என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 29 மே, 2012

கர்நாடகாவுக்கு காவிரியின் கண்டனக் குரல்

    தமிழகத்திற்கு தண்ணீர் தர  கர்நாடகா மறுத்து விட்டது.
    தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவின் அராஜகப் போக்கை கண்டு மனம் நொந்த காவிரித்தாயின் கண்டனக் கவிதை குரல் 

        கர்நாடகாவுக்கு காவிரித் தாயின் 
                கண்டனக்  குரல் 

              பஞ்சத்தைப் போக்குகின்ற பயிர்கள் எல்லாம் 
                  பசுமைதான் இழந்திருக்கும் காட்சி பாரீர்!
              நெஞ்சத்தை  கல்லாக்கி நேர்மை மறந்தீர்
                  நடுவர்கள் சொல்லி வைத்த தீர்ப்பை மறுத்தீர்!
              கொஞ்சம் தண்ணீர் கொடு என்று கேட்டபோதும் 
                  கோரிக்கை கேளாமல் செவிடாய் நின்றீர்
              அஞ்சாத தமிழர்கள் அகங்களில் எல்லாம் 
                  ஆத்திரத்தை மூட்டிவிட்ட செயலைச் செய்தீர்!

              தங்கத்தை விளைவிக்கும் ஊரில் இருந்தும்
                  தரங்கெட்ட செயல்களிலே இறங்கலாமா?
              பொங்கி வரும் என்னைநீர் சட்டம் போட்டு 
                  போகாமல் செய்திடுதல் முறையே தானா?
              எங்கெங்கும் பாய்ந்திடவே எனக்குரிமை உண்டு 
                  என்பதனை அறிந்திடுவீர் கொஞ்சம் இன்றே!
              தங்குதடை உடைத்திட நான் நினைத்துவிட்டால் 
                  தடைபோட்டுப் பயனில்லை அறிவாய் நன்றே!

              காவிரித்தாய்  கன்னடர்க்கே சொந்தம் என்று 
                   கயவர்கள் ஒன்றுகூடி கூட்டம் போட்டு 
              கைவிரித்து  நீரில்லை என்றே  சொன்னீர்!
                   போதவில்லை எங்களுக்கு; பொய்யும் சொன்னீர்.
              பைவிரித்து பணம் தேட  பண்பாடிழந்து 
                   பைந்தமிழர் வாழ்வினையே பதற  வைத்தீர் 
              கைவிட்டுப்  போன தந்த  உரிமைபெறவே
                   நதிநீரை தேசியமாய் என்று செய்வீர்?

              ஒருபிள்ளை தாகத்தில் தவித்து நிற்க 
                   தண்ணீரை மறைத்து வைத்து  தரமறுத்து
              மறு பிள்ளை விளையாடும் ஆட்டம் ரசித்து 
                  மகிழ்வோடு வாழ்வேன் நான் என்றா நினைத்தீர்?   
              சிறுபிள்ளை விளையாட்டாய் எண்ணி விடாதீர் !
                  சிறுபுத்தி கண்டிக்க மறந்தேன்; அதனால் 
              மறுப்பில்லை  தாய்க்கென்று  நினைந்து விடாதீர்?
                  மவுனமாய் அழுகின்றேன் மறந்துவிடாதீர்.

ஞாயிறு, 27 மே, 2012

வடிவேலுக்கு வேலை கிடைத்ததா? பகுதி 3

வேலை தேடும் வடிவேலு - பகுதி 1
வேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை
      வடிவேலுக்கு வேலை கிடைத்ததா? பகுதி 3

  வேலை தேடிச் சென்றபோது கேட்கப்பட்ட புதிர்கேள்விக்கு எப்படியோ நித்தியின்   அருள்வாக்கை (உளறலை)  முடிச்சு போட்டு கண்டுபிடித்த 
விடையை சொல்லி வேலை பெறுவதற்காக மகிழ்ச்சியுடன் நண்பர்களுடன் புறப்பட்டார் வடிவேலு. 

"அண்ணே வேலை கிடைச்சதும் எங்களுக்கு ஃ பைவ்  ஸ்டார் ஓட்டல்ல 
பார்ட்டி குடுக்கனும்ணே."

"அதுக்கென்ன குடுத்துட்டா போச்சு"  
நண்பர்கள்  மகிழ்ச்சியுடன் வடிவேலுவை தூக்கிக் கொண்டு சென்றனர்.

"நான் உள்ள போயி அப்பாயின்ட்மென்ட் ஆர்டரோட வரேன்.வெளிய இருங்க."
 உள்ளே வரவேற்பு பலமாக இருந்தது'
  "வாய்யா!. விடய கண்டு பிடிச்சிட்டயா. நீ கண்டுபிடிச்சிருப்ப. உனக்கேத்த வேலையாச்சே!"

   "கண்டுபிடிச்சிட்டேன் சார், வேற யாரும் வரலயே?
நீங்க சொன்ன கணக்கு
உன்கிட்ட நூறு ரூபாய் இருக்கு. நூறு ரூபாய பிரிச்சி ஏழு பொட்டலத்தில கட்டி வைக்கணும். அப்படி கட்டி முடிச்சதும் ஒரு ரூபாயிலிருந்து நூறு ரூபா வரை எவ்வளவு  கேட்டாலும் பொட்டலமாகத்தான் எடுத்து குடுக்கனும். அப்படி குடுக்கனும்னா ஒவ்வரு பொட்டலத்திலும் எவ்வளவு காசு வைக்கணும்?. ஒரு பொட்டலத்துக்கு மேலயும் குடுக்கலாம். ஏழு பொட்டலமும் சேத்தும் குடுக்கலாம். எந்தக் காரணத்தை கொண்டும் பொட்டலம் கட்டிமுடிச்சதும் அதை பிரிக்ககூடாது.
அதுக்கு  விடை:
ஒவ்வொரு பொட்டலத்திலயும்  1, 2, 4, 8, 16, 32 ,37 (இதுதான் விடை) ரூபா இருக்கற மாதிரி கட்டி வச்சா எத்தனை ரூபா கேட்டாலும் பொட்டலங்கள் பிரிக்காம எடுத்துக் கொடுக்கலாம்

"சூப்பர். சரியான விடைதான் எப்படி கண்டு பிடிச்ச?"

"எப்படி கண்டு பிடிச்சேக்கேங்கறது முக்கியம் இல்ல. கண்டுபிடிச்சனா? அதுதான் முக்கியம்."

"என்ன புத்திசாலித்தனமா பேசற.உனக்கு வேல கொடுக்கிறதா முடிவு பண்ணிட்டேன். இன்னிக்கே ஜாயின் பண்ணலாம்." 

  "ரொம்ப சந்தோஷம் சார், நீங்க சொன்னபடி டெய்லி பேட்டா, யூனிபார்ம் இதெல்லாம் குடுப்பீங்களா?

   "அதுல என்ன சந்தேகம்?. யாருப்பா அங்க ஒரு யூனிபார்ம் ஒண்ணு எடுத்துட்டு வாங்க!  

    "புதுசா  ஓபன் பண்ணி இருக்கிற நங்கநல்லூர் ப்ராஞ்சை நீதான். பாத்துக்கணும். காலையில கம்பனி பஸ் வரும். அதுல வசதியா போகலாம். ஈவினிங்  உன்னை பிக் அப் பண்ணவும் பஸ் வந்திரும். பெட்ரோல் டீசல் விலை ஏறினாலும் நம்ம பஸ் நிக்காது...."
சொல்லிக்கொண்டிருந்தபோதே யூனிஃபார்ம் வந்தது.
    அதை வடிவேலுவிடம் நீட்ட அதைப் பார்த்த வடிவேலு அதிர்ச்சி அடைந்தார்!

  "என்ன சார்! கிழிஞ்சிபோன பேன்ட், சட்டையை குடுக்கிறீங்க.இதுவா 
யூனிஃபார்ம்? பிச்சகாரன் போடற துணி மாதிரியே இருக்கே! நான் என்ன பிச்ச எடுக்கவா போறேன்?"

   "ஆமாம் மிஸ்டர் வடிவேலு உங்களுக்கு நாங்க குடுக்கிற வேலையே பிச்ச எடுக்கற வேலைதான். அதுக்கு இந்த யூனிஃபார்ம்தான் கெளரவமா இருக்கும்"

   "அடப் பாவிங்களா நீங்க சொன்ன யூனிஃபார்ம் இதுதானா? இத முன்னாடியே சொல்லக்கூடாதா? இந்த  வேலைக்கு கணக்க அறிவு வேற  ரொம்ப முக்கியம்னு சொன்னீங்களேடா!"

   "தட்டுல விழற சில்லறைய கரெக்டா எண்ணி பொட்டலம் கட்டி வக்கனுமே. அதுக்கு கணக்கு தெரிய வேணாமா?"

