என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 5 ஜனவரி, 2016

தமிழ்மணம் மர்மங்கள் விலகுமா?


  எனது முந்தைய பதிவில்( 2015ல் கிழித்தது என்ன? பதிவர்கள் முகநூலுக்கு தாவுவது  ஏன் ) முகநூல். வலைப்பூக்கள் பற்றி எழுதி இருந்தேன்.   கொஞ்சம் விரிவாக கருத்துக்களை,படைப்புகளை, கட்டுரைகளை பதிவு செய்ய வலைப்பூக்கள் வசதியாக இருப்பதாக வலைப்பூ எழுதுபவர்களின் கருத்தாக உள்ளது. புதிதாக முகநூலில் நுழைவோருக்கு    நண்பர்கள் சேர்க்க பட்டியல் காட்டப்படுகின்றன. அவற்றில் நாம் அறிந்தவர்களோ நண்பர்களோ இருப்பின் தேர்ந்தெடுத்து முகநூலில் நட்புக் கோரிக்கை வைத்து நண்பர்களை இணைத்துக் கொள்ளலாம்.
    புதிதாக வலைப்பூ எழுதுபவர்கள் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்வது கடினமாக ஒன்றாக உள்ளது. பிற வலைப்பூக்களுக்கு  சென்று கருத்திடுவது அவர்களுடைய  வலைதளத்தில் இணைவது திரட்டிகளில் இணைப்பது  இவற்றின் மூலமாக மற்றவர்களின் பார்வையில் படுகிறார்கள்.. 
       தான் கஷ்டப்பட்டு எழுதிய பதிவு மற்றவர்களால் படிக்கப் படவேண்டும் என்று விரும்பாதவரும் உண்டோ? . தனது திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்க  வேண்டும்  என்று படைப்பாளிகள் விரும்புவது இயல்பானதுதானே!.

   தொடக்க நிலைப் பதிவர்கள் பெரிதும் நம்பி இருப்பது திரட்டிகளையே. பல திரட்டிகள் இருந்தாலும் தன்னிகரற்று விளங்குவது தமிழ்மணம் மட்டுமே. பல திரட்டிகள் காணாமல் போய்விட தமிழ்மணம் மட்டுமே இன்னும் செயல் பட்டு வருகிறது . அது இன்றும் தடங்கலின்றி இயங்கி வருவதற்கு அதன் அற்புதமான தானியங்கி கட்டமைப்புதான் காரணம் என்று நினைக்கிறேன். பதிவுகளை தானாக இணைத்துக் கொள்ளும் வசதி, தரவரிசைப் பட்டியல், வாக்குப் பட்டை, வாசகர் பரிந்துரை குறிசொற்கள் வாயிலாக பதிவுகளை காட்டுதல், மறுமொழி திரட்டுதல் தமிழ்மண மகுடம்  இன்றைய சூடான பதிவுகள், இந்த வார சூடான பதிவுகள் வாரந்தோறும்  முதல் 20 தரவரிசைப் பட்டியல்  போன்றவை இத சிறப்பு அம்சங்களாக அமைந்துள்ளன.வேறு எந்த திரட்டிகளும் இது போன்ற வசதிகளை பெற்றிருக்கவில்லை. இத்தனை சிறப்புகளை உடைய தமிழ்மணம்  சரியாக பரமாரிக்கப் படுகிறதா என்ற ஐயம் அவ்வப்போது வலைப்பதிவர்களுக்கு எழுந்து கொண்டுதான் இருக்கிறது. அது நிறுவனமா? தனிநபருக்கு சொந்தமானதா? தற்போது அதன் நிலை என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது. அதன் இணைப்புக்காக பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதே அது ஏன்? தமிழ்மண நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் யார்? திரட்டி நிர்வகிப்பில் அதிக ஆர்வம் காட்டாதது ஏன்? போன்ற கேள்விகளுக்கான விடை நம்மிடம் இல்லை.

