என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 22 நவம்பர், 2020

சூரரைப் போற்று-கேப்டன் கோபிநாத்

   சூர்யாவிற்கு சமீப காலமாக குறிப்பிடத்தக்க வெற்றிப்படங்கள் அமையாத நிலையில் சூரரைப் போற்று படம் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது.  நிறையப்பேர் படம் பார்த்திருகிறார்கள்.  அதைப் பற்றி பேசுகிறார்கள். விமர்சிக்கிறார்கள்.
      அதன் உண்மையான சூரர்  கேப்டன் ஜி ஆர் கோபிநாத்   என்பதும்  எழுதிய Simply Fly என்ற தன் அனுபவ நூலை அடிப்படையாக எடுக்கப்பட்டது என்பதும் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
    பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி தோல்விகளை சந்தித்தாலும்   பட்ஜெட் விமானப் பயணத்திற்கு வித்திட்டவர் என்ற வகையில்  சூரரைப்போற்று  படத்தின் மூலம் கேப்டன்  கோபிநாத்  நம் மனதில் இடம் பிடித்துள்ளார்.

    இந்தப்படத்தை பார்த்தபின்  அவரது வானமே எல்லை என்ற கோபிநாத்தின் சுய சரிதை  நூலைப் படிக்க வேண்டும் என்ற இயல்பான ஆர்வத்தின் காரணமாக படிக்கத் தொடங்கினேன். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்நூல் தமிழில் B.R மகாதேவன் அவர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலுக்கு அப்துல்கலாம் அவர்கள் முன்னுரை எழுதி  இருக்கிறார்.

   சுவாரசிய எழுத்து நடை சுவாரசியமான சம்பவங்கள் என ஒரு தேர்ந்த எழுத்தாளரின்படைப்பாக அமைந்துள்ளது ”வானமே எல்லை”. தேர்தலில் தேவகவுடாவுவை பிஜேபி சார்பில் எதிர்த்து நின்று தோற்றது சுவாரசியத்தில் ஒன்று.

     கேப்டன் கோபிநாத் ஒரு அசாதரண மனிதர். அவர் முயற்சித்துப் பார்க்காததே இல்லை என்று கூறும் அளவிற்கு பல துறைகளையும் தொட்டுப்பார்த்திருக்கிறார்.  

          என்னுரை என்று கோபிநாத் எழுதியதே இந்நூலின் சுருக்கமாக அமைந்து  ஆர்வத்தை தூண்டிவிடுகிறது. இலக்கியத்திலும் இயற்கை மீதும் ஆர்வம் உடைய கோபிநாத் தாகூர் ,வோர்ட்ஸ் வொர்த், சோமர்செட்  போன்ற கவிஞர்கள், அறிஞர்களின் வரிகளை மேற்கோள் காட்டியுள்ளது அவரது நூலறிவை வெளிக்காட்டுகிறது.தொழிலதிபர்கள் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பது அதிசயம்தான்.

   கர்நாடகத்தில் ஹேமாவதி ஆற்றங்கரையில் உள்ள சிறு கிராமமான கொரூரில் பிறந்த கோபிநாத் சிறுவயதில் இருந்தே சாகசங்கள் நிகழ்த்துவதில் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார்.  கோபிநாத்தின் தந்தை ஒரு ஆசிரியர். அவர் ஒரு விவசாயியாகவும் இருந்தார் என்று பெருமை கொள்கிறார் கோபிநாத்.   பிராம்மணராக இருந்தபோதும் செல்வாக்கும் செல்வ செழிப்பும்  ஏதும் இல்லை என்று கூறுகிறார். படேல் மற்றும் கவுடா இனத்தவரிடம்தான் அதிகாரமும் செல்வாக்கும் இருந்தது என்கிறார் கோபிநாத்.  கோபிநாத்துக்கு. 12 வயதில் ஷைனிக் பள்ளி எனப்படும் ராணுவப் பள்ளியில் சேர்ந்தார்.  படிப்பை முடித்து 15 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றிய கேப்டன் கோபிநாத் தன் வேலையை இராஜினாமா செய்து விட்டார். அவரது இராணுவ அனுபவங்களும் சுவாரசியமானவை

