என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 28 அக்டோபர், 2014

சுஜாதா பற்றி பிரபல எழுத்தாளரின் விமர்சனம்


   (நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல இன்றைய தொழில் நுட்ப உலகில் எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் இணையத்தோடு தொடர்பில்லை என்றால் அவர் முந்தைய தலைமுறையினராகவே அடையாளம் காணப்படுவார். அதனால்தான் எந்தத் துறை பிரபலங்களாக இருந்தாலும் முகநூல், டுவிட்டர், வலைப்பூக்கள் மூலம் தங்களை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்கின்றனர். குறிப்பாக எழுத்தாளர்கள் இதன் அவசியத்தை உணர்ந்திருக்கின்றனர். ஏற்கனவே ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா போன்றவர்கள் பல ஆண்டுகளாக இணையத்தில் எழுதி வருகிறார்கள். பல இணைய வாசகர்களையும் பெற்றிருக்கிறார்கள். 

  அப்படி சமீபத்தில் இணையத்தில் ஒரு வலைப் பதிவை துவக்கி இரண்டு மாதங்களாக எழுதி வருபவர் எஸ். சங்கரநாராயணன் அவர்கள். இலக்கிய உலகப் பிரபலம்   தரமான எழுத்துக்கு சொந்தக்காரர். அவரது வலைப்பதிவிற்கு பெயர் ஞானக் கோமாளிசில நாட்களுக்கு முன்பு அவரது வலைப் பக்கத்தை பார்க்க நேர்ந்தது. அவர் வலை உலகிற்கு புதியவர் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. கதைகள் கட்டுரைகள் இலக்கிய விமர்சனங்கள் என்று இரண்டு மாதங்களில் ஏராளமான பதிவுகளை செய்திருக்கிறார். அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன. இலக்கிய ஆர்வலர்களுக்கு அவரது பதிவுகள் விருந்தாக அமையும் என்று நம்புகிறேன். அவரது பதிவில் பலதரப்பட்ட வாசகர்களையும் கவரக் கூடிய சுஜாதா- பத்திரிக்கைப் பேராளுமை என்ற கட்டுரையைப் படித்தேன்.  அவரது அனுமதி பெற்று அந்தக் கட்டுரையை இங்கே வெளியிட்டிருக்கிறேன்.


எஸ்.சங்கரநாராயணன் 


பத்திரிக்கைப் பேராளுமை-சுஜாதா 


     ஆணாதிக்க சமுதாய அதீத தந்திரத்துடனும் அங்கீகாரத்துடனும் தானே அமைத்துக் கொண்ட ராஜபாட்டையில் வலம் வந்தார் சுஜாதா. உற்சாகத்துக்கு மறு பெயர் சுஜாதா. அவர் எழுத்தில் அலுப்பைப் பார்க்க முடியாது. சுவாரசியமே எழுத்தின் தாரக மந்திரம் அவருக்கு. சுவாரசியமாக்கும் கவனத்தில் தன்னடையாளம் கூட அவருக்கு ரெண்டாம் பட்சம்தான் என்று தோன்றுகிறது. கணையாழியில் ஒருவர், அவரை 'எழுத்துலகின் சிலுக்கு' என்று குறிப்பிட்டார் 

   புனைக் கதைகளில் அவர் எழுதிக் காட்டிய ஆபாச வசனங்களுக்கு அவரை சொந்தமாக்க முடியாத அளவு நல்ல மனிதாராக நட்பு பேணுகிறவராக எளிமையானவராக இருந்தார். விளம்பரங்களில் சினிமாக்களில் கொஞ்சூண்டு ஆபாசம் நல்லது என்பார்கள். திட்டுவான் என்றாலும் மனசில் நிக்குமே, என்கிற வியாபார தந்திரம். அதைத்தான் 'சுஜாதா காலம்' என்கிற பத்திரிகைப் பேராளுமை நிறுவி அடங்கியிருக்கிறது. பூகம்பம் பற்றி எழுதும்போது கூட அவரால் 'கட்டில் கெட்ட காரியம் பண்ணினாப் போல ஆடியது ' என்றுதான் எழுத முடிந்தது.

   ஒரு கதையில் ஆம்பளைங்க செய்யிற அத்தனை காரியத்தையும் பெண்ணால் செய்ய முடியுமா? என் அவர் கேட்டார்.ஆணைப் போல பெண்ணால் உயரத்துக்கு ஸ்விங் என்று ஒண்ணுக்கடிக்க முடியுமா என கேட்டார். அதன் பேர் நகைச்சுவை?. பிற்பாடு ஒரு திரைப்படத்தில் அவர் எழுதிய வசனமாகவும் அது இடம் பிடித்தது. சுய அங்கீகாரம்!

  வணிகப் பத்திரிகையில் அவரும் ஓவியர் ஜெயராஜும் கொட்டமடித்தார்கள். பெண்களை பனியனுடன் வரைந்து அதில் 'மில்கி வே' என்று வாராவாரம் புதிய வார்த்தைகளாக எழுதி மகிழ்ந்தார் ஜெ. கதையில் இல்லாதவர்கள் எல்லாம் ஜெயின் கற்பனையில் முளைத்தன.கதையில் வரும் பெண் பனியன் போடாவிட்டாலும் ஜெ, அணிவித்தார்.             


    மொழியில் சுறுசுறுப்பு விறுவிறுப்பு வேகம் கூட்டிக் காட்டிய நடை கூட அதே சமயத்தில் ஸ்ரீ வேணுகோபாலன் என என எழுதிவந்த,பிற்பாடு சிவப்பு விளக்குக் கதைகள் தொடர்ந்து தந்த புஷ்பா தங்கதுரை எழுதிக் காட்டிக் கொண்டிருந்த நடைதான் . பரவலாய் சுஜாதாவுக்கு கிடைத்த அங்கீகாரம், சாவி போன்றவர்கள் சுஜாதாவை உயர்த்திய உற்சாகம்-சுஜாதாவின் சலவைக் குறிப்பைக் கூட வெளியிடுவீர்களா -என்ற கேள்வி கேட்டபோது சாவி சலவைக் குறிப்பை வாங்கி வெளியிட்டார். எழுத்துக்கு சன்மானம் என்று பரபரக்காத,விரட்டி விரட்டி கேட்காத எழுத்தாளர்களைத் தமிழ்ப் பத்திரிகைக்கு ரொம்பப் பிடித்தது. அவை அவரை உயர்த்திப் பிடித்தது.

             மர்மக் கதை என்ற பெயரில் அவர் கொண்டு வந்த கணேஷ் வசந்த், அதில் வசந்தின்  குறும்பு என்ற பெயரிலான ஆபாச வசனங்கள்,"பொண்ணு சூப்பர் பாஸ். நின்னு விளையாடலாம் " எல்லாம் இளைஞர்கள் ரகசியமாய்ப் படித்து சிரித்து மகிழ்ந்து பொது சந்திப்பில் பரிமாறி உற்சாகப் படுத்திக் கொண்டார்கள் 
  
   அவர் எழுதிய மர்மக் கதைகள் ஆங்கிலத்தில் பரவலாகஅறியப்பட்டதின் தாக்கங்களே. சில சமயம் அதே மொழிப்பாடுகளைக் கூட சுஜாதா கையாள முயன்றார். 'எனார்மஸ் பிரஸ்ட்' என்பதை தமிழில் ஏராளமான மார்பு என்று இளைஞர்களை புல்லரிக்க வைத்தார்..சோப்பில் சாவியை பதித்து மாற்று சாவி செய்யும் உத்தியை ஆங்கிலத்திலேயே நான் வாசித்திருக்கிறேன்.

          நச் என்ற சிறுகதைகளால் தந்தாதால் சுஜாதா கவனம் பெற்றார். அவை பெரும்பாலும் மையப்புள்ளி விலகிய கதைகளே.ஒரு விபத்தை சொல்லி, மற்றொருபுறம் ஒரு பெண் கணவனுக்கு காத்திருப்பதாக சொல்லிக் கொண்டே வருவார். விபத்தானவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வருவான் ஒருவன். கடைசி திருப்பமாய் அந்தக் காப்பாற்றப் போனவனின் மனைவிதான் காத்திருக்கிறாள் , என்று முத்தாய்ப்பு வைப்பார் சுஜாதா. திருப்பம்; அது அவருக்கு முக்கியம் .வித்து ஒரு மன பாதிப்பை நிகழ்த்தவில்லை.  