   "நான் ஏதோ காஷியர் வேலன்னு நினச்சனே? அதுக்காக ஒரு புதிர் கணக்கு வேற கேட்டு என்ன நாற அடிச்சிட்டேங்களேடா.அதுக்கு விடை எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு கண்டுபிச்சேன் தெரியுமா? கலக்டர் வேலைக்குக் கூட அந்த மாதிரி கஷ்டமான கணக்கு கேக்க மாட்டாங்களே? 
  "இதோ பார் இதுவும் கலெக்டர் வேலைதான். கலக்சன் பண்ணறங்களுக்கு என்ன பேரு? கலக்டர்தானே? நூறு  நூறா பிரிக்க தெரிஞ்சாதானே வேல ஈசியா முடியும்.?

  "டேய் எதுக்கும் ஒரு அளவு இல்லையாடா? சரவணா ஸ்டோர், தங்கமாளிகை,போதிஸ்,ஜெயச்சந்திரன், இவங்களெல்லாம் உங்கள நம்பி இருக்கற மாதிரியே ஒரு டூப் விட்டேங்களே? அதை உண்மைன்னு நினைச்சிட்டேனே?
"அது டூப் இல்ல உண்மைதான்! அவங்க தினமும் இங்க வந்து அவங்க கடைக்கு  தேவையான சில்லறைய வாங்கிட்டு போவாங்க. நாங்க சில்லறை குடுக்கலன்னா கடைய நடத்துறது கஷ்டம் தெரியுமா உனக்கு? 
    அவங்க கேக்கறப்ப ஒண்ணு ஒண்ணா எண்ணிக்கிட்டா இருக்க முடியும்?. கேட்டவுடன் டக் டக்குன்னு பொட்டலம் பொட்டலமா சில்லறைய கரெக்டா எடுத்து குடுக்கணும். அதுக்குதான் கணக்கு நல்லா தெரிஞ்ச  ஆளுக்குத்தான் வேல குடுப்போம்."
   
  " நாந்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டனா? ஏண்டா.. பிச்ச எடுக்கறத கம்பனி மாதிரி வச்சு நடத்தறீங்கலேடா?.இந்தக் கேவலமான வேலைக்காடா நான் இவ்வளோ கஷ்டப்பட்டேன்.அவ்வ்வ்வ்வ்..... "

  "டேய் நம்ம தொழில இவன் கேவலமா பேசிட்டான். எல்லாம் ஓடிவாங்க...... இவனை சும்மா விடக்கூடாது. "

   அங்கு இருப்பவர்கள் வடிவேலுவைத் தாக்க ஓடிவர வடிவேலு தப்பிப்பதற்காக  தலை தெறிக்க வெளியே ஓட்டுகிறார்.

  வெளியே காத்திருந்த அவரது நண்பர்கள் "என்னண்ணே! ஏன் ஓடறீங்க நில்லுங்கண்ணே! நில்லுங்கண்ணே!' என்று பின்னாலே ஓடிவர

   "அடேய்! எல்லாம் உங்களாளதாண்டா.... உங்களை அப்புறமா கவனிச்சிக்கிறேன்... இப்போதைக்கு உசுருதாண்டா... முக்கியம்........"

************************************************************************************************


வியாழன், 24 மே, 2012

பதிவர் சந்திப்பில் அறிந்த 'பயன்படா மரங்கள்'

 
  பதிவர் சந்திப்பு அறிமுகப் படுத்திய அற்புத மனிதர்  யோகாநாதன். மரங்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்துக்  கொண்டவர்.பக்கத்து வீட்டு மரத்தின் கிளை நம் வீட்டை எட்டிப் பார்த்தாலே சண்டையிட்டு அதை வெட்டும் வரை ஓயாத மனிதர்கள்தான் இங்கே அதிகம். 
  ஆனால்  மரங்களை வெட்டினால் இவர் மனம் துடிக்கும். இவர் சொல்வதைக் கேட்டால் உலகம் பிழைக்கும். பசுமை தழைக்கும்.
   சுற்றுச்  சூழல்ஆர்வலரான இவர் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துகிறார். இடமும் மின்சாரமும் கொடுத்தால் போதும் பிஞ்சு நெஞ்சங்களில் மரங்கள் பற்றிய விழிப்புணர்வை என்னால் பதிய வைக்கமுடிய்ம் என்று அறுதியிட்டுக் கூறுகிறார். ஆர்வமுள்ள ஆசிரியர்கள்
அவரை கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளாலாம்.
M.Yoganathan
Pr No : 3994,
Tamilnadu State Transport Corporation,
Maruthamalai Branch,
Coimbatore.


Home Address
107, Thirumalai Samy Naidu Street,
New Sidhapudur,
Coimbatore - 44.
Mobile
: 09443091398.
வலைத்தள  முகவரி 
http://yogutree.com

 இதோ மரங்களைப் பற்றிய ஒரு கவிதை
                  பயன்படா மரங்கள் 

             இயற்கைக்கு அழகு சேர்க்கும் 
              அணிகலன் மரமேயாகும் 
              இறைவன்  நமக்களித்த 
              இனியதோர் வரமே யாகும்

              மண்ணுக்கு மழையைத் தருமே
              உலகுக்கு நிழலைத் தருமே
              கண்ணுக்கு குளிர்ச்சி தருமே
              உண்பதற்கு உணவு தருமே

              மலைகளுக்கு ஆடையாகும் 
              குயில்களுக்கு மேடையாகும்
              பறவைகளுக்கு  கூடு ஆகும்
              ஒரு சிலர்க்கு வீடும் ஆகும்
              
              விருந்தினர்  உணவுஉண்ண
              விரும்பியே இலைகள்கொடுக்கும்
              மருந்துகள்  பலவும் தந்து 
              மன்னுயிர் வாழச் செய்யும் 

              எரித்திட விறகைக் கொடுக்கும் 
              அரித்திடும் மண்ணைத் தடுக்கும்
              உண்ணவே கனிகள்  கொடுக்கும்
              உயிர்வளி காற்றில் சேர்க்கும்

              வெம்மையை தடுத்து விடும்
              அசுத்தங்கள் எடுத்து விடும்
              பலப்பல பொருட்கள் செய்ய 
              பணிவுடன் தன்னைக் கொடுக்கும்

              பயன்பெறும் மனிதன் மரத்தை 
              ஒருநாளும் நினைப்பதில்லை 
              சுயநல மனிதர் அவர்க்கு 
              இயற்கையின்  மன்னிப் பில்லை

              மக்கட்  பண்பில்லா மனிதர் 
              மரம்போலே ஆவாரென்று
              வான்புகழ் வள்ளுவன் ஏனோ
              வாய் தவறி சொன்னான் அன்று 

              பயன்படா மரங்கள் என்றும் 
              மண்ணிலே முளைத்ததில்லை 
              மடிந்தபின்னும் மனிதருக்குதவும் 
              மரங்களுக்கு இணையே இல்லை.

              மரங்களின்  மகிமை அறியா
              மனிதரில்  சிலபேர் தன்னை 
              பயன்படா மரங்கள் என்பேன் 
              மறுப்பேதும் உண்டோ? சொல்வீர்!.


***********************************************************************************************
இதை படிச்சிட்டீங்களா?

புதன், 23 மே, 2012

சந்திப்பு=பதிவர்கள்+விஷாலினி+யோகநாதன்

    20.05.2012 புலவர் ராமானுசம் ஐயா அவர்களின் வேண்டுகோள் கவிதைக்கு கருத்திட்டுவிட்டு யூத் பதிவர் சந்திப்புக்கு புறப்பட்டேன். உதயம் தியேட்டர் அருகே இறங்கி சிவகுமாருக்கு ஃபோன் செய்து இருப்பிடத்தை அறிந்து நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக உள்ளே நுழைந்துவிட்டேன்.
    கேபிள் இளமைத் துடிப்புடன் (யூத்தாம்?) நின்றுகொண்டிருக்க,"ஹலோ! சார், நான் முரளிதரன்" என்று அறிமுகப்படுத்திக்கொள்ள "உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேனே" என்று கேட்க  "ஆமாம், புக் ஃபேர் ல பாத்திருக்கோம்." என்று நான் சொல்ல பரவாயில்லையே நம்மை நினைவு வைத்திருக்கிராரே என்று நான் மகிழ்ச்சி அடைந்து உட்கார, மீண்டும் , "உங்களை எங்கேயோ பார்த்திருக்கேறேனே" என்ற குரல் கேட்க ,இப்பதானே கேட்டார்! என்று நான் திரும்பிப் பார்க்க அடுத்து வந்த பதிவரை அதே கேள்வியுடன்  வரவேற்று இணைப்பு கொடுத்துக் கொண்டிருந்தார்  கேபிள்.
      மெட்ராஸ் பவன் சிவகுமார் இங்குமங்கும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். முதல் முறையாக  அவரை நேரில் பார்த்தேன். சத்தியம் டி.வி இல்  பார்த்ததைவிட இளமையாக இருந்தார்.
      ஒரு சில பதிவர்கள் தானாக வந்து அறிமுகப் படுத்திக் கொண்டார்கள். புலவர் ஐயாவும் சென்னை பித்தன் அவர்களும் ஒன்றாக உள்ளே நுழைந்தனர். முதன் முறையாக அவரைப் பார்த்தாலும் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. என்னை முரளிதரன் என்று அறிமுகப் படுத்திக்கொள்ள, கையைக் குலுக்கி, " இனிஷியலோடு டி.என்.முரளிதரன்னு  சொல்லுங்க " என்றார் கலகலப்பாக. அவர் என்னை அறிந்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. புலவர் அவர்களிடமும் என்னை அறிமுகப் படுத்திக்கொள்ள, அவரும் என்னை நினைவில் கொண்டிருந்தார்.   "என்ன படிச்சிருக்கீங்க! என்று கேட்டார். நான் கணிதம் என்று சொல்ல "அப்படியா நல்லா தமிழ்  எழுதறீங்க! தமிழ் படிச்சிருப்பீங்களோன்னு நினச்சேன்" என்றார். பேச்சில் அவர் பெருந்தன்மை வெளிப்பட்டது.