 .  திரட்டி நடத்துவதால் பெரிய பயன் ஏதும் இல்லை என்பது ஒரு காரணமாக இருக்கக் கூடும் . மேலும்  நிர்வகிக்க பொருட்செலவும்  நேரமும் தேவைப்படும் .நிர்வாகிகள் பலரும் வெவ்வேறு தொழில் சார்ந்து இருக்கலாம். அவர்கள் நேரம் கிடைக்கும்போதுதான்  தமிழ்மண  செயல்பாடுகளை  கவனிக்க முடியும் என்ற நிலையில் உள்ளனர் என்றே நினைக்கிறேன். இதற்கென்று ஆட்களை நியமித்து நடத்த வேண்டுமென்றால் அதற்கான பொருட்செலவுக்கு வழிவகைகள் செய்யப்படவேண்டி  இருக்கும். அதற்குரிய வருமானம் திரட்டிகளில் கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்பது ஐயமே.
      இப்போதும் எனக்கு தமிழ்மணம் வாயிலாகத்தான் அதிக வாசகர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். பிரபலங்களுக்கும் ஏற்கனவே வளர்ச்சி அடைந்தவர்களுக்கும் திரட்டிகளின் உதவி தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்க நிலை வலைப் பதிவர்களுக்கு திரட்டிகளின் உதவி அவசியமானது..  பல  திரட்டிகள் செயல்படாத நிலையில் தமிழ்மணமும் பாராமுகமாய் இருப்பது புதிய வலைப் பதிவர்களுக்கு  ஒரு குறையாகவே இருக்கிறது  
  கிட்டத்தட்ட 9 மாதங்களாக தமிழ் மணத்தில் புதிய வலைப் பூக்கள் இணைக்கப் படாமல் உள்ளது . தமிழ்மணத்தில் இணைவதற்காக காத்திருப்போர் பட்டியலில்  180 க்கும் மேற்பட்டவர் உள்ளனர். டிசம்பர் கடைசி வாரத்தில் தமிழ்மண பக்கத்தை  கவனித்தபோது தமிழ் மண முகப்பில் புதிய பதிவர்களின் பதிவுகள் காட்சி அளித்தது மகிழ்ச்சியை தந்தது ஆனால் அவற்றை  உற்று நோக்கிய போது ஒரு உண்மை புலப்பட்டது. சமீபத்தில் தமிழ் மண இணைப்பு கோரியவர்களுக்கு அதாவது நவம்பர் டிசம்பர் மாதத்தில் கோரியவர்களுக்கு மட்டும்  தமிழ் மணத்தில் இணைக்கப் பட்டுள்ளது.. ஆனால் முன்னதாக   மார்ச் மாதத்தில் கோரியவர்களின் வலைப்பூ கூட இன்னும் இணைக்கப் படாமல்இருக்கிறது. மற்ற வலைப் பதிவுகளை ஏன் இணைக்கப்படவில்லை என்று தெரியவில்லை

  .  தமிழமணம் வெள்ள நிவாரணத்திற்காக ஒரு பக்கத்தை உருவாக்கி இருந்தது  யாருக்கேனும் தெரியுமா? டிசம்பர் 7 அன்று தமிழ்மண நிர்வாகம் கடலுரை சுற்றியுள்ள கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டதை வரைபடத்தில் சுட்டிக் காட்டி ஒரு பதிவு வெளியிட்டிருந்தது . அது தமிழ்மண முகப்பில் கூட வெளியாகி  இருந்ததா எனத் தெரியவில்லை. இரண்டு பேர் மட்டுமே அந்தப் பதிவிற்கு கருத்திட்டிருந்தார்கள் . ஒன்று கில்லர்ஜி, மற்றொருவர் ராஜநாடராஜன்...ஆனால் அந்த முயற்சி முழுமை பெற்றதா என அறிய முடியவில்லை. இந்தப் பதிவின் மூலம் நாம் அறிவது என்னவெனில் தமிழ்மண நிர்வாகம் அவ்வப்போது செயல்பாட்டில் ஈடுபடுகிறது என்பதே. 
     திரட்டிகளில் தனித் தன்மை உடைய தமிழ்மணம் மீண்டும் முழு வீச்சுடன் செயல்படவேண்டும் என்பதே பெரும்பாலான வலைப் பதிவர்களின் எண்ணம். தமிழ் மணம் மீதான சர்ச்சைகள் நான் பதிவு எழுத வருபவதற்கு முன்பே இருந்து வருகிறது. ஒரு திரட்டி, வலைப்பதிவர் அனைவரையும்  எல்லோரையும் திருப்திப் படுத்தும் வகையில் உருவாக்க முடியாது. ஏதேனும் சில விதிமுறைகளை பின்பற்றித் தான் கட்டமைக்கப் படவேண்டும். அந்த விதிமுறைகள் சிலருக்கு சாதகமாகவும் சிலருக்கு பாதகமகவும் அமைவதும் தவிர்க்க இயலாததே. அதனால் குறைகூறுபவர்களை மனதில் கொள்ளாமல் தமிழ்மணம் தொய்வின்றி செயல்படும் ஆண்டாக 2016 இருக்கும் என்று நம்புவோம்.

    டிசம்பர் 2014 இல் தமிழ்மணத்தில் இணைக்கப் படாத வலைப் பதிவர்களின் பட்டியலை சுட்டிக்காட்டி  தமிழ் மணத்திற்கு கோரிக்கை விடுத்தேன். காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக தமிழ் மனம் 233 வலைப்பூக்களை ஒரே நாளில் இணைத்து தமிழ்மணம் .
  தற்போது கீழ்க்கண்ட 185 வலைப்பூக்கள் இணைப்புக்காகக் காத்துக் கிடக்கின்றன. இவற்றை தமிழ்மணத்தில் விரைவாக இணைக்கும்படி  பதிவர்கள் சார்பாக தமிழ்மண நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன்
பட்டியலை முழுதாக பார்க்க வலது பக்கத்தில் ஸ்லைடரை நகர்த்திக் கொள்ளவும்
காத்திருப்போர் பட்டியல் ====================================================================

