என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 9 நவம்பர், 2018

குமுதத்தில் என் கதை எக்சல் சவால் விடை+96 படம் எப்படி?


பெட்டிக் கடை பகுதி நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப் படுகிறது

     கடந்த வாரங்களில்  தோசையில் சாதி பற்றிய செய்தி  ப்ரதான இடத்தைப் பிடித்திருந்தது.
அதனைப் பற்றிய வேறு ஒரு பார்வையில்  ஒரு பக்கக் கதை ஒன்றை எழுதி குமுதத்திற்கு அனுப்பி இருந்தேன். இந்த வார குமுதம் இதழில் வெளியாகி இருந்தது.மிகக் குறுகிய காலத்தில் பிரசுரிக்கப் படும் என நான் நினைக்க வில்லை. காலம் தாண்டி விட்டால் அவுட் டேட்  ஆகி விடும். வெகு விரைவாக வெளியிட்ட குமுதம் ஆசிரியர் திரு பிரியா கல்யாணராமன் அவர்களுக்கு நன்றி.
இதோ கதை.

இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இணையத்தின் பரபரப்பான  பேசப் பட்டுக்கொண்டிருந்தது வே. மதிமாறனின் தோசையில் சாதி உண்டு என்ற பேச்சு, அதன் அடிப்படையில் எழுதப் பட்டதே இந்த ஒரு பக்கக் கதை


நாம ஆதிக்க  சாதியாம்மா?

ஸ்கூல் வேனில் இருந்து இறங்கி ஓடி வந்து டிபன் பாக்சை சிங்கில்போட்டுவிட்டு வந்ததும் வராததுமாக “அம்மா! நாம ஆதிக்கசாதியாம்மா? என்று கேட்ட தன் பெண் ரம்யாவை அதிர்ச்சியுடன் பார்த்தாள் சித்ரா.
”என்னடி சொல்ற”
”இல்லம்மா நீ எனக்கு மத்தியானம் தோசை கொடுத்து அனுப்பி இருந்தஇல்ல! அதை
பாத்துட்டு என்ஃப்ரண்ட் ஹேமாதாம்மா அப்படி கேட்டா”
”ஏன் அப்படிக் கேட்டாளாம்?”
”நான் கொண்டு போன தோசை ரொம்ப மெல்லீசா இருந்ததாம். ஆதிக்க சாதிக்காறங்கதான் அப்படி தோசை செய்வாங்களாம். ஃபேஸ்புக்கு வாட்ஸப்புல யாரோ சொன்னங்களாம். சொல்லும்மா! நாம ஆதிக்க சாதியா?”
”அடி போடி! தோசையில எங்கிருந்துடீ சாதி வந்தது?. காலையில நாலுகரண்டி மாவுக்கு வக்கில்ல. ரெண்டு கரண்டி மாவுதான் இருந்தது. அதுல எத்தன தோசைதான் வரும்? தடியா வார்த்தா ஒருத்தருக்குதான் கொடுக்கமுடியும். சன்னமாக தோசை வார்த்தாதான் உனக்கு ரெண்டு, உன் தம்பிக்கு ரெண்டு, இதோ வேலை வெட்டிக்கு போகாம ஒக்காந்திருக்காரே உங்கப்பா! அவருக்கு ரெண்டு கொடுக்க முடிஞ்சது.”
”அப்ப உனக்கு இல்லையாம்மா”.
”எனக்கெதுக்கு? உங்களுக்கு இருந்தா போதாதா?”

