என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 28 அக்டோபர், 2014

சுஜாதா பற்றி பிரபல எழுத்தாளரின் விமர்சனம்


   (நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல இன்றைய தொழில் நுட்ப உலகில் எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் இணையத்தோடு தொடர்பில்லை என்றால் அவர் முந்தைய தலைமுறையினராகவே அடையாளம் காணப்படுவார். அதனால்தான் எந்தத் துறை பிரபலங்களாக இருந்தாலும் முகநூல், டுவிட்டர், வலைப்பூக்கள் மூலம் தங்களை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்கின்றனர். குறிப்பாக எழுத்தாளர்கள் இதன் அவசியத்தை உணர்ந்திருக்கின்றனர். ஏற்கனவே ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா போன்றவர்கள் பல ஆண்டுகளாக இணையத்தில் எழுதி வருகிறார்கள். பல இணைய வாசகர்களையும் பெற்றிருக்கிறார்கள். 

  அப்படி சமீபத்தில் இணையத்தில் ஒரு வலைப் பதிவை துவக்கி இரண்டு மாதங்களாக எழுதி வருபவர் எஸ். சங்கரநாராயணன் அவர்கள். இலக்கிய உலகப் பிரபலம்   தரமான எழுத்துக்கு சொந்தக்காரர். அவரது வலைப்பதிவிற்கு பெயர் ஞானக் கோமாளிசில நாட்களுக்கு முன்பு அவரது வலைப் பக்கத்தை பார்க்க நேர்ந்தது. அவர் வலை உலகிற்கு புதியவர் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. கதைகள் கட்டுரைகள் இலக்கிய விமர்சனங்கள் என்று இரண்டு மாதங்களில் ஏராளமான பதிவுகளை செய்திருக்கிறார். அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன. இலக்கிய ஆர்வலர்களுக்கு அவரது பதிவுகள் விருந்தாக அமையும் என்று நம்புகிறேன். அவரது பதிவில் பலதரப்பட்ட வாசகர்களையும் கவரக் கூடிய சுஜாதா- பத்திரிக்கைப் பேராளுமை என்ற கட்டுரையைப் படித்தேன்.  அவரது அனுமதி பெற்று அந்தக் கட்டுரையை இங்கே வெளியிட்டிருக்கிறேன்.


எஸ்.சங்கரநாராயணன் 


பத்திரிக்கைப் பேராளுமை-சுஜாதா 


     ஆணாதிக்க சமுதாய அதீத தந்திரத்துடனும் அங்கீகாரத்துடனும் தானே அமைத்துக் கொண்ட ராஜபாட்டையில் வலம் வந்தார் சுஜாதா. உற்சாகத்துக்கு மறு பெயர் சுஜாதா. அவர் எழுத்தில் அலுப்பைப் பார்க்க முடியாது. சுவாரசியமே எழுத்தின் தாரக மந்திரம் அவருக்கு. சுவாரசியமாக்கும் கவனத்தில் தன்னடையாளம் கூட அவருக்கு ரெண்டாம் பட்சம்தான் என்று தோன்றுகிறது. கணையாழியில் ஒருவர், அவரை 'எழுத்துலகின் சிலுக்கு' என்று குறிப்பிட்டார் 

   புனைக் கதைகளில் அவர் எழுதிக் காட்டிய ஆபாச வசனங்களுக்கு அவரை சொந்தமாக்க முடியாத அளவு நல்ல மனிதாராக நட்பு பேணுகிறவராக எளிமையானவராக இருந்தார். விளம்பரங்களில் சினிமாக்களில் கொஞ்சூண்டு ஆபாசம் நல்லது என்பார்கள். திட்டுவான் என்றாலும் மனசில் நிக்குமே, என்கிற வியாபார தந்திரம். அதைத்தான் 'சுஜாதா காலம்' என்கிற பத்திரிகைப் பேராளுமை நிறுவி அடங்கியிருக்கிறது. பூகம்பம் பற்றி எழுதும்போது கூட அவரால் 'கட்டில் கெட்ட காரியம் பண்ணினாப் போல ஆடியது ' என்றுதான் எழுத முடிந்தது.