கொசுறு 1: இந்த தமிழ் மணப் பட்டை இணைப்பது புதியவர்களுக்கு ஒரு அவஸ்தை. இணைத்தாலும் வேலை செய்யாமல் வேடிக்கை காட்டும். புதியவர்களுக்கு மட்டுமல்ல பல பழைய பதிவர்களின் பதிவுகளிலும் தமிழ்மண வாக்குப் பட்டை வேலை செய்யாமல் இருக்கிறது. திண்டுக்கல் தனபாலன், நான் , மற்றும் சில தொழில் நுட்பப் பதிவர்கள் பலருக்கு தமிழ் மணப்பட்டை இணைத்து தந்திருக்கிறோம். யாரேனும் உதவி தேவைப்பட்டால்  நீங்கள் விரும்பினால் உங்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் 


கொசுறு 2.புதிய திரட்டி ஒன்று உருவாகிக் கொண்டிருப்பதாக திண்டுக்கல்  தனபாலன் முகநூலில் தெரிவித்துள்ளார். நல்ல பதிவுகள் வாசகர்கள் சென்றடைய வேண்டும் அது எவ்வகையிலும் நடந்தாலும் நல்லதுதான். 2016 இல் இன்னும் நிறைய படைப்புகளை அளித்தும் வாசித்தும் இணையத் தமிழ் வளர்க்க நம் பங்கை ஆற்றுவோம்.

கொசுறு 2: இன்ட்லி திரட்டியின் கருவிப்பட்டை இணைத்துள்ள ஒவ்வொரு வலைப்பூவும் திறக்க அதிக நேரம் எடுக்கிறது. காரணம் இன்ட்லி திரட்டி  இப்போது இயக்கத்தில் இல்லை.  எனவே முடிந்தவரை அதை நீக்கி விடுங்கள். அதை நீக்கிவிட்டால் பாதகம் ஏதுமில்லை. ஒருவேளை மீண்டும் இன்ட்லி செயல்பாட்டாலும் நேரடியாக அதன் வலை தளத்தில் சென்று உங்கள் பதிவுகளை இணைத்துக் கொள்ள முடியும்
இன்ட்லி  நீக்கும் வழி முறை யை அறிய கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்யவும் .உதவி தேவைப்படின் தொடர்பு கொள்ளவும் 
இன்ட்லியால் ஒரு இன்னல்


=======================================================================

47 கருத்துகள்:

 1. தெளிவான விளக்கங்கள் நண்பரே நான் அறிந்த வரையில் தமிழ் மண ரேங்க் நம்பர் பகலில் ஒரு மாதிரியும், நள்ளிரவில் வேறு மாதிரியாகவும் காட்டுகிறது
  என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி நண்பரே
  இந்த பதிவை தமிழ் மணத்தில் இணைக்க முயன்றேன் முடியவில்லை
  வாக்களிக்க பிறகு வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 2. அற்புதமாக தமிழ்மணத்தில் உள்ள நிறை குறைகளை அலசி ஆராய்ந்து இருக்கிறீர்கள். தமிழ்மணம் அடிக்கடி தகராறு செய்கிறது. இப்போது கூட தங்கள் தளத்தின் ஓட்டுப் பட்டையை காணவில்லை. அதனால், வாக்களிக்க முடியவில்லை. இனியாவது திறம்பட தமிழ்மணம் செயல்பட்டால் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா! உங்கள் தளத்திலுமா? அப்படின்னால் நான் ஜூஜூபி தானே செந்தில் குமார்!?இப்போது தான் குமாருடன் இதைபற்றி சாட்டிங்கில் பேசிகிட்டிருக்கேன்!

   நீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. என் போன்ற புதியவர்களில் கேள்விகளுக்கு விடையாக உங்கள் பதிவு இருக்கின்றது.அதற்காக நன்றி!

  தமிழ் மண இணைப்புக்காக நான் நவம்பரில் இணைத்தேன் நேற்றுத்தான் இணைத்ததாக பதில் மெயில் வந்தது. சந்தோஷம், ஆனால் என்னால் என் பதிவுகளுடன் தமிழ் மண இணைப்பு பட்டையை இணைக்க முடியவில்லை எனும் பிரச்சனை இன்னும் தொடர்கின்றது. நேற்றைய மாற்றங்களில் என் வலைப்பூ இணைக்கப்பட்டது என சந்தோஷ்ப்பட்டால் குமாரின் மனசு தளம் அதிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றது என்கின்றார்.

  அது நிறுவனமா? தனிநபருக்கு சொந்தமானதா? தற்போது அதன் நிலை என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது. அதன் இணைப்புக்காக பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதே அது ஏன்? தமிழ்மண நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் யார்? திரட்டி நிர்வகிப்பில் அதிக ஆர்வம் காட்டாதது ஏன்? போன்ற கேள்விகளுக்கான விடை நம்மிடம் இல்லை.எனும் ஆதங்கம் சரியானதே!

  தமிழ் மொழிக்காக இத்தனை ஆர்வமாய் திரட்டியொன்றை ஆரம்பித்தவர்கள் அதனை தொடர்வதிலும் சற்று நேரம் செலவிட்டால் நலமாயிருக்கும்.

  வானவில்,வீடு திரும்புதல் போன்ற வலைப்பூக்கள் ஏற்கனவே தமிழ் மணத்தில் இணைக்கப்பட்டிருந்ததே?

