என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 31 மார்ச், 2014

விஷ லட்டு எது? கடினப் புதிர்-விடை


முந்தைய பதிவில் லட்டு புதிர் ஒன்றை வெளியிட்டதை நீங்கள் படித்திருக்கக் கூடும் .பலரும் பல விதமாக பதில்களை கூறி இருந்தனர். திண்டுக்கல் தனபாலன் அதில் மூழ்கி விட்டார். பொதுவாக பொன்சந்தர் இது போன்ற புதிர்களுக்கு விடை சொல்லி விடுவார்.வவ்வாலும் விடைகளை எப்படியாவது தேடிக் கண்டு பிடித்துவிடுவார்.இவர்கள் அனைவரும் சொன்ன விடைகளில் தவறாகப் போவதற்கான சாத்தியங்கள் இருந்தன. பின்னர் இவர்கள் அனைவருமே விடையை கண்டுபிடித்து விட்டனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இதற்கான விடை கதையின் இறுதியில்

 புதிரைப் படிக்காதவர்கள் இங்கு செல்க. 

      
    அதை கதை வடிவில் சொல்லி இருந்தேன். கதையை தொடர்கிறேன் 
...........சேவகன்  1, 2  எண்ண  ஆரம்பித்தான்  "
பெரியவர் புன்னைத்துக் கொண்டே யோசிக்க தொடங்கினார் .
புதிரைக் கேட்ட அனைவரும்  திகைத்து நின்றனர். அமைச்சர் நம்பிக்கை இழந்தார். 
பெரியவர் நிதானமாக லட்டுகளை எடை போடத் தொடங்கினார் .
மூன்று முறை எடை போட்டார். ஒவ்வொருமுறை எடைபோடும்போதும் சில வினாடிகள் சிந்தித்து பின்னர் தொடர்ந்தார். இறுதியாக ஒரு லட்டை எடுத்து எல்லோரும் காண்பித்தார். அவர் கம்பீரமாக சொல்ல ஆரம்பித்தார் 

"அவையோரே!இதுதான் 12 லட்டுகளில் எடை வித்தியாசமுள்ள லட்டு என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இதை நான் உண்ணப் போகிறேன். உண்பதற்கு முன்பாக வேறு யாரேனும் இந்த உண்மையை உறுதி செய்ய விரும்புகிறேன். ஏனெனில் இது மற்ற 11 லட்டுகளை விட எடையில் வேறுபாடு உள்ளதை என்னால் அறுதியிட்டுக் கூற முடியுமே தவிர இதில் விஷம் இல்லை என்பதை உறுதியாகக் கூறமுடியாது. காரணம் என்னைக் கொல்லும் நோக்கத்தில்  அனைத்து லட்டுகளில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம். அப்படி செய்து எனது அறிவாற்றலையும் கேள்விக்குறி ஆக்க முடியும். அதில் விஷம் இருக்கும் என்பதற்காக நான் அஞ்சவில்லை.  
அமைச்சர் அவர்களே! நான் கண்டறிந்தது சரியா என்பதை அனைவரின் முன்னிலையிலும் சோதித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன் "
அமைச்சர் அரசனை பார்த்தார். மன்னர் தலையாட்ட அந்த லட்டை மற்றவற்றோடு எடை போட்டுப் பார்த்ததில் பெரியவர் சரியாக கண்டறிந்திருக்கிறார் என்பது தெரிந்தது, அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்து பெரியவரை பாராட்டினர்.
பெரியவர் லட்டை எடுத்து கையில் வைத்துக் கொண்டு மன்னரைப் பாரத்து

"மன்னா ,  உன்னை நான் அவமதிப்பதாக நினைத்து எனக்கு தண்டனை விதித்தாய்.  நான் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியில் தடை ஏற்படுவதை நான் விரும்பவில்லை. மன்னனாக இருந்தாலும் சரி மனைவியாக இருந்தாலும் என் பணியில் குறுக்கிடுவதை விரும்புவதில்லை. என் அத்தனை உழைப்பு வீணாகிப் போகும் என்பதால்தான்  ஆணையை மறுத்தேன்.

