என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 22 ஜனவரி, 2016

தயவு செய்து வவ்வாலைப் போல் முகம் மறைக்காதீர் பதிவர்களே!


   இணையத்தின் மூலம் நமக்கு நாடு தாண்டிய நண்பர்கள் கிடைக்கிறார்கள். அவர்களில் பலர் எப்படி இருப்பார்கள் என்று நமக்கு தெரியாமல் கூட இருக்கும். சிலர் சந்தர்ப்பம் வாய்க்கும்போது நண்பர்களை சந்திக்கிறார்கள். நெருங்கிய நட்பாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது  சில நண்பர்களுடன் தொடர்பு வைத்திருப்பார்கள். இந்த ஆண்டின் துவக்கத்தில் வருத்தம் தந்த செய்தியை எல்லோரும் அறிந்திருப்பீர்கள்.'பார்வையில்' என்ற வலைப்பதிவு எழுதி வந்த ராஜநடராஜன் அவர்களின் மரண செய்திதான்அது . எதிர்பாராவிதமாக மாரடைப்பால் மரணம் அடைந்து மிகவும் வருத்தம் தந்த செய்தி. அவருடன் இணைய வழியில் கூட அதை அளவு தொடர்போ அறிமுகமோ இல்லாது போனாலும் நெருங்கிய ஒருவரை இழந்தார்ப் போன்ற உணர்வு ஏற்பட்டது உண்மை.  .டிசம்பர் 30 அன்று கூட ஒருபதிவு எழுதி இருக்கிறார். அவரது மரணம் எதிர்பாராதது அது சமீபத்தில் டிசம்பரில் எனது பதிவு ஒன்றுக்கு கருத்திட்டிருந்தார். அவர் 2007 இல் இருந்து எழுதி வருகிறார் என்பது அவரது வலைப்பூ தொகுப்பை பார்த்தபோது தெரிய வந்தது. 

     சீனியர் பதிவரான அவரது மறைவு செய்தி நம்பள்கி ,வருண், போன்றவர் ஐயத்துடன் வெளியிட்டனர். பின்னர் ஜோதிஜி அவர்கள் உறுதிப்படுத்தினார். எனக்கும் அவருக்கும் அவ்வளவு தொடர்பில்லை. நாம் வலைப் பதிவு எழுத வந்த பின்  அதிக அளவு எழுத வில்லை என்பதால் அவர் வலைத தளம் செல்ல வாய்ப்பு இல்லாது போனது. வவ்வாலின் பதிவுகளில்  அவரது கருத்துரைகளை படித்திருக்கிறேன். ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண் அவரைப் பற்றி விரிவாக எழுதி இருந்தார். 
     வருண்  ராஜ நடராஜன் பெரும்பாலும் எதிர் கருத்துடையவர்களாகவே இருந்திருக்கிறார்கள். வருண் தனது உருக்கமான பதிவின் மூலம் இரங்கல் தெரிவித்தும் அவரும் அவரைப் பெருமைப் படுத்தும் விதமாகவே எழுதி இருக்கிறார். ராஜ நடராஜன்  ஜோதிஜிக்கு அறிமுகமானவராக  இருந்திருக்கிறார் . ஜோதிஜி ராஜாநடராஜனின்  வலை தளத்தில் அவரைப் பற்றி உருக்கமாக விவரித்திருக்கிறார். இந்த விஷயத்த்தில் ஒரு சிலர் மூலம் தகவலை உறுதிப் படுத்த்திக் கொள்ள முடிகிறது. அன்னாருடைய குடும்பத்தாருக்கு ஒரு பேரிழப்பு . ராஜ நடராசன் சிலருடனாவது நட்பு பாராட்டி இருப்பதால் அவரைப் பற்றிய தகவல்கள் அறிந்து  நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்த முடிந்தது. 
   ஆனால இணையத்தில் சிலர் நெடுநாட்களாக உலா  வந்தவர்கள் திடீரென்று வலைப்பக்கமே வராமல் இருப்பது கண்டு அவரது கருத்துக்கு ஒத்த கருத்து உடையவர்களும்  எதிர்கருத்து உடையவர்களும் அவர்களது  வலைப்பக்கம் அவ்வப்போது சென்று  பார்த்து வருகிறார்கள்

 இணையத்தில் எழுதிவரும் பலர் திடீரென்று பலமாதங்கள் இணையப் பக்கம் வராமல் இருப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஒரு சிலர் நான் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளப் போகிறேன் என்று சொல்லி விட்டு செல்வார்கள்.  சிலர் முகநூல் டுவிட்டர் என்று வேறு தளங்களுக்கு இடப்பெயர்ச்சி செய்கிறார்கள். இவர்களை பெரும்பாலும் கண்டுபிடித்துவிட முடியும். 