   சட்டென்று  திரும்பிப் பார்க்க மின்னல் வரிகள் கணேஷ் அமர்ந்திருந்தார். அவரும் உங்கள் பக்கத்திற்கு வந்திருக்கிறேன். உங்கள் அடையாள படம் பாரதி எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார்.
     சிறப்பு விருந்தினர்கள் விஷாலினி , யோகநாதன் ,கோகுல் தயாராக இருந்தனர்.  ஆரூர் மூனா செந்தில் புலவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

  "இந்த முறையாவது ஒரு அமைப்பை உருவாக்குங்கள். பதிவர்களுக்கு மிகவும் அவசியமானது இது. எதிர்காலத்தில் நிச்சயம் பதிவர்களுக்கு பல்வேறு வகையில் உதவியாக அமையும். நீங்கள் பொறுப்பேற்று நடத்துங்கள்.  அதற்கான செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னார்." இன்று எப்படியும் செய்து விடலாம் என்றார் ஆரூர் மூனா செந்தில்
ஆனால்  கடைசிவரை அதைப்பற்றி பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
        நிகழ்ச்சி தொடங்கியது. ஒரே வரியில் அனைவரையும் வரவேற்றார் சிவகுமார். கேபிள் தொகுப்பில் ஈடுபட அனைவரும் ஒவ்வொருவாராக மைக் பிடித்து தங்களை அறிமுகப் படுத்திக்கொண்டனர். எழுத்தில் பிய்த்து உதறும் பெரும்பாலான பதிவர்கள் பலருக்கு  மேடைக் கூச்சம் காணப்பட்டது. சென்னைபித்தன் அவர்களும் புலவர் அவர்களும் கம்பீரமாக அறிமுகப் படுத்திக்கொண்டனர். பிலாசபி,அப்துல்லா கார்க்கி, வீடு சுரேஷ் இவர்கள் அறிமுகமானார்கள்
       அறிமுகப் படலத்தின்போது பின்புறத்தில் இருந்து நக்கல் நையாண்டியுடன் உடனூட்டங்கள் (பின்னாடி வந்தா பின்னூட்டம்,உடனே சொன்னதால உடனூட்டம் ..ஹி,ஹி,) வந்து கொண்டிருந்தன.
       பின்னர் சிறப்பு விருந்தினர் சாதனைச் சிறுமி விஷாலினியின்  தாய் பேச அழைக்கப்பட்டார். ஈன்ற பொழுதினும் பெரிதுவந்த அந்த தாய் தன்  மகளின் சாதனைகளை அடுக்கினார். விஷாலினியின் நுண்ணறிவு ஈவு 225. நான்கு உலக சாதனைகளை நிகழ்த்தி உள்ளதாகவும் ஆனால் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், பதிவர் 'உணவு உலகம்' சங்கரலிங்கம் அவர்கள் எழுதிய பதிவு, உலகமே தனது பெண்ணை  கவனிக்க காரணமாக அமைந்தது என்றார். தினமும் ஆயிரக் கணக்கான மின்னஞ்சல்கள் வந்து கொண்டிருப்பாதாகவும் கூறினார். சான்றுக்கு ஒரு நாளில் வந்த அஞ்சல்களை அச்செடுத்து வந்திருந்தார். அதுவே மிகப் பெரிய புத்தகமாக இருந்தது.
    விஷாலினியின் சாதனைகளை வெளி உலகிற்கு அறிமுகப் படுத்த தான் பட்ட கஷ்டங்களை விளக்கினார். ஒருமணிநேரம் நீண்ட அவரது பேச்சு  ஆதங்கம்,சிறு கோபம், தன்னம்பிக்கை,பெருமை முதலிய உணர்ச்சிகள் நிறைந்ததாக அமைந்தது.
   அந்தப் பெண்ணிற்கு பதிவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் அதை வெளிக்கொண்டுவந்த சங்கரலிங்கத்திற்கும் பாராட்டுக்கள்.

   மரங்களை காதலியோடு சேர்த்து சுற்றி வந்து ஆடிப் பாடுபவர்கள் நமது திரைப்படக் கதாநாயகர்கள். ஆனால் மரங்களையே காதலியாக நினைத்து அதை சுற்றி வந்து காதலிக்கும் உண்மையான  கதாநாயகன் யோகநாதன்
  நடத்துனாராகப் பணியாற்றும் யோகநாதன் பல்வேறு இன்னல்களுக்கு இடையில் மரங்கள் வெட்டப் படுவதை தடுக்க தான் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளை உணர்ச்சியோடு விவரித்தார்.. இப்படியும் ஒரு மனிதர் இருக்கிறாரா என்று ஆச்சர்யப்பட வைத்தது. எதிர்ப்புகளின் காராணமாக 23 மாதத்தில் 9 முறை இட மாற்றம் செய்யப்பட்டார் என்பதை அறியும்போது வேதனை ஏற்பட்டது. மரங்கள் நடுவதற்கும் மரம் வெட்டுவதை தடுப்பதற்கும் பண இழப்புகளையும் பொருட்படுத்தாது செய்த பணிகள் பிரமிக்க வைத்தன. தனது அழைப்பட்டையில் சுற்றுச் சூழல் போராளி (Eco Warrior) என்று அச்சடித்துள்ளார். இப் பணிகளுக்கு விடுப்பு கிடைக்காததால் அடிக்கடி தான் சம்பளமில்லா விடுப்பில் செல்வதாகவும் சேமநலநிதியில் பணம் எடுத்து செலவுசெய்ததாகவும் சொன்னது வேதனை அளித்தது.  அவரது சேவைகளைப் பார்க்கும்போது நாம் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்தோம்! என்று வெட்கப் பட வைத்தார்.
     பதிவர் அப்துல்லா யோகநாதனை பாராட்டிப் பேசினார். யோகநாதன் அரசு அதிகாரிகளையும் ஊழியர்களையும் தான் நம்பவில்லை என்று சொன்னதற்கு தாங்கள் அப்படி சொல்வது சரியல்ல பேருந்து நடத்துனர்களைக் கூடத்தான் மக்கள் நம்பவில்லை. ஆனனல் நீங்கள் நம்பிக்கைக்குரியரவராக இருக்கிறீர்களே என்று சொன்னபோது கைத் தட்டல்கள் கிடைத்தது.
     கேபிள் சங்கர் பதிவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தவர் என்று புகழ்ந்தார்.உண்மைதான்.
 மேலும் ஓரிருவர் பேசியதும் கேபிள் அண்ணன் மிக சுருக்கமாக நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.

    மரங்களைப் பற்றிய ஒரு கவிதை எழுதி அதை ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டு சாதனை படைத்த யோகநாதனுக்கு வாசித்து அர்ப்பணிக்க நினைத்த நான் அதற்கு நேரம் கிடைக்காததால்  புறப்படுமுன்  அவரைப் பார்த்து சேவையைப் பாராட்டி கவிதை எழுதி இருப்பதையும் சொல்லி, அவருடைய சேவைகளுக்காக செலவு செய்யும் பணத்தை எல்லாம் ஈடு செய்ய  முடியாது என்றாலும் ஒரு  ஐநூறு ரூபாயை அவரிடம் மரங்களுக்காகப் பயன் படுத்திக்கொள்ளும்படி வற்புறுத்திக் கொடுத்தேன்.
(பிறகு சிந்தித்துப் பார்த்தபோது அனவைருக்கும் எதிரில் தந்திருந்தால் வேறு யாரேனும் கூட தந்திருப்பார்கள் என்ற எண்ணம் தோன்றியது.)