  கற்றோரும் அறிஞர்களுக்கும் மரியாதை இல்லாத நாட்டில் மன்னனுக்கு கீழ்ப் படிந்து சேவகம் செய்து அடிமையாக இன்னமும் தொடர்ந்து நான் வாழ விரும்பவில்லை. எனவே என் கையில் உள்ள விஷமற்ற  லட்டுக்கு பதிலாக விஷமுள்ள மற்ற லட்டுகளில் ஒன்றை எடுத்து உண்டு உயிர்  துறக்கப் போகிறேன் " என்று சொல்லிக் கொண்டே, நல்ல லட்டை தூக்கி எறிந்தார்.
மீதியுள்ள 11 லட்டுகளில் ஒன்றை எடுத்து உண்ணத் தொடங்கினார். 
பதறிப்போன அமைச்சர் பாய்ந்து சென்று தடுக்க முயன்றார். மன்னன் அவரை கையைப் பிடித்து தடுத்துவிட்டார் 

பெரியவர் ஏன் இப்படி செய்கிறார்.அவையில் அனைவரும் வாயடைத்து நின்றனர். மனதில் பதற்றமும் வெளியில் அமைதியும் நிலவியது. 

  லட்டை முழுமையாக உண்டு முடித்தார் பெரியவர். அனைவரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.  நேரம் கரைந்து கொண்டிருந்தது . என்ன ஆச்சர்யம்! பெரியவருக்கு ஒன்றும் ஆகவில்லை. அவருக்கு தெய்வீக சக்தி இருக்கிறதோ? என்று  எல்லோரும் எண்ணத் தொடங்கினர் 
அப்போது அவையின்அமைதியை மன்னனின் உரத்த குரல் கலைத்தது
"ஐயா பெரியவரே!, எந்த லட்டிலும் நான் விஷத்தை கலக்கவில்லை. என்னை அவமதித்தற்காக உங்களை கொன்றுவிடவேண்டும் என்று முதலில் நான் நினைத்தது உண்மைதான் . ஆனால் அமைச்சர் உங்கள் சிறப்பைக் கூறியதும் நான் என் தவறை உணர்ந்து விட்டேன். உங்கள் திறமையை அனைவருக்கும் உணர்த்தவும் நேரில் கண்டு  ரசிக்கவும் இந்த நாடகத்தை நடத்தினேன். இனி என்னாலோ அல்லது வேறு யாராலோ  உங்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது. உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நானேசெய்வேன். உங்களைப் போன்ற பொக்கிஷங்களை கண்டறிந்து காக்க வேண்டியது அரசன் கடமை  "
என்று சொல்லி பெரியவரை கட்டி அனைத்துக் கொண்டார்.

அவையில் அனைவரது கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

( கதை ஒ.கே வா. இந்தக் கதை பதிவர் முனைவர் மு.பரமசிவம் (காமக் கிழத்தன் ) அவர்கள் இட்ட கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது 
நன்றி காமக் கிழத்தன் ஐயா!

**********************************************************************************

இப்போது  புதிருக்கான விடையை பார்க்கலாமா?



12 லட்டுகளுக்கும்   A,B,C,D,E,F,G,H,I,J,K,L என்று பெயர் கொடுத்துக் கொள்வோம். இவற்றை 3  சம பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம். அதாவது 

என்று எடுத்துக் கொள்வோம் .

முதல் முறையில் A,B,C,D   மற்றும் E,F,G,H  எடை போட வேண்டும் 
இதில் மூன்று சாத்தியக் கூறுகள்உள்ளனன. அவ்வாறு எடை போட்டால் கீழ்க்கண்ட ஏதாவது ஒன்றுதான் சரியாக இருக்க முடியும் அல்லாவா?

1.   A+B+C+D க்கு E+F+G+H சமம் 
2.   A+B+C+D இன்எடை E+F+G+H குறைவு 
3.   A+B+C+D இன்எடை E+F+G+Hஅதிகம் 

1. முதலில்  ABCD =EFGH சமமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படி எனில்   I,J,K,L  இவற்றில் ஒன்றுதான்  எடை குறைவாகவோ அதிகமாகவோ இருக்கக் கூடும். A,B,C,D.E,F.G,H லட்டுகளை தூர வைத்துவிடுங்கள் . ஏனெனில் இவை அனைத்தும் சம எடை உள்ளவை  