   ஒரு கதையில் ஆம்பளைங்க செய்யிற அத்தனை காரியத்தையும் பெண்ணால் செய்ய முடியுமா? என் அவர் கேட்டார்.ஆணைப் போல பெண்ணால் உயரத்துக்கு ஸ்விங் என்று ஒண்ணுக்கடிக்க முடியுமா என கேட்டார். அதன் பேர் நகைச்சுவை?. பிற்பாடு ஒரு திரைப்படத்தில் அவர் எழுதிய வசனமாகவும் அது இடம் பிடித்தது. சுய அங்கீகாரம்!

  வணிகப் பத்திரிகையில் அவரும் ஓவியர் ஜெயராஜும் கொட்டமடித்தார்கள். பெண்களை பனியனுடன் வரைந்து அதில் 'மில்கி வே' என்று வாராவாரம் புதிய வார்த்தைகளாக எழுதி மகிழ்ந்தார் ஜெ. கதையில் இல்லாதவர்கள் எல்லாம் ஜெயின் கற்பனையில் முளைத்தன.கதையில் வரும் பெண் பனியன் போடாவிட்டாலும் ஜெ, அணிவித்தார்.             


    மொழியில் சுறுசுறுப்பு விறுவிறுப்பு வேகம் கூட்டிக் காட்டிய நடை கூட அதே சமயத்தில் ஸ்ரீ வேணுகோபாலன் என என எழுதிவந்த,பிற்பாடு சிவப்பு விளக்குக் கதைகள் தொடர்ந்து தந்த புஷ்பா தங்கதுரை எழுதிக் காட்டிக் கொண்டிருந்த நடைதான் . பரவலாய் சுஜாதாவுக்கு கிடைத்த அங்கீகாரம், சாவி போன்றவர்கள் சுஜாதாவை உயர்த்திய உற்சாகம்-சுஜாதாவின் சலவைக் குறிப்பைக் கூட வெளியிடுவீர்களா -என்ற கேள்வி கேட்டபோது சாவி சலவைக் குறிப்பை வாங்கி வெளியிட்டார். எழுத்துக்கு சன்மானம் என்று பரபரக்காத,விரட்டி விரட்டி கேட்காத எழுத்தாளர்களைத் தமிழ்ப் பத்திரிகைக்கு ரொம்பப் பிடித்தது. அவை அவரை உயர்த்திப் பிடித்தது.

             மர்மக் கதை என்ற பெயரில் அவர் கொண்டு வந்த கணேஷ் வசந்த், அதில் வசந்தின்  குறும்பு என்ற பெயரிலான ஆபாச வசனங்கள்,"பொண்ணு சூப்பர் பாஸ். நின்னு விளையாடலாம் " எல்லாம் இளைஞர்கள் ரகசியமாய்ப் படித்து சிரித்து மகிழ்ந்து பொது சந்திப்பில் பரிமாறி உற்சாகப் படுத்திக் கொண்டார்கள் 
  
   அவர் எழுதிய மர்மக் கதைகள் ஆங்கிலத்தில் பரவலாகஅறியப்பட்டதின் தாக்கங்களே. சில சமயம் அதே மொழிப்பாடுகளைக் கூட சுஜாதா கையாள முயன்றார். 'எனார்மஸ் பிரஸ்ட்' என்பதை தமிழில் ஏராளமான மார்பு என்று இளைஞர்களை புல்லரிக்க வைத்தார்..சோப்பில் சாவியை பதித்து மாற்று சாவி செய்யும் உத்தியை ஆங்கிலத்திலேயே நான் வாசித்திருக்கிறேன்.