  மொத்தத்தில் அனைத்துமே குழப்பமாய் இருக்கின்றது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த வீடு திரும்புதல் வேறு . பழையது வீடு திரும்பல்வேறு அந்த வலைபதிவின் சொந்தக் காரர் மோகன் குமார்.அவர் புகழ் பெற்ற பதிவர் . நீண்ட நாட்கள் தமிழ் மணம் முதல் இடத்தில் இருந்த பெருமை பெற்றவர். தற்போது அதிகம் எழுதுவதில்லை. அவ்வப்போது எழுதி வருகிறார். ஒரே பெயரில் பல வலைபூக்கள் இருக்கின்றன, நாம் வைக்கும் பெயர் ஏற்கனவே உள்ளதா என்பதை தேடிப் பார்த்து பின்பு பெயர் வைத்தல் நல்லது. தென்றல் வானவில் போன்றவை அவற்றில் சில

   நீக்கு
 5. கிட்டத்தட்ட 2014 பதிவின் மீள்பதிவு போல இருக்கிறது. 'பதிவர் திரட்டி' என ஒன்று வந்திருக்கிறது. எங்கள் தளத்தைக் கூட அதில் இணைத்தேன். தமிழ்மனத்தின் கட்டணச் சேவையில் எத்தனை பேர்கள் இணைந்திருப்பார்கள்? அவர்களுக்கும் நீங்கள் சொல்வது போல பொருள் நஷ்டம் போலும். மேலும் இப்போதெல்லாம் தமிழ்மணம் வாக்களிக்க நிறைய நேரம் எடுக்கிறது.

  நாங்கள் கூட திண்டுக்கல் தனபாலன் உதவியால் சமீபத்தில்தான் தமிழ்மண வாக்குப் பட்டை பெற்றோம்!

  பதிலளிநீக்கு
 6. தமிழ் மணம் பற்றிய விரிவான அலசல். நல்லதே நடக்கும் என நினைப்போம்.

  பதிலளிநீக்கு
 7. தமிழ் மண திரட்டியை உருவாக்கி நடத்தி வரும் திரு .காசி ஆறுமுகம் பற்றி ,ஒரு முறை ஜோதிஜி அவர்கள் பதிவொன்றை எழுதி இருந்தார் .சேவையாகவே பெரும்பாலான திரட்டிகள் நடத்தப் படுகின்றன ,அவருடைய வாரிசுகள் தற்போது நிர்வகித்து வருகிறார்களென நினைக்கிறேன் .குறைந்தது மாதம் ஐந்தாயிரம் ரூபாய் ,மற்றும் உழைப்பு தேவைப் படுவதால் அவ்வளவாக ஈடு பாட்டுடன் நடத்தப் படவில்லை என்று தெரிகிறது .தமிழ் மணத்தின் சேவை பதிவர்களுக்கு தேவை ,நல்லவிதமாய் தொடர்வார்களென நம்புகிறேன் !

  பதிலளிநீக்கு
 8. Hello dears
  I am selvaraju from chennai(bvselvaraju@gmail.com).
  Mr.Raja Natarajan ( http://parvaiyil.blogspot.in/ ) passed away on 3rd Jan 2016 due to heart attack in Kuwait. His body is going to reach coimbatore on 7th Jan 2016 about 4 AM. Praying to get his soul RIP. For more details please contact my uncle(+ 91 9840175869)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதானா? ஏற்கனே நம்பள்கி இந்த செய்தியை வெளியிட்டிருந்தார்.தகவலுக்கு நன்றி

   நீக்கு
  2. நானும் பார்த்தேன் ஜி வருத்தமான விடயம்

   நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  4. murali: I had to remove my earlier comment here as I gave some wrong information about Raja natarajan's age (he was 63 ) and identification etc based on my "misunderstanding".

   People who really wants to know more about him and his personal life should follow this link and read the "பின்னூட்டங்கள்" இங்கே!

   http://parvaiyil.blogspot.com/2015/12/blog-post_30.html

   My apologies!

   நீக்கு
 9. தமிழ்மணமா புதிர் மணமா என்னும் பதிவு ஒன்று விலாவாரியாக எழுதி இருந்தேன் அதன் சுட்டி இதோ. http://gmbat1649.blogspot.in/2015/08/blog-post_5.html பொதுவாக யாராவது உதவுவார்களா என்று கேட்டு எழுதி இருந்தேன் இதற்கான பதிவை விரைவில் எழுதுகிறேன் என்று திண்டுக்கல் தனபாலன் பின்னூட்டமிட்டிருந்தார். இதுவரை ஏதும் எழுதியதாகத் தெரியவில்லை. எனது இன்னொரு தளமான பூவையின் எண்ணங்களில் எழுதுவதை நிறுத்தி இருக்கிறேன் பிர்ரசனைகள் என் பதிவில் தெளிவாகவே எழுதி இருக்கிறேன் நன்றி.