          ஹேமாவதி ஆற்றின் குறுக்காக  அணை கட்டுவதற்காக இவரது பூர்வீக நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு அதற்கு பதிலாக  ஒரு வறண்ட நிலம் அளிக்கப் பட்டது. இராணுவத்தில் இருந்து திரும்பிய கோபிநாத் வறண்ட புல்வெளியில் கூடாரம் அடித்துத் தங்கினார். அடுத்த பல ஆண்டுகள் தீவிரமாக விவசாயத்தில் ஈடுபட்டு வித்தியாசமான முயற்சிகளைச் செய்தார். விவசாயத்திற்காக அவர் போராடி மின்சாரம் பெற்றது ஒரு சாதனை  விவசாயத்தை ஈடுபாட்டுடன் செய்தாலும் போதிய வருமானம் இன்மையால் வறுமையும் கடனும் அவருடனேயே இருந்தது. குடும்பத்திற்காக பணம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார்

 பசுக்கள் வளர்த்தார் பால் வியாபாரம் செய்தார்.  கோழிப்பண்ணை நடத்தினார். பட்டுப்பூச்சி வளர்த்தார். மோட்டார் வாகன டீலராக இருந்தார் ஹோட்டல் நடத்தினார்,பங்கு சந்தை தரகராக இருந்தார். விவசாயக் கருவிகள் விற்றார். விவசாய ஆலோசகர் வேலையையும் அவர் விட்டு வைக்கவில்லை

  கடைசியாக பல தடைகளுக்குப் பின்  ஒரு விமான நிறுவனத்தின் தலைவரானார். முதலில்  டெக்கான் ஏவியேஷன் மற்றும் ஏர் டெக்கான் நிறுவனங்களைத் தொடங்கியபோது தன்னிடம் எல்லாம் இருந்தது போல் செயல்பட்டார்.  திடீர் போட்டியாளராக முளைத்த இவரை எதிர்கொள்ள சிரமப் பட்டனர் இதில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். இவரை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். நண்பர்களாலும் உறவினர்களாலும் சக ஊழியர்களாலும்கூட  இவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை

  தன்னையே தன்னால் சமாளிக்க முடியவில்லை என சுய மதிப்பீடு செய்துகொள்ளும் கேப்டன், பொறுமையற்றவர், கோபக்காரர், சிறிய தவறுகளைக்கூடப் பொறுத்துக் கொள்ளாதவர் என்ற பெயரைத்தான் பெற்றிருந்தார்.  மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தேவையில்லாத துன்பங்களைக் கொடுத்திருக்கிறேன் என்று கவலைப்படவும் செய்கிறார்.

  இன்னும் கொஞ்சம் நல்ல  கணவராக, தந்தையாக,மகனாக,நண்பராக முதலாளியாக இருந்திருக்கலாம் என்று ஆதங்கமும் கொள்கிறார்.இந்தப் புத்தகத்தில் குறிப்பிடாத பல நண்பர்கள் இக்கட்டான சமயங்களில் எனக்கு உதவி இருக்கிறார்கள். அவர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு நான் எதுவும் செய்யவில்லை என்று வருத்தம் தனக்கு இருப்பதாக குறிப்பிடுகிறார். நிறைகளோடு தன் குறைகளையும் கூறத் தயங்காதது கேப்டனின் சிறப்பு.

  ராணுவத்திலிருந்து ஒய்வு பெறும்போது  வெறும்  ரூபாய் 6000 மட்டுமே செட்டில்மெண்ட் பெற்ற ஒருவர் மிகப் பெரிய மூலதனம் தேவைப்படும் விமானத் துறையில் எப்படி சாதித்தார் என்பது சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடம்.

  ”நீங்கள் இளைஞரா?  வித்தியாசமாக எதையாவது சாதிக்க விரும்புகிறீர்களா? கடுமையாகப் போராடுகிறீர்களா? அடிமேல் அடி விழுகிறதா? பலரால் ஏமாற்றப்பட்டிருக்கிறீர்களா? தடைகளை யெல்லாம் தகர்த்தெறிந்து முன்னேற முயற்சி செய்கிறீர்களா? உங்களுக்கு இந்த நூல் ஊக்கமும் உத்வேகமும் கொடுக்கும். ஆனால் ஒரு விஷயத்தை தெளிவாகக் கூறுகிறேன். இந்தப் புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே பின்பற்ற முயலாதீர்கள். தனி வழியை உங்களுக்காக நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள் புதிய தனித்துவமான சாதனையை படைத்துக் காட்டுங்கள். மற்றவர்கள் இப்புத்தகத்தை  வெறுமனே படித்து மகிழ்ச்சி அடையுங்கள்” என்று முன்னுரையை முடிக்கிறார்

  மேலே குறிப்பிட்டவை அனைத்தும் முன்னுரையில் குறிப்பிடப்பட்டவையே. முன்னுரையே சுவாரசியமாக இருக்கிறது அல்லவா?.
சூரரைப் போற்று படம்  கேப்டன் கோபிநாத்தின் கதையாக இருந்தாலும்   சினிமாவிற்காக கற்பனை கலந்து கதை கொடுக்கப் பட்டிருக்கிறது, படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லாதது உண்மைக் கதை என்று மெய்ப்பிக்க உதவுகிறது.

