என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

2015ல் கிழித்தது என்ன? பதிவர்கள் முகநூலுக்கு தாவுவது ஏன்?


2015 இல்  கிழித்தது
சுவரில் தொங்கிக்கொண்டிருந்த 
இந்த தினசரி நாட்காட்டி
என்னைப் பார்த்து சிரித்தது
2015 ல் நீ கிழித்தது 
இவ்வளவுதான் என்று

***********

அற்ப சந்தோஷங்கள்

2015 எப்படி இருந்தது? எனது பதிவுகளைப் பொறுத்தவரை 2014 ஐ விட பரவாயில்லை .2014 இல் 55 பதிவுகள்தான் எழுதி இருந்தேன். 2015 இல் கொஞ்சம் அதிகமாக  65  கடந்து விட்டேன்.  இந்த எண்ணிகையை இன்னும் கொஞ்சம் அதிகரிக்க விருப்பமுண்டு.  2015 இல் குமுதத்தில் ஒரு கதையும் விகடன்.காம் இல் இரண்டு படைப்புகளும் புதிய தலைமுறையில் ஒன்றும்வெளியானது.  விகடனில் இருந்து 400 ரூபாய் சன்மானம் கிடைத்தது. 2015 இன் அற்ப சந்தோஷங்கள் இவை.

நிறைவு :
வலைப்பதிவர் திருவிழா புதுக்கோட்டையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. இதன் சாதனை அரசுத் துறையையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இன்று பள்ளி கல்லூரிகளில் கணிப் பேரவை தொடங்கபடுகின்றன. வலைப்பூக்கள்  விக்கிபீடியா பதிவுகள் எழுத பயிற்சிகள் அளிக்கத் தொடங்கியுள்ளது தமிழ் இணைய பல்கலைக் கழகம். இனி வரும் ஆண்டுகளில் கணித் தமிழ்  மேலும் வளர்ச்சியுறும் என்று நம்பலாம்
       மழை வெள்ளத்தின் போது சமூக வலை தளங்கள் ஆற்றிய பணி குறிப்பிடத் தக்கது.  குறிப்பாக முகநூல்   வெட்டி அரட்டையாகவும் வீண் பொழுது போக்கும் களம் என்று அறியப்பட்ட  நிலையிலும் திடீரென்று ஒரு ஆவேசம் வந்தது போல் விழித்தெழுந்து இளைஞர்களையும் ஆர்வம் கொண்டுள்ளவர்களையும் ஒருங்கிணைத்து நிவாரணப் பணிகளுக்கு உதவியது மறக்க இயலாதது. உதவி செய்யும் உணர்வைத் தூண்டியதில் அதன் பங்கு முக்கியமானது. பல்வேறு தரப்பினர் ஓடிவந்து தன்னலம் கருதாது உதவி செய்ததை உலகம் அறிந்து கொள்ளவும் உதவியது சமூக வலைத் தளங்கள்.  அனைவரின் சார்பாக நன்றிகள்

எதிர்பார்ப்புகள்-2016
 கூகுள் மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் தமிழுக்கு ஆதரவு அளித்தாலும் அதிகப் பேர் பயன்பாட்டை வைத்துத்தான்  கூகுள் ,ஆட்சென்ஸ் வழங்கி வருகிறது. ஹிந்தி மொழி ஆட் சென்ஸ் வசதியை பெற்றுள்ளது போல தமிழும் பெற வேண்டுமாயின் இணையத்தில் அதிக அளவு தமிழைப் பயன்படுத்த வேண்டும். மின்துறை பதிவுத் துறை, போன்ற அரசுத் துறைகள்  தமிழ் ஆங்கிலம் இரண்டிலும்  வசதிகள் வழங்குகின்றன. அவற்றில் தமிழைப்பயன்படுத்த நாம் முயல வேண்டும். வங்கிகளின் ATM இல் தமிழ் பயன்பாடு உள்ளது அவற்றையும் நாம் பயன்படுத்தவேண்டும். நாம் கணினியில் இருக்கும் ஒவ்வொரு வினாடியும் நமது செயல்பாடுகள் அனுமதியுடனோ அனுமதி இன்றியோ தகவல்களாக சேகரிக்கப் படுகின்றன. இந்த தகவல்களின் அடிப்படையில் புள்ளி விவரங்கள் தயாரிக்கப் படுகின்றன. இவற்றை கணினி நிறுவனங்கள ஆராய்ந்து தங்கள் எதிர்கால  செயல்திட்டங்களை மேற்கொள்கின்றன, அதனால் நாம் தமிழ்ப் பயன்பாட்டை அதிகரித்தால் அதன் முக்கியத்துவம் கணினி நிறுவனங்களால் உணரப்படும் வாய்ப்பு  ஏற்படும் 