”நாளையில இருந்து இன்னும் மெல்லிசா வார்த்துக் குடும்மா உனக்கும் ரெண்டு தோசை வரட்டும்” என்ற ரம்யாவை இழுத்து அணைத்துகொண்டாள் சித்ரா
-----------------------------------------------------------------------------------------------------------------
    நேற்று சன் டிவியில்  96  படம்
ஒளி பரப்பப் பட்டது. ஆஹா ஒஹோ என்று பாராட்டப் பட்ட படம் ஆயிற்றே. என்று பார்க்க விரும்பினேன். படம் மிக மெதுவாக சென்றது. படத்தில் அனைவரும் ஆரம்ப கால மணிரத்தினம் பட பாத்திரங்கள் போல குசுகுசுவென்று ஹஸ்கி வாய்சில் பேசிக் கொண்டிருந்தனர்  முதல் காதலை தெய்வீகக் காதலாகக் கருதி பின்னர் சிலகாலத்திற்குப் பின் யதார்த்தத்தை உணர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களை உசுப்பி விட்டு அடே மடையா உன் முதல் காதலை எப்படி மறந்தாய் என்று பழைய நினைவுகளைக் கிள்றி விட்டு மாய உணர்வை(உண்மையில் கிளுகிளுப்பை)  40 வயதுக் காரர்களுக்கு ஏற்படுத்தி ம்ற்ற குறைகள் எல்லாம் மறந்து நெகிழ்ந்து கரைந்து  பேச வைத்திருப்பது டைரக்டரின் வெற்றியாக இருக்கலாம். .
       மாசற்ற முதல் காதலைக்  கொண்ட கதாநாயகனாக தன்னையே வரித்துக் கொண்டு தன்னை ஈர்த்தவளை முகநூலிலும் தேடிக் கொண்டிருந்தனராம் சிலர். சில வாட்சப் க்ரூப்கள் கூட உருவாக்கப் பட்டதாக செய்தி . ஆனால்  இப்படிக் பழைய காதலை தேடி ஒடுவது விபரீதத்தில்தான் முடிய வாய்ப்பு இருக்கிறது  மேலும் இது போன்ற நிகழ்வுகள் சகஜமானது என்ற உணர்வை ஏற்படுத்தி விடக் கூடிய அபாயம் உண்டு. இப்படத்தை கொண்டாடும் எந்த ஆணாவது தன் மனைவி தான் படித்த பள்ளி மாணவர்களுக்கான் ரீயூனியன் நிகழ்வுக்கு அனுப்புவார்களா?
இப்படித்தான் ஆட்டோ கிராப் படம் வரும்போதும் அந்த வயதுக்காரர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள்.
அமரக் காதல் தெய்வீகக் காதல் புனிதக் காதல் போன்றவற்றில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை என்பதால் இப்படம் ஈர்க்கவில்லை.
--------------------------------------------------------------------------------------------------------
சென்ற பதிவில் எக்சல் சவால் ஒன்றைக் கேட்டிருந்தேன்.  அதன் விடை
அதைனை ஏற்கனவே படிக்காதவர்கள்  கீழே க்ளிக்குக
ஓரு Excel சவால்
மதுரைத் தமிழன். வெங்கட் நாகராஜ் இருவருமே சரியான விடையை கூறி இருந்தனர். திண்டுக்கல் தனபாலன் சுருக்கு விசைகளை மட்டும் பயன் படுத்தி  இருந்தார். .

மதுரைத் தமிழனின் விடை
முதலில் Month செல்லில் இருந்து கிழே 300 என்ற மதிப்பி இருக்கும் செல்வரை செலக்ட் செய்து கொள்ள வேண்டும்.
அதன் பின் மேலே உள்ள மெனுவில் find&select என்பதை க்ளிக் செய்ய வேண்டும் அதில் உள்ள சப் மெனுவில் Go To Special என்பதை க்ளிக் செய்தால் ஒரு சிறிய பாப் அப் விண்டோ வரும் அதில் Blanks என்பதை தெரிவு செய்தால் காலியாக இருக்கும் செல் எல்லாம் செலக்ட் ஆகி இருக்கும். அதன் பின் find&select என்பதை மீண்டும் க்ளிக் செய்ய வேண்டும் அதன் பின் அதில் உள்ள Replace என்பதை தெரிவு செய்து அதில் NIL என்று டைப் செய்து Replace all என்பதை க்ளிக் செய்தால் காலியான செல் எல்லாம் NIL என்ற வார்த்தைகளால் நிரம்பிவிடும் அவ்வளவுதான்


Go To Special அற்புதமான வசதி வெவ்வேறு வகையில் இதன் மூலம் செல்களை தேர்ந்தெடுக்க முடியும் 

Go To Special செல்லாமலே நான் சொன்ன செயல்பாட்டிற்கு சாதரண  find and replace போதும்

அட்டவணையை முழுவதுமாக தேர்வு செய்து  find and Replace பயன் படுத்தலாம். findல் தேட வேண்டியதை காலியாக விட்டு விட்டுவிட்டு Replace ஐ பயன்படுத்தி அதில் NIL என்று டைப் செய்து Replace all க்ளிக் செய்தால் காலி செல்கள் முழ்வதும் செல்களால் நிரப்பப் பட்டு விடும்.
இந்த வீடியோவை பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்



------------------------------------------------------------------------------------------

    வலைப்பதிவு நண்பர் தளிர் சுரேஷ்  நம் அனைவருக்கும் அறிமுகமானவர்தான். வலைப்பதிவர்களில் ஆரம்ப காலங்களில் சிலரை குறை மதிப்பீடு செய்ததுண்டு. அவர்களில் ஒருவர் சுரேஷ்
காரணம் அவர் முதலில் தன் பதிவுகளோடு சேர்த்து காப்பி பேஸ்ட் பதிவுகள் அதிகம் போட்டு வந்தார். அதனால் அவரது உண்மையான திறமை ஐயத்திற்கு இடமாகி விட்டது.  ஆனால் பின்னர் காப்பி பேஸ்ட் பதிவுகளுக்கு தலைமுழுகி விட்டு சொந்த படைப்புகளை எழுத ஆரம்பித்தார். தமிழ்மணம் திரட்டி அவரை நிராகரித்த போதும் சளைக்காமல் எழுதினார்.  (இன்று தமிழ் மணமே தள்ளாடிக் கொண்டிருக்கிறது) பலரின் பதிவுகளுக்கு சென்று கருத்திட்டு தன் இருப்பை காட்டிக் கொண்டே இருந்தார். எழுதிக் குவித்தார் என்று சொல்வார்களே அது அவருக்கும் பொருந்தும். 

     நகைச்சுவை சிறுகதைகள் சிறு கவிதைகள் சிறுவர் கதைகள்  ஆன்மீகம் என்று அனைத்தையும் எழுதித் தள்ளிக்  கொண்டிருக்கிறர். ஆனால் அவரது பலம் ஜோக்ஸ் எழுதுவது என்பதே என்  கருத்து. குமுதம் விகடன், தமிழ் ஹிந்து பாக்யா தினமலர் போன்ற பத்திரிகைகளில் அனைத்திலும் அவரது நகைச்சுவை துணுகுகள் இடம் பெற்றுக் கொண்டு இருகின்றன.  வலைப் பதிவர்கள் பலர் எழுதுவதைக்  கைவிட்ட நிலயில் இன்றும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது அவரது சிறப்பு.  தமிழ் ஹிந்துவில் பன்ச் பச்சோந்ஜி பகுதியில் அதிக அளவில் இடம் பெற்றது இவரது பஞ்ச்கள்தான் என நினைக்கிறேன். தகவல் தெரிவித்த வாட்சப் குழுமத்திற்கு நன்றி என்ற செய்தியை வெளியிடுவார்.பத்திரிகையில் வெளியாவது அவருக்கு பிறர் சொல்லித்தான் தெரிய வருகிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. படைப்பாளிகளுக்கு மின்னஞல் மூலமாகவாவது படைப்பு வெளியிடப்படுவதை தெரிவிக்கலாம்
 தற்போது தேன்சிட்டு என்ற மின்னிதழையும் வெளியிட்டு அசத்தி வருகிறார்.
 எழுத்தில் கொஞ்சம் புதுமையைக் கையாண்டால்  இன்னும் சிறப்பான இடத்தைப் பெற வாய்ப்பு உண்டு வாழ்த்துகள் சுரேஷ்

-----------------------------------------------------------------------------------------------------

முக ராசியும் முகநூல் ராசியும்
முக ராசிதான் இல்லை என்றாலும் முகநூல் ராசியாவது இருக்குமா என்றால் அதுவும் இல்லை 
  முகநூலில் வெற்றிகரமாக இயங்க திறமை வேண்டும்  . .  எனது முகநூல் நட்புகளின் எண்ணிக்கை 380 மட்டுமே நான் பெரும்பாலும் யாருக்கும் நட்பு அழைப்பு விடுப்பதில்லை.  நண்பர்களின் பதிவுகளுக்கு கம்மெண்டும் லைக்கும் போடுவதுண்டு.    எவ்வளவு பேர் நாம போட்ட  பதிவை படித்தார்கள் என்று சொல்ல முடியாது. லைக்குகள் அதன் அளவுகோலாக வைத்துக் கொண்டால்.  முகநூல் நமது தன்னம்பிக்கையை குலைத்து விடும் அட்டகாசமான மீம்சுகள் வருகின்றன. அதுபோல மீம்சுகள்  சில  நானும் போடுவதுண்டு. இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று நினைத்து ஒரு பதிவு போட்டால் அதனை யாரும் சீண்டக் கூட மாட்டார்கள். ஒரே முறை  நான் பெற்ற 30 லைக்குகள்தான் அதிக பட்சம். மற்றவை  10 க்கும் குறைவானவை.அதிலும் நம் வலைப்பதிவு நண்பர்களான பாலகணேஷ், மதுரைத் தமிழன், ஜோதிஜி, ஸ்ரீராம். போன்றவர்களோடு  பழகியதற்காக கிடைப்பவை. 
 ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் என் வலைப் பகுதியில் எழுதிய குட்டிக்கதை வாட்சப் வழியாக வார்த்தைக்கு வார்த்தை  காப்பி அடிக்கப் பட்டு  அதை தன் முகனூலில் பகிர்ந்திருந்தார் ஒருவர் அதற்கு ஏராளமான லைக்குகள். நானும் ஒரு லைக் போட்டேன். எழுதுவது என்ன என்பதை விட எழுதுபவர் யார் என்பதே இங்கு முக்கியம் 

