என்னை கவனிப்பவர்கள்

நீயா?நானா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீயா?நானா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 மே, 2016

நீயா? நானா?காதல் திருமணம்-அடம்பிடிக்கும் பெண்கள்


  காதல்- பதின் பருவத்தினரின் காந்த வார்த்தை.முதின் பருவத்தினரை நொந்து போக செய்யும் வார்த்தை. காலம் காலமாய் காவியங்களும் காப்பியங்களும் காதலை போற்றி வருகின்றன என்றாலும் காதலுக்கு சமூகம் மனதார அங்கீகாரம் கொடுக்கவில்லை. திரைப்படங்கள் வந்த நாள் முதல் இந்த நாள் வரை காதலைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.  திரைப்படங்களில் கதைகளில் தொலைக் காட்சித் தொடர்களில் வயது வித்தியாசமின்றி காதலை ரசித்தாலும் நிஜ  வாழ்க்கையில் பெற்றோர் வயிற்றில் புளியைக் கரைக்கக் கூடிய வார்த்தையாகத்தான் காதல் இருக்கிறது. திரைப்படங்களில் காதலை எதிர்க்கும் வில்லத் தந்தைக்கு எதிரான  மனநிலையைக் கொண்டிருப்பார்கள்.. காதல் ஜெயிக்க விரும்பி காதல் ஜோடிகள் இணைத்தால் மன நிறைவு அடைவார்கள்.ஆனால் நிஜத்தில் காதலுக்கு எதிரான மனப்பான்மை கொண்டிருப்பதுதான் யதார்த்தம்.

       கடந்த வார நீயா நானா இன்னோர் வடிவத்தில்  காதலை விவாதப் பொருளாகக் கொண்டது. ஒரு பக்கம் காதல் செய்ய விரும்பும் பெண்கள் (காதலித்துக்  கொண்டிருக்கும் பெண்கள் அல்ல) இன்னொரு பக்கம் அவர்கள் பெற்றோர். பொதுவாக ஆண்களை விட பெண்கள் காதல் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருப்பதாக நினைப்பதுண்டு. அதனால் சாதிப்பற்று ஆண்களை விட பெண்களுக்கு குறைவு என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாய்மார்கள் சொன்ன கருத்தை பார்க்கும்போது என் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதாகவே உணர்கிறேன். தனது சாதியில் உள்ள பெண்ணை தன் பெண் காதலித்தால்  பரிசீலிப்பதாக பெற்றோர், குறிப்பாக தாய்மார்கள்  கூறினர். இன்னொரு சாதிப் பையனை தன் மகள் காதலிப்பதை வந்திருந்த எந்தப் பெற்றோரும் விரும்பவில்லை. காதலே கூடாது என்ற எண்ணம் மாறி  இந்த அளவுக்காவது காதலை ஏற்றுக் கொள்கிறார்களே என்று மகிழ்சசி அடைய வேண்டியதுதான் போலிருக்கிறது. தன் மகளோ மகனோ எக்கணமும் காதல் வலையில் விழலாம் என்று பெற்றோர் எதிபார்த்துக் கொண்டேதான் இருக்கிரார்கள்
  ஆனால் இளம் பெண்கள் காதல் திருமணம் செய்வதையே விரும்புகிறார்கள் என்பது புரிகிறது. முன்பு போல பெற்றோரிடம் காதல் பற்றிப்பேச கூச்சப் படுவதில்லை. பெண்கள் தங்கள்  திருமணம் நிச்சயிக்கப் படும்வரை  வரை கூட தங்கள் காதலை பெற்றோரிடம் மறைத்துக் கொண்டு இருந்தது பழங்கதை.   இப்போது அப்படி அல்ல. பெற்றோரிடம் எவ்விதமாவது  காதலை அல்லது காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புவதை  மறைமுகமாக உணர்த்தவே விரும்புகிறார்கள்  என்பதை நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினர் கலந்து கொண்ட பெண்கள். பெற்றோரை கொஞ்சம் கொஞ்சமாக தயார் படுத்தும் முயற்சியில் எப்படியெல்லாம் ஈடுபடுவோம் என்பதையும் சுட்டிக் காட்டினர். இது நகரங்களில் படித்த மத்திய தர குடும்பத்தினரிடையே   இத்தகைய சூழலைக் காண முடிகிறது 
     முந்தைய  தலைமுறையினர்  தன பிள்ளைகள் காதலிக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்பினார்கள். அப்படி ஏதேனும் நடந்து விட்டால் அதீத அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். தங்கள் சமூத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்று அஞ்சினர்.

      இக்காலப் பெற்றோரின் நிலை வேறு.   கல்வி அறிவு  சற்று முற்போக்காக சிந்திக்க வைத்ததாலும் அவர்களால் காதலை முழுமையாக எதிர்க்க முடிவதில்லை. ஆனாலும் ஏற்றுக் கொள்ளவும் முடியாத இரண்டும் கெட்டான் மன நிலையில் இருக்கிறார்கள். தன் மகள் காதல் பாடல்களை விரும்பிக் கேட்பதையும்  அறைக்குள் மணிக்கணக்கில் கைபேசியில் பேசிக்கொண்டிருப்பதையும்   கவனிக்கும்போதும் ஒரு கலவரம் வந்து மனதில் தொற்றிக் கொள்ள அதை தடுக்கும் முயற்சியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபடுகிறார்கள். காதல் , ப்ரேக் அப் என்னும் வார்த்தைகள் அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. திரைப்படங்களில் வரும் கல்லூரிக் காட்சிகளில் காதலைத் தவிர வேறு எதுவும் இருப்பதில்லை. மேலும் படங்களில் நாயகிகள் ரவுடிகளையும் பொறுக்கிகளையும்  உருகி உருகி காதலிப்பதைப் பார்த்து உண்மையிலும் இப்படிப்பட்டவனைத்  தன் மகள் தேர்ந்தெடுத்து விடுவாளோ என்று அஞ்சுகின்றனர். இளம் பெண்களும் ஆண்களும் காதல் ஒன்றே குறிக்கோளாகக் சுற்றுவதாகவே மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.
     தாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்களாய் இருந்தாலும் .தன் பிள்ளைகள் காதல் திருமணம் செய்வதை பெரும்பாலும் பெற்றோர் விரும்புவதில்லை. தன் பிள்ளைகளின் காதல் மீது முழுமையான நம்பிக்கை வைக்க அவர்களால் இயல்வதில்லை. தங்கள் காதலைப் போல இந்தக் காலக் காதல் உண்மையானதல்ல; உறுதியானதல்ல என்ற  எண்ணமும் அதற்குக் காரணம்

   ஆனால் இந்தக் காலப் பெண்பிள்ளைகள் சாமார்த்திய சாலிகள்..தன் பெற்றோரை எப்படியாவது சம்மதிக்க வைத்து  விட முடியும் என்று நம்பு கிறார்கள்..
     கடைசி  ஆயுதமாக காதலை ஏற்றுக்  கொள்ள வைப்பதற்கு ஒரு பெண் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுவேன் என்று சொன்னபோது அந்த பெண்ணின் தாயார் பரவாயில்லை போகட்டும் என்று சொன்னது அதிர்ச்சி..ஆனால் அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்ததாகத் தெரியவில்லை.
 பெற்றோர் இப்போது ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர்களை எப்படியாவது கொஞ்சம் கொஞ்சமாக சம்மதிக்க வைத்து விட முடியும் என்றே நம்புவதாக பலரும் தெரிவித்தனர்.  பெற்றோரின் சம்மதம் பெற்றுவிடவேண்டும் என்பதில் பலரும் முனைப்பாக இருக்கின்றனர் என்பது மட்டும் உறுதியாக தெரிந்தது.
     பெற்றோரின் பிடிவாதத்தால்   ரெண்டு மூணு லவ் ப்ரபோசல் நழுவிப் போச்சு என்று ஒரு பெண் சொன்னது  யதார்த்த இளமை வருத்தம்

  முன்பின் தெரியாத ஒருவனை ஏற்றுக்கொள்ளச் சொல்லி பெற்றோர் வற்புறுத்துகிறார்கள்  என்று குற்றம் சாட்டும் இப்பெண்கள். நண்பர்களின் தூண்டுதல் காரணமாகவோ  தொடர் அணுகுதல் காரணமாகவோ முன்பின் அதிகம் அறியாத ஒருவனைத்தான் காதலிக்கிறார்கள். அவனைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்றும் பிடிவாதம் பிடிக்கிறார்கள். ஆறு மாதமோ ஒருவருடமாகவோ காதலிக்கும் பெண்ணுக்கு   காதலனின் உண்மை முகம் தெரிய ஆரம்பித்தாலும் காதலை துறக்க விருபுவதில்லை. குறைகள் இருப்பினும் அவனையே திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர். பின்னால் தனக்கு ஏற்றவனாக மாற்றிக் கொள்ள முடியும் என்று நம்புகின்றனர். அல்லது அவனுக்கேற்ற மாறிவிடவும் தயாராக உள்ளனர். நிச்சயிக்கப்பட்ட திருமணங்களிலும் இதே நிலைதானே?. என்ன பழகுனர் காலம் இல்லை.?  அவ்வளவுதானே!. ஏன் தங்கள்   விருப்பத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதுபெற்றோரின் வாதம்  
 காதலின் போது பரஸ்பரம்  குறைகள் கண்ணுக்கு புலப்படுவதில்லை. திருமணத்திற்குப் பிறகுதான் குறைகள் தென்பட ஆரம்பிக்கும் என்கின்றனர் பெற்றோர்.
    இந்த நிகழ்ச்சியில் பேசிய பெண்கள் சொல்வதில் இருந்து இன்னொன்றும்  புரிந்தது. காதலன் காதலியிடம் தன் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துப் போக வேண்டும் என்று விரும்புகிறான். அவ்வப்போது தன் வீட்டாரின் குணங்களை  காதலியிடம் சொல்கிறான். அதற்கேற்றபடி தன் காதலி நடந்து கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறான்   
  இவர்கள் காதலித்துக் கொண்டிருப்பவர்கள் அல்ல ஆனால் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் என்று சொன்னாலும் உண்மையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெரும்பாலான பெண்களின் பேச்சை வைத்துப் பார்க்கும்போது  ஏற்கனவே காதலித்துக் கொண்டிருப்பதாகத்தான் தெரிந்தது. தன் பெற்றோருக்கு  குறிப்புணர்த்தவே நிகழ்ச்சியில் பெற்றோரை அழைத்து வந்ததாகத் தோன்றுகிறது. இவை எல்லாம் பெரும்பாலும் நகரப்புறங்களில் மட்டுமே  ஆனால் கிராமங்களின் காதலின் நிலை வேறு .
   இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பெற்றோரின் அச்சம் மேலும் அதிகரிக்கலாம்.  பெரும்பாலும் இது பெண்களைப் பெற்றவர்களின் அச்சமாகத் தான் இருக்கிறது. ஏனெனில் காதலால் பாதிக்கப் படுவது பெண்கள்தான் என்ற எண்ணமே அதற்குக் காரணம்  .
     பொதுவாக கோபிநாத் தன்னை இளைய தலைமுறையினரின் ஆதரவாளாராகவே காட்டிக் கொள்வார். இந்நிகழ்ச்சியிலும் அப்படியே!. எனக்கு ஒரு சந்தேகம்! உண்மையில் இந்த நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில்  யார் விண்ணப்பித்திருப்பார்கள் பெற்றோரா  அல்லது இந்தப் பெண்களா?  சாதியைப் பற்றிக் கவலைப்படும் பெற்றோர் இந்த நிகழ்ச்சிக்கு வர எப்படி ஒப்புக் கொண்டார்கள்? அல்லது விஜய் டிவியின் திட்டமிடப்பட்ட  ஏற்பாடா?
  அது எப்படியோ! காதலுக்காக பெற்றோரின் சம்மதம் பெறப் போராடும் இந்தப் பெண்களுக்கு வாழ்த்துகள் 