  ஆனால் வங்கி இணைய சேவைகளில் தமிழ்ப் பயன்பாடு காணப் படவில்லை. இவற்றையும் வலியுறுத்த வேண்டும்,கைபேசிகளில் தமிழ்ப் பயன்பாடு பரவலாக்கப் படவேண்டும். பெரிய சூப்பர் மார்க்கெட், மருந்துக் கடைகள் ,மருத்துவமனைகள், போன்றவற்றில் தமிழில் பில் வழங்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
இவை நிறைவேற நம் பங்கை அளிக்க முயற்சி செய்வோம்.

வலைப்பூவிலிருந்து முகநூல் தாவல்


 வலைப் பதிவர்கள் பலரும் முகநூலுக்கு சென்று விட்டதாக ஒரு குற்றச்சாட்டு  சொல்லப்பட்டு விடுகிறது . சமீபத்தில் "தீதும் நன்றும் பிறர் தர வாரா " என்ற வலைப்பூவில் தொடர்ந்து மூத்த வலைப் பதிவர் திரு ரமணி ஐயா அவர்கள் கூட முகநூலின் பலம் என்று ஒரு பதிவை எழுதி இருந்தார்.

 வலைப் பதிவில் பிரகாசித்த  பலர்  ஒவ்வொரு ஆண்டும்  முகநூலுக்கு இடம் பெயர்வது வாடிக்கையாக உள்ளது  நகரத்திற்கு குடி பெயர்ந்த கிராமத்தார் எப்போதாவது சொந்த ஊர் பக்கம் வருவது போல வலைப்பூவிலும் அவ்வப்போது பதிவுகள் இட்டு வருகின்றனர்.

  பதிவுலகம் இப்போது தொய்வுற்றுக் கிடக்கிறது.அதனால்தான் பலர் முக நூலுக்கு மாறுகிறார்கள் என்று கூறப்படுகிறது.  எது சிறந்தது என்ற விவாதமும் ஒப்பிடும் அவ்வப்போது செய்யப்படுகிறது.

     இரண்டு தளங்களும் வெவ்வேறானவை.ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை.  இருந்தாலும் சில  அம்சங்களை பார்ப்போம்.

   முகநூல் பதிவுகள் செய்ய சிறந்த ஞானமோ எழுத்தாற்றலோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. (இருப்பவர்கள் சிறப்பு கவனம் பெறுகிறார்கள் எனபதில் ஐயமில்லை) புகைப்படத்தை பதிவேற்றவோ, வாழ்த்துக்கள் சொல்லவோ, பிறர் கருத்துக்களை பகிரவோ தெரிந்திருந்தால் போதுமானது. சாதாரணர்களும் பங்கேற்க முடியும் என்பதே அதன் பலம்.. மேலும் பகிர்வது எளிதானது . இன்னொருவருடைய பதிவை பகிர்ந்தே லைக்குகள் பெறமுடியும். லைக் எனும் மந்திரச்சொல் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. அதுவும் கொடுக்கல் வாங்கல் வகையை சார்ந்தது என்பது நிதர்சனம். அதன் இன்னொரு சிறப்பு கைபேசியில் எளிதில் கையாள முடியும் என்பது. முகநூல் பதிவிட சிறப்புத் திறன் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. யார் வேண்டுமானாலும் வந்து போகக் கூடிய பூங்கா முகநூல். முகநூல் வாசகர்கள் பெரும்பாலும் மேலோட்டமான வாசிப்புத்தன்மை வாசகர்களாக இருக்கிறார்கள். வலைப்பூ வாசகர்கள் சற்று ஆழ்ந்த வாசிப்பு மேற்கொள்பவர்களாக இருக்கிறார்கள். 