  மும்பை இட நெருக்கடி பற்றி ஒரு கதை . தெருவில் ஒருவன் விபத்தாகிக்  கிடப்பான். அவன் வீட்டை வாடகைக்கு கேட்டு ஒருவன் ஓடோடிப் போனால் அவனுக்கு முன்பே வாடைக்கு வேறு ஒருவன் முந்திக் கொண்டிருப்பான். பெரும்பாலான கதைகளில் இப்படி உணர்வு வீர்யமான கட்டங்களை கதைப் போக்கின் சுவாரசியத்துக்கு  விட்டுக் கொடுத்தார் சுஜாதா. வாழ்க்கைக்கு சிறிதும் நியாயம் செய்யாத கதைகள்.


    முதல் மனைவி சாகக் கிடக்கும் கணவன் அருகில் பணி விடை செய்கிறாள்.இரண்டாம் மனைவி கிட்டவே வரவில்லை. கண் திறந்த கணவன் முதல் கேள்வியாய் இரண்டாம் மனைவி எங்கே என்று கேள்வி கேட்பான் 

              பெரும்பாலான எழுத்தில் சுஜாதா யார் என்று வரையறுத்தாக வேண்டும். சுஜாதாவின் எழுத்து இளைஞர்களை குறிவைத்து வெற்றிகரமாக இயங்கியது.விவரப் பதிவுகளுடனான நடையே அப்போது புதிது. அதில் சில வேளை கருத்துப் பிழை வரும். ஏழாவது மாடியில் இருந்து 180 கி.மீ வேகத்தில் விழுந்து செத்துப் போனான் என அவர் எழுதினால் ஒரு வாசகர் புவி ஈர்ப்பு விசைப்படி கீழே வரவர வேகம் அதிகரிக்குமே சீரான வேகம் என்று பெப்படி சொல்வீர்கள் என்று கேட்க நேர்ந்தது. சில சமயம் அதையும் அவர் கிண்டல் போல மாமா சித்தப்பா எல்லோருக்கும் போஸ்ட் கார்டு வாங்கிக் கொடுத்து எழுதிப் போட்டி விடுகிறார்கள் என் எகிறியது உண்டு.

    நடையில் புதுமை இறங்கினான் என ஒவொரு எழுத்தாக தனி வரியாக எழுதிக் காட்டியதும் அப்போது 'ஜான் அப்டைக்' ஆங்கிலக் கவிதைகளில் செய்ததுதான் .இலை உதிர்கிறது என்பதில் உ  தி  ர்  கி  ற  து  என எழுதிக் காட்டும்போது தள்ளாட்டம் கண்ணில் உணர முடிகிறது. எப்போதும் மூலத்தின் வீர்யம் அதிகம்தான் 

   தில்லியில் கஸ்தூரி ரங்கனுடன் பரிச்சயம் நெருங்கி கணையாழியில் பத்திகள் எழுத வந்தது தற்செயல் என்றாலும் அதில் புதுசு புதுசாய் எழுத சுஜாதா உற்சாகம் காட்டினார். பத்தி வகைமையே அப்போது அரிதான காரியம்.பத்தி எழுத சுவாரசியமான நடையும் அதைவிட சுவாரசியமான விஷயமும் வேண்டும்.அவரால் முடிந்து. பிற்பாடு பெருஞ் சுற்றிதழ்களும் அவரை பத்தி எழுத வைத்தன.ஒருகட்டத்தில் புனைக் கதை எழுத்தாளர் தளர்வுறும்போது பத்தி எழுத்து அபாரமாய் கை கொடுக்கும்.

   சுஜாதா பத்திகளில் நவீன இலக்கியம்,மரபிலக்கியம் ,சங்க இலக்கியம்,சமகால விஷயம், விஞ்ஞான விஷயம் என்று அடுக்குகளை மாற்றி ஒரே பக்கத்தில் கொடுத்து அந்தப்  பகுதியை செறிவூட்டினார். சிறந்த கவிஞர்கள் என அவர் வணிக இதழ்களில் அடையாளம் காட்டியவர்களின் கவிதைகளை சுஜாதா இல்லை என்றால் அவர்கை இதழ்கள் கண்டு கொண்டிருக்காது. வணிக இதழ்களில் நல்லிலக்கிய அறிமுகம் என்று அவர் மனதாரச் செய்தார் என்றுதான் தோன்றுகிறது. இந்தியா டுடே கூட ஒரு சிறப்பு மலருக்கு அவரிடம் இருந்துதான்  தற்காலக் கவிதை என்ற தலைப்பில் கட்டுரை எழுதக் கேட்டது.

  அந்த ரசனையில் பாசாங்கு கிடையாது. வெண்பாப் போட்டி ஹைக்கூ கவிதைப் போட்டி என்று அவர் ஊக்குவித்தார்.பரிசிளித்தார்.அவர் ஊக்குவித்த இலக்கிய அங்கீகாரம் பெற்ற படைப்பாளிகள்,அவர்களும்  எழுத்து சுவாரசியக் காரர்கள் என்று குறிப்பிடத் தக்கது.

   வணிகப் பத்திரிக்கைகள்  ஓரளவுக்கு தரமான இலக்கிய முயற்சிகளுக்கு பழகிக் கொண்டிருக்கின்றன.மூஞ்சி சப்பையாய் கைகால் நெளிசலாய் இருந்தாலும் அந்த ஓவியங்களை வெளியிட மக்களும் சரி என்று பழகிக் கொண்டிருக்கிறார்கள். நல்ல கதை என்று இலக்கிய முகம் காட்ட  இப்படி அடையாளங்கள். இதில் சுஜாதாவின் பங்கு கணிசமானது. போற்றுதலுக்குரியது. அது அவரால்முடிந்தது. அதை அவர் வாய்ப்பை நழுவ விடாமல் செய்தார்.

   நாடகங்களில் பிழியப் பிழிய அழுக குலுங்க குலுங்கச் சிரிப்பு என்றில்லாமல், மாமி கதைகளாகவும் இல்லாமல் சுவாரசியம் விலகாத குடும்பக் கதைகளை, சராசரி மனித வியாகூலங்கலை நம்பிக்கைகளைப் பிரதிபலித்தார். பூரணம் விஸ்வநாதன் சுஜாதாவுக்கு கிடைத்தது அவரது அதிர்ஷ்டம்தான். தனி முத்திரை பதித்தன அந்த நாடகங்கள் சினிமாவிலும் அவரை சினிமாவின் போக்கோடு இயக்கினார்கள்.தன அடையாளம் இன்றி அவருக்கிருந்த சுவாரசியப் போக்கு,அலட்சிய பாவனை, கொண்டாடும் நகைச்சுவை என்று வேண்டியதைப் பெற்றுக் கொண்டார்கள். சினிமாவில் அவர் தேவைப் பட்டார். சினிமா இளைஞர்களுக்கான ஊடகம் அங்கே அவர் இல்லாமல் எப்படி?

     பிற்காலங்களில் அவர் விஞ்ஞானக் கதைகள் எழுத ஆரம்பித்தார்.அது சுஜாதா என்பதால் அதற்கும் இங்கே அங்கீகாரம் கிடைத்தது. வேறு எழுத்தாளர்க்கு இது  நிகழ்ந்தேயிராது. யாரும் முயற்சி செய்து தோற்றிருக்கலாம். தேர்தல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வர அவரது பங்களிப்பு சிறப்பானது என் இரங்கல் செய்தில் தமிழக முதலர் நினைவு கூர்ந்தார். தவிரவும் விஞ்ஞானக் கலைச் சொல் அகராதி அவர் முனைந்து கொண்டு வந்ததை சொல்லியாக வேண்டும். தமிழில் தட்டச்சு செய்து கணினியில் நேரடியாகக் கதைகள்  எழுத ஆரம்பித்த எழுத்தாளர் சுஜாதா தான் . முதல் இணைய தளப் பத்திரிக்கை 'மின்னம்பலம்' த்வங்கியது வரலாறு குறித்துக் கொள்ளவேண்டிய செய்தி.

