என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 20 மார்ச், 2016

கூகுளின் திருவிளையாடல்கள்

   

  பிறந்த குழந்தைக்குக்  கூட கூகுளில் தேடிப் பார்த்துத்தான் பேர்வைக்கிறார்கள். அதற்கு முன்பு கோலோச்சிக் கொண்டிருந்த  யாஹூ தேடுபொறியை ஓரம் கட்டிவிட்டு தேடு பொறியில் தன்னிகரில்லாத இடத்தை இன்றுவரை தக்கவைத்துக் கொண்டுள்ளது  கூகுள் .    2004 இன் முட்டாள்கள் தினத்தில்  மின்னஞ்சலை பொதுமக்களுக்கும் அறிமுகப்படுத்தி  yahoo, hotmail மின்னஞ்சல்களை பயன்படுத்தி வந்தோரை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டது. இன்று ஜிமெயில் அக்கவுண்ட் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லலாம்.  யாஹூமெயில்  ஹாட் மெயில் போன்ற மின்னஞ்சல்கள் உண்டு என்று தெரியாதவர்களும் உண்டு, இணையத்தின் பல பகுதிகளை ஆக்ரமித்துக் கொண்ட Google. கைபேசியிலும ஆண்ட்ராய்ட் மூலம் தனது ஆதிக்கத்தை  தொடர்ந்து வருகிறது. 

    தற்போது இணையப் பெரியண்ணனாக வலம் வரும்  கூகுள் நமக்கு வலைப்பூ வசதியை இலவசமாக (உண்மையில் இலவசம் என்று எதுவும் இல்லை. எல்லாம் ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்தே ) வழங்கி வருவதை அறிவோம்.வோர்ட் பிரஸ் போன்றவையும் வலைப்பூ வசதியை இலவசமாக வழங்கின. வோர்ட் பிரஸ்ஸில் ஏராளமானவர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ப்ளாக்கில் பல்வேறு வசதிகள் வழங்கி பயனாளர்களை ஈர்த்து வருகிறது கூகுள்.   கூகுள்+. ஜிமெயில் .மேலும் பல பயன்பாடுகளை ப்ளாக்கருக்கு துணை புரியும் வண்ணம் அமைத்திருக்கிறது.
      ஏராளமான சமூக வலைத்தளங்கள் இருந்தாலும் இணையம் பற்றி அதிகம் அறியாதவர்களும் தெரிந்து வைத்திருப்பதாக முகநூல் விளங்குகிறது. பெரும்பாலும்    நமக்கு நினைவுக்கு வருவது Facebook, Twitter.  ஆர்க்குட், Google Buzz , Google Friend Connect, கூகுள் +  போன்றவை   கூகுளின் சமூக வலை தளங்களாகும். ஆர்க்குட்  ஒரு கட்டத்தில் புகழுடன் விளங்கியதாக தெரிகிறது . அவை   ஒவ்வொன்றாக மூடப்பட்டுவிட்டன. தற்போது  கூகுள் + மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. 