****************************************************


சனி, 26 மார்ச், 2016

நீயா நானா? கல்விக்கட்டணம்-பெற்றோரும் நிர்வாகிகளும்


    கடந்த வார 20.03.2016 நீயா நானாவில் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்கள் பற்றி பெற்றோர் மற்றும்  கருத்துகள் விவாதிக்கப் பட்டது. இப்போதெல்லாம் ஆழமான விவாதங்கள் நடை பெறுவதில்லை. நான்கைந்து கேள்விகளுக்கு ஒருவர் பின் ஒருவராக பதில் கூற வைத்து நிகழ்ச்சி முடிந்து விடுகிறது. நம் எதிர்பார்க்கும் சில கேள்விகள் கேட்கப் படுவதில்லை. சிறப்பு விருந்தினர்களும் எப்போதும் வரக்கூடிய ஆஸ்தான சிறப்பு விருந்தினர்களே.  அவர்களுடைய கருத்துக்களையே மீண்டும் மீண்டும் கேட்க வேண்டி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியும் அப்படியே.  இந்த நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் சார்பில் ஒருவரும் அழைக்கப்படவில்லை. அடிக்கடி நிகழ்ச்சியில் பங்கு பெறும் பத்ரி சேஷாத்திரியும்,  இளங்கோ கல்லாணையும்  கலந்து கொண்டனர். நாமும் கொஞ்சம் கல்விக் கட்டணம் பெருஞ்சுமையாக  ஏன் ஆனது என்பதை கொஞ்சம் ஆராய்வோம்.
       விலை கேட்டு வாங்கவா முடியும் கல்வி வேளை தோறும் கற்று வருவதால் படியும் என்றான் நறுக்கு மீசைக் கவிஞன் பாரதிதாசன். ஆனால் கல்வி இன்று சந்தைப் பொருளாக மாறிவிட்டது. எங்கே கல்வி அதிக விற்பனைக்கு விற்கப் படுகிறதோ அங்கிருந்து கல்வியை வாங்கவே பெற்றோர் விரும்புகின்றனர். விலை அதிகமுள்ள பொருளே தரமானது என்பது சந்தை சித்தாந்தம். அது கல்விக்கும் பொருந்தும் என்பதே பெற்றோர் எண்ணம். தன்னுடைய பொருளாதார நிலைக்கு மீறிய  கல்வியை வாங்க துணிவதன் விளைவே பெருஞ்சுமையாக மாறி இன்று அச்சுறுத்துகிறது.
      முந்தைய தலைமுறையினர் கல்வியின் அவசியத்தை உணர்ந்து அரசு பள்ளிகளில் சேர்த்து தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்தனர். ஆனால் இந்தத் தலை முறையினரோ கல்விக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர்.   கல்வி இல்லையென்றால் வாழ்க்கையே வீண் என்று கருதுகின்றனர். தன்னுடைய பெற்றோர் அரசு பள்ளிகளில் தங்களை சேர்த்ததால்தான்   தாம் நல்ல கல்வி பெற முடியவில்லை என்று ஆதங்கம் கொண்டவர்களாகவே இன்றைய பெற்றோரை காணமுடிகிறது.. அதனால்  இந்தத் தலை முறையினர் அந்தக் குறை தங்கள் பிள்ளைகளுக்கு இருக்கக் கூடாது  எனக் கருதி  தனியார் பள்ளிகளில் சேர்க்க முற்பட்டனர். குறிப்பாக நடுத்தர முற்பட்ட இனத்தவர் பணக்காரர்களின் பள்ளிக்கு தங்களை பிள்ளைகளை அனுப்ப முயற்சி செய்தனர். இதற்காக தங்கள் தேவைகளை சுருக்கிக் கொள்ளவும் தயங்கவில்லை. அறிவுரை சொல்கிறோம் என்ற பெயரில் 'நல்லா  படிக்கலன்னா பிச்சைதான் எடுக்கணும்' என்றெல்லாம் கூறி அச்சத்தை குழந்தைகள் மனதில் ஏற்படுத்தினர். முற்பட்ட இனத்தவரின் இந்த மனப்பான்மை  மற்ற இனத்தவருக்கும் தொற்றிக் கொள்ள கல்வி வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. பெரிய பணக்காரப் பள்ளிகளை நெருங்க முடியாத இவர்களின்  நிலையை மெட்ரிக் பள்ளிகள் பயன்படுத்திக் கொண்டன. ஆங்கில மோகமும் கவர்ச்சிகரமான விளம்பரங்களும்  ஈர்க்க விட்டில் பூச்சிகளாய் வீழ்ந்தனர். மூட்டை மூட்டையாய் புத்தகங்களையும் நோட்டுகளையும்  முதுகில் சுமந்து செல்வதை பெற்றோர் பூரிப்பில் மிதந்தனர். 
    ஓரளவிற்கு பொருளாதார நிலை உயர்ந்தபோது ஏழைகள் படிக்கும் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை படிக்க  வைப்பதை கௌரவக் குறைவாகக் கருதத் தொடங்குவதும் அதிகரித்தது.  அரசு பள்ளிகளில் பயின்றால் ஒழுக்கமும் கட்டுப்பாடும் கிடைக்காது என்று எண்ணத்தையும் வளர்த்துக் கொண்டனர்  . ஆனால் தாங்கள் அரசு பள்ளியில்தான் படித்தவர்கள் என்பதை மறந்து விட்டனர் .தங்கள் பிள்ளைகள் அசாத்திய திறமை பெற வேண்டுமெணில் தனியார் பள்ளிகளே அதனை அளிக்க முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர். இதைப் பற்றியெல்லாம் நிகழ்ச்சியில் விவாதிக்கவில்லை

   நிகழ்ச்சியில் ஒருபெண்மணி சொன்னார் நாங்கள் அரசு பள்ளிகளில் படித்ததால் எங்களால் ஆங்கிலம் பேச முடியவில்லை. தொடர்புத்  திறன் (communication Skill)  இல்லை  என்று கூறினார்.  அதிகம் படிக்காத அரசியல் வாதியிடம் இருக்கும் Communication Skill ஆங்கிலம் படித்த எல்லோரிடமும்  இருக்கிறதா என்பது ஐயத்துக்கிற்குரியதே. ஆங்கிலத்தில் பேசுவதுதான் Communication skill என்ற புரிதலே இதற்கு காரணம்
     ஒன்றை கவனிக்க வேண்டும். பெரும்பாலும்  அரசு பள்ளிகளில் படித்தவர்கள்தான் பல்வேறு அரசுப்பணிகளில்  அதிகாரிகளாக உள்ளனர். அவர்களில் பலருக்கு  ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரியுமா என்பது ஐயமே. ஆனால் சிறப்பான நிர்வாகத் திறமை பெற்றவர்களாகத்தான் இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது.
   நிகழ்ச்சியில் சர்வதேச பள்ளி சார்பாக பேசியவரிடம்  ஏன் இவ்வளவு பணம் வாங்குகிறீர்கள். என்று கேட்டதற்கு, தரும் வசதிகள் ஆசிரியர் சம்பளம்  போன்றவையும், கூடுதலாக சொல்லித் தரப்படும் நீச்சல், கராத்தே,யோகா  செஸ் பேஸ்கட் பால், இவற்றிற்குத்தான் காசு  என்றார்.
 3 ஆண்டுகளாக நீச்சல் பயிற்சி தருகிறார்கள் ஆனால் என் மகனுக்கு இன்னும் நீந்தத் தெரியாது என்று உண்மையை போட்டு உடைத்தார் ஒருவர்.
      அதை சொல்லித் தருகிறோம் இதை சொல்லித் தருகிறோம் என்று சொல்லும்  இந்தப்  பள்ளிகள் ஒரு குற்றாலீஸ்வரனையோ விஸ்வநாதன் ஆனந்தையோ உருவாக்கி இருக்கிறதா என்ற கேள்வியை  இந்தப் பள்ளிகளை கோபிநாத் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
      இசைப் புயல் AR ரகுமான் சென்னையில் புகழ் பெற்ற பணக்காரர்கள் படிக்கும் பள்ளியில் படித்தார். அடிக்கடி பள்ளிக்கு வராததால் அவர் பள்ளியில் இருந்து வெளியேற்றப் பட்டார். அந்தப் பள்ளியின் விதிமுறைகளுக்கு கீழ்ப்படிந்திருந்தால் ஒரு ஆஸ்கார்  நாயகன் உருவாகி இருப்பாரா என்பது ஐயமே. அவரை அனுப்பியதற்காக அந்தப் பள்ளிக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். 
         சட்டப்படி கல்வியை லாபம் பார்க்கும்  தொழிலாக நடத்தக் கூடாது என்பது பள்ளிகள் நடத்தும் பலருக்கு தெரியாமல் இருப்பதை அறிய முடிந்தது . அனுமதி பெறுவதற்கு செய்யப்படும் செலவுகள் அதிகம் அந்த தொகையை நாங்கள் எங்கிருந்து பெறமுடியும் என்று கேட்கிறார்கள் .
 சட்டம் அனுமதிக்காவிட்டாலும் உண்மையில் லாபம் பார்க்கும் தொழிலாகத்தான் செய்யப் படுகிறது. இப்போதும் நிறையப் பேர் அதிகம் சம்பாதிக்கலாம் என்றுதான்  பள்ளிகள் நடத்துகிறார்கள். நாங்க முதல் போடுகிறோம் லாபம் வேண்டாமா என்றார் இன்னொரு நிர்வாகி.பெற்றோர் கல்விக் கட்டணம் அதிகம் வாங்கப் படுவதையும் பள்ளிகளில் சேர்ப்பதற்கு  கஷ்டப் படுவதையும் என்று புகாராகக்  கூறினார்கள் . கட்டணம் குறைவாக உள்ள பள்ளிகளிலும் அல்லது அரசு பள்ளிகளிலோ சேர்க்க தயாராக இல்லை. குறைவான கல்விக் கட்டணங்களை  இப்பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.பணக்காரர்களிடமிருந்து பணம் பிடுங்கவே இப்பள்ளிகள் தொடங்கப் பட்டன. ஆனால் நடுத்தர வர்க்கத்தினரும் நானும் அந்தப் பள்ளியில்தான் என் பிள்ளைகளை படிக்க வைப்பேன் என்று தானாகப் போய் விழுவதும் சீட் கிடைக்க போடப்படும் நிபந்தனைகளைக் கண்டு ஆதங்கப் படுவதும் , கட்டணம் குறைக்க வேண்டும் என்று கூறுவதும் வழக்கமானதாக உள்ளது. 
       சேர்க்கைக்கு போட்டி  இருக்கும்போது  கட்டணம் உயர்த்தப்பட்டு விடுகிறது.சேர்க்கைக்கான பிற விதிகளை இது புறந் தள்ளிவிடுகிறது . மாதம் இவ்ளோ பீஸ் கட்டறோம்  என்று பெருமையாக சொல்லிக் கொள்பவர்களும்  உண்டு 
       அரசு பள்ளிகளில் வழங்கப்படும்  அனைவருக்கும் சமமான கல்வியை சாதாரணர்களுக்கானது அது குறைந்தபட்ச கல்வி   என்று நினைப்பதும்     இப்பள்ளிகளை நாடுவதற்கு ஒரு காரணம்  என்று கூறப்படுகிறது. வகுப்பறைகளை கலர்புல்லாக வைத்திருக்கிறோம் . Smart Class வைத்திருக்கிறோம் கண்காணிக்க வாட்ஸ் அப், போன்ற நுட்பங்களை பயன் படுத்துகிறோம் என்றெல்லாம் பீற்றிக் கொண்டார்கள். இவற்றில் எந்தப் பள்ளியில் நங்கள் நல்ல குடிமக்களை உருவாக்குவதற்கான பயிற்சி அளிக்கிறோம் என்று சொல்லவில்லை 
      தமிழ் நாட்டில் ஒவ்வொரு தனியார் பள்ளியும் அரசு நிர்ணயித்த கட்டணத்தைத்தான் வசூலிக்க வேண்டும். அதற்கென ஒரு நபர் குழு நியமிக்கப்பட்டு கட்டணம் நிர்ணயிக்கப் படுகிறது. கமிட்டியின் மூலம் கட்டணம் நிர்ணயிக்கப் படாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப் படமாட்டாது. அதன்படி அனைத்துப் பள்ளிகளும் தங்கள் கட்டணத்தை தாங்கள் தரும் வசதிகளை குறிப்பிட்டு கட்டணம் நிர்ணயித்துக் கொண்டன. செல்வாக்கை பயன்படுத்தி கூடுதல் கட்டணமும் நிர்ணயம் செய்யப்டுவதாகவும்  சொல்லப் படுகிறது. உண்மையில் பல பள்ளிகள் இந்தக் கட்டணத்தை விட அதிகமாகவே வசூலிக்கின்றன. முறையான ரசீதுகள் வழங்கப் படுவதில்லை. இவற்றையெல்லாம் குற்றச்சாட்டாக சொல்லும் பெற்றோர் விசாரணையின்போது பல்டி அடித்துவிடுவதே வழக்கமாக உள்ளது. புகார் கூறினால் தன் குழந்தையை பழி வாங்கக் கூடும் என்ற அச்சமே அதற்கு காரணம்