          நச் என்ற சிறுகதைகளால் தந்தாதால் சுஜாதா கவனம் பெற்றார். அவை பெரும்பாலும் மையப்புள்ளி விலகிய கதைகளே.ஒரு விபத்தை சொல்லி, மற்றொருபுறம் ஒரு பெண் கணவனுக்கு காத்திருப்பதாக சொல்லிக் கொண்டே வருவார். விபத்தானவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வருவான் ஒருவன். கடைசி திருப்பமாய் அந்தக் காப்பாற்றப் போனவனின் மனைவிதான் காத்திருக்கிறாள் , என்று முத்தாய்ப்பு வைப்பார் சுஜாதா. திருப்பம்; அது அவருக்கு முக்கியம் .வித்து ஒரு மன பாதிப்பை நிகழ்த்தவில்லை.  

  மும்பை இட நெருக்கடி பற்றி ஒரு கதை . தெருவில் ஒருவன் விபத்தாகிக்  கிடப்பான். அவன் வீட்டை வாடகைக்கு கேட்டு ஒருவன் ஓடோடிப் போனால் அவனுக்கு முன்பே வாடைக்கு வேறு ஒருவன் முந்திக் கொண்டிருப்பான். பெரும்பாலான கதைகளில் இப்படி உணர்வு வீர்யமான கட்டங்களை கதைப் போக்கின் சுவாரசியத்துக்கு  விட்டுக் கொடுத்தார் சுஜாதா. வாழ்க்கைக்கு சிறிதும் நியாயம் செய்யாத கதைகள்.


    முதல் மனைவி சாகக் கிடக்கும் கணவன் அருகில் பணி விடை செய்கிறாள்.இரண்டாம் மனைவி கிட்டவே வரவில்லை. கண் திறந்த கணவன் முதல் கேள்வியாய் இரண்டாம் மனைவி எங்கே என்று கேள்வி கேட்பான் 

              பெரும்பாலான எழுத்தில் சுஜாதா யார் என்று வரையறுத்தாக வேண்டும். சுஜாதாவின் எழுத்து இளைஞர்களை குறிவைத்து வெற்றிகரமாக இயங்கியது.விவரப் பதிவுகளுடனான நடையே அப்போது புதிது. அதில் சில வேளை கருத்துப் பிழை வரும். ஏழாவது மாடியில் இருந்து 180 கி.மீ வேகத்தில் விழுந்து செத்துப் போனான் என அவர் எழுதினால் ஒரு வாசகர் புவி ஈர்ப்பு விசைப்படி கீழே வரவர வேகம் அதிகரிக்குமே சீரான வேகம் என்று பெப்படி சொல்வீர்கள் என்று கேட்க நேர்ந்தது. சில சமயம் அதையும் அவர் கிண்டல் போல மாமா சித்தப்பா எல்லோருக்கும் போஸ்ட் கார்டு வாங்கிக் கொடுத்து எழுதிப் போட்டி விடுகிறார்கள் என் எகிறியது உண்டு.

    நடையில் புதுமை இறங்கினான் என ஒவொரு எழுத்தாக தனி வரியாக எழுதிக் காட்டியதும் அப்போது 'ஜான் அப்டைக்' ஆங்கிலக் கவிதைகளில் செய்ததுதான் .இலை உதிர்கிறது என்பதில் உ  தி  ர்  கி  ற  து  என எழுதிக் காட்டும்போது தள்ளாட்டம் கண்ணில் உணர முடிகிறது. எப்போதும் மூலத்தின் வீர்யம் அதிகம்தான் 

   தில்லியில் கஸ்தூரி ரங்கனுடன் பரிச்சயம் நெருங்கி கணையாழியில் பத்திகள் எழுத வந்தது தற்செயல் என்றாலும் அதில் புதுசு புதுசாய் எழுத சுஜாதா உற்சாகம் காட்டினார். பத்தி வகைமையே அப்போது அரிதான காரியம்.பத்தி எழுத சுவாரசியமான நடையும் அதைவிட சுவாரசியமான விஷயமும் வேண்டும்.அவரால் முடிந்து. பிற்பாடு பெருஞ் சுற்றிதழ்களும் அவரை பத்தி எழுத வைத்தன.ஒருகட்டத்தில் புனைக் கதை எழுத்தாளர் தளர்வுறும்போது பத்தி எழுத்து அபாரமாய் கை கொடுக்கும்.