   ஆனால் சிலர்  வலைபதிவுகளில் சிலர்  தங்களது முகம் காட்ட விரும்புவதில்லை. தன் புகைப் படங்களை இணைப்பதில்லை.முகம் காட்டாமல் இருப்பதில் சில சௌகர்யங்கள் உண்டு . வயது தெரியாது. தங்கள் கருத்துக்களை சற்று சுதந்திரமாக கூறமுடியும். முகம் காட்டாமல் இருப்பது சுவாரசியம். அவர் எப்படி இருப்பார் என்பர் அறிகிற ஆவலை தூண்டும். எழுத்தாளர்கள் சிலர் தன் முகம் வெளிப்படமால் இருக்க விரும்புவது உண்டு. ஒருவருடைய எழுத்தை வைத்து அவருடைய வயதை கணிப்பது சற்று  கடினம்தான். இளைய வயது பதிவர்கள் சிலர் முதிர்ந்த எழுத்தை வெளிப்படுத்துகின்றனர். வயதான சிலரின் எழுத்துக்களோ சகிக்க இயலாத அளவுக்கும் இருக்கிறது.

  அதிக அறிமுகம்  இல்லாத பதிவராக இருந்தாலும் நீண்ட நாட்கள் ஒருவர் எழுதாமல் இருந்தால் இப்போது இவர்கள்  என்ன செய்கிறார்கள் ஏன் எழுதுவதில்லை என்று தோன்றுவதுண்டு. 
     ஒரு சிலர் திடீரென்று பதிவுலகில் காணாமல் போனால் யாருக்கும் தெரிவதில்லை . தேடுவதில்லை ஆனால் பதிவுலகில் தீவிரமாக இயங்கி, விவாதங்கள்,சர்ச்சைகள் பதிவுகள் என்ற  சுற்றிவந்த பதிவர் திடீரென்று பல நாட்கள் வலைப் பக்கம் வராவிட்டால் என்ன காரணத்தால் அவர் இணையப் பக்கம் வரவில்லை  உடல் நிலை சரியில்லையா. அல்லது வேறு ஏதேனும் காரணமா  என்று அறிய விரும்பினாலும் முடிவதில்லை.  
    அப்படிப் பலரும் தேடுகின்ற ஒரு பதிவர்  முகமூடிப் பதிவர்களில் ஒருவர்தான் வவ்வால். 'தலைகீழ் விகிதங்கள்' என்ற வலைப்பூவில் எழுதிவந்த வவ்வால் ஆகஸ்டு 2014 க்குப்   பின்னர் ஏதும் எழுதவில்லை. அனல் பறக்கும் பின்னூட்டங்கள், ஏராளமான தகவல்கள், விரிவான பதிவுகள் என்று வலையுலகை கலக்கி வந்த வவ்வால் என்ன ஆனார்  என்று இதுவரை தெரியவில்லை. இவரைக் கண்டால் பல பதிவர்களுக்கு அலர்ஜிதான். இவருக்கு ஈடு கொடுத்தவர்கள் வருண் மற்றும் ஜெயதேவ் என்று சொல்லலாம். எந்த பிரபலமாக இருந்தாலும் முகத்தில் அடித்தாற்போல் கருத்துக் கூறத் தயங்கமாட்டார். விவாதம் என்று வந்து விட்டால் கடைசி வரை விடமாட்டார். விவாதத்தில் கடைசி கருத்து இவருடையதாகத்தான் இருக்கவேண்டும் என்ற பிடிவாதக்காரர். எந்தத் துறையாக இருந்தாலும் அதில் நுழைந்து ஒரு அலசு அலசி விடுவார். வலைப்பதிவுகளை சுவாரசியமாக்கியது அவரது பின்னூட்டங்கள்.
இவரைப் பற்றி அமுதவன் அவர்களும் ஒரு பதிவு எழுதி இருந்தார் இன்று வரை அவரைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.
       
         இதற்கு முன்னர்2009 இல் இன் பிற்பகுதியில் பதிவு எழுதிய நிறுத்திய இவர் 2012 இல் மீண்டும் பிற்பகுதியில்தான் மீண்டும் எழுதினர். இப்படி இடை வெளி விடுவது அவரது வழக்கம்தான். இம்முறையும் மிக நீண்ட இடைவெளி ஏற்பட்டுள்ளது. பலர் அவர் பக்கத்தை  பார்வையிட்டு ஏதேனும் எழுதி இருக்கிறாரா என்று பார்த்து வருகின்றனர். இப்படி   எப்போது வருவார் என்று பலரையும் எதிர்பார்க்க வைத்திருப்பது அவரது வெற்றி என்று கொள்ளலாம்.வருணும் ஜெயதேவும் விவாதத்திற்கு தகுந்த ஆள் கிடைக்காமல் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