   சதா வாசிப்பு ருசிகொண்ட மனிதராக இருந்தார் சுஜாதா.இலக்கியப் போக்கு என்று பொத்தாம்பொது கருத்துக்களை  நகைச்சுவை சாயம் பூசி அவர் எழுதினாலும்,எந்த எழுத்தாளரையும் விரல் சுட்டினாற்போல் சாடியது இல்லை. பத்திரிகைக் காரர்கள் கேட்கும்போதெல்லாம் சிறுகதை,தொடர்கள் என்று வாரி வழங்கிக் கொண்டே இருந்தார். சுஜாதா. அவர் எழுதினால் பத்திரிக்கை விற்பனை கிடுகிடுவென உயரந்தது.கல்கி சாண்டில்யனுக்குப் பிறகு அந்தப் பெருமை சுஜாதாவுக்குத்தான் கிடைத்தது.

    நமது மண்ணின் மரபுப் படியே அவர் வயது முதிர, பழைய இலக்கியங்களிலும் ஆன்மீகத்திலும் ஈடுபாடு காட்டினார்.புறநானூறு பொழிப்புரை தந்தார்.வைணவ இலக்கியத்தில் ஆர்வம் காட்டினார்.

  தமிழ் எழுத்து நடையில் சுஜாதா வேகத்தையும் குறியையும் தந்து விட்டுப் போயிருக்கிறார். அவரது ஆளுமை அழியாது என்றுதான் படுகிறது.காலாகாலத்துக்கும் இளைய தலைமுறையாளர்கள், தங்களை இளமையாக  உணர்கிறவர்கள் அவரைக்  கொண்டாடிக் கொண்டே இருப்பார்கள்

*********************************************************************************

நன்றி : எழுத்தாளர்:எஸ். சங்கர நாராயணன்அவர்கள் 
       இணைப்பு:          ஞானக் கோமாளி இணையதளம் சென்றால் அவரது படைப்புகளைப் காணலாம் (படிக்கலாம்)

******************************************************************************

கொசுறு: சுஜாதா எழுதிய முதல் நாவல் நைலான் கயிறு இந்த வாரத்தில் இருந்து மீண்டும் குமுதத்தில் வெளிவர இருக்கிறது.
                

வெள்ளி, 24 அக்டோபர், 2014

அதிரப் போகும் மதுரை


 இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது.தீபாவளித் திருவிழா  கண்ட மதுரை . உடனேயே இன்னொரு திருவிழாவைக் காண இருக்கிறது. ஆம்!மூன்றாம் ஆண்டு  தமிழ் வலைப்பதிவர்  திருவிழாவைத்தான் குறிப்பிடுகிறேன். அந்நாளில் (26.10.2014)  தமிழ் வலைப் பதிவுகள் எழுதுபவர் மதுரை  கீதா நடன கோபால்  நாயக் மண்டபத்தில் கூடி மகிழ்ந்து அளவளாவ இருக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக வலைப்பதிவர் சந்திப்பு ஒரு திருவிழாவாக சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இம்முறை  கூடல் மாநகர் மதுரையில் நாம் ஒன்றிணைய சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பதிவுலகில் நாம் விரும்பிப் படிக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர்களையும், நமது படைப்புகளை விரும்பிப் படிப்பவர்களையும் சந்திக்க  ஒரு அருமையான வாய்ப்பு.. இதுவரை வருகையை உறுதி செய்யாதாவர்கள் உடனடியாக  உறுதி செய்து கொள்ளவும். ஏற்கனவே நூற்றுக்கும் மேற்ப்பட்ட பதிவர்கள் மதுரைக்கு புறப்படத் தயாராக இருக்கிறார்கள்.

    வலைச்சரம் சீனா ஐயா, தீதும் நன்றும் பிறர் தர வாரா ரமணி சார் , திண்டுக்கல் தனபாலன், தமிழ்வாசி பிரகாஷ் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை சிரமேற்கொண்டு செய்து வருகின்றனர். தாமதமாக சென்றதால் கடந்த பதிவர் சந்திப்பின்போது பலபதிவர்களை சந்தித்து உரையாட முடியவில்லை. இம்முறை அனைவருடனும் பேசி கருத்துக்களை பரிமாறிக் கொள்ள ஆவலுடன் உள்ளேன்.


    இது போன்ற சந்திப்புகளை நடத்துவது எளிதான செயலல்ல. ஏராளமான உழைப்பும் செலவும் பிடிக்கக் கூடியது. தங்கள் சொந்த வேலைகளை தள்ளி வைத்து விட்டு இதற்காக உழைக்கவேண்டும். ஒரு நல்ல இடத்தில் வசதிகளுடன் அரங்கம் அமைவது மிகக் கடினம். மதுரை வலைப்பதிவர் திருவிழா நடக்கும் அரங்கம் பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது. அதுவும் நகரின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ளது சிறப்பு. இதைமுன்னின்று நடத்துபவர்களுக்கு எந்தவிதமான லாபமும் கிடைக்கப் போவதில்லை. ஆனாலும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். முக்கிய நோக்கம் அனைத்துப் பதிவர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதே. ஒவ்வொரு பதிவருடைய கருத்துக்களும் கொள்கைகளும் மாறுபடலாம். பதிவுலகம் தங்கள் கருத்தை சுதந்திரமாகப் பதிவு செய்ய வாய்ப்பளிக்கிறது.விவாதங்களும் கருத்து மோதல்களும் நாள் தோறும் உண்டு. ஆனால் அனைவரும் ஒன்று கூடி மகிழ்வதற்கு அவை தடையாக இருக்கப் போவதில்லை என்பதை உணர்த்தும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் ஐயமில்லை .

   தற்போது பதிவுலகம் சற்று டல்லடித்தது வருவதாக கருத்து நிலவுகிறது. பதிவு எழுத வந்த பலர் முகநூல் ,   ட்விட்டர்  என்று சென்று விட்டார்கள் என்று கூறப்ப் படுகிறது. ஆனால் அது உண்மையல்ல எனபதே என் கருத்து.

    முகநூல் டுவிட்டர் எல்லாம் பாஸ்ட் புட் வகையை சார்ந்தது. பதிவுலகம் ஆற அமர் சாப்பிடும் புல் மீல்ஸ் வகையை சேர்ந்தது. ஒரு நாளைக்கு ஒருமுறையாவது முழு சாப்பாடு தேவை அல்லவா ?  ப்ளாக் எழுதுபவர்கள் பலர் முகநூலையும் திறம்படப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் முகநூல் பயன்படுத்துபவர்களில் பலர் ப்ளாக் பற்றி அறிந்திருக்காத நிலையும் இருக்கிறது. வலைப்பூ என்று ஒன்று இருப்பதையே அறியாமல் முகநூலில் படைப்புகளை வெளியிடுகிறார்கள். அது அவர்களது சொந்தப் படைப்பா பகிர்வு செய்யப்பட்டதா என்பதை அறிய முடிவதில்லை. வலப்பூவின் சிறப்பு அம்சங்களை உணர வைக்கவும் முக நூல் பதிவர்களை வலைப்பக்கம் திருப்பவும்  இந்த திருவிழா உதவக் கூடும்.