இரண்டாவது எடை : I,J வுடன் K, H எடை போட வேண்டும் .L  ஐ தனியாக வைக்கவும்.
( நன்கு  கவனிக்க இதில் L இல்லை, L க்கு பதிலாக தூர வைத்துவிட்ட A,B,C,D,E,F,G,H   ஏதாவது ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும். இதில் H ஐ எடுத்துக் கொண்டிருக்கிறேன். இதில் Hன் எடை ஒரு லட்டைத் தவிர மற்ற 10 லட்டுகளின் எடைக்கு சமமாக இருக்கும் 
இதிலும் 3 சாத்தியங்கள் உள்ளன . இவரில் ஏதாவது ஒன்றுதாள் இரண்டாவது எடை போடும்போது கிடைக்கும்.

 1) IJ=KH   2) IJகுறைவு KH அதிகம்  3) IJ அதிகம் KHகுறைவு

முதல் சாத்தியம் எனில் எடை போடப்படாத L விஷமற்ற லட்டு.
இதில் மூன்றாவது எடை வேண்டியதில்லை. ஒருவேளை L மற்ற லட்டுக்களை விட எடை அதிகமா குறைவா என்பதை அறிந்து கொள்ள வேண்டுமென்றால்  3 வது முறை எடை போடலாம் 
 (குறிப்பு  < குறியீட்டிற்கு இடப்புறம்(அதாவது  கூர்முனை) உள்ளது குறைவு வலப்புறம் (வாயகன்ற முனை )அதிகம்
இன்னொரு வாய்ப்பான IJ<KH எனில் K எடை அதிகமாகவோ(அல்லது மற்ற லட்டுகளுக்கு சமமாக)  அல்லது I,J இவற்றில் ஏதாவது ஒன்று எடை குறைவாக இருக்கக் கூடும்


மூன்றாவது முறை எடை   I & J எடை போட வேண்டும் 
இதற்கு 3 சாத்யங்கள் உண்டு
            1) I=J ,  எனில் K தான் வித்தியாசமான எடை உடையது (அதாவது அதிக எடை )
             2)  I<J  - எனில்   I   தான் கண்டறிய வேண்டிய லட்டு
            3)I>J  எனில் J தான் விடை 

இரண்டாவது எடையின்போது இன்னொரு சாத்தியமான IJ > KH 
இதிலும் 3 சாத்தியங்கள் உண்டு 
         
    1) I=J ,  எனில் K தான் வித்தியாசமான எடை உடையது (அதாவது குறைவான எடை )
             2)  I<J  - எனில்  J  தான் கண்டறிய வேண்டிய லட்டு
            3)I>J  எனில் I தான் விடை 

**********************************************************************
2. A+B+C+D இன்எடை E+F+G+H குறைவு  அதாவது
                       A+B+C+D < E+F+G+H(இடப்பக்கம் எடை குறைவு வலப்பக்கம் எடை அதிகம்.இடப்பக்கம் எடை குறைவாக இருப்பதால் ஏதாவது நான்கில் ஒன்று  எடை குறைவாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.ஏனெனில் வலப்பக்கம் ஏதேனும் ஒன்றின் எடை அதிகமாக இருக்கலாம்
   இதன் சாத்தியங்கள்  ABCD எடை குறைவு (அல்லது சமமாக)இருக்கலாம்  அல்லது EFGH எதை அதிகம் அல்லது சமமாக இருக்கலாம் 

இரண்டாவது முறை : A,B,E இவற்றுடன் C,F,I எடையிட வேண்டும் 
( நன்கு கவனிக்க:  முதல் முறையில் E வலப்பக்கம் (எடை அதிக பக்கம் ) இருந்தது இடப்பக்கம் கொண்டு வரப்பட்டுள்ளது .C வலப்புறம் மாற்றப் பட்டுள்ளது.  எனவே ABE, CFI எடை போட, சாத்தியங்கள் 
           1) ABE=CFI                      2)  ABE< CFI          3)  ABE>CFI
          

  1) ABE=CFI 
 இதில் D ,G,H வெளியே எடுக்கப் பட்டுள்ளது முதல் எடை யின்போது D எடை குறைவான பக்கம் இருந்ததால் D குறைவாகவும், G,H வலப்புறம் இருந்ததால் இரண்டில் ஒன்று எடை அதிகமாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது.

மூன்றாவது முறையாக G மற்றும் H எடை போட 3 சாத்தியங்கள்
  
             G=Hஎனில்              D தான் விடை 
             G<H   எனில்  H தான் கண்டறிய வேண்டிய லட்டு                 
             G>H எனில் G தான் சரியானது 

 2)  ABE< CFI   C,F இடம் வலம் மாறிய பின்னும் முதல் எடை நிலை போலவே அதாவது இடப்பக்கம் குறைவாகவும் வலப்பக்கம் அதிகமாகவும் இருப்பதால் E,C இரண்டும் வித்தியாச லட்டாக இருக்க முடியாது .  
இதில் A (அ) B குறை எடையாகவோ அல்லது F கூடுதல் எடையாக வோ இருக்க வாய்ப்பு உள்ளது 
சாத்தியங்கள்

     மூன்றாவது எடை :  A & B ஐ எடையிட வேண்டும் 
   1) A=B எனில்  F தான் வித்தியாசமானதாக இருக்கும்(எடை       
      அதிகம்)
    2) A<B  எனில்  A 
    3) A>B எனில்  B

3) இரண்டாம் எடையின் 3 ஆம் சாய்ஸ்  ABE>CFI , 
   C,E இட வல மாற்றம் செய்ததில் முதல் எடை யின்  நிலையின் எதிர் நிலையில் இருப்பதால் . C அல்லது E மாற்று எடை கொண்டதாக இருக்கவேண்டும் . C எடை குறைவாகவோ E அதிகமாகவோ இருக்கும். Cஐயும் E யும் எடையிடுவதால் பயனில்லை ஏனெனில் C, நார்மலாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும்  எடை நிலை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் எனவே C யுடன் I,J,K,L இவற்றில் ஒன்றை எடுத்து எடை போடவேண்டும் 
இங்கு  C & I  எடுத்துக் கொள்வோம் /
இதன் சாத்தியங்களும்  விடையும் 

    1) C = I   எனில் E தான் சரி என கணித்து விட முடியும் 
     2) C<I  எனில்   C தான் சரி 

******************************************************************************
3.  A+B+C+D இன்எடை E+F+G+Hஅதிகம் 
  அதாவது  A+B+C+D > E+F+G+H 

 2 வது எடை : ABE &CFI எடை பொடுக 
சாத்தியங்கள்  1) ABE = CFI    2) ABE<CFI   3) ABE>CFI
1) ABE = CFI எனில் D எடை அதிகன் அல்லது GH எடை குறைவு 

மூன்றாவது முறையாக  G& H எடை போட விடைகள் 

   1) G=H எனில் விடை D  2) G<H எனில்  G விடை 3)G>H எனில் H        விடை 

2 வது  எடையின் 2 வது சாத்தியம் 2) ABE<CFI  . இப்போது C அதிக  எடை அல்லது E  குறை எடை 

மூன்றாவதாக C & i எடையிட  C= I எனில்  E விடை  2) C>I எனில் C சரியான விடை  

2  எடையின் 3 வது சாத்தியம் ABE>CFI  இதன் வாய்ப்புகள் F குறை எடை அல்லது  A அல்லது B அதிக எடை 

மூன்றாவது முறையாக A & B ஐ எடை யிட வேண்டும் 

சாத்தியங்களும் விடைகளும் 

1) A=B எனில் F தான் விடை 
2) A<B  எனில்  B  விடை 
3)A>B   எனில் A சரியான விடையாக இருக்கும் 

*****************************************************************************************
அனைத்து சாத்தியங்களையும் தீர்வுகளையும்  சரியாக சொல்லி இருக்கிறேன் என்று நம்புகிறேன்.
இவற்றை சோதித்துப் பார்க்கExcel பைலை உருவாக்கி இருக்கிறேன். நீங்களும் விரும்பினால் அதை டவுன்லோட் செய்து எடை அளவுகளை உள்ளிடு செய்தால் அதன் விடை இறுதியில் காண முடியும் .

எடை
10
10
10
10
10
10
8
10
10
10
10
10
பெயர்
A
B
C
D
E
F
G
H
I
J
K
L

குறிப்பு: 11 ஒரே எடை அளவுகளை உள்ளீடு செய்ய வேண்டும் 
             ஒரு அளவு மட்டுமே மற்றவற்றை குறைந்தோ                                       அதிகமாகவோ இருக்கலாம் 
              அனைத்தும் சமமாக இல்லை  என்பதை உறுதி செய்து                        கொண்டு சோதித்துப் பார்த்து கருத்துக்களைக் கூறவும் 

டவுன்லோட் செய்ய கீழுள்ள இணைப்புக்கு செல்லவும் அல்லது preview இன் வலது  மேல் மூலையில் உள்ள அம்புக் குறியீட்டை அழுத்தி டவுன்லோட் செய்யவும் 
https://app.box.com/s/c1zuv7te3pz235ch1vpa





உங்கள் கணினியில் மாதிரி கோப்பு தெரிகிறதா / டவுன் லோட் செய்ய முடிகிறதா என்பதை தெரிவிக்கவும்

*********************************************************************

இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய உகாதி தினப் பதிவு 

வியாழன், 27 மார்ச், 2014

புதிர் உங்களுக்கு பிடிக்குமா? இவர் உயிர்பிழைக்க வழி இருக்கா?


   போன வாரத்தில ஒரு கவிதைய புதிர் மாதிரி எழுதி இருந்தேன்.நம் பதிவுலகப் பெருமக்கள் முதல் பத்தியிலேயே கண்டுபிடிச்சி எனக்கு பல்பு கொடுத்தாலும் கேள்விக்குறியில விடையை மறைத்து வச்சிருந்ததை வரவேற்றதில் மகிழ்ச்சி
அதனால் இந்த தடவை கொஞ்சம் கடினமான புதிர் ஒண்ணை சொல்லி குழப்பலாம் என்ற நோக்கத்தோட வந்திருக்கேன்.(இது போய் கஷ்டமா என்று கேட்கப்படாது). புதிர்னா சில பேருக்கு லட்டு மாதிரி அதனால் உங்களுக்காக ஒரு லட்டு புதிர்.

புதிர்:
 அரசனும் மந்திரியும் நகர்வலம் சென்று கொண்டிருந்தனர் . வழியில் அரசரைக் கண்டதும் அனைவரும் வணங்கி வணக்கம் தெரிவித்தனர். அந்த இடமே பரபரப்பாக இருந்தது. அரசர் வந்ததை  கவனிக்காமல் ஒரு பெரியவர் மட்டும்  தன் வீட்டு வாசலில் ஏதோதோ கருவிகளை வைத்து படம் வரைந்தும் தனக்கு தானே பேசிக் கொண்டும்  இருந்தார். இதனைக் கண்ட அரசர் தன்னை மதிக்காமல் ஒருவன் அவன் பாட்டுக்கு ஏதோ செய்து  கொண்டிருக்கிறானே என்று கோபம் கொண்டார். அவனை அழைத்து வர பணித்தார். அரசரின் ஆணையை அவரிடம் தெரிவித்தனர் . அவரோ "என் வேலையை முடித்து விட்டு வருவதாக சொல்'  என்று சொல்லிவிட்டு மீண்டும் மும்மரமாக முன்பு செய்து கொண்டிருந்ததை தொடர்ந்தார் . இதனால் கோபம் கொண்ட அரசர் அவரை கைது செய்து சிறையில் அடைக்க சொல்லி விட்டார். மந்திரி முதலானோர் அரசரிடம் மன்னிப்பு கேட்குமாறு அவரை வற்புறுத்தினர் . அவர் மறுத்து விட்டார். அதனால் மேலும் கோபம் கொண்ட மன்னன் அவரைக் கொன்று விடுங்கள் ஆணையிட்டான்.

விசாரித்ததில் அவர் அதிகம் அறியப் படாத ஒரு மேதை என்றும் கணிதம் அறிவியல் வானவியல் இவற்றில் வல்லவர்  என்றும் மந்திரிக்கு தெரிய வந்தது  அதனால் அவர் இறப்பதை மந்திரி விரும்பவில்லை. அரசரிடம் அவரது திறமை பற்றி சொன்னார். அரசரோ தன் முடிவை மாற்றிக் கொள்ளமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார்

பலரும் வற்புறுத்தவே "சரி அவர் உயிர் தப்பிக்க ஒரு வாய்ப்பு தருகிறேன். அவர் பெரிய அறிவாளி என்று கூறுகிறீர்களே நாளை சபையில்  ஒரு புதிர் போட்டி வைக்கிறேன் .அதில் வென்றால் அந்தக் கிழவன் உயிர் பிழைத்துக் கொள்வார் ."

மந்திரி மகிழ்ந்தார் அந்தப் பெரியவர்  புதிருக்கு விடை கண்டு பிடித்துவிடுவார் என்று நினைத்தார். போட்டி என்ன என்று அரசரிடம் கேட்டார் மந்திரி, நாளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு மந்திரிக்கும் தெரியாமல் சில ரகசிய உத்தரவுகளை பிறப்பித்தார் .

மறுநாள் சபை கூடியது . பெரியவர் அழைத்து வரப்பட்டார்
ஒரு தட்டில் 12 லட்டுகள் கொண்டு வந்து வைக்கப் பட்டன. கூடவே தராசு ஒன்றும் கொண்டு வரப்பட்டது

மன்னன் கூற ஆரம்பித்தான், "கிழவரே! உன்னை பெரிய அறிவாளி  என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உன் அறிவு உன்னைக் காப்பதற்கு பயன்படாது  என்பதை நிரூபிக்கிறேன் .முடிந்தால் அறிவைப் பயன்படுத்தி போட்டியில் வென்று உயர் பிழைப்பாய்.

இதோ இந்த தட்டில் 12  லட்டுகள் உள்ளன . அவற்றில் 11 லட்டுகள் சம எடை உள்ளவை. அது மட்டுமல்ல 11 லட்டுகளிலும் கடுமையான விஷம் கலக்கப் பட்டுள்ளது. பார்ப்பதற்கு ஒரே அளவில் இருந்தாலும் ஒரே ஒரு லட்டு மட்டும்  எடையில்  கொஞ்சம் வித்தியாசம் கொண்டது. விஷம் இல்லாதது. மேலும் அது மற்ற லட்டுகளை விட எடை குறைவானதா அல்லது அதிகமானதா என்பதும் தெரியாது. இவற்றில் 1 லட்டை கட்டாயம் நீ சாப்பிட்டே ஆக வேண்டும். விஷமற்றது எது என்பதை கண்டறிந்து உண்டால் உயிர் வாழலாம். 
லட்டுகளை எடை போட  இந்த தராசை பயன்படுத்திக் கொள். ஆனால் ஒரு நிபந்தனை.  3 முறை மட்டுமே எடை போடவேண்டும்.  நீ பிழைக்க அதிர்ஷ்டம் உதவுகிறதா? அறிவு உதவுகிறதா அல்லது இரண்டும் உனைக் கைவிடுகிறதா என்று பார்ப்போம். இதோ இந்த சேவகன் 1000 எண்ணும் வரை அவகாசம் தருகிறேன். ம்  தொடங்கட்டும் போட்டி " 

சேவகன்  1, 2  எண்ண  ஆரம்பித்தான்  "
பெரியவர் புன்னைத்துக் கொண்டே யோசிக்க தொடங்கினார் .
புதிரைக் கேட்ட அனைவரும்  திகைத்து நின்றனர். அமைச்சர் நம்பிக்கை இழந்தார். பெரியவர் நல்ல லட்டை கண்டறிந்தாரா? அதற்கு உறுதியான வாய்ப்பு இருக்கிறதா? அல்லது விஷ லட்டை உண்டு இறந்து போயிருப்பாரா?
நீங்களும் சொல்லலாம்.

விடை அறிய  கிளிக்கவும் 

விஷ லட்டு எது? கடினப் புதிர்-விடை

*********************************************************************************
 இதெல்லாம் படிச்சிருக்கீங்களா?
  1. புதிர்! உங்களுக்கு தெரிஞ்சா விடை சொல்லுங்க !
  2. உண்மையூர் பொய்யூர் புதிருக்கு விடை
  3. பத்தினியின் காலை வெட்டு!
  4. புதிர் கணக்கு! வடிவேலுக்கு உதவுங்கள்!
  5. புதிர்! உங்களுக்கு தெரிஞ்சா விடை சொல்லுங்க !
  6. மைனஸ் x மைனஸ் = ப்ளஸ். எப்படி?
  7. வேலை தேடும் வடிவேலு - பகுதி 1
  8. வேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை
  9. வடிவேலுக்கு வேலை கிடைத்ததா? பகுதி 3 
  10. பெட்டிக்கடை- 3  யாருக்கு வெற்றி- புதிர் 
  11. ஊஞ்சல்  புதிருக்கான விடை 


ஞாயிறு, 23 மார்ச், 2014

புஷ்பா மாமியின் புலம்பல்கள்-ஓட்டர் லிஸ்ட்ல பேர் இல்ல.சேர்க்க முடியுமா?

புஷ்பாமாமி கொஞ்ச நாளா காணோமே என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே  வாசலில் புஷ்பாமாமி கூடவே அவர்கள் வீட்டில் குடித்தனம் இருக்கும் பெண்மணி

"முரளி! இவங்க எங்காத்துல குடித்தனம் இருக்கா .ஒட்டர் லிஸ்ட்ல சேக்கறதுக்காக அப்ளிகேஷன் குடுத்து இருந்தா. வந்துடுத்தான்னு போய் பாத்திருக்கா . பாத்தா எங்களோட பேரே இல்லன்னு சொல்றா. நான் போய் பாக்கறதுக்குள்ள குளோஸ் பண்ணிட்டா. இத்தனை வருஷம் எத்தனை வருஷமா இங்க இருக்கேன் எப்படி பேர் எப்படி விட்டுப் போகும். ஏன் இப்படி பொறுப்பில்லாம வேலை செய்யறா?மிக்சி,கிரைண்டர் கொடுக்கறப்ப எங்க பேரை விட்டுட்டான் இதுலயுமா? "

"அதெல்லாம்  கொடுக்காததால  வோட்டு போடமாட்டேன்ன்னு சொன்னீங்களே. வோட்டர் லிஸ்ட்ல பேர் இருந்தா என்ன இல்லன்னா என்ன மாமி?
"நல்ல கதையா இருக்கே.ரேஷன் கார்டையும் இதயும்தானே எதுக்கெடுத்தாலும் கேட்டு தொலைக்கறான்.? ஒட்டு போடலன்னா என்ன பேர் இருக்கத்தானே வேணும்.எனக்குபிடிக்கலன்னா நோட்டா ஒட்டு போட்டுவேன்.

அது சரி ஆன் லைன்ல வோட்டர் லிஸ்ட் இருக்காமே பாத்து சொல்லு. புதுசா சேக்கறதா இருந்தா கூட சேக்கலாம்னு பேப்பர்ல போட்டிருந்தானே."

"மாமி பேர் நிச்சயமா இருக்கும். இடம் மாறி இருக்கும் நம்மோட தெரு 2 வது குறுக்கு தெரு . 2 வது தெருன்னு கூட இங்க இருக்கு  ஒரு வேளை அதுல இருக்கலாம்?

"சரி கம்ப்யூட்டர்ல பாத்து சொல்லு. நெட் ஒர்க்பண்ணலன்னுசொல்லாதே
இனி தப்பிக்க முடியாது என்பதால்
http://www.elections.tn.gov.in என்ற தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணைய இணைய தள முகவரிக்கு சென்று பெயரைவைத்து தேடியதில் பெயர் இடம் பெற்றிருப்பதை அறிய முடிந்தது. அவர்கள் வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களின் பெயரும் இருந்தது.  அடிக்கடி திருத்தம் செய்வதால் பாகம் எண்ணும் வரிசை எண்ணும் மாறிவிட வாய்ப்பு இருக்கிறது 
மாமி மகிழ்ச்சியுடன் போனார்.புஷ்பா மாமிக்கு சொன்னவிவரங்கள் நாளைக்குள் பலருக்கு போய்விடும். நல்லதுதானே!

நீங்களும் உங்கள் பெயர் இருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும். புதிதாக பட்டியலில் பெயர் சேர்க்கவும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யவும் வசதி செய்துள்ளது தேர்தல் கமிஷன் 

1. http://www.elections.tn.gov.in க்ளிக் செய்யவும்
 Search Electoral Role என்பதை தேர்வு செய்ய  பின்னர் கீழுள்ளவாறு  Search Electoral Rolls inTamil க்ளிக் செய்யலாம்

 வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்கள் அந்த எண்ணை குறிப்பிட்டும் எளிதில் தேடலாம். அட்டை  இருந்தும் பெயர் இல்லை எனில் வாக்களிக்க முடியாது .

