என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 16 செப்டம்பர், 2013

தி இந்து தமிழில்-தினமலர்,தினமணி விற்பனை சரியுமா?


       தி ஹிந்து நாளிதழ் தமிழில் வெளிவர இருக்கிறது என்ற செய்தியை அறிந்திருந்தாலும் என்று என்பது நினைவில் இல்லை. விளம்பரம் பார்த்த ஞாபகமும் இல்லை. இன்று காலை பால் வாங்கச் செல்கையில் பேப்பர் கடையில் பளிச்சென்று தெரிந்தது விளம்பரம். எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக ஒரு பத்திரிகை வாங்கினேன் . 

     1878 ல் தொடங்கப்பட்ட The Hindu நாளிதழ் ஆங்கிலத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இன்றும் ஹிந்து படிப்பது கௌரவமாகக் கருதப் படுகிறது. ஏன் வாங்குவது கூட கௌரவம் என்று கருதுபவர்கள் உண்டு. அலுவலகத்திற்கு செல்பவர்கள் கையில்ஹிந்து பேப்பரை வைத்துக் கொண்டு சீன் காட்டுவதை ஆங்காங்கே பார்க்க முடியும்.

 "டெல்லி நிர்ப்பயா கேசுல நாலு பேருக்கு தூக்கு தண்டனை கொடுத்தாட்டாங்களாமே".
 "ஆமாம்! ஆமாம்! நான் கூட ஹிண்டுல  படிச்சேன் என்று பீற்றிக் கொள்வதில் பலருக்கு அலாதி இன்பம். 
"சார் இன்னைக்கு ஹிண்டு பாத்தீங்களா! ரூபா மதிப்பு ஏன் குறைஞ்சதுன்னு  கிழி கிழின்னு கிழிச்சிருக்கான்" என்று ஒரு தலைப்பை ஆங்கிலத்தில் கூறி அதைப் பற்றி அலச  ஆரம்பித்து விடுவார்கள். பலரும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
தினமும் அலுவலகம் செல்பவர்கள் ரயில் பஸ்களில்  இதுபோன்ற சம்பாஷணைகளை கேட்கமுடியும் .

         அப்புறம் நண்பர் ஒருவர் குட்டை உடைத்தார். "தலைப்பு மட்டும் ஹிந்துவில் படித்தது. மீதியெல்லாம் தினமணி, தினமலர்ல படிச்சது" என்று. 

        படிக்கும் காலங்களில் ஹிந்து பேப்பர் படிச்சா English Knowledge இம்ப்ரூவ் ஆகும் என்று பலரும்  சொல்வதை நம்பி பேப்பர் வாங்குவது  நிறைய நடுத்தரக் குடும்பங்களின் வழக்கமாக இருந்தது. (பழைய ரெபிடக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகத்தை உறவினர் ஒருவர் வீட்டில் இருந்து சுட்டுக் கொண்டு வந்து  ஐ ஆம் கோயிங் டு ஸ்கூல் வகை ஆங்கிலக் கற்றல் பாடங்களை படித்து ஏமாந்ததும்  உண்டு)   இன்றும் அப்படித்தான் இருக்கிறது. தினமும் வாங்க முடியாததால் சனி ஞாயிறு மட்டும் வாங்குவோம். வாங்கிவிட்டால் போதுமா படிக்க வேண்டாமா? வாங்கிய ஆரம்பத்தில்  முழுமையாக படிக்க முயற்சி செய்ததுண்டு. போகப் போக நுண்ணிய எழுத்துக்களும் மொழி நடையும் அடிக்கடி அகராதி தேட வைக்க  ஸ்போர்ட்ஸ்  பேஜ் மட்டும் படித்து வந்தேன். அதுவும் கிரிக்கெட் பற்றிய செய்திகளை மட்டுமே படிப்பேன். சில நாட்களில் பேப்பர் பிரிக்கப் படாமல் அப்படியே கிடக்கும்.