    நான் என் முகநூலை  என் வலைப்பதிவு  இணைப்புக்காக மட்டும் பயன்படுத்தி வந்தேன். அதில் இருந்து வரும் பார்வையாளர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள்.அவர்களும் ஏற்கனவே நம் வலைப்பதிவு நட்பு வட்டத்தை சார்ந்தவர்களே . இது எனது அனுபவம். இது மற்ற வலைப் பதிவர்களுக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை 

     வலைப் பூக்களோ எழுத்தாற்றலை மையப்படுத்தி உள்ளது.அறிவியல் கருத்துக்கள், சிறப்பான கட்டுரைகள் படைப்புகள் போன்றவற்றிற்கு வலைப்பூவே சிறந்தது. வலைப்பூவைப் போல  முக நூலை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைக்க முடியாது . வலைப்பூவில் சுதந்திரம் சற்று கூடுதலானது. வலைப்பூவில் ஆவணங்களை இணைக்க முடியும். ஒரு பொருள் சார்ந்து தேடி அறிவது முகநூலில் கடினம். வலைப்பூ அதுக்கு வாகானது . எந்தக் காலத்திற்கும் ஏற்ற பதிவாக இருந்தாலும் பத்து நாட்கள் முன்பு எழுதிய பதிவிற்கு லைக் போட்டதாக முகநூல் சரித்திரம் இல்லை. நாம் (படித்தாலும் படிக்காவிட்டாலும்) தொடர்ந்து லைக் போடாவிட்டால் நம் பக்கம் யாரும் திரும்பிக் கூட பார்க்க  மாட்டார்கள். முகநூல், பேருந்தில் செல்லும்போது சாலையோர விளம்பரத்தை ரசித்து அடுத்த சில நிமிடங்களில் அது மறந்து போக வேறொன்று இடம் பிடிப்பது போன்றது. வலைப்பூக்கள் பல நாட்களுக்குப் பிறகு கூட தேடிபிடித்து படிக்கப் படுவது உண்டு 

        ஆர்வம் காரணமாக தொடர்ந்து எழுதிக் குவித்து விட்டு அடுத்து என்ன எழுதுவது என்று தெரியாமல் ஏற்படும் ஒரு மந்த நிலையே வலைப்பதிவர்கள் முகநூலுக்கு வரக் காரணம் என்பது என் கணிப்பு. தொடர்ந்து தரமான பதிவுகளை எழுதுவது என்பது சாத்தியமன்று. ஆனால் முகநூலில் இடும் ஒவ்வொரு இடுகையும் தரம் வாய்ந்ததாக இருக்கவேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பது இல்லை. காலையில் எழுந்து ஒரு காலை வணக்கம் போட்டு விட்டு முகநூலை உயிர்ப்போடு வைத்து கொள்ளலாம். வலைப்பூ எழுத கொஞ்சம் சிந்திக்க வேண்டும். சிந்தனைச்சோம்பல் முகநூல் பக்கம் வலைப் பதிவர்களையும் ஈர்க்கிறது. முகநூல் ஜனரஞ்சகமானது. வலைப்பூ கொஞ்ச தேர்ந்த வாசிப்பாளர் களுக்கானது. தரவுகள் சுட்டிக் காட்டுவதற்கு  ஏற்றது. வலைபூக்களுக்கென்று தனி வாசகர் வட்டம் உண்டு. முகநூல் பதிவை அதிகம் படித்துள்ளனர் என்பதை விட பார்த்துள்ளனர் என்றே பெருமை கொள்ள முடியும் . ஆனால் வாசிக்கும் வழக்கம் இல்லாதவர்களும் முகநூலில் இயங்க முடியும். என்பது அதன் சிறப்பாக இருக்கிறது. அவர்களது கவனத்தை ஈர்ப்பதற்கான காணொலிகள், படங்கள் நகைச்சுவைகள், செய்திகள் சுவாரசியமான சர்ச்சைகள், வதந்திகள், ஏராளமாக முகநூலில் உலா வருகின்றன.. Chat  செய்வதற்கான வசதியும் ஈர்க்கிறது. இதன் காரணமாகவே முகநூல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாட்ஸ் அப் வருகைக்குப் பின் முகநூலின் வசீகரம் குறைந்துள்ளது என்று கருதப்பட்ட நிலையில் வாட்ஸ் அப் ஐயும் விலைக்கு வாங்கி தன கைக்குள் வைத்துக் கொண்டது முகநூல் நிறுவனம் 

