என்னை கவனிப்பவர்கள்

மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 8 டிசம்பர், 2015

எச்சரிக்கை: வெள்ளம் நுழைந்த வீட்டுக்குள் செல்லுமுன்பு



விழிப்புணர்வு பதிவு: முகநூல் நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்த எச்சரிக்கை குறிப்புகளை கொஞ்சம் சேர்த்து பகிர்ந்திருக்கிறேன்.
மழை வெள்ளம் நுழைந்து விட்டதால் வீட்டை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் இப்போது திரும்பும் சூழல் உள்ளது அவ்வாறு மீண்டும்  புகுவதற்கு முன் கீழ்க்கண்ட குறிப்புகளை கவனத்தில் கொள்ளவும்:

1 மெயின் சுவிச் வெளியில் இருந்தால் முதலில் அதனை ஆஃப் செய்து விடு ஒரு டார்ச்சுடன் உள்ளே நுழையவும்
2. எரி வாயு வாசனை ஏதும் வருகிறதா என்று கவனிக்கவும் 
3. கதவுகள், ஜன்னல்களைத் திறந்து முடிந்த அளவு இயற்கையான வெளிச்சம், காற்றோட்டத்தை அனுமதியுங்கள்.
4.  நுழைந்த உடனேயே மின்சாரம் இருந்தாலும் உடனடியாக விளக்குகளை / மின் விசிறியை இயக்க வேண்டாம். மின்கசிவு இருக்கக் கூடும். 
 5. முதலில் ஆண்கள் நுழைந்து ஓரளவு சுத்தப்படுத்தி விட்டுப் பிறகு பெண்களை அழைக்கவும். அடுத்து முதியவர்கள்; கடைசியாகக்  குழந்தைகள்.
 6.  மின்சாரப் பொருட்களை இயக்குவதற்கு முன்பாக வீடு முழுதும் ஒரு  முறை எங்காவது மின்கசிவு இருக்கிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள். இதை ஒரு எலக்ட்ரிஷியன் கொண்டு செய்வது நல்லது. நீங்களே செய்வதாக இருந்தால் போதிய பாதுகாப்புடன்  (காலணி, கையுறை, மரநாற்காலி போன்றவை) மேற்கொள்ளவும்.
7. கையில் டெஸ்டர் வைத்துக் கொண்டு சுவர்களை சோதித்துக்   கொள்ளுங்கள் 
8 . அருகிலுள்ள சுகாதார நிலையம் அல்லது மருத்துவ மனையில்   தேவையான காய்ச்சல்/ பேதி மற்றும் தற்காப்பு மாத்திரைகளை வாங்கிக் கொள்ளுங்கள்; அறிவுறுத்தல்களின்படி தடுப்பூசிகள் தேவையென்றால் தவறாது போட்டுக் கொள்ளுங்கள்.
9. தண்ணீரை காய்ச்சியே பயன்படுத்துங்கள் 10. மளிகைப் பொருட்கள் கெட்டிருக்கிறதா என்று சோதித்து விட்டுப்   பயன்படுத்துங்கள். இலேசான ஐயம் இருந்தாலும், அவற்றைப்  பயன்படுத்த வேண்டாம். ஃப்ரிஜ்ஜிலேயே விட்டு விட்டுப் போன பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். அவை நிச்சயம் கெட்டுத்தான் .   போயிருக்கும்.
11.  முழுகிக் கிடந்த வாகனங்கள் காப்பீடு செய்யப்பட்டிருந்தால்,        காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் இயக்கிய பிறகு பழுதுபட்டதாகத் தெரியவந்தால்,அவற்றிற்கான காப்பீடு கிடைக்காமல் போய்விடலாம். 
12.முடிந்தால் பொருட்கள் வீடுகள் வாகனங்கள் மூழ்கிய நிலையில்  புகைப்படம்  எடுத்து வைத்திருங்கள் 
13.குடும்ப அட்டை, காப்புறுதி ஆவணங்கள்,சான்றிதழ்கள், ஆதார் அட்டை,டிரைவிங் லைசென்ஸ் வீட்டு பத்திரங்கள்  போன்ற முக்கிய      ஆவணங்கள்  நல்ல நிலையில் உள்ளதை உறுதிப் படுத்திக்        கொள்ளுங்கள்  
14. நல்ல நிலையில் இருந்தாலும் எச்சரிகையுடன் சிறிது காய வைத்து 
     எடுத்து வையுங்கள் 
15.மேல் நிலைத் தொட்டிகளை சுத்தம்செய்த பின்னர் பயன்படுத்துங்கள் 
16. இரண்டொரு நாட்களுக்கு மிக எளிமையான உணவை உட்கொள்ளுங்கள். அரை வயிற்றுக்கு மட்டுமே சாப்பிடுங்கள். ஒரு பெரிய அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்திருக்கிறீர்கள். உங்கள் மனமும் உடலும் சகஜ நிலைக்குத் திரும்ப அவகாசம் அளியுங்கள். பதற்றத்தை தவிர்த்து விடுங்கள் 
17. உங்கள் உறவினர்கள் நண்பர்களை  தொடர்பு கொண்டு அவர்கள் நிலையை அறிந்து கொள்ளுங்கள். உதவி தேவைப்பட்டால் முடிந்தவரை செய்ய முயற்சியுங்கள் 
18. உங்களையும், உங்கள் குடும்பத்தையும் இந்த அளவுக்குக் காப்பாற்றிய வர்களுக்கும் சிறு உதவி புரிந்தவர்ளாயினும், நலம் விசாரித்தவர்    களுக்கும் மறக்காமல் நன்றி சொல்லுங்கள் 
19. இந்தப் பேரிடரில் உங்களைக் கைவிடாதிருந்த துணிவும்,நம்பிக்கையும் வாழ்நாள் முழுதும் உங்களுக்கு இருக்க வேண்டும்  என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். எந்தவொரு இடரையும் சமாளித்து   வெல்லும் அறிவும், திறனும் உங்களுக்கு உண்டு என்று அறிந்து அமைதி கொள்ளுங்கள்.
20.  உங்களை விட பாதிக்கப் பட்டோர் ஆயிரக் கணக்கானோர் உள்ளனர் முடிந்தால் அவர்களுக்கு இயன்ற அளவுக்கு எந்த வகையிலேனும் உதவுங்கள். 