       இதை எதற்கு சொல்கிறேன் என்றால் என்னதான் ஆங்கில நாளிதழ்கள் வாங்கி கௌரவத்தை நிலைநாட்டிக் கொள்ள முயற்சி செய்தாலும்  அரசியல்,சினிமா, சமூக பிரச்சனைகள் போன்றவற்றை தமிழில் (அவரவர் தாய் மொழியில்)  படித்துப் புரிந்து கொள்வது போல் ஆங்கிலத்தில் எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை. 


    உண்மையில் கெளரவத்திற்காக  ஆங்கில நாளிதழ்களும் படிப்பதற்காக தமிழ் நாளிதழ்களும் வாங்கப்படுகின்றன. அதுவும் தமிழில் தினமணி தினமலர் படித்தேன் என்று சொல்லிக் கொள்ளலாம். தினத்தந்தி படித்தேன் என்று சொன்னால் ஏளனமாகப் பார்ப்பார்கள். தினத் தந்தியை வீடுகளில் காண்பது அரிது. டீக்கடைகளிலும், சலூன் கடைகளிலும்தான் தினத் தந்தியை பார்க்க முடியும்.

               இந்த நிலையில் நூற்றாண்டு கனவு நனவாகிறது என்று சொல்லிக் கொண்டு ஹிந்துவின் தமிழ் பதிப்பு இன்று வெளியாகி உள்ளது. தமிழக  மக்கள் விரும்பும் ராசி பலன் உள்ளிட்ட அம்சங்களுடன் முதல் இதழ் 44 பக்கங்களுடன் வண்ணமயமாக  வெளிவந்திருக்கிறது. 

          ஆங்கில  நாளேட்டின் அனைத்துசிறப்பு இயல்புகளையும் தமிழ் பதிப்பு கொண்டிருக்கும் என்றும் அதே சமயத்தில் ஒரு தேசிய நாளிதழாக ஆங்கில நாளேடு செயல்படும் தளத்திலிருந்து தமிழ் நாளேட்டின் முகமும் களமும் மாறுபடும் என்றும் உள்ளூர் செய்திகள் தொடங்கி உலகச் செய்திகள் வரை தருவதோடு இலக்கியம் முதல் சினிமா வரை தமிழ் மக்களின் ருசி அறிந்து விருந்து படைக்கும்; ஆன்மீக ஆறுதல் தரும் பெண்கள் குழந்தைகள் இளைஞர்கள் பெரியவர்களுக்கு என பிரத்தியோக இணைப்புகளும்  உடன் வரும் என்றும் அநாகரிகமான அந்தரங்கச் செய்திகள் இடம் பெறாது என்றும் ஒவ்வொரு நாளும் தொடங்கும்போது நம்பிக்கைத் தாங்கி வரும் இதழாக திகழும் என்றும்  இன்றைய தலையங்கம் உறுதி கூறுகிறது.

        முதல் இதழில்  ஊர்வலம், கருத்துப் பேழை, மாநிலம், தேசம், ரிலாக்ஸ்(சினிமா செய்திகள்)சர்வதேசம், வணிகம், ஆடுகளம், என்ற தலைப்புகளில் செய்திகள் விரிவாக இடம் பெற்றுள்ளன. இன்றைய இதழில் ஜெயமோகன்,பா.ராகவன்  கட்டுரைகள்  காணப்படுகிறது. 