   குழுவாக இயங்குவது   இணையத்தில் சகஜமானது.பதிவர்களில் குழுவாக இயங்கியவர்கள்  முகநூலுக்கு தாவிநாளும் பழைய வலைபூ   நட்பு வட்டமே அங்கும் நீடிப்பதை காண முடிகிறது. இணைய செயல்பாடுகள் பெரும்பாலும் நட்பின் அடிப்படையில் தொடங்குகிறது தொடர்கிறது .எனது முகநூல் பதிவுகளை நண்பர்களால்தான் கவனிக்கப் படுகின்றன 

  இரண்டுமே நல்லவை அல்லாதவை நிறைந்தவை என்பது பொதுவானது. வலைப்பதிவுகள் அதன் தன்மைக்கேற்ற வகையில் சிறப்பாகவே உள்ளன. தரமாக எழுதப்படும் பதிவுகள் அதிக பார்வையாளர்களை ஈர்த்துக் கொண்டுதான் இருக்கின்றன .

  என்னதான் இலவசமாக இவற்றை பயன்படுத்த முடிகிறது என்றாலும் இதற்குள் ஒரு வியபாரத் தன்மை ஒளிந்துள்ளது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இரண்டையும் அதன் சிறப்பு அம்சங்களைப் புரிந்து கொண்டு பொழுதுபோக்காக மட்டுமின்றி பயனுள்ளதாகவும் தேவைக்கேற்பவும் பயன்படுத்த முயற்சி செய்வோம். 

 2016 ஆம் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 


******************************************************************

இன்னொரு சமூக வலைத்தளமான டுவிட்டர் பற்றியும் , வாட்ஸ் அப் பற்றியும் இன்னொரு பதிவில் விவாதிப்போம் 40 கருத்துகள்:


 1. வலைப்பூ மற்றும் பேஸ்புக் பற்றி நீங்கள் கூறிய கருத்துக்கள்தான் என்னதும். பேஸ்புக்கில் சாட் வசதி மற்றும் மற்றவர்களின் பதிவை ஷேர் செய்து லைக் பெறுவதும்தான் முக்கியமாக இருப்பதால் அது மக்களை கவர்கிறது

  பதிலளிநீக்கு
 2. வலைத்தளத்தீற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைகிறது என்பது பலரின் எண்ணமாக இருக்கிறது ஆனால் நிதானமாக என் தளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறையாமல் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. என்ன எழுதிகிறீர்கள் அதை எப்படி பிரசெண்ட் பண்ணுகீறிர்கள் என்பதை பொறுத்துதான் வருபவர்களின் எண்ணிக்கை இருக்கிறது, வலைத்தளமும் பேஸ்புக் தளமும் வேவ்வேறு நோக்கம்முடையவை அது பற்றி பலருக்கும் தெளிவில்லாமல் இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாகச் சொன்னீர்கள் முரளி. நண்பர் மதுரைத்தமிழன் கருத்துடன் நானும் ஒத்துப் போகிறேன். நானும் அவரையும் உங்களையும் போல முகநூலில் இருக்கிறேனே தவிர அதில் எழுதுவதில்லை. என் வலைப்பக்கத்தில் எழுதுவதை அதில் சென்று இடுவதே என் வழக்கம். வலைப்பக்க ஆவணத்திற்கான தேவை இலக்கியவாதிகளால் மட்டுமே அறியப்படுகிறது. இதில் திரட்டிகளின் பங்கு முக்கியம் என்று கருதுகிறேன்.

