என்னை கவனிப்பவர்கள்

சனி, 18 செப்டம்பர், 2010

எது கவிதை?


     சொற்களை கூட்டு சேர்த்து
          சொல்வது அல்ல கவிதை
     விற்பனை செய்ய விரைவாய்
          எழுதுவது அல்ல கவிதை
     கற்பனை செடியில் பூக்கும்
          கவின்மிகு கருத்து கவிதை
     பற்பல வடிவில் கவிதை
          உள்ளதை பார்ப்போம் வாரீர்!


     துடிக்கின்ற இளமை கவிதை
          துயரிலா வாழ்க்கை  கவிதை
     படிக் கின்றபோது இன்பம்
          தருகின்ற நூல்கள் கவிதை
     கடிக்கின்ற எறும்புக் கூட்டம்
          செல்கின்ற வரிசை கவிதை
     இடிக்கின்ற இடியின் ஒலியும்
          இணையிலா இயற்கை கவிதை


     காற்றுக்கு தலையை ஆட்டும்
          நாற்றுக்கள் நடனம் கவிதை
     ஆற்றுக்குள் நீந்தி ஆடும்
         அழகிய மீன்கள் கவிதை
     சேற்றுக்குள் முளைக்கும் நல்ல
         செந்நிறக் கமலம் கவிதை
     ஊற்றுக்கண் கண்டு பொங்கும்
         உழவனின் உள்ளம் கவிதை


     மலர்ந்திடும் பூக்கள் கவிதை
         மரங்களின் அசைவும் கவிதை
     புலர்ந்திடும் காலைப் பொழுதின்
         காட்சியும் புதுமைக் கவிதை
     வளர்ந்திடும் நிலவும் கவிதை
         வடிவிலா மேகம் கவிதை
     தளர்ந்திடும் முதுமை வரினும்
         தளர்வுறாக்  காதல் கவிதை





சனி, 11 செப்டம்பர், 2010

கவிதை துளிகள் - இறை வாழ்த்து


கற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான்
பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும்
உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா
பற்றியெனைத் தூக்கி விடு.