     கூகுள் என்னதான் சீனியாரக இருந்தாலும்  சமூக வலை தளங்களைப் பொறுத்தவரை பின்னர் வந்த முகநூல் இன்றுவரை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.  டுவிட்டர் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது .கூகுளை ஆட்டம் காண வைத்த முகநூலுக்கும் வாட்ஸ் ஆப் போட்டியாக முளைக்க  விழித்துக்கொண்டு வாட்ஸ் ஆப் ஐ விலைக்கு வாங்கியது தனிக் கதை.   google +ஐ எவ்வளவுதான் கூகுள் தனது பிற பயன்பாடுகளின் மூலம் முன்னிலைப் படுத்த முனைந்தாலும் அதில் முழு வெற்றி  முடியவில்லை 
     என்னதான் போட்டியாளராக இருந்தாலும் சில சமயங்களில் இணைந்து கொள்வதும் ஒருவருக்கொருவர் துணை புரிவதும் அவசியமாகிறது. அதனை முன்னணி நிறுவனங்கள் உணர்ந்தே அவ்வப்போது செயல் திட்டங்கள் வகுக்கின்றன
        கூகுள் அவ்வப்போது சில மாற்றங்களை செயல்படுத்தும் என்பதை நாம் அறிவோம். 2014 இல்  திடீரென்று blogspot.com என்பதை  இந்தியர்களுக்கு blogspot.in என்று மாற்றியது. அதே போல்  ஒவ்வொரு நாட்டிற்கும் வெவவேறு விதமாக இறுதிப் பெயருடன் REDIRECT செய்தது . இதனால் திடீர் குழப்பம் ஏற்பட்டது. திரட்டிகள் திணறின. alexa தர வரிசையில் பின்னேற்றம் ஏற்பட்டது. பணம் கொடுத்து வலைமுகவரி பெறுவதை ஊக்குவிப்பதற்காகவே இதனை கூகுள் செய்வதாகவும் கருதினர். பயனாளர்கள் சும்மா விடுவார்களா என்ன அதற்கும் ஒரு குறுக்கு வழியை கண்டு பிடித்தனர் என்றாலும் பலர் இலவச வசதியை விடுத்து புதிய வலைமுகவரியை(Custom domain) காசு கொடுத்து வாங்க முற்பட்டனர். 
    சில வசதிகளை தருவதும் பறிப்பதுமாக கூகுள் தனது திருவிளையாடல்களை தொடர்ந்து கொண்டிருக்கிறது  காசு கொடுத்து வாங்கும் Domain களுக்கும் சில வசதிகளை  கூகுள் வழங்குவதில்லை. 
வலைப்பூக்களில் விரும்புவோர் பின்தொடர்வதற்கான வசதி இருப்பது வலைப்பூ பயன்படுத்துவோர் அனைவரும் அறிந்தது. Follower Widget இணைத்து விட்டால் பார்வையாளர்கள் தாங்கள் விரும்பும் வலைப்பூவை பின் தொடர முடியும். அவர்களுக்கு பதிவுகள் வலைப்பூ டேஷ்போர்டில் வந்து சேரும். வலைப்பூவை பின்தொடர்வோரின் profile புகைப்படங்கள் காட்சியளிப்பதை பார்த்திருக்கலாம். வலைப்பூவை தெரிந்தும் பின் தொடரலாம். வலைப்பூ நடத்துபவர் அறியாமலும் பின் தொடரலாம். பின்தொடர்வதை நிறுத்திக் கொள்ளவும் செய்ய முடியும். 
   எனது வலைப்பூவை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 350 க்கும் மேல் இருந்தது. திடீரென்று 325 ஆக குறைந்து விட்டது. ஒரு வேலை தொழில்நுட்பக் கோளாறாக இருக்கலாம் என்று நினைத்தேன். இருந்தாலும் ஒரு ஐயம் ஏற்பட துழாவிய போதுதான் தெரிந்தது இதுவும் கூகுளின் திருவிளையாடல் என்று.  உங்கள் வலைப்பூவில் கூட பின் தொடர்வோரின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம்.கவனித்திருக்கிறீர்களா?அது ஏன்?
    காரணம் கூகுள் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதற்கு முன்னர் கூகுள் அக்கவுன்ட்  இல்லாதவர்கள்கூட ஒரு கூகுள் வலைப்பூவை தொடர முடியும். அதாவது yahoo,facebook,twitter மூலமாகவும் பின்தொடர்வதற்கான வசதி இருந்தது. இப்போது அதனை நீக்கி விட்டது . கூகுள் மெயில் அக்கவுன்ட் உள்ளவர்கள் மட்டுமே தொடரமுடியும்.
முன்பு ஒரு வலைப்பூவை பின் தொடர நாம் என்ன செய்வோம்? அந்த வலைப்பூவில் உள்ள Follower widgetஇல்Join this site  கிளிக் செய்தால்  கீழே உள்ளது போன்று காட்சி அளிப்பதை கவனித்திருக்கலாம் . 