ஒரு நபர் கமிட்டி நிரனயித்துள்ள மெட்ரிக் பள்ளிகள் கட்டண விவரம் அறிய  வேண்டுமா?    
க்ளிக் செய்யுங்கள் 




   ஒரு பெண்மணி சொல்கிறார் எவ்வளவு செலவானால் என்ன அதற்கேற்ற கல்வி கிடைக்கிறதே என்று.  பள்ளியை தேடுவதை ஸ்கூல் ஷாப்பிங் என்று வர்ணித்தார். அப்படி ஷாப்பிங் செய்து படித்த  பள்ளியில் அவர்கள் பிள்ளைகள் என்ன சாதித்தார்கள் என்று தெரியவில்லை.
    ஒரு பள்ளி தொடங்கிய மூன்று ஆண்டுகளுக்குள் 15 பள்ளிகளை தொடங்கினேன் என்றார்  ஒருவர். செலவு அதிகம் என்று சொல்கிறீர்களே உங்கள் வருடாந்திர Turn over எவ்வளவு? செலவு அதிகமெனில் மூன்று ஆண்டுகளுக்குள் 15 பள்ளிகளை எப்படி திறக்க முடிந்தது என்ற  கேள்விகளுக்கு பதில் கிடைக்க வில்லை. 

    இக் கட்டணக் கொள்ளைகளை தடுப்பது எப்படி.? இரண்டு வழிகளை பத்ரி சேஷாத்ரி கூறினார். ஒன்று  அரசே பள்ளிகள் நடத்தவேண்டும் வேண்டும்.அது இப்போதைக்கு சாத்தியமில்லை, சட்டப்படியே சிறு லாபத்துடன் நடத்த அனுமதிக்கலாம் என்றார். அப்படி செய்தால் இன்னும் நிறையப் பேர் வருவார்கள் கல்விக் கட்டணங்கள் குறையும் என்றார். இப்போதும் ஏராளமான தனியார் பள்ளிகள் உள்ளன. உண்மையில் சட்டம் அனுமதித்தாலும் அனுமதிக்காவிட்டலும் லாபகரமான தொழிலாக பள்ளிகளை நடத்துவதையே குறிக்கோளாக வைத்துள்ளார்கள். தற்போது பள்ளிகளின் மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தும் ப்ளாக் மணிதான் என்று அதிரடிக் கருத்து ஒன்றையும் கூறினார் பத்ரி. மேலும் இப்பள்ளிகள் செய்யும் விதிமீறல்களை பெற்றோர் பொருட்படுத்தப் படுவதில்லை. சொல்லவும் துணிவதில்லை.அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் எங்களுக்கு இடம் கொடுத்தால் போதும்  என்ற எண்ணமே இருப்பதை சுட்டிக் காட்டினார் 
    கட்டணங்களை அரசு குறைக்கவேண்டும் பெற்றோர் என்று விரும்புகின்றனரே  தவிர கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளை மூடுங்கள் என்றும் கல்வியை அரசுதான் வழங்கவேண்டும் என்றும் ஒருவரும் சொல்ல தயாராக இல்லை ன்பதை நீயா நானா உணர்த்தியது 
     அப்படியானால் இப்பளிகள் எவ்வளவு கட்டணம் வேண்டுமானாலும்  வசூலிக்கவும் அனுமதிக்கலாமா? என்றால்  கூடாதுதான் .என்னதான் செய்யலாம் .
   கல்விக்கான அரசின் செலவை குறைப்பதற்காக தனியார் ஊக்குவிக்கப் பட்டன. இன்று அரசு பள்ளிகளே அழிந்துவிடும் நிலை உருவாகி விட்டது.  அரசு இப்பள்ளிகள்  மீதான கண்காணிப்பை சட்டத்தின் துணை கொண்டு வலுப்படுத்த வேண்டும் . விதிமுறைகளை முழுமையாக பின்பற்றினால் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். நேர்மையாக செயல்படும் அதிகாரிகளுக்கு அரசியல் வாதிகளிடமிருந்தோ உயர் அதிகாரிகளிடமிருந்தோ எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது. சமரசங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. அரசு பள்ளிகளின் கட்டமைப்பையும் ஆசிரியர்களின் தரத்தையும் மேம்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் படித்தவர்க்கே அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப் படவேண்டும். சாதாரண பணியாளராய் இருந்தாலும் சரி ஐ.ஏ எஸ். அதிகாரியாய் இருந்தாலும் சரி  அரசு பள்ளியில்தான் தங்கள் குழந்தைகளை படிக்கவைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப் படவேண்டும்.
      ஆனாலும்  கல்விக் கட்டணம் குறைப்பது அரசாங்கத்தால் மட்டும் சாத்தியமாகி விடாது.  பெற்றோர் தனியார் பள்ளிகளின் மீது கொண்டுள்ள மோகத்தை கைவிட வேண்டும்.   பிறருக்கு அடிமை  வேலை செய்யும் மனப்பான்மையை விடுத்து சுய தொழில் செய்யும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.
இன்னும் விவாதிக்க வேண்டியவை பல இருந்தாலும் நீளம் கருதி தற்போதைக்கு முடித்துக் கொண்டு பின்னர்  தொடர்வோம்.


******************************************************************************


ஞாயிறு, 19 ஜனவரி, 2014

சிறப்பு நீயா நானா?தமிழர்களின் அடையாளங்கள் மறைந்து வருகிறதா?

    மாட்டுப் பொங்கல் அன்று நீயா? நானா? ஒரு சிறப்பு நிகழ்ச்சியை விஜய் டிவி ஒளி பரப்பியது. தமிழர்களின் அடையாளங்கள் இன்றும் இருக்கிறதா மறைந்து வருகிறதா என்பது தலைப்பு. சென்னையில் வசிக்கும் இளைஞர் இளைஞிகளைக் கொண்டு நிகழ்ச்சி நடத்தப் பட்டாலும் ஓரளவிற்கு ஒட்டு மொத்த தமிழர்களின் பிரதிபலிப்பாகவே அமைந்தது என்று கொள்ளலாம். சிறப்பு விருந்தினர்கள் நீயா நானாவில் அடிக்கடி வந்து போய்க்கொண்டிருப்பவர்கள இந்த நிகழ்ச்சியிலும்  சாரு, மோகன்,சன்ஷைன் இளங்கோ கல்லானை.

    தாத்தா பாட்டியின் பெயர்கள் கேட்டு தொடங்கப் பட்டது நிகழ்ச்சி. நல்ல காலம் பலரும் தாய் வழி தந்தைவழி தத்தா பாட்டியின் பெயர்களை சரியாகவே சொன்னார்கள். அப்பாவழி தாத்தாவின் பெயர் ஒரு பெண்ணுக்கு தெரியவில்லை. (தற்காலத்தில் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய் வழி உறவையே முன்னிலைப் படுத்துவதும், முக்கியத்துவம் கொடுப்பதும் இதற்கு ஒரு காரணமாக என்று நண்பர் ஒருவர் சொன்னார். குழந்தைகளிடம் தந்தை வழி உறவினர்களைப் பற்றி தவறான அபிப்ராயத்தை  ஒரு சில அம்மாக்கள் விதைக்கின்றனாராம். குட்டீஸ் சுட்டீஸ் பாருங்க தெரியும் என்றார். )
தாத்தா பாட்டிகளின் பெயர்களை பேரன் பேத்திகளுக்கு வைக்கும் வழக்கமும் இன்று வெகுவாக குறைந்து விட்டது. கலந்து கொண்ட பெண்களின் பெயர்களின் ஒரே ஒரே ஒரு பெண்ணுக்கு  மட்டுமே பாட்டியின் பெயர் வைக்கப் பட்டிருந்தது. தற்போது குழந்தைகளுக்கு  தமிழ்ப் பெயர் வைக்கும் பழக்கமே குறைந்து வருவதைப் பற்றியும் பேசி இருக்கலாம்.

    பள்ளியில் தமிழ்படிப்பது பற்றிய கேள்வி எழுந்தது. செகண்ட் லாங்வேஜாக எதை படிக்கிறீர்கள் என்று கேட்டபோது பெரும்பாலானவர்கள் தமிழையே தேர்ந்தெடுத்திருந்தது ஆறுதல் அளிப்பதாக இருந்தது. ஒன்றிரண்டு பேர் ஹிந்தி,பிரெஞ்ச் போன்ற மொழிகளை தேர்ந்தெடுத்திருந்தனர்.

    உண்மையில் தமிழக கல்வி திட்டத்தில் செகண்ட் லாங்வேஜ் என்பது ஆங்கிலம்தான். First language ல்தான் அரசால் அங்கீகரிக்கப் பட்ட மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க வாய்ப்பு உண்டு. முதல் மொழி ஆங்கிலம்தான் என்று நினைத்து, அனைவரும் அறியாமலே பேசினர்.

   தமிழ்நாடு அரசு கல்வி திட்டத்தில் வழக்கமாக Part I. தமிழ் மற்றும் பிற மொழிகள் Part II ஆங்கிலம்தான் வேறு மொழி தேர்ந்தெடுக்க வாய்ப்பு இல்லை. ஆங்கில வழிக் கல்வி என்பதால் முதல் மொழி ஆங்கிலம் என்று தவறான புரிதல் காணப்படுகிறது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இது போன்ற மனநிலையை வளர்த்திருக்கின்றன. கோபிநாத் இதை அறியாதது ஆச்சர்யமே.