  நிஜக்கதை திரைப்படத்தைவிட சுவாரசியமாகவே இருக்கிறது என்பதும் உண்மை

----------------------------------------

முந்தைய பதிவு

குமுதத்தில் என் கதை -நியாயம்செவ்வாய், 17 நவம்பர், 2020

குமுதத்தில் என் கதை -நியாயம்

 


   நீண்ட  நாட்களுக்குப் பிறகு குமுதம்  25.11.2020 தேதியிட்டு இதழில் என்  ஒரு  பக்கக்  கதை "நியாயங்கள்    பிரசுரமாகி உள்ளது.  அனுப்பி இரண்டு வாரங்களுக்குள் பிரசுரமாகி இருப்பது ஆச்சர்யம்தான். இதுவரை வெளியான எனது கதைகள் அதிகபட்சம் 3 வாரங்களுக்குள் வெளியிடபட்டுள்ளது. 4 வாரங்கள் ஆகிவிட்டால் வராது என்று  தெரிந்து கொள்ளலாம்.  குமுதம் ஆசிரியர் திரு பிரியா கல்யாணராமன் அவர்களுக்கு நன்றி  இதற்கு முன்பு குமுதத்தில்  ஒரு சிறுகதையும்  சில ஒரு பக்க கதைகளும் வெளியானது . மிக விரைவாக பரிசீலிப்பது மட்டுமல்லாமல் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் குமுதத்திற்கு  நன்றி 

இதோ கதை 

நியாயங்கள்

                                                                                        டி.என்.முரளிதரன்

          அந்தப் பேருந்து நிறுத்தத்தில் நிறையப்பேர் காத்துக் கொண்டிருந்தனர். நேரம் கடந்ததே தவிர பேருந்துகள் நிற்காமல் சென்றன. காத்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் பொறுமை இழந்து  கத்த ஆரம்பித்து விட்டார்.

       என்ன இது எந்த பஸ்ஸும் நிறுத்தாம போறான். இந்த ஸ்டாப்ல நிக்கறவன் எவனும் மனுஷனா தெரியலயா? அநியாயமா இருக்கேசும்மாவா ஏத்திக்கிட்டுப் போகப்போறான். காசு குடுத்துத்தானே போகப் போறோம்?”

    இங்க ஒயிட் போர்டு பஸ்தான் நிக்கும், மஞ்ச போர்டெல்லாம் நிக்காதுஎன்றார் இன்னொருவர்

பஸ் காலியாத்தான போகுது. நிறுத்தி ஏத்திக்கிட்டா என்ன குறைஞ்சா போயிடும்?. நாமளும் ஆஃபீஸ் போக  வேண்டாமா?. ஆஃபீஸ் நேரத்தில எல்லா பஸ்ஸும் இப்படியே வந்தா எப்படி?......”  கோபத்துடன் தொடர்ந்தார்.

        மஞ்சள் போர்டு பஸ்தான் வந்தது. ஆனாலும் நிறுத்தி ஏற்றிக் கொண்டார் டிரைவர். அவர் ரொம்ப நல்லவர்  போலிருக்கிறது. அடுத்தடுத்த எல்லா நிறுத்தத்திலும் பஸ்ஸை நிறுத்தி மக்களை ஏற்றிக் கொண்டார்.
        இது என்ன அநியாயமா இருக்கே. மஞ்ச போர்டு போட்டுட்டு எல்லா ஸ்டாப்லயும் நிறுத்தினா என்ன அர்த்தம்?. நாம நேரத்திற்கு ஆஃபீஸ் போக வேண்டாமா? காசு மட்டும் அதிகமா வாங்கறாங்க இல்ல?” என்று யாரோ சத்தம் போடும் குரல் கேட்டு அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.   சத்தம் போட்டவர், வேறு யாருமில்லை. பஸ் ஸ்டாப்பில் பஸ் நிற்கவில்லை என்று முன்பு பொங்கினாரே  அவரேதான்.