   சுஜாதா பத்திகளில் நவீன இலக்கியம்,மரபிலக்கியம் ,சங்க இலக்கியம்,சமகால விஷயம், விஞ்ஞான விஷயம் என்று அடுக்குகளை மாற்றி ஒரே பக்கத்தில் கொடுத்து அந்தப்  பகுதியை செறிவூட்டினார். சிறந்த கவிஞர்கள் என அவர் வணிக இதழ்களில் அடையாளம் காட்டியவர்களின் கவிதைகளை சுஜாதா இல்லை என்றால் அவர்கை இதழ்கள் கண்டு கொண்டிருக்காது. வணிக இதழ்களில் நல்லிலக்கிய அறிமுகம் என்று அவர் மனதாரச் செய்தார் என்றுதான் தோன்றுகிறது. இந்தியா டுடே கூட ஒரு சிறப்பு மலருக்கு அவரிடம் இருந்துதான்  தற்காலக் கவிதை என்ற தலைப்பில் கட்டுரை எழுதக் கேட்டது.

  அந்த ரசனையில் பாசாங்கு கிடையாது. வெண்பாப் போட்டி ஹைக்கூ கவிதைப் போட்டி என்று அவர் ஊக்குவித்தார்.பரிசிளித்தார்.அவர் ஊக்குவித்த இலக்கிய அங்கீகாரம் பெற்ற படைப்பாளிகள்,அவர்களும்  எழுத்து சுவாரசியக் காரர்கள் என்று குறிப்பிடத் தக்கது.

   வணிகப் பத்திரிக்கைகள்  ஓரளவுக்கு தரமான இலக்கிய முயற்சிகளுக்கு பழகிக் கொண்டிருக்கின்றன.மூஞ்சி சப்பையாய் கைகால் நெளிசலாய் இருந்தாலும் அந்த ஓவியங்களை வெளியிட மக்களும் சரி என்று பழகிக் கொண்டிருக்கிறார்கள். நல்ல கதை என்று இலக்கிய முகம் காட்ட  இப்படி அடையாளங்கள். இதில் சுஜாதாவின் பங்கு கணிசமானது. போற்றுதலுக்குரியது. அது அவரால்முடிந்தது. அதை அவர் வாய்ப்பை நழுவ விடாமல் செய்தார்.

   நாடகங்களில் பிழியப் பிழிய அழுக குலுங்க குலுங்கச் சிரிப்பு என்றில்லாமல், மாமி கதைகளாகவும் இல்லாமல் சுவாரசியம் விலகாத குடும்பக் கதைகளை, சராசரி மனித வியாகூலங்கலை நம்பிக்கைகளைப் பிரதிபலித்தார். பூரணம் விஸ்வநாதன் சுஜாதாவுக்கு கிடைத்தது அவரது அதிர்ஷ்டம்தான். தனி முத்திரை பதித்தன அந்த நாடகங்கள் சினிமாவிலும் அவரை சினிமாவின் போக்கோடு இயக்கினார்கள்.தன அடையாளம் இன்றி அவருக்கிருந்த சுவாரசியப் போக்கு,அலட்சிய பாவனை, கொண்டாடும் நகைச்சுவை என்று வேண்டியதைப் பெற்றுக் கொண்டார்கள். சினிமாவில் அவர் தேவைப் பட்டார். சினிமா இளைஞர்களுக்கான ஊடகம் அங்கே அவர் இல்லாமல் எப்படி?