      வலைப்பூ தொடங்குபவர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.கடந்த மூன்று மாதங்களில் 100 க்கும் மேற்பட்டபுதிய வலைப்பூக்கள்  தமிழ் மண இணைப்புக்காகக் காத்துக் கிடக்கின்றன. பொதுவாக சினிமா பற்றி எழுதப்படும் பதிவுகளுக்கு வரவேற்பு அதிகம் இருந்தாலும் சமூகப் பிரச்சனைகள், இலக்கியப் பதிவுகள்,நகைச்சுவைப் பதிவுகள்,அரசியல் பதிவுகள்,சமையல் குறிப்புகள், பயணப் பதிவுகள் தொழில்நுட்பப் பதிவுகள் போன்றவற்றிற்கு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.இப்படி பலகைப் பட்ட பதிவுகளைப் படைக்கும் பதிவர்களை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது  இவ்விழா

    பலர் அற்புதமான பதிவுகள் படைக்கிறார்கள் ஆனால் அவை பலரின் கண்களில் படுவதில்லை. படைப்புகளின் நோக்கம் பிறரை சென்றடைய வேண்டும் என்பதே. ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன் என்று சொல்லிக்கொண்டாலும்  பெரும்பாலோரின் உண்மையான விருப்பம் நிறையப் பேர் தங்கள் படைப்புகளைப் படிக்க வேண்டும் என்பதே. அதற்கு அடிப்படை வலை நுட்ப அறிவை  வளர்த்துக் கொள்ளுதல் அவசியம்   அவற்றிற்கு  இது போன்ற பதிவர் திருவிழாக்கள் நிச்சயம் உதவும்.
புதியவர்களை வலைப் பதிவு எழுத ஊக்குவிக்கவும் நல்ல படைப்பாளிகளை அடையாளம் கண்டு அறிமுகப் படுத்திக் கொள்ளவும் இந்த மாபெரும் வலைபதிவர் திருவிழாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.


    தமிழ் வலைப் பதிவர்கள் ஒரு பதிவு செய்யப் பட்ட அமைப்பாக செயல் படவேண்டும் என்று மூத்த பதிவர் புலவர் இராமனுஜம் ஐயா அவர்கள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். அதற்கான முயற்சிகளும்  நடைபெற்றுக் கொண்டிருந்தது. பின்னாளில் இவ்வமைப்பு பதிவர்களுக்கு உதவியாக அமைய வாய்ப்பு உண்டு.
தமிழ்ப் பதிவுலகிற்கு  மேலும் வலு சேர்க்கும் வகையில் இச் சந்திப்பு அமையும் என்பதில் ஐயமில்லை.

மதுர! சும்மா அதிரப் போகுதில்ல!
 கவுன்ட் டவுன் கடிகாரம் 
**********
மேலதிக விவரங்களுக்கு தொடர்பு கொள்க
பதிவர்கள்  தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் (சனிக்கிழமை காலை முதல்):
பகவான்ஜி: 8903694875
மனசாலி: 9150023966


பெண்  பதிவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் (சனிக்கிழமை காலை முதல்):
திண்டுக்கல் தனபாலன்: 9043930051
பால கணேஷ்: 9003036166
வியாழன், 23 அக்டோபர், 2014

பாலகணேஷ் -சரிதாயணம் 2-நூல் வெளியீடு   ஏற்கனவே பிரபல எழுத்தாளர்களாக இருந்து பதிவுலகத்திற்கு வருபவர்கள் உண்டு. பதிவுலகத்தில் இருந்து தொடங்கி எழுத்தாளர்களாக மிளிர்பவர்கள் உண்டு. அந்தப் பட்டியலில் இரண்டாவது வகையில் பாலகணேஷும் இடம் பிடித்திருக்கிறார்.  

   அன்று (12.10.2014)இரண்டு நிகழ்ச்சிகள் . ஒன்று இலக்கியவீதி இனியவன் அவர்களின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா காலையில்; மாலையில் மின்னல் வரிகள் பாலகணேஷ் எழுதிய சரிதாயணம் 2 வெளியீட்டு விழா. இரண்டிலும் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் எதிர்பாரா விதமாக முதல் நிகழ்ச்சிக்கு செல்ல முடியவில்லை. அப்போதுதான் வீட்டுக்கு வந்த நான் உடனே டிஸ்கவரி பேலசுக்கு புறப்பட்டேன்.

     சரிதா நாயகன் சிரித்த முகத்துடன் வரவேற்க ஏற்கனவே சீனு ஸ்கூல் பையன் மெட்ராஸ் பவன் சிவகுமார் , கே.ஆர்.பி செந்தில், சமீரா,கோவை ஆவி, பட்டிக்காட்டான் கீதா  ஆகியோர் முன்னதாக ஆஜர் ஆகி இருந்தனர். கேபிள் சங்கர் தமிழக மின்சாரம் போல வந்தது தெரியாமல் புறப்பட்டார். சிறப்பு விருந்தினர் ஆதிரா முல்லை, பேராசிரியர் கமலம் செல்வம் எழுத்தாளர் முகில் இவர்களை முதல் முறையாக சந்திக்கும்  சந்தர்ப்பம் கிடைத்தது .தொகுப்பாளராக அவதாரம் எடுத்த சீனு, வரவேற்புரை ஆற்ற  ஆவியை அழைக்க ஆவி சுருக்கமாக வரவேற்பு நல்கினர்.
சீனு கொஞ்சம் தயக்கத்துடன் தொகுப்புரைக்கத் தொடங்கினாலும் போகப் போக அனைவரையும் கவர்ந்து விட்டார். 
    சேட்டைக்காரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தும் பொன்னான வாய்ப்பை எனக்களித்தார் கணேஷ்.
கீதா அவர்கள் ஒவ்வொரு நிகழ்வையும் உற்சாகத்துடன்  புகைப்படம் எடுத்தார்.

  பாலகணேஷின் குருநாதரான சேட்டைக்காரன் அவர்கள் நூலை வெளியிட எழுத்தாளர் முகில் பெற்றுக் கொண்டார், சிறப்பு விருந்தினர்கள் முகில், ஆதிரா முல்லை,கமலம் சங்கர் ஆகியோர்  கணேசனின் திறமைகளை வெகுவாகப் புகழ்ந்தனர் . சேட்டைக்காரன் நகைச்சுவை ததும்ப பேசினார். பெண்களை கேலி செய்யும் விதமாக நகைச்சுவைக் கதைகள் அமைப்பதன் காரணத்தை சொன்னார். சேட்டைக்காரன். எல்லா வயதினரையும் கவரக்கூடிய திறமை பெற்றவர் என்பதை பலருடைய பேச்சுக்களில் இருந்து உணர முடிந்தது.

ஆதிரா முல்லை அவருடன் போட்டி போட்டுக் கொண்டு எழுதியதைக் குறிப்பிட்டார்.கணேஷைப் பலவாறாகப் புகழ்ந்தாலும் "கண்டனன் கற்பினுக்கணியை கண்களால்" என்ற கம்பராமாயணப் பாடல்வரிகளுக்கு கணேஷ் அளித்த விளக்கத்தை கண்டு தான் வியந்து நின்றதை விவரித்தார்.

   "அகம் புறம்;அந்தப் புறம்" என்ற தொடரை குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிப் புகழ்பெற்ற  முகில் தனது எழுத்தின் வெற்றிக்காண காரணங்களில் ஒன்று அதை லேசான நகைச்சுவையுடன் சொன்னதுதான்  என்றார்

   பாலகணேஷின் சித்தியும் பேராசிரியையுமான  கமலம் சங்கர் பாலகணேஷின்  பால பருவத்தை நினைவு கூர்ந்து மின்னல் வரிகளை ஸ்லாகித்தார். நகைச்சுவை மட்டுமல்லாது மற்ற வகைக் கதைகளையும் எழுதவேண்டும் என்று தன் விருப்பத்தை தெரிவித்தார். இந்தப் புகழ் எல்லாம் இன்னும் சற்று முன்னதாக வந்திருக்கலாம் என்று ஆதங்கப் பட்டார். ஆவர் ஆதங்கப் பட்டார். நான் ஆச்சர்யப் பட்டேன். இவ்வளவு திறமை உடைய கணேஷ் இவ்வளவு நாள்  நாள் எப்படி பிரபலமடையானால் போனார் என்று