  பதிலளிநீக்கு
 10. 'புதிய திரட்டி ஒன்று உருவாகிக் கொண்டிருப்பதாக திண்டுக்கல் தனபாலன் முகநூலில் தெரிவித்துள்ளார்" ஆம அந்த முயற்சியில் இருப்பது புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்க நண்பர்கள்தான். விரைவில் அறிவிப்பு வெளிவரும்.
  தமிழ்மணம் சிறந்தது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் பதில்தர செயல்படுத்த இவ்வளவு தாமதமாகும்போது அதன் பயன் குறைந்துவிடும் என்பதில் நான் உறுதியோடு இருப்பதால் இந்த முடிவு! வாருங்கள் செயல்படுத்துவோம். வலைப்பதிவர் குறை தீர்ப்போம்!

  பதிலளிநீக்கு
 11. உங்கள் காத்திருப்போர் பட்டியல் செப்டம்பர் 2015உடன் நிற்கிறது. அதன் பின் னும் அக்டோபரிலும் -வலைப்பதிவர் விழாவை ஒட்டி- புதிதாகத் தொடங்கிய வலைப்பக்க எண்ணிக்கையே எனக்குத் தெரிந்து ஒரு 100ஐத் தாண்டும்! இவ்வளவு பேரையும் காத்திருக்க வைப்பது வலையுலகையே தடுப்பதாகிவிடும் என்பதாலேயே நாங்கள் ஒரு திரட்டி தொடங்க நினைத்திருக்கிறோம். நல்ல ஆக்கபூர்வமான யோசனைகளை உங்களிடமிருந்தும், மற்ற நம் நண்பர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறோம். பதில் தருக! மற்றவரும் உதவுக! இணைந்து எழுவோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொங்கல் அன்று பொங்க வேண்டும் ஐயா...

   நீக்கு
  2. காத்திருப்போர் பட்டியலில் உள்ள 185 பேரின் அனைவரின் முழுப்பட்டியலும் இணைத்துள்ளேன்.வலப்புறம் ஸ்லைடரை கிழே இழுத்தால் 185 பேரின் ப்விவரங்களை காணலாம். இந்தப் பட்டியலை எகசல் பைலாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.(வளைவு அம்புக்குறியை நகர்த்தினால் டவுன்லோட் ஆகிவிடும் .டிசம்பர் இறுதி வாரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் பேராக சுமார் 30 பேருக்கு மேல் இணைத்துள்ளது தமிழ்மணம். மற்றவற்றை விரைவாக செய்யுமா என்று தெரியவில்லை
   புதிய திரட்டிக்கு வாழ்த்துக்கள் . திரட்டியை வலைத்தமிழ் மேன்பாட்டுக்கு பயன்படுத்துவோம்

   நீக்கு
  3. நான் நினைக்கின்றேன்,வலைப்பூ தொடங்கி விட்டு தொடராமல் இருப்பவர்கள்,மதம்,இனதுவேசத்தோடு பதிவு ஆரம்பித்து இருப்பவர்கள் என கண்காணித்து அதற்கு ஏற்ப இணைப்பு தருகின்றார்கள் போலும் ஐயா.

   காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பல ஒன்றிரண்டு பதிவுகளுடன் மூன்று நான்கு மாதங்களாக புதிய பதிவுகள் இன்றியும் இருக்கின்றது.

   ஆர்வத்தில் வலைப்பூ தொடங்கி விட்டு உடனே திரட்டிகளில் இணைத்தாலும் பதிவுகளின் தன்மை,தரம் பார்த்து இணைப்பது என்றுமே நல்லது தான் ஐயா.

   நீக்கு
  4. எனிவே! தனபாலன் சாரின் முயற்சி வெற்றி பெற வேண்டும்.என் வாழ்த்துகள் என்றும் உண்டு ஐயா.வலையுலகில் ஆக்டிவ்வாக இருப்பவர்கள் திரட்டியொன்றினை ஆரம்பித்து அதை தொடர்ந்திடுவது ரெம்ப நல்ல விடயம்.பொருளாதார ரிதியில் தொடரும் சிரமம் இருப்பின் அதையும் பகிர்ந்தால் எம்மை போல் வெளி நாட்டில் இருப்போர் உதவி செய்ய முடியும் தானே?

   நீக்கு
  5. காத்திருப்பு பட்டியலில் உள்ள 185 பேரும் அப்படிப் பட்டவர்கள் அல்ல.முதலில் இணைப்பு கோரியவர்களுக்கு இன்னும் தரப்படவில்லை. பின்னோக்கி இணைப்பு அனுமதி வழங்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. விரைவில் முழுவதும் அனுமதிக்கப் பட்டுவிடும் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 12. வலைச்சித்தர் திரட்டி முயற்சியில் இருக்கிறாரா
  வாழ்த்துவோம்
  நன்றி ஐயா
  தம+1

  பதிலளிநீக்கு
 13. தமிழ்மணம் என்னை நீக்கியிருப்பதால் அதன் செயல்பாடுகள் பற்றி தற்சமயம் அறிய முடியவில்லை! இரண்டு முறை மீண்டும் சேர்க்கக் கூறி மின்னஞ்சல் அனுப்பியும் பதில் இல்லை! புதிய திரட்டிகள் நிறைய வருகின்றன. இடையில் நின்று போகின்றது. புதுக்கோட்டை நண்பர்களின் திரட்டியாவது தொடர்ந்து பதிவர்களுக்கு பயனுறும் வகையில் இயங்கினால் நன்றாக இருக்கும். பதிவர்களும் அதற்கு பூரண ஒத்துழைப்பு நல்க வேண்டும். நன்றி!