   ஹிந்தியை எடுத்துப் படித்த ஒரு பெண்ணிடம் நிகழ்ச்சி பற்றி வாழ்த்து சொல்லும்படி கேட்க அந்தப் பெண் தடுமாறினார்.மதிப்பெண்களுக்காக பிற மொழி எடுப்பவர்களை, அது அந்த மொழியையும் ஏமாற்றும் செயல் என்று  கோபிநாத் கண்டித்தது ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

 பள்ளியில் பாடப் புத்தகத்தில் படித்த திருக்குறளை தவிர வேறு குறட்பாக்களை அறியாதவர்களாகவே பலரும் இருந்தனர்..அவர்கள் மட்டுமல்ல நம்முடைய நிலையும் அதுதான்.. எளிதில் மனப்பாடம் செய்யக் கூடியதாகவும் முழு மதிப்பெண்கள் கிடைக்கும் என்பதாலும் திருக்குறள் இந்த அளவுக்காவது தெரிந்து வைத்துக் கொள்ளப் பட்டிருக்கிறது..(12ம் வகுப்புவரை ஒவொரு வகுப்பிலும் 50 திருக்குறளாவது மனப் பாடப் பகுதியாக வைத்து விடலாம்) 

  பாரதி பாடல்களைப் பற்றிக் கேட்டபோது இன்னும் மோசம்.எத்தனையோ திரைப்படங்களில் பாரதியின் பாடல்கள் இடம் பெற்றிருந்தபோதிலும் அவற்றை நினைவு கூற முடியாமல் தடுமாறியது ஏமாற்றம் அளித்தது 

    உணவு முறையில் நகர்ப் பகுதிகளில் கூட இட்லி தோசை சாப்பிடும் பழக்கமே இன்னும் இருப்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது என்பதை கோபி குறிப்பிட்டபோது சாரு நிவேதிதா நமது பார்பரிய உணவான கம்பு,கேழ்வரகு,திணை வகைகளை நாம் மறந்து விட்டோம் என்றார்.

   மேலும் சாரு  இன்றைய தலைமுறையினர் இலக்கியம் படிப்பது இல்லை  என்று ஆதங்கப் பட்டார். ஒரு மொழியின்  அடையாளமே இலக்கியம்தான். அதை இன்றைய தலை முறையினர் விரும்பவதில்லை. சினிமா, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் தமிழர்களின் அடையாளங்களை தொலைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று பெரும்பாலான  அறிவு ஜீவிகளைப் ( என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களைப்) போல குற்றம் சாட்டினார். எவ்வளவு புகழ்பெற்ற எழுத்தாளர்களாக  இருந்தாலும் எந்த பதிப்பகமாக இருந்தாலும் 2000 பிரதிகளுக்கு மேல் விற்பதில்லையாம் (பாவம் அவர் கவலை அவருக்கு).இலக்கியம் படிக்காதவர்களை என்னதான் பட்டங்கள் பெற்றிருந்தாலும் Illiterate என்று தன் வழக்கமான பாணியில் தாக்கினார்.

    சிறப்பு அழைப்பாளர் இளங்கோ தமிழர் அடையாளங்கள் முற்றிலுமாக அழிந்து விடவில்லை என்றார். மராத்தி போன்ற மொழிகள் தங்கள் எழுத்துருக்களைக் கூட இழந்து விட்டன. ( அப்படி தமிழும் தன் எழுத்துருவை  இழப்பதற்கான வழிமுறைய தமிழ் ஹிந்துவில்  நமது ஜெ.மோ குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது) ஆனால் தமிழ் பல்வேறு தாக்குதல்களையும் இன்று வரை சமாளித்து நிலைத்திருப்பது உண்மையில் தமிழ் மொழியின் சிறப்பே!

  தொன்மை வாய்ந்த இலக்கியங்கள் உள்ளதாக கூறப்படும் லத்தின் வடமொழி போன்றவை செம்மையான இலக்கியங்களைப் பெற்றிருந்தும் பேச்சு மொழியாக நிலைக்க முடியவில்லை என்பது உண்மைதானே! பிற மதங்களை பரப்புவதற்கு தமிழையே பயன்படுத்த வேண்டிய சூழல் இருந்ததற்கு காரணம் தமிழரின் மொழி அடையாளமே என்பது அவரது வாதம்
சிறப்பு அழைப்பாளர் சன்ஷைன்(அது என்ன பேரோ?) முன்னுக்குப் பின் முரணாக ஏதோ உளறிக் கொட்டியது பரிதாபமாக இருந்தது.

   சிறப்புவிருந்தினர் மோகன் சொன்னதுஉண்மையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. பொதுவாக இலக்கியம்  படிப்பவர்கள் அல்லது படைப்பவர்கள் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களை ஏளனமாகப் பார்ப்பதும் தாங்கள்தான் மொழியை, அதன் செழுமையை, அடையாளங்களை காப்பாற்றி வருவது போல நினைத்துக் கொள்வதும் தவறானது என்று குறிப்பிட்டார்.பெரும்பான்மையோர் விரும்பும் சினிமாவை தகாத ஒன்றாகக்  கருதுவதும் இவர்களின் குணமாக அமைந்திருக்கிறது.
உண்மைதான்! இலக்கிய  பெருந்தகைகள் சினிமாவை (அது அசட்டுத் தனமாக இருந்தாலும்)முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டிய அவசியம் இல்லை.எழுத்திலக்கியங்களை படித்தறியாத சினிமாவை ரசிக்கும் பாமர மக்களை சார்ந்தும் மொழி இன அடையாளங்கள் அமையும் என்பது உணரப்படவேண்டியதே!

   எழுத்திலக்கியம் மட்டுமே மொழியை, ஒரு இனத்தின் அடையாளங்களை  வாழ வைத்துவிடாது. வாசிக்கும் பழக்கம் இல்லாத இன்னும் சொல்லப்போனால் வாசிக்கத் தெரியாத ஏராளமானோர் இருந்திருக்கிறார்கள். இன்னும் இருக்கவும் செய்கிறார்கள். அவர்களும் உண்மையில் மொழி இன சிறப்புக்களுக்கு காரணமாக  இருந்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. 

  விளையாட்டுக்கள், பழக்க வழக்கங்கள், உணவு முறைகள் ஆடைகள் இவை எப்போது தொடர்ந்து பல காலங்களுக்கு ஒரு இனத்திற்கு அடையாளமாக அமைவது இல்லை. காலத்திற்கேற்ற அவ்வப்போது இவற்றில் மாறுதல் வருவது இயல்பானதே. 
  ஆனாலும் முற்றிலுமாக தமிழன் தன் அடையாளங்களை இழந்து விடமாட்டான் என்றே நம்புகிறேன்.
நிகழ்ச்சி உணர்த்தியதும் இதுவாகவே இருக்கவேண்டும் என்றே கருதுகிறேன்.

**********************************************************************************************
கொசுறு: சிறப்பு விருந்தினர் மோகனின் தாய்மொழி தெலுங்கு. பன்னிரண்டு வயதில் தமிழ்நாட்டுக்கு வந்தாராம்.   நான்கு ஆண்டுகள் தமிழ் கற்கமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தாராம். அதன் பின்னர் தமிழின் பால் ஈர்க்கப்பட்டு தமிழ் கற்று எழுத்தாளராகவும் திகழ்கிறார். தன் ஆழமான சிந்தனைகள்  தமிழில்தான் தோன்றுவதாகவும் அதுதான் தமிழின் வலிமை என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மகிழ்ச்சியாக  இருந்தது.

************************************************************************************************************

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

நீயா?நானா?மனைவியுடன் வெளிப்படையாக பேசலாமா?

  நீ...........ண்ட நாட்களாயிற்று நீயா நானா பற்றி எழுதி. நீயா நானா சமீப காலங்களில் சுவாரசியம் குறைந்து வருவதை அறிய முடிகிறது. பேசப்படும் தலைப்புகள் ஏற்கனவே பேசிய தலைப்புகளோடு ஒத்து இருப்பதும் ஒரு காரணம். ஒரே நிகழ்ச்சி நீண்ட நாட்களாக நடந்து வந்தால் என்னதான் சுவாரசியமாக கொண்டு சென்றாலும் சலிப்பு ஏற்படவே செய்யும். சூப்பர் சிங்கர், நிகழ்ச்சியும் அதுபோலவே .
  குறிப்பிட்ட நிலையக் கலைஞர்கள் போல சில சிறப்பு விருந்தினர்களே மீண்டும் மீண்டும் கலந்து கொள்வது போரடிக்கத்தான் செய்கிறது. தலைப்பை வைத்தே இன்று யார் சிறப்புவிருந்தினராக இருப்பார்கள் என்பதை ஓரளவிற்கு ஊகித்து விட முடிகிறது. அவர்கள் என்ன கருத்து சொல்வார்கள் என்பதும் ஊகிக்கக் கூடியதே!

    கடந்த ஞாயிறன்று நீயா நானாவில் கணவன்/மனைவி அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்வது பற்றிய விவாதம் நடைபெற்றது. எல்லாவற்றையும் மறைக்காமல் கணவன் மனைவி இடமும் மனைவி கணவனிமும் ஒளிவு மறைவின்றி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஒரு தரப்பினரும் மறைக்கக் கூடாது என்று இன்னொரு தரப்பினரும் பேசியதில் இரண்டு பக்கமும் சில நியாயங்கள் இருக்கத் தான் செய்தன.

    சாலையில் சென்ற அழகான பெண்/ ஆணைப் பார்த்ததையும் ரசித்ததையும் நாங்கள் பகிர்ந்து கொள்வோம். அப்படி பகிர்ந்து கொள்வதுதான் நேர்மை என்று ஒரு சாரர் சொன்னதை உண்மையில் அவர்களே மனமறிந்து ஏற்றுக் கொள்வார்களா என்பது கேள்விக் குறியே! கணவன்  சொல்வதை பெண்கள் வேண்டுமானால் அவ்வளவாக பொருட்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் மனைவி தான் ஒரு ஆணை ரசித்தேன் என்று சொல்வதை கணவன் முழு மனதுடன் ஏற்றுக் கொள்வது என்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவே.

    சிலர்  மனைவிடம் தனது பொருளாதார நிலையை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என தெரிவித்தனர் . தான் வாங்கும் சம்பளத்தைக் கூட சொல்வது கூட அவசியமில்லை என்று கூறினர். காரணமாக பலரும் சொன்னது தன் தாய் தந்தையருக்கு,அண்ணன் தம்பிக்கு, நண்பருக்கு பண உதவி செய்வதை மனைவி தடுத்துவிடுவார் என்பதே அது. ஆனால் அவற்றை சொன்னால் நாங்கள் தடுக்கவா  போகிறோம் என்பது எதிர் தரப்பினர் வாதம் (உண்மையாகவா?) சிந்தித்துப் பார்த்தால்  இப்படி சொல்வதற்கு காரணம் தன் மீது கொண்டுள்ள அவநம்பிக்கையே! மனைவி சொன்னால் அதைக்கேட்டு நாம் உதவும் எண்ணத்தை மாற்றிக் கொள்வோமோ என்ற நம்பிக்கை இன்மையே இப்படி யோசிக்க வைக்கிறது.

