என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 20 நவம்பர், 2018

சிறு துளி கஜா புயல் நிவாரணப் பொருட்கள்

        

சென்னை மாவட்ட கல்வித் துறை சார்பாக கஜா புயல் நிவாரணப் பொருட்கள் திங்கள் அன்று அனுப்பப்பட உள்ளதாகவும் பொருட்களை கொண்டு வந்து மாவட்ட அலுவலகத்தில் சேர்க்கும்படியும்  வாட்ஸ் ஆப் மூலம்  முந்தைய தினம் மாலை  தகவல் தெரிவிக்கப் பட்டிருந்தது. அனைத்து பள்ளிகளுக்கும் வட்டாரக் கல்வி அலுவலர் மூலமாக விருப்பம் உள்ளவர் நிவாரணப் பொருட்கள் வழங்கும்படி  பள்ளிகளுக்கு வேண்டுகோள் விடப் பட்டிருந்தது..  பொருட்கள் வரச்சற்று தாமதம் ஆனது.  அதற்குள் சிறிய  மனவருத்தம் ஏற்படுத்தக் கூடிய நிகழ்வு.
புறந்தள்ளிவிட்டு கையும் பேசியுமாக களம் இறங்கினர் வட்டாரக் கல்வி அலுவலர்கள்.அப்போது மணி 11.00 க்கு மேல் ஆகி விட்டது . அடையார், திநகர், எழும்பூர், மைலப்பூர் திருவல்லிக்கேணி ராயபுரம், பெரியமேடு  புரசைவாக்கம்  ஜார்ஜ் டவுன் பெரம்பூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் எங்கு தட்டினால் உடனே திறக்கும் எங்கு சிறிது நேரம் தட்ட வேண்டும் என்பதை அறிந்து தொலைபேசித் திரையில் விரல்களால் தட்ட ஆரம்பித்தனர்.     


ஆச்சர்யம்! அடுத்த ஒரு மணி நேரத்தில் நிவாரணப் பொருட்கள் தனித் தனிப் பள்ளிகளாகவும் இணைந்தும் வரத் தொடங்கி விட்டன.  வாட்டர் பாட்டில்கள் அரிசி, பருப்பு வகைகள் சமையல் எண்ணெய்ஆடைகள் போர்வைகள்  மெழுகு வர்த்திகள் பிஸ்கட், ப்ரட் பாக்கெட்டுகள் பாத்திரங்கள் மருந்துகள், சானிடரி நாப்கின்ஸ் என் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வந்து குவித்தனர்.


மிகக் குறுகிய காலத்தில் பள்ளிகளுக்கு தெரிவித்து அவர்கள் ஆசிரியர்களுக்கு தெரிவித்து பின்னர் கடைகளுக்கு சென்று நிவாரணப் பொருட்களை  வாங்கி அவற்றை ஒரிடத்தில் வைத்து பேக் செய்து அதன் மீது பெயர் எழுதி  ஒரு வண்டியில் ஏற்றி தலைமை இடத்திற்கு கொண்டு சேர்த்த வேகம் அசாதரணமானது.  நிச்சயம் எண்ணிப் பார்க்காதது . எப்படி சாத்தியமாகப்  போகிறது என்று நினைத்தது சாத்தியமானது.
 இதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. கொடுக்கப் பட்ட அவகாசத்திற்குள் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்ட ஆசிரியர்/ஆசிரியைகளின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியன . அடையார் வட்டாரத்தில் உதவி பெறும் பள்ளிகள் சார்பாக 85,000 மதிப்பிலான நிவாரணப் பொருட்களும் நர்சரி பள்ளிகள் சார்பாக  ரூ65000 மதிப்பிலும் நிவாரணப் பொருட்கள் வழங்கப் பட்டன. இதே போல சென்னையில் உள்ள பத்து சரகங்களிலும் நிவாரணப் பொருட்கள் குறுகிய நேரத்தில் பெறப்பட்டுள்ளன
  
     இது தொடக்கக் கல்வி மட்டுமே. இது மட்டுமல்லாது அரசு, உதவிபெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகளும் நிவாரணப் பொருட்களை ஆச்சர்யமூட்டும் வகையில் கொண்டு சேர்த்துள்ளனர்.