     சிரிப்பானந்தாவின் சிரிப்பரங்கம் நிகழ்ச்சியை கேள்விப் பட்டிருந்தாலும் இதுவரை அவரை பார்த்ததில்லை. அவரைப் பற்றி பாலகணேஷ் சொன்னது நறுக். நாமெல்லாம் ஜோக் சொன்னால் சிரிப்போம். அவரோ ஜோக் என்று சொன்னாலே சிரிப்பார். அன்றைய சிரிப்பரங்கம் நிகச்சி முடிந்தபின் வந்ததால் தாமதமாக வந்தாலும் தன பேச்சால் அனைவரையும் சிரிக்க வைத்ததார் சிரிப்பானந்தா . எல்லா வகைக் கதைகளும் எழுத வேண்டும் என்ற மற்றவர்களின் விருப்பத்திற்கு மாறாக, அவர் நகைச்சுவைக் கதைகளையே அதிகம் எழுத வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் சிரிப்பானந்தா.  'கல்யாண சமையல் சாதம்' என்ற  பாடலைப் பாடி சிரித்து ஆடிக் காட்டி அங்கிருந்தவர்களையும்  கூடவே  பாடி ஆடி  சிரிக்கச் செய்தார். அவரது நிகழ்ச்சிக்கு ஒரு முறையாவது செல்லவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டார்

    சிறப்பு விருந்தினர்களைத் தவிர கலந்து கொண்ட பலருக்கும் பாலகணேஷ் அவர்களைப் பற்றி பேச வாய்ப்பு கிடைத்தது. அடியேனும் இரண்டொரு வார்த்தைகள் பேசினேன். பதிவர் ஸ்கூல் பையன் வயது வித்தியாசமின்றியும் புதியவர் பழையவர் வேறுபாடு இன்றியும் பழகும் தனது குருநாதரின் குணத்தை போற்றினார். அவருடன் தனது  குடும்பத்தினரின் நெருக்கத்தை உணர்வு பூர்வமாக உரைத்தார்.

     பிரபல பதிவர் கே.ஆர்.பி செந்தில் 'நான் இருக்கிறேன் அம்மா' கதையுடன் தனது சொந்த வாழ்க்கையின் நிகழ்ச்சியை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். சரிதாயணக் கதைகளை விட இந்த ஒரு கதையின் மூலம்  படித்த அனைவரின் மனதிலும் இடம் பெற்றிருந்தார்.

    கண்ணதாசன் புகழ் பரப்புவதையே தன தவமாகக் கொண்டிருக்கும் கணேஷின் நண்பர் கவிரிமைந்தன் அவர்கள் கணேஷை மனமார வாழ்த்தினார் . சில சுவையான சம்பவங்களையும் குறிப்பிட்டார்.

  விழாவின் நிறைவுப் பகுதியில் மெட்ராஸ்பவன் சிவகுமாரை வலுக்கட்டாயமாக பேச அழைக்க , இயல்பான பேச்சால் சேட்டைக்காரன் , பாலகணேஷ் இவர்களைப் பாராட்டியதோடு  தான் "பன்னிக்குட்டி ராமசாமி" யின் ரசிகன் என்பதை குறிப்பிடத் தவறவில்லை.
நிறைவாகதானாக முன்வவந்து பேசினார் சமீரா , இளம் பதிவர்.எத்தனை முறை படித்தாலும் சுவை குன்றாத எழுத்து சேட்டைக்காரனுடையது என்றார்  சமீரா. தான் மின்னல் வரிகளின் தீவிர வாசகர் என்றும் மகள் போல பாசம் காட்டுபவர் கணேஷ் என்றும் குறிப்பிட்டார் .
நிறைவாக பாலகணேஷ் அனைவருக்கும் நன்றி கூற நூல் வெளியீடு சிறப்பாக நிறைவடைந்தது .

   சரிதாயணம் 2 வெளியாவதை நான் ஆவலுடன் எதிர்பார்த்தேன். காரணம் எனக்கும் சரிதாயணத்துக்கும் ஒரு தொடர்பு இருந்ததது.  எம்.பி ஆகிறாள் சரிதா என்ற கதையை அதில் சேர்ப்பதாக கணேஷ் அளித்திருந்த உறுதிமொழிதான். அந்தக் கதையை பாலகணேஷ் பாணியில் நான் முயற்சி செய்து அவருக்கு அனுப்ப அதை செப்பனிட்டு பெருந்தன்மையுடன் தனது வலைப்  பதிவில் வெளியிட்டு  பெருமைப் படுத்தினார். தான் அளித்த உறுதிமொழியின்படி இப்போது இந்த நூலிலும் இணைத்துள்ளார் எபதை அறிந்த போது மகிழ்ச்சி அடைந்தேன். இதே போல் அவரது மானசீக சிஷ்யன் சீனு எழுதிய சரிதாயணக் கதையும் இதில் இடப் பெற்றுள்ளதாகஅறிகிறேன்.

  இந்தப் புத்தகத்தை வித்தியாசமான முறையில் வடிவமைத்திருகிறார்  பாலகணேஷ் . புத்தகத்தின் இரண்டு அட்டையுமே முகப்பு பக்கமாய்க் கொள்ள முடியும் . ஒரு புறம் நகைச்சுவை மறுபுறம் வேறு வகைக் கதைகள். எதை விரும்புகிறோமோ அதை அதை படிக்கலாம். இதில் உள்ள சரிதாயணக் கதைகளை ஏற்கனவே படித்திருந்தாலும்  சீரியஸ் கதைகளில் "நான் இருக்கிறேன் அம்மா" சிறப்பு விருந்தினர் மட்டுமல்ல படித்த  அனைவரும் பாராட்டிய கதையாக  அமைந்தது என்பதில் கணேஷ் காலர் தூக்கிவிட்டுக் கொள்ளலாம் .

  பாலகணேஷ் அவர்களின் தாயார் நிகழ்ச்சிக்கு வந்திருந்தது சிறப்பு. அத்தனை பேரும்  தன் மகனைப் புகழ்ந்ததை கண்ணாரக் கண்டு காதாரக் கேட்ட அந்த தாய்க்கு
 இதை விட வேறெதுவும் எனக்கு சொல்லத் தெரியவில்லை

"அம்மா ! நீங்கள்,  ஈன்ற பொழிதினும் பெரிதுவக்கலாம்"


***************************************************************************** 
படித்து விட்டீர்களா 

பாவம் செய்தவர்கள்ஞாயிறு, 5 அக்டோபர், 2014

கோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி


   மாரிட்ஸ்பர்க்கில் ரயில் பெட்டியில் இருந்து தள்ளி விடப்பட்ட  காந்தி செய்வதறியாது திகைத்து நின்றார். .வெள்ளையர் அல்லாதவர் மீது காட்டப்பட்ட நிறவெறி அவர் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிறத் துவேஷத்தை ஒழிக்க தன்னாலானதை செய்யவேண்டும் என்று உறுதி பூண்டார். அடுத்த ரயிலில் தொடர்ந்து பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார் .அதற்குள் அவரை நேட்டாலில் இருந்து  அனுப்பிய அப்துல்லா சேட் தந்தி மூலம் தகவல் தெரிவிக்க மாரிஸ்பர்க்கில் இருந்த இந்தியர்கள் அவரை சந்திக்க ரயில் நிலையத்திற்கு வந்தனர் .காந்திக்கு ஆறுதல் கூறினர்.காந்தி சந்தித்த அனுபவம் மிக சாதாரணமான தென்றும் இதைவிட கஷ்டங்களை தாங்கள் அனுபவித்திருப்பதாகவும் கூறினர் ..
அடுத்த நாள் மாலையில் ரயில் வந்தது அதில் ஏறி  சார்லஸ் டவுனுக்க்கு  போய் சேர்ந்தார்.

     அங்கிருந்து கோச் வண்டியில் ஏறி ஜோகனஸ்பர்க்குக்கு செல்ல வேண்டும்.அதற்கான டிக்கெட்டும்  வைத்திருந்தார் காந்தி. கோச் வண்டி ஏஜென்டுக்கும்  தகவல் தெரிவிக்கப் பட்டிருந்தது.. கோச் வண்டியின் பொறுப்புகளை பார்த்துக் கொள்ளும் வெள்ளைக் காரருக்கு தலைவர் என்ற படம் உண்டு. அவர் காந்தியைப் பார்த்து இந்தியன்  என்று அறிந்து கொண்டதால் அவரை வண்டியில் ஏற்ற மறுத்து "உமது டிக்கெட் ரத்தாகி விட்டது வண்டியில் இடமில்லை" என்றார். உண்மையில் வண்டியில் இடமிருந்தது , இந்தியரை கூலி என்று இழிவாகக் கருதுவது ஆங்கிலேயரின் வழக்கம் .