  குடும்பத்தின்  நிதி நிலையை கணவன் மட்டுமே கையாள்வது என்பது ஏன் சரியல்ல என்பதை ஒருபெண் அழகாக சொல்லி விட்டார். தன் கணவர் தன் சம்பளம் பற்றியோ வங்கிக் கணக்கு பற்றியோ ATM பாஸ்வோர்ட் போன்றவை தெரியாததல் ஏற்பட்ட இன்னலை விவரித்தார். கணவனுக்கு  தீடீர் விபத்து நேர்ந்தபோது கணவன் சுய நினைவின்றி மருத்துவமனையில் கிடக்க, செலவுக்கு பணம் இன்றி அவதிப் பட்டதை விவரித்தார். தன உறவினர் நண்பர்களின் உதவியோடு சமாளித்து விட்டாலும் கணவன் சுயநினைவுக்கு வந்த பின் வங்கியில் பணம் எடுத்து பிரச்சனையை தீர்த்ததை குறிப்பிட்டார

   உண்மையில் ஆண்களுக்கு  இது ஒரு பாடம். கணவன்  தான் இல்லாத நேரத்தில் எதிர்பாராமல் குடும்பத்திற்கு ஏற்படும் பணத் தேவையை சமாளிக்க இந்த விஷயத்தில் ஒளிவு மறைவு இன்றி நடந்து கொள்ளவேண்டியது அவசியம்தான். மனைவி வங்கிக்கு இது வரை செல்லாதவராகவோ, ATM போன்றவற்றை பயன்படுத்த தெரியாதவராகவோ (எதுக்குங்க வம்பு பெண்கள் ATM பக்கம் போகாமல் இருப்பதே நல்லதுன்னு சொல்லறீங்களா?) இருந்தாலும், ஏன்? அறிந்து கொள்ள ஆர்வம் காட்டாதவராக இருந்தாலும் இவற்றை கட்டாயம் சொல்லிவைக்கவேண்டும் என்பதை நிகழ்ச்சி பார்த்த அனைவரும் உணர்ந்திருப்பார்கள்.
(ஒரு சின்ன சர்வே படிவம் இந்த பதிவோட இறுதியில கொடுத்திருக்கேன். கட்டாயம் அதுல கலந்துக்கோங்க)

  ஆண்கள்  மட்டுமல்ல  வேலைக்கு செல்லும் பெண்கள் சிலரும்  தன் வரவு செலவு முழுவதையும் கணவனிடம் சொல்வதில்லை. அது பற்றி நிகழ்ச்சியில் பேசப்படவில்லை.  அரசு பணியில் உள்ளவர்களுக்கு சம்பளம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் ECS முறை ஏழு எட்டு ஆண்டுகளாகத்தான் நடைமுறையில் உள்ளது. இம்முறை அறிமுகப் படுத்தப் பட்டதை பணிபுரியும் பெண்கள் நிறையப் பேர் விரும்பவில்லை. காரணம் நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. சிலர் கணவனுக்கு தெரியாமல் பிறந்த வீட்டிற்கு உதவுவது தனக்கு புடவை நகை போன்றவற்றை வாங்கிக் கொள்வது ( புடவை, நகை புதுசா பழசான்ன பெரும்பாலான கணவன்மார்களுக்கு கண்டுபிடிக்க தெரியாதாம்! ) தம்பி தங்கைகளுக்கு அம்மாவுக்கு உதவுவது  வழக்கம். ECS நடைமுறைப் படுத்தப்பட்டபின்  வங்கிக் கணக்கில் ஏற்றப்படும் பணத்தை விருப்பப்படி கையாள முடிவதில்லை. ஏனனில் ATM அட்டை எப்போதும் கணவன் வசம் இருப்பதே! முன்பெல்லாம் DA நிலுவை, சரண்டர், பி.எஃப் கடன் தொகை போன்ற கூடுதல் வரவை வீட்டில் சொல்லாமல் தவிர்க்க முடியும். இப்போது அம்மாதிரி செய்ய முடிவதில்லை என்று ஒருசிலர் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

   வேலைக்கு  போகும் பெண்கள் மட்டுமல்ல வீட்டில் இருக்கும் பெண்களும் கணவனுக்கு தெரியாமல் சீட்டு கட்டுவது,பொருட்கள் வாங்குவது என்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு குடும்பத் தேவையை நிறைவேற்றுவதற்காகவே இருக்கும்.

   அலுவலக ஆண் பெண் நட்பு பற்றி பகிர்ந்து கொள்வது பற்றியும் பேசப்பட்டது. அலுவலகத்தில் இரு பாலரும் சகஜமாக பேசிக் கொள்வதும் கிண்டலடிப்பதும் சகஜம்தான் என்றாலும் அதை அப்படியே வீட்டில் பகிர்ந்து கொள்வது நல்லதல்ல என்பதை ஐ.டி யில் பணிபுரியும் சொன்னது குறிப்பிடத்தக்கது. தனது பாசோ அல்லது சக ஆண் நண்பரோ தன்னை,அழகை உடையை புகழ்ந்து சொன்னதை அப்படியே கணவனிடம் சொன்னால் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் அனேக ஆண்களுக்கு இருக்காது. அதை  பொருட்படுத்தமாட்டோம் என்று சொல்பவர்களும் மேடைக்காக சொல்வார்களே தவிர உள்மனதின் வெளிப்பாடு அல்ல அது. இது பெண்களுக்கும் பொருந்தும். அதனால் எவற்றை சொல்ல வேண்டுமோ அவற்றை சொன்னால் போதும் என்பது அப்பெண்ணின் கருத்தாக இருந்தது.
    உதாரணத்திற்கு  அந்தப் பெண்மணியும் அவர் மகளும் ஒவ்வொரு நீயா நானா நிகழ்ச்சியிலும் கோபிநாத்தின் உடையைப் பற்றி பேசுவார்களாம்.அது தன்கணவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது என்றார்.

      வெளிப்படையாக எதையும் பேசுவேன் என்று சொல்லும் ஆண்கள் கூட, தன் மேலதிகாரி தன்னை அவமானப் படுத்தியதையோ, தான் எப்படியோ ஏமாந்ததையோ,செய்த தவறையோ சொல்ல ஈகோ இடம் கொடுக்குமா என்பது கேள்விக் குறியே!

     கிரஷ் என்று சொல்லக் கூடிய அறியா வயது ஈர்ப்பை பகிர்ந்து கொள்வது ஜாலியானது. என்றனர் ஆனால் அது தேவையற்ற பிரச்சனையைக் கொடுக்கும் என்றனர் எதிர் தரப்பினர். அதுவும் உண்மைதான்.

    இறுதியாக திருமனத்திற்கு முந்தைய காதலை சொன்னதில் பிரச்சனை வந்தது என்றார் மனைவியுடன்  வெளிப்படையாக பேசவேண்டும் என்ற தரப்பில் பேசிய ஒருவர். அதனால் தன் முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டார் என்று நா தழுதழுக்க  சொன்னதுதான் நிகழ்ச்சியின் ஹைலைட். அவரது இரண்டாவது மனைவி எதிர் அணியில்  அமர்ந்திருந்தார், அவர் இதை சொல்வதற்கு முன் மனைவியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இது பற்றி தன்னிடம் அவர் மனைவி ஒருபோதும் கேட்டதில்லை என்றார். லேசான புன்னகையுடன் தன் கணவனையே பார்த்துக் கொண்டிருந்த அந்த பெண்ணின் முகத்தில் ஆயிரம் பாவங்கள் தோன்றி மறைந்தது  போல் இருந்தது 

  கடந்த கால  காதலை மறைக்காமல் சொன்னால், மனைவியும் அதுபோல் தன்னுடைய அனுபவங்களை சொல்லக் கூடும். அது என் மனதை பாதிக்கும் அதனால் நான் அவற்றை பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. அந்த அளவுக்கு நான் தாராள மனப்பான்மை கொண்டவன் இல்லை என்று ஒருவர் சொன்னது ஆண்மனதின் யதார்த்த  நிலையை பிரதிபலித்தது.
வெளிப்படையாக பேசுவது நல்லது என்று பேசிய ஒருவரே தன் மனைவிக்கு இந்த நடிகரை பிடிக்கும் என்று சொல்வது எனக்கு பிடிக்காது என்று உண்மையை உடைத்தார்

     மறைக்கக்  கூடாது என்று சொன்ன பலரும் குறிப்பிட்டது பின்னர் அது வேறு யார் மூலமாவது கணவன்/மனைவிக்கு தெரிய வருவதைவிட முன்னரே சொல்லி விடுவது நல்லது என்று கூறினர் ஒருவகையில் அது சரியென்றாலும் இயல்பான பொசசிவ்நெஸ் அதை எப்படி எடுத்துக் கொள்ளும் என்பதை கணிக்க முடியாது

   சிறப்பு விருந்தினர் ஒருவரான அபிலாஷ் சொன்ன கருத்துக்கள் என்னைப் பொருத்தவரை ஏற்புடையதாகவே இருந்தன. கணவன் மனைவி இடையே ஒருமெல்லிய ரகசிய தன்மை இருப்பது வாழ்க்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்றார். அதற்காக எதையும் வெளிப்படையாக பேசக் கூடாது என்ற அர்த்தமல்ல. வெளிப்படையாக பேசுவது,மறைப்பது இரண்டுக்கும் இடைப்பட்ட பாதையில் பயணிப்பது நல்லது என்றார். 

    ஆனால் பொருளாதார விஷயத்தை மனைவியுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.அது பல சிக்கல்களை தவிர்க்கும்.

    எத்தனையோ  ஆண்டுகளாக ஆணாதிக்க சமுதாய சூழலில் வளர்ந்த நாம், சமீப காலமாக கல்வி பொருளாதார சூழல், தொழில்நுட்பம் போன்றவை காரணமாக  சம உரிமை பற்றி அறிவு பூர்வமாக ஏற்றுக் கொண்டாலும் பெண்கள் வெளிப்படையாக பேசுவதையும் செயல்படுவதையும் உணர்வு பூர்வமாக ஏற்றுக் கொள்ள இன்னும் சிறிது காலம் பிடிக்கும் என்பதை நிகழ்ச்சி உணர்த்தியது. 

****************************************************************************************
வந்ததுதான் வந்தீங்க! இந்தக்  கேள்விக்கும் பதில் சொல்லிட்டு போங்க

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

நீயா?நானா? குடியைப் பற்றி சரியாக விவாதிக்கப் பட்டதா?

      Beer இல் தொடங்கும்  Tear இல் முடியும் இதுதான் குடிகாரர்கள் வாழ்க்கை. சாதி மதம் இனம் பாரபட்சமின்றி  அடிமையாக்குவதில் மதுவுக்கு இணை ஏதுமில்லை.   கடந்த வாரம் நீயா நானாவில் குடியைப் பற்றியும் குடிகார்களைப் பற்றியும் விவாதிக்கப் பட்டது. மாதுக்களும் மதுப்பழக்கத்திற்கு மெல்ல அடிமையாக்கும் கலாசாரம் தொடங்குவதை அறிய முடிந்தது. இதில் கலந்துகொண்ட பெண்களின் முகங்களில் ஒரு கலக்கம் இருப்பது தெரிந்தது.

   கருத்துத் திலகம்  மனுஷ்யபுத்திரன்  நானும் இரண்டு ஆண்டுகளுக்கு குடித்துக் கொண்டிருந்தேன். வேறு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி அதை மறந்தேன். என்றார். குடிப்பதும் மற்ற பழக்கங்களுக்கு அடிமையாவதும் அவரவர் சொந்த விஷயங்கள் என்றாலும் பிரபலங்கள்  இதுபோன்ற தவறுகளை செய்வது தவறான முன்னுதாரணமாக  ஆகிவிடுகிறது.  புதிதாக தொடங்குபவர்களுக்கு ஏற்படும் லேசான குற்ற உணர்வையும் இது தடுத்து விடுகிறது. ஆனால் அவர் சொன்னதில் ஒரு விஷயம் 'பணி நேரம் போக மீதி நேரங்களை எப்படி செலவழிப்பது என்ற திட்டமிடலோ விழிப்புணர்வோ இல்லாததே குடிப்பழக்கம் போன்றவற்றிற்கு காரணமாக அமைந்து விடுகிறது' என்று சொன்னது  ஓரளவிற்கு ஏற்கத்தக்கதாகவே இருந்தது 

    சுபவீர பாண்டியனோ இவர்களிடம் கேட்ட பழக்கம் இருக்கிறதே தவிர இவர்கள்  யாரும் கெட்டவர்கள் இல்லை.மனைவிக்காக, மக்களுக்காக, குடும்பத்துக்காக குடியை விடுவதை விட தனக்காக குடியை விடுவதுதான் சிறந்தது  என்றது கூறியது ஒரு விதத்தில் சரியே!