   நீக்கு
 3. இன்று என் தளத்துக்கு வந்த பார்வைகளின் எண்ணிக்கை 700+ என்றால் நம்ப முடிகிறதா ?
  சிந்தித்து எழுதும் பதிவுக்கு வலைப் பதிவுதான் பெஸ்ட் என்று நினைக்கிறேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் உழைப்புக்கு ஏற்ற பலன் உண்டு என்பது நிச்சயம்

   நீக்கு
  2. தொடர்ந்து விடாமுயற்சியுடன் சுவாரசியமாக எழுவோர்க்கு தனி வரவேற்பு இருக்காததா செய்கிறது. வாழ்த்துக்கள் பகவான்ஜி

   நீக்கு
 4. வலைப்பதிவுதான் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும் முகநூல் டைம் பாஸ் செய்யவும் அவசர செய்திக்கும் உரிய இடம் .இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. //ஆர்வம் காரணமாக தொடர்ந்து எழுதிக் குவித்து விட்டு அடுத்து என்ன எழுதுவது என்று தெரியாமல் ஏற்படும் ஒரு மந்த நிலையே வலைப்பதிவர்கள் முகநூலுக்கு வரக் காரணம் என்பது என் கணிப்பு.//

  உண்மை.

  பதிலளிநீக்கு
 6. எனக்கும் வலைப்பதிவில் எழுதுவது தான் பிடித்த விசயம்.இருந்தும் அதற்காக நிறைய மெனக்கெட வேண்டியுள்ளது.முகநூலில் சில வரிகளில் எழுதி உடனே வெளியிட்டு விடலாம் என்பதால் அதில் எழுதுகிறேன்.வலைப்பூ மூலம் தான் நான்அறிமுகமானேன் என்பதால் இது எனக்கு கோச்சம் ஸ்பெஷல் தான். நன்றாக அலசியிருந்தீர்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. நல்லதொரு அலசல்.

  மென்மேலும் வாரப் பத்திரிகைகளில் உங்கள் படைப்புகள் வர வாழ்த்துகள். ஆனால் வாரப் பத்திரிகைகளின் மீதான மதிப்பு எனக்குக் குறைந்து விட்டது!

  வலைப்பூக்கள் - முக நூல் : நாங்கள் இரண்டிலும் இயங்குகிறோம். சொல்லப் போனால் ஓரளவு வெற்றிகரமாகவே இயங்குகிறோம் என்றே நினைக்கிறேன்! இரண்டு தளங்களையும் எப்படி உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று தெரிந்து விட்டால் போதும்!

  பதிலளிநீக்கு
 9. வலைப் பூ வே எனக்கு ஏற்றதாக இருக்கிறது ஐயா
  முகநூலில் என் வலைப் பூ பதிவுகளைப் பதிவிட மட்டுமே
  பயன்படுத்தி வருகின்றேன்
  வலைப் பூவில் பதிவுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கண்கூடாகக் காண்கிறேன்.என்னைப் பொருத்தவரை அதற்குக் காரணம்,பதிவர்கள் வலைப் பூவிற்கென நேரம் ஒதுக்க இயலாமைதான் என்று எண்ணுகின்றேன்
  இந்நிலை மாற வேண்டும் என்பதே என் விருப்பமாகும்
  நன்றி ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
 10. பல நல்ல மாற்றங்கள் இந்த ஆண்டில் நடக்கும்...

  பதிலளிநீக்கு
 11. வலைப்பூவுக்கும் முகநூலுக்குமான அடிப்பைட வித்தியாசங்களை மிக அருமையாக அலசியுள்ளீர்கள். வலைப்பதிவுக்கு நிச்சயம் கூட்டம் அதிகம்தான். ஆனால் எல்லாமே மேலோட்டமான தீற்றல்கள்தாம். அங்கே போய் மாட்டிக்கொண்டு வெளியில் வரமுடியாமல் தவிக்கிறவர்களும் இருக்கிறார்கள். வலைப்பூக்கள் என்பது ஒரு வலுவான தளம். இன்றைக்கு அதற்கு ஆதரவு குறைந்ததுபோல் தோன்றினாலும் நிலைத்து நிற்கக் கூடியது. அல்லது நிலைத்து நிற்பதற்கு நாமெல்லாம் என்னென்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்யவேண்டியவர்களாக இருக்கிறோம்.
  புத்தாண்டு அதுவும் வலைத்தளம் உபயோகப்படுத்துபவர்களின் சிந்தனையைத் தூண்டும் விதமாக எழுதியிருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 12. மேலேயுள்ளதில் இரண்டாம் வரியில் 'முகநூலுக்கு நிச்சயம் கூட்டம் அதிகம்தான்'
  என்று திருத்தி வாசிக்கவும்.