   பதிவர் கோகுலுக்கு சிறந்த யூத் பதிவர் விருது வழங்கப்பட்டது.அவர் தனது திருமண அழைப்பிதழை வந்திருந்தோருக்கு வழங்கினார். நிகழ்ச்சி அதிக நேரம் நடந்ததால் பேச நினைத்த புலவர் அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. பதிவர்சங்கம் உருவாக்கவேண்டும் என்று எண்ணத்தை வலியுறுத்த இயலவில்லை. 
   இது தொடர்பாக கேபிள் சங்கர் அவர்களுடனும் பேசிக் கொண்டிருந்தார்.
   நிகழ்ச்சியை வடிவமைப்பதில் இன்னும் கொஞ்சம் seriousness இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
   பதிவர் சந்திப்பிற்கு இடம்  அளித்து டிஸ்கவரி புக் பேலஸ்  மற்றும் தேநீர் விருந்தோடு பயனுள்ள வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை நடத்திய பதிவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்தவித பிரதிபலனும் பாராமல் உழைத்த பதிவுலக நண்பர்களுக்கு நன்றி. டிஸ்கவரி புக் பேலஸ் வந்திருந்த அனைவருக்கும்ஜெயமோகன் புத்தகத்தை நினைவுப் பரிசாக அளித்தது.
இது  ஒரு பதிவு செய்யப்பட வேண்டிய பதிவர் சந்திப்பு.

  அடுத்த  சந்திப்பை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

யோக நாதனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட மரங்கள் பற்றிய கவிதை அடுத்த பதிவில்
 .

திங்கள், 21 மே, 2012

+2 தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள

           (முடிவுகளுக்கான இணைப்புகள்  கீழே உள்ளது.)
  பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் சில  மணிநேரமே உள்ளது. லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் எதிர்காலமே அன்றுதான்  தெரியப்போகிறது என்ற (தவறான) எண்ணத்துடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். மாணவர்களைவிட அதிக டென்ஷனுடன் இருப்பார்கள். அநேகமாக இன்று இரவு அவர்களுக்கு உறக்கம் வராது. உறவினர், நண்பர்களின் மகன்/மகன்களோடு ஒப்பீடு செய்யத் துடித்துக் கொண்டிருப்பார்கள். முன்பெல்லாம் +2 தேர்வு முடிவுகள் செய்தித்தாளில் வெளிவரும். அதில் மதிப்பெண்கள் அறிய முடியாது. ஒரு வார காலத்திற்குப் பிறகே பள்ளிக்கு மதிப்பெண் சான்றிதழ் வரும், அப்போதுதான் மதிப்பெண்களையே அறிந்து கொள்ள முடியும். இப்போது அப்படியல்ல. அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக, முடிவுடன் சேர்த்து மதிப்பெண்களும் தெரிந்துவிடுகிறது. தேர்ச்சி பெற்றாலே பெரிய விஷயம் என்ற நிலை மாறி அதிக மதிப்பெண்களே குறிக்கோளாக அமைந்துள்ளது. எண்பது சதவீதம் வாங்கினால் கூட ஏன் அவ்வளோ குறைஞ்சிபோச்சு என்று பரிதாபத்துடன் பார்ப்பவர்களும் உண்டு. 
  ஆனால் இன்றும் தேர்வில் தோல்வி அடைபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.
      அதெல்லாம் இருக்கட்டும். கீழ்க்கண்ட இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.முன்பெல்லாம் மற்றவர்களின் மதிப்பெண்களை அவர்கள் சொன்னால்தான் தெரிந்து கொள்ளமுடியும்.அது உண்மையா பொய்யா என்று அறிந்து கொள்ள இயலாது. ஆனால் இப்போது மற்றவர்களுடைய மதிப்பெண்களையும் அறிந்துகொள்ள முடியும். 
   உங்கள் மகன்/மகள், உறவினர்களின் மகன்/மகள் உங்கள் போட்டியாளார்களின்  மதிப்பெண்களையும் அறிந்து கொள்ளுங்கள். ஆனால் யாருடனும் யாரையும் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்.
இது  தேர்வு முடிவுதானே தவிர வாழ்க்கை முடிவு அல்ல என்பதை உணர்வோம்! உணர்த்துவோம்!.
மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்!.
இந்த இணைப்புகளில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்து நுழையுங்கள்.
http://tnresults.nic.in/
http://dge1.tn.nic.in/
http://dge2.tn.nic.in/
http://dge3.tn.nic.in/
http://tnpubliclibraries.gov.in/
https://results.reportbee.com/
http://results.dinamalar.com/
http://dinakaran.com/
http://jayanews.in/
http://tnresults.puthiyathalaimurai.tv
http://tnresults.puthiyathalaimurai.tv/


************************************************************************************************************
 மார்ச் 2012 ல சிலர் இப்படி இருந்தாங்க!இதையும் படிச்சி பாருங்க!
தேர்வு வந்துடிச்சி! டென்ஷன் ஏறிடிச்சி!

ஞாயிறு, 20 மே, 2012

அது உன் கவலை! எனக்கென்ன?


 அது ஒரு கிராமத்து வீடு. அந்த வீட்டுக்காரன் வாத்து, கோழி,  பன்றி, ஆடு, மாடு,இவற்றை வளர்த்து வந்தான். அந்த வீட்டில் எலி ஒன்று ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் வீட்டுக்காரன் பையில் ஏதோ வாங்கி வந்திருந்தான். .மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த எலி அந்தப் பைக்குள் என்னதான் இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்தது.

    பைக்குள்ளிருந்து அந்தப் பொருளை  வெளியே எடுத்தான் வீட்டுக்காரன். அதைப் பார்த்த எலி அதிர்ச்சி அடைந்தது. அது ஒரு எலிப்பொறி. அதை தன் மனைவியிடம் சொல்லிக்  கொண்டிருந்தான், "இனி நம் வீட்டில் எலித் தொல்லை இருக்காது. இன்று இரவு ஒரு மசால் வடையை உள்ளே வைத்து எலிப்பொறியை மூலையில் வைத்துவிடு. எலி மாட்டிக்கொண்டுவிடும்"

  தனக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய எலி வெளியே ஓடிவந்து அங்கிருந்த கோழியிடம் "இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை" என்றது.

   அதைகேட்ட  கோழி, "ஏ, எலியே! அது உன் கவலை.எனக்கென்ன? எலிப்பொறியில் நானா மாட்டப் போகிறேன்?." என்று அலட்சியத்துடன் சொன்னது.

  வருத்தமடைந்த எலி அருகில் இருந்த வாத்தைப் பார்த்து,"இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை!" என்று எச்சரித்தது.

   "முட்டாள் எலியே! என்னிடம் ஏன் இதைச் சொல்கிறாய்?என்னால் உனக்கு உதவ முடியாது, போ!போ!" துரத்தியது வாத்து.

   வேதனையுடன் ஆட்டிடம் சென்று சொன்னது "இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை"

   "ஓ! எலியே! உன் நிலை பரிதாபமாகத்தான்  உள்ளது. எதற்கும் நீ எச்சரிக்கையாக இரு. மசால் வடை வாசனைக்கு மயங்கி விடாதே!"
என்று ஏளனத்துடன் சொல்லி விட்டு தழையைத் தின்ன ஆரம்பித்தது.

    என்ன  செய்வது என்று புரியாமல் நின்ற எலி பன்றியைப் பார்த்து, "பன்றியே! இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை!" எனக் கூவியது.

    "எலியே! எலிப்பொறியால் என்னை என்ன செய்ய இயலும்.? அதனால் எனக்கு கவலையில்லை. நான் வீட்டுக்கு வெளியே இருக்கிறேன். என் உதவியை எதிர்பார்பப்பது வீண்?" என்று சொல்லிவிட்டது பன்றி.

    கடைசியாக பசுவிடம் வந்த எலி, "ஓ! பசுவே! இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை" என்றது.

  "உன்னை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. உன்னால் அவர்களுக்கு என்ன லாபம்? எங்களைப் போல் அவர்களுக்கு நீ உதவியா செய்கிறாய்? அவர்கள் சேர்த்து வைத்ததை எல்லாம் தின்று விடுகிறாய். அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்துகிறாய். உன்னை அவர்கள் கொல்ல  நினைப்பது நியாம்தானே! உன் தலைவிதி அவ்வளவுதான்!" என்று கிண்டலடித்து சிரித்தது பசு.

   யாரும் உதவி செய்ய முன்வராத நிலையில் இரவு தூங்காமல் எச்சரிக்கையுடன் விழித்திருந்தது எலி.
      
   நடு இரவில் திடீரென்று  எலிப்பொறி மூடிக் கொள்ளும் சத்தம் கேட்டது. எலி மாட்டிக்கொண்டிருக்கும் என்று நினைத்து வீட்டுக்காரனின் மனைவி எலிப்பொறியை எடுக்க சென்றாள் அதில் ஒரு நச்சுப் பாம்பின் வால் பொறியில் மாட்டிகொண்டது. அதை அறியாமல் பொறியைத் தொட, பாம்பு தீண்டிவிட்டது. வீட்டுக்காரனின் மனைவி அலற, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றான் வீட்டுக்காரன். சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியபோதும் மனைவிக்கு காய்ச்சல் குறையவில்லை.
  