              வாசகர்களுக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளது தி ஹிந்து . ஆம்! கருத்து சித்திரம் வரையும் பொறுப்பை வாசகர்களுக்கு அளித்துள்ளது. அதற்கென இடமும் ஒதுக்கப் பட்டுள்ளது.  வாசகர்கள் கருத்து சித்திரத்தை வரைந்து அனுப்பலாம், வரைய முடியாதவர்கள் கருத்தை மட்டும்  எழுத்து  மூலமாக தெரிவித்தால் கூட போதுமானது.ஹிந்து அவர்களின் ஓவியர்களை வைத்து கருத்துப் படம் வரைந்து கொள்ளும் 
அனுப்ப வேண்டிய  மின்னஞ்சல் முகவரி  cartoon@kslmedia.in 
044-28552215 என்ற  எண்ணுக்கு  FAX ம் அனுப்பலாம் 

      மொத்தத்தில் முதல் இதழ்  சிறப்பாகவே வெளிவந்துள்ளது .இதே வடிவில் தொடரும் பட்சத்தில்  கணிசமான தினமணி, தினமலர் வாசகர்களை  தன் பக்கம் ஈர்க்கக் கூடும் 

 ************************************************************************

படித்து விட்டீர்களா? 
இப்படியும் உதவ முடியுமா? எழுத்தாளரின் அனுபவம் 


32 கருத்துகள்:

  1. பாப்போம் நண்பா... ஏதாவது மாற்றம் பத்திரிகை உலகில் நடக்குமா என்று?

    பதிலளிநீக்கு
  2. இவ்வளவு நாள் இல்லாத மொழிப்பற்று இவர்களுக்கு இப்போது எதற்கு வந்தது...? அதுதான் தெரியவில்லை நண்பரே.......விளம்பரம் வணிகம் கைபற்றவா?

    பதிலளிநீக்கு
  3. தகவலுக்கு நன்றி முரளிதரன்.....

    இப்போதைக்கு சென்னையிலிருந்து மட்டும் வெளிவரும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. முரளி,

    அது என்னங்க "தி இந்து" தமிழில் பேர் வைக்க கூட தெரியாம ,அப்புறம் என்ன தமிழ் நாளிதழ்? முதலில் காமதேனு என பெயரில் வரப்போவதாக பேச்சு இருந்துச்சு.

    வட மொழி போன்ற சொற்கள் கலந்து தமிழ் பெயர் வைப்பதை கூட ஏதோ இந்திய மொழி , திசை சொல்லாக கலந்து வச்சிட்டாங்க எனலாம், ஆனால் அதுக்குனு இப்படியா "தி இந்து" என கொடுரமாக பெயர் வைப்பது அவ்வ்!

    நெடுநாளாக இயங்கும் பத்திரிக்கைகள் அவ்வப்போது புதிய இதழ்களை துவங்கிட்டு பின்னர் மூடிவிடுவது வழக்கமே, அவர்கள் புதிய பத்திரிக்கை துவங்க முக்கியமான ரெண்டு காரணம், விளம்பரம் அதிகம் வரும் நிலையில் எல்லாத்தையும் இருக்கும் பத்திரிக்கையில வெளியிட முடியாத சூழல், ரெண்டாவது அவங்க பிரிண்டிங் பிரஸ் அச்சிடும் கெப்பாசிட்டிக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதாகும்.

    இப்படி அச்சகத்துக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காவே பல வார,நாளிதழ்கள் புத்தக வெளியீட்டிலும் செயல்படுகிறார்கள்.

    புதுசா அதிக திறனுள்ல பிரிண்டிங் மெஷின் ஏதேனும் வாங்கிப்பொட்டிப்பாங்க, மெஷின் சும்மா கிடக்கக்கூடாதுனு தமிழிலவும் ஒரு பிரதிப்போட்டு, அதிகமா வர விளம்பரத்தினை ,இந்து ஆங்கில பிரதியில் இடம் இல்லை தமிழில் போடுங்க என்று சொல்லி வர காசை அள்ளவே இப்படி செய்திருக்கலாம்.