   -------------------
 
முந்தைய பதிவுகள்
 
 

திங்கள், 5 அக்டோபர், 2020

திருக்குறள் கற்பிக்க எக்சல் பயன்படுமா?

                 


மைக்ரோ சாஃப்ட் எக்சல்லின் பயன்கள் அளவிடற்கரியது. அலுவலகப் பயன்பாட்டில் எக்சல் கணக்கீடுகள் செய்வதற்கும் தரவுகள் சேமித்து வைப்பதற்கும் ஒரு  கருவியாக மட்டுமே பெரும்பாலோர்  இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.பாடங்கள் கற்பித்தலுக்கோ மதிப்பிடுதலுக்கோ இதனை பயன் படுத்துவது மிக அரிது.
   கணிதம் கற்பித்தலில் இதனைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் மொழிக் கற்பித்தலுக்கும் இதனைப் பயன்படுத்த முடியும் எனபது சிலருக்கு வியப்பாக இருக்கலாம். . குறிப்பாக தமிழ் கற்பித்தலுக்கும் எக்சல் விரிதாளை பயன்படுத்தலாம் என்பதற்கான முயற்சியே இது. ஆசிரியர்கள் ஆர்வமுள்ள பெற்றோர் என  ஒரு சிலருக்காவது உதவும் என்று நினைக்கிறேன்.
      இன்று அரசு பள்ளிகளில் கூட கணினி பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாணவர்கள் பயிற்சி செய்தும் வருகின்றனர்.
      மதிப்பீடு செய்வதற்கும் தானே கற்றலுக்கும் கணினியை எந்தப் பாட ஆசிரியரும் பயன்படுத்த முடியும்.  எக்சல் மூலம் சிறிய ஆர்வமூட்டும்  தேர்வுகள்  நடத்தி  மாணவனின் கற்றலை மேம்படுத்தலாம்.

      உதாரணத்திற்கு 6 ம் வகுப்பு தமிழில் திருக்குறள் கற்பித்தலுக்கு சுவாரசியமான உறுதுணையாக எக்சல் எவ்வாறு விளங்கமுடியும் என்று பார்க்கலாம். அதனை இங்கே பாடப் புத்தகக்த்தில் உள்ளவாறு பயன்படுத்தி இருக்கிறேன்.

    6 ம் வகுப்பில்  10 திருக்குறள் உள்ளன. ஆசிரியர் அதனைக் கற்பித்து முடிந்ததும் வழக்கமான வாய்மொழித் தேர்வோ, அல்லது எழுத்துவழித் தேர்வோ வைப்பார்கள். அது மாணவர்களுக்கு சில சமயங்களில் சலிப்பூட்டும். அதனையே கணினியில் எக்சல்லைப் பயன்படுத்தினால் எவ்வளவு சுவாரசியமாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்.   

      ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஏழு சீர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒவ்வொரு சீருக்கும்  ஒரு செல்  என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு செல்லை கிளிக் செய்தால் பக்கத்தில் ஒரு Down arrow தெரியும். அதனை க்ளிக் செய்ய Drop down menu தோன்றும். அந்த கீழ்நோக்குப்பட்டியில் இருந்து(Drop down menu)  சரியான சீரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு 7 சீர்களையும் சரியாக தேர்ந்தெடுத்து விட்டால் அனைத்தும் பச்சை நிறத்திற்கு மாறி விடும்  பக்கத்தில் ஒரு டிக் மார்க் வந்து விடும். அதன் பக்கத்தில் குறளின் சரியான பொருள்  தோன்றும்/  திருக்குறளில் தவறு இருந்தால் பொருள் காட்டாது. மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்..
   ஒரு திருக்குறளுக்கு 2 மதிப்பெண்கள். சரியாக குறள்களை அமைத்துவிட்டால் அதற்குரிய மதிப்பெண்கள் கீழே தெரியும் படி அமைத்திருக்கிறேன். நீங்களும் முயற்சி செய்து பார்த்து இது எப்படி இருக்கிறது என்று கூறினால் மகிழ்ச்சி அடைவேன்.
      இதனை டவுன்லோட் செய்து உங்கள் குழந்தைகளுக்கும், ஆசிரியர்களாக இருந்தால் உங்கள் மாணவர்களுக்கும் பயன்படுத்திப் பாருங்கள். மேலும் வேறு குறள்களுக்கும் இதனைப் பயன்படுத்தலாம். ஷீட் 1 இல் இதற்கான உள்ளீடுகள் உள்ளன. நீங்கள் விரும்பினால் Unprotect செய்ய பாஸ்வேர்ட் தருகிறேன். தரவுகளை மாற்றிக் கொள்ள முடியும்

  கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கிறீர்களா? இந்தக் கட்டத்திற்குள்ளே சரியான திருக்குறள் சீர்களை தேர்ந்தெடுங்கள்.  உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்
 (சரி தவறு     என்பதைக் குறிக்கும்  குறியீடுகள் ஆண்ட்ராய்ட் ஃபோனில் வேறுவிதமாகத் தெரியும் அதனால் பக்கத்தில் சரி,தவறு என எழுத்தில் தெரியுமாறு அமைத்திருக்கிறேன். விண்டோஸ் கணினியில் குறியீடுகள் சரியாகத் தெரியும்)

 

    மேலுள்ள எக்சல் ஃபைலின் இடது கீழ்ப்புறத்தில் டவுன்லோட் பட்டன் உள்ளது. அதனை கிளிக் செய்தால் இக்கோப்பு உங்கள் கணினியில் பதிவிறக்கம் ஆகிவிடும். பின்னர் இதனைத் திறந்து Save as Template  ஆக சேமித்தால் கேள்வித்தாள் போல் பயன்படுத்த முடியும். ஒவ்வொரு மாணவனும் இதனைப் பயன்படுத்தி தேர்வு எழுதி முடித்ததும் அதனை சேமித்தால் அப்படியே சேவ் ஆகாமல் இன்னொரு பெயரில்தான் சேமிக்க முடியும். இதனால் மீண்டும் இதே ஃபைலை இன்னொரு மாணவனுக்கும் கேள்வித்தாளாகப் பயன்படுத்தலாம்

இது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயன் உள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.

குறிப்பு: மேலே உள்ள ஃபிரேமுக்குள் அனைத்தும் காட்சி அளிக்க Ctrl பட்டனை அழுத்திக்கொண்டு மவுஸை ஃபிரேமுக்குள் வைத்து Scroll செய்தால் பார்வைக் கேற்றபடி உள்ளடக்கத்தை  அட்ஜ்ஸ்ட் செய்து கொள்ளலாம்.


 ------------------------------------------------------------------------------------------------------------

தொடர்புடைய பிற பதிவுகள்- விரும்பினால் இவற்றையும் படிக்கலாம்.

1.உங்களால் முடியுமா?ஓரு Excel சவால்
2.அதிகம் பயன்படுத்தப்படாத எக்சல் வசதிகள்.-Excel Past.Special.
3.எக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா   

4.EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற 

5.  எக்சல் தப்பா கணக்கு போடுமா?

 

 

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

வசந்த் அண்ட் கோ பரிசு அறிவிப்பு -ஏமாற்றம்

 Vasanthakumar: காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்! -  congress mp vasanthakumar health condition is too critical says hospital |  Samayam Tamil
 வசந்த் அண்ட் கோ வசந்தகுமார் பற்றிய அஞ்சலிப் பதிவுகள் அதிக அளவில் சமூக வலைத் தளங்களில் காணமுடிகிறது. .அவரைப் பற்றிய எதிர்மறை செய்திகள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. மிகச் சிறிய அளவில் தொடங்கி இன்று பல இடங்களில் கிளை பரப்பி புகழ் பெற்ற வீட்டு  உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனமாக விளங்கி வருவது  மகத்தான சாதனைதான். புகழ் பெற்ற மாடல்களையோ திரை நடிக நடிகையர்களோ தனது  கடைவிளம்பரத்திற்குப் பயன்படுத்தாமல்  எப்போதும் சிரித்த முகத்துடன் தன்னையே விளம்பர மாடலாக்கி விற்பனையில் சாதனை படைத்தவர் என்பதை கண்கூடாகக் கண்டிருக்கிறோம். குமரி அனந்தன் அவர்களின் சகோதார் என்றாலும் அரசியலிலும் தனக்கென அடையாளம் ஏற்படுத்திக் கொண்டார். அன்னாருக்கு ஆழ்ந்ந்த அஞ்சலிகள்.
     அவரை  ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அவரது விளம்பரம் இடம்பெறாத தொலைகாட்சி நிகழ்ச்சிகள் இல்லை. அந்த நிகழ்ச்சிகளில் நடத்தப்படும் போட்டிகளுக்கு தானே வந்து மிக்சி கிரைண்டர் என்று பரிசுப் பொருட்களை தன் கையால் வழங்குவார். 
      90 களின் இறுதியில் பெப்சி உமா ( பெப்சி உங்கள் சாய்ஸ்) தூர்தர்ஷனில்  ”வாருங்கள் வாழ்த்துவோம்” என்று ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியின் இறுதியில் விமர்சனக் கடிதங்களை தேர்ந்தெடுத்து  வாசித்துப் பாராட்டுவார் உமா. அது பெரும்பாலும் கவிதையாக இருக்கும். அவற்றில் ஒன்று மகுடம் சூடிய மடல் என்று தேர்ந்தெடுக்கப் படும். அக் கவிதைக்கான பரிசாக வசந்த் அண்ட்கோ நிறுவனம் மிக்சி ஒன்றை பரிசாக வழங்கும். அடுத்த வாரத்தில் அதனை வசந்தகுமார்  அவர்களே தன் கையால் வழங்குவார். அதுவும் தொலைக்காட்சியில் ஒளி பரப்பாகும்  . நானும் முதலில் இரண்டு கவிதைகளை அனுப்பினேன். வாசிக்கப் பட்டது பாராட்டப் பட்டதே தவிர பரிசு கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கான கடிதங்கள் குவிந்து  கிடப்பதை காட்டுவார்கள் அவற்றைப் பார்க்கும்போது நமது கடிதம் கண்ணில் படுமா என்ற சந்தேகம் வந்து விடும்.
      எப்படியாவது ஒரு முறையாவது பரிசை வாங்கிவிட வேண்டும் என்று முயற்சி செய்தேன். பரிசு கிடைக்கும் கடிதங்களை கவனித்தேன். கொஞ்சம் கவிதைத்தனமாக நிகழ்ச்சியை ஆஹா ஒஹோ என்று பாராட்டும் கடிதங்களுக்கு பரிசு வழங்கப் படுவது தெரிந்தது

