|
கட்டடம் கட்டல பாஸ் காப்பி அடிக்க ஹெல்ப் பண்றாங்க |
மார்ச்சும் ஏப்ரலும் தேர்வுகள் மாதம். ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நேரங்களில் மாணவர் ஆசிரியர் பெற்றோர் அரசு என ஒரு பரபரப்பு காணமுடியும்.இந்த ஆண்டு தேர்வுகள் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. பீகாரில் ஒரு பள்ளியில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவ பெற்றோர் பட்டபாடு காணக்கிடைக்காத காட்சியாக பத்திரிகைகளில் வெளியாகி சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருந்தது அனைவரும் அறிந்ததே. அதற்கு அமைச்சர் அளித்த விளக்கம் மெய் சிலிர்க்க வைத்தது.
."நூற்றுக் கணக்கான பேர் கட்டிடத்தில் ஏறி துண்டு சீட்டுகளைக் கொடுத்துள்ளனர் அதற்காக அவர்களை துப்பாக்கியால் சுடவாமுடியும்? " என்று கேட்டுள்ளார். கூட்டமாக சேர்ந்து முறைகேடுகளுக்கு துணை போனால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுவது பொறுப்பின்மையைத் தான் காட்டுகிறது. ( இரண்டு நாட்கள் கழித்து தேர்வுகள் ரத்து செய்வதாக அறிவிக்கப் பட்டது). நடந்திருக்கும் விவகாரத்தை பார்த்தால் ஏதோ புதிதாக இந்த ஆண்டு மட்டும் நடந்தாகத் தெரியவில்லை.ஒவ்வோர் ஆண்டும் இப்படித் தான் நடக்கும் போல் இருக்கிறது . இந்த முறை யாரோ ஒருவர் புகைப்படம் எடுத்ததால் விவகாரம் பூதாகாரமாகிவிட்டது .
இந்த விவகாரத்தில் லாலு பிரசாத் யாதவ் சொன்னது "நாங்களாக இருந்தால் காப்பி அடிக்க மாணவர்களுக்கு புத்தகத்தையே கொடுத்திருப்போம்" என்று
தேர்வு எப்போதும் ஒரு வித பதட்டத்தை மாணவர்க்கும் பெற்றோர்க்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்படுத்தி விடுகிறது. மாணவர்களோடு பெற்றோரும் சேர்ந்து மூளை சலவை செய்யப் பட்டவர்களாகவே உலாவருகின்றனர். தேர்வு சமயங்களில் உறவினரின் திருமணம் போன்ற முக்கிய குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்வதையும் தவிர்த்து விடுவர். தேர்வில் பெறும் மதிப்பெண்தான் வாழ்க்கயை தீர்மானிக்கிறது என்ற தவறான புரிதல் பெற்றோரிடையே நிலவுகிறது. 80 சதவீத மதிப்பெண்கள் பெற்றாலும் குறைந்து போய்விட்டதே என்று புலம்புகின்றனர். எதிர்காலமே இருள் சூழ்ந்தது போல ஆகிவிட்ட தோற்றத்தை உருவாக்கிக் கொள்கின்றனர்.