     இன்னொரு சிறப்பு விருந்தினர் புகழேந்தி சொன்னது கவனிக்கத் தக்கது. எந்தக் காலத்திலும் மனிதர்கள் தன்னிலை மறக்கும்  நிலையை  விரும்புகிறார்கள். ஒருவர் பக்தியில் தன்னிலை மறக்கிறார், இன்னொருவர் காமத்தில் தன்னிலை இழக்கிறார், பலர் வேறு சிற கேளிக்கைகளில் போதை வஸ்துக்களில் தன்னிலை மறக்கிறார்கள்.  சினிமா பார்ப்பது, எப்போதும் இணையத்தில் இருப்பது இவை கூட தன்னிலை மறக்க விரும்புதலின் அம்சமே என்றார். ஆனால் அதிக பாதிப்பை ஏற்படுத்துவது போதை வஸ்துக்களின் மூலம் தன்னிலை மறத்தலே. இவற்றிலிருந்து எளிதில் விடுபட முடிவதில்லை.

   நிகழ்ச்சியில்  ஒரு பெண்மணி சொன்னது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. எல்லாம் இருந்தும்  ஏதோ இனம் புரியாத அவஸ்தையினால் தன் கணவர் அமைதியின்றி தவிப்பதைக் கண்ட இவர் குடித்தாவது கொஞ்சம் சந்தோஷமாக இருக்கட்டும் என்று குடிக்க சொல்லி வற்புறுத்தியதை  குறிப்பிட்டார். ஆனால் இன்று மதுவுக்கு அடிமையாகக் கிடக்கும் கணவனைப் பார்த்து தான் செய்தது எவ்வளவு தவறு என்று வருத்தப்பட்டுக் கொட்டிருந்தார்.

    நிறுவனத்தைப் பற்றி ஊழியர்களின் கருத்து என்ன என்று அறிவதற்கு இந்த கார்ப்பரேட் மது பார்ட்டி உதவுகிறது என்று சொன்னது சற்று அபத்தமாகத்தான் பட்டது. போலீஸ் கூட குற்றவாளிகளிடம் உண்மையை அறிய இதை  பயன்படுத்த முடியுமே!
ஆனால் பொறுப்புள்ள பதவிகளில் உள்ள ஒரு சிலருக்கு பலவீனமாக இந்த மதுப்பழக்கம் இருப்பதும் அவர்களிடம் மதுவை காட்டி காரியத்தை சாதித்துக் கொள்ள முடியும் என்பதும் கசப்பான உண்மையாகத்தான் இருக்கிறது.

   ருசியோ சுவையோ இல்லதாக சொல்லபடும்  திரவத்திற்கு அடிமையாக இருப்பது எப்படி என்பது ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. கிராமம் நகரம் வேர்பாடின்றி குடிகார்கள் என்ற தனி இனமும அவர்களுக்கென்று தனி உலகமும் நம் சமூகத்துக்குள்ளேயே இருப்பது எவ்வளவு பதிப்புகளை ஏற்படுத்துகிறது. குடிப்பதில் அளவு மீறாதவரை தவறு இல்லை என்று பெண்கள் சமாதானம் சொல்லிக் கொண்டாலும் அவர்கள் படும் இன்னல்களுக்கு அளவு ஏதுமில்லை.

     இந்தக் குடிப் பழக்கத்தினால் என்னை அவர் இழந்து விடுவாரோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது என்று சொன்னார் ஒரு பெண்மணி. எந்த அளவுக்கு அவர் வெறுத்துப் போய் இருக்கிறார் என்பதை அறியமுடிந்தது.ஆனால் அவர் அதை முகத்தில் காட்டவில்லை.

     நிகழ்ச்சி  வெறும் விசாரணையாகவும் பேட்டியாகவும் அமைந்தது போல் தோன்றியதே தவிர, அதன் தாக்கத்தை முழுமையாக நிகழ்ச்சி பதிவு செய்யவில்லை என்றே நினைக்கிறேன். டாஸ்மாக் கடைகள் பற்றிய அப்பிப்ராயங்கள் கேட்கப் படவில்லை. குடியினால் பாதிக்கப்படும் நடுத்தரக் குடும்பங்களைப் பற்றி மட்டுமே பேசப் பட்டது. 

   அன்றாடம்  சம்பாதிப்பதை எல்லாம் குடிப்பதிலே தொலைத்துவிட்டு வீட்டுக்கே ஏதும் தராமல் மனைவியை கொடுமைப் படுத்தும் குடிகர்கர்க் கணவன்களை திருமணம் செய்து கொண்டு பூவிற்று, காய்கறி விற்று   கூலிவேலை செய்து பிழைத்துக்  கொண்டிருக்கும் பெண்களை நிகழ்ச்சியில் பேச வைத்திருக்கலாம். பிள்ளைகளின் கருத்துக்களை கேட்டிருக்கலாம். கல்லூரி மாணவர்களிடத்திலும் இந்தப் பழக்கம் சகஜமாக இருப்பதை சொல்லி பெற்றோர்கள் கவனம் கொள்ள வேண்டியதை கோடிட்டாவது காட்டியிருக்கலாம்.

   சினிமா தொலைக் காட்சி போன்ற ஊடகங்களில் தந்தையும் மகனும் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது சகஜமான காட்சியாக அமைக்கிறார்கள். இதைப் பார்ப்பவர் மத்தியில் இது சாதாரண நிகழ்வுதான் போலிருக்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடும். குடிப்பழக்கம் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று சப் டைட்டில் மட்டும் போடுவதால் இதுவரை ஏதேனும் பயன் விளைந்ததாகத் தெரியவில்லை.

    கல்லூரி மாணவர்களிடத்தில் நிலவி வரும் ஓர் எண்ணம் "பீர் அடிச்சா ஒடம்பு ஏறும் என்பது". பளபளப்பு கூடும்; கன்னங்கள் மெருகேறும், என்று நண்பர்களால் உசுப்பேற்றப்பட, பீரில் ஆல்கஹால் அதிகமா இல்ல; அது குடிச்சா தப்பு கிடையாது ; டாக்டர் கூட பீர் குடிக்க சிபாரிசு பண்ணறாங்க என்று  டாக்டரே  பிரிஸ்க்ரிப்ஷன் எழுதிக் கொடுப்பது போல் பேசிக் கொள்ள, மாணவர்கள் மெல்ல அதன் வலையில் விழுகிறார்கள். "ஒரு பீருக்கே தாங்கமாட்டான் மச்சீ:" என்று கிண்டலடிக்கும் நண்பனுக்கு  தன்னை நிருபிக்க அடுத்த கட்டத்துக்குள் அடி எடுத்து வைத்து தடுமாறி விழுகிறார்கள் ஒருசிலர். புத்தியுள்ளவர்கள் மட்டும் தப்பித்துக் கொள்கிறார்கள்.   நாம சும்மா இருந்தா கூட நண்பர்கள் விடமாட்டேங்கறாங்க என்று நண்பர்கள் மேல் குற்றம் சாட்டுவது பலரின் வழக்கம். எந்த நண்பர்களை சொல்கிறார்களோ அந்த நண்பர்கள் இதே குற்றச்சாட்டை இவர்கள் மேல் வைப்பதை   அறியாமல்'  

   பிரபல பதிவர் ஜோதிஜி அவர்கள் சமீபத்தில் ஒரு திறமையான தொழிலாளியைப் பற்றியும் அவர் குடிப்பழக்கத்தைப் பற்றியும் எழுதி இருந்தார். அந்தத் தொழிலாளி இப்பழக்கத்தினாலேயே இறந்து விட
அவரது மனைவிக்கு செய்தி சொல்லி அனுப்பியபோது "இப்பவாவது செத்தானே!" என்று சொல்லி  கணவனின் உடலைக் காண முதலில் வர மறுத்துவிட்டதாக எழுதி இருந்தார். குடிகாரனுடைய இறப்பு சொந்த மனைவிக்குக் கூட வருத்தத்தை தராது என்பதை குடிகார்கள் உணர்வார்களா?

  அளவுக்கு அதிகமான சகிப்புத் தன்மையே பெண்களின் பலவீனம். அது குடிகாரக் கணவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. ஆரம்பத்தில் கணவன் குடிப்பதை அறிந்து கடும்கோபம் கொள்ளும் மனைவிமார்கள் போகப்போக சகித்துக் கொள்ளவும் அவர்களை அக்கம் பக்கம் அறியாமல் கையாள்வதற்கும் கற்றுக் கொள்கிறார்களே தவிர தீர்வை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

   மருத்துவ ரீதியாக இதற்கு தீர்வுகாண முடியமா என்பதையும்அலசி இருந்தால் நிகழ்ச்சி இன்னும் சிறப்பாகவே அமைந்திருக்கும் 

*******************************************************************
 படித்து  விட்டீர்களா?
பெட்டிக்கடை: சுவாரசியமான தகவல்கள் 

புதன், 3 ஏப்ரல், 2013

கௌரவக் கொலைகள்-மனம் கனக்கச் செய்த நீயா? நானா?


   சமீபத்தில்தான் காதலை ஏற்பவர்கள் மறுப்பவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் பிரகாஷ் ராஜ் தயாரித்த படமான கௌரவம் படத்தின் விளம்பரத்திற்காக மீண்டும் காதலையும் சாதியையும் கையில் எடுத்துக் கொண்டது 31.03.2013 அன்று நடந்த நீயா நானா? இம்முறை சிறப்பு விருந்தினர்களாக சேரன், பாலாஜி சக்திவேல் பிரகாஷ் ராஜ், ராதா மோகன், வைரமுத்துவின் மகன்  கார்க்கி ஆகியோர் கலந்து கொண்டனர். கௌரவம் படத்தின் ஆடியோ ரிலீசும் இந்நிகழ்ச்சியிலேயே  சற்று வித்தியாசமான முறையில் செய்யப்பட்டது, விளம்பரம்தான்  என்றாலும் நோக்கம் நல்லதாக இருந்தது. இறுதிவரை நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் மனம் கனத்துப் போகாமல் இருக்க முடியாது.

   வெறிகொண்ட முரட்டு வில்லனாக, அரிவாள்,துப்பாக்கி,கம்பு தூக்கி ஆக்ரோஷத்துடன் நடித்து சேர்த்த பணத்தை தோனி,அபியும் நானும், இப்போது கௌரவம் என்று உணர்வுகளை மையமாகக் கொண்டு சமூக சிந்தனையுடன் படங்களை தாயாரிக்கும் பிரகாஷ் ராஜுக்கு ஒரு சல்யூட் செய்யலாம். இந்நிகழ்ச்சி அவரின் இமேஜை  உயர்த்தவே செய்தது.

   கிராமங்களின்  அழகிய முகத்தையே  ரசித்துக் கொண்டிருந்த நாம் அதன் கோரமான சாதி முகத்தை, நிகழ்ச்சி மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியபோது நாம் இப்படிப்படிப்பட்ட சமூகச் சூழலில்தான் இன்னும் இருக்கிறோமே என்று வெட்கப் படவும் வைத்தது. வேதனைப் படவும் வைத்தது. இதில் பங்கேற்றவர்கள்  சொன்ன விஷயங்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்தது.