    சர்க்குலேஷன் சரியா இல்லைனா மூடினால் கூட நஷ்டம் இல்லை,எத்தனை நாளைக்கு வண்டி ஓடுது பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    முரளி(அண்ணா)

    ஆய்வு செய்து பதிவாக வெளியிட்டமைக்கு மிக நன்றி பதிவு அதிரடியாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. தினமணியின் தலையங்கம் மற்றும் கட்டுரை
    தினமலரின் உள்ளூர் செய்திகளை அதிகம்,கொடுக்கும் போக்கு
    இரண்டையும் கலந்து செய்தது போல இருக்கு
    உங்கள் கருத்துத்தான் என் கருத்தும்
    பத்திரிக்கை நல்லாத்தான் இருக்கு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. தினத்தந்தி, தினமலர், தினமணி ஆகிய செய்தித் தாள்களை எப்படி அசைத்துப் பார்க்கும் என்பது போகப் போகத் தெரியும்! அப்படி நிலை வந்தால், அந்த நாளிதழ்களிலும் ஏதேனும் மாற்றங்கள் வரலாமல்லவா! எனவே இது மாதிரிப் போட்டிகள் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடும்!

    பதிலளிநீக்கு
  8. ஹிந்து பார்த்தேன்.தாங்கள் சொல்வது உண்மைதான். மற்ற நாளிதழ்களின் விற்பனையில் நிச்சயம் சரிவு ஏற்படும். நன்றி

    பதிலளிநீக்கு
  9. # சில நாட்களில் ஆங்கில பேப்பர் பிரிக்கப் படாமல் அப்படியே கிடக்கும்.#
    எங்கள் வீட்டிலும் அத நிலைதான் ,எனவே நானும் தமிழ் ஹிந்துவுக்கு மாறிட்டேன் !

    பதிலளிநீக்கு
  10. முரளி அய்யா,வணக்கம்.
    “உண்மையில் கெளரவத்திற்காக ஆங்கில நாளிதழ்களும்
    படிப்பதற்காக தமிழ் நாளிதழ்களும் வாங்கப்படுகின்றன”
    உண்மையைச் சொல்லிவிட்டீர்கள்.
    பெரும்பாலான தமிழ் வாசகர்களின் கருத்து இதுதான்.
    சரியான நேரத்தில் சரியான பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. இணையத்திலேயே எல்லா தகவல்களையும் படித்து விடுவதால் ஆங்கிலப் பத்திரிகை "Sudoku" விளையாட மட்டும் பயன்படுத்துகிறேன்.. :-)

    பதிலளிநீக்கு
  12. இன்னும் வரட்டும் பார்க்கலாம் பலரும் பல்வேறு வைகையில் விமர்ச்சிக்கிறார் கள்!

    பதிலளிநீக்கு
  13. எந்த சார்பும் இல்லாமல் நாடு நிலைமையில் வந்தால் வரவேற்கலாம்... பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  14. ஹிந்து மேல்தட்டு மக்களின் பத்திரிகை என்ற எண்ணம் பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது உண்மைதான். மேலும் அதன் பார்வை பல சமயங்களில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு எதிராகவே இருந்து வந்துள்ளதும் உண்மை, குறிப்பாக திமுகவுக்கு எதிராக. இதிலிருந்தே அது எந்த கட்சிக்கு ஆதரவானது என்பதும் தெரிந்திருக்கும். இலைங்கை விஷயத்திலும் அதன் பார்வை என்ன என்பது நமக்கு தெரியும். அந்த போக்கு தமிழ் பதிப்பிலும் தொடரும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. ஆனால் தினமணியில் செய்வதுபோல ஆங்கிலப் பதிப்பில் உள்ள கட்டுரைகளையே தமிழ் பதிப்பிலும் மொழிபெயர்த்து செய்யாமல் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்தால் நல்லது. தினமலர், தினகரன்,தினத்தந்தி போன்ற தரமற்ற பத்திரிகைகள் ஓரங்கட்டுப்பட்டுவிடும்.

    பதிலளிநீக்கு
  15. ‘வவ்வால்’ சொல்வது போல, அது என்ன ‘தி ஹிந்து’?

    தலைப்பிலேயே தமிழ்க் கொலை!

    ‘தமிழால் இணைவோம்’...இணைவது யாரெல்லாம்? இணைந்து சாதிக்கப் போவது என்ன?