  பதிலளிநீக்கு
 13. பதிவர்கள் அனைவரைப் பற்றியும் ஒரே பார்வையில் மதிப்பீடு செய்வதால் ஏற்படும் தாழ்வு நிலையே இம்மாதிரியான மாற்றத்திற்கு காரணமென நான் நினைகிறேன்

  பதிலளிநீக்கு
 14. வலைப்பூவுக்கும் முகநூலுக்குமிடையே ஆன வித்தியாசத்தை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். எனக்கும் வலைப்பதிவுதான் ஏற்றதாக இருக்கிறது. பல தகவல்களை அறியத்தந்தமைக்கு நன்றி!
  த ம 7

  பதிலளிநீக்கு
 15. அருமையான அலசல் முரளி. என் முகநூல் பகிர்வுகளுக்கு வருபவர் ஒரு சில நண்பர்களே மேலும் எதையுமே படிக்காமல் நட்பைத் தக்க வைத்துக் கொள்ள உள்ள லைக் வசதி வலைப்பூவில் இல்லை. ஆனால் இப்போது ஏறத்தாழ வலைப்பூவிலும் ஆஹா அருமை என்று கூறிச்செல்பவர்கள் முகநூலை அதிகம் விரும்புவார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 16. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் முரளி சார்! :-)

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் நண்பரே நல்லதொரு அலசல்...
  முகநூலில் எழுதுவதற்க்கு விடயங்கள் அவசியமில்லை யார் வேண்டுமானலும் வந்து ஒரு குட்மார்னிங் போட்டு விட்டு படிக்கா விட்டாலும் 4 பேருக்கு லைக் போட்டு விட்டு அதை வளர்த்துக்கொண்டு இருப்பதாக நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள் விடயமில்லாதவர்கள் அவ்வழியே போகட்டும் நல்ல பதிவர்களும் ஏன் அவ்வழி ?

  மேலும் நான் ஆணித்தரமாக சொல்வேன் பதிவர்களுள் பிரிவு இருக்கின்றது முதலில் அதை மாற்ற வேண்டும் சிலர் சில பதிவுகளுக்குத்தான் போவேன் என்ற கொள்கையில் இருக்கின்றார்கள்.

  நல்ல கருத்தை எதிரி சொன்னாலும் பாராட்ட வேண்டும், தவறான கருத்தை நண்பன் சொன்னாலும் எதிர்க்க வேண்டும் இது எனது கொள்கை மட்டுமல்ல நடைமுறைப்படுத்தியும் வருகிறேன் இதனால் சில நண்பர்களை இழந்து இருக்கின்றேன் என்பதும் உண்மை.

  பொதுவாக எழுத்தாளனுக்கு உயர்ந்த சிந்தனைகள் வேண்டும் என்பது எனது கருத்து நண்பரே...

  நான் முகநூலை எனது பதிவுகளின் விளம்பரத்துக்கு மட்டுமே உபயோகப்படுத்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 18. நல்லதொரு அலசல்.

  ஃபேஸ்புக் - அவ்வளவாக பயன்படுத்துவதில்லை. பெரும்பாலும் எனது பதிவுகளின் இணைப்பு கொடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்துகிறேன். சில Status/புகைப்படங்கள் போடுவதுண்டு. அளவாக இருந்தால் எதுவுமே நல்லது.

  பதிலளிநீக்கு
 19. விரிவான அருமையான அலசல்
  முக நூல் வாடகை வீடு போலவும்
  பதிவினை சொந்த வீடு போலவும் தான்
  என்னால் உணரமுடிகிறது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 20. அலசல் பதிவு!
  தங்கள் கருத்தினை மறுக்க இயலாது...

  பதிலளிநீக்கு
 21. தங்கள் கூற்று முற்றும் உண்மையே!