     இவை அனைத்தும்  கஜா புயல் பாதிப்பின் அளவைப் பார்க்கும்போது சிறு துளியே . தேன் துளி சிறிதென்றாலும் இனிக்காமலாபோகும்? எதிர்பார்த்ததை விட அதிக ஒத்துழைப்பு நல்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி அனைத்து சென்னை வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் பாராட்டுகள்

வெள்ளி, 9 நவம்பர், 2018

குமுதத்தில் என் கதை எக்சல் சவால் விடை+96 படம் எப்படி?


பெட்டிக் கடை பகுதி நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப் படுகிறது

     கடந்த வாரங்களில்  தோசையில் சாதி பற்றிய செய்தி  ப்ரதான இடத்தைப் பிடித்திருந்தது.
அதனைப் பற்றிய வேறு ஒரு பார்வையில்  ஒரு பக்கக் கதை ஒன்றை எழுதி குமுதத்திற்கு அனுப்பி இருந்தேன். இந்த வார குமுதம் இதழில் வெளியாகி இருந்தது.மிகக் குறுகிய காலத்தில் பிரசுரிக்கப் படும் என நான் நினைக்க வில்லை. காலம் தாண்டி விட்டால் அவுட் டேட்  ஆகி விடும். வெகு விரைவாக வெளியிட்ட குமுதம் ஆசிரியர் திரு பிரியா கல்யாணராமன் அவர்களுக்கு நன்றி.
இதோ கதை.

இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இணையத்தின் பரபரப்பான  பேசப் பட்டுக்கொண்டிருந்தது வே. மதிமாறனின் தோசையில் சாதி உண்டு என்ற பேச்சு, அதன் அடிப்படையில் எழுதப் பட்டதே இந்த ஒரு பக்கக் கதை


நாம ஆதிக்க  சாதியாம்மா?

ஸ்கூல் வேனில் இருந்து இறங்கி ஓடி வந்து டிபன் பாக்சை சிங்கில்போட்டுவிட்டு வந்ததும் வராததுமாக “அம்மா! நாம ஆதிக்கசாதியாம்மா? என்று கேட்ட தன் பெண் ரம்யாவை அதிர்ச்சியுடன் பார்த்தாள் சித்ரா.
”என்னடி சொல்ற”
”இல்லம்மா நீ எனக்கு மத்தியானம் தோசை கொடுத்து அனுப்பி இருந்தஇல்ல! அதை
பாத்துட்டு என்ஃப்ரண்ட் ஹேமாதாம்மா அப்படி கேட்டா”
”ஏன் அப்படிக் கேட்டாளாம்?”
”நான் கொண்டு போன தோசை ரொம்ப மெல்லீசா இருந்ததாம். ஆதிக்க சாதிக்காறங்கதான் அப்படி தோசை செய்வாங்களாம். ஃபேஸ்புக்கு வாட்ஸப்புல யாரோ சொன்னங்களாம். சொல்லும்மா! நாம ஆதிக்க சாதியா?”
”அடி போடி! தோசையில எங்கிருந்துடீ சாதி வந்தது?. காலையில நாலுகரண்டி மாவுக்கு வக்கில்ல. ரெண்டு கரண்டி மாவுதான் இருந்தது. அதுல எத்தன தோசைதான் வரும்? தடியா வார்த்தா ஒருத்தருக்குதான் கொடுக்கமுடியும். சன்னமாக தோசை வார்த்தாதான் உனக்கு ரெண்டு, உன் தம்பிக்கு ரெண்டு, இதோ வேலை வெட்டிக்கு போகாம ஒக்காந்திருக்காரே உங்கப்பா! அவருக்கு ரெண்டு கொடுக்க முடிஞ்சது.”
”அப்ப உனக்கு இல்லையாம்மா”.
”எனக்கெதுக்கு? உங்களுக்கு இருந்தா போதாதா?”