     பிற்காலங்களில் அவர் விஞ்ஞானக் கதைகள் எழுத ஆரம்பித்தார்.அது சுஜாதா என்பதால் அதற்கும் இங்கே அங்கீகாரம் கிடைத்தது. வேறு எழுத்தாளர்க்கு இது  நிகழ்ந்தேயிராது. யாரும் முயற்சி செய்து தோற்றிருக்கலாம். தேர்தல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வர அவரது பங்களிப்பு சிறப்பானது என் இரங்கல் செய்தில் தமிழக முதலர் நினைவு கூர்ந்தார். தவிரவும் விஞ்ஞானக் கலைச் சொல் அகராதி அவர் முனைந்து கொண்டு வந்ததை சொல்லியாக வேண்டும். தமிழில் தட்டச்சு செய்து கணினியில் நேரடியாகக் கதைகள்  எழுத ஆரம்பித்த எழுத்தாளர் சுஜாதா தான் . முதல் இணைய தளப் பத்திரிக்கை 'மின்னம்பலம்' த்வங்கியது வரலாறு குறித்துக் கொள்ளவேண்டிய செய்தி.

   சதா வாசிப்பு ருசிகொண்ட மனிதராக இருந்தார் சுஜாதா.இலக்கியப் போக்கு என்று பொத்தாம்பொது கருத்துக்களை  நகைச்சுவை சாயம் பூசி அவர் எழுதினாலும்,எந்த எழுத்தாளரையும் விரல் சுட்டினாற்போல் சாடியது இல்லை. பத்திரிகைக் காரர்கள் கேட்கும்போதெல்லாம் சிறுகதை,தொடர்கள் என்று வாரி வழங்கிக் கொண்டே இருந்தார். சுஜாதா. அவர் எழுதினால் பத்திரிக்கை விற்பனை கிடுகிடுவென உயரந்தது.கல்கி சாண்டில்யனுக்குப் பிறகு அந்தப் பெருமை சுஜாதாவுக்குத்தான் கிடைத்தது.

    நமது மண்ணின் மரபுப் படியே அவர் வயது முதிர, பழைய இலக்கியங்களிலும் ஆன்மீகத்திலும் ஈடுபாடு காட்டினார்.புறநானூறு பொழிப்புரை தந்தார்.வைணவ இலக்கியத்தில் ஆர்வம் காட்டினார்.

  தமிழ் எழுத்து நடையில் சுஜாதா வேகத்தையும் குறியையும் தந்து விட்டுப் போயிருக்கிறார். அவரது ஆளுமை அழியாது என்றுதான் படுகிறது.காலாகாலத்துக்கும் இளைய தலைமுறையாளர்கள், தங்களை இளமையாக  உணர்கிறவர்கள் அவரைக்  கொண்டாடிக் கொண்டே இருப்பார்கள்

*********************************************************************************

நன்றி : எழுத்தாளர்:எஸ். சங்கர நாராயணன்அவர்கள் 
       இணைப்பு:          ஞானக் கோமாளி இணையதளம் சென்றால் அவரது படைப்புகளைப் காணலாம் (படிக்கலாம்)

******************************************************************************

கொசுறு: சுஜாதா எழுதிய முதல் நாவல் நைலான் கயிறு இந்த வாரத்தில் இருந்து மீண்டும் குமுதத்தில் வெளிவர இருக்கிறது.
                

21 கருத்துகள்:

  1. தங்கள் தளம் மூலமாக திரு சங்கரநாராயணன் தளம் சென்றிருந்தேன். சுஜாதாவைப் பற்றிய கட்டுரை சிறப்பானதாக இருக்கிறது. சிறிய கட்டுரையாக இருந்தாலும் ஏறக்குறைய முழுமையான கட்டுரைபோல இருக்கிறது. எல்லாவற்றையுமே வளைத்துப்போட்டுச் சொல்லியிருக்கிறார். அவருக்கும் அதைப் பகிர்ந்த உங்களுக்கும் பாராட்டுக்கள்.
    அவருடைய தளத்தில் கருத்துப் பதிவிட முடியவில்லை. நீங்கள் ரோபோ இல்லையென்பதற்கு உத்தரவாதம் கொடுங்கள் என்று சொல்லி நிறைய சண்டித்தனம். பேசாமல் வந்துவிட்டேன். அந்தக் கொக்கியை நீக்கிவிடச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அவரது வலைப் பதிவில் கருத்திட்டிருந்தேன்.இன்னமும் வலைப்பதிவுக்கு புதியவர் என்பதால் அதன் சூட்சுமங்களை அறிய கொஞ்ச நாட்களாகும் என்று நினைக்கிறேன். இது தொர்பாக அவருக்கு மின்னஞ்சல் அனுப்ப இருக்கிறேன்.
      தங்கள் வருகைக்கு நன்றி அமுதவன் சார்