சேதமுற்ற மற்றும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முக்கிய ஆவணங்கள் திரும்பப் பெறுவதற்கான இலவச ஆலோசனைகளும் உதவிகளும் செய்ய

 சட்ட பஞ்சாயத்து என்றஅமைப்பு செயல்படுகிறது. தேவைப் படின் அவர்கள்  உதவியை நாடலாம் .

தொடர்பு எண் ; 7667100100
முகநூல் முகவரி: https://www.facebook.com/sattapanchayath



#myDIV { background-color:lightblue; transform:translateX(50px); }

சனி, 29 செப்டம்பர், 2012

வைரமுத்துவின் விதைச் சோளம்


என்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(?)தெரிந்தவர் என்று கேலிக்கு ஆளானாலும்  அவர் கவிதைக்கு ஒரு ஈர்ப்பு சக்தி உண்டு என்பதை மறுக்க முடியாது.
அவரது கவிதைகளில் எனக்குப் பிடித்த ஒன்று.மண்வாசம் வீசும் அழகான நாட்டுப் புறக் கவிதை இது. விவசாயின் சோக வாழ்க்கை அப்படியே கவிதையில் பிரதிலிப்பதைக் காணலாம்.

             விதைச் சோளம்
 
                     ஆடி முடிஞ்சிரிச்சு
                      ஆவணியும் கழிஞ்சிரிச்சு
                      சொக்கிகொளம்  கோடாங்கி
                      சொன்ன கெடு முடிஞ்சிருச்சு.

                      காடு காஞ்சிரிச்சு
                      கத்தாழை கருகிடிச்சி
                      எலந்த முள்ளெல்லாம்
                      எலையோட உதிஞ்சிருச்சு
.
                      வெக்க பொறுக்காம
                      றெக்க  வெந்த குருவியெல்லாம்
                      வெண்காடு விட்டு
                      வெகுதூரம் போயிடிச்சி.

                      பொட்டு மழை பெய்யலையே
                      புழுதி அடங்கலையே
                      உச்சி நனையலையே
                      உள்காடு உழுகலையே

                      வெதப்புக்கு  விதியிருக்கோ
                      வெறகாக விதி இருக்கோ
                      கட்டி வெச்ச வெங்கலப்ப
                      கண்ணீர்  வடிச்சிருச்சு

                      காத்துல ஈரமில்ல
                      கள்ளியில பாலுமில்ல
                      எறும்பு குளிச்சேற
                      இரு சொட்டுத் தண்ணியில்ல

                      தெய்வமெல்லாம் கும்பிட்டு
                      தெசைஎல்லாம் தெண்டனிட்டு
                      நீட்டிப் படுக்கையிலே
                      நெத்தியில  ஒத்த மழை

                      துட்டுள்ள ஆள  தேடி
                      சொந்தமெல்லாம் வாரதுபோல்
                      சீமைக்குப் போயிருந்த
                      மேகமெல்லாம் திரும்புதையா!

                      வாருமையா வாருமையா
                      வருண பகவானே!
                      தீருமையா   தீருமையா 
                      தென்னாட்டுப் பஞ்சமெல்லாம்

                      ஒத்த ஏறு  நான் உழுக
                      தொத்தப்பசு வச்சுரிக்கேன்
                      இன்னும் ஒரு மாட்டுக்கு
                      எவனப் போய் நான் கேட்பேன்.

                      ஊரெல்லாம் தேடி
                      ஏர்மாடு  இல்லாட்டி
                      இருக்கவே இருக்கா என்
                      இடுப்பொடிஞ்ச பொண்டாட்டி

                      காசு பெருத்தவளே
                      கார வீட்டுக் கருப்பாயி
                      தண்ணிவிட்டு எண்ணயின்னு
                      தாளிக்கத் தெரிஞ்சவளே!

                      சலவைக்குப் போட்டா
                      சாயம் குலையுமின்னு
                      சீல தொவைக்காத
                      சிக்கனத்து மாதரசி

                      கால்மூட்ட வெதச் சோளம்
                      கடனாகத் தந்தவளே
                      கால் மூட்ட கடனுக்கு
                      முழு மூட்ட அளக்கறண்டி 

                      ஊத்துதடி ஊத்துதடி
                      ஊசிமழை ஊத்துதடி
                      சாத்துதடி சாத்துதடி
                      சடசட சடையா சாத்துதடி

                      முந்தா நாள் வந்த மழை
                      மூச்சு முட்டப் பெய்யுதடி
                      தெச ஏதும் தெரியாம
                      தெர  போட்டுக் கொட்டுதடி

                      கூர  ஒழுகுதடி
                      குச்சிவீடு நனையுதடி
                      ஈரம் பரவுதடி
                      ஈரக் கொலை நடுங்குதடி

                      வெள்ளம் சுத்தி நின்னு
                      வீட்ட இழுக்குதடி
                      ஆஸ்தியில சரிபாதி
                      அடிச்சிக்கிட்டுப் போகுதடி 

                      குடிகெடுத்த காத்து வந்து
                      கூர  பிரிக்குதடி
                      மழைத் தண்ணி ஊறி
                      மண்சுவரு சரியுதடி.

                      நாடு நடுங்குதையா
                      நல்லமழை போதுமையா
                      வெத வெதக்க  வேணும்
                      வெயில் கொண்டு வாருமையா.

                      மழையும் வெறிக்க
                      மசமசன்னு வெயிலடிக்க
                      மூலையில வச்சிருந்த
                      மூட்டையைப்  போய் நான் பிரிக்க

                      வெதச் சோளம் நனஞ்சிருச்சே
                      வெட்டியா பூத்திருச்சே
                      மொளைக்காத படிக்கு
                      மொளைகட்டிப் போயிடிச்சே

                      ஏர் புடிக்கும் சாதிக்கு
                      இதேதான் தலையெழுத்தா?
                      விதிமுடிஞ்ச ஆளுக்கே
                      வெவசாயம் எழுதிருக்கா?

                      காஞ்சு கெடக்குதேன்னு
                      கடவுளுக்கு மனு செஞ்சா
                      பேஞ்சுக்  கெடுத் திருச்சே
                      பெருமாளே என்ன  பண்ண?