”நாளையில இருந்து இன்னும் மெல்லிசா வார்த்துக் குடும்மா உனக்கும் ரெண்டு தோசை வரட்டும்” என்ற ரம்யாவை இழுத்து அணைத்துகொண்டாள் சித்ரா
-----------------------------------------------------------------------------------------------------------------
    நேற்று சன் டிவியில்  96  படம்
ஒளி பரப்பப் பட்டது. ஆஹா ஒஹோ என்று பாராட்டப் பட்ட படம் ஆயிற்றே. என்று பார்க்க விரும்பினேன். படம் மிக மெதுவாக சென்றது. படத்தில் அனைவரும் ஆரம்ப கால மணிரத்தினம் பட பாத்திரங்கள் போல குசுகுசுவென்று ஹஸ்கி வாய்சில் பேசிக் கொண்டிருந்தனர்  முதல் காதலை தெய்வீகக் காதலாகக் கருதி பின்னர் சிலகாலத்திற்குப் பின் யதார்த்தத்தை உணர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களை உசுப்பி விட்டு அடே மடையா உன் முதல் காதலை எப்படி மறந்தாய் என்று பழைய நினைவுகளைக் கிள்றி விட்டு மாய உணர்வை(உண்மையில் கிளுகிளுப்பை)  40 வயதுக் காரர்களுக்கு ஏற்படுத்தி ம்ற்ற குறைகள் எல்லாம் மறந்து நெகிழ்ந்து கரைந்து  பேச வைத்திருப்பது டைரக்டரின் வெற்றியாக இருக்கலாம். .
       மாசற்ற முதல் காதலைக்  கொண்ட கதாநாயகனாக தன்னையே வரித்துக் கொண்டு தன்னை ஈர்த்தவளை முகநூலிலும் தேடிக் கொண்டிருந்தனராம் சிலர். சில வாட்சப் க்ரூப்கள் கூட உருவாக்கப் பட்டதாக செய்தி . ஆனால்  இப்படிக் பழைய காதலை தேடி ஒடுவது விபரீதத்தில்தான் முடிய வாய்ப்பு இருக்கிறது  மேலும் இது போன்ற நிகழ்வுகள் சகஜமானது என்ற உணர்வை ஏற்படுத்தி விடக் கூடிய அபாயம் உண்டு. இப்படத்தை கொண்டாடும் எந்த ஆணாவது தன் மனைவி தான் படித்த பள்ளி மாணவர்களுக்கான் ரீயூனியன் நிகழ்வுக்கு அனுப்புவார்களா?
இப்படித்தான் ஆட்டோ கிராப் படம் வரும்போதும் அந்த வயதுக்காரர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள்.
அமரக் காதல் தெய்வீகக் காதல் புனிதக் காதல் போன்றவற்றில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை என்பதால் இப்படம் ஈர்க்கவில்லை.
--------------------------------------------------------------------------------------------------------
சென்ற பதிவில் எக்சல் சவால் ஒன்றைக் கேட்டிருந்தேன்.  அதன் விடை
அதைனை ஏற்கனவே படிக்காதவர்கள்  கீழே க்ளிக்குக
ஓரு Excel சவால்
மதுரைத் தமிழன். வெங்கட் நாகராஜ் இருவருமே சரியான விடையை கூறி இருந்தனர். திண்டுக்கல் தனபாலன் சுருக்கு விசைகளை மட்டும் பயன் படுத்தி  இருந்தார். .

மதுரைத் தமிழனின் விடை
முதலில் Month செல்லில் இருந்து கிழே 300 என்ற மதிப்பி இருக்கும் செல்வரை செலக்ட் செய்து கொள்ள வேண்டும்.
அதன் பின் மேலே உள்ள மெனுவில் find&select என்பதை க்ளிக் செய்ய வேண்டும் அதில் உள்ள சப் மெனுவில் Go To Special என்பதை க்ளிக் செய்தால் ஒரு சிறிய பாப் அப் விண்டோ வரும் அதில் Blanks என்பதை தெரிவு செய்தால் காலியாக இருக்கும் செல் எல்லாம் செலக்ட் ஆகி இருக்கும். அதன் பின் find&select என்பதை மீண்டும் க்ளிக் செய்ய வேண்டும் அதன் பின் அதில் உள்ள Replace என்பதை தெரிவு செய்து அதில் NIL என்று டைப் செய்து Replace all என்பதை க்ளிக் செய்தால் காலியான செல் எல்லாம் NIL என்ற வார்த்தைகளால் நிரம்பிவிடும் அவ்வளவுதான்


Go To Special அற்புதமான வசதி வெவ்வேறு வகையில் இதன் மூலம் செல்களை தேர்ந்தெடுக்க முடியும் 

Go To Special செல்லாமலே நான் சொன்ன செயல்பாட்டிற்கு சாதரண  find and replace போதும்

அட்டவணையை முழுவதுமாக தேர்வு செய்து  find and Replace பயன் படுத்தலாம். findல் தேட வேண்டியதை காலியாக விட்டு விட்டுவிட்டு Replace ஐ பயன்படுத்தி அதில் NIL என்று டைப் செய்து Replace all க்ளிக் செய்தால் காலி செல்கள் முழ்வதும் செல்களால் நிரப்பப் பட்டு விடும்.
இந்த வீடியோவை பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்



------------------------------------------------------------------------------------------

    வலைப்பதிவு நண்பர் தளிர் சுரேஷ்  நம் அனைவருக்கும் அறிமுகமானவர்தான். வலைப்பதிவர்களில் ஆரம்ப காலங்களில் சிலரை குறை மதிப்பீடு செய்ததுண்டு. அவர்களில் ஒருவர் சுரேஷ்
காரணம் அவர் முதலில் தன் பதிவுகளோடு சேர்த்து காப்பி பேஸ்ட் பதிவுகள் அதிகம் போட்டு வந்தார். அதனால் அவரது உண்மையான திறமை ஐயத்திற்கு இடமாகி விட்டது.  ஆனால் பின்னர் காப்பி பேஸ்ட் பதிவுகளுக்கு தலைமுழுகி விட்டு சொந்த படைப்புகளை எழுத ஆரம்பித்தார். தமிழ்மணம் திரட்டி அவரை நிராகரித்த போதும் சளைக்காமல் எழுதினார்.  (இன்று தமிழ் மணமே தள்ளாடிக் கொண்டிருக்கிறது) பலரின் பதிவுகளுக்கு சென்று கருத்திட்டு தன் இருப்பை காட்டிக் கொண்டே இருந்தார். எழுதிக் குவித்தார் என்று சொல்வார்களே அது அவருக்கும் பொருந்தும். 

     நகைச்சுவை சிறுகதைகள் சிறு கவிதைகள் சிறுவர் கதைகள்  ஆன்மீகம் என்று அனைத்தையும் எழுதித் தள்ளிக்  கொண்டிருக்கிறர். ஆனால் அவரது பலம் ஜோக்ஸ் எழுதுவது என்பதே என்  கருத்து. குமுதம் விகடன், தமிழ் ஹிந்து பாக்யா தினமலர் போன்ற பத்திரிகைகளில் அனைத்திலும் அவரது நகைச்சுவை துணுகுகள் இடம் பெற்றுக் கொண்டு இருகின்றன.  வலைப் பதிவர்கள் பலர் எழுதுவதைக்  கைவிட்ட நிலயில் இன்றும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது அவரது சிறப்பு.  தமிழ் ஹிந்துவில் பன்ச் பச்சோந்ஜி பகுதியில் அதிக அளவில் இடம் பெற்றது இவரது பஞ்ச்கள்தான் என நினைக்கிறேன். தகவல் தெரிவித்த வாட்சப் குழுமத்திற்கு நன்றி என்ற செய்தியை வெளியிடுவார்.பத்திரிகையில் வெளியாவது அவருக்கு பிறர் சொல்லித்தான் தெரிய வருகிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. படைப்பாளிகளுக்கு மின்னஞல் மூலமாகவாவது படைப்பு வெளியிடப்படுவதை தெரிவிக்கலாம்
 தற்போது தேன்சிட்டு என்ற மின்னிதழையும் வெளியிட்டு அசத்தி வருகிறார்.
 எழுத்தில் கொஞ்சம் புதுமையைக் கையாண்டால்  இன்னும் சிறப்பான இடத்தைப் பெற வாய்ப்பு உண்டு வாழ்த்துகள் சுரேஷ்

-----------------------------------------------------------------------------------------------------

முக ராசியும் முகநூல் ராசியும்
முக ராசிதான் இல்லை என்றாலும் முகநூல் ராசியாவது இருக்குமா என்றால் அதுவும் இல்லை 
  முகநூலில் வெற்றிகரமாக இயங்க திறமை வேண்டும்  . .  எனது முகநூல் நட்புகளின் எண்ணிக்கை 380 மட்டுமே நான் பெரும்பாலும் யாருக்கும் நட்பு அழைப்பு விடுப்பதில்லை.  நண்பர்களின் பதிவுகளுக்கு கம்மெண்டும் லைக்கும் போடுவதுண்டு.    எவ்வளவு பேர் நாம போட்ட  பதிவை படித்தார்கள் என்று சொல்ல முடியாது. லைக்குகள் அதன் அளவுகோலாக வைத்துக் கொண்டால்.  முகநூல் நமது தன்னம்பிக்கையை குலைத்து விடும் அட்டகாசமான மீம்சுகள் வருகின்றன. அதுபோல மீம்சுகள்  சில  நானும் போடுவதுண்டு. இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று நினைத்து ஒரு பதிவு போட்டால் அதனை யாரும் சீண்டக் கூட மாட்டார்கள். ஒரே முறை  நான் பெற்ற 30 லைக்குகள்தான் அதிக பட்சம். மற்றவை  10 க்கும் குறைவானவை.அதிலும் நம் வலைப்பதிவு நண்பர்களான பாலகணேஷ், மதுரைத் தமிழன், ஜோதிஜி, ஸ்ரீராம். போன்றவர்களோடு  பழகியதற்காக கிடைப்பவை. 
 ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் என் வலைப் பகுதியில் எழுதிய குட்டிக்கதை வாட்சப் வழியாக வார்த்தைக்கு வார்த்தை  காப்பி அடிக்கப் பட்டு  அதை தன் முகனூலில் பகிர்ந்திருந்தார் ஒருவர் அதற்கு ஏராளமான லைக்குகள். நானும் ஒரு லைக் போட்டேன். எழுதுவது என்ன என்பதை விட எழுதுபவர் யார் என்பதே இங்கு முக்கியம் 

   ஒன்று மோடிக்கு ஆதரவாக பதிவுகள் போடவேண்டும் அல்லது தீவிரமாக எதிர்த்து பதிவு போடவேண்டும்.  அல்லது பெண்களாக இருக்க வேண்டும். ஆனால் எதனையும் கண்டு கொள்ளாமல் கர்ம சிரத்தையுடன் தொடர்ந்து பதிவுகள் இடும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் ஞானிகள் வகையறா.

------------------------------------------------------------------------------------------------------------

சனி, 3 நவம்பர், 2018

உங்களால் முடியுமா?ஓரு Excel சவால்


கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்

நீங்கள் எக்சல்லில் பணிபுரிவதில் ஆர்வம் உள்ளவரா? அப்படி எனில் ஒரு சிறிய சவால்.  இதன் கடைசியில்
  கணினித் துறையில் பல்வேறு மாற்றங்கள் வந்தபோதும் கடந்த 15  ஆண்டுகளுக்கும் மேலாக எம்.எஸ்.ஆஃபீஸ் பயன்பாடு அரசு அலுவலகங்கள்,  கல்வி நிலையங்கள் தனியார் நிறுவனங்களிலும் இன்றுவரை ஆக்ரமித்துள்ளன என்பதை மறுக்க முடியாது. அதும் Word,Excel, Power point பயன் படுத்தாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அதற்கான தேவைகள் இருந்து கொண்டே உள்ளன.
ஆவணவங்கள் தயாரிப்பதற்கு வோர்டும், தகவல்களைப் பெற்று தொகுக்க எக்செல்லும் தனி மென்பொருள் வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு இன்று வரை வரப் ப்ரசாதமாகத் திகழ்கின்றன.

Stand up காமெடியில் ஒரு மென்பொருள் ஊழியர் கூறுவார். ”நான் CTS ஆஃபீசில் பணி புரிவதாக என் அம்மா பெருமையுடன் மற்றவர்களிடம் கூறுவார். ஆனால் நான் உண்மையில் இங்கு எம்.எஸ் ஆஃபீசில் பணிபுரிகிறேன் என்பார்”. பெரிய மென்பொருள் நிறுவனங்கள் கூட எம்.எஸ் ஆபீசை நம்பி இருக்கின்றன என்பதே உண்மை நிலை
   எனக்கு எக்சல்லில் கொஞ்சம் ஆர்வம் உண்டு. அதன் பிரம்மாண்டம் என்னை வியக்க வைக்கக் கூடாது.அதன் பயன்பாடுகள் பல அனைவராலும் பயன்படுத்தப் படுவதில்லை  ஒவ்வொரு முறையும் எக்சல்லில் நுழையும்போது புதிதாக ஏதாவது ஒன்று கிடைக்கிறது. அதனால் இன்றுவரை எக்சல்லில் கற்றுக் குட்டியாகவே இருகிறேன். அட இவ்வளவு நாள் இதனைப் பயன்படுத்தாமல் போனோமே என்று வருந்தியதுண்டு. சில நேரங்களில் சில பணிகளை செய்ய வெகு நேரம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் அதனை எக்சல்லில் எளிதாக செய்ய வழி இருக்கும். ஆனால் நாம் அறிந்திருக்க மாட்டோம்

  நான்  எனக்குத் தெரிந்த நான் அனுபவபூர்வமாக கற்றுக் கொண்ட விஷயங்களை கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள் என்ற தலைப்பில் பகிர்ந்து வந்திருக்கிறேன். தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு அது நிச்சயம் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.

போட்டி இதுதான்

      அலுவலகத்தில் நிறைய தகவல்கள் அடங்கிய எக்சல்  அட்டவணை ஒன்றை உயர் அலுவலருக்கு அனுப்ப வேண்டும். தகவல்களை உள்ளீடு செய்த பின்பும் அன்ப்புவதற்கு தாம்தம் செய்தார் எழுத்தர். காரணம் கேட்டதற்கு 1000 க்கும் மேற்பட்ட வரிசைகளும் 10000 மேற்பட்ட செல்கள் அடங்கிய அட்டவணயில் சில செல்கள் காலியாக இருந்தன. அவற்றை  காலியாக விடாமல்  விடாமல் NIL என்று நிரப்பித்தான் அனுப்ப வேண்டும். காலி செல்கள் சீராக இருந்தால் அவற்றை எளிதில் நிரப்பி விடுவேன் ஆனால் அவை ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால் செல்களை தேடித் தேடி நிரப்ப வேண்டி இருக்கிறாது அதனால் தாமதம் ஆகிறது என்றார்.

நான் எக்சல் அட்டவணையை பார்த்தேன். இதனை செய்வதற்கு எக்சல்லில் நிச்சயம் ஏதாவது வழி இருக்கும் என்று நம்பினேன். நான் நினைத்தது போலவே இவ்வேலையை எளிதாக்க வசதிகள் இருப்பதை கணடறிந்தேன். உடனே அதனை பயன்படுத்தி NIL ஐ  காலி செல்களில்  ஒரே நிமிடத்தில் கட்டங்களில் நிரப்பினேன். 
எப்படி?.

உதாரணத்திற்கு ஒரு சிறிய அட்டவணையைத் தருகிறேன். அவற்றில் காலி இடங்களை NIL என்று எளிதில் நிரப்புவதற்கான  எளிய வழி என்ன?  நான் எப்படி நிரப்பி இருப்பேன் அல்லது நான் செய்ததைவிட எளிமையான வழிகளும்  உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும்.  அவற்றை தெரிவித்தால் நானும் தெரிந்து கொண்டு பயன் அடைவேன்.


மேலே வலது புற்த்தில் ஊள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி எக்சல் ஃபைலை டவுன்லோட் செய்தும் முயற்சித்துப் பார்க்கலாம்.

சரியாக சொல்பவர்களுக்கு




தொடர்புடைய பிற பதிவுகள்

எக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா   

முதலில் வந்ததோடு சரியான விடை சொன்ன மதுரைத்தமிழனுக்கு வாழ்த்துகள். வேறு யாரேனும் சொல்கிறார்களா என்று பார்ப்பதற்கு விடையை தற்காலிகமாக மறைத்து வைக்கப்படும்.