      நீக்கு
  2. ஒரேயடியாய்க் கொண்டாடவில்லை. பழி சொல்லவுமில்லை. தள்ளி நின்று சார்பில்லாமல் விவரித்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  3. தீர்க்கமான தமிழில் உடைபடாத நடையில் எழுத்தாளர் சுஜாதாவை பற்றிய நுண்ணிய பார்வை.

    சுஜாதா பற்றி ஏராளமான விமர்சனங்கள் உண்டு. அதையெல்லாம் மீறி அவர் தமிழின் லேண்ட்மார்க் ரைட்டர் என்பதில் முரபாண்டுகள் இருக்கமுடியாது. ரசனை மிகுந்த கட்டுரை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். இன்றைக்கும் அவருக்கு இருக்கும் வரவேற்பால்தான். குமுதத்தில் அவரது முதல் படைப்பு மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது

      நீக்கு
  4. இந்த தளத்தை குறித்துக் கொண்டேன் சார்.. சுஜாதா பற்றி ஏற்கனவே அறிந்ததை இன்னும் ஒருமுறை வாசிக்கையில் சந்தோசமாக உள்ளது.. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் சுஜாதா.. :-)

    பதிலளிநீக்கு
  5. சுஜாதாவைப் பற்றிய சிறந்த விமர்சனம்! புதியதொரு தள அறிமுகம் கிடைத்தது! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  6. அருமையான எழுத்தாளர், அருமையான பதிவு. நன்றாக எழுதுகின்றீர்கள். இனி தொடர்ந்து வருவேன். சுஜாதா எழுதிய "பிரிவோம் - சந்திப்போம்" என்னும் கதையின் நாயகனாக என் மனதிலே வளம் வந்தவன் தானே நான்.

    பதிலளிநீக்கு
  7. சுஜாதா அவர்கள் பற்றிய தொகுப்பு, சுவையுடன் இருந்தது.

    திரு. எஸ். சங்கர நாராயணன் தளம் சென்று பார்க்கிறேன்.

    'நைலான் கயிறு' மீண்டும் பிரசுரமாகிறதா? பலே!

    பின் குறிப்பு: 'சுஜாதா பதில்கள்' பகுதியில் நான் எழுதிய சில கேள்விகளும் பிரசுரமாகியுள்ளன.
    சுட்டி:

    http://nizampakkam.blogspot.com/2012/05/sujaathaa100-100.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? வாழ்த்துகள் நிஜாம் . கட்டாயம் படிக்கிறேன்.

      நீக்கு
    2. ஏற்கனவே உங்களது அந்தப் பதிவை படித்து கருத்திட்டிருக்கிறேன். நன்றி

      நீக்கு
    3. ஆம் கருத்துரையிட்டுள்ளீர்கள் - நன்றி!

      இந்த சுட்டி, சுஜாதா தொடர்பான எனது பதிவு என்பதை மற்ற பதிவர் நண்பர்களும் தெரிந்து, எனது 'நிஜாம் பக்கம்' வந்து படித்து மகிழ்வார்கள் என்பதை எண்ணியே இங்கு தங்கள் கருத்துரையில் இணைத்தேன்.

      மீண்டும் நன்றி சார்!

      நீக்கு
  8. ஸ்ரீவேணுகோபாலனும் சுஜாதாவும் ஒன்று என்கிற ரீதியில் அவர் எழுதியிருப்பதும், கிட்டத்தட்ட கொக்கோக எழுத்தாளர் என்கிற ரேஞ்சுக்கு சுஜாதாவை மட்டம் தட்டியிருப்பதும் எனக்கு அறவே பிடிக்கவில்லை. மற்றவற்றை ஏற்றுக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  9. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  10. மிகச் சிறப்பான கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி ஐயா....

