என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

சிறப்பு நீயா நானா?தமிழர்களின் அடையாளங்கள் மறைந்து வருகிறதா?

    மாட்டுப் பொங்கல் அன்று நீயா? நானா? ஒரு சிறப்பு நிகழ்ச்சியை விஜய் டிவி ஒளி பரப்பியது. தமிழர்களின் அடையாளங்கள் இன்றும் இருக்கிறதா மறைந்து வருகிறதா என்பது தலைப்பு. சென்னையில் வசிக்கும் இளைஞர் இளைஞிகளைக் கொண்டு நிகழ்ச்சி நடத்தப் பட்டாலும் ஓரளவிற்கு ஒட்டு மொத்த தமிழர்களின் பிரதிபலிப்பாகவே அமைந்தது என்று கொள்ளலாம். சிறப்பு விருந்தினர்கள் நீயா நானாவில் அடிக்கடி வந்து போய்க்கொண்டிருப்பவர்கள இந்த நிகழ்ச்சியிலும்  சாரு, மோகன்,சன்ஷைன் இளங்கோ கல்லானை.

    தாத்தா பாட்டியின் பெயர்கள் கேட்டு தொடங்கப் பட்டது நிகழ்ச்சி. நல்ல காலம் பலரும் தாய் வழி தந்தைவழி தத்தா பாட்டியின் பெயர்களை சரியாகவே சொன்னார்கள். அப்பாவழி தாத்தாவின் பெயர் ஒரு பெண்ணுக்கு தெரியவில்லை. (தற்காலத்தில் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய் வழி உறவையே முன்னிலைப் படுத்துவதும், முக்கியத்துவம் கொடுப்பதும் இதற்கு ஒரு காரணமாக என்று நண்பர் ஒருவர் சொன்னார். குழந்தைகளிடம் தந்தை வழி உறவினர்களைப் பற்றி தவறான அபிப்ராயத்தை  ஒரு சில அம்மாக்கள் விதைக்கின்றனாராம். குட்டீஸ் சுட்டீஸ் பாருங்க தெரியும் என்றார். )
தாத்தா பாட்டிகளின் பெயர்களை பேரன் பேத்திகளுக்கு வைக்கும் வழக்கமும் இன்று வெகுவாக குறைந்து விட்டது. கலந்து கொண்ட பெண்களின் பெயர்களின் ஒரே ஒரே ஒரு பெண்ணுக்கு  மட்டுமே பாட்டியின் பெயர் வைக்கப் பட்டிருந்தது. தற்போது குழந்தைகளுக்கு  தமிழ்ப் பெயர் வைக்கும் பழக்கமே குறைந்து வருவதைப் பற்றியும் பேசி இருக்கலாம்.

    பள்ளியில் தமிழ்படிப்பது பற்றிய கேள்வி எழுந்தது. செகண்ட் லாங்வேஜாக எதை படிக்கிறீர்கள் என்று கேட்டபோது பெரும்பாலானவர்கள் தமிழையே தேர்ந்தெடுத்திருந்தது ஆறுதல் அளிப்பதாக இருந்தது. ஒன்றிரண்டு பேர் ஹிந்தி,பிரெஞ்ச் போன்ற மொழிகளை தேர்ந்தெடுத்திருந்தனர்.

    உண்மையில் தமிழக கல்வி திட்டத்தில் செகண்ட் லாங்வேஜ் என்பது ஆங்கிலம்தான். First language ல்தான் அரசால் அங்கீகரிக்கப் பட்ட மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க வாய்ப்பு உண்டு. முதல் மொழி ஆங்கிலம்தான் என்று நினைத்து, அனைவரும் அறியாமலே பேசினர்.

   தமிழ்நாடு அரசு கல்வி திட்டத்தில் வழக்கமாக Part I. தமிழ் மற்றும் பிற மொழிகள் Part II ஆங்கிலம்தான் வேறு மொழி தேர்ந்தெடுக்க வாய்ப்பு இல்லை. ஆங்கில வழிக் கல்வி என்பதால் முதல் மொழி ஆங்கிலம் என்று தவறான புரிதல் காணப்படுகிறது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இது போன்ற மனநிலையை வளர்த்திருக்கின்றன. கோபிநாத் இதை அறியாதது ஆச்சர்யமே.


   ஹிந்தியை எடுத்துப் படித்த ஒரு பெண்ணிடம் நிகழ்ச்சி பற்றி வாழ்த்து சொல்லும்படி கேட்க அந்தப் பெண் தடுமாறினார்.மதிப்பெண்களுக்காக பிற மொழி எடுப்பவர்களை, அது அந்த மொழியையும் ஏமாற்றும் செயல் என்று  கோபிநாத் கண்டித்தது ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

 பள்ளியில் பாடப் புத்தகத்தில் படித்த திருக்குறளை தவிர வேறு குறட்பாக்களை அறியாதவர்களாகவே பலரும் இருந்தனர்..அவர்கள் மட்டுமல்ல நம்முடைய நிலையும் அதுதான்.. எளிதில் மனப்பாடம் செய்யக் கூடியதாகவும் முழு மதிப்பெண்கள் கிடைக்கும் என்பதாலும் திருக்குறள் இந்த அளவுக்காவது தெரிந்து வைத்துக் கொள்ளப் பட்டிருக்கிறது..(12ம் வகுப்புவரை ஒவொரு வகுப்பிலும் 50 திருக்குறளாவது மனப் பாடப் பகுதியாக வைத்து விடலாம்) 

  பாரதி பாடல்களைப் பற்றிக் கேட்டபோது இன்னும் மோசம்.எத்தனையோ திரைப்படங்களில் பாரதியின் பாடல்கள் இடம் பெற்றிருந்தபோதிலும் அவற்றை நினைவு கூற முடியாமல் தடுமாறியது ஏமாற்றம் அளித்தது 

    உணவு முறையில் நகர்ப் பகுதிகளில் கூட இட்லி தோசை சாப்பிடும் பழக்கமே இன்னும் இருப்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது என்பதை கோபி குறிப்பிட்டபோது சாரு நிவேதிதா நமது பார்பரிய உணவான கம்பு,கேழ்வரகு,திணை வகைகளை நாம் மறந்து விட்டோம் என்றார்.

