தமிழ்வலைப் பதிவுகளின் தர வரிசை- குழப்பம்
புதிர் கணக்கு! விடை-வடிவேலுக்கு உதவியது யார்?
செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!நிறைவு பகுதி
*************************************************************************************************************************
நான் பிளஸ் 2 படிக்கும்பொழுது நடந்த சம்பவம். எனது தமிழாசிரியர் கம்ப ராமாயணம் நடத்திக் கொண்டிருந்தார். அவர் ரொம்ப கண்டிப்பானவர். பாடப் பகுதியை நடத்துவதற்கு முன்பாக அனுமன் துதியாக கம்பர் எழுதிய செய்யுளை விளக்கினார்.
அஞ்சிலே ஒன்று பெற்றான்;
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றா றாக
ஆரியர்க் காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கை கண்டயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்;
அஞ்சிலே ஒன்றை வைத்தான்;
அவன்நம்மை அளித்துக் காப்பான்
- இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல்.
இந்தப் பாடலில் வரும் அஞ்சு என்பது பஞ்ச பூதங்களாகிய நீர்,நிலம்,காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றை குறிக்கும்.
ஐந்து பூதங்களில் ஒன்றாகிய வாயுவின் புத்திரன் ஐந்து பூதங்களில் ஒன்றாகிய நீரை ( கடலை) தாண்டி ஐந்து பூதங்களில் ஒன்றாகிய ஆகாயத்தில் வழியே இலங்கைக்குச் சென்று ஐந்து பூதங்களில் ஒன்றாகிய பூமியின் மகளாகிய சீதையைக் கண்டபின் அந்த ஊரிலே ஐந்து பூதங்களில் ஒன்றாகிய நெருப்பை வைத்த அனுமான் நம்மைக் காப்பான் என்பது இந்தப் பாடலின் பொருள்.
இது எங்களுக்குத் தெரியாதா என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. நான் சொல்லவந்தது இது இல்லை. இந்த செய்யுளை ஆசிரியர் விளக்கிக் கொண்டிருந்தபோது நான் ஜன்னல் வழியே ஒருவன் சுருட்டு பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்
இந்தப் பாடல் அமைப்பு எனக்குப் பிடித்து விட்டதால், நான் பார்த்ததை தொடர்பு படுத்தி இதே போன்ற செய்யுள்(?) (தமிழாசிரியர்கள் மன்னிக்கவும்) ஒன்றை எழுதினேன். அதனால் வந்தது வினை.
அஞ்சிலே ஒன்றை அருந்தி
அச்சுகம் பெரிதென் றெண்ணி
அஞ்சிலே ஒன்றை விற்ற
அவதியை மறக்க ஒருவன்
அஞ்சிலே ஒன்றில் மிதக்கும்
அருஞ்சுகம் கிடைக்க சுருட்டில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அஞ்சிலே ஒன்றை விட்டான்.
இதை என் நண்பனிடம் காட்டினேன். முதலில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னிடம் விளக்கம் கேட்க நான் சொன்னேன்.
"அஞ்சில ஒண்ணான தண்ணியடிச்சி, அதுக்கு அடிமை ஆகி அஞ்சில ஒன்னான தன்னுடைய நிலத்தை விற்று அதனால கஷ்டப் பட்டுக்கொண்டிருந்த ஒருத்தன் அந்த துன்பத்தை மறந்து அஞ்சிலே ஒன்றான ஆகாயத்தில் மிதக்கிற மாதிரி இருக்கறதுக்காக வாயிலே சுருட்டை வைத்து அஞ்சில ஒண்ணான நெருப்பை வைத்து, அஞ்சில ஒண்ணான புகையை விட்டான்." என்றேன்
என் விளக்கத்தைக் கேட்ட என் நண்பன் சிரித்ததோடு என்கையில் இருந்த காகித்தை பிடுங்கி அதை எல்லா மாணவர்களுக்கும் காட்டிய தோடு தமிழாசிரியாரிடம் கொண்டுபோய் கொடுத்துவிட்டான்.
அதைப் படித்தார் ஆசிரியர். நான் பயந்து கொண்டிருந்தேன். கடுமையான தண்டனைகளுக்கு பெயர் போன அவர் என் கவிதையை படித்ததும் சட்டென்று சிரித்துவிட்டார். அதை எல்லா மாணவர்களுக்கும் படித்துக்காட்டி விளக்கம் சொன்னதோடு முயற்சி செஞ்சா நல்ல கவிஞனா வரலாம்னு வேறு பாராட்டினார்.
(அதை உண்மைன்னு அப்படியே நம்பி அப்பப்ப கவிதை எழுதி பயமுறுத்தறது வழக்கமாய்டிச்சி.)