  பதிலளிநீக்கு
 22. கடந்த வருடத்தின் தொகுப்பு அருமை.
  இந்த வருடம் அதிக பதிவுகள் போடபோவதற்காக என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துகள்.
  பேஸ்புக், வலைப்பூ... வித்தியாசம் .. நிதர்சனம். எனக்கு பேஸ்புக் என் கம்பெனிக்கான இலவச விளம்பரம் மற்றும் தொடர்பாடல்...இன்பாக்ஸில் சாட் வசதி இருப்பதால் உரையாட முடிவது என இருந்தாலும்... வலைப்பூவைபோல் தேடலுக்கு விடை தருவதாய் இல்லை.

  விளையாட்டு பிள்ளைகளின் கூடாரமாய் தான் பேஸ்புக் இருக்கின்றது.

  பதிலளிநீக்கு
 23. வலைப்பூ என்பது பாஸ்போட் விஸா இல்லாமல் உலகைச் சுற்றக்கூடியது. பேஸ்புக் ஒருவட்டத்துக்குள்ளேயே சுற்றுகிறது.

  பதிலளிநீக்கு
 24. நான் என் முக நூலை என் வலைப்பதிவு இணைப்புக்காக மட்டும் பயன்படுத்தி வந்தேன் .அதில் இருந்து வரும் பார்வையாளர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறாரார்கள்.அவர்களும் ஏற்கனவே நம் வலைப்பதிவு நட்பு வட்டத்தை சார்ந்தவர்களே . இது எனது அனுபவம். இது மற்ற வலைப் பதிவர்களுக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை //

  உங்கள் அலசல் அருமை. உங்கள் கருத்துகளே எங்களதும். வலைப்பூவே எங்களுக்கு சிறந்ததாகத் தெரிகின்ற்து. முகநூல் பதிவுகளை இணைக்க மட்டுமே. நல்ல விஷயங்களைச் சேர்க்கவும் மட்டுமே அல்லாமல் எழுதுவதில்லை. அதில்.

  உங்களுக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துகள்! தங்கள் படைப்புகள் மேலும் மேலும் பத்திரிகைகளில் வெளிவரவும் எங்கள் வாழ்த்துகள்!


  பதிலளிநீக்கு
 25. நல்ல ஆய்வு செய்து எழுதப்பட்ட பதிவு நன்றி அய்யா

  பதிலளிநீக்கு
 26. நல்ல ஆய்வு செய்து எழுதப்பட்ட பதிவு நன்றி அய்யா

  பதிலளிநீக்கு
 27. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

  - சாமானியன்
  saamaaniyan.blogspot.ftr

  எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
  http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

  பதிலளிநீக்கு
 28. ஏற்கமுடிகிற கருத்துக்கள். நன்றாக அலசியிருக்கிறீர்கள்.

  வலை தொடங்கிய புதிதில் இதே போன்ற கருத்துக்கள் வலை பற்றியும் வலம் வந்த நினைவு. வலையில் எழுத ஆற்றல் தேவையில்லை என்ற கருத்து அப்போது நிலவியது.
  எல்லாமே நிரந்தரம். எதுவுமே நிரந்தரமில்லை.

  வலை தொய்ந்திருப்பதாக நினைக்கிறீர்களா?

  பதிலளிநீக்கு
 29. புத்தாண்டு வாழ்த்ததுக்கள்!

  பதிலளிநீக்கு
 30. புத்தாண்டு வாழ்த்ததுக்கள்!

  பதிலளிநீக்கு
 31. இன்றுதான் எனக்கு இந்த பதிவை ஆற அமர உட்கார்ந்து படிக்க முடிந்தது. நல்ல அலசல். வலைப்பதிவு மற்றும் ஃபேஸ்புக் – இரண்டும் இருகோடுகள் போல விவாதங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 32. Facebook -only people who were added as friends can read, Blogger-anybody can read, and therefore has got more reach than FB.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. facebook இல் நட்பில் இல்லாதவர்களும் பார்க்க முடியும். ஆனால் facebook இல் லாக் இன் செய்திருக்க வேண்டும். ஆனால் blog படிப்பதற்கு எந்தவித லாக் இன் னும் தேவை இல்லை . இணைய இணைப்பு மட்டும் போதுமானது. அது ப்ளாக்கின் கூடுதல் பலம் .

   நீக்கு
 33. வணக்கம்
  அண்ணா
  விரிவான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895