     வவ்வால் தனக்கு நெருங்கிய நண்பராக யாரையும் கொண்டிருப்பதாக தெரியவில்லை. அவரது எழுத்துக்களை வைத்து பார்க்கும்போது  அவரது இயல்பை ஓரளவிற்கு ஊகிக்க முடிகிறது. அவரிடம் நெருங்கிப் பழக எல்லோருக்கும் ஒரு தயக்கம் இருக்கும். சுவாரசியத்துக்கு முகமூடி அணிவது தவறில்லை. முகமூடிக்குள் மறைந்திருப்பது யார் என்று கடைசி வரை ஒருவருக்கும் தெரியாமல் போவதில் என்ன சுவாரசியம் இருக்கிறது. குறைந்தபட்சம் ஒரிருவருக்காவது தகவல் தெரிந்தால்தான் அவரது நிலையினை மற்றவர்க்கு சொல்ல முடியும். மற்றவர்கள் விடுத்த வேண்டுகோளைப் போல வவ்வால் மீண்டும் வந்து பதிவுகளும் கருத்தும் இடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
   பதிவர்களே! நீங்கள் எழுதி வருவதை உங்கள் குடும்பத்தார்க்கு தெரிவியுங்கள்.(வீட்டம்மா திட்டத்தான் செய்வாங்க அதெல்லாம் கண்டுக்கப்படாது)  ஒரு சில நண்பர்களுடனாவது  நேரில் முடியாவிட்டாலும் தொலைபேசியிலாவது   தொடர்பாவது கொள்வது நல்லது. ஏதேனும் உதவி தேவைபட்டாலும் கிடைப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். ஓரிரு வலையுலக நட்புக்கேனும் தன்னைப் பற்றிய குறைந்தபட்ச விவரங்களை பரிமாறிக் கொள்வதில் தவறு ஏதுமில்லையே! 
           மதுரைத் தமிழன், ஜெயதேவதாஸ்  வருண் போன்றவர்களும் தங்கள் முகம் மறைத்துள்ளவர்களே. இவர்களின் மதுரைத் தமிழன் முகம் காட்டாதபோதும் (நாங்க பாத்துட்டம் இல்ல)  பல நண்பர்களுடன் தொடர்பில் உள்ளார். வருண், ஜெயதேவ்தாசும் முகம் காட்டியதில்லை என நினைக்கிறேன். இப்படி பலர் இருகிறார்கள். அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் . உங்கள்  முகத்தை காட்டாவிட்டாலும் உங்கள் முகத்தைப் பார்த்த ஒரு நண்பரின் முகத்தையாவது அறிமுகப் படுத்துங்கள் 
இதெல்லாம் உனக்கெதுக்கு வேலையப் பாத்துட்டு போவியா! என்று கேட்கலாம்.
என்ன செய்வது? ஒருவருடைய எழுத்துக்களோடு பழகுவது அவரோடு நேரில்  பழகி வருவதாகத் தானே தோன்றுகிறது!

*************************************************************


செவ்வாய், 5 ஜனவரி, 2016

தமிழ்மணம் மர்மங்கள் விலகுமா?


  எனது முந்தைய பதிவில்( 2015ல் கிழித்தது என்ன? பதிவர்கள் முகநூலுக்கு தாவுவது  ஏன் ) முகநூல். வலைப்பூக்கள் பற்றி எழுதி இருந்தேன்.   கொஞ்சம் விரிவாக கருத்துக்களை,படைப்புகளை, கட்டுரைகளை பதிவு செய்ய வலைப்பூக்கள் வசதியாக இருப்பதாக வலைப்பூ எழுதுபவர்களின் கருத்தாக உள்ளது. புதிதாக முகநூலில் நுழைவோருக்கு    நண்பர்கள் சேர்க்க பட்டியல் காட்டப்படுகின்றன. அவற்றில் நாம் அறிந்தவர்களோ நண்பர்களோ இருப்பின் தேர்ந்தெடுத்து முகநூலில் நட்புக் கோரிக்கை வைத்து நண்பர்களை இணைத்துக் கொள்ளலாம்.
    புதிதாக வலைப்பூ எழுதுபவர்கள் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்வது கடினமாக ஒன்றாக உள்ளது. பிற வலைப்பூக்களுக்கு  சென்று கருத்திடுவது அவர்களுடைய  வலைதளத்தில் இணைவது திரட்டிகளில் இணைப்பது  இவற்றின் மூலமாக மற்றவர்களின் பார்வையில் படுகிறார்கள்.. 
       தான் கஷ்டப்பட்டு எழுதிய பதிவு மற்றவர்களால் படிக்கப் படவேண்டும் என்று விரும்பாதவரும் உண்டோ? . தனது திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்க  வேண்டும்  என்று படைப்பாளிகள் விரும்புவது இயல்பானதுதானே!.

   தொடக்க நிலைப் பதிவர்கள் பெரிதும் நம்பி இருப்பது திரட்டிகளையே. பல திரட்டிகள் இருந்தாலும் தன்னிகரற்று விளங்குவது தமிழ்மணம் மட்டுமே. பல திரட்டிகள் காணாமல் போய்விட தமிழ்மணம் மட்டுமே இன்னும் செயல் பட்டு வருகிறது . அது இன்றும் தடங்கலின்றி இயங்கி வருவதற்கு அதன் அற்புதமான தானியங்கி கட்டமைப்புதான் காரணம் என்று நினைக்கிறேன். பதிவுகளை தானாக இணைத்துக் கொள்ளும் வசதி, தரவரிசைப் பட்டியல், வாக்குப் பட்டை, வாசகர் பரிந்துரை குறிசொற்கள் வாயிலாக பதிவுகளை காட்டுதல், மறுமொழி திரட்டுதல் தமிழ்மண மகுடம்  இன்றைய சூடான பதிவுகள், இந்த வார சூடான பதிவுகள் வாரந்தோறும்  முதல் 20 தரவரிசைப் பட்டியல்  போன்றவை இத சிறப்பு அம்சங்களாக அமைந்துள்ளன.வேறு எந்த திரட்டிகளும் இது போன்ற வசதிகளை பெற்றிருக்கவில்லை. இத்தனை சிறப்புகளை உடைய தமிழ்மணம்  சரியாக பரமாரிக்கப் படுகிறதா என்ற ஐயம் அவ்வப்போது வலைப்பதிவர்களுக்கு எழுந்து கொண்டுதான் இருக்கிறது. அது நிறுவனமா? தனிநபருக்கு சொந்தமானதா? தற்போது அதன் நிலை என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது. அதன் இணைப்புக்காக பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதே அது ஏன்? தமிழ்மண நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் யார்? திரட்டி நிர்வகிப்பில் அதிக ஆர்வம் காட்டாதது ஏன்? போன்ற கேள்விகளுக்கான விடை நம்மிடம் இல்லை.

 .  திரட்டி நடத்துவதால் பெரிய பயன் ஏதும் இல்லை என்பது ஒரு காரணமாக இருக்கக் கூடும் . மேலும்  நிர்வகிக்க பொருட்செலவும்  நேரமும் தேவைப்படும் .நிர்வாகிகள் பலரும் வெவ்வேறு தொழில் சார்ந்து இருக்கலாம். அவர்கள் நேரம் கிடைக்கும்போதுதான்  தமிழ்மண  செயல்பாடுகளை  கவனிக்க முடியும் என்ற நிலையில் உள்ளனர் என்றே நினைக்கிறேன். இதற்கென்று ஆட்களை நியமித்து நடத்த வேண்டுமென்றால் அதற்கான பொருட்செலவுக்கு வழிவகைகள் செய்யப்படவேண்டி  இருக்கும். அதற்குரிய வருமானம் திரட்டிகளில் கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்பது ஐயமே.
      இப்போதும் எனக்கு தமிழ்மணம் வாயிலாகத்தான் அதிக வாசகர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். பிரபலங்களுக்கும் ஏற்கனவே வளர்ச்சி அடைந்தவர்களுக்கும் திரட்டிகளின் உதவி தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்க நிலை வலைப் பதிவர்களுக்கு திரட்டிகளின் உதவி அவசியமானது..  பல  திரட்டிகள் செயல்படாத நிலையில் தமிழ்மணமும் பாராமுகமாய் இருப்பது புதிய வலைப் பதிவர்களுக்கு  ஒரு குறையாகவே இருக்கிறது  
  கிட்டத்தட்ட 9 மாதங்களாக தமிழ் மணத்தில் புதிய வலைப் பூக்கள் இணைக்கப் படாமல் உள்ளது . தமிழ்மணத்தில் இணைவதற்காக காத்திருப்போர் பட்டியலில்  180 க்கும் மேற்பட்டவர் உள்ளனர். டிசம்பர் கடைசி வாரத்தில் தமிழ்மண பக்கத்தை  கவனித்தபோது தமிழ் மண முகப்பில் புதிய பதிவர்களின் பதிவுகள் காட்சி அளித்தது மகிழ்ச்சியை தந்தது ஆனால் அவற்றை  உற்று நோக்கிய போது ஒரு உண்மை புலப்பட்டது. சமீபத்தில் தமிழ் மண இணைப்பு கோரியவர்களுக்கு அதாவது நவம்பர் டிசம்பர் மாதத்தில் கோரியவர்களுக்கு மட்டும்  தமிழ் மணத்தில் இணைக்கப் பட்டுள்ளது.. ஆனால் முன்னதாக   மார்ச் மாதத்தில் கோரியவர்களின் வலைப்பூ கூட இன்னும் இணைக்கப் படாமல்இருக்கிறது. மற்ற வலைப் பதிவுகளை ஏன் இணைக்கப்படவில்லை என்று தெரியவில்லை