  கோழி சூப் வைத்து சாப்பிட்டால் காய்ச்சல் நின்றுவிடும் என்று யாரோ சொல்ல, அதைகேட்ட வீட்டுக்காரன் தான் வளர்த்த கோழியைக் கொன்றான் சூப் வைத்து சாப்பிட. ஆனாலும் மனைவியின் நிலையில் முன்னேற்றம் இல்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உறவினர்கள்,நண்பர்கள்  என்று தினந்தோறும் ஒரு பெருங்கூட்டம் அவனது மனைவியைப் பார்க்க வந்து கொண்டிருந்தது .
   வந்திருப்பவர்களுக்கு உணவளிப்பதற்காக வாத்துகளைக் கொன்றான். அதுவும் போதாமல் ஆட்டையும் இறைச்சிக்காக கொன்றுவிட்டான். மனைவியின் சிகிச்சைக்கு செலவு செய்ய பன்றியை இறைச்சிக் கடைக்கு விற்றுவிட்டான்.

  எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் வீட்டுக்காரனின் மனைவி இறந்து போனாள். ஈமச் சடங்கிற்கும் அதன் பின் நிகழ்வுகளுக்கும்  பணம் இல்லாதால் தான் வளர்த்த மாட்டை மாட்டிறைச்சி வியாபாரியிடம் அடிமாடாக விற்றுவிட்டான்.

    இவை  அனைத்தையும்  வீட்டுக்குள்ளிருந்து   வேதனையுடனும் கவலையுடனும் பார்த்துக்கொண்டிருந்த எலி "நான் மட்டும்தான் ஆபத்தில் இருக்கிறேன் என்று நினைத்து எனது எச்சரிக்கையை இவர்கள் அலட்சியப் படுத்தினார்களே! எனக்கு வந்த ஆபத்து இவர்களை அல்லவா பலி கொண்டுவிட்டது." என்று சொல்லி அழுதது.

"பிறர்  ஆபத்தில்  இருக்கும்போது துன்பம் அவர்களுக்குத்தானே! அதனால் நமக்கென்ன என்று சுயநலத்துடன் இருக்கிறோம். அத்துன்பம் ஏதேனும் ஒருவகையில் நம்மைத் தாக்கும்போதுதான் உண்மையை உணர்கிறோம்."
எலி  எனக்கு சொன்ன பாடமிது. இல்லை! இல்லை  எலி  எனக்கு சொன்ன வேதமிது.

பிடித்திருந்தால்  கருத்தளிப்பீர்! வாக்களிப்பீர்!

***********************************************************************************************
இதையும் படியுங்க!


  

வியாழன், 17 மே, 2012

IPL - ஒரு கிரிக்கெட் ரசிகரின் திருக்குறள்

   ஐ.பி.எல் தேவையா வேண்டாமா என்று ஒரு பக்கம் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. வேண்டாம் என்பவர்களுக்கு வலு சேர்க்கும் வகையில் சூதாட்டப் புகார்கள்.இவை  கிரிக்கெட் ரசிகர்களை வருத்தம் அடையைச் செய்கின்றன. இருந்தபோதும் இளைஞர்களின்  ஐ.பி.எல் ஆர்வம் இதனால் குறைந்து விடாது என்றே தோன்றுகிறது. உற்சாகம் கொப்பளிக்கும் ஐ.பி.எல் ஒரு திருவிழாவாகவே அமைந்துள்ளது. 
   பிரபல பதிவர் மோகன்குமார் சொல்வது போல ஐ.பி.எல் முழு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து (சண்டைக் காட்சிகள் கூட களத்தில் உண்டு)  காணப்படுகிறது. முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கூட ஐ.பி.எல் காலங்களில் திரைப்படங்கள் வெளியிடத் தயங்குகிறார்கள். திரை அரங்குகள் காலியாக காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
   இதெல்லாம்  எதற்கு சொல்கிறேன் என்றால் ஐ.பி.எல் நடந்து கொண்டிருக்கும்போதே  அதைப் பற்றி எழுதிய பத்து திருக்குறளை பதிவிடப் போகிறேன் என்று எச்சரிப்பதற்காகத்தான் (திருவள்ளுவர் எழுதியதுதான் திருக்குறள். நீ எழுதினா தெருக்குரல் என்றுயாரோ சொல்வது போல் இருக்கிறது.)

1.          தேவையா  ஐ.பி.எல் என்பார் சிலபேர்கள் 
             சொல்வதை  மறந்து  விடு.

2.          இளமைக்கே ஐ.பி.எல் என்றிருக்க வேண்டாம்
            தலை'மை' அடித்தாவது செல் 

3.          ஆண்டியும்  வந்திடுவார்  காண்பதற்கு ஐ.பி.எல்
             தூண்டும் கிரிக்கெட் வெறி

4.          ஒன்றும் இரண்டும் ஓடாதே  எப்போதும் 
            சிக்சரும் ஃபோரும் அடி.

5.           தடுப்பாட்டம் வேண்டாம் தம்பிகளே-அப்போது 
             கடுப்பாகி வீசுவார் கல்

6.           கேட்ச்கள் விடுதல் அழகல்ல அதனாலே
             மேட்ச்வெற்றி கைவிட்டுப் போம்.

7.           ஒருரன் ஒரு பந்து விக்கெட்டால் ஆட்டம்
             விறுவிறுப்பு கூடுமே பார்.

8.           ஏளனமாய் நினைக்காதே எதிரணியை அவ்வணியின்
             ஏப்பையும் எட்டுவார் இலக்கு.

9.           ஆட்டம் போரடிக்கும் நேரமுண்டு அப்போது 
             அழகியர்  ஆட்டம் ரசி.

10.          சூதாடும் ஜாக்கியிடம் சிக்காதே உன்வாழ்வு 
             சூனியமாய் ஆகிவிடும் சிந்தி.


( இதுக்கெல்லாம் இலக்கணம் பாக்கப்படாது.)

*********************************************************************************************************
பிடிச்சிருந்தா  தட்டலாம் 
பிடிக்கலன்னா திட்டலாம்  
கோவம்னா    குட்டலாம்
இதைப் படிச்சாச்சா?

திங்கள், 14 மே, 2012

வேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை

வேலை தேடும் வடிவேலு - பகுதி 2 இன் தொடர்ச்சி.
  வடிவேலு வேலை கிடைப்பதற்காக இந்தப் புதிருக்குத்தான் விடை கண்டு பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டிருந்தார்.
         (வேலை தேடும் வடிவேலு - பகுதி 1)

உன்கிட்ட நூறு ரூபாய் இருக்கு. நூறு ரூபாய பிரிச்சி ஏழு பொட்டலத்தில கட்டி வைக்கணும். அப்படி கட்டி முடிச்சதும் ஒரு ரூபாயிலிருந்து நூறு ரூபா வரை எவ்வளவு  கேட்டாலும் பொட்டலமாகத்தான் எடுத்து குடுக்கனும். அப்படி குடுக்கனும்னா ஒவ்வரு பொட்டலத்திலும் எவ்வளவு காசு வைக்கணும்?. ஒரு பொட்டலத்துக்கு மேலயும் குடுக்கலாம். ஏழு பொட்டலமும் சேத்தும் குடுக்கலாம். எந்தக் காரணத்தை கொண்டும் பொட்டலம் கட்டிமுடிச்சதும் அதை பிரிக்ககூடாது.
Read more: http://tnmurali.blogspot.com/#ixzz1unhJ3s7l
(இந்தப் புதிருக்கு சரியான விடை சொன்னவர் ராஜா பிரதீப். அவருக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்)

  வடிவேலு, கையில் பேப்பரை வைத்துக்கொண்டு விதம் விதமாக எண்களை எழுதிப் பார்த்துக்கொண்டிருந்தப்போது அவருடைய நண்பர்கள் வந்தனர்.
"அண்ணே! விடை கண்டுபிச்சிட்டீங்களா?"
"ஒரு வாரமா முட்டி மோதிக்கிட்டிருகேன். கண்டுபிடிக்க முடியலையே!"
"நீங்க கண்டு பிடிக்க மாட்டேங்கன்னு எங்களுக்கு தெரியும்.?அதனால உங்களுக்கு உதவி செய்யறதுக்காக நித்தியானந்தா கிட்ட அருள் வாக்கு கேட்டுட்டு வரோம்"

"யாரு! ரஞ்சிதாவோட ஆட்டம் போட்டாரே அந்த சாமியாரா? அவருக்கு என்னடா தெரியும்?"

"அண்ணே! அவர சாதரணமா நினச்சிடாதீங்க.அவர் உங்களுக்காக அருள்வாக்கு சொல்லி  இருக்காரு. அந்த அருள் வாக்குல விடை இருக்கும் தேடிப்பாருன்னு அவருடைய சீடருங்க சொல்லறாங்க."

"அப்படி என்னடா சொன்னாரு!"

"அவரு கண்ண மூடிக்கிட்டு சொன்னத சொல்லறோம். 
நீ, 
நான்,
ரஞ்சிதா, 
எல்லா திசையிலும் தேடி பாருங்க,
ரெண்டு  சவரன எடை போடு
நான் சிரிக்கும்போது எண்ணி பாரு.
மீதி ஏதும் விடாதே!" 

"ஒண்ணுமே  புரியலயேடா"

  "அண்ணே இதை சொல்லிக்கிட்டே இருங்க  விடை கிடைச்சிடும். அண்ணே குளிக்கரதக் கூட மறந்துட்டு இப்படி கணக்கு போட்டுக்கிட்டு இருக்கீங்களே! உங்கள எப்படி பாரட்டறதுன்னே தெரியலண்ணே "

நான் நாலு நாளா குளிக்காதது உங்களுக்கு எப்படிடா  தெரியும்?

"கொஞ்சம் ஸ்மெல் ஓவரா வருதுண்ணே!  குளிச்சிட்டு வந்துடுங்க  நாங்க வெய்ட் பண்ணறோம்.
  "நீ நான் ரஞ்சிதா ........" என்று  வடிவேலு  அதை சொல்லிக்கொண்டே போன வடிவேலு திடீரென்று பாத்ரூம் கதவைத் திறந்துகொண்டு கொண்டு கண்டு பிடிச்சிட்டேன். கண்டு பிடிச்சிட்டேன்....என்று கூவிக்கொண்டே டிரஸ் போடாதாதைக்கூட மறந்து வெளியே ஓடி வந்தார்.
"என்னன்னே ஆர்க்கிமிடிஸ் மாதிரி டிரஸ் போடாம ஓடி வறீங்க! நண்பர்கள் சொன்னபிறகு டிரஸ் போட்டுக்கொண்டு வந்தார்.
"கண்டு பிடிச்சிட்டீங்களா விடை என்ன?எப்படி கண்டு பிடிச்சீங்க!'
"அடேய்! "நீ" எத்தனை எழுத்து?

"ஒண்ணு"
" 'நான்'  எத்தனை எழுத்து?"
"ரெண்டு'
"ரஞ்சிதா?"
"நாலு"
"எல்லா திசையிலும் தேடிப்பாருன்னா? 
"ரொம்ப பெரிசா இருக்கு.எண்ணிப் பார்க்க முடியாதுன்னே."
"இதை எண்ணிப் பாக்கக் கூடாது. எல்லாதிசைன்னு சொன்னா எட்டு திசை".
"அதாவது எட்டு."
"ரெண்டு சவரன எடைபோடுன்னா"
"ரெண்டு சவரன எடை போட்டு பாத்தா 16 கிராம் இருக்கும்."
"அப்பா நான் சிரிச்சா எண்ணிப்பாருன்னு சொன்னாரே அதுக்கு என்ன அர்த்தம்?
"அவரு சிரிக்கும்போது பல்லை எண்ணினா எத்தனை இருக்கும்?
"முப்பத்து ரெண்டு. சூப்பர்ணே"
"அப்புறம் மீதி ஏதும் விடாதேன்னா. மேல சொன்ன 1, 2, 4, 8,16, 32 

 இதெல்லாம் கூட்டினா 63. மொத்தம் நூறுல மீதி இருக்கறது 37."

அதனால  ஒவ்வொரு பொட்டலத்திலயும்  1, 2, 4, 8, 16, 32 ,37 (இதுதான் விடை) ரூபா இருக்கற மாதிரி கட்டி வச்சா எத்தனை ரூபா கேட்டாலும் பொட்டலங்கள் பிரிக்காம எடுத்துக் கொடுக்கலாம். அட.. அட.. என்னா அருள்வாக்கு!  "
"47 ரூபா எப்படி எடுப்பீங்க. சொல்லுங்க பாக்கலாம்.
"2  ரூபா பொட்டலம் , 8 ரூபா பொட்டலம்  , 37 ரூபா பொட்டலம்"
"ரொம்பப் பிரமாதம் ணே உங்களுக்கு வேல கிடச்ச மாதிரிதான்"
" நித்தி அப்படி இப்படி இருந்தாலும் கணக்கில கில்லாடிதான் .சரி சரி உடனே கிளம்புங்க வேற எவனாவது வந்து விடை சொல்லிடப்  போறான்"
                                                  (தொடரும்)
கிளம்பிச் சென்ற வடிவேலுக்கு வேலை கிடைத்ததா? அவசரப் படாதீங்க! சீக்கிரமே சொல்லிடறேன்.

வடிவேலுக்கு வேலை கிடைத்ததா? பகுதி 3 

********************************************************************************************** 

ஞாயிறு, 13 மே, 2012

அவனியில் இதை எது மிஞ்சும்?  இன்று உலக அன்னையர் தினம்.உலகின் மிக உயர்ந்த உறவு தாய். அனைத்து உறவுகளுக்கும் அடிப்படை தாய்.அந்தத் தாயைப் பற்றி சந்தத் தமிழில் எனது சொந்தத் தமிழில் கவிதையாக்கி, அனைத்து அன்னையருக்கும் சமர்ப்பிக்கிறேன்


                  சொல்லவே முடியாத் துயரில்
                      சோர்ந்தே விழுந்த போதும் 
                  மெல்ல எடுத் தணைத்து
                       மழலையை  இதமாய்த் தொட்டு 
                  வெல்லக் கட்டி என்றும்
                         வேங்கையின் மகனே என்றும்
                  செல்லமாய்த் தமிழில் கொஞ்சி
                        சேயினைக் காப்பாள் அன்றோ?            1


                   காலை  எழுந்த  உடன்
                          கடிகாரம் கடிது ஓட
                   சேலையை சரியாய்க்  கட்ட
                          சிறிதுமே நேரமும் இன்றி
                   வேலை செய்து கொண்டே
                          விரைவாய் இடையில் வந்து
                    பாலை வாயில் இட்டு
                            பக்குவமாய்  சுவைக்க வைப்பாள்        2


                     சத்துணவு நமக்கே தந்து
                            சுவையுணவு  மறந்த போதும்
                     பத்தியம் பலவா ரிருந்து
                              பகலிரவாய் விழித்த போதும்
                      நித்திய வாழ்க்கை தன்னில்
                              நிம்மதி இழந்த போதும்
                      சத்தியத்  தாய் தன் அன்பில்
                             சரித்திரம்  படைத்து நிற்பாள்        3


                      பச்சிளம் பாலகன் தன்னை
                             அம்மா என்றழைக் கும்போதும்
                      அச்சிறுவன் வளர்ந்து பின்னர்
                             அறிஞனாய் ஆகும் போதும்
                      மெச்சி அவன் புகழை
                               மேலோர்கள் சொல்லும் போதும்
                       உச்சியே குளிர்ந்து போவாள்
                                உவகையில் திளைத்து நிற்பாள்        4


                       பேய்குணம் கொண்டே பிள்ளை
                                பெருந்துயர் தந்திட் டாலும் 
                       சேய்குனம் சிறிதும் இன்றி
                                சிறுமையை அளித்திட் டாலும்
                        நாய்குணம் மனதில் கொண்டே
                                நல்லன மறந்திட் டாலும்
                        தாய் குணம்  மாறா தம்மா
                                 தரணியில் உயர்ந்த தம்மா!               5 


                        விண்ணைத் தொடும் அளவு
                               வளர்ந்திட்ட தென்னை போல்
                        என்னையே எடுத்துக் கொள்
                                என்றீயும்   வாழை     போல்
                        தன்னையே நினையா நெஞ்சம்
                                தன்னலம் பாரா நெஞ்சம்
                        அன்னையின் அன்பு நெஞ்சம்
                               அவனியில் இதை எது மிஞ்சும்?       6


*******************************************************************************       

வியாழன், 10 மே, 2012

மந்திர எண் நூறு


இது எனது நூறாவதுபதிவு.

கற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான்
பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை -ஆனாலும்
உற்றதுணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா
பற்றியெனைத் தூக்கி விடு. 
   