 கீழ்க்கண்டவாறு தோன்றும்அமைப்பில் வாக்காளர் பெயர், வாக்கு சாவடி ,தெரு பெயர் போன்ற ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்

மேலும் நமது மாவட்டம் மற்றும் சட்டமன்றத் தொகுதியை சரியாக தேர்வு செய்து சமர்ப்பிக்கவேண்டும் . வாக்காளர் பெயர் மூலம் தேடினால் கீழ்க்கண்டவாறு காட்சி அளிக்கும் 

தேட வேண்டிய பெயர் தந்தை பெயர்/கணவர் பெயர்/  இவற்றை சரியாக உள்ளீடு செய்துசமர்ப்பித்தால் பட்டியலில் இருந்தால் நமது விவரங்களை காட்டும்

பட்டியலில் பெயர்களில் எழுத்துப் பிழைகள் இருக்க வாய்ப்பு உண்டு.  அதனால் என்ன பிழை இருக்கும் என்று ஓரளவுக்கு ஊகித்து தேடினால் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது
புதிதாக சேர்க்க  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க
கீழ்க்கண்ட இணைப்பிற்கு சென்றால் பல்வேறு படிவங்கள் காட்டப்படும் 


இதில் Form 6 க்ளிக் செய்ய வேண்டும்  படிவம் 6 இப்படிக் காட்சி அளிக்கும் . அதை அப்படியே நிரப்பி சமர்ப்பிக்கலாம்.

 

நமது பாஸ் போர்ட் சைஸ் போட்டோவயும் JPEG பைலாக தராக வைத்துக் கொண்டால் அப்லோட் செய்து விடலாம் . பைலின் அளவு 350 kb க்கு மிகாமல் இருக்கவேண்டும் .
பதிவு செய்யப்பட விவரம் SMS மூலம் தெரிவிக்கப்படும் .  பின்னர் ஆய்வு செய்து பட்டியலில் சேர்ப்பார்கள். பெயர் சேர்க்க விரும்புபவர்கள் விரைந்து சேர்க்க முயற்சி செய்யுங்கள் .

 கூடுதல் தகவல்கள்
1.அநேகமாக 25.03.2014 பிறகு புதிய பெயர்களை சேர்க்க முடியாது.

2. படிவம் 7 சேர்க்கப்பட்ட  ஒரு வாக்காளருக்கு எதிராக மறுப்பு  தெரிவிப்பதற்காக . ,படிவம் 8- வாக்காளர் பட்டியலில் விவரங்கள் தொடர்பாக திருத்தம் செய்வதற்கு. தேர்தல் நெருங்கி விட்டதால் இப்படிவங்கள் இப்போது ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது என தெரிவிக்கப் பட்டுள்ளது

3. தமிழ் நாடு முழுதும் உள்ள அனைத்து தொகுதி வாக்காளர் பட்டியல்களும் உள்ளன.

4. அவை அனைத்தும் தமிழில் மட்டுமே உள்ளன

5. சென்னை மாநகராட்சி வாக்காளர் பட்டியல் ஆங்கிலத்திலும் உள்ளது
.
6. ஒரே இடத்தில் பல வாக்கு சாவடிகள் அமைந்திருக்கும். அவற்றில் நம்முடையது எது என்பதை எளிதில் தெரிந்து கொள்ள EPIC என்று டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு அடையாள அட்டைஎன்னையும் டைப் செய்து 9444123456 என்ற எண்ணுக்கு SMS செய்தால் விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

7.இப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள்,கிராம நிர்வாக அலுவலகம் போன்றவற்றிற்குசெல்வதை தவிர்ப்பது நல்லது. இவர்கள் அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பதால் நமக்கு வீண் அலைச்சலே ஏற்படும் 

இணைப்புக்கள் 
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க-

Application for inclusion of name in Electoral Roll

பட்டியலில் பெயர் தேட  Search Electoral Rolls in Tamil

****************************************************************************************************
படித்து விட்டீர்களா?
கேள்விக் குறியாய் நிற்கும் நான் யார்? சொல்லுங்கள் பார்க்கலாம்

http://tnmurali.blogspot.com/2014/03/kavithai-with-puzzle.html