  இப்படியாவது  காதலிக்கத்தான் வேண்டுமா?என்ற எண்ணம் ஏற்படுவதை தடுக்க முடியவில்ல. பெண்கள் சாதிவெறி குறைவானவர்கள் என்று இதுவரை எண்ணி இருந்தேன்.  ஒரு பெண் தன் காதலுக்கு எதிராக அம்மாவும், சித்தியும் செய்த கொடுமைகளை சொன்னபோது என் எண்ணம் பொய்யாகிப் போனது 

    இதோ இந்த படத்தில் பார்க்கும் இந்த இளம் பெண்ணுக்குத்தான் எத்தனை சோதனைகள். காதலித்தவன் தலித் என்பதால் காதல் மறுக்கப்பட, பொருட்படுத்தாது  உறுதியோடு கைபிடித்தாள்.  அச்சுறுத்தல்கள் தொடர சென்னை வந்தனர் பிழைத்துக் கொள்ள. குழந்தை பிறந்த பின் செலவுகள் அதிகமாக, சமாளிக்க முடியாமல் மீண்டும் சொந்த ஊருக்கே போவது என்ற தவறான முடிவை எடுக்க, அங்கே காத்திருந்த  சாதி வெறியரால்  பறிக்கப் பட்டது  கணவனின் உயிர்.  அந்தப் பெண் கூலி வேலை கூட செய்ய  முடியாமல் ஒதுக்கி வைக்கப் பட்டதை விவரித்தபோது  அந்தப் பெண்ணின் வேதனைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அதற்கும் மேலாக  பிள்ளையின் உயிரையும் எடுத்து விடுவதாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்களாம். ஏனென்றால் அந்த சிறு பிள்ளை தலித்தின் வாரிசாம்! என்று அந்தப் பெண் சொன்னபோது அவர் முகத்தில் தெரிந்த  சமூகத்தின் மீதான கோபமும், இயலாமையும் நம்மையும் சேர்த்து உலுக்கியது. அல்லல் பட்டு ஆற்றாது அழுத அந்தப் பெண்ணின் கண்ணீர் இன்றே சுட்டுவிடக் கூடாதா அந்தக் கொடியவர்களை என்று தோன்றியது.

   இன்னொரு பெண்ணோ காதலித்து திருமணம் புரிந்த பின் தன்னை விட்டுச் சென்றபின் பிறந்த வீட்டிற்கும் செல்ல முடியாமல் குழந்தையுடன் தனியாகக் போராடிக் கொண்டு சமூக அங்கீகாரத்திற்காக  கணவனுக்காக நம்பிக்கையுடன் காத்திருப்பதை சொன்னது நெஞ்சை உருக்கியது.

   இதுதான் இப்படி என்றால் பார்வைத்திறன் மிகக் குறைவாக உள்ள பெண் தன்னைப் போலவே பார்வை அற்ற வேறு ஜாதிப் பையனை காதலிக்க  அதற்கும் பயங்கர எதிர்ப்பாம்.என்ன கொடுமை இது!  பெற்றோர்களால் அந்தப் பெண்ணுக்கு அதே ஜாதியில் நல்ல துணையை தேடிக் கொடுக்க முடியுமா? ஆனால் உறுதியோடு திருமணம் செய்து கொண்டவர்களை பிரிக்கவும் முயற்சி செய்துள்ளனர்,.பார்வையற்ற அந்தப் பெண்ணை ஏமாற்றி மீண்டும் மனம் மாற்ற முயற்சி செய்துள்ளனர். அனால் அது முடியவில்லை.பார்வை இழந்தவர்களுக்கும்  மாற்றுத் திறனாளிகளுக்கும் உபயோகமாக  இந்த சமுதாயம் ஒன்றும் செய்யாவிட்டாலும் அவர்களாக தேர்ந்துடுத்துகொண்ட வாழ்க்கைக்காவது உபத்திரவம் செய்யாமல் இருக்கக் கூடாதா. உண்மையில் இந்த சமுதாயம்தான் பார்வை இழந்து காட்சி அளிக்கிறது.

இவர்களை பார்வைத் திறன்  குறைந்த ஜோடிகளை   வைத்துத்தான் கௌரவம் படத்தின் பாடல்களை வெளியிட்டார் பிரகாஷ்ராஜ். நெகிழ்ச்சியாக இருந்தது.

   இயக்குனர்  ராதா மோகன் சொன்ன விஷயம் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு சில ஊர்களில் தாழ்த்தப் பட்டவர்கள் ஆண் நாய் வளர்க்கக் கூடாதாம். மேல் ஜாதியினர் மட்டும்தான் ஆண் நாய் வளர்க்கலாம். கீழ்  ஜாதியினரின் ஆண் நாய் மேல் ஜாதியனரின் பெண் நாயோடு சேர்ந்து விடக்கூடாது என்பதே இதற்கு காரணமாம்.அது இன்றும் நடைமுறையில் உள்ளது என்றபோது பார்த்த அத்தனை பேருமே அதிர்ந்துதான்  போயிருப்பர்.

  இயக்குனர் சேரன் பகிர்ந்த பல விஷயங்கள் அவர் மீது மேலும் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியது. சாதி மாறி காதலித்து திருமணம் புரிந்து கொண்ட ஒரு ஜோடியை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பள்ளிகளில் என்ன ஜாதி சொல்லி இருக்கிறீர்கள் என்று கேட்டார். கணவனின் ஜாதியை குறிப்பிட்டதாக சொன்னார். சாதியை மீறி மணம் செய்து கொண்ட நீங்கள் சாதியை குறிப்பிடாமல் இருந்திருக்கலாமே. என்றார். அதற்கு  அவர்கள் கட்டாயம் ஜாதியை குறிப்பிட வேண்டும் என்று பள்ளியில் சொன்னதாக தெரிவித்தார். 

   எனக்கு தெரிந்து பள்ளிகளில் சாதிகள் குறிப்பிடவேண்டிய கட்டாயம் இல்லை. குறிப்பிடாவிட்டால் Forward Community யாக கருதப் படுவார்கள் அவ்வளவே! அரசின் சலுகைகள் வேண்டும் என்பவர் சாதியை குறிப்பிட வேண்டும்.

   சேரன் தன் வாரிசுகளுக்கு பள்ளிகளில் சாதி குறிப்பிடாமல் சேர்த்திருப்பதாக தெரிவித்தது புதிய செய்தியாக இருந்தது. அவ்வாறே பிரகாஷ்ராஜும் செய்துள்ளார். கமல் ஏற்கனேவே இதை பின்பற்றி இருக்கிறார் என்பது நமக்கு தெரிந்ததுதான். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இனங்களில் பொருளாதார ரீதியாக முன்னேறியவர்கள் அதே இனத்தை சேர்ந்த  பிறருமஜாதி குறிப்பிடாமல் 

   எனக்குப் பிடித்த சேரனின் சில படங்களில் ஒன்று  பாண்டவர் பூமி. அந்தப்  படத்தில் வேற்று சாதி பையனுடன் ஓடிப் போகும்  தங்கையின் தலையை அண்ணன் வெட்டி வீசும் காட்சிக்கு கிடைத்த கைதட்டலையும் வரவேற்பையும் கண்டு இந்த அளவிற்கா சாதிவெறி இருக்கும் அதிர்ந்து போனாராம் சேரன். அந்தக் காட்சி வைத்தது தவறோ என்று வருத்தப் பட்டார். அவர்  முகத்தில் தெரிந்த வருத்தம் உண்மையானதுதான்  என்று தோன்றியது. 

  சினிமாத் துறையில் சாதி இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்று சேரனும், இருக்கிறது என்று பிரகாஷ்ராஜும் பதிலளித்தனர். பிராகாஷ்ராஜுக்கும் ஏதோ சொந்த அனுபவம் இது தொடர்பாக இருப்பதாக தோன்றியது.

   இன்னொருவர் சொன்னது இந்திய அரசியல் சட்டம் சாதியை மறுக்கவில்லை சாதிகளுக்குள் பாகுபாடு காட்டக் கூடாது என்றுதான் கூறுகிறது  என்றார். அவரே சொன்னது சாதிகள் கி,மு. விலேயே இருந்தாலும் தீண்டாமை கி.பி. 500 இல்தான் ஏற்பட்டது என்கிறார். அது சரியா  என்று ஆய்வாளர்கள்தான். சொல்ல வேண்டும் 

    வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி சாதிகள் எனக்குப் பிடிக்கும் என்றார். அவரது திருமணமும் காதல் திருமணம்தான்.  தன் காதலியின் சாதி பெற்றோர்கள் கேட்கும் வரை தெரிந்து  கொள்ளவில்லை என்று கூறியது நம்ப முடியவில்லை. ஒருவேளை தன் தாயும் தந்தையும்(வைரமுத்து-பொன்மணி வைரமுத்து) சாதி மாறி திருமணம் செய்து கொண்டிருந்தால் இத்தனை பாடல்கள் கிடைத்திருக்குமா என்ற கேள்வியை எழுப்பினார் மதன் கார்க்கி. அவர் சாதி மாற்றுத் திருமணத்தை ஆதரிக்கிறாரா இல்லையா என்பது தெளிவுபடவில்லை.

   உயர்ந்த சாதியினராக  கருதப்பட்ட  பிராம்மண சமுதாயத்திலும் சாதி மாற்றுத் காதல் திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தீண்டாமை போன்றவற்றில் நம்பிக்கை உடைய இவ்வினத்தில் கூட  கலப்பு திருமணத்தை ஆதரிப்பதில்லையே தவிர கௌரவக் கொலைகள் அளவுக்கு செல்வதில்லை. இன்னும் சொல்லப் போனால் சில காலங்களுக்குப் பிறகு ஒன்றாக சேர்ந்தும் விடுகின்றனர்.

   சினிமா கலைஞர்கள் சமூக அக்கறைகளை சினிமாவில் மட்டும்தான் காட்டுவார்கள்  என்ற பொதுவான கருத்து உண்டு. ஆனால் உண்மையாகவே  அத்தகைய சிந்தனைகள் கொண்டவர்கள் ஒருசிலர் இருக்கின்றனர்   என்ற தோற்றத்தை நீயா நானா ஏற்படுத்தியது.  அது உண்மையாகவே இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

   பல தன்னார்வ அமைப்புகளும் மகளிர் அமைப்புகளும் தீவிரமாக இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும். கல்வி அறிவும் பொருளாதார முன்னேற்றமுமே இத்தைகைய கொடுமைகளை குறைக்க வழி வகுக்கும் என்று நம்புகிறேன்.  அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை எடுக்கட்டும்.சமுதாய உறுப்பினர்களாகிய நாம் அதற்கு உறுதுணையாக இருப்போம்.

************************************************************************************



செவ்வாய், 1 ஜனவரி, 2013

மனைவிக்கு சமையலில் உதவலாமா?நீயா நானா?


 கடந்த ஞாயிறு அன்று  நீயா நானா? பார்த்திருப்பீர்கள். சமையல் செய்வதில் மனைவிக்கு உதவுவேன் என்று பெருமையுடன் சொல்பவர்கள் ஒருபுறம். உதவ மாட்டேன் என்று அகங்காரத்துடன் சொல்பவர்கள் இன்னொரு புறம்.
     தர்க்க ரீதியாக மனைவிக்கு உதவமாட்டேன் என்று சொல்பவர்கள் நிச்சயம் வெற்றி பெற முடியாது. கோபிநாத் மனைவிக்கு உதவுபவர்கள் பக்கம்தான் பேசுவார் என்பது தெரிந்ததே. கோபிநாத் மட்டுமல்ல யாராக இருந்தாலும் அதைத் தான் செய்திருப்பார்கள்.மனைவிக்கு உதவத் தேவை இல்லை என்று சொல்லி பெண்களுக்கு எதிரானவன் நான் என்று காட்டிக் கொள்ள யார்தான் விரும்புவார்கள்?. அப்படி வாதிட வந்தவர்களும் தன் பக்கம்  நியாயம் இருக்கிறது என்று நிகழ்ச்சிக்கு வந்திருக்க மாட்டார்கள். டிவியில் தலைகாட்டலாமே என்றுதான் தோற்கும் அணியில் இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்திருப்பார்கள். நியாயமான காரணங்கள் அவர்கள் பக்கம் இல்லை என்று தெரிந்தும், அவர்களை அழைத்து விட்டு கண்டிக்கிறேன்! அனுமதிக்க மாட்டேன்  என்று சொல்வதை தவிர்த்திருக்கலாம்.