    இவற்றில் கூகுள் ,டுவிட்டர், யாஹூ, AIM ,Open ID ஆகியவற்றின் மூலம் வலைப்பூவை இணைத்துக் கொள்ள முடியும்
இப்போது எப்படி இருக்கிறது என்று பாருங்கள்



   கூகுள் மட்டும்  தனியாக காட்சியளிப்பதை காணலாம். இப்படி புதிதாக இணைய விரும்பும் கூகுள்  அல்லாத கண்க்கு வைத்திருப்பவரை தடுத்து நிறுத்தியதோடு ஏற்கனவே Non Google Account  மூலம் இணைந்திருந்த அத்தனை பேரையும் நீக்கி விட்டது கூகுள். அதனால்தான் கிட்டத் தட்ட 30 பேர் பின்தொடர்பு பட்டியலில் காணாமல் போனார்கள்.( பின் தொடரும் பட்டியலில் உள்ளவர்கள் உண்மையில் நம் பதிவுகளை படிப்பார்களா என்பது வேறு விஷயம்)


இதில் இருந்த 30 பேரை காணோம் 


     இதற்கான அறிவிப்பை  சத்தமில்லாமல் 2015 டிசம்பர் 21 இல்  வெளியிட்டு அதில்  2016 ஜனவரி 11 முதல் அமுல் படுத்தப் போவதாக தெரிவித்திருந்தது. அதை நடைமுறைப் படுத்தியும் விட்டது. இனி கூகுள் மின்னஞ்சல் வைத்திருப்பவர்கள் மட்டுமே blogger வலைப்பூக்களை தொடரவோ இணைக்கவோ முடியும்.

   இணையத்தில் இலவசம் என்ற பெயரில் ஏராளமான சேவைகளை பெற்று வருகிறோம். உண்மையில் அவை எல்லாம் இலவசம்தானா என்பது விவாதத்திற்குரியது என்றாலும் அதனை பொருட்படுத்தாமல் நம்பி நமது படைப்புகளை பதிவுசெய்கிறோம். இலவசம் என்பதால் அவர்கள் செய்யும் மாற்றங்களை சகித்துக் கொள்ளவேண்டியதைத் தவிர வழியில்லை. நீங்கள் பதிவிட்டவை திடீரென்று காணாமல் போனாலும் கேள்வி கேட்க முடியாது. இது கூகுள் மட்டுமல்ல மற்றவற்றிற்கும் பொருந்தும். நான் கூற விரும்புவது நீங்கள் உங்கள் படைப்புகளில் முக்கியம் என்று கருதுபவற்றை Offline லும் சேமித்து  வைத்துக் கொள்ளுங்கள்.
     சில மாதங்களுக்கு முன்னர்  முகநூல் நிர்வாகம் இலவச  இண்டர்நெட்டை வலியுறுத்தி    ட்ராய்க்கு ஒரு மெசேஜ்  அனுப்புமாறு தனது உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. பலரும் அனுப்பி இருப்பீர்கள். ஆனால் எனக்கோ பூனைகள் எதற்காக எலிகளுக்காக அழ வேண்டும் என்றுதான்  தோன்றியது. இதைப் பற்றி இன்னொரு  பதிவில் பார்ப்போம் 

**********************************************************************


கொசுறு: முதலில்   Google  க்கு"கூகோல்" (googol)  என்றே பெயரிட விரும்பினர் அதை நிறுவியவர்கள்..அந்தப் பெயரை  வேறொருவர் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்தார். அதனை பணம் கொடுத்து  வாங்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் வேறு பெயர் தேடினர். தட்டச்சு செய்யம்போது googol என்பதற்கு பதிலாக தவறுதலாக  google என்று தட்டச்ச அதனையே பெயராக வைத்துக் கொண்டார்கள் google இன்றுவரை கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது 

நேரம் கிடைச்சா இதையும் படிச்சு பாருங்க.
கூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன்!