      ஒருகடையில் சோப்பு விளம்பரத்தில் வாசகம் ஒன்று கண்ணில் பட்டது. ”தொட்டால் தெரியும் பட்டின் மென்மை” என்ற வரிகள் என்னைக் கவர அதையே கவிதையில் முதல் வரியாக்கி 
தொட்டால் தெரியும் பட்டின் மென்மை
சுட்டாலும் தெரியும் சங்கின் வெண்மை
நுரையில் தெரியும் சோப்பின் தன்மை
உரையில் தெரியும் கவிதையின் தன்மை  
.........................
..................................
( மற்ற வரிகள் மறந்துவிட்டது பழைய டைரியில் தேடவேண்டும் பின்னர் தேடி எடுத்துப் போடுகிறேன்.)
        என்று இன்னும் பல தெரியும்களை அடுக்கி கடைசியில் நிகழ்ச்சியை ஒப்பிட்டு பாராட்டி முடித்தேன். நிச்சயம் பரிசு கிடைக்கும் என்று நம்பு அனுப்பி வைத்தேன். நான் நினைத்தது போலவே கடிதம் வாசிக்கப்பட்டது.  ”நல்லா ஐஸ் வச்சுருக்கீங்க முரளிதரன். இது போன்ற கடிதங்கள் எங்களுக்கும் தேவை” என்று முடித்தார உமா எல்லக் கடிதங்களுக்கும் இப்படியே சொல்ல இந்த முறையும் அவ்வளவுதான் என்று நினைத்தேன். அது சரி வாசிக்கவாவது செய்தார்களே அதற்கே சந்தோஷப்பட வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டேன். பல கடிதங்கள் வாசிப்பிற்குப்பின் கடைசியில்தான் இவற்றில் தேர்ந்தடுக்கப்பட்ட கடிதத்தை ”மகுடம் சூடிய மடல்” என்று அறிவிப்பார். கடைசியில் எனது கடிதத்திற்கு மிக்சி பரிசு என்று அறிவித்தார். அடுத்தவாரம் வசந்த குமார் அவர்களால் பரிசு வழங்கப்படும் வந்து பெற்றுக் கொள்ளலாம். வாழ்த்துகள் என்றார்.
     மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன். பரிசை விட டிவியில் வரப்போகிறோம் என்பது கூடுதல் சந்தோஷமாக நண்பர்களிடம் அனைவரிடமும் சொல்லிவைத்தேன். தகவலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். வரவே இல்லை. ஒரு வேளை அடுத்த வார நிகழ்ச்சியில் தகவல் சொல்வார்கள் என்று டிவி முன் காத்திருக்க  அதே நேரத்தில் வேறு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது அது வரை 52 வாரமாக நடந்த நிகழ்ச்சி முடிந்துவிட்டