என்னை கவனிப்பவர்கள்

சனி, 26 மார்ச், 2016

நீயா நானா? கல்விக்கட்டணம்-பெற்றோரும் நிர்வாகிகளும்


    கடந்த வார 20.03.2016 நீயா நானாவில் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்கள் பற்றி பெற்றோர் மற்றும்  கருத்துகள் விவாதிக்கப் பட்டது. இப்போதெல்லாம் ஆழமான விவாதங்கள் நடை பெறுவதில்லை. நான்கைந்து கேள்விகளுக்கு ஒருவர் பின் ஒருவராக பதில் கூற வைத்து நிகழ்ச்சி முடிந்து விடுகிறது. நம் எதிர்பார்க்கும் சில கேள்விகள் கேட்கப் படுவதில்லை. சிறப்பு விருந்தினர்களும் எப்போதும் வரக்கூடிய ஆஸ்தான சிறப்பு விருந்தினர்களே.  அவர்களுடைய கருத்துக்களையே மீண்டும் மீண்டும் கேட்க வேண்டி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியும் அப்படியே.  இந்த நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் சார்பில் ஒருவரும் அழைக்கப்படவில்லை. அடிக்கடி நிகழ்ச்சியில் பங்கு பெறும் பத்ரி சேஷாத்திரியும்,  இளங்கோ கல்லாணையும்  கலந்து கொண்டனர். நாமும் கொஞ்சம் கல்விக் கட்டணம் பெருஞ்சுமையாக  ஏன் ஆனது என்பதை கொஞ்சம் ஆராய்வோம்.
       விலை கேட்டு வாங்கவா முடியும் கல்வி வேளை தோறும் கற்று வருவதால் படியும் என்றான் நறுக்கு மீசைக் கவிஞன் பாரதிதாசன். ஆனால் கல்வி இன்று சந்தைப் பொருளாக மாறிவிட்டது. எங்கே கல்வி அதிக விற்பனைக்கு விற்கப் படுகிறதோ அங்கிருந்து கல்வியை வாங்கவே பெற்றோர் விரும்புகின்றனர். விலை அதிகமுள்ள பொருளே தரமானது என்பது சந்தை சித்தாந்தம். அது கல்விக்கும் பொருந்தும் என்பதே பெற்றோர் எண்ணம். தன்னுடைய பொருளாதார நிலைக்கு மீறிய  கல்வியை வாங்க துணிவதன் விளைவே பெருஞ்சுமையாக மாறி இன்று அச்சுறுத்துகிறது.
      முந்தைய தலைமுறையினர் கல்வியின் அவசியத்தை உணர்ந்து அரசு பள்ளிகளில் சேர்த்து தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்தனர். ஆனால் இந்தத் தலை முறையினரோ கல்விக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர்.   கல்வி இல்லையென்றால் வாழ்க்கையே வீண் என்று கருதுகின்றனர். தன்னுடைய பெற்றோர் அரசு பள்ளிகளில் தங்களை சேர்த்ததால்தான்   தாம் நல்ல கல்வி பெற முடியவில்லை என்று ஆதங்கம் கொண்டவர்களாகவே இன்றைய பெற்றோரை காணமுடிகிறது.. அதனால்  இந்தத் தலை முறையினர் அந்தக் குறை தங்கள் பிள்ளைகளுக்கு இருக்கக் கூடாது  எனக் கருதி  தனியார் பள்ளிகளில் சேர்க்க முற்பட்டனர். குறிப்பாக நடுத்தர முற்பட்ட இனத்தவர் பணக்காரர்களின் பள்ளிக்கு தங்களை பிள்ளைகளை அனுப்ப முயற்சி செய்தனர். இதற்காக தங்கள் தேவைகளை சுருக்கிக் கொள்ளவும் தயங்கவில்லை. அறிவுரை சொல்கிறோம் என்ற பெயரில் 'நல்லா  படிக்கலன்னா பிச்சைதான் எடுக்கணும்' என்றெல்லாம் கூறி அச்சத்தை குழந்தைகள் மனதில் ஏற்படுத்தினர். முற்பட்ட இனத்தவரின் இந்த மனப்பான்மை  மற்ற இனத்தவருக்கும் தொற்றிக் கொள்ள கல்வி வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. பெரிய பணக்காரப் பள்ளிகளை நெருங்க முடியாத இவர்களின்  நிலையை மெட்ரிக் பள்ளிகள் பயன்படுத்திக் கொண்டன. ஆங்கில மோகமும் கவர்ச்சிகரமான விளம்பரங்களும்  ஈர்க்க விட்டில் பூச்சிகளாய் வீழ்ந்தனர். மூட்டை மூட்டையாய் புத்தகங்களையும் நோட்டுகளையும்  முதுகில் சுமந்து செல்வதை பெற்றோர் பூரிப்பில் மிதந்தனர். 
    ஓரளவிற்கு பொருளாதார நிலை உயர்ந்தபோது ஏழைகள் படிக்கும் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை படிக்க  வைப்பதை கௌரவக் குறைவாகக் கருதத் தொடங்குவதும் அதிகரித்தது.  அரசு பள்ளிகளில் பயின்றால் ஒழுக்கமும் கட்டுப்பாடும் கிடைக்காது என்று எண்ணத்தையும் வளர்த்துக் கொண்டனர்  . ஆனால் தாங்கள் அரசு பள்ளியில்தான் படித்தவர்கள் என்பதை மறந்து விட்டனர் .தங்கள் பிள்ளைகள் அசாத்திய திறமை பெற வேண்டுமெணில் தனியார் பள்ளிகளே அதனை அளிக்க முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர். இதைப் பற்றியெல்லாம் நிகழ்ச்சியில் விவாதிக்கவில்லை

   நிகழ்ச்சியில் ஒருபெண்மணி சொன்னார் நாங்கள் அரசு பள்ளிகளில் படித்ததால் எங்களால் ஆங்கிலம் பேச முடியவில்லை. தொடர்புத்  திறன் (communication Skill)  இல்லை  என்று கூறினார்.  அதிகம் படிக்காத அரசியல் வாதியிடம் இருக்கும் Communication Skill ஆங்கிலம் படித்த எல்லோரிடமும்  இருக்கிறதா என்பது ஐயத்துக்கிற்குரியதே. ஆங்கிலத்தில் பேசுவதுதான் Communication skill என்ற புரிதலே இதற்கு காரணம்
     ஒன்றை கவனிக்க வேண்டும். பெரும்பாலும்  அரசு பள்ளிகளில் படித்தவர்கள்தான் பல்வேறு அரசுப்பணிகளில்  அதிகாரிகளாக உள்ளனர். அவர்களில் பலருக்கு  ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரியுமா என்பது ஐயமே. ஆனால் சிறப்பான நிர்வாகத் திறமை பெற்றவர்களாகத்தான் இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது.
   நிகழ்ச்சியில் சர்வதேச பள்ளி சார்பாக பேசியவரிடம்  ஏன் இவ்வளவு பணம் வாங்குகிறீர்கள். என்று கேட்டதற்கு, தரும் வசதிகள் ஆசிரியர் சம்பளம்  போன்றவையும், கூடுதலாக சொல்லித் தரப்படும் நீச்சல், கராத்தே,யோகா  செஸ் பேஸ்கட் பால், இவற்றிற்குத்தான் காசு  என்றார்.
 3 ஆண்டுகளாக நீச்சல் பயிற்சி தருகிறார்கள் ஆனால் என் மகனுக்கு இன்னும் நீந்தத் தெரியாது என்று உண்மையை போட்டு உடைத்தார் ஒருவர்.
      அதை சொல்லித் தருகிறோம் இதை சொல்லித் தருகிறோம் என்று சொல்லும்  இந்தப்  பள்ளிகள் ஒரு குற்றாலீஸ்வரனையோ விஸ்வநாதன் ஆனந்தையோ உருவாக்கி இருக்கிறதா என்ற கேள்வியை  இந்தப் பள்ளிகளை கோபிநாத் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
      இசைப் புயல் AR ரகுமான் சென்னையில் புகழ் பெற்ற பணக்காரர்கள் படிக்கும் பள்ளியில் படித்தார். அடிக்கடி பள்ளிக்கு வராததால் அவர் பள்ளியில் இருந்து வெளியேற்றப் பட்டார். அந்தப் பள்ளியின் விதிமுறைகளுக்கு கீழ்ப்படிந்திருந்தால் ஒரு ஆஸ்கார்  நாயகன் உருவாகி இருப்பாரா என்பது ஐயமே. அவரை அனுப்பியதற்காக அந்தப் பள்ளிக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். 
         சட்டப்படி கல்வியை லாபம் பார்க்கும்  தொழிலாக நடத்தக் கூடாது என்பது பள்ளிகள் நடத்தும் பலருக்கு தெரியாமல் இருப்பதை அறிய முடிந்தது . அனுமதி பெறுவதற்கு செய்யப்படும் செலவுகள் அதிகம் அந்த தொகையை நாங்கள் எங்கிருந்து பெறமுடியும் என்று கேட்கிறார்கள் .
 சட்டம் அனுமதிக்காவிட்டாலும் உண்மையில் லாபம் பார்க்கும் தொழிலாகத்தான் செய்யப் படுகிறது. இப்போதும் நிறையப் பேர் அதிகம் சம்பாதிக்கலாம் என்றுதான்  பள்ளிகள் நடத்துகிறார்கள். நாங்க முதல் போடுகிறோம் லாபம் வேண்டாமா என்றார் இன்னொரு நிர்வாகி.பெற்றோர் கல்விக் கட்டணம் அதிகம் வாங்கப் படுவதையும் பள்ளிகளில் சேர்ப்பதற்கு  கஷ்டப் படுவதையும் என்று புகாராகக்  கூறினார்கள் . கட்டணம் குறைவாக உள்ள பள்ளிகளிலும் அல்லது அரசு பள்ளிகளிலோ சேர்க்க தயாராக இல்லை. குறைவான கல்விக் கட்டணங்களை  இப்பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.பணக்காரர்களிடமிருந்து பணம் பிடுங்கவே இப்பள்ளிகள் தொடங்கப் பட்டன. ஆனால் நடுத்தர வர்க்கத்தினரும் நானும் அந்தப் பள்ளியில்தான் என் பிள்ளைகளை படிக்க வைப்பேன் என்று தானாகப் போய் விழுவதும் சீட் கிடைக்க போடப்படும் நிபந்தனைகளைக் கண்டு ஆதங்கப் படுவதும் , கட்டணம் குறைக்க வேண்டும் என்று கூறுவதும் வழக்கமானதாக உள்ளது. 
       சேர்க்கைக்கு போட்டி  இருக்கும்போது  கட்டணம் உயர்த்தப்பட்டு விடுகிறது.சேர்க்கைக்கான பிற விதிகளை இது புறந் தள்ளிவிடுகிறது . மாதம் இவ்ளோ பீஸ் கட்டறோம்  என்று பெருமையாக சொல்லிக் கொள்பவர்களும்  உண்டு 
       அரசு பள்ளிகளில் வழங்கப்படும்  அனைவருக்கும் சமமான கல்வியை சாதாரணர்களுக்கானது அது குறைந்தபட்ச கல்வி   என்று நினைப்பதும்     இப்பள்ளிகளை நாடுவதற்கு ஒரு காரணம்  என்று கூறப்படுகிறது. வகுப்பறைகளை கலர்புல்லாக வைத்திருக்கிறோம் . Smart Class வைத்திருக்கிறோம் கண்காணிக்க வாட்ஸ் அப், போன்ற நுட்பங்களை பயன் படுத்துகிறோம் என்றெல்லாம் பீற்றிக் கொண்டார்கள். இவற்றில் எந்தப் பள்ளியில் நங்கள் நல்ல குடிமக்களை உருவாக்குவதற்கான பயிற்சி அளிக்கிறோம் என்று சொல்லவில்லை 
      தமிழ் நாட்டில் ஒவ்வொரு தனியார் பள்ளியும் அரசு நிர்ணயித்த கட்டணத்தைத்தான் வசூலிக்க வேண்டும். அதற்கென ஒரு நபர் குழு நியமிக்கப்பட்டு கட்டணம் நிர்ணயிக்கப் படுகிறது. கமிட்டியின் மூலம் கட்டணம் நிர்ணயிக்கப் படாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப் படமாட்டாது. அதன்படி அனைத்துப் பள்ளிகளும் தங்கள் கட்டணத்தை தாங்கள் தரும் வசதிகளை குறிப்பிட்டு கட்டணம் நிர்ணயித்துக் கொண்டன. செல்வாக்கை பயன்படுத்தி கூடுதல் கட்டணமும் நிர்ணயம் செய்யப்டுவதாகவும்  சொல்லப் படுகிறது. உண்மையில் பல பள்ளிகள் இந்தக் கட்டணத்தை விட அதிகமாகவே வசூலிக்கின்றன. முறையான ரசீதுகள் வழங்கப் படுவதில்லை. இவற்றையெல்லாம் குற்றச்சாட்டாக சொல்லும் பெற்றோர் விசாரணையின்போது பல்டி அடித்துவிடுவதே வழக்கமாக உள்ளது. புகார் கூறினால் தன் குழந்தையை பழி வாங்கக் கூடும் என்ற அச்சமே அதற்கு காரணம்

ஒரு நபர் கமிட்டி நிரனயித்துள்ள மெட்ரிக் பள்ளிகள் கட்டண விவரம் அறிய  வேண்டுமா?    
க்ளிக் செய்யுங்கள் 
   ஒரு பெண்மணி சொல்கிறார் எவ்வளவு செலவானால் என்ன அதற்கேற்ற கல்வி கிடைக்கிறதே என்று.  பள்ளியை தேடுவதை ஸ்கூல் ஷாப்பிங் என்று வர்ணித்தார். அப்படி ஷாப்பிங் செய்து படித்த  பள்ளியில் அவர்கள் பிள்ளைகள் என்ன சாதித்தார்கள் என்று தெரியவில்லை.
    ஒரு பள்ளி தொடங்கிய மூன்று ஆண்டுகளுக்குள் 15 பள்ளிகளை தொடங்கினேன் என்றார்  ஒருவர். செலவு அதிகம் என்று சொல்கிறீர்களே உங்கள் வருடாந்திர Turn over எவ்வளவு? செலவு அதிகமெனில் மூன்று ஆண்டுகளுக்குள் 15 பள்ளிகளை எப்படி திறக்க முடிந்தது என்ற  கேள்விகளுக்கு பதில் கிடைக்க வில்லை. 

    இக் கட்டணக் கொள்ளைகளை தடுப்பது எப்படி.? இரண்டு வழிகளை பத்ரி சேஷாத்ரி கூறினார். ஒன்று  அரசே பள்ளிகள் நடத்தவேண்டும் வேண்டும்.அது இப்போதைக்கு சாத்தியமில்லை, சட்டப்படியே சிறு லாபத்துடன் நடத்த அனுமதிக்கலாம் என்றார். அப்படி செய்தால் இன்னும் நிறையப் பேர் வருவார்கள் கல்விக் கட்டணங்கள் குறையும் என்றார். இப்போதும் ஏராளமான தனியார் பள்ளிகள் உள்ளன. உண்மையில் சட்டம் அனுமதித்தாலும் அனுமதிக்காவிட்டலும் லாபகரமான தொழிலாக பள்ளிகளை நடத்துவதையே குறிக்கோளாக வைத்துள்ளார்கள். தற்போது பள்ளிகளின் மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தும் ப்ளாக் மணிதான் என்று அதிரடிக் கருத்து ஒன்றையும் கூறினார் பத்ரி. மேலும் இப்பள்ளிகள் செய்யும் விதிமீறல்களை பெற்றோர் பொருட்படுத்தப் படுவதில்லை. சொல்லவும் துணிவதில்லை.அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் எங்களுக்கு இடம் கொடுத்தால் போதும்  என்ற எண்ணமே இருப்பதை சுட்டிக் காட்டினார் 
    கட்டணங்களை அரசு குறைக்கவேண்டும் பெற்றோர் என்று விரும்புகின்றனரே  தவிர கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளை மூடுங்கள் என்றும் கல்வியை அரசுதான் வழங்கவேண்டும் என்றும் ஒருவரும் சொல்ல தயாராக இல்லை ன்பதை நீயா நானா உணர்த்தியது 
     அப்படியானால் இப்பளிகள் எவ்வளவு கட்டணம் வேண்டுமானாலும்  வசூலிக்கவும் அனுமதிக்கலாமா? என்றால்  கூடாதுதான் .என்னதான் செய்யலாம் .
   கல்விக்கான அரசின் செலவை குறைப்பதற்காக தனியார் ஊக்குவிக்கப் பட்டன. இன்று அரசு பள்ளிகளே அழிந்துவிடும் நிலை உருவாகி விட்டது.  அரசு இப்பள்ளிகள்  மீதான கண்காணிப்பை சட்டத்தின் துணை கொண்டு வலுப்படுத்த வேண்டும் . விதிமுறைகளை முழுமையாக பின்பற்றினால் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். நேர்மையாக செயல்படும் அதிகாரிகளுக்கு அரசியல் வாதிகளிடமிருந்தோ உயர் அதிகாரிகளிடமிருந்தோ எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது. சமரசங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. அரசு பள்ளிகளின் கட்டமைப்பையும் ஆசிரியர்களின் தரத்தையும் மேம்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் படித்தவர்க்கே அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப் படவேண்டும். சாதாரண பணியாளராய் இருந்தாலும் சரி ஐ.ஏ எஸ். அதிகாரியாய் இருந்தாலும் சரி  அரசு பள்ளியில்தான் தங்கள் குழந்தைகளை படிக்கவைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப் படவேண்டும்.
      ஆனாலும்  கல்விக் கட்டணம் குறைப்பது அரசாங்கத்தால் மட்டும் சாத்தியமாகி விடாது.  பெற்றோர் தனியார் பள்ளிகளின் மீது கொண்டுள்ள மோகத்தை கைவிட வேண்டும்.   பிறருக்கு அடிமை  வேலை செய்யும் மனப்பான்மையை விடுத்து சுய தொழில் செய்யும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.
இன்னும் விவாதிக்க வேண்டியவை பல இருந்தாலும் நீளம் கருதி தற்போதைக்கு முடித்துக் கொண்டு பின்னர்  தொடர்வோம்.


******************************************************************************


ஞாயிறு, 20 மார்ச், 2016

கூகுளின் திருவிளையாடல்கள்

   

  பிறந்த குழந்தைக்குக்  கூட கூகுளில் தேடிப் பார்த்துத்தான் பேர்வைக்கிறார்கள். அதற்கு முன்பு கோலோச்சிக் கொண்டிருந்த  யாஹூ தேடுபொறியை ஓரம் கட்டிவிட்டு தேடு பொறியில் தன்னிகரில்லாத இடத்தை இன்றுவரை தக்கவைத்துக் கொண்டுள்ளது  கூகுள் .    2004 இன் முட்டாள்கள் தினத்தில்  மின்னஞ்சலை பொதுமக்களுக்கும் அறிமுகப்படுத்தி  yahoo, hotmail மின்னஞ்சல்களை பயன்படுத்தி வந்தோரை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டது. இன்று ஜிமெயில் அக்கவுண்ட் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லலாம்.  யாஹூமெயில்  ஹாட் மெயில் போன்ற மின்னஞ்சல்கள் உண்டு என்று தெரியாதவர்களும் உண்டு, இணையத்தின் பல பகுதிகளை ஆக்ரமித்துக் கொண்ட Google. கைபேசியிலும ஆண்ட்ராய்ட் மூலம் தனது ஆதிக்கத்தை  தொடர்ந்து வருகிறது. 

    தற்போது இணையப் பெரியண்ணனாக வலம் வரும்  கூகுள் நமக்கு வலைப்பூ வசதியை இலவசமாக (உண்மையில் இலவசம் என்று எதுவும் இல்லை. எல்லாம் ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்தே ) வழங்கி வருவதை அறிவோம்.வோர்ட் பிரஸ் போன்றவையும் வலைப்பூ வசதியை இலவசமாக வழங்கின. வோர்ட் பிரஸ்ஸில் ஏராளமானவர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ப்ளாக்கில் பல்வேறு வசதிகள் வழங்கி பயனாளர்களை ஈர்த்து வருகிறது கூகுள்.   கூகுள்+. ஜிமெயில் .மேலும் பல பயன்பாடுகளை ப்ளாக்கருக்கு துணை புரியும் வண்ணம் அமைத்திருக்கிறது.
      ஏராளமான சமூக வலைத்தளங்கள் இருந்தாலும் இணையம் பற்றி அதிகம் அறியாதவர்களும் தெரிந்து வைத்திருப்பதாக முகநூல் விளங்குகிறது. பெரும்பாலும்    நமக்கு நினைவுக்கு வருவது Facebook, Twitter.  ஆர்க்குட், Google Buzz , Google Friend Connect, கூகுள் +  போன்றவை   கூகுளின் சமூக வலை தளங்களாகும். ஆர்க்குட்  ஒரு கட்டத்தில் புகழுடன் விளங்கியதாக தெரிகிறது . அவை   ஒவ்வொன்றாக மூடப்பட்டுவிட்டன. தற்போது  கூகுள் + மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. 

     கூகுள் என்னதான் சீனியாரக இருந்தாலும்  சமூக வலை தளங்களைப் பொறுத்தவரை பின்னர் வந்த முகநூல் இன்றுவரை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.  டுவிட்டர் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது .கூகுளை ஆட்டம் காண வைத்த முகநூலுக்கும் வாட்ஸ் ஆப் போட்டியாக முளைக்க  விழித்துக்கொண்டு வாட்ஸ் ஆப் ஐ விலைக்கு வாங்கியது தனிக் கதை.   google +ஐ எவ்வளவுதான் கூகுள் தனது பிற பயன்பாடுகளின் மூலம் முன்னிலைப் படுத்த முனைந்தாலும் அதில் முழு வெற்றி  முடியவில்லை 
     என்னதான் போட்டியாளராக இருந்தாலும் சில சமயங்களில் இணைந்து கொள்வதும் ஒருவருக்கொருவர் துணை புரிவதும் அவசியமாகிறது. அதனை முன்னணி நிறுவனங்கள் உணர்ந்தே அவ்வப்போது செயல் திட்டங்கள் வகுக்கின்றன
        கூகுள் அவ்வப்போது சில மாற்றங்களை செயல்படுத்தும் என்பதை நாம் அறிவோம். 2014 இல்  திடீரென்று blogspot.com என்பதை  இந்தியர்களுக்கு blogspot.in என்று மாற்றியது. அதே போல்  ஒவ்வொரு நாட்டிற்கும் வெவவேறு விதமாக இறுதிப் பெயருடன் REDIRECT செய்தது . இதனால் திடீர் குழப்பம் ஏற்பட்டது. திரட்டிகள் திணறின. alexa தர வரிசையில் பின்னேற்றம் ஏற்பட்டது. பணம் கொடுத்து வலைமுகவரி பெறுவதை ஊக்குவிப்பதற்காகவே இதனை கூகுள் செய்வதாகவும் கருதினர். பயனாளர்கள் சும்மா விடுவார்களா என்ன அதற்கும் ஒரு குறுக்கு வழியை கண்டு பிடித்தனர் என்றாலும் பலர் இலவச வசதியை விடுத்து புதிய வலைமுகவரியை(Custom domain) காசு கொடுத்து வாங்க முற்பட்டனர். 
    சில வசதிகளை தருவதும் பறிப்பதுமாக கூகுள் தனது திருவிளையாடல்களை தொடர்ந்து கொண்டிருக்கிறது  காசு கொடுத்து வாங்கும் Domain களுக்கும் சில வசதிகளை  கூகுள் வழங்குவதில்லை. 
வலைப்பூக்களில் விரும்புவோர் பின்தொடர்வதற்கான வசதி இருப்பது வலைப்பூ பயன்படுத்துவோர் அனைவரும் அறிந்தது. Follower Widget இணைத்து விட்டால் பார்வையாளர்கள் தாங்கள் விரும்பும் வலைப்பூவை பின் தொடர முடியும். அவர்களுக்கு பதிவுகள் வலைப்பூ டேஷ்போர்டில் வந்து சேரும். வலைப்பூவை பின்தொடர்வோரின் profile புகைப்படங்கள் காட்சியளிப்பதை பார்த்திருக்கலாம். வலைப்பூவை தெரிந்தும் பின் தொடரலாம். வலைப்பூ நடத்துபவர் அறியாமலும் பின் தொடரலாம். பின்தொடர்வதை நிறுத்திக் கொள்ளவும் செய்ய முடியும். 
   எனது வலைப்பூவை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 350 க்கும் மேல் இருந்தது. திடீரென்று 325 ஆக குறைந்து விட்டது. ஒரு வேலை தொழில்நுட்பக் கோளாறாக இருக்கலாம் என்று நினைத்தேன். இருந்தாலும் ஒரு ஐயம் ஏற்பட துழாவிய போதுதான் தெரிந்தது இதுவும் கூகுளின் திருவிளையாடல் என்று.  உங்கள் வலைப்பூவில் கூட பின் தொடர்வோரின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம்.கவனித்திருக்கிறீர்களா?அது ஏன்?
    காரணம் கூகுள் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதற்கு முன்னர் கூகுள் அக்கவுன்ட்  இல்லாதவர்கள்கூட ஒரு கூகுள் வலைப்பூவை தொடர முடியும். அதாவது yahoo,facebook,twitter மூலமாகவும் பின்தொடர்வதற்கான வசதி இருந்தது. இப்போது அதனை நீக்கி விட்டது . கூகுள் மெயில் அக்கவுன்ட் உள்ளவர்கள் மட்டுமே தொடரமுடியும்.
முன்பு ஒரு வலைப்பூவை பின் தொடர நாம் என்ன செய்வோம்? அந்த வலைப்பூவில் உள்ள Follower widgetஇல்Join this site  கிளிக் செய்தால்  கீழே உள்ளது போன்று காட்சி அளிப்பதை கவனித்திருக்கலாம் .     இவற்றில் கூகுள் ,டுவிட்டர், யாஹூ, AIM ,Open ID ஆகியவற்றின் மூலம் வலைப்பூவை இணைத்துக் கொள்ள முடியும்
இப்போது எப்படி இருக்கிறது என்று பாருங்கள்   கூகுள் மட்டும்  தனியாக காட்சியளிப்பதை காணலாம். இப்படி புதிதாக இணைய விரும்பும் கூகுள்  அல்லாத கண்க்கு வைத்திருப்பவரை தடுத்து நிறுத்தியதோடு ஏற்கனவே Non Google Account  மூலம் இணைந்திருந்த அத்தனை பேரையும் நீக்கி விட்டது கூகுள். அதனால்தான் கிட்டத் தட்ட 30 பேர் பின்தொடர்பு பட்டியலில் காணாமல் போனார்கள்.( பின் தொடரும் பட்டியலில் உள்ளவர்கள் உண்மையில் நம் பதிவுகளை படிப்பார்களா என்பது வேறு விஷயம்)


இதில் இருந்த 30 பேரை காணோம் 


     இதற்கான அறிவிப்பை  சத்தமில்லாமல் 2015 டிசம்பர் 21 இல்  வெளியிட்டு அதில்  2016 ஜனவரி 11 முதல் அமுல் படுத்தப் போவதாக தெரிவித்திருந்தது. அதை நடைமுறைப் படுத்தியும் விட்டது. இனி கூகுள் மின்னஞ்சல் வைத்திருப்பவர்கள் மட்டுமே blogger வலைப்பூக்களை தொடரவோ இணைக்கவோ முடியும்.

   இணையத்தில் இலவசம் என்ற பெயரில் ஏராளமான சேவைகளை பெற்று வருகிறோம். உண்மையில் அவை எல்லாம் இலவசம்தானா என்பது விவாதத்திற்குரியது என்றாலும் அதனை பொருட்படுத்தாமல் நம்பி நமது படைப்புகளை பதிவுசெய்கிறோம். இலவசம் என்பதால் அவர்கள் செய்யும் மாற்றங்களை சகித்துக் கொள்ளவேண்டியதைத் தவிர வழியில்லை. நீங்கள் பதிவிட்டவை திடீரென்று காணாமல் போனாலும் கேள்வி கேட்க முடியாது. இது கூகுள் மட்டுமல்ல மற்றவற்றிற்கும் பொருந்தும். நான் கூற விரும்புவது நீங்கள் உங்கள் படைப்புகளில் முக்கியம் என்று கருதுபவற்றை Offline லும் சேமித்து  வைத்துக் கொள்ளுங்கள்.
     சில மாதங்களுக்கு முன்னர்  முகநூல் நிர்வாகம் இலவச  இண்டர்நெட்டை வலியுறுத்தி    ட்ராய்க்கு ஒரு மெசேஜ்  அனுப்புமாறு தனது உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. பலரும் அனுப்பி இருப்பீர்கள். ஆனால் எனக்கோ பூனைகள் எதற்காக எலிகளுக்காக அழ வேண்டும் என்றுதான்  தோன்றியது. இதைப் பற்றி இன்னொரு  பதிவில் பார்ப்போம் 

**********************************************************************


கொசுறு: முதலில்   Google  க்கு"கூகோல்" (googol)  என்றே பெயரிட விரும்பினர் அதை நிறுவியவர்கள்..அந்தப் பெயரை  வேறொருவர் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்தார். அதனை பணம் கொடுத்து  வாங்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் வேறு பெயர் தேடினர். தட்டச்சு செய்யம்போது googol என்பதற்கு பதிலாக தவறுதலாக  google என்று தட்டச்ச அதனையே பெயராக வைத்துக் கொண்டார்கள் google இன்றுவரை கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது 

நேரம் கிடைச்சா இதையும் படிச்சு பாருங்க.
கூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன்!
செவ்வாய், 8 மார்ச், 2016

என் மனைவியை திருத்த முடியுமா?


   மகளிர் தின வாழ்த்துக்கள்

                  (இந்தப் பதிவு மகளிருக்கு சமர்ப்பணம்)

   நல்ல ஆலோசனைகளும் ஆசிகளும் வழங்கும்  பெரியவர் ஒருவரைத் சந்தித்து தன் மனைவியைப் பற்றி சொல்லி ஆலோசனை கேட்டுக்கொண்டிருந்தார் கணவர் ஒருவர்.
   "அய்யா! என் மனைவி கிராமத்திலிருந்து வந்தவர். நகரத்திற்கு வந்தும் அதற்கேற்ப தன்னை இன்னமும் மாற்றிக்கொள்ளவில்லை. என் மனைவிக்கு எதுவுமே தெரியவில்லை. நாட்டு நடப்பு எதுவும் தெரியாது. முதல்வர் யார்? பிரதம மந்திரி யார் என்று கூட தெரியாது. அரசியல் பற்றி இம்மியும் தெரியாது. இலக்கியங்கள் கவிதைகள் பற்றி தெரியாது. புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கிடையாது. நாளிதழ்கள் கூட வாசிப்பதில்லை. அனைவரும் தெரிந்து வைத்திருக்கக் கூடிய சினிமா நடிக நடிகையரின் பெயர்களும் தெரியாது. என் நண்பர்களின் மனைவிகள்  அரசியல், கணினி, விளையாட்டு, பங்கு வர்த்தகம்,கலைகள், இலக்கியங்கள், கவிதைகள், என்று வெளுத்துக்கட்டுகிறார்கள். இவளுக்கோ செல்போனை முழுமையாகப்   பயன்படுத்தத் தெரியாது. போன் வந்தால் எடுத்துப் பேசவும், எப்போதாவது அவசர தேவை எனில் எனக்கு போன் செய்யவும் மட்டுமே தெரியும். ஃபேஸ்புக் வாட்ஸ் அப், டுவிட்டர் எதுவும் தெரியாது. எவ்வளவுதான்  சொன்னாலும் இவற்றை தெரிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்படவில்லை. அவற்றை தெரிந்துகொள்ளவும் முயற்சி செய்வதில்லை. இவளை எப்படித் திருத்துவது என்று நீங்கள்தான் ஐயா ஆலோசனை கூறவேண்டும்."

அவரை உற்றுப் பார்த்த பெரியவர் கேட்டார் "தம்பி நீங்கள் நகரத்திலேயே பிறந்து வளரந்தவரா?"
"இல்லை. நானும் கிராமத்தில் இருந்துதான் வந்தேன். ஆனால் நகரத்திற்கேற்ப என்னை மேம்படுத்திக் கொண்டேன்"

 "நல்லது உங்கள் வீட்டில் மொத்தம் எத்தனை பேர் இருக்கிறீர்கள்" பெரியவர் கேட்டார்.
    "நான்,என் மனைவி, ஒரு குழந்தை, மூன்று பேர் இருக்கிறோம்."
   " நாளை உங்கள் மனைவியை இங்கு அழைத்து வாருங்கள். அறிவுரை கூறுகிறேன் " 

     பெரியவர் சொல்ல,மறு நாள் தன் மனைவியுடன் பெரியவரைக் காண வந்தார்.
    மனைவியின் இடுப்பில் குழந்தையும், கையில் ஒருபை. அந்தப் பையில் ஏதோ சில பொருட்கள் இருந்தன. மூவரும் பெரியவரை வணங்கினர். கணவனை சற்று நேரம் வெளியே இருக்கச் சொல்லிவிட்டு அந்தப் பெண்ணிடம் ஏதோ கேட்டார். பின்னர் பெண்மணியை வெளியே அனுப்பிவிட்டு கணவனை அழைத்தார்.
     "ஐயா,என் மனைவிக்கு அறிவுரை சொன்னீர்களா? கணவன் கேட்டான்.
     பெரியவர் "கொஞ்சம் பொறுங்கள்.அதற்கு முன் நான் கேட்கும் சில கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.
 இங்கு வரும்போது என்ன கொண்டு வந்தீர்கள்"
"எனக்கு ஒன்றும் தேவை இல்லை என்பதால் நான் ஒன்றும் கொண்டுவரவில்லை ஐயா!,  என்மனைவிதான் ஏதோ பை ஒன்றை கொண்டு வந்திருக்கிறாள் "
 "உன் மனைவி கொண்டு வந்த பையில் என்னவெல்லாம் இருக்கிறது? .உனக்குத் தெரியுமா?
     "எனக்குத் தெரியாது. என் மனைவிக்குத்தான் தெரியும்"
    "உன் குழந்தைக்கு எப்போது உணவு கொடுக்கவேண்டும், எப்போது தண்ணீர் கொடுக்க வேண்டும் தெரியுமா?
     "தெரியாது,அது அவளுக்குத்தான் தெரியும்"
  "என்ன உணவு கொடுக்க வேண்டும் என்றாவது தெரியும்?
     "எனக்குத் தெரியாது. அதுவும் அவளுக்கு நன்றாகத் தெரியும்.?
   "திடீரென்று உன் குழந்தை சிறுநீர் கழித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?
   "நிச்சயமாகத் தெரியாது. அதெல்லாம் பெண்களுக்குத் தானே தெரியும்."
      "குழந்தை அழுதால் உன்னால் அழுகையை நிறுத்த முடியுமா?
   "முடியாது என்றுதான் நினைக்கிறேன். அவளிடம் இருக்கும் வரை குழந்தை அழுவதில்லை."

        "குழந்தை  எப்போது  உறங்கும் எப்போது விழிக்கும் என்று உனக்குத் தெரியுமா?

      "அதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்" எரிச்சலுடன் சொன்னான் கணவன்.

      பெரியவர்  புன்னகையுடன் "உனக்குத் தெரியாத இவ்வளவு விஷயங்கள் உன் மனைவி தெரிந்து வைத்திருப்பதை நீயே உன் வாயாலேயே கூறினாய். இவற்றை தெரிந்து கொள்ள என்றாவது முயற்சி செய்திருக்கிறாயா?"

       கணவன் விழிக்க,

      பெரியவர் சொன்னார் "இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு வா! பின்னர் நீ விரும்புவதையெல்லாம் உன் மனைவி தெரிந்துகொள்ள நான் அருமையான ஆலோசனைகளைக்  கூறுகிறேன்."

       கணவன் தலை குனிந்தான் 
வேறென்ன செய்ய முடியும்?


-----------------------------------------------------------