    பதிலளிநீக்கு
  11. சுஜாதா சுஜாதாதான்! எவர் க்ரீன் எழுத்தாளர்! மந்திரக் கோல் வைத்திருந்தவர்! ஆம் எழுத்து எனும் மந்திரக் கோல் எத்தனை எத்தனை உள்ளங்களைக் கவர்ந்து தாக்கியது! இன்னும் தாக்கிக் கொண்டுதான் இருக்கின்றது அவர் எழுத்து வெளியானால்.....

    ஒரு சில விமர்சன வரிகளை மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் மற்ற விமர்சன வரிகள் சிறப்புதான். புதியதொரு தளம் ஆறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி! நண்பரே!

    பதிலளிநீக்கு
  12. *** ஆணாதிக்க சமுதாய அதீத தந்திரத்துடனும் அங்கீகாரத்துடனும் தானே அமைத்துக் கொண்ட ராஜபாட்டையில் வலம் வந்தார் சுஜாதா. ***

    ஆயிரம் அர்த்தங்கள் எடுக்கலாம் இவ்வரியில் இருந்து. அது யார் வாசிக்கிறார் என்பதைப் பொறுத்துத்த்தான். அதாவது வாசிப்பது வருணா இல்லைனா பாலகணேஷா என்பதைப் பொறுத்து. :)

    சுஜாதா என்கிற புனைபெயரில் எழுதிய இவர், பேரில் மட்டும்தான் பெண்ணாக இருக்க முடிந்தது. கடைசிவரை பெண் உணர்வுகளை புரிந்துகொண்டாரா? இல்லைனா புரிந்துகொள்ள முயலவாவது செய்தாரா? என்பது எனக்கு சந்தேகமே. எதுக்குப் ப்புரிந்துகொள்ளணும்? என்கிற கேள்விக்கெல்லாம் என்னால் பதி சொல்ல முடியாது. ஓர் ஆணாதிக்க சிந்தனை உள்ளவர் எதுக்கு "பெண்" பெயரில் எழுதணும்? என்கிற என் கேள்விக்கு உங்களால் பதில சொல்ல முடியாத்து போல்தான்..

    ஒருவரை தாறுமாறாக புகழ்ந்து கொண்டே இருந்தால் "போர்" அடிக்காதா? எனக்கு சுஜாதைவை மட்டும் இல்லை என்னையே அப்படி யாராவது புகழ்ந்தால்க்கூட "போர்" அடிக்கும்.

    அந்த வகையில் இக்கட்டுரை பாராட்டுக்குரியது. ஒரேயடியாக புகழ்ந்த தள்ளவில்லை, இந்த "க்ரிடிக்"!

    பதிலளிநீக்கு
  13. புதிய அறிமுகத்திற்கு நன்றி. சுஜாதா பற்றிய பதிவுகள் நிறைய பேர் எழுதி விட்டனர். ஏகலைவனாய் ஏராளமான பேர் அவரிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறார்கள். நன்றி . தங்களை பதிவர் விழாவில் சந்தித்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  14. முரளி ! அருமையான பதிவு.
    உச்ச நகைச்சுவை சுவிங் பற்றிக் கணவருக்கும் கூறி
    விழுந்த விழுந்து சிரித்தேன்.
    ஞானக்கோமாளி பதிந்து வைத்துள்ளேன்.
    மிக்க நன்றி முரளி
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுஜாதா எழுத்துலகின் சிலுக்கு - என்று ஒரு காமென்ட் உண்டு. அதை சுஜாதாவே ரசித்தார்... பத்திரிகைப் பேராளமை - என்றுதானே கட்டுரையைத் துவங்கி யிருக்கிறேன்... HE IS NOT SERIOUS ENOUGH என்பது தான் விஷயம்

      நீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895