17 கருத்துகள்:

  1. “இணையப் பெரியண்ணனாக வலம் வரும் கூகுள்” உண்மைதான் உங்கள் கிண்டல் எப்போதுமே சரியாக இருக்கும் என்பதை மீண்டும் நிறுவியிருக்கிறீர்கள்.
    என்னைப் பின்பற்றி வந்தவர்களில் சுமார் 15பேர் சிலமாதம் முன்னர் திடீரென்று திரும்பப் பெற்றுக்கொண்டார்களோ? காணவில்லையே என்று நானும் குழம்பியிருந்தேன் விஷயம் இதுதானா? இப்படி இல்லையெனில் நான் ஒருமாதம் முன்னரே 400 ஃபாலோயரைக் கடந்திருப்பேன்...
    வலைத் தொழில்நுட்பச் செய்திகளை அழகுத் தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் படி எழுதும் உங்கள் தமிழ்நடைக்கு நான் ரசிகன் முரளி!
    தொடர்ந்து எழுதுங்கள்...இன்னும் சில கேள்விகளுடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன். த.ம.வா.1

    பதிலளிநீக்கு
  2. பாலோவெர்ஸ் குறைந்த ரகசியம் புரிந்தது !
    அய்யா முத்து நிலவனின் அடுத்த நேர்காணல் உங்களோடுதான் என நினைக்கிறேன் ,வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் சொல்வது சரிதான்,எதுவும் நிரந்தரமல்ல்ல என்பதனால் நம் பதிவுகளை நாம் சேமித்து வைத்துகொள்வது முக்கியம்.

    டிசம்பருக்கு முன்னால் பிளாக்கில் பதியும் பதிவுகள் நம் மெயில் ஐடிக்கும் உடனே வந்து விடும், அதுவும் தற்பொழுது தடைப்பட்டுள்ளதை கவனித்தீர்களோ?

    கருத்துக்கள் இட்ட பின் பின் தொடர என்பதை கிளிக் செய்தால் நமக்கு பின் வரும் அனைத்து கருத்துக்களும் மெயிலுக்கு வருவது போல் பதிவுகள் இட்ட உடன் இப்போது மெயிலுக்கு வருவது தடைப்பட்டு விட்டது, அத்தோடு கூகுள் அக்கவுண்டும் தடைசெய்யப்படும் வாய்ப்பு உண்டென்பதையும் நினைவில் வைத்திருக்க வேண்டும்,

    பதிலளிநீக்கு
  4. நானும் குறைவது குறித்து
    காரணம் தெரியாதுகுழம்பியதுண்டு
    தெளிவாக விளக்கியமைக்கு நன்றி
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  5. அவ்வப்போது இப்படி சில மாற்றங்கள் செய்து வலைப்பதிவாளர்களை குழப்பம் கொள்ளச் செய்வது இவர்களுக்கு வாடிக்கை! :) விரிவான தகவல்கள் பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  6. வலைப்பூவில் எழுதுபவர்களுக்கு உரிய நேரத்தில் சரியான கருத்துக்களைக் கூறி நெறிப்படுத்தும் தங்களின் முயற்சி பாராட்டத்தக்கது. எங்களுக்கு அவ்வப்போது பல உத்திகளைக் கூறி செழுமைப்படுத்தும் தங்களின் பெருமனதிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. கூகுல் அறிவித்தை கவனிக்காத பலருக்கும் புரியும் வண்ணம் மிக எளிமையாக சொன்ன உங்களுக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  8. தங்களின் பல்வேறு அலுவல்களுக்குஇடையிலும்
    காரணத்தைத்தேடி கண்டுபிடித்துவிட்டீர்கள் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  9. எதுவும் இலவசம் இல்லை என்ற உண்மையை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தியதற்கு நன்றி நண்பரே! ,ஆனால், பல வலைப்பக்கங்கள், தகவல்கள் இருந்தால்தான் அவர்களின் தேடுதல் இயந்திரத்திற்கு வேலை. அதனால் வலைப்பக்கம் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். தமிழ் தேடுதலில் வலைப்பூக்களே முன்னணியில் இருக்கின்றன. ஒருவேளை இவற்றை தடை செய்துவிட்டால் பல தேடல்கள் வெறுமையாக இருக்கும். அதனால் அதை செய்யமாட்டார்கள். அதன் மூலமாக வேறு வருமானம் தேடிக்கொள்வார்கள் என்றே நினைக்கிறேன். ஆனாலும், விழிப்போடு இருப்பது நமது கடமை.
    அருமையான தகவலுக்கு நன்றி நண்பரே!
    த ம 4

