என்னை கவனிப்பவர்கள்

சனி, 18 செப்டம்பர், 2010

எது கவிதை?


     சொற்களை கூட்டு சேர்த்து
          சொல்வது அல்ல கவிதை
     விற்பனை செய்ய விரைவாய்
          எழுதுவது அல்ல கவிதை
     கற்பனை செடியில் பூக்கும்
          கவின்மிகு கருத்து கவிதை
     பற்பல வடிவில் கவிதை
          உள்ளதை பார்ப்போம் வாரீர்!


     துடிக்கின்ற இளமை கவிதை
          துயரிலா வாழ்க்கை  கவிதை
     படிக் கின்றபோது இன்பம்
          தருகின்ற நூல்கள் கவிதை
     கடிக்கின்ற எறும்புக் கூட்டம்
          செல்கின்ற வரிசை கவிதை
     இடிக்கின்ற இடியின் ஒலியும்
          இணையிலா இயற்கை கவிதை


     காற்றுக்கு தலையை ஆட்டும்
          நாற்றுக்கள் நடனம் கவிதை
     ஆற்றுக்குள் நீந்தி ஆடும்
         அழகிய மீன்கள் கவிதை
     சேற்றுக்குள் முளைக்கும் நல்ல
         செந்நிறக் கமலம் கவிதை
     ஊற்றுக்கண் கண்டு பொங்கும்
         உழவனின் உள்ளம் கவிதை


     மலர்ந்திடும் பூக்கள் கவிதை
         மரங்களின் அசைவும் கவிதை
     புலர்ந்திடும் காலைப் பொழுதின்
         காட்சியும் புதுமைக் கவிதை
     வளர்ந்திடும் நிலவும் கவிதை
         வடிவிலா மேகம் கவிதை
     தளர்ந்திடும் முதுமை வரினும்
         தளர்வுறாக்  காதல் கவிதை





9 கருத்துகள்:

  1. படிக் கின்றபோது இன்பம்
    தருகின்ற நூல்கள் கவிதை

    சரியாகச் சொன்னீர்கள். உள்ளத்தினுள் இன்பம் ஊற்றெடுக்க வேண்டும் . காணும் இயற்கை காட்சிகளில் கலந்திருக்கும் கவிதை சொன்னீர்கள் . வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. அன்பின் முரளீதரன் - கவிதையின் இலக்கணம் இது தான் என அறுதியிட்டுக் கூறுவது நன்று. வரிகள் அத்தனையும் அருமை. அறு சீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் என்பதால் சந்தம் கூட்டுகிறது கவிதை. இலக்கணம் தானாகவே விளையாடுவது கவிதை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  3. மிக நன்று. சிறப்பாக உள்ளது. நல்வாழ்த்து. (இத்துடன் ஒரு கவிதை பார்வைக்கு. ஆயினும் தமிழ்மொழி என்ற தலைப்பின் கீழ் நிறையவே உண்டு இது மாதிரி.)
    http://kovaikkavi.wordpress.com/2010/11/12/155-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81/

    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  4. அருமையாக சொல்லிவிட்டீர்கள் எது கவிதை என்று ...

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/12/ar-2011.html?showComment=1419016437833#c8701066033669350162

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895