  .  தமிழமணம் வெள்ள நிவாரணத்திற்காக ஒரு பக்கத்தை உருவாக்கி இருந்தது  யாருக்கேனும் தெரியுமா? டிசம்பர் 7 அன்று தமிழ்மண நிர்வாகம் கடலுரை சுற்றியுள்ள கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டதை வரைபடத்தில் சுட்டிக் காட்டி ஒரு பதிவு வெளியிட்டிருந்தது . அது தமிழ்மண முகப்பில் கூட வெளியாகி  இருந்ததா எனத் தெரியவில்லை. இரண்டு பேர் மட்டுமே அந்தப் பதிவிற்கு கருத்திட்டிருந்தார்கள் . ஒன்று கில்லர்ஜி, மற்றொருவர் ராஜநாடராஜன்...ஆனால் அந்த முயற்சி முழுமை பெற்றதா என அறிய முடியவில்லை. இந்தப் பதிவின் மூலம் நாம் அறிவது என்னவெனில் தமிழ்மண நிர்வாகம் அவ்வப்போது செயல்பாட்டில் ஈடுபடுகிறது என்பதே. 
     திரட்டிகளில் தனித் தன்மை உடைய தமிழ்மணம் மீண்டும் முழு வீச்சுடன் செயல்படவேண்டும் என்பதே பெரும்பாலான வலைப் பதிவர்களின் எண்ணம். தமிழ் மணம் மீதான சர்ச்சைகள் நான் பதிவு எழுத வருபவதற்கு முன்பே இருந்து வருகிறது. ஒரு திரட்டி, வலைப்பதிவர் அனைவரையும்  எல்லோரையும் திருப்திப் படுத்தும் வகையில் உருவாக்க முடியாது. ஏதேனும் சில விதிமுறைகளை பின்பற்றித் தான் கட்டமைக்கப் படவேண்டும். அந்த விதிமுறைகள் சிலருக்கு சாதகமாகவும் சிலருக்கு பாதகமகவும் அமைவதும் தவிர்க்க இயலாததே. அதனால் குறைகூறுபவர்களை மனதில் கொள்ளாமல் தமிழ்மணம் தொய்வின்றி செயல்படும் ஆண்டாக 2016 இருக்கும் என்று நம்புவோம்.

    டிசம்பர் 2014 இல் தமிழ்மணத்தில் இணைக்கப் படாத வலைப் பதிவர்களின் பட்டியலை சுட்டிக்காட்டி  தமிழ் மணத்திற்கு கோரிக்கை விடுத்தேன். காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக தமிழ் மனம் 233 வலைப்பூக்களை ஒரே நாளில் இணைத்து தமிழ்மணம் .
  தற்போது கீழ்க்கண்ட 185 வலைப்பூக்கள் இணைப்புக்காகக் காத்துக் கிடக்கின்றன. இவற்றை தமிழ்மணத்தில் விரைவாக இணைக்கும்படி  பதிவர்கள் சார்பாக தமிழ்மண நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன்
பட்டியலை முழுதாக பார்க்க வலது பக்கத்தில் ஸ்லைடரை நகர்த்திக் கொள்ளவும்
காத்திருப்போர் பட்டியல் ====================================================================

கொசுறு 1: இந்த தமிழ் மணப் பட்டை இணைப்பது புதியவர்களுக்கு ஒரு அவஸ்தை. இணைத்தாலும் வேலை செய்யாமல் வேடிக்கை காட்டும். புதியவர்களுக்கு மட்டுமல்ல பல பழைய பதிவர்களின் பதிவுகளிலும் தமிழ்மண வாக்குப் பட்டை வேலை செய்யாமல் இருக்கிறது. திண்டுக்கல் தனபாலன், நான் , மற்றும் சில தொழில் நுட்பப் பதிவர்கள் பலருக்கு தமிழ் மணப்பட்டை இணைத்து தந்திருக்கிறோம். யாரேனும் உதவி தேவைப்பட்டால்  நீங்கள் விரும்பினால் உங்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் 


கொசுறு 2.புதிய திரட்டி ஒன்று உருவாகிக் கொண்டிருப்பதாக திண்டுக்கல்  தனபாலன் முகநூலில் தெரிவித்துள்ளார். நல்ல பதிவுகள் வாசகர்கள் சென்றடைய வேண்டும் அது எவ்வகையிலும் நடந்தாலும் நல்லதுதான். 2016 இல் இன்னும் நிறைய படைப்புகளை அளித்தும் வாசித்தும் இணையத் தமிழ் வளர்க்க நம் பங்கை ஆற்றுவோம்.

கொசுறு 2: இன்ட்லி திரட்டியின் கருவிப்பட்டை இணைத்துள்ள ஒவ்வொரு வலைப்பூவும் திறக்க அதிக நேரம் எடுக்கிறது. காரணம் இன்ட்லி திரட்டி  இப்போது இயக்கத்தில் இல்லை.  எனவே முடிந்தவரை அதை நீக்கி விடுங்கள். அதை நீக்கிவிட்டால் பாதகம் ஏதுமில்லை. ஒருவேளை மீண்டும் இன்ட்லி செயல்பாட்டாலும் நேரடியாக அதன் வலை தளத்தில் சென்று உங்கள் பதிவுகளை இணைத்துக் கொள்ள முடியும்
இன்ட்லி  நீக்கும் வழி முறை யை அறிய கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்யவும் .உதவி தேவைப்படின் தொடர்பு கொள்ளவும் 
இன்ட்லியால் ஒரு இன்னல்


=======================================================================

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

2015ல் கிழித்தது என்ன? பதிவர்கள் முகநூலுக்கு தாவுவது ஏன்?