   ஒன்று மோடிக்கு ஆதரவாக பதிவுகள் போடவேண்டும் அல்லது தீவிரமாக எதிர்த்து பதிவு போடவேண்டும்.  அல்லது பெண்களாக இருக்க வேண்டும். ஆனால் எதனையும் கண்டு கொள்ளாமல் கர்ம சிரத்தையுடன் தொடர்ந்து பதிவுகள் இடும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் ஞானிகள் வகையறா.

------------------------------------------------------------------------------------------------------------

9 கருத்துகள்:

  1. விஜய் பாஸ்கர்9 நவம்பர், 2018 அன்று PM 1:01

    மதுரை தமிழன் காலமாகி விட்டார் என்று ஒரு செய்தி பரவியது
    உங்களுக்கு பதில் அனுப்பி இருக்கார் என்பதை அறியும் போது அவர் நலமாக உள்ளார் என்பது தெரிகின்றது
    மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  2. தோசை மெலிதாக இருந்தால் ஆதிக்க சாதியா முதன் முதலாகக்கேள்விபடுகிறேன் திரைப்படம் 96 எனக்கும்ரசிக்க வில்லை முக நூலில் பேருக்குத்தான் இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. கதை அருமை! மனமார்ந்த வாழ்த்துகள்! (துளசி: இப்பத்தான் தோசைக்கும் சாதி வந்துவிட்டது என்பதைத் தெரிந்து கொண்டேன்!)

    96 படம் ஈர்க்கவில்லை

    எக்ஸெல் விடை தெரிந்துகொண்டோம்..

    துளசிதரன், கீதா

    துளசிதரன்: முகநூல் நான் பதிவுகள் எதுவும் போடுவதில்லை. அபூர்வம்தான். படங்கள் ஷேர் செயதோடு சரி...

    கீதா: நான் முகநூலில் இல்லை சகோ

    பதிலளிநீக்கு
  4. சுரேஷ் அவர்கள் பற்றி நன்றாகத் தெரியுமே அவர் தொடங்கியிருக்கும் தேன்சிட்டும் தெரியும்...வாசிக்கிறோம்...

    அவருக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  5. உங்கள் குமுதம் கதைக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும். கதை சுருங்கச் சொல்லி பெரிய விஷயம் சொல்லி இருக்கிறீர்கள்.

    தளிர் சுரேஷ் அபார கற்பனை, எழுத்துத் திறம் கொண்டவர் என்பதை அவர் தளத்தில் படித்துத் தெரிந்து கொண்டிருக்கிறேன்.

    எக்ஸல்- உபயோகமாக இருந்தது.

    96 - அதீத ஹைப் கொடுத்ததால் ஏமாற்றமாகி விட்டதா என்று தெரியவில்லை. எனக்குத் தோன்றியது "பாவம் ஜானகி புருஷன்!"

    பதிலளிநீக்கு
  6. கதை அருமை... பாராட்டுக்கள்...

    தேன்சிட்டு என்ற மின்னிதலில் நம் வலைப்பதிவர்கள் பதிவுகள் பல உண்டு...

    முகநூல் எப்போதாவது செல்வதுண்டு...

    பதிலளிநீக்கு
  7. குமுதத்தில் வெளியான கதை சிறப்பு. எல்லாவற்றிலும் சாதி.... எங்கே போகிறோம்!

    ஆஹா... நான் சொன்ன விடை சரி என்று தெரிந்து மகிழ்ச்சி!

    தேன்சிட்டு - சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார் நண்பர் சுரேஷ். அவருக்கு எனது பாராட்டுகளும்.

    96 திரைப்படம் - பார்க்கவில்லை. பொதுவாகவே சினிமாக்கள் பார்க்க விருப்பமில்லை.

    முகநூல் - இங்கே பெரும்பாலும் சண்டையும் சச்சரவும் மட்டுமே... வெகு அரிதாக சிலர் நன்றாக எழுதுகிறார்கள். அவர்களின் எழுத்துகளை படிப்பதற்காகவே இங்கே இன்னும் இருக்கிறேன் நானும்.

    தொடர்ந்து சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  8. தோசையை, குமுதத்தில் ரசித்தேன். அருமை. 96 திரைப்பட விமர்சனம் அனைவரும் கூறியதற்கு மாற்றாக, சிறப்பாக உள்ளது.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895