பெற்றோரின் இந்த மனநிலையை பத்திரிகைகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. பத்திரிகைகள் தங்கள் பங்குக்கு ஜெயித்துக் காட்டுவோம்,வெற்றி நமதே என்று அதிக மதிப்பெண்கள் பெற ஆலோசனை என்று நிகழ்ச்சிகளை நடத்தி தங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்கின்றன. மாதிரி வினாத்தாள்களை வெளியிடாத பத்திரிகைகளே இல்லை எனலாம். இவை அனைத்தும் படியுங்கள் எழுதிப் பாருங்கள் பயிற்சி செய்யுங்கள் என்று வலியுறுத்துகின்றனவே அன்றி சிந்தனைத் திறனை வளர்ப்பதற்கு ஆலோசனை கூறுவதில்லை
தற்போதைய கல்வி முறை முழுக்க முழுக்க மனப்பாடம் செய்யும் திறமையை பொறுத்தே மதிப்பெண்கள் பெறக் கூடிய வகையில் உள்ளது.. கணிதம் கூட மனப்பாடம் செய்து எழுதி விட முடியும். பாடம் மாணவர்களுக்கு புரிந்ததா இல்லையா என்பதை சரியாக அறிய முடியாது. மனப்பாடத் திறன் முழுமையாக தேவையே இல்லை என்று சொல்லி விட முடியாது என்றாலும் நினைவாற்றல் கல்வியின் ஒரு பகுதியே தவிர நினைவாற்றலும் தகவல்கள் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் மட்டுமே கல்வியாகி விட முடியாது, அது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இருந்தால் போதுமானது. சில விலங்குகள் மனிதனைவிட நினைவாற்றல் மிக்கவை அது அதற்கு அத்தியாவசியமானது
குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவா இருக்கிறது என்று நினைத்து அதை அதிகரிக்க மருந்துகள் கிடைக்குமா என்று தேடும் பெற்றோரும் உண்டு. நினவாற்றலின் தேவை சூழ்நிலை கருதியே அமைகிறது. முன்பெல்லாம் 40 ,50 தொலைபேசி எண்கள் நினைவில் வைத்திருக்க முடிந்தது. அதற்கான தேவை இருந்தது. இப்போது அதற்கான அவசியம் இல்லை. நமது தொலைபேசி எண்ணே கூட சில நேரங்களில் நினைவில் இருப்பதில்லை. தற்போதைய தொழில் நுட்பங்கள் நினைவாற்றலின் தேவையை சுருக்கி விட்டது. அதனை தவிர்க்க இயலாத நிலையில், நினைவாற்றலை மட்டுமே அதிகமாக சோதிக்கும் விதத்தில் தேர்வு அமைந்திருக்கும் அவசியம்தான் என்ன? மாணவர்களுடைய சிந்தனைத் திறனையும் படைப்பற்றலையும் வெளிப் படுத்தும் விதமாக அல்லவா தேர்வு அமைய வேண்டும்.
மதிப்பெண்களே பொறியியல் மருத்துவப் படிப்புகளுக்கு அடிப்படை எத்தனை பேர் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தது? எத்தனை பேருக்கு பொறியியல் கிடைத்தது என்று சொல்வதே பள்ளிகளின் பெருமையாக கருதப்படுகிறது. பள்ளியைப் போலவே கல்லூரிகளும் இப்போது கோச்சிங் முறையையே கையாள்கின்றன.உண்மையில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் கூட முழு தகுதி பெற்றவர்களாக இருப்பதில்லை என வளாகத் தேர்வுக்கு வரும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன
தேர்வு முறையில் மாற்றம் வேண்டும் என்ற பலரும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் என்ன விதமான மாற்றம் செய்யவேண்டும். எப்படி செய்தால் சரியானது என்பதை முடிவு செய்ய முடியவில்லை. சி.பி.எஸ்.சி 10 வகுப்பு தேர்வில் GRADE முறைதான் நடைமுறையில் இருக்கிறது. இருந்தாலும் அதுவும் மதிப்பெண் அடிப்படையில் அமைந்ததுதானே!
எப்படி சொன்னாரோ தெரியாது தேர்வு எழுத புத்தகம் கொடுப்பேன் என்று லாலு சொன்ன மாற்றத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது . அதனை பரிசீலிக்க வேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை என்றே கருதுகிறேன்
அரசு துறைத் தேர்வுகளில் பெரும்பாலான தேர்வுகள் புத்தகம் பார்த்து எழுத அனுமதி உண்டு. ஆனால் அவற்றில் இருந்து விடைகளை கண்டு பிடித்து எழுதுவது எளிதான செயல் அல்ல. புத்தகத்தை பலமுறை வாசித்திருந்தால் மட்டுமே எது எங்கே இருக்கிறது என்பதை அறிய இயலும். அது போல மாணவர்களுக்கும் பாடப் புத்தகம் கொடுத்து அதிலிருந்து நேரடியாக எழுத முடியாமல் சிந்தித்து எழுதும் வண்ணம் கேள்விகளை உருவாக்க வேண்டும். அப்போதும் இருநூறுக்கு இருநூறு மதிப்பெண் பெறுதல் அனைவராலும் முடியாது.
பீகார் சமபவத்தை விடுங்கள். தமிழ்நாட்டிலும் தேர்வு தொடங்கிய நாளில் இருந்து தினந்தோறும் காப்பி அடித்தல் தொடர்பான செய்திகள் நாளிதழ்களில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. காப்பி அடிப்பது எனபது புதிதல்ல எப்போது தேர்வு என்று உருவானதோ அப்போதே காப்பியும் உருவாகி விட்டது.மாணவர்களாக குறுக்கு வழியில் மதிப்பெண் பெற காப்பி அடிப்பது காலங் காலமாக நடந்து கொண்டு வருகிறது. நான் படிக்கும்போது காப்பி அடிக்க விதம் விதமான யுக்தியை மாணவர்கள் கையாள்வார்கள். படிக்காத மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்காக காப்பி அடித்த நிலைஅன்று . நன்கு படிக்கும் மாணவர்களும் முழுமதிப்பெண்கள் பெறுவதற்காக பார்த்து எழுதும் நிலை இன்று. இதற்கு அங்கொன்று இங்கொன்றுமாய் ஆசிரியர்கள் உதவி வந்த நிலை மாறி பள்ளிகளே திட்டமிட்டு உதவும் அளவுக்கு நிலை மோசமாகி விட்டது. நூறு சதவீத தேர்ச்சி, அதிக மதிப்பெண்கள். என்று தங்கள் பள்ளியின் வியாபாரத்தை பெருக்கிக் கொள்வதற்கு இவை உதவுகின்றன. இவற்றையே தரம் என்று பெற்றோரும் அரசாங்கமும் சமூகமும் நம்புகின்றன. எவ்வளவுதான் பறக்கும் படைகள் அமைக்கப் பட்டாலும் இவற்றை தடுக்க முடிவதில்லை.வாட்ஸ் அப் போன்ற தொழில். நுட்பங்கள் காப்பி அடிக்க உதவுதலை நவீனமாக்கி விட்டது.
படிக்காத மாணவர்களை பள்ளிகளை விட்டு வெளியே அனுப்புவதை தனியார் பள்ளிகள் செய்து கொண்டிருந்தன. இன்றும் செய்து கொண்டிருக்கின்றன. இதே நடைமுறை அரசு பள்ளிகளும் பின் பற்ற ஆரம்பித்து விட்டன. தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க சராசரிக்கும் கீழ் உள்ள மாணவர்களை ஒன்பதாம் வகுப்பில் வெளியேற்றும் சம்பவங்கள் பள்ளிகளில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் கூட ஏதோ ஒரு பள்ளியில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க சில மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வில்லை என்ற செய்தியை தொலைக் காட்சியில் பார்த்தேன். காரணம் தனியார் பள்ளிகளின் தேர்ச்சி வீதத்தை ஒப்பிட்டு ஆய்வுக் கூட்டங்களில் தேர்ச்சி வீதம் குறைந்ததற்காக காரணம் கேட்கப் பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் அரசு பள்ளிகளுக்கும் நெருக்கடி கொடுக்கப் படுகிறது.