    பொறுத்திருந்து பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  16. //படிக்கும் காலங்களில் ஹிந்து பேப்பர் படிச்சா English Knowledge இம்ப்ரூவ் ஆகும் என்று பலரும் சொல்வதை நம்பி பேப்பர் வாங்குவது நிறைய நடுத்தரக் குடும்பங்களின் வழக்கமாக இருந்தது.//

    100% உண்மை. நானும் வாங்கி இருக்கிறேன். ஆனால் இன்றுவரை அப்படி ஒன்றும் இம்ப்ரூவ் ஆகவில்லை . பேப்பர் சில நாட்களில் பிரிக்காமலேயே எங்கள் வீட்டில் இருக்கும்

    பதிலளிநீக்கு
  17. ஆங்கில இதழ்கள் படிப்பது பற்றி தாங்கள் சொன்ன அனைத்தும் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது! என்னதான் இங்கிலிபீஸ் பேப்பருன்னு சீன் போட்டாலும் தமிழ் பேப்பர் மாதிரி வராதுதான்! இந்து தமிழ் நாளிதழ் தமிழ் வாசகர்களிடையே வரவேற்பு பெறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்! நன்றி!

    பதிலளிநீக்கு
  18. நாளேட்டின் தலைப்பே சொல்கிறது இவர்கள் எப்படி தமிழால் எல்லோரையும் இணைக்கப் போகிறார்கள் என்று! பாவம் சரியான தமிழ்ச் சொல் கிடைக்கவில்லையே போலும்!

    பதிலளிநீக்கு
  19. வேறு ஏதோ பேப்பர் என்று வாசகர்கள் நினைத்துவிடுவார்களோ என்பதால் தமிழ் பெயர் போடவில்லையோ? இந்து என்பது நாடறிந்த பெயராயிற்றே!
    இந்து முன்னணியில் இருந்த காலத்தில் எங்கள் வீட்டில் மெயில் பேப்பர் வாங்குவார் என் தந்தை.
    புதிய செய்தித்தாளுக்கு முதலில் வாழ்த்துக் கூறுவோம். சற்றுப் பொறுத்திருந்து பார்த்துவிட்டு குறை சொல்லலாம்!

    பதிலளிநீக்கு
  20. // அலுவலகத்திற்கு செல்பவர்கள் கையில்ஹிந்து பேப்பரை வைத்துக் கொண்டு சீன் காட்டுவதை ஆங்காங்கே பார்க்க முடியும். //

    நன்றாக ஞாபமாகச் சொன்னீர்கள். இப்போதெல்லாம் முன்புபோல் இல்லை. பல இளைஞர்களின் கழுத்தில் ஏதேனும் ஒரு அடையாள அட்டைதான் தொங்குகிறது.

    // மொத்தத்தில் முதல் இதழ் சிறப்பாகவே வெளிவந்துள்ளது .இதே வடிவில் தொடரும் பட்சத்தில் கணிசமான தினமணி, தினமலர் வாசகர்களை தன் பக்கம் ஈர்க்கக் கூடும் //

    நியாயமான தீர்ப்பு!

    பதிலளிநீக்கு
  21. ''..என்னதான் ஆங்கில நாளிதழ்கள் வாங்கி கௌரவத்தை நிலைநாட்டிக் கொள்ள முயற்சி செய்தாலும் அரசியல்,சினிமா, சமூக பிரச்சனைகள் போன்றவற்றை தமிழில் (அவரவர் தாய் மொழியில்) படித்துப் புரிந்து கொள்வது போல் ..''
    உண்மையான கருத்து .எவ்விடத்தும் பொருந்தும்.
    அனுபவித்துள்ளேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  22. வாசகர் தேடலுக்கு நல்ல அறுவடை இருக்குமாயின் தி இந்து தமிழில் முன்னிலைக்கு வரலாம்.