   இரு தரப்பிலும் பெண்களையும் அழைத்து பேச வைத்திருந்தால் அவர்கள் கருத்தையும் அறிந்திருக்க முடியும். அல்லது உதவுபவர்கள் தரப்பினரை மட்டும் அழைத்து மனைவிக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை  வலியுறுத்தி இருக்கலாம்.

   தலைப்பு  வேறு மாதிரியும் வைத்திருக்கலாம். பெண்களுக்கு சமையலில் உதவுபர்கள் என்று மனைவியோடு தாய்,  சகோதரி இவர்களையும் இணைத்திருக்க வேண்டும். மனைவிக்கு சமையலில் உதவி செய்யும் கணவர்கள் உண்டு. தாயைப் புகழ்ந்து தள்ளும் ஆண்கள் சமையலுக்கு தாய்க்கு நிச்சயமாக உதவி இருக்க மாட்டார்கள். நமது குடும்பச் சூழ்நிலைகளில் தாய் ஒரு போதும் தன் மகனை சமையல் கட்டுக்கு அழைப்பதில்லை. விதி விலக்குகள் ஏதேனும் இருக்கலாம்.

  இதில் மனைவிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது.மனைவிக்கு  சமையலில் உதவி செய்வதில் நான் பெருமை அடைகிறேன் என்று சொல்பவர்கள். என்றேனும் அவர்கள் தாய்க்கோ சகோதரிக்கோ சமையலில் உதவி செய்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

    எந்தக் குடும்பத்திலும் தாய் தன் மகனுக்கு சமையல் செய்ய கற்றுக் கொள்ள வற்புறுத்துவது இல்லை. தாய் தன் ஆண் பிள்ளைகளுக்கு சமையலில் பெண்களுக்கு உதவ வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருந்தால் பிற்காலத்தில் அவர்கள் மனைவிக்கு உதவ எந்த தயக்கமும் இன்றி சமையல் அறையில் நுழைவார்கள். 

   ஆண் பெண் சமத்துவம் உள்ள மேலை நாடுகளில் கூட ஆண்கள் சமைக்க உதவுவார்களே தவிர முழு சமையலும் வீட்டில் செய்யும் ஆண்கள் இருப்பார்களா? தெரியவில்லை.
   சமையல்  தொழிலையே பிரதானமாகக் கொண்டவர்கள் கூட வீட்டில் மனைவி/தாய்க்கு  உதவுவார்கள் என்று சொல்ல முடியாது.

   திருமணத்திற்கு முன்பாக அம்மாவுக்கு காய்கறி வாங்கிக் கொடுக்கவாவது சென்றிருப்போமா? (அதுக்கு அப்பா போவார்?) திருமணத்திற்குப் பின் முதலில் மளிகைக் கடைக்கு காய்கறிக் கடைக்கு  சேர்ந்து செல்வோம் பின் தனியாகவும் செல்வோம். இது நடுத்தரக் குடும்பங்களில் வழக்கமாக நடை பெறுவதுதான்..வேலைக்கு செல்லும் பெண்களின் கணவர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். அங்கும் செய்யாமல் இருந்தால் அது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.

  அதுவும் மனைவி ஆரம்பத்திலேயே இதை வற்புறுத்தினால்தான் ஆண்கள் செய்வார்கள். பின்னர் அது பழக்கமாகிவிடும்,மனைவி உதவி கோரவில்லை என்றால் கணவன் கண்டு கொள்ள மாட்டான்.  ஆனால் கணவன் செய்யும் சிறு உதவிகள்கூட  மனைவியை நிச்சயமாக மகிழ்விக்கும் என்பதில் ஐயமில்லை. அதுவும் அவர்கள் உடல் நலமின்றி இருக்கும்போது செய்யும் உதவிகள் நிச்சயம் நெருக்கத்தை இன்னும் மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை. டீ போட்டுக் கொடுத்தால் கூட அவர்கள் முகம் மலரும்.

      சமயலறை பெண்களுக்கானது என்பது  நமது சமூகத்தின் 
நெடுங்கால நடைமுறை. ஆண்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் இதில் வரும் மாற்றம் தவிர்க்க இயலாதது.
 
     நம் சமுதாயம் ஆணாதிக்க சமுதாயம். இதில் ஆணுக்கொரு நீதி பென்னுகொரு நீதி என்றுதான் இருக்கிறது. பெண்ணையும் சமமாக மதிக்க வேண்டும் என்று அறிவு சொல்லும். ஆனால் மனம் அதை எளிதில் ஏற்காது. இப்போது மாற்றம் வந்து கொண்டிருக்கிறது என்றாலும் முழுமையான மாற்றம் நடை பெற இன்னும் கொஞ்சம்  காலம் பிடிக்கும்.

***************************************************************************************
   

சனி, 8 டிசம்பர், 2012

நீயா நானா?கல்லூரிப் பெண் கேட்ட பாக்கெட் மணி-அம்மாடி!

(50000 பாக்கெட் மணி கேட்ட அம்மணி)
    கடந்த  இரண்டு வார  நீயா நானா நிகழ்ச்சியில் மனதை பாதித்த இரு விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

   இரண்டு வாரங்களுக்கு முன்பு பாக்கெட் மணி பற்றிய நீயா நானா பார்த்திருப்பீர்கள். அப்பொழுது இனைய இணைப்பின்மை காரணமாக இந்தப் பதிவை வெளியிட முடியவில்லை. காலம் கடந்த பதிவானதால் சுருக்கம் மட்டும்.

  இந்த நிகழ்ச்சியில் கோபி நாத் கேட்ட கேள்விக்கு ஒரு கல்லூரி மாணவி சொன்ன பதில் பார்த்த அனைவரையும் நிச்சயம் அதிர்ச்சி அடைய வைத்திருக்கும். அந்த கேள்வி "உனக்கு அதிக பட்சம் எவ்வாவு பாக்கெட் மணி தேவைப்படும்? அதற்கு அந்த மாணவி தயக்கம் சிறிதும் இன்றி சொன்ன பதில் 'மாதம் 50000 இருந்தால் போதும். குறைந்த பட்சம் 15000 மாவது  தேவை'.
   ஏழை விவசாயிகளைப் பற்றியோ அரை வயிறு கால் வயிற்றுக் கஞ்சிக்கு அல்லாடும் ஏழைகளைப் பற்றியோ ஏன்? அரசாங்கத்தில கூட மாதம்  5000 ரூபாய் தொகுப்பூதியத்தில வேல செய்பவர்களைப் பற்றியோ கேள்வியாவது பட்டிருக்குமா அந்தப் பெண்?
    கையில் அதிகமாகப் பணம் புழங்குவது ஒரு வித அசட்டு தைரியத்தைக் கொடுக்கிறது என்பதற்கு இந்தப் பெண் ஒரு  உதாரணம். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு    தன்னைத் தன் தோழிகள் கண்ணைக் கட்டி காரில் அழைத்துச் சென்று பிறந்த நாள் கொண்டாடியதை  பெருமையாகச் சொன்னார். பெற்றோர்கள் எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. பல அசம்பாவிதங்கள் நடப்பதற்கு  நாமே வாய்ப்பளிப்பது  போல் உள்ளது இந்த நிகழ்வு.

         அந்த மாணவியைப் பார்த்து பரிதாபப் படத்தான்முடிந்தது. இந்த பெண்ணின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பயமும் ஏற்பட்டது. அவசர அவசியத் தேவைகளுக்கு அவர்களாக சம்பாதிக்கும் வரை பாக்கெட் மணி தேவைதான்.ஒரு வரை முறை இல்லாமல் பெற்றோர்களிடம் பாக்கெட் மணி எதிர்பார்க்கும் பிள்ளைகளைக் கண்டு கவலைப் படுவது நியாயமானதே. உண்மையாகவே இவ்வளவு பாக்கெட் மணி பெற்றோர்கள் கொடுக்கிறார்களா என்பது நம்ப முடியாததாகத்தான் இருக்கிறது. நீயா நானா மிகைப் படுத்துகிறதோ?

  அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகள் கூட தினந்தோறும் 5 ரூபாய் பத்து ரூபாய் பாக்கெட் மணி கொண்டுவருவது உண்டு. பெற்றோரின் கவனிப்பு இல்லாத அந்தக் குழந்தைகள் எதையாவது வாங்கி சாப்பிடுவதற்கு அதை பயன் படுத்திக் கொள்வார்கள்.

  ஆனால் பணக்கார பெற்றோர்கள் தங்கள்  பிள்ளைகளுக்கு தேவைக்கு அதிகமான பணம் கொடுத்து அனுப்புகிறார்கள். அதை கட்டுப்பாடின்றி தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து செலவு செய்கிறார்கள்.அதைப் பார்த்து நடுத்தர வர்க்கத்தினரும் அதேபோல் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். முந்தைய தலை முறையினரைவிட இந்தத் தலை முறை நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் பிள்ளைகளுக்கு பாக்கெட் மணி கொடுப்பதை பெருமையாகக் கூட கருதுகின்றனர் என்று சிறப்பு விருந்தினர் சொன்னது குறிப்பிடத் தக்கது.

   எச்சரிக்கை: இந்த நிகழ்ச்சியைப் பார்த்த கல்லூரி மாணவ மாணவியர்  இன்னும் அதிகமான பாக்கெட் மணி கேட்கக் கூடும் 

**************************************************************************************************************
   கடந்த  வார நீயா நானாவில் மன உளைச்சல் பற்றிப் பேசியதில் கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களின் மகன் சொன்ன விஷயங்கள் நெஞ்சை உறுத்தியது.

  "எங்க அப்பா மாதிரி நான் ஆகிடக் கூடாது. அதனாலதான் இலக்கியத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு சராசரி மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். காரணம் எங்கப்பா வாழ்க்கையில ஜெயிக்கல. உங்கப்பா மாதிரி நீ வந்துடக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லி சொல்லி என்னை வளர்த்தாங்க" என்று சொன்னபோது அளவிடமுடியாத அளவுக்கு வருத்தம் ஏற்பட்டது.இதை அந்தக் கவிஞன் கேட்க நேர்ந்திருந்தால் அவரது  மன நிலை என்னவாக இருக்கும்?

     ஒருவர் எவ்வளவு புகழ் பெற்றிருந்தாலும் அதனை பொருளாக மாற்றத் தெரியா விட்டால் குடும்பத்தில் ஏற்படும் மன உளைச்சலை தவிர்க்க இயலாது  என்பதற்கு கவிஞர் விக்ரமாதித்யன் உதாரணம். இப்படி இன்னும் எத்தனை இலக்கிய வாதிகள் இருக்கிறார்களோ.

இதோ விக்ரமாதித்யனின் ஒரு கவிதை 

                        கூண்டுப் புலிகள்

                     நன்றாகவே பழகிவிட்டன
                     நாற்றக் கூண்டு வாசத்துக்கு;
                     பெரிதாக ஒன்றும் புகார் இல்லை;
                     நேரத்துக்கு இரை;
                     காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி;
                     குட்டி போட சுதந்திரம் உண்டு;
                     தூக்க சுகத்துக்கு தடையில்லை;
                     கோபம் வந்தால்
                     கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்;
                     சுற்றிச் சுற்றி வருவதும்
                     குற்றமே இல்லை;
                     உறுமுவதற்கு உரிமையிருக்கிறது;
                     முகம் சுழிக்காமல்
                     வித்தை காண்பித்தால் போதும்;
                     சவுக்குச் சொடுக்குக்குப் பயந்து
                     நடந்து கொண்டால் சமர்த்து;
                     ஆதியில் ஒரு நாள்,
                     அடர்ந்த பசியக்காட்டில்
                     திரிந்து கொண்டிருந்தனவாம்;
                     இந்தக் கூண்டுப் புலிகள்!

************************************************************************************************