2015 இல்  கிழித்தது
சுவரில் தொங்கிக்கொண்டிருந்த 
இந்த தினசரி நாட்காட்டி
என்னைப் பார்த்து சிரித்தது
2015 ல் நீ கிழித்தது 
இவ்வளவுதான் என்று

***********

அற்ப சந்தோஷங்கள்

2015 எப்படி இருந்தது? எனது பதிவுகளைப் பொறுத்தவரை 2014 ஐ விட பரவாயில்லை .2014 இல் 55 பதிவுகள்தான் எழுதி இருந்தேன். 2015 இல் கொஞ்சம் அதிகமாக  65  கடந்து விட்டேன்.  இந்த எண்ணிகையை இன்னும் கொஞ்சம் அதிகரிக்க விருப்பமுண்டு.  2015 இல் குமுதத்தில் ஒரு கதையும் விகடன்.காம் இல் இரண்டு படைப்புகளும் புதிய தலைமுறையில் ஒன்றும்வெளியானது.  விகடனில் இருந்து 400 ரூபாய் சன்மானம் கிடைத்தது. 2015 இன் அற்ப சந்தோஷங்கள் இவை.

நிறைவு :
வலைப்பதிவர் திருவிழா புதுக்கோட்டையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. இதன் சாதனை அரசுத் துறையையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இன்று பள்ளி கல்லூரிகளில் கணிப் பேரவை தொடங்கபடுகின்றன. வலைப்பூக்கள்  விக்கிபீடியா பதிவுகள் எழுத பயிற்சிகள் அளிக்கத் தொடங்கியுள்ளது தமிழ் இணைய பல்கலைக் கழகம். இனி வரும் ஆண்டுகளில் கணித் தமிழ்  மேலும் வளர்ச்சியுறும் என்று நம்பலாம்
       மழை வெள்ளத்தின் போது சமூக வலை தளங்கள் ஆற்றிய பணி குறிப்பிடத் தக்கது.  குறிப்பாக முகநூல்   வெட்டி அரட்டையாகவும் வீண் பொழுது போக்கும் களம் என்று அறியப்பட்ட  நிலையிலும் திடீரென்று ஒரு ஆவேசம் வந்தது போல் விழித்தெழுந்து இளைஞர்களையும் ஆர்வம் கொண்டுள்ளவர்களையும் ஒருங்கிணைத்து நிவாரணப் பணிகளுக்கு உதவியது மறக்க இயலாதது. உதவி செய்யும் உணர்வைத் தூண்டியதில் அதன் பங்கு முக்கியமானது. பல்வேறு தரப்பினர் ஓடிவந்து தன்னலம் கருதாது உதவி செய்ததை உலகம் அறிந்து கொள்ளவும் உதவியது சமூக வலைத் தளங்கள்.  அனைவரின் சார்பாக நன்றிகள்

எதிர்பார்ப்புகள்-2016
 கூகுள் மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் தமிழுக்கு ஆதரவு அளித்தாலும் அதிகப் பேர் பயன்பாட்டை வைத்துத்தான்  கூகுள் ,ஆட்சென்ஸ் வழங்கி வருகிறது. ஹிந்தி மொழி ஆட் சென்ஸ் வசதியை பெற்றுள்ளது போல தமிழும் பெற வேண்டுமாயின் இணையத்தில் அதிக அளவு தமிழைப் பயன்படுத்த வேண்டும். மின்துறை பதிவுத் துறை, போன்ற அரசுத் துறைகள்  தமிழ் ஆங்கிலம் இரண்டிலும்  வசதிகள் வழங்குகின்றன. அவற்றில் தமிழைப்பயன்படுத்த நாம் முயல வேண்டும். வங்கிகளின் ATM இல் தமிழ் பயன்பாடு உள்ளது அவற்றையும் நாம் பயன்படுத்தவேண்டும். நாம் கணினியில் இருக்கும் ஒவ்வொரு வினாடியும் நமது செயல்பாடுகள் அனுமதியுடனோ அனுமதி இன்றியோ தகவல்களாக சேகரிக்கப் படுகின்றன. இந்த தகவல்களின் அடிப்படையில் புள்ளி விவரங்கள் தயாரிக்கப் படுகின்றன. இவற்றை கணினி நிறுவனங்கள ஆராய்ந்து தங்கள் எதிர்கால  செயல்திட்டங்களை மேற்கொள்கின்றன, அதனால் நாம் தமிழ்ப் பயன்பாட்டை அதிகரித்தால் அதன் முக்கியத்துவம் கணினி நிறுவனங்களால் உணரப்படும் வாய்ப்பு  ஏற்படும் 

  ஆனால் வங்கி இணைய சேவைகளில் தமிழ்ப் பயன்பாடு காணப் படவில்லை. இவற்றையும் வலியுறுத்த வேண்டும்,கைபேசிகளில் தமிழ்ப் பயன்பாடு பரவலாக்கப் படவேண்டும். பெரிய சூப்பர் மார்க்கெட், மருந்துக் கடைகள் ,மருத்துவமனைகள், போன்றவற்றில் தமிழில் பில் வழங்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
இவை நிறைவேற நம் பங்கை அளிக்க முயற்சி செய்வோம்.