   ஆனால் காந்தியோ விடாமல் வாதாடினார். முந்தைய தின அவமானத்தில் இருந்தே மீளாத நிலையில்   காந்தியின்   உரிமைக்கான போராட்டம்  தொடர்ந்தது. கோச் வண்டியின் தலைவன் எவ்வளோ தவிர்த்துப்  பார்த்தும் காந்தி விடவில்லை. வண்டி ஓட்டுபவருக்கு இருபுறமும் இரு ஆசனங்கள் இருக்கும் அதில் கோச்சின்  தலைவர் அமர்ந்து வருவார். காந்தியை உள்ளே அமரவைக்க அவர் சிறிதும் விரும்பவில்லை . கடைசியாக வேறு வழியின்றி தான்  உள்ளே உட்கார்ந்து  ஓட்டுனரின் பக்கத்து இருக்கையை  காந்திக்கு அளித்தார்., தன்னை  கோச் வண்டியின் உள்ளே  அனுமதிக்kகாமல் வெளியே ஓட்டுபவரின் பக்கத்தில் உட்காரவைப்பதை பெரிய அவமதிப்பாக கருதினார் காந்தி.. மேலும் பிரச்சனை செய்ய விரும்பாமல் மனதுக்குள் பொருமிக்கொண்டே பயணம் செய்தார். 

   சிறிது  நேரத்திற்குப் பிறகு சுருட்டு பிடிக்க விரும்பிய கோச் தலைவன் காந்தி இருந்த இடத்தில் அமர்வதற்கு காந்தியை எழுப்பி கோச் வண்டியின் படிக்கட்டின்மீது ஒரு அழுக்குக்  கோணியை விரித்து அமரச் சொன்னான், ஆனால் காந்தியோ   "உள்ளே அமரவைக்க வேண்டிய என்னை வெளியே உட்கார வைத்தாய்.. சகித்துக் கொண்டேன் இப்போது படிக்கட்டின்மீது அமரச் சொல்கிறாய். நான் அங்கு உட்கார மாட்டேன். வேண்டுமானால் உள்ளே உட்காருகிறேன்" என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூறினார்.

    இதைக் கேட்டு கோபமடைந்த தலைவன்  "காந்தியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் .  பிடித்து இழுத்து கீழே தள்ள முயன்றான்..காந்தி கோச் வண்டியின் கம்பிகளை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.எலும்பே உடைந்தாலும் பிடியை விடகூடாது நினைத்துக் கொண்டார். ஆனால் தலைவன் தொடர்ந்து அடித்த படியும்  திட்டிக்கொண்டும் இருந்தான். காந்தி  அமைதியாகவே அவனது இம்சைகளை பொறுத்துக்  கொண்டார். இதை வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர தடுக்க முயலவில்லை . கோச்சு தலைவன் திடகாத்திரமாய்  இருந்தான், காந்தியோ ஒல்லியாக பலம் குறைந்தவராக இருந்தார்.. ஒரு சிலர் பரிதாபம் கொண்டனர். அவரை விட்டுவிடச் சொன்னார்கள் .. "அவர்மீது தவறு இல்லை . அங்கு உட்காரக் கூடாது என்றால் எங்களுடனாவது அமர்ந்து பயணம் செய்ய அனுமதியுங்கள்" என்று கூறினர்.. ஆனால் அவன் அதை ஏற்று கொள்ளவில்லை. கடும் சொற்களால் காந்தியை தூற்றிக் கொண்டே வந்தான்.கடைசியில் ஓட்டுனரின் இன்னொரு பக்கத்தில் அமர்ந்திருந்த கோச்சின் வேலைக்காரனை படிக்கட்டில்  உட்கார சொல்லி விட்டு தான் அந்த இடத்தில் அமர்ந்து சுருட்டு பிடித்துக் கொண்டே காந்தியை முறைத்து கொண்டே வந்தான். நல்லவேளையாக வேறு எந்த அசம்பாவிதமும் நடக்காமல் ஸ்டாண்டர்டன்  நகரத்தை அடைந்தது வண்டி. அங்கிருந்து இன்னொரு வண்டியில் ஜோகன்ஸ்பர்க்  புறப்பட்டனர். ஆனால் அதில் இது போன்ற பிரச்சனை ஏற்படவில்லை.

    பிரிட்டோரியாவை அடைய ஜோகன்ஸ்பர்க்கிலிருந்து  மீண்டும் ரயிலில் செல்ல வேண்டும்..ஜோகன்ஸ்பர்க்கில் ஹோட்டலில் தங்கவேண்டி வந்தது.. அப்துல்லா சேட் சொன்ன கடைக்காரரை தேடிப் போகாமல் ஓட்டலில் தங்க முயற்சி செய்தார்.  எந்த  ஹோட்டலிலும் இடம் கொடுக்கவில்லை. .வேறு வழியின்றி முன்னேற்பாட்டின்படி அப்துல் கனி என்பவற்றின் உதவியுடன் தங்கிவிட்டு அடுத்த நாள் ரயிலில் பிரிட்டோரியா செல்ல ஏற்பாடுகள் செய்ய முற்பட்டார்.முதல் வகுப்பில்தான்  பயணம் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஸ்டேஷன் மாஸ்டரை  அணுகி முதல் வகுப்பு டிக்கெட் வேண்டும் என்று கேட்டார். 

அவரோ"உங்கள் உணர்வை மதிக்கிறேன். முதல் வகுப்பு டிக்கெட் வழங்குவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் ஒரு நிபந்தனை . இடையில் மூன்றாம் வகுப்புக்கு சென்றுவிடும்படி கார்டு வற்புறுத்தினால் என்னை சிக்கலில் மாட்டிவிடக் கூடாது..  ரயில்வேயின்மீது வழக்கு ஏதும் தொடர்ந்து விட கூடாது" என்ரூ டிக்கட் கொடுத்தார்.

    ஒப்புக் கொண்ட காந்தி ரயிலில் முதல் வகுப்பில் ஏறினார். எதிர்பார்த்தது போலவே சிறிது நேரம் கழித்து கார்டு அந்தப் பெட்டிக்கு வந்தார். காந்தியைப் பார்த்ததும் கோபம் கொண்டு மூன்றாம் வகுப்புக்கு சென்றுவிடும்படி கூறினார். தான் முதல் வகுப்பு டிக்கட் எடுத்ததைக் காட்டியும் அவர் அதை பொருட்படுத்தவில்லை .. அப்போது அந்தப் பெட்டியில்ஒரே ஒரு ஆங்கிலேயர் இருந்தார் .அவர் "அவரை௮ ஏன் தொல்லை செய்கிறீர்கள்.அவர்தான் முதல் வகுப்பு டிக்கட் வைத்திருக்கிறாரே. அவர் என்னுடன் பயணம் செய்வதில் ஆட்சேபனை இல்லை" என்று கார்டைக் கண்டித்தார்.

"ஒரு கறுப்புக் கூலியுடன் நீங்கள் பயணம் செய்ய விரும்பினால் எனக்கு என்ன கவலை" சொல்லிக் கொண்டே  போனார் . ஒரு சில நல்ல மனம் படைத்த ஆங்கிலேயர்களும் இருக்கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ந்த காந்தி  அவருக்கு நன்றி கூறினார்.


ஒரு வழியாக பிரிட்டோரியாவை அடைந்தார் காந்தி.அப்போதைக்கு அவரது பயணம் முடிந்தது  என்றாலும் தென்னாப்பிரிக்காவில் . இந்தியர்களின் உரிமைக்கான பயணம் இனிமேல்தான் தொடங்கப் படவேண்டும்  என்பதை அவர் உணர்ந்தார். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டார். 