    பதிலளிநீக்கு
  23. ////படிக்கும் காலங்களில் ஹிந்து பேப்பர் படிச்சா English Knowledge இம்ப்ரூவ் ஆகும் என்று பலரும் சொல்வதை நம்பி பேப்பர் வாங்குவது நிறைய நடுத்தரக் குடும்பங்களின் வழக்கமாக இருந்தது.//

    100% உண்மை. நானும் வாங்கி இருக்கிறேன். ஆனால் இன்றுவரை அப்படி ஒன்றும் இம்ப்ரூவ் ஆகவில்லை . பேப்பர் சில நாட்களில் பிரிக்காமலேயே எங்கள் வீட்டில் இருக்கும்
    //

    'இம்ப்ரூவ்' ஆகும் என்றால் உங்களுக்கு ஏற்கனவே ஆங்கில பரிச்சயம் நன்றாக இருக்க வேண்டும். அடிப்படை குறைவாக இருந்தால் தி ஹிந்து (ஆங்கில இதழ்) சரியான தேர்வன்று.

    நான் கல்லூரி முதலாண்டிலிருந்துதான் ஆங் கில நாளிதழ்கள் படிக்க ஆரம்பித்தேன். மற்றவர்கள் சொன்னதால் தி ஹிந்து படிக்க ஆரம்பித்தேன். பின்னர் அதன் ஆங்கிலத்துக்கு நான் சரியான ஆளில்லையெனத் தெரிந்து மற்ற ஆங்கில நாளிதழ்கள் படிக்க ஆரம்பித்தேன். இறுதியாண்டில் தி ஹிந்துவுக்கு வர என்னிடம் ஆங்கில பரிச்சயம் வந்துவிட்டது எனத்தெரிந்து மாறினேன்.

    என் ஆங்கிலம் வளர்க்கப்பட்டது பிற நாளிதழ்களினால். மெருகூட்டப்பட்டது தி ஹிந்து வால். அணிசெய்யப்பட்டது மேனாட்டு நாளிதழ்களினால்.


    It is not correct to say that one can 'improve' one's English by reading The Hindu. It is simply not possible to him if he or she has not already aquired some proficiency in the language.

    My habit of reading English dailies started only when I went to the FY in graduation. Please note: I came to graduation as a Tamil medium guy without any rudimentary knowledge of English. Like you, I was advised to read The Hindu to 'improve' my English. But, on reading it, I cane to understand that I didn't possess enough knowledge of English to read the paper. So, I stuck to reading other English dailies like IE. My English improved. Only in Final year, I changed to The Hindu as I became confident of level of my English enough to read papers like The Hindu.

    The truth is: My English was 'improved' by papers like Indian Express; honed by The Hindu. Mastery came to me (I hope so :-) only by reading foreign dailies that came from UK and USA.

    எனவே தி ஹிந்து படித்தால் உங்கள் ஆங்கிலம் இம்ப்ரூவ் ஆகுமென்பது தவறான அறிவுரை. உங்கள் ஆங்கிலம் மெருகூட்டப்படுமென்ப்தே சரி.

    ஒன்றையும் சொல்லியாக வேண்டும்: அன்றைய தி ஹிந்துவின் ஆங்கிலமும் இன்றைய ஆங்கிலமும் வெவ்வேறானவை. இன்றைய ஆங்கிலம் 'இம்ப்ரூவ்' பண்ணும்.

    --- KULASEKARAN

    பதிலளிநீக்கு
  24. விற்பனையை பெருக்குவது அவர்களுக்கு கைவந்த கலை....அதுவல்ல பிரச்சனை...நடுநிலையாய் செய்தி தருவார்களா?அதுதான் இன்றைய எதிர்பார்ப்பு....ராம் அதற்கு அனுமதிப்பாரா? இல்லை வழக்கம்போல தன விருப்பு வெறுப்புக்கு தக்க செய்தியிடும் தினமலரை போன்று அமையுமா?

    பதிலளிநீக்கு
  25. Enter your comment...தி. இந்து நாளிதழ் என்றும் number 1.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895