  பதிலளிநீக்கு
 14. தமிழ்மணம் பற்றிய உங்களது முந்தைய பல்வேறு பதிவுகளின் சாராம்சம் இந்த பதிவு என்று நினைக்கிறேன். புதிய திரட்டி ஒன்று உருவாகிக் கொண்டிருப்பதாக திண்டுக்கல் தனபாலன் சொன்ன செய்தியின் மேலதிக விவரங்களைத் தெரியப்படுத்தவும்.

  பதிலளிநீக்கு
 15. http://parvaiyil.blogspot.in அரபு நாடுகள் ரொம்ப மோசமா?
  அரபு நாடுகளில் மனித உரிமை குறித்த குறைகள் இருக்கலாம்.ஆனால் மரணம் போன்ற சூழலில் அவர்கள் மனிதாபிமானத்துடனே நடந்து கொள்கிறார்கள் என்ற எனது பின்னூட்டத்திற்கு பதிவர் சுவனப்பிரியன் கோவிக்கு எதிர் கேள்வியொன்றை போட்டிருந்தார்.கூடவே பின்னூட்ட வேகநரி உயிருடன் பெண்களை கூட வேலைக்கு போன ஆசிய இஸ்லாமிய பெண்கள் உட்பட துன்புறுத்தி இன்புறும் அரபு கொடுமைகாரர்கள் இறந்து போன பின்பு மட்டும் மனிதாபிமானத்துடன் நடப்பார்கள் என்று பதில் சொல்லியிருந்தார்.இவற்றிற்கு சில விளக்கங்கள் தருவது எனது அனுபவத்தையும் சொல்வது யாருக்காவது பயனுள்ளதாக இருக்க கூடும்.

  இறப்பு விசயத்தில் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்கிறார்கள் என்பது மருத்துவமனை,மார்ச்சுவரி,அரசு துறை சார்ந்த மரணசான்றிதழ் அலுவலகம் மற்றும் விபத்து எனும் பட்சத்தில் உள்துறையின் போலிஸ் சர்டிபிகேட் போன்றவற்றை துரிதப்படுத்துகிறார்கள் என்று அர்த்தம்.பணிப்பெண்கள் வன்கொடுமையென்பது தனிப்பட்ட ஒரு மனிதனின் வக்கிரகம் என்ற புரிதல் வேண்டும் வேகநரி.வளைகுடா நாடுகளில் பணிபுரிவோர் பிரச்சினைகள் பற்றி ஏற்கனவே சொல்லியாகி விட்டது. எனவே எதிர்பாரா மரணம் குறித்து மட்டும் இங்கே பேசுவோம்.

  நம்பிக்கையே வாழ்க்கையென்ற நம்பிக்கையிலும் கனவிலும் யாரும் எதிர்பாராத மரணம் குறித்தோ அப்படியான சூழலில் என்ன செய்யவேண்டும் என்ற அடிப்படை விசயங்களைக் கூட யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. கல்லூரிக்காலம் தொட்டு வாழ்வோடு இணைந்து வந்த உயிர் நண்பன் இறக்கும் வரை நானும் கூட அப்படித்தான். இருந்தேன்.தவ்ஹித் ஜமாத்தை சார்ந்த சிலர் இணைந்து இறந்த ஒருவரின் உடலை அனுப்ப எடுத்துக்கொண்ட முயற்சிகள் பற்றி இங்கே சொல்லியாக வேண்டும்.கோவி.கண்ணனுக்கு மதம் சார்ந்த சுய கருத்துக்கள் இருக்கலாம்.அதற்காக எதிர் கருத்துக்கள் அனைத்தையும் ஒரே ஜாடிக்குள் மூடி அடைத்து விடுவது பகுத்தறிவின் அம்சத்தையே சீர்குலைத்து விடுகிறது என்பேன்.

  வெளிநாடுகளுக்கு பணிக்காக செல்பவர்கள் பெரும்பாலும் குடும்பத்தை விட்டே செல்ல வேண்டிய சூழலில் செல்லுமிடத்தில் தன்னை நிலை நிறுத்தல்,பின் குடும்பத்திற்கான உதவி,கடன் என்ற நிலையிலே வாழ்வை தொடர்கிறார்கள்.எதிர்பாராத விதமாக பணியின் நேரத்தில் இறந்து விட்டால் நம்பகமான நல்ல நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் உடலை இந்தியா அனுப்பும் முயற்சியும்,காப்புறுதி தொகையும் கிடைத்து விடும.டணால் தங்கவேலு பாணி மண்ணாரம் கம்பெனி மாதிரி இருக்கும் போது சிக்கல்கள் உருவாகின்றன.அதே போல் வீடுகளில் பணிபுரியும் பெண்கள் குறித்த பாலியல் வன்முறைகள் பற்றி பரவலான விமர்சனங்கள் எழுகின்ற போதும் அதற்கு நிகரான பணிப்பெண்கள் மரணம் குறித்த விமர்சனங்கள் எழுகிறதா?அல்லது வாகன் ஓட்டுனர்கள் மரணம் குறித்த அதிக சர்ச்சைகள் உருவாகிறதா?