வலைப்பூவிலிருந்து முகநூல் தாவல்


 வலைப் பதிவர்கள் பலரும் முகநூலுக்கு சென்று விட்டதாக ஒரு குற்றச்சாட்டு  சொல்லப்பட்டு விடுகிறது . சமீபத்தில் "தீதும் நன்றும் பிறர் தர வாரா " என்ற வலைப்பூவில் தொடர்ந்து மூத்த வலைப் பதிவர் திரு ரமணி ஐயா அவர்கள் கூட முகநூலின் பலம் என்று ஒரு பதிவை எழுதி இருந்தார்.

 வலைப் பதிவில் பிரகாசித்த  பலர்  ஒவ்வொரு ஆண்டும்  முகநூலுக்கு இடம் பெயர்வது வாடிக்கையாக உள்ளது  நகரத்திற்கு குடி பெயர்ந்த கிராமத்தார் எப்போதாவது சொந்த ஊர் பக்கம் வருவது போல வலைப்பூவிலும் அவ்வப்போது பதிவுகள் இட்டு வருகின்றனர்.

  பதிவுலகம் இப்போது தொய்வுற்றுக் கிடக்கிறது.அதனால்தான் பலர் முக நூலுக்கு மாறுகிறார்கள் என்று கூறப்படுகிறது.  எது சிறந்தது என்ற விவாதமும் ஒப்பிடும் அவ்வப்போது செய்யப்படுகிறது.

     இரண்டு தளங்களும் வெவ்வேறானவை.ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை.  இருந்தாலும் சில  அம்சங்களை பார்ப்போம்.

   முகநூல் பதிவுகள் செய்ய சிறந்த ஞானமோ எழுத்தாற்றலோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. (இருப்பவர்கள் சிறப்பு கவனம் பெறுகிறார்கள் எனபதில் ஐயமில்லை) புகைப்படத்தை பதிவேற்றவோ, வாழ்த்துக்கள் சொல்லவோ, பிறர் கருத்துக்களை பகிரவோ தெரிந்திருந்தால் போதுமானது. சாதாரணர்களும் பங்கேற்க முடியும் என்பதே அதன் பலம்.. மேலும் பகிர்வது எளிதானது . இன்னொருவருடைய பதிவை பகிர்ந்தே லைக்குகள் பெறமுடியும். லைக் எனும் மந்திரச்சொல் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. அதுவும் கொடுக்கல் வாங்கல் வகையை சார்ந்தது என்பது நிதர்சனம். அதன் இன்னொரு சிறப்பு கைபேசியில் எளிதில் கையாள முடியும் என்பது. முகநூல் பதிவிட சிறப்புத் திறன் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. யார் வேண்டுமானாலும் வந்து போகக் கூடிய பூங்கா முகநூல். முகநூல் வாசகர்கள் பெரும்பாலும் மேலோட்டமான வாசிப்புத்தன்மை வாசகர்களாக இருக்கிறார்கள். வலைப்பூ வாசகர்கள் சற்று ஆழ்ந்த வாசிப்பு மேற்கொள்பவர்களாக இருக்கிறார்கள். 

    நான் என் முகநூலை  என் வலைப்பதிவு  இணைப்புக்காக மட்டும் பயன்படுத்தி வந்தேன். அதில் இருந்து வரும் பார்வையாளர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள்.அவர்களும் ஏற்கனவே நம் வலைப்பதிவு நட்பு வட்டத்தை சார்ந்தவர்களே . இது எனது அனுபவம். இது மற்ற வலைப் பதிவர்களுக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை 

     வலைப் பூக்களோ எழுத்தாற்றலை மையப்படுத்தி உள்ளது.அறிவியல் கருத்துக்கள், சிறப்பான கட்டுரைகள் படைப்புகள் போன்றவற்றிற்கு வலைப்பூவே சிறந்தது. வலைப்பூவைப் போல  முக நூலை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைக்க முடியாது . வலைப்பூவில் சுதந்திரம் சற்று கூடுதலானது. வலைப்பூவில் ஆவணங்களை இணைக்க முடியும். ஒரு பொருள் சார்ந்து தேடி அறிவது முகநூலில் கடினம். வலைப்பூ அதுக்கு வாகானது . எந்தக் காலத்திற்கும் ஏற்ற பதிவாக இருந்தாலும் பத்து நாட்கள் முன்பு எழுதிய பதிவிற்கு லைக் போட்டதாக முகநூல் சரித்திரம் இல்லை. நாம் (படித்தாலும் படிக்காவிட்டாலும்) தொடர்ந்து லைக் போடாவிட்டால் நம் பக்கம் யாரும் திரும்பிக் கூட பார்க்க  மாட்டார்கள். முகநூல், பேருந்தில் செல்லும்போது சாலையோர விளம்பரத்தை ரசித்து அடுத்த சில நிமிடங்களில் அது மறந்து போக வேறொன்று இடம் பிடிப்பது போன்றது. வலைப்பூக்கள் பல நாட்களுக்குப் பிறகு கூட தேடிபிடித்து படிக்கப் படுவது உண்டு 