    பதிலளிநீக்கு
  10. சிறந்த தொழில்நுட்பப் பகிர்வு
    தொடரட்டும் தங்கள் அலசல்

    பதிலளிநீக்கு
  11. விளக்கவுரை அருமை நண்பரே எனக்கும் திடீரென்று பாலோவர் எண்ணிக்கை குறைந்தது காரணம் புரிந்து கொண்டேன் நன்றி
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்
    முரளி அண்ணா

    அழகாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் தாங்கள் சொல்லிய கருத்து யாவருக்கும் பயன்பெறும் என்பதை சுட்டிக்காட்டுகிறேன்... தொடருங்கள் அடுத்த நகர்வை.த.ம6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  13. எங்களையும் பின்பற்றியவர்கள் சிலர் காணாமல் போய் மீண்டும் வந்தனர்..அஹஹ்ஹ் கூகுள் ஒளித்து வைத்துப் பின்னர் கொண்டு விட்டது போலும். அப்போதே தெரிந்தது கூகுளாரின் திருவிளையாடல் என்று. பலரைத் தொடர நினைத்தால் தொடரவும் முடியாத நிலை ஏற்படுகிறது அதாவது நம்மை அவர்கள் தளத்தில் இணைத்துக் கொள்ள முடியவில்லை பல சமயங்களில்.

    இப்போதும் ஒரு சிலருக்கு தொடர நினைத்துச் சேரும் போது நீங்கள் முதலில் காட்டியிருக்கும் அதாவது பல ஐடிக்களுடன் தொடர உள்ளது வந்தது. ஆனால் பெரும்பாலோருக்கு இரண்டாவதாகக் காட்டியிருப்பதுதான் வந்தது.

    நாங்கள் எங்கள் பதிவுகளை நேரடியாக ப்ளாகருக்குள் எழுதுவதில்லை. எப்போதுமே வேர்டில் எழுதிவிட்டுப் பின்னர்தான் அதைக் காப்பி செய்து ப்ளாகரில் சேவ் செய்வது வழக்கம். வெளியிடும் போது படங்கள் இணைப்பது வழக்கம். எனவே எங்கள் பதிவுகள் அனைத்தும் எங்கள் கணினியில் கோப்புகளாக இருக்கின்றன.

    வியாபார உலகில் இலவசம் என்பது கிடையாது என்பது முழுக்க முழுக்க சரிதான். என்றாலும் வலைத்தளங்களைப் பொருத்தவரையில் இவர்களின் தேடுதல் பொறி நல்ல வகையில் இயங்குவதால் அவர்கள் வலைத்தளங்களை இலவசமாகத்தான் வழங்குவார்கள் என்று நினைக்கின்றோம். அவ்வாறு தேடுதலிலும் அவர்களுக்கு ஏதேனும் கிடைக்குமாக இருக்கலாம். இல்லை என்றால் தருவார்களா என்ன? அவர்களுக்கும் தெரியும் அதற்கும் வசூலித்தால் பல வலைத்தளங்கள் முடங்கிவிடும் என்பதும்.

    அருமையான எளிமையாக விளக்கிச் சொல்லும் பதிவு. பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  14. உண்மையான வரிகள் ...இலவசம் என்று எதுவும் இல்லை ...
    பகிர்வுக்கு மிகவும் நன்றி ஐயா ...

    பதிலளிநீக்கு
  15. நிகழ்வுகளின் நிலையைச் சொல்லிச் சென்ற விதம் பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் அய்யா
    அருமையான அவசியமான பதிவு
    நான் சில புதிய தளங்களைத் தொடர்ந்தேன்.. அங்கே கூகிள் மட்டுமே இருந்தது..
    உங்கள் பதிவைப் பார்த்ததும் டியூப் லைட் எரிந்தது..

    நன்றிகள்
    தம +

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895