  குற்றவியல்,விபத்துக்கள் சார்ந்த மரணங்கள் தவிர்த்து எதிர்பாராத மரணம் எனும் பட்சத்தில் அதிக பட்சம் ஒரு மணி நேரத்துக்குள் போலிஸ்,ஆம்புலன்ஸ் வண்டிகள் உடலை அப்புறப்படுத்தி மருத்துவமனை மார்ச்சுவரிக்கு கொண்டு வந்து விடுவார்கள்.இதற்கு பின்பு உடலை உள்ளூரிலேயே அடக்கம் செய்யவோ அல்லது அவரவர் நாட்டுக்கு,வீட்டுக்கு அனுப்ப எடுக்கும் முயற்சியில் யார் ஈடுபடுகிறார்கள் என்பதைப் பொறுத்து இந்திய தூதரகங்களின் பணி வருகிறது. ஏனைய நாட்டு தூதரகங்களோடு ஒப்பிடுகையில் இந்திய தூதரகத்தின் எதிர்பாரா மரணம் குறித்த பணி பரவாயில்லையெனலாம்.

  ஆனால் அரேபிய மரண சான்றிதழ் பெறுவதற்கு இந்திய தூதரகத்தின் அபிடாவிட் சான்றிதழ் முதல் தகுதி.உடல் உள்ளூரிலே புதைப்பதற்கோ அல்லது இந்தியா கொண்டு செல்லவோ இந்திய தூதரகத்தின் அனுமதியும் உடலுக்கு பொறுப்பேற்றுக்கொள்பவர் எந்த விதத்தில் இறந்தவருக்கு தொடர்புடையவர்,எந்த சூழலில் இறந்தார் போன்றவற்றோடு குற்றவியல் சார்ந்த பிரச்சினைகள் இருக்கிறதா என்ற இந்திய சட்ட சிக்கல்கள் தூதரகம் மீது வந்து விடாத படி அதற்கான சான்றிதழ்கள் தேவையென கால தாமதம் செய்து விடுகிறார்கள்.

  ஒருவர் எடுக்கும் முயற்சியைப் பொறுத்து மரணசான்றிதழ்,அபிடாவிட் மார்ச்சுவரியிலிருந்து உடலை பெட்டியில் வைக்க,விமான பயண சீட்டு என மூன்று நாட்களுக்குள் உடலை இந்தியா அனுப்புவது தனிமனித முயற்சி,பணம்,

  பதிலளிநீக்கு
 16. அரசு அலுவல் தினங்கள் போன்றவற்றைப் பொறுத்தது.இவைகள் சாராத பொறுப்பேற்காத இறந்தவரின் உடலுக்கு பொறுப்பு யார் எனும் போது சிக்கல்கள் எழுகின்றன.அந்த மாதிரி சூழலில் செத்தாலும் நம்ம ஊர்ல சாகனும் என்று நினைக்கவே தோன்றும்.

  அதிக நாட்கள் மார்ச்சுவரியில் இருக்கும் உடல்களை தூதரக முயற்சியைப் பொறுத்து அரபிய நாடுகளில் புதைப்பது நல்லது.பிரமிடு காலம் துவக்கமே உடலை புடம் போட்ட எகிப்திய நாட்டுக்காரன் ஒருமுறை .செத்தும் கூட ஒருத்தனை எரித்து ஏன் துன்புறுத்துகிறீர்கள் என்று எதிர்க்கேள்வி ஒன்றை போட்டான்..

  இங்கே அடக்கம் செய்யும் கல்லறைகள் நம்ம ஊர் சுடுகாடு என்ற உணர்வுகள் இல்லாமல் வரிசையாக அழகாக இருக்கின்றன.நம்ம ஊர் மாதிரி இறந்தவுடன் குழி தோண்டாமல் தயாராக நாலைந்து குழிகள் வரிசையாக வெட்டப்பட்டிருக்கின்றன.உறவினர் அல்லது நண்பர்கள் துணையிருந்தால் மார்பிள் கற்களின் நினைவுகளோடு பெயர்,பிறந்த தேதி,,இறந்த தேதியுடன் அமரராகி விடலாம்.நம்மூர் மாதிரி நாய்,நரிகள்,பில்லி சூனியம் தொந்தரவுகள் இல்லாமல் 25 வருடங்கள் வரை உடல் மண்ணோடு மண்ணாக மக்கிப் போகும் வரை இறந்தவரின் உடலுக்கு சுகமான உறக்கமே.

  கல்லறையோ சுடுகாடோ நம்மூரில் வகுப்பு பேதங்கள் இருப்பது மாதிரி இங்கே மதம் சார்ந்து தனித்தனியான கல்லறைகள்.