        ஆர்வம் காரணமாக தொடர்ந்து எழுதிக் குவித்து விட்டு அடுத்து என்ன எழுதுவது என்று தெரியாமல் ஏற்படும் ஒரு மந்த நிலையே வலைப்பதிவர்கள் முகநூலுக்கு வரக் காரணம் என்பது என் கணிப்பு. தொடர்ந்து தரமான பதிவுகளை எழுதுவது என்பது சாத்தியமன்று. ஆனால் முகநூலில் இடும் ஒவ்வொரு இடுகையும் தரம் வாய்ந்ததாக இருக்கவேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பது இல்லை. காலையில் எழுந்து ஒரு காலை வணக்கம் போட்டு விட்டு முகநூலை உயிர்ப்போடு வைத்து கொள்ளலாம். வலைப்பூ எழுத கொஞ்சம் சிந்திக்க வேண்டும். சிந்தனைச்சோம்பல் முகநூல் பக்கம் வலைப் பதிவர்களையும் ஈர்க்கிறது. முகநூல் ஜனரஞ்சகமானது. வலைப்பூ கொஞ்ச தேர்ந்த வாசிப்பாளர் களுக்கானது. தரவுகள் சுட்டிக் காட்டுவதற்கு  ஏற்றது. வலைபூக்களுக்கென்று தனி வாசகர் வட்டம் உண்டு. முகநூல் பதிவை அதிகம் படித்துள்ளனர் என்பதை விட பார்த்துள்ளனர் என்றே பெருமை கொள்ள முடியும் . ஆனால் வாசிக்கும் வழக்கம் இல்லாதவர்களும் முகநூலில் இயங்க முடியும். என்பது அதன் சிறப்பாக இருக்கிறது. அவர்களது கவனத்தை ஈர்ப்பதற்கான காணொலிகள், படங்கள் நகைச்சுவைகள், செய்திகள் சுவாரசியமான சர்ச்சைகள், வதந்திகள், ஏராளமாக முகநூலில் உலா வருகின்றன.. Chat  செய்வதற்கான வசதியும் ஈர்க்கிறது. இதன் காரணமாகவே முகநூல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாட்ஸ் அப் வருகைக்குப் பின் முகநூலின் வசீகரம் குறைந்துள்ளது என்று கருதப்பட்ட நிலையில் வாட்ஸ் அப் ஐயும் விலைக்கு வாங்கி தன கைக்குள் வைத்துக் கொண்டது முகநூல் நிறுவனம் 

   குழுவாக இயங்குவது   இணையத்தில் சகஜமானது.பதிவர்களில் குழுவாக இயங்கியவர்கள்  முகநூலுக்கு தாவிநாளும் பழைய வலைபூ   நட்பு வட்டமே அங்கும் நீடிப்பதை காண முடிகிறது. இணைய செயல்பாடுகள் பெரும்பாலும் நட்பின் அடிப்படையில் தொடங்குகிறது தொடர்கிறது .எனது முகநூல் பதிவுகளை நண்பர்களால்தான் கவனிக்கப் படுகின்றன 

  இரண்டுமே நல்லவை அல்லாதவை நிறைந்தவை என்பது பொதுவானது. வலைப்பதிவுகள் அதன் தன்மைக்கேற்ற வகையில் சிறப்பாகவே உள்ளன. தரமாக எழுதப்படும் பதிவுகள் அதிக பார்வையாளர்களை ஈர்த்துக் கொண்டுதான் இருக்கின்றன .

  என்னதான் இலவசமாக இவற்றை பயன்படுத்த முடிகிறது என்றாலும் இதற்குள் ஒரு வியபாரத் தன்மை ஒளிந்துள்ளது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இரண்டையும் அதன் சிறப்பு அம்சங்களைப் புரிந்து கொண்டு பொழுதுபோக்காக மட்டுமின்றி பயனுள்ளதாகவும் தேவைக்கேற்பவும் பயன்படுத்த முயற்சி செய்வோம். 

 2016 ஆம் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 


******************************************************************

இன்னொரு சமூக வலைத்தளமான டுவிட்டர் பற்றியும் , வாட்ஸ் அப் பற்றியும் இன்னொரு பதிவில் விவாதிப்போம்