  என்ற கடவுள் வாழ்த்துவெண்பாவில் தொடங்கினேன். இன்று நூறாவது  பதிவைத் தொட்டிருக்கிறேன். நூறு என்பது ஒரு மந்திர எண். நூறாண்டு வாழ்க. நூறு ரூபாய். நூறு கி.மீ. வேகம். கிரிக்கெட்டில் செஞ்சுரி. ஆயிரத்தைக்கூட நூறுகளில் சொல்வதைப் பார்த்திருக்கலாம். நூறு நாள் ஓடும் படம். இப்படி நூறுக்கு இருக்கும் வசீகரம் வேறு எங்களுக்கு இல்லை.
     நூறு பதிவு என்பது சாதனை அல்ல. பல பதிவர்கள் அனாயாசமாக நூறைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் நானும் சென்சுரி அடித்தவர்களில் ஒருவன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
   நான் பதிவர் என்பது நண்பர்களுக்குக் கூட தெரியாது. அலுவலகத்திலும் தெரியாது.
    எனக்கு  ஓரளவிற்கு எழுத்தார்வம் உள்ளது என்றால் அதற்கு காரணம் எழுத்தாளர் இலக்கியவீதி இனியவன் அவர்கள். நான் நான்காம் வகுப்பிலிருந்து கதை புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன். அப்பொழுது இனியவன் அவர்கள் எழுதுவதை பின்னல் இருந்து பார்த்துக் கொண்டிருப்பேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது அடித்தளம் என்ற எனது முதல் கதையை எழுதினேன். அதை எதிர்பாராமல் படித்த எழுத்தாளரின் உறவினரும் (தற்போது அவரின் மருமகன்) எனது நண்பர் அதனை  அரும்பு என்ற இதழில் வெளிவரச் செய்தார்.. அதை அவர் பாராட்டியது, எழுதுவதற்கு தூண்டு கோலாக அமைந்தது. கவிதைகள் கதைகள் ஒன்றிரண்டு பிரசுரமாகி இருந்தாலும் அதைத் தொடர இயலவில்லை. எழுதுவதை எல்லாம் நோட்டுப் புத்தகத்தில் நான் மட்டும் அறிந்ததாகவே இருந்தது. இப்போது அவற்றை வெளிப்படுத்தும் வாய்ப்பு பதிவுலகின் மூலம் கிடைத்ததற்கு கூகுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

   இந்த நூறு எனக்கு பல அனுபவங்களை தந்திருக்கிறது.ஆரம்பத்தில் எனது பதிவுகள் யாராலும் படிக்கப் படவில்லை.(நல்லா எழுதினாத்தானே?) முதல் மூன்று பதிவுகளுக்குப் பின் கிட்டத்தட்ட ஓராண்டு வரை எந்தப் பதிவும் இடவில்லை. பின்னர் எங்கள் வீட்டில் வளர்ந்த செல்ல நாய் ஜூனோ எதிர் பாரவிதமாக இறக்க  அதன் பாதிப்பில் இரங்கல் கவிதை ஒன்றை (ஜூனோ! எங்கள் செல்லமே!) பதிவிட்டேன். ஒரு சிலர் பார்த்தனர்.
  ஒரு நம்பிக்கை ஏற்பட மேலும் ஒரு சில கவிதைகளை பதிவிட்டேன்.  பிறருடைய பதிவுகளை அதிகமாக வாசிக்கத் தொடங்கினேன். மோகன் என்பவரின் வானவில் எண்ணங்கள்தான் நான் படித்த முதல் பதிவு. அப்போது பதிவுலகில் நிறையப்பேர் இருக்கிறார்கள் என்பதை அறியாதவனாகவே இருந்தேன். பின்னர் கேபிள் சங்கரின் வலைப்பதிவைப் படிக்க நேர்ந்தபோதுதான் பிரம்மாண்டமான தமிழ்ப் பதிவுலகம் உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன். விவாதங்கள், சண்டைகள், கிண்டல்கள் ,கலாய்த்தல்கள், உள்ளது என்பதையும் அறிய நேர்ந்தது, சிறிது அச்சமும் ஏற்பட்டது.

   தமிழ்மணம்  வலைத்திரட்டி பற்றி தெரிந்துகொண்டு என்னுடைய வலைப்பதிவையும் இணைத்த பிறகுதான் திருப்பம் ஏற்பட்டது. எனது பதிவுகள் கவனிக்கப் பட ஆரம்பித்தது. கவிதைகள் மட்டுமல்லாது பிற தலைப்புகளிலும் பதிவிட்டேன். இன்டலி, தமிழ் 10, உடான்ஸ், உள்ளிட்ட பல்வேறு திரட்டிகளில் இணைக்கக் கற்றுக் கொண்டேன். 
 தமிழ்மணத்திற்கு மிக்க நன்றி. பிற திரட்டிகளுக்கும் நன்றி 

  ஓரளவிற்கு எனது பதிவுகள் கவனிக்கப்படுவது கண்டு மகிழ்ச்சி ஏற்பட்டது. பக்கப் பார்வைகளுக்கான கேட்ஜெட்டை இணைத்த பின்பு எனது வலைப்பதிவுகளுக்கு பார்ப்பவர்களின் எண்ணிக்கையை அறிந்து கொண்டேன். பார்த்துக்கொண்டிருக்கும்போதே எண்ணிக்கை சட்டென்று ஒன்றிரண்டு உயர்வது கண்டு ஆச்சர்யம் ஏற்பட்டது.யாரோ தற்போது பதிவுகளை பார்த்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.ஒவ்வொரு முறையும் இதைப்போல நிகழ, நான் பார்க்கும் பார்வைகளையே அது கணக்கில் எடுத்துக்கொண்டு எண்ணிக்கையை உயர்த்திக்காட்டியதை உணர்ந்தேன். பின்னர் செட்டிங்க்ஸில் இதற்கு ஒரு வழி இருப்பது தெரிந்தது. Dont Track Your Own Pageviews என்பதை தேர்வு  செய்தபின் எனது பதிவுகளை நான் பார்க்கும்போது எண்ணிக்கை உயர்வது தடுக்கப்பட்டது.அதிலும்  ஒரு சிக்கல் ஒவ்வொரு ப்ரௌசரிலும் இந்த மாற்றத்தைச் செய்ய வேண்டி இருந்தது.
  கூகிள்  கவுண்டர் தவிர ஹை ஸ்டேட்ஸ் கவுன்ட்டர் பயன் படுத்தும்போது கூகுளுக்கும் அதற்கும் பேஜ் வியூ எண்ணிக்கையில் பெரிய வேறுபாடு இருந்தது. அதிலும் I.P exclusion என்ற ஆப்ஷன் தேர்ந்தெடுத்து நமது  I.P அட்ரஸ் கொடுத்தபோது இந்த வேறுபாடு ஓரளவிற்கு குறைந்தது.
   தமிழ்மணத்தில் சேர்ந்தபோது எனது தமிழ்மணம் தர வரிசை 2000 க்கும் மேல் இருந்தது. மெதுவாக உயர்ந்து தற்போது 272  இல் இருக்கிறேன்.
  முன்னணிப் பதிவர்கள் பலரும் பின்னூட்டம் அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் மூன்று பின்னூட்டமிட்ட Elan  ராம்ஜி யாஹூ., பொன்சந்தர் மூவருக்கும் நன்றி.
  இணையம் இளைஞர்களுக்கே வாகானது எனது என்ற எண்ணத்தை தகர்த்தெறிந்த சென்னை பித்தன்,புலவர் ராமானுசம் ,கோபால கிருஷ்ணன், நடன சபாபதிபோன்றவர்களும் பின்னூட்டமும் ஊக்கமும் அளித்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். 
  எனது பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் இடுவதற்கு word verfication option enable செய்யப்பட்டிருக்கிறது என்பதை கோபால கிருஷ்ணன் அவர்கள் சுட்டிக் காட்டிய பின்பே அப்படி ஒன்று இருப்பது எனக்கு தெரிய வந்தது. இப்படிப் பல பதிவர்கள் பல்வேறு வகைகளில் உதவி இருக்கிறார்கள்.
எனது பதிவுகளுக்கு கருத்திட்ட அனைத்து பதிவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த  நன்றி.
  "நான் பேச நினைப்பதெல்லாம்" சென்னை பித்தன் அவர்களுக்கும் நான் நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன். அவர் 2011 இல் கலக்கியவர்கள் பட்டியலில் என்னை பற்றி வலைசரத்தில் அறிமுகப் படுத்தினார். எனக்கு Liebster Blog விருது வழங்கிய நண்பர் சுப்ரமணியத்தை மறக்க இயலாது.
   கூகிள் கனெக்ட் மூலம் எனது வலைப்பதிவை இணைத்துக் கொண்டவர்களுக்கும் இன்டலி மூலம் என்னை கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் (பின் தொடர்பவர்கள் என்ற வார்த்தை எனக்கு பிடிக்கவில்லை) நன்றி.
  எனது அனைத்து முகநூல் நண்பர்களுக்கும் நன்றி. யாரேனும்  விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் எனது நன்றி.
   வலையுலகத்தின் மூலம் நான் பெற்ற   நன்மைகளில் ஒன்று. பதிவர் "வீடு திரும்பல்" மோகன்குமார் என் வீட்டுக்கருகில் வசிக்கிறார் என்பதை தெரிந்துகொண்டது. ஆனாலும் அவரை இன்னும் சந்திக்கவில்லை. பல்வேறு நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். இன்னும் பல விஷயங்கள் உள்ளன. நீளம் கருதி நிறுத்திக்கொள்கிறேன்.

  பதிவுலகில் பல சமயம் தடுமாறி விழுந்து எழுந்து நின்றிருக்கிறேன்.
இப்போது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது விழுந்தாலும் எழுந்திருக்க முடியும் என்று.