  எனது அனுபவங்களை மட்டுமே இங்கே பதிவு செய்திருக்கிறேன்.மாற்று துயர் அனுபவங்களும் இருக்க கூடும்.பிரிவின்,இறப்பின் துக்கங்களையும் செய்வதறியாது திகைத்து துயரங்கள் கொண்டவர்களுக்கு எனது அனுதாபங்கள்.

  பதிலளிநீக்கு
 17. தமிழ்மணம் குறித்த தங்கள் பதிவு நல்ல அலசல். ஆம் தற்போது தமிழ்மணம் என்னவோ தெரியவில்லைச் சரியாக வேலை செய்வதில்லை. கடலூர் பற்றிய தமிழ்மணம் இட்ட பதிவைப் பார்த்தோம். கருத்து இட முடியவில்லை. கருத்து போகவே இல்லை. அப்படியே விட்டுவிட்டோம். எங்களுக்கும் வாசகர்கள் தமிழ்மணம் வழிதான் வருகின்றார்கள். ஆனால், இப்போது என்னவோ தகராறு செய்கின்றது. வலைப்பதிவர்கள் திரட்டி புதுக்கோட்டையில் தயாராகி வருகின்றது அறிவோம். நல்லது நடந்தால் சரியே! தமிழ் என்றும் ஒளிர்ந்திட!

  பதிலளிநீக்கு
 18. திரட்டிகளின் இன்றியமையாமை மறுக்க முடியாதது.ஆனால் அவை சரிவர இயங்க வேண்டும்

  பதிலளிநீக்கு
 19. புதியதொரு திரட்டியை
  உருவாக்கிவரும்
  திண்டுக்கல் தனபாலன் சாருக்கு
  முன்கூட்டியே வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 20. இப்போது ஆறுதலான விஷயம் பொங்கலுக்கு பதிவகம் திரட்டி வந்துவிடும் என நம்புகிறேன். அப்புறம் அண்ணா கொஞ்சம் இந்த போஸ்டை நேரம் வாய்க்கையில் படித்துபாருங்கள்.http://makizhnirai.blogspot.com/2016/01/travel-with-my-friends.html உங்களுக்கு ஒரு தொடர்பதிவு அழைப்பு விடுத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 21. தமிழ்மணம் தன் சேவையை விரிவாக்க வேண்டும் என்பதே அன் ஆசை தங்களின் அலசல் அருமை .சில மாதங்கள் வலைப்பக்கம் சரியாக வரவில்லை இந்தாண்டு மாற்றம் வரட்டும்.

  பதிலளிநீக்கு
 22. தமிழ்மணம் இப்போதும் பிரச்சினையாக இருக்கிறது...
  சிலரின் பதிவுகள் இணைக்கப்பட்டாலும் ஓட்டுப் போடுவதில் பிரச்சினை இருக்கிறது.
  அவர்கள் இதை சரி செய்ய வேண்டும்...

  பதிலளிநீக்கு
 23. இதுபற்றி முன்னர் நீங்கள் ஒரு பதிவு எழுதியதாக நினைவு. 233 வலைப்பூக்கள் தங்களது எழுத்தால் தமிழ்மணத்தில் இணைந்ததுபோல இந்த 185 வலைப்பூக்களும் இணையும் என்று நம்புவோம்.

  பதிலளிநீக்கு
 24. தமிழ்மணம் மூலமாக என் வலைப்பதிவுக்கும் நிறைய வாசகர்கள் வருகிறார்கள். நான் நீங்கள் கூறும் விபரங்களை இப்போதுதான் கேள்வியுறுகிறேன்.

  பதிலளிநீக்கு
 25. 2016 தைப்பொங்கல் நாளில்
  கோடி நன்மைகள் தேடி வர
  என்றும் நல்லதையே செய்யும்
  தங்களுக்கும்
  தங்கள் குடும்பத்தினருக்கும்
  உங்கள் யாழ்பாவாணனின்
  இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 26. அன்பினும் இனிய நண்பரே
  தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
  இணையில்லாத இன்பத் திருநாளாம்
  "தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 27. அடுத்த பதிவை இன்னும் நீங்கள் போடாத மர்மம் என்ன ,முரளிதரன் ஜி :)

  பதிலளிநீக்கு
 28. Sir நானும் தற்போது பிளாகின் URL ஐ enkadarkarai.blogspot.com என மாற்றிவிட்டேன், தமிழ் மணத்தில் இணைக்கச் சென்றால்.. :( இணைய மாட்டேன் என்கிறது, என் நன்பனொருவனின் புதிய வலைப்பூவையும் இணைக்க மாட்டேன் என்கிறது... தமிழ் மணம் செயல்படவில்லை என ஊகித்துக்கொண்டேன். உங்கள் பதிவினை பார்த்த பின்னே அது அவ்வப்போது வந்து மறைகிறது என்பது அறிந்தேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விஜயன் url ஐ மாற்றினால் அதனை மீண்டும் தமிழ் மண இணைப்புக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.அனுமதி கிடைத்த பின்தான் இணைக்க இணைக்க முடியும் பழைய url க்கு திரும்பவும் மாறிவிட்டால் பதிவை இணைக்க முடியும்

   நீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895