ரயிலில் முதல் வகுப்பு மட்டுமல்ல இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யவும் வெள்ளையர் அல்லாதோர் எளிதில் அனுமதிக்கப் படுவதில்லை. அதன்பின்னர் தென்னாப்பிர்க்காவில் காந்தி  எதிர் கொண்ட பிரச்சனைகளும் போராட்டங்களும்  அனுபவங்களுமே  நம் தேசத் தந்தை உருவாகக் காரணமாக அமைந்தது என்றால் மிகையில்லை 

இன்னொரு சந்தர்ப்பத்தில் தொடர்வோம்  படித்து விட்டீர்களா?  வியாழன், 2 அக்டோபர், 2014

  காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்

     

     காந்தி ஒரு அதிசய மனிதர். அவர் பின்பற்றிய வழிமுறை,அவரது கொள்கைகள்,செயல்பாடுகள் இவற்றை ஆதரிப்போரும்  உண்டு . அவற்றை ஏற்றுக் கொள்ளாதவரும் உண்டு. ஏதோ ஒரு விதத்ததில் அதிகம் விவாதிக்கப்படும் மனிதராக இன்று வரை காந்தி விளங்குகிறார்.ஒவ்வொருவருக்கும் காந்தியைப்  பற்றிய கருத்துக்கள் மாறுபடலாம். ஆனால்  இந்தியாவின் அடையாளங்களில் அவரும் ஒருவர் என்பதை பெரும்பாலோர் ஏற்றுக் கொள்வர் . காந்தி போற்றுதலுக்கு உரியவராக விளங்குவதற்கு காரணம் தனது  பலவீனத்தையும் உண்மையாக உரைப்பதற்கு அவர் பெற்றிருந்த துணிவே.  
  மக்களுக்காகப் போராடவேண்டும் என்ற எண்ணத்தை அவருக்கு ஏற்படுத்தியது முக்கியமான இரு சம்பவங்கள்

    ஒன்று தென்னாப்ரிக்காவில் ரயில் பயணத்தில் காந்திக்கு ஏற்பட அவமதிப்பு ( இது அனைவரும் பள்ளிப் பாடத்தில்படித்திருப்போம்) முதலில் அதைப் பார்த்து விடுவோம் 

   பாரிஸ்டர் பட்டம் பெற்றிருந்தும் இந்தியாவில் வழக்கறிஞராக சோபிக்க முடியாத காந்தி ஒரு கம்பெனியின் வழக்கு ஒன்றிற்கு உதவுதற்காக தென்னாப்பிரிக்காவுக்கு  அனுப்பப் பட்டார். அங்கு டர்பன் நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கு அவர் அறிமுகப் படுத்தப்பட்டார்.
  அங்கு வந்த மாஜிஸ்ட்ரேட்  தலைப் பாகை அணிந்திருந்த காந்தியை வெறித்துப் பார்த்து தலைப்பாகையை எடுத்து விடும்படி கூறினார். காந்தியோ மறுத்து விட்டு நீதி மன்றத்திலிருந்து வெளியேறி விட்டார்
  இதைப் பற்றி காந்தி 

      "தலைப்பாகையைப் பற்றிய சம்பவத்தைக் குறித்து பத்திரிகைகளுக்கு   எழுதினேன்.  கோர்ட்டில்   நான் தலைப்பாகை அணிந்திருந்தது  நியாயமே என்று வாதாடினேன்.   இவ்விஷயத்தைக் குறித்துப்    பத்திரிக்கைகளில்   பலத்த விவாதம் நடைபெற்றது. பத்திரிக்கைகள் என்னை, வேண்டாத விருந்தாளி என்றும் வர்ணித்தன.
  இவ்விதம் நான் தென்னாப்பிரிக்காவுக்கு வந்த சில தினங்களுக்குள்ளேயே   இச்சம்பவம்  னக்கு   எதிர்பாராத விளம்பரத்தை அளித்தது.     சிலர் என்னை ஆதரித்தனர்; மற்றும்சிலரோ, “இது பைத்தியக்காரத்தனமான துணிச்சல்” என்று கூறிப் பலமாகக் கண்டித்தனர்."
   நான் தென்னாப்பிரிக்காவில் இருந்த காலம் முழுவதும் கடைசிவரையில்,   என் தலைப்பாகை  என்னிடம் இருந்தது......" என்று கூறுகிறார்

    பின்னர் அங்கிருந்து காந்தி பிரிட்டோரியா செல்ல நேரிட்டது  அப்போதுதான் அப்போதுதான் நாம அனைவரும் அறிந்த  அந்த சம்பவம் நடந்தது

  காந்தி அதைஎவ்வாறு விவரிக்கிறார் என்று பார்ப்போம்

        ".....நான் சென்ற ரெயில்,      இரவு 9 மணிக்கு     நேட்டாலின் தலைநகரான     மாரிட்ஸ்பர்க் போய்ச்சேர்ந்தது.  அந்த ஸ்டேசனில் பிரயாணிகளுக்குப் படுக்கை கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். ஒருரெயில்வே     சிப்பந்தி வந்து, எனக்குப் படுக்கை வேண்டுமா என்று கேட்டார்.  “வேண்டாம்; என் படுக்கை இருக்கிறது” என்றேன். அவர் போய்விட்டார்.     ஆனால், வேறு ஒரு பிரயாணி அங்கே வந்து, என்னை மேலும் கீழுமாகப் பார்த்தார்.      நான்,  கறுப்பு மனிதன்’ என்பதை அறிந்ததும்       அவருக்கு     ஆத்திரம் வந்துவிட்டது.  உடனே போய்விட்டார். பிறகு இரண்டொரு அதிகாரிகளுடன் திரும்பி வந்தார். அவர்கள் எல்லோரும் பேசாமல் இருந்த போது, வேறு ஒரு  அதிகாரி என்னிடம் வந்து, “இப்படி வாரும். நீர் சாமான்கள் வண்டிக்குப் போகவேண்டும்” என்றார்.

       “என்னிடம் முதல் வகுப்பு   டிக்கெட் இருக்கிறதே” என்றேன்.

       “அதைப்பற்றி அக்கறையில்லை ;  நீர் சாமான்கள் வண்டிக்குப் போக வேண்டும் என்று நான் சொல்லுகிறேன்” என்றார்.

       “நான் உமக்குச் சொல்லுகிறேன்.   இந்த வண்டியில் பிரயாணம் செய்ய டர்பனில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். எனவே,   இதில்தான் நான் பிரயாணம் செய்வேன்” என்றேன்.


       “இல்லை. நீர் இதில் போகக்கூடாது. இந்த வண்டியிலிருந்து நீர்இறங்கிவிட வேண்டும்.     இல்லையானால்  உம்மைக் கீழே தள்ளப்
  போலீஸ்காரனை அழைக்க வேண்டிவரும்” என்றார்.
   

    “அழைத்துக்கொள்ளும். நானாக இவ் வண்டியிலிருந்து  இறங்கமறுக்கிறேன்” என்று சொன்னேன்.

       போலீஸ்காரர் வந்தார்.    கையைப் பிடித்து இழுத்து என்னை  வெளியே தள்ளினார். என் சாமான்களையும் இறக்கிப் போட்டுவிட்டார். சாமான்கள் வண்டிக்குப் போய் ஏற நான் மறுத்து விட்டேன். ரெயிலும் புறப்பட்டுப் போய்விட்டது.   போட்ட இடத்திலேயே எனது சாமான்களையெல்லாம் போட்டுவிட்டு,        கைப்பையை மாத்திரம் என்னுடன் வைத்துக்கொண்டு, பிரயாணிகள்     தங்கும் இடத்திற்குப் போய் உட்கார்ந்தேன்.     சாமான்கள் ரெயில்வே அதிகாரிகள் வசம்இருந்தன.