****************************************************

வியாழன், 24 மே, 2012

பதிவர் சந்திப்பில் அறிந்த 'பயன்படா மரங்கள்'

 
  பதிவர் சந்திப்பு அறிமுகப் படுத்திய அற்புத மனிதர்  யோகாநாதன். மரங்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்துக்  கொண்டவர்.பக்கத்து வீட்டு மரத்தின் கிளை நம் வீட்டை எட்டிப் பார்த்தாலே சண்டையிட்டு அதை வெட்டும் வரை ஓயாத மனிதர்கள்தான் இங்கே அதிகம். 
  ஆனால்  மரங்களை வெட்டினால் இவர் மனம் துடிக்கும். இவர் சொல்வதைக் கேட்டால் உலகம் பிழைக்கும். பசுமை தழைக்கும்.
   சுற்றுச்  சூழல்ஆர்வலரான இவர் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துகிறார். இடமும் மின்சாரமும் கொடுத்தால் போதும் பிஞ்சு நெஞ்சங்களில் மரங்கள் பற்றிய விழிப்புணர்வை என்னால் பதிய வைக்கமுடிய்ம் என்று அறுதியிட்டுக் கூறுகிறார். ஆர்வமுள்ள ஆசிரியர்கள்
அவரை கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளாலாம்.
M.Yoganathan
Pr No : 3994,
Tamilnadu State Transport Corporation,
Maruthamalai Branch,
Coimbatore.


Home Address
107, Thirumalai Samy Naidu Street,
New Sidhapudur,
Coimbatore - 44.
Mobile
: 09443091398.
வலைத்தள  முகவரி 
http://yogutree.com

 இதோ மரங்களைப் பற்றிய ஒரு கவிதை
                  பயன்படா மரங்கள் 

             இயற்கைக்கு அழகு சேர்க்கும் 
              அணிகலன் மரமேயாகும் 
              இறைவன்  நமக்களித்த 
              இனியதோர் வரமே யாகும்

              மண்ணுக்கு மழையைத் தருமே
              உலகுக்கு நிழலைத் தருமே
              கண்ணுக்கு குளிர்ச்சி தருமே
              உண்பதற்கு உணவு தருமே

              மலைகளுக்கு ஆடையாகும் 
              குயில்களுக்கு மேடையாகும்
              பறவைகளுக்கு  கூடு ஆகும்
              ஒரு சிலர்க்கு வீடும் ஆகும்
              
              விருந்தினர்  உணவுஉண்ண
              விரும்பியே இலைகள்கொடுக்கும்
              மருந்துகள்  பலவும் தந்து 
              மன்னுயிர் வாழச் செய்யும் 

              எரித்திட விறகைக் கொடுக்கும் 
              அரித்திடும் மண்ணைத் தடுக்கும்
              உண்ணவே கனிகள்  கொடுக்கும்
              உயிர்வளி காற்றில் சேர்க்கும்

              வெம்மையை தடுத்து விடும்
              அசுத்தங்கள் எடுத்து விடும்
              பலப்பல பொருட்கள் செய்ய 
              பணிவுடன் தன்னைக் கொடுக்கும்

              பயன்பெறும் மனிதன் மரத்தை 
              ஒருநாளும் நினைப்பதில்லை 
              சுயநல மனிதர் அவர்க்கு 
              இயற்கையின்  மன்னிப் பில்லை

              மக்கட்  பண்பில்லா மனிதர் 
              மரம்போலே ஆவாரென்று
              வான்புகழ் வள்ளுவன் ஏனோ
              வாய் தவறி சொன்னான் அன்று 

              பயன்படா மரங்கள் என்றும் 
              மண்ணிலே முளைத்ததில்லை 
              மடிந்தபின்னும் மனிதருக்குதவும் 
              மரங்களுக்கு இணையே இல்லை.

              மரங்களின்  மகிமை அறியா
              மனிதரில்  சிலபேர் தன்னை 
              பயன்படா மரங்கள் என்பேன் 
              மறுப்பேதும் உண்டோ? சொல்வீர்!.


***********************************************************************************************
இதை படிச்சிட்டீங்களா?