இதனால் தலைமை ஆசிரியர்கள் மாலை வகுப்பு இரவு வகுப்பு விடுமுறை நாட்களில் வகுப்பு என்று மாணவர்களை வாட்டி எடுக்கிறார்கள். பெரும்பாலும் இச் சிறப்பு வகுப்புகளில் புரியாத பாடம் விளக்கப் படுவதோ மாணவர்களின் ஐயங்கள் தீர்க்கப் படுவதிலோ அதிக அக்கறை காட்டுவதில்லை. ப்ளூ பிரிண்ட்டின் படி கேள்விகளின் விடைகளை படிக்க வைத்து குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் பெறுவதற்கு பயிற்சி அளிக்கிறார்கள். அப்படியும் இயலாத நிலையில் உள்ளவர்களை ஒன்று தேர்வு எழுத அனுமதிக்காமல் தவிர்க்க செய்வது அல்லது காப்பி அடிக்க உதவுவது என்று ஏதோதோ செய்ய முயற்சிக்கிறார்கள்
இது இப்படி என்றால், முன்பெல்லாம் தேர்வு முடிந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி நிதானமாக நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில்கூட வந்ததுண்டு . ஆனால் இப்போதோ மே முதல் வாரத்திலேயே முடிவுகள் வெளியாகி விடுகிறது. இந்த சுறுசுறுப்பு வரவேற்கத் தக்கதுதான் என்றாலும் சரியானதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். எப்போதும் +2 தேர்வுகள் முடிந்தபின்தான் 10 வகுப்பு தேர்வுகள் தொடங்கும். இவ்வாண்டு +2தேர்வு நடக்கும்போதே 10 வகுப்பு தேர்வும் இடையில் நடை பெறுகிறது. இந்தப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு பல இடர்பாடுகள் ஏற்படுகின்றன . அதோடு மட்டுமல்லாமல் தேர்வு நடந்து கொண்டிருக்கும்போதே விடைத்தாள் திருத்தும் பணியும் இந்த ஆண்டு தொடங்கி விட்டது. இந்தப் பணிகளுக்கான போதுமான ஆட்கள் தேவை அல்லவா அதற்கும் பள்ளியில் பணி புரியும் மற்ற வகுப்பு ஆசிரியர்கள் ஈடுபடுத்தப் படுகிறார்கள். அந்த வகுப்புகள் என்ன ஆவது . அப்படி வேக வேகமாக முடிக்க வேண்டிய அவசியம்தான் என்ன?
ஒரே நாளில் அதிக விடைத்தாள்கள் திருத்த கட்டாயப் படுத்தப் படுதல், எந்தப் பாட ஆசிரியராக பணி செய்கிறாரோ அந்தப் பாடத்தின் விடைத்தாள்களை கொடுக்காமல் வேறு பாடத்தின் வினாத்தாள்களை கொடுத்து திருத்தத் செய்தல், நிதானமாக கவனத்துடன் செய்யவேண்டிய பணியை வேகமாக முடிக்க வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தப்படுவதும் வழக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது..
உயர் அலுவலர்கள் எப்போதும் மற்றவர்களின் நடை முறை இடர்பாடுகளை சிறிதும் அறிய விரும்புவதில்லை. தான் நினைத்ததை எந்த வித மறுப்புமின்றி செய்து முடிக்க வேண்டும். கேள்வி கேட்டல் அறவே கூடாது. நிறைய அதிகாரிகள் இந்த மனப்பான்மை உடையவர்களாகவே இருக்கின்றனர். இவையும் பல சிக்கல்களுக்கு காரணங்களாக அமைகின்றன.
கேள்வித் தாள் குழப்பங்கள் வேறு அவ்வப்போது ஏற்படுவதுண்டு. தவறான கேள்விகள் கேட்கப் படுவது ஒருபக்கம் இருந்தாலும் சற்று மாற்றிக் கேட்டு விட்டாலும் கடினம் என்றும் புத்தகத்தில் இல்லாததை கேட்டு விட்டார்கள் என்று ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோரும் புலம்பத் தொடங்கி விடுவார்கள். அவற்றிற்கும் இந்த அவசர போக்கே காரணம்
லாலு சொன்ன புத்தகம் கொடுப்பேன் என்ற தேர்வு முறை மாற்றத்தை முதலில் செயல் முறைத் தேர்வுகளில் இருந்து தொடங்கலாம் என்பது என் கருத்து
ஏனெனில் அறிவியல் பாட செயல் முறைத் தேர்வுகள் கூட மனப்பாட முறையையே நம்பி இருக்கின்றன. இவற்றிற்கான விடைகளை ஆசிரியர்களோ உதவியாளர்களோ சொல்லிக் கொடுத்து விடுவதுதான் வழக்கமாக உள்ளது. அப்படி இருக்கையில் செய்முறை விளக்கங்கள பார்த்தே குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்முறைத் தேர்வை எழுத அனுமதிப்பதில் தவறு ஏதும் இல்லையென்றே கருதுகிறேன்.
மெல்ல இந்த மாற்றத்தை வல்லுனர்களைக் கொண்டு ஆய்வு செய்து பொதுத் தேர்வுகளுக்கும் விரிவு படுத்தலாம்.
யார் பூனைக்கு மணி கட்டப் போகிறார்கள்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .
*************************************************************************
படிச்சாச்சா