       அப்பொழுது குளிர்காலம்.   தென்னாப்பிரிக்காவில்       குளிர் மிகக் கடுமையாக இருக்கும். மாரிட்ஸ்பர்க்       உயரமான இடத்தில் இருந்ததால் அங்கே குளிர் அதிகக்  கடுமையாக இருந்தது.      என் மேல்  அங்கியோ மற்றச் சாமான்களுடன் இருந்தது.அதை ரெயில்வே அதிகாரிகளிடம் போய்க்கேட்க நான் துணியவில்லை. கேட்டால், திரும்பவும் அவமதிக்கப்படுவேனோ என்று பயந்தேன். எனவே, குளிரில் நடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். அவ்வறையில்  விளக்கும் இல்லை.       நடுநிசியில்   ஒரு பிரயாணி அங்கே வந்தார். அவர் என்னுடன் பேச        விரும்புவதுபோல் இருந்தது. ஆனால், பேச விரும்பும் நிலையில் நான் இல்லை.

        என் கடமை என்ன என்பதைக்  குறித்துச்   சிந்திக்கலானேன். என்னுடைய    உரிமைகளுக்காக போராடுவதா,  இந்தியாவுக்குத் திரும்பிவிடுவதா?   இல்லாவிடில்    அவமானங்களையெல்லாம் பொருட் படுத்தாமல்   பிரிட்டோரியாவுக்குப் போய்,    வழக்கை முடித்துக்கொண்டு, இந்தியாவுக்குத் திரும்புவதா? என் கடமையை நிறை வேற்றாமல்     இந்தியாவுக்கு     ஓடிவிடுவது   என்பது கோழைத்தனமாகும்.  எனக்கு ஏற்பட்ட கஷ்டம் இலேசானது ;  நிறத் துவேஷம் என்ற கொடிய நோயின் வெளி அறிகுறி  மாத்திரமே அது. சாத்தியமானால்,   இந்த நோயை         அடியோடு ஒழிக்க நான் முயலவேண்டும் ;   அதைச் செய்வதில்   துன்பங்களை அனுபவிக்க வேண்டும். நிறத்துவேஷத்தைப்  போக்குவதற்கு அவசியமான அளவு மாத்திரமே, நான் தவறுகளுக்குப் பரிகாரம் பெறப் பார்க்க வேண்டும்.

       எனவே அடுத்த வண்டியில் பிரிட்டோரியாவிற்குப் புறப்படுவது என்று தீர்மானித்தேன்........"

       இப்படியாக அடுத்த வண்டியில் ப்ரிடோரியாவுகுப் போவது என்று முடிவு செய்தார். 

     இந்த சம்பவம் பற்றி புத்தகங்களில் படித்திருப்போம் . அவர் பிரிட்டோரியாவை அடையும்   முன்னமே அவரது உறுதியைக் குலைக்கும் வண்ணம் இன்னொரு சம்பவம் நடக்கும் என்று அவர் எதிர் பார்க்கவில்லை ..

  அப்படி என்னதான் நடந்தது
  புதன், 1 அக்டோபர், 2014

  பாவம் செய்தவர்கள்

       
      அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் மின்சார ரயிலில்  கூட்டமில்லை. இருக்கைகள் காலியாகவே இருந்தன. வைரமுத்துவின் "வைகறை மேகங்கள்"  என் கையில் தவழ்ந்து கொண்டிருந்தது. 

      கணவன் மனைவி , ஒரு சிறுவன், ஒருபெண் குழந்தை (நான்கு அல்லது ஐந்து வயது இருக்கலாம்)  கொண்ட சிறு குடும்பம் என் எதிர் இருக்கைகளில் வந்து அமர்ந்தனர்.தனக்கு ஜன்னலோர இடம் வேண்டுமென்று அடம் பிடித்து அமர்ந்த சிறுவன் அதன் பயனை அனுபவிக்காமல் செல்போனில் கேம் விளையாட ஆரம்பித்து விட்டான்.அந்தப் பெண் குழந்தையோ  நிறைய இடம் இருந்தும் தந்தையின் மடிமேல் அமர்ந்தது . அதன் துறுதுறு பார்வையும் சுறுசுறு  செயல்களும், கலகல மொழிகளும் அந்தப் பெட்டியில் இருந்த சொற்ப பேர்களையும் ஈர்த்தது. புத்தகக் கவிதையில் இருந்து அந்தக் குழந்தைக் கவிதையின் பக்கம் என் கவனம் திரும்பியது.

     தன்னையும் தன கணவனையும் சற்று  நேரம் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டி மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து அந்தப் பெண் கேட்டாள் "என்னடி! இப்படி லூசு மாதிரி  பாத்துகிட்டே இருக்கே! '

  "உன்னை விட அப்பா அழகா இருக்கார்மா" என்று அதிர்வெடியை சிரித்துக்கொண்டே வீசியது அந்த பிஞ்சுக் குழந்தை"

      பொது இடத்தில் இப்படி சொல்லிவிட்டாளே என்று முகம் முழுவதும் கோபம் லேசாகப் பரவ கணவனைப் பார்த்தாள் அந்த மங்கை.  கொஞ்சம் பெருமிதம் அடைந்தாலும் மனைவியின் மன ஓட்டத்தை அறிந்த கணவன் தன சுட்டு விரலை குழந்தையின் வாய் மீது வைத்து மூடினான். அம்மாவின் கோபம் உணர்ந்த குழந்தை, தாவி சென்று அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டு சமாதனப் படுத்த முனைந்து . கோபம் கரைந்து போனதை அறிந்து துணிவு கொண்ட குழந்தை அம்மாவின் கன்னத்தை கிள்ளியது . தடுத்தும் கேளாமல் நெற்றியில் வைத்திருந்த சிறிய ஸ்டிக்கர் பொட்டை எடுத்து தன் நெற்றியில் வைத்துக் கொண்டது. என்ன நினைத்ததோ அதை எடுத்து மூக்கில் வைத்துப் பார்த்து "எப்படி இருக்கு" என்று தலையை ஆட்டி ஆட்டி கேட்டது.

  "இது எதுக்குடி? நீ  பெரிய பொண்ணா வளர்ந்ததும் உனக்கு மூக்கு குத்திடலாம்"

  "ஐயய்யோ!  வேணாம், மூக்கு குத்தினா வலிக்கும். நான் குத்திக்க மாட்டேன். ஸ்டிக்கர்தான் வச்சுக்குவேன். அப்பா! அம்மாகிட்ட சொல்லு  என்று செல்லமாய் சிணுங்க,

  "சரிடா கண்ணு" என்ற கணவனைப்பார்த்து "இப்படியே செல்லம் கொடுத்தா உருப்பட்டா மாதிரிதான்" என்று மனைவியின் முகமொழி கூறுவதுபோல் தோன்றியது 

      அதற்குள் செல்போன் ஒலிக்க தந்தையின் பாக்கெட்டில் இருந்து அதை எடுத்து ஆன் செய்து தந்தையின்  காதில் வைத்தாள் .பேசி முடிக்கும் வரை அப்படியே வைத்திருந்தாள். பின் மொபைலை நோண்டி கேமராவை கண்டறிந்து விதம் விதமாக செல்பி எடுத்தாள். அதில் தான் அம்மா அப்பா அண்ணனுடன்  இருக்கும் படத்தை மீண்டும் மீண்டும் காட்டி மகிழ்ந்தாள். 

  "டேய்!  இங்க பார்டா"  என்று குட்டித் தங்கை அழைப்பதை  கண்டு கொள்ளாமல் இன்னும் செல்போனில் விளையாட்டை தொடர்ந்து கொண்டிருந்தான் சிறுவன் .

  நான் லேசான பொறாமையுடன் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன் 

  "சே! பெண்குழந்தை இல்லாதவர்கள், பாவம் செய்தவர்கள்" 

  **********************************************************************************

  ஆச்சர்யக் கொசுறு : குழந்தை மம்மி டாடி என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை 


  ************************************************

  எச்சரிக்கை: 

     பல்வேறு காரணங்களால் நான் வலைப் பதிவு எழுதி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. இக் காலக்கட்டத்தில் பதிவுலகம் மகிழ்ச்சியுடன் இருந்ததாக தகவல் கிடைத்ததால் பொறுத்துக் கொள்ள முடியாமல் மீண்டும்  எழுத வந்துவிட்டேன். என்ன செய்வது? சகித்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. ஹிஹிஹி