாவை தமிழர்கள் சிலர் ஆதரிப்பதும் எதிர்ப்பதுமாய் கருத்து வெளியிட்டு இருப்பது முட்டாள் தனமாக இருக்கின்றது. தெலுங்கானாவுக்கு தமிழகத்துக்கும் எல்லை கிடையாது. தமிழ்நாட்டுக்கு கஷ்மீர் என்னவோ தெலுங்கானாவும் அதே தான். இதில் நமக்கு நன்மையோ தீமையோ இல்லை.

    தார்மீக அடிப்படையில் பார்த்தால் தெலுங்கானாவில் அதிகம் வாழ்வோர் தலித்கள், பழங்குடிகள், முஸ்லிம்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள். ஐதரபாத் தவிர ஏனைய மாவட்டங்கள் வளர்ச்சி காணவே இல்லை. அது மட்டுமின்றி ஆந்திரா நிலப்பரப்பாலும், மக்கள் தொகையாலும் மிகப் பெரிய மாநிலம்.

    தெலுங்கானாவின் அளவு மட்டும் தமிழ்நாட்டின் அளவுக்கு உள்ளது. பிரிந்துள்ள சீமாந்திரா பகுதி தமிழ்நாடு, கேரளா இரண்டையும் சேர்த்தால் வரும் அளவுக்கு பெரியது. அப்படி இருக்க இவ்வளவு பெரிய மாநிலத்தை நிர்வாகம் செய்வது இயலாத காரியம். ஆக தெலுங்கானா பிரிந்தது தவறே இல்லை.

    அத்தோடு சீமாந்திராவில் உள்ளவர்கள் அதிகம் வசதியானவர்கள், சீமாந்திரா வசதியான விவசாய நிலங்கள், கல்லூரிகள், தொழில் பேட்டைகள் என அனைத்தும் உள்ள பகுதி. ஒரு பெரும்பகுதி வளராமல் இருப்பதும் மற்ற பகுதி நன்றாக வளருவதும் சரியல்ல. ஆக மாநிலம் பிரிந்ததில் தவறில்லை. குடும்ப அரசியல் எங்குமுண்டு ஆப்பிரிக்கா முதல் அமெரிக்க வரை ஆண்டிபட்டி முதல் தில்லி சிட்டி வரைக்கும் உண்டு.

    மக்கள் தானே ஒட்டுப் போடுகின்றார்கள், அவர்கள் குடும்ப அரசியல் செய்வோருக்கு எதிராக வாக்குப் போடட்டும். அல்லது அரசியல் சட்டத்தை மாற்றட்டும். அதற்காக ஒரு மாநிலப் பிரிவினையையே கேள்விக்கு உள்ளாக்குவது சரியல்ல.

    மற்றபடி 1956-களிலேயே தெலுங்கானாவை தனிமாநிலமாக்கவே மாநில வரைவுக் குழு கூறியது. ஆனால் ஒன்று பட்ட ஆந்திரா எனக் காங்கிரஸ் கட்சியினரின் உதாசீணத்தால் அது கைவிட்டுப் போனது.

    தமிழ்நாட்டையும் ரெண்டாகப் பிரிக்கலாம் என சிலர் கூறுகின்றனர். ஆந்திராவை ஒப்பு நோக்கினால் தமிழ்நாடு சின்ன மாநிலம், அத்தோடு ஒரு பகுதியே வளராமல் இல்லை. ஆங்காங்கே வளர்ச்சி உண்டு வளராமலும் உண்டு. ஒரு வேளை இந்தியா முழுமையும் 100 மாநிலமாக பிரிக்கும் சமயம் வந்தால் தமிழ்நாட்டை இரு மாநிலமாக்குவதில் பிழையில்லை. ஆனால் தற்சமயத்துக்கு இக் கோரிக்கைகான வலுவான காரணமோ, ஆதரவோ தென்படவில்லை. அவ்வளவே.

    நான் கணக்கில் ரொம்பவே வீக் என்பதால் புதிர் எல்லாம் எனக்கு புரியாது. சுற்றி வளைத்து சொன்னாலே புரியாது. இதில் இவை எங்கே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான கருத்துக்கு நன்றி.தெலுங்கான பற்றி மேலோட்டமான என் மண உணர்வையே சொல்லி இருக்கிறேன். மற்றபடி இதைப்பற்றிய முழுவிவரங்களை அறியேன்.

      நீக்கு
  27. பலதரப்பட்ட பொருண்மைகளை இணைத்து இவ்வாறு எழுதுவது என்பது சற்றுச் சிரமமானதே. அதனைச் சிறப்பாக இலாவகமாக தாங்கள் செய்தவிதம் அருமையாக உள்ளது. புதுக்கோட்டையில் கணினிப்பட்டறை வகுப்பில் தங்களை நேரில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  28. இது பெட்டிக்கடையா?அல்ல அல்ல!சூப்பர் மார்க்கெட்!

    பதிலளிநீக்கு
  29. தெலுங்கான சரிதான் என்பது என் வாசிப்பு அனுபவம் ஆனால் நிஜம் தாங்கள் அறிவீர்கள்§ கவிதை அழகு சித்ராவின் கோபம் மிக அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம். எனக்கு அதைப் பற்றிய ஆழமான புரிதல் இல்லை.மேலோட்டமான உணர்வையே சொல்லி இருக்கிறேன்.

      நீக்கு
  30. வணக்கம்,
    அருமையான தொகுப்பு,
    மிக ஆச்யர்மான தகவல் ஒரு நாளைக்கு நூற்றி ஐம்பது பதிவுகள் தான் தமிழ் மனதில் இணைக்கப் படுவது.
    கடந்த காலத்தில் நான் தமிழ்மனத்தை நினைத்து கூட பார்த்ததில்லை. அவர்களின் பட்டன் ஓட்டும் வேலை படு எரிச்சல்.
    டெம்ப்ளேட் மாற்றி விட்டால் வந்தும் தொலையாது.

    ஆனால் தற்போதய அனுபவத்தில் தமிழ்மணத்தில் இணைக்காமல் பதிவராக இருப்பது ஒரு விதத்தில் மூடத்தனம் என்று தோன்றுகிறது.

    நான் தமிழ்வெளியை மட்டுமே பயன்படுத்தினேன். இப்போது நான்கு திரட்டிகள்.
    தமிழ்மனம், தமிழ்வெளி மட்டுமே ட்ராபிக் தருகின்றன. மற்றவை தேவையில்லை என்று தோன்றுகிறது.
    தாங்கள் குறிப்பிட்ட கவிதையின் மூலம் குறித்து
    கடும் பல்வலி தந்த கவிதை அது என நினைக்கிறன் (ஒரு காரணம்)
    எழுதும் போது நெட் பாஸ்டிங் வேறு..
    ஒரு ஐந்து கதைகளை எழுத்து அடிடா டைப் என்று என்னை குலை நடுங்க வைத்துவிட்டார்கள்.
    ஒவ்வொரு கதையும் இருபது பக்கம். இறைவா எனக்குமட்டும் ஏன் இந்த சோதனை.
    http://www.malartharu.org/2014/03/jameen-and-palani-murugan.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் தினந்தோறும் பதிவிடுவதில்லை. எனவே ஒரு நாளைக்கு 150 பேர் என்று வைத்துக் கொண்டால் ஒரு வாரத்திற்கு 750 பேர் தமிழ் மனத்தில் இணைப்பதாகக் கொள்ளலாம்.தமிழ் மனத்தில் இணைக்காத அதைப் பற்றி அறியாத பதிவர்களும் நிறைய உண்டு.
      தமிழ் 10 ஓரளவிற்கு வாசகர்களைத் தரும்.
      கவிதையின் பின்னணியை அறிந்தேன். ஹா ஹா

      நீக்கு
  31. *** தற்போது தமிழ் மணத்தில் தினமும் சராசரி பதிவுகளின் எண்ணிக்கை 127 ஆக உள்ளது.சில மாதங்களுக்கு முன்பு 170 ஆக இருந்தது. பதிவு எழுதுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இதனை பலரும் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். அல்லது தமிழ் மணத்தில் இணைப்பவர்கள் எண்ணிகை குறைந்திருக்க வேண்டும்.
    நிறையப் பேர் நல்ல பதிவுகள் எழுத முன்வரவேண்டும் . வலைப்பூவில் ஏற்பட்டுள்ள தொய்வு நீங்க வேண்டும்.***

    என்னை கேட்டீங்கனா, பதிவுகள் குறைவதால் நன்மைகளும் உண்டுனு சொல்லுவேன். பல குப்பைப் பதிவுகளால் நல்ல பதிவர்கள் பலர் கண்டுகொள்ளப்படாமல் போனதும் உண்மைதான். இப்போது அப்பதிவர்கள் பதிவுகள் எல்லாம் பலரால அதிகமாக வாசிக்கப் படுகிறது.

    இப்போ தமிழ்மணம் புதியவர்கள அனுமதித்த உடனேயே, அந்தப் புதியவர்கள் சிலரில் பல குப்பைப் பதிவர்களும் முந்திக்கொண்டு நிற்கின்றன என்பதையும் நீங்க கவனியுங்கள்.

    என்னால பதிவுலகுக்கு செய்ய முடிந்த சின்ன உதவி, பதிவெழுதுவதை நிறுத்திவிட்டு வேற பொழைப்பைப் பார்க்க்லாம்னு எடுத்துக்கொண்டிருக்கிற முடிவுதான். :))) இதையெல்லாம் நீங்க பாராட்டணும், முரளி! :)

    -----------------

    சித்ராவுடைய கோபம் பற்றி எனக்கு வேற கருத்து உண்டு..

    அதாவது, அந்தச் சிறுமிக்கு தாய்மொழி தெரியவில்லை என்பதே அர்த்தமற்ற வாதம். அவள் தமிழ் பாடல் பாட வந்ததால், அவள் தாய்மொழி தமிழா என்ன? அப்படி யார் சொன்னது?

    ஒருவர் தாய்மொழி என்பது அவர் அம்மா அவரிடம் விரும்பிப் பேசி வளர்த்து வந்த மொழி. அது ஆங்கிலமாக இருக்கலாம் ஏன் ஹிந்தியாகவும் இருக்கலாம். அது அவருடைய தாய் தந்தையர் விருப்பம்.

    அந்தச் சிறுமியை கண்டிக்க சித்ராவுக்கோ, உங்களுக்கோ எனக்கோ உரிமை கெடையாது. இவர் யாரு அந்தப் பொண்ணை அவமானப்படுத்த? அவளுக்கு தமிழ் கற்றுக்கொள்ளாமல் இருக்கவும் சுதந்திரம் நிச்சயம் இருக்கு.

    அந்த சிறுமி செய்த ஒரே தவறு, இந்த சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டது. அதுவும் அவளுக்கு தமிழ்ப்பாடல் பாடத் தெரிந்ததால்தான் அவரை தெரிவு செய்தார்கள். அவளுக்கு பாடத் தெரியுது, அதனால கலந்துகொண்டாள். அவள் தாய்மொழி எது என்பதைப் பற்றி யாரும் கவலைப்படத் தேவை இல்லை. Because her mother tongue has nothing to do with this competition.

    Suppose, I am excelling in my mother tongue but my voice is unbearable, who is going to listen my songs? Will they select me in super singer competition? They WONT. How does my mother tongue help me, here? Can Chithra tell me HOW?

    It is none of anybody's business to tell who should know what!

    பதிலளிநீக்கு
  32. மைதிலி கஸ்தூரி ரெங்கன் வலைச்சரத்தில் இன்று தங்களைப் பற்றி விவாதிக்கிறார். வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895