   மேலும் சாரு  இன்றைய தலைமுறையினர் இலக்கியம் படிப்பது இல்லை  என்று ஆதங்கப் பட்டார். ஒரு மொழியின்  அடையாளமே இலக்கியம்தான். அதை இன்றைய தலை முறையினர் விரும்பவதில்லை. சினிமா, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் தமிழர்களின் அடையாளங்களை தொலைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று பெரும்பாலான  அறிவு ஜீவிகளைப் ( என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களைப்) போல குற்றம் சாட்டினார். எவ்வளவு புகழ்பெற்ற எழுத்தாளர்களாக  இருந்தாலும் எந்த பதிப்பகமாக இருந்தாலும் 2000 பிரதிகளுக்கு மேல் விற்பதில்லையாம் (பாவம் அவர் கவலை அவருக்கு).இலக்கியம் படிக்காதவர்களை என்னதான் பட்டங்கள் பெற்றிருந்தாலும் Illiterate என்று தன் வழக்கமான பாணியில் தாக்கினார்.

    சிறப்பு அழைப்பாளர் இளங்கோ தமிழர் அடையாளங்கள் முற்றிலுமாக அழிந்து விடவில்லை என்றார். மராத்தி போன்ற மொழிகள் தங்கள் எழுத்துருக்களைக் கூட இழந்து விட்டன. ( அப்படி தமிழும் தன் எழுத்துருவை  இழப்பதற்கான வழிமுறைய தமிழ் ஹிந்துவில்  நமது ஜெ.மோ குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது) ஆனால் தமிழ் பல்வேறு தாக்குதல்களையும் இன்று வரை சமாளித்து நிலைத்திருப்பது உண்மையில் தமிழ் மொழியின் சிறப்பே!

  தொன்மை வாய்ந்த இலக்கியங்கள் உள்ளதாக கூறப்படும் லத்தின் வடமொழி போன்றவை செம்மையான இலக்கியங்களைப் பெற்றிருந்தும் பேச்சு மொழியாக நிலைக்க முடியவில்லை என்பது உண்மைதானே! பிற மதங்களை பரப்புவதற்கு தமிழையே பயன்படுத்த வேண்டிய சூழல் இருந்ததற்கு காரணம் தமிழரின் மொழி அடையாளமே என்பது அவரது வாதம்
சிறப்பு அழைப்பாளர் சன்ஷைன்(அது என்ன பேரோ?) முன்னுக்குப் பின் முரணாக ஏதோ உளறிக் கொட்டியது பரிதாபமாக இருந்தது.

   சிறப்புவிருந்தினர் மோகன் சொன்னதுஉண்மையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. பொதுவாக இலக்கியம்  படிப்பவர்கள் அல்லது படைப்பவர்கள் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களை ஏளனமாகப் பார்ப்பதும் தாங்கள்தான் மொழியை, அதன் செழுமையை, அடையாளங்களை காப்பாற்றி வருவது போல நினைத்துக் கொள்வதும் தவறானது என்று குறிப்பிட்டார்.பெரும்பான்மையோர் விரும்பும் சினிமாவை தகாத ஒன்றாகக்  கருதுவதும் இவர்களின் குணமாக அமைந்திருக்கிறது.
உண்மைதான்! இலக்கிய  பெருந்தகைகள் சினிமாவை (அது அசட்டுத் தனமாக இருந்தாலும்)முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டிய அவசியம் இல்லை.எழுத்திலக்கியங்களை படித்தறியாத சினிமாவை ரசிக்கும் பாமர மக்களை சார்ந்தும் மொழி இன அடையாளங்கள் அமையும் என்பது உணரப்படவேண்டியதே!

   எழுத்திலக்கியம் மட்டுமே மொழியை, ஒரு இனத்தின் அடையாளங்களை  வாழ வைத்துவிடாது. வாசிக்கும் பழக்கம் இல்லாத இன்னும் சொல்லப்போனால் வாசிக்கத் தெரியாத ஏராளமானோர் இருந்திருக்கிறார்கள். இன்னும் இருக்கவும் செய்கிறார்கள். அவர்களும் உண்மையில் மொழி இன சிறப்புக்களுக்கு காரணமாக  இருந்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. 

  விளையாட்டுக்கள், பழக்க வழக்கங்கள், உணவு முறைகள் ஆடைகள் இவை எப்போது தொடர்ந்து பல காலங்களுக்கு ஒரு இனத்திற்கு அடையாளமாக அமைவது இல்லை. காலத்திற்கேற்ற அவ்வப்போது இவற்றில் மாறுதல் வருவது இயல்பானதே. 
  ஆனாலும் முற்றிலுமாக தமிழன் தன் அடையாளங்களை இழந்து விடமாட்டான் என்றே நம்புகிறேன்.
நிகழ்ச்சி உணர்த்தியதும் இதுவாகவே இருக்கவேண்டும் என்றே கருதுகிறேன்.

**********************************************************************************************
கொசுறு: சிறப்பு விருந்தினர் மோகனின் தாய்மொழி தெலுங்கு. பன்னிரண்டு வயதில் தமிழ்நாட்டுக்கு வந்தாராம்.   நான்கு ஆண்டுகள் தமிழ் கற்கமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தாராம். அதன் பின்னர் தமிழின் பால் ஈர்க்கப்பட்டு தமிழ் கற்று எழுத்தாளராகவும் திகழ்கிறார். தன் ஆழமான சிந்தனைகள்  தமிழில்தான் தோன்றுவதாகவும் அதுதான் தமிழின் வலிமை என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மகிழ்ச்சியாக  இருந்தது.

************************************************************************************************************

55 கருத்துகள்:

 1. 50 என்ன 500 குறள்களை வைத்தாலும் பிரயோசனமில்லை... மதிப்பெண்கள் வாங்க மட்டுமே உதவலாம்... சிறப்புவிருந்தினர் மோகன் அவர்களின் பல கருத்துகளுக்கு : மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்...

  பதிலளிநீக்கு
 2. நல்ல நிகழ்ச்சிகள் சிலவற்றைப் பார்க்கமுடியாமல் போகும்போது, உங்களைப் போன்றவர்கள் பார்த்து, அதுபற்றிய சரியான விமர்சனத்துடன் எழுதும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நன்றி நண்பர் முரளி. கோபிநாத் தலையிடவில்லை என்றால் அந்த விவாதங்களின் போக்கு அதோ கதிதான் என்பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். நீங்கள் சொல்வதிலிருந்து, இதிலும் அப்படித்தான் என்று தெரிந்தது. கோபிநாத்துக்குப் பாராட்டுகள். ஓரளவு படித்து முடித்து வேலைக்குப் போன பலரிடம் திருக்குறள் எந்த அளவிற்கு உள்ளது என்று அறிந்துகொள்ள ஆவலைத் தூண்டியது உங்கள் பதிவு. தாத்தா பாட்டிகளைப் பற்றிய பதிவு உங்கள்கருத்தில் உள்ளதை நானும் பார்த்திருக்கிறேன். இந்தத் தலைமுறை இன்னும் கூர்மையாகவும் இருக்கிறது... மொன்னையான தகவல்களே ஊடகங்களால் முன்வைக்கப் படுகின்றன. பார்க்கலாம். நல்ல பதிவுக்கு மீண்டும் நன்றி முரளி.

  பதிலளிநீக்கு
 3. முரளி,

  இன்னுமா நீயா,நானா எல்லாம் பார்க்குறிங்க,அய்யோ பாவமே :-))

  # வருடம் 364 நாளும் கோட்டுப்போட்டு தமிழர்களின் அடையாளம் அழியாமல் காப்பாத்தி வரும் கோபி ,பொங்கல் ஆனாப்போதும் ஒரு வேட்டிய கட்டிக்கிட்டு "தமிழர்கள்"அடையாளத்தை தேட ஆரம்பிச்சுடுவார் அவ்வ்!

  #// உண்மையில் தமிழக கல்வி திட்டத்தில் செகண்ட் லாங்வேஜ் என்பது ஆங்கிலம்தான். First language ல்தான் அரசால் அங்கீகரிக்கப் பட்ட மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க வாய்ப்பு உண்டு. முதல் மொழி ஆங்கிலம்தான் என்று நினைத்து, அனைவரும் அறியாமலே பேசினர். தமிழ்நாடு அரசு கல்வி திட்டத்தில் வழக்கமாக Part I. தமிழ் மற்றும் பிற மொழிகள் Part II ஆங்கிலம்தான் வேறு மொழி தேர்ந்தெடுக்க வாய்ப்பு இல்லை. ஆங்கில வழிக் கல்வி என்பதால் முதல் மொழி ஆங்கிலம் என்று தவறான புரிதல் காணப்படுகிறது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இது போன்ற மனநிலையை வளர்த்திருக்கின்றன. கோபிநாத் இதை அறியாதது ஆச்சர்யமே.//

  எந்த மொழிக்கு ஆப்ஷனே இல்லாமல் கட்டாயம் அனைவரும் படித்தாக வேண்டும் என இருக்கோ அது தான் முதன்மைமொழி என சொல்லலாம்.

  தமிழ்நாடு என்றில்லை ,இந்தியாவில் எல்லா மாநிலகல்வித்திட்டத்திலும் "ஆங்கிலமொழிப்பாடம்" கட்டாயம் எனும் நிலை இருக்கும் போது ,அதனை முதன்மை மொழினு சொல்லாமல் என்ன செய்ய?

  பார்ட்-1 ,தமிழ் என வைத்து விட்டால் மட்டுமே முதன்மை மொழியாகிடுமா?

  மேலும்,ஆங்கிலம் என்பது முதன்மை தொடர்பு மொழியாக இருக்கும் என சுதந்திரத்தின் போது (குடியரசாக ஆனப்போதும்) மத்தியில் சொல்லியிருந்தார்கள், இடையில் "இந்தி"தான் முதன்மை தொடர்பு மொழியாகும் என மத்தியில்(நேரு காலத்தில்) அறிவித்த போது உருவானது தான் இந்தி எதிர்ப்பு போராட்டம். அதன் விளைவாக ஆங்கிலம் தொடர்ந்து முதன்மை தொடர்பு மொழியாக இருக்கும், இந்தியும் இருக்கும்னு அறிவிச்சுட்டாங்க.

  முதன்மை தொடர்புமொழி ஆங்கிலமாக இருப்பதால் தான் மத்திய அரசு வெளியிடும் அரசாணைகள் ஆங்கிலத்தில் வருது,இல்லைனா இந்தியில் மட்டுமே வெளியிட்டு பஜனை பாடியிருப்பார்கள்.

  நெறைய பேருதவறுதலாக இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழினு நினைச்சுக்கிட்டு இருக்காங்க, அந்த அந்தஸ்து இந்திக்கு இன்னும் சட்டப்படி வழங்கலை.

  தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழி எனச்சொல்லப்பட்டாலும், ஆங்கிலத்தில் அரசாணை வெளியிட்டே ஆக வேண்டும், காரணம் ஆங்கிலம் தேசிய அளவில் "முதன்மை தொடர்பு மொழி", அவ்வகையில் பார்த்தால் ஆங்கிலம் தான் முதன்மை மொழி,தமிழ் இரண்டாவது இடம் தான், தமிழை மாணவன் சாய்சில் விட்டு விட்டு பள்ளி படிப்பை தமிழ் நாட்டில் படிக்க முடியும்.

  என்னோட நீண்ட நாள் விருப்பம் என்னவெனில் தமிழை சாய்சில் விடமுடியாதபடி கட்டாயமாக வைக்க வேண்டும் என்பதே, இதை சொல்லி பலப்பேரிடம் இணையத்தில் கெட்டப்பேரு தான் வாங்கினேன்,இன்னொரு முறையும் வாங்கிக்கிறேன் அவ்வ்!
  ------------------------------

  நீயா,நானாக்குழு காசுத் தராம ஏமாத்துது,என்னை திட்டமிட்டு பழி வாங்குது என கழுவி ஊத்திய சாரு மீண்டும்,மீண்டும் நீயா,நானாவில் கலந்துக்கொள்வதும், எவ்ளோ தான் சாரு கழுவி ஊத்தினாலும், சாருவை அழைக்கும் நீயா,நானா குழுவையும் பார்த்தால் ,சூடு,சொரணைனா என்னானு பலத்த சந்தேகமே வருது,முடியல அவ்வ்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எந்த மாநிலத்தில் இருந்தாலும் அவரவர் தாய் மொழியில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கச் செய்யவே இந்த ஆப்ஷன் உள்ளது. ஆனால் இதில் வடமொழி ,பிரெஞ்சு தாய்மொழியாக யாரும் பயன்படுத்தத மொழியை தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்பளிக்கக் கூடாது. தமிழை சாய்ஸில் விடமுடியாத பாடமாக வைக்கவேண்டும் என்பதே எனது கருத்தும்

   நீக்கு
  2. முரளி,

   //எந்த மாநிலத்தில் இருந்தாலும் அவரவர் தாய் மொழியில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கச் செய்யவே இந்த ஆப்ஷன் உள்ளது.//

   அந்த ஆப்ஷனை ஆங்கிலத்துக்கு நேரா வச்சு ,எல்லாரும் அவங்க தாய்மொழிய படிக்க வச்சா என்னனு தான் நான் சொல்வது.

   ஆங்கிலத்தை சாய்சில் விட முடியாது எனில் மொழிப்பாடங்களில் அத தான் முதன்மை மொழினு சொல்லியாகனும் :-))

   எதனை தவிர்க்க முடியாதோ ,அதுவே முதன்மையானது!

   தமிழை முதன்மை மொழினு வாயால சொல்லிட்டு ,படிக்காம இருந்தா போதுமா?

   இந்த தமிழ் வழிக்கல்வியப்பத்திலாம் இணையத்துல 2006-7 ல பெருசா கட்டிப்புடி சண்டைலாம் போட்டோம் அவ்வ்!

   நீக்கு
 4. முரளி,

  // சன்ஷைன்(அது என்ன பேரோ?)//

  "sunshine blogger award"அப்படினு ஒரு பேனர் பக்கவாட்டில மாட்டியிருக்கீங்க,அப்பக்கூடவா "sunshine" என்னப்பேருனு தெரியாமபோச்சு :-))

  சும்மா தமாசு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர எதுக்கு கூப்பிட்டாங்கன்னே தெரியல.தொடர்பு இல்லாமா ஏதோதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

   நீக்கு
  2. முரளி,

   சாருவை ஏன் கூப்பீட்டாங்கனு கூடத்தான் தெரியல,அவருக்கும் தமிழ்க்கலாச்சாரத்துக்கும் என்ன சம்பந்தமோ? அவரு வாயத்தொறந்தா சீலே,பிரான்ஸ், சரக்கு,சல்லாபம்னு தான் வரும் அவ்வ்!

   வீட்டுல சும்மா உட்கார்ந்திருக்கிற யாரையாவது புடிச்சு பேசவிட்டு ,நிகழ்ச்சிய ஒப்பேத்தினா போதும், நம்ம சனங்களும் வாயப்பொளந்துக்கிட்டு பார்க்கும்னு சேனல்காரங்களுக்கு நல்லா தெரியும் :-))

   நீக்கு
 5. ஒ! நான் தவறவிட்டுவிட்டேனே!
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 6. ஆம் ஐயா நிச்சயம் தமிழன் தன் அடையாளங்களை இழந்துவிட மாட்டான்.
  ஆனால் ஐயா, தமிழ் நாட்டில் மட்டும்தான், பள்ளிக்கூடத்தில் நுழையும் ஒரு மாணவன், தமிழ் மொழியினை ஒரு பாடமாகப் படிக்காமலேயே, பள்ளி இறுதி வகுப்பு வரை வர இயலுகிறது. மற்ற மாநிலங்களில் அவர்களது மாநில மொழியைத்தான் , கட்டாயம் ஒரு பாடமாகப் படிக்க வேண்டும். இந்நிலை தமிழகத்திலும் வரவேண்டும்.
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ”பள்ளிக்கூடத்தில் நுழையும் ஒரு மாணவன், தமிழ் மொழியினை ஒரு பாடமாகப் படிக்காமலேயே, பள்ளி இறுதி வகுப்பு வரை வர இயலுகிறது” - அய்யா ஒரு வருத்தமான திருத்தம், உயர்கல்வி,முனைவர் ஆய்வுப்படிப்பு வரை போக இயலும் அய்யா... தமிழன் என்றோர் இனமுண்டு இப்படித் தனியே இவர்க்கோர் குணமுண்டு! என்னத்தச் சொல்ல கரந்தையாரே, முரளிஅய்யா இப்படியெலலாம் சிந்தனையைக் கிளறிவிட்டுவிட்டார் போங்கள்!

   நீக்கு
 7. தங்களின் இரண்டு கருத்துக்களை நான் நடை முறையில் பார்த்திருக்கிறேன் .மாணவர்களிடம் கொஞ்சம் ஈசி ப்ரவேர்ப்ஸ் மட்டுமே கேட்டு பழகிய நான் ஒரு முறை அட்வைஸ் பண்ணி குமித்துக்கொண்டிருக்கையில் practice makes என தொடங்கயிலேயே a man perfectஎன கோரசாக கூவினார்கள் .எப்டிர தெரியும் என்றேன்.சிவா மனசுல சக்தி படத்தில சந்தானம் சொல்வார் என்றார்கள் தயங்கி தயங்கி. ராவிலே,தாமசம்,மறுநா(ள்),கோழி கூப்பிடயில என அழகான தமிழ் சற்றே மருவியிருந்தாலும் அதிகம் படிக்காதவர்களாலே உயிர் வாழ்கிறது என்றே தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 8. நீயா-நானா? மட்டுமல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலதும் இப்போது பார்ப்பது இல்லை! விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றி! பின்னூட்டத்தில் வவ்வால் அவர்கள் கூறிய கருத்துக்கள் அருமை! ஏற்றுக்கொள்ளக்கூடியதும் கூட! தமிழகத்தில் தமிழை கட்டாயமாக ஆக்க வேண்டிய நேரம் கடந்து விட்டது. இனியும் செய்யவில்லை எனில் கஷ்டம்தான்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 9. வாங்க முரளி! எங்கே ஆளைக்காணோம்னு தேடிண்டு இருந்தேன். தமிழர் அடையாளத்தைத் தேடிண்டு இருந்தீர் போல இருக்கு! :)
  ----
  ஆக, தமிழர் அடையாளங்கள் அழிவதைப் பத்தி கவலைப்படுவது கோபியாக்கும்! அவரோட சேர்ந்து "ஒப்பாரி" வைக்க சாரு வாக்கும் !! அட அட அட!!!

  விஜய் டிவிக்கும், கோபிக்கும் பொழைப்பு ஓட்ட தமிழர்களும் தமிழர் அடையாங்களும் "பலி கடா" வா இந்த வாரம்?

  விபச்சாரம் நடுத்துறவன், விபச்சாரி, விபச்சாரியைக் கூட்டிக்கொடுக்கிறவன், குடிச்சுட்டு தினந்தோரும் விபச்சரிட்டப் போயி படுக்கிறவன் எல்லாருமா சேர்ந்து விபச்சாரத்தை எப்படி ஒழிப்பதுனு அது பத்தி கலந்துரையாடல் செய்வது போல எனக்குக் தோணுது.. எனக்கு மட்டும் ஏன் இப்படித் தோணுது? தமிழர்கள் எல்லாருக்கும் இல்ல அப்படி தோணனும்???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 20 நாட்களாக கணினிபக்கம் வரவில்லை.
   //விபச்சாரம் நடுத்துறவன், விபச்சாரி, விபச்சாரியைக் கூட்டிக்கொடுக்கிறவன், குடிச்சுட்டு தினந்தோரும் விபச்சரிட்டப் போயி படுக்கிறவன் எல்லாருமா சேர்ந்து விபச்சாரத்தை எப்படி ஒழிப்பதுனு அது பத்தி கலந்துரையாடல் செய்வது போல எனக்குக் தோணுது.. எனக்கு மட்டும் ஏன் இப்படித் தோணுது? தமிழர்கள் எல்லாருக்கும் இல்ல அப்படி தோணனும்???//
   ஆஹா இது என்ன வம்பா போச்சு !
   நன்றி வருண்

   நீக்கு
 10. நானும் நிகழ்ச்சியைப் பார்த்தேன் . கரந்தையார் சொல்வதுபோல இங்கு மட்டும்தான் மாநிலமொழி படிக்காமல் பட்டதாரி ஆகிடமுடியும்

  பதிலளிநீக்கு
 11. நல்ல பகிர்வு...
  தமிழனின் அடையாளங்கள் அப்போ அப்போ தேடப்பட்டாலும் பல நேரங்களில் தேடுவதே இல்லை என்பதே உண்மை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எபோதாவது அடையாளம் பற்றி நினைவுக்கு வருகிறபோது பேசிவிட்டு மறந்து விடுவது வழக்கமாக உள்ளது

   நீக்கு
 12. இன்னும் ஆங்கிலத்திடமிருந்து மீளவில்லை தமிழன்.ஒரு சிலர் வெளிநாடு செல்ல அனைவரும் ஆங்கிலம் படிக்கும் கொடுமை.+2 வில் கூட தமிழுக்கும் தமிழாசிரியருக்கும் மதிப்பில்லை.அவர்களுக்கும் உரைக்கவில்லை.தமிழ் வகுப்பையும் கடன் கொடுத்து மாணவர்கள் தமிழ் தானே படித்துக் கொள்வார்கள் என நினைக்கும் தமிழ் பற்றாளர்கள்.பொறியியலும்.மருத்துவமும்.வியாபாரமாகிப் போன கொடுமை தமிழுக்கு மதிப்பின்மை.என்ன சொல்ல வற்றாத இனிமை தரும் தமிழை சுவைத்து படிக்க ஒரு சிலரே விரும்புகின்றனர்....

  பதிலளிநீக்கு
 13. நான் தமிழகத்திற்கு வரும் போது உறவினர்கள் தவிர்த்து மற்றவர்களிடம் பேசும் போது அவர்கள் தமிழில் பேசாமல் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள் பதில் சொல்லுகிறார்கள் ஆனால் அவர்கள் கருத்து சொல்லும் போதுமட்டும் தமிழ் மொழி கலாச்சரம் என்று பெருமையாக ஆங்கித்திலேயே பேசுகிறார்கள் என்ன கொடுமையடா இது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழனின் முக்கிய அடையாளம் தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுவது

   நீக்கு
 14. தமிழர்களின் அடையாளங்கள் மறைந்து வருகிறதா? என்று விஜய் டிவி தலைப்பு வைப்பத்ற்கு பதிலாக

  "விஜய் டிவி தமிழர்களின் அடையாளங்களை மறைத்து வருகிறதா "என்று வைத்து கோபிநாத் நீயா நானா புரோகிராம் நடத்தி இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல ஐடியாதான். சிவா கார்த்திகேயன் நிகழ்ச்சியைப் பற்றி அறிந்தபோது அப்படித்தான் இருந்தது.
   நன்றி மதுரை தமிழன்

   நீக்கு
 15. விரிவான பகிர்வுக்கு நன்றி உங்கள் பகிர்வின் மூலம் நிகழ்ச்சியை நேரில்ப் பார்த்த உணர்வு.

  பதிலளிநீக்கு
 16. நிகழ்வில் இளங்கோ கல்லானைவும் வழக்கம் போல உளறிக்கொட்டினார். "இண்டியாவில் பார்த்தால் பல மொழிகளில் எழுத்துகளைக் கூட இழந்திருக்கிறார்கள். இப்ப மராத்தியில எல்லாம் எண்கணிதம் ...அவுங்களோட ஸிஸ்டத்தை இழந்துவிட்டார்கள்" என்றார். நானிறிந்த வரையில் மராத்தி மொழி முன்பு மோடி (அரசியல்/வியாபாரம்) மற்றும் தேவநாகரி (இலக்கியம்) எனும் இரண்டு எழுத்துருக்களிலும் எழுதப்பட்டது. தற்போது தேவநாகரியில் மட்டும் எழுதப்படுகிறது. மோடி எழுத்துருவும் தேவநாகரியில் இருந்துதான் 13-ம் நூற்றாண்டில் உருவாகப்பட்டது. ஆக முன்பே தேவநாகரில் எழுதப்பட்ட மராத்தி திரும்பவும் முந்தய தேவநாகரி எழுத்துருவுக்கே மட்டும் 1950களில் போய்விட்டது. இந்நிலையில் மராத்தி எழுத்துரு மறைந்து விட்டது என்பது எப்படி சரி?

  தமிழ் கலாச்சாரத்தை அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இளங்கோ, சண்டை பிடிக்க ஆரம்பித்ததும், ஆங்கிலத்துக்கு மாறி பீட்டர் விட ஆரம்பித்துவிட்டார். தமிழின் பெருமை பேசும் நிகழ்வில் எதுக்கு ஆங்கிலம்? வெள்ளைக்கார துரையா நீயாநானா பார்க்க போகிறான்? அடுத்தவனை விட புத்திசாலி என காட்ட வேண்டுமானால் தமிழ்நாட்டில் உடனே ஆங்கிலம் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். நிகழ்ச்சியை நடத்தும் பல சமயங்களில் கோபியே பட்லர் இங்கிலீசில் ஆங்கிலத்தை கடித்து குதறுவார். தமிழ் தெரியாத ஒருவனிடம் கருத்தை எடுத்துரைக்க மொழிப்பிரச்சனையால் பிழையான ஆங்கிலம் பேசுவதில் தவறில்லை. ஆனால் தமிழ் டிவி நிகழ்ச்சியில் அழகான தமிழிருக்க எதுக்கு பிழையான ஆங்கிலம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான். நாலு தடவை டிவியில தல காட்டி விட்டால் பெரிய ஆட்களாக நினைத்துக் கொள்கிறார்கள்.

   நீக்கு
 17. நீண்ட நேரம் இந்த விவாதங்களைப்;பார்க்கும் பொறுமை இல்லை என்பதால் நான் இந்நிகழ்ச்சி பார்ப்பதில்லை. அதனால் நிகழ்ச்சியில் பேசப்பட்ட கருத்து பற்றி உங்கள் பதிவில் சுவாரஸ்யமாகப் படிக்க முடிந்தது. தமிழ்நாட்டில் நிறைய தெலுங்கு, கன்னடம், சௌராஷ்டிரா பேசும் மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அவர்கள் மொழியின் எழுத்துருக்கள் தெரியுமா என்பது பற்றி ஏதாவது பேசினார்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதைப் பற்றி பேசவில்லை.இதைப் பற்றி தனி நீயா நானாவே நடத்தலாம்

   நீக்கு
  2. தமிழகத்தில் இருக்கும் தெலுங்கு ,கன்னடம் ,சௌராஷ்டிரா மொழி பேசும் மக்களுக்கு எழுத்துரு இருந்தாலும் பயன்பாட்டில் இல்லை என்பதே உண்மை !வீட்டில் பேசுவதைத் தவிர எல்லாமே தமிழ் தான் என்றாகி விட்டது !
   த .ம. 1 1

   நீக்கு
 18. அருமையான பதிவு. நன்றி திரு டி.என்.முரளிதரன்
  எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் பின்னூட்டங்களையும் படிக்க வேண்டுகிறேன்.
  நன்றி நண்பர்களே.

  பதிலளிநீக்கு
 19. வணக்கம்
  முரளி(அண்ணா)

  எமதுதாய் மொழி தமிழ் பற்றிய விமர்சனக் கருத்தை முதலில் வரவேற்கிறேன்...அண்ணா. எமது மொழி அழிய மாட்டாது... மருவமாட்டாது. இப்போது இருகிற சந்ததியினர் பல திறவு கோல்கள் மூலம் தமிழ் மொழி வளர்கிறதுஇனி வரும் சந்ததியினருக்கு அது செல்லும் என்றுதான் சொல்ல வேண்டும்.. சில நாடுகள் தமிழ் மொழிக்கு மதிப்பளித்து நாணயங்கள் மற்றும் கடவுச்சீட்டு அடையாள அட்டை போன்ற வற்றில் தமிழ் முக்கியத்துவம் பெறுகிறது...

  எங்களுடைய நாட்டில் கூட கடவுச்சீட்டில் 3மொழியிலும் விபரங்கள் உள்ளது. அதைப்போன்று நாணயத்தாள்களிலும் அடையாள அட்டை யிலும் தமிழ் உள்ளது
  என்ன வேதனை என்றால் தமிழ் வளர்ந்த பூமி என்று சொல்லும் பாரத தேசத்தில் கூட அதவது தமிழ் நாட்டில் வழங்கப்படுகிற கடவுச்சீட்டில் கூட மும் மொழியில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும் எத்தனை இந்திய நண்பர்களின் கடவுச்சீட்டை பார்த்த போது கவனித்தேன்.

  மற்றும் தமிழ் தொலைக்காட்சிகளில் கூட ஆங்கில வார்த்தைகள் பாவிக்கிறார்கள் உண்மையில் சொல்லப்போனால் மக்கள் தொலைக்காட்சியில் மட்டுமே ஆங்கில வார்த்தை இல்லாமல் சுத்த தமிழ் வார்த்தை பாவிக்கிறார்கள் அதைப்போல எல்லா தொலைக்காட்சிகளும் இருந்தால் இன்னும் சிறப்பாக எம்மொழி வளரும் என்பதில் ஐயமில்லை. தங்களின் விமர்சனம் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  பதிலளிநீக்கு
 20. வணக்கம்
  த.ம 7வது வாக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  பதிலளிநீக்கு
 21. தமிழ் கட்டாயமாக்கப்படவேண்டுமெ ஒரு மொழியாக. அதாவது ஆங்கிலத்தோடு சேர்ந்து. இதில் மாற்றுக்கருத்துக்கிடமில்லை.

  தமிழரின் அடையாளங்கள் என்று நிரந்தரமாக எதுவுமேயில்லை மொழியைத்தவிர. எல்லாம் மாறும். இன்றும் தமிழ்மக்கள் வெவ்வேறுவித கலாச்சாரங்களைக்கொண்டுதான் வாழ்கிறார்கள்.

  திருக்குறளை மனனம் செய்யச்சொல்வது முட்டாள்தனமும் மூர்க்கத்தனமுமாகும். எந்தவொரு நூலையையும் மனனம் செய்யக்கூடாது. படித்துப்பார்த்து சிந்திக்கவேண்டும். குறட்பாக்களில் பல நச்சுக்கருத்துக்களை வீசுவன. எனவே அப்படியே எடுத்துக்கொள்பவன் முட்டாள்.பெண்ணடிமைத்தனத்தையும் விலைப்பெண்டிர் பாரம்பரியத்தையும் போற்றும் திருவள்ளுவர் ஆபத்தானவர். இன்று அவர் தேவையில்லை.

  அதைப்போலவே நம் பண்டைய இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள அனைத்தையும் படிக்கலாம். ஆனால் சிந்தித்துச் சீர்தூக்க வேண்டும். நற்கருத்துக்களை ஏற்று பரப்பி, நச்சுக்கருத்துக்களையும் வெளிகாட்டி மக்களை எசசரிக்கவேண்டும்.

  தமிழர்கள் தொல்பாரம்பரியங்கள் எல்லாம் இன்றும் சரி என்று சொல்லி அய்யோ மறந்துவிட்டார்களே என்று அலறறுபவனைக்கண்டு எச்சரிக்கையாயிருங்கள்: அரசியல் பண்ணப்போகிறான்.

  அதே சமயம் சரியல்ல எல்லாவற்றையும் தூக்கியெறியுங்கள் என்றும் நான் சொல்லமாட்டேன். என் கருத்து இதுவே: பழமையோ புதுமையோ, இன்றைய தலைமுறைக்கு பழமையை ஆராயந்து ஏற்பதோ துறப்பதோ என்ற முடுவெடுக்க முழு சுதந்திரம் நல்குவதே சரி.

  பதிலளிநீக்கு
 22. டமில்ல எனக்கு அவ்வளவா பேச வராதுன்னு சொல்றதை பெருமையா நினைக்குறாங்க

  பதிலளிநீக்கு
 23. இறுதியாக நீங்கள் சொல்லியிருப்பது சரி....முற்றிலும் தமிழர் அடையாளம் அழிந்து விடாது... ஆனால் தமிழர் கலாச்சாரத்தை கெடுத்துக்கொண்டிருக்கும் இந்த சேனல்கள் அதைப்பற்றி பேசிக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது......

  பதிலளிநீக்கு
 24. தொலைக்காட்சியில் நடத்தப்படும் நீயா நானா போன்ற நிகழ்ச்சிகளை உட்கார்ந்து முழுமையாக பார்ர்க்கும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை. அதில் வரும் நாள் நிகழ்ச்சி ஒன்றினைப் பகிர்ந்தமைக்கு நன்றி!


  பதிலளிநீக்கு
 25. நாம் பலவற்றைப் பற்றி எழுதுகின்றோம். சிலவற்றில் நம் கருத்து இது தான் என்று தீர்மானமாய் சொல்கின்றோம். பத்திரிக்கைகள் சொல்லும் செய்திகள், ஊடகங்கள் தரும் கேள்விகள் போன்றவற்றை நாம் பல ஊர்களுக்கு பயணம் செய்யும் போதும் அங்கே வாழும் மக்களின் நிலைமைகளைப் பார்க்கும் போது நாம் எந்த அளவுக்கு முட்டாளாக இருக்கின்றோம் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

  நீயா நானா பார்க்கும் போது பெரும்பான்மை மக்களைப்பற்றி யோசிக்காத, யோசிக்க விரும்பாதவர்கள், நகர்ப்புறங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுபான்மையினரின் வாழ்க்கையைத் தான் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர்.

  பார்க்கும் அனைவருமே நம்பும் அளவிற்கு இருக்கின்றதோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.

  உண்மையான விவசாயிகளின் பிரச்சனைகளைப் பற்றி பேச வேண்டும் என்றால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளைத்தான் அங்கே கொண்டு போய் உட்கார வைத்து பேச வைக்க வேண்டும். மற்றவர்களை வைத்து பேச வைத்தால் உண்மைகள் எங்கே வெளியே வரும்.

  நீயா நானா மட்டுமல்ல. எல்லா நிகழ்ச்சிகளும் இப்படித்தான் உள்ளது.

  பதிலளிநீக்கு
 26. நல்ல பதிவு இதை நான் பகிர்ந்து கொள்கிறேன் ,நண்பரே

  பதிலளிநீக்கு
 27. அன்பு சால் நண்பரே!

  வெங்காயம் விலை ஏறிய போது எங்கள் ஊர் ராயபவனில் ஆனியன் ஊத்தப்பத்தை 33 ரூபாய்க்கு உயர்த்தினார்கள். ஆனால் இப்போது ஆனியன் விலை குறைந்த போதும் குறைக்காமல் இருக்கிறார்கள். கேட்டால் மற்ற ஊர்களில் ஆனியன் ஊத்தப்பம் எவ்வள்வு விலை என்று தெரியுமா என்று ஏளனம் செய்கிறார்கள். உங்கள் ஊரில் ஆனியன் ஊத்தப்பத்தின் விலை என்ன என்று தெரியப்படுத்தினால் நான் நன்றியுடையவனாவேன். கூகிளில் தேடினால் இது கிடைப்பதில்லை.

  சன்முகராமன்

  பதிலளிநீக்கு
 28. நல்ல அலசல் முரளி......

  நமக்கும் இந்த நிகழ்ச்சிக்கும் ரொம்ப தூரம். ஐந்து நிமிடங்களுக்கு மேல் பார்த்ததில்லை!

  பதிலளிநீக்கு
 29. தங்கள் பாராட்டுக்கு நன்றி சார்!

  தமிழர்களின் போராட்ட குணம் எனக்கும் இருப்பதை நீங்கள் சுட்டிக்காட்டியதும் தான் உணர்ந்தேன். உலகின் எந்த இடத்திற்கு சென்றாலும் அநீதி கண்டு தமிழர் பொங்குவதும் இயல்பு, அவர்களுக்கு ஆதரவாக தமிழக தழிழர்கள் குரல் கொடுப்பதும் உண்டு. சமீபத்தில் சிங்கப்பூருக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தார்கள்.

  ஆனியன் ஊத்தப்பம் தானே ஏற்றினால் ஏற்றி விட்டு போகட்டும் என்றிருந்தால் பிறகு பெட்ரோல் விலை மாதிரி தினசரி ஏற்ற ஆரம்பித்துவிடுவார்கள் அதுவும் ராயரின் பசங்கள் அவர் மாதிரி இல்லை கொஞ்சம் பண ஆசை அதிகம் உள்ளவர்கள்.

  ஆதாரத்துடன் போராடவேண்டும் அதற்காகவே உங்கள் உதவியை நாடியுள்ளேன்.

  நம்பிக்கையுடன்
  சன்முகராமன்

  பதிலளிநீக்கு
 30. சார்,

  என் பெயரை தவறாக சண்முக ராமன் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.ஆனால் சன்முகராமன் என்பதே சரி. சன் -சூரியனைக் குறிப்பதாகும்.

  அன்பு நண்பன்
  சன்முகராமன்

  பதிலளிநீக்கு
 31. முதன்மை மொழி இரண்டாம் மொழி என்பதைவிட தமிழ்வழிக் கல்வி, ஆங்கில வழிக்கல்வி என்று அடையாளப் படுத்துவதே சரி என்று தோன்றுகிறதுமொழியை வளர்ப்பவர்கள் ஆட்சிக்கு வருமுன்னரே பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருந்தது. நான் பள்ளியிறுதிவரை தமிழ்வழிக்கல்விதான் படித்தேன். குறையென்று என்றும் எண்ணியதுஇல்லை. அறிவை வளர்க்கக் கல்வியா மதிப்பெண்பெறக் கல்வியா என்று முடிவு செய்ய வேண்டும். ஆங்கில வழிக்கல்வி பெற்றவர்களில் அந்த மொழி ஆளுமை உள்ளவர்கள் இருக்கிறார்களா என்று சந்தேகம் வலுக்கிறது. எதையோ குறிவைத்துப் போகிறார்கள். அங்கும் இல்லை இங்கும் ல்லை எங்கும் இல்லை என்னும் நிலைதான் மிச்சமாகிறது. எல்லாவற்றுக்கும் ஒரே பதில்வைத்திருக்கிறார்கள் தலைமுறை இடைவெளி. உறவுகள் பற்றிச் சொல்லவே வேண்டாம்.தாய்தந்தையரின் பெற்றோர் பெயரைத் தெரிந்து வைத்திருப்பதே அதிசயமாகி வருகிறது.பல்வேறு கேள்விகளை எழுப்பும் பதிவு . பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895