  தொடர்ந்து ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
*******************************************************************************************
வேலை  தேடும் வடிவேலு பகுதி2 -அடுத்த பதிவில்
         

ஞாயிறு, 6 மே, 2012

வேலை தேடும் வடிவேலு - பகுதி 1

           (முழுக்க முழுக்க கற்பனையே ) 
  
   வடிவேலு வீட்டு வாசலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். எவ்வளவு நாள்தான் சும்மா இருப்பது. ஏதாவது வேலைக்குச் செல்லலாம் என்று நினைத்து ஆட்கள் தேவை விளம்பரங்களை  ஆராய்ந்து கொண்டிருந்தார்.
  
  “அண்ணே! என்ன பண்ணிகிட்டிருக்கிங்க! வேலை தேடிக்கிட்டு இருக்கீங்களா?” என்று திடீரென்று குரல் கேட்க வடிவேலுவின் நண்பர்கள் நின்றுகொண்டிருந்தனர்.

     “அடடா! இவனுங்க எப்ப வந்தானுங்க” என்றுநினைத்துக் கொண்டே
“நான் வேல தேடறது உங்களுக்கு எப்படிடா தெரியும்?நான் உங்கக்கிட்ட சொல்லவே இல்லையே! உங்க சங்காத்தமே வேண்டாம்னு தானே ஒதுங்கி இருக்கேன்.”

     “ஏண்ணே! இப்படி நினைக்குறீங்க! நீங்க என்ன செய்வீங்கன்னு எங்களுக்கு தெரியாதா? உங்க கஷ்டம் எங்க கஷ்டம் இல்லையா? உங்களுக்கு உதவி செய்யறதுக்குத் தானே நாங்க இருக்கோம்.”

     “நீங்களாடா உதவி செய்வீங்க! பின்னாடி வெடி வச்சு வேடிக்கை பாக்கறவங்களாச்சே!”

   “போங்கண்ணே! கணக்கு வழக்கு தெரிஞ்ச ஆளு ஒருத்தர் வேலைக்கு வேணும்னு கேட்டிருந்தாங்க. அப்ப உங்க ஞாபகம்தான் எங்களுக்கு வந்துச்சி.உடனே உங்க கிட்ட சொல்லனும்னு ஓடோடி வந்தா...நீங்க என்னடான்னா எங்களை இன்சல்ட் பண்ணறீங்க,
சரி வாங்கடா போலாம். அண்ணன் நம்பள நம்ப மாட்டேங்கிறார்.”

  “அடேய் கோவிச்சுக்காதீங்கடா. எனக்கும் உங்களை விட்டா யாரு இருக்கா. அடி உதை வாங்கினதுக்கு அப்புறமாவது வீட்டுக்கு தூக்கிகொண்டு வந்து சேத்துடறீங்க இல்ல.  சரி! சரி சொல்லுங்க வேலைய பத்தி ஏதோ சொல்லவந்தீங்களே.. நான் இப்ப வேளைக்கு போயே ஆகணும்டா. மரியாத நாளுக்கு நாள் தேஞ்சிக்கிட்டே வருது.!

  “அண்ணே, அந்தக் கம்பனி பணம் அதிகமா நடமாடற இடமாம். நல்லா வேல செய்யற நம்பிக்கையானவாங்களா இருக்கணுமாம்....”

  “பேங்க்கா இருக்குமோ. அதுக்கு நிறைய படிச்சி இருக்கனுமேடா. நான் பண விஷயத்தில கில்லாடிதான். ஆனா என்கிட்டே மூணாவது படிச்ச சர்டிபிகேட்  கூட இல்லையேடா!
 “அதெல்லாம் எங்களுக்கு  தெரியாதன்னே. சூப்பரா டிரெஸ் பண்ணிக்கிட்டு வாங்கண்ணே போகலாம். அங்கே உங்களுக்கு இன்டெர் வியு வைப்பாங்க அதுல கரக்டா பதில் சொல்லிட்டா உங்கள வேலைக்கு எடுத்துக்குவாங்க ”

  வடிவேலுவை நண்பர்கள் இன்டெர்வியுக்கு அழைத்துச் சென்றனர். அவரைப்போலவே இன்டெர்வியுக்கு நிறையப் பேர் வந்திருந்தனர்.
நண்பர்கள் வெளியே இருக்க தனக்கு வேலை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சந்தேகத்துடன் உள்ளே போனார் வடிவேலு.

இன்டெர்வியூசெய்பவர்,"உன்ன பாத்தா வடிவேலு மாதிரி இருக்கே, இந்த வேலைக்கு  வேலைக்கு உன் பேஸ் ஒ.கே. ஆனா டிரஸ் நல்லாவே இல்லையே.”

   அவரைப்பார்த்த வடிவேலு, "சார்! நான்  உங்கள  எங்கயோ பாத்திருக்கேனே!”
“டி.வி. இல பாத்திருக்கலாம். நான் இந்தக் கம்பனியோட எம்.டி. உனக்கு பான் கார்டு இருக்கா?பேங்க் அக்கவுன்ட் இருக்கா.”

   பான் கார்டுன்னா என்னான்னு தெரியா விட்டாலும் இருக்கு என்று தலை ஆட்ட, 
  "இந்தக் கம்பனி சாதாரண கம்பனை இல்ல. சரவணா ஸ்டோர், தங்கமாளிகை,போதிஸ்,ஜெயச்சந்திரன், இவங்கெல்லாம் நான் இல்லேன்னா வியாபாரம் செய்ய  முடியாது.  இவங்களுக்கு தேவையான முக்கியமானதை நான்தான் சப்ளை பண்றேன். சென்னையில எங்களுக்கு நிறைய கிளை இருக்கு. புதுசா பிராஞ்ச் ஓபன் பண்ணப்போறோம். இங்க வேல கிடைக்கனும்னா கணக்கு அறிவு ரொம்ப முக்கியம். கணக்கு உனக்கு வருமா?”

    “அய்யா கணக்கில நான் புலி.”

    “அப்ப சரி.  நான் ஒரு கேள்வி கேக்கறேன். அதுக்கு சரியான பதில் சொல்லிட்டா உனக்கு வேல குடுக்கறோம். வேலையில சேந்துட்டா டெய்லி பேட்டா,லீவு, யூனிபார்ம் இப்படி நிறைய சலுகை கிடைக்கும். ஆனா இந்தவேலையில பொறுமை ரொம்ப ரொம்ப  முக்கியம். கஸ்டமர் தான் நம்ம கடவுள்.”

   “உங்க கிட்ட வேல செய்ய நான் குடுத்து வச்சிருக்கணும். நீங்க கேளுங்க அய்யா. எப்படியாவது கஷ்டப்பட்டு பதில் சொல்லிடறேன்.

   “சரி கேட்டுக்கோ. உன்கிட்ட நூறு ரூபாய் இருக்கு. நூறு ரூபாய பிரிச்சி ஏழு பொட்டலத்தில கட்டி வைக்கணும். அப்படி கட்டி முடிச்சதும் ஒரு ரூபாயிலிருந்து நூறு ரூபா வரை எவ்வளவு  கேட்டாலும் பொட்டலமாகத்தான் எடுத்து குடுக்கனும். அப்படி குடுக்கனும்னா ஒவ்வரு பொட்டலத்திலும் எவ்வளவு காசு வைக்கணும்?. ஒரு பொட்டலத்துக்கு மேலயும் குடுக்கலாம். ஏழு பொட்டலமும் சேத்தும் குடுக்கலாம்.. எந்தக் காரணத்தை கொண்டும் பொட்டலம் கட்டிமுடிச்சதும் அதை பிரிக்ககூடாது.

  உதாரணத்துக்கு 51 ரூபா குடுக்கனும்னா 30 ,20,1  இன்னு மூணு பொட்டலமா குடுக்கலாம். ஏழு பொட்டலங்களிலும் சேத்து மொத்த காசு நூறு ரூபாங்கறதை நினைவுல வச்சிக்கணும்’

   “சார்! தலைய சுத்துது இதுக்கு பதில் இப்பவ சொல்லனுமா?”

   ஒரு வாரம் கழிச்சி கூட சொல்லலாம். ஆனா வேல தேடி வர்றவங்க யாராவது மொதல்ல சொல்லிட்டா வேலய அவங்களுக்கு குடுத்திடுவோம். இப்ப நீங்க போகலாம்.

 “ஓ.கே. சார், ட்ரை பண்ணி பாக்கறேன்.”

வடிவேலு சிந்தனையுடன் வெளியே வருகிறார்.
வடிவேலு விடை கண்டு பிடித்தாரா? அவருக்கு  வேலை கிடைத்ததா?
முடிஞ்சா நீங்க அவருக்கு ஹெல்ப் பண்ணுங்க. 
                                                             (தொடரும்) 
வேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை 
வடிவேலுக்கு வேலை கிடைத்ததா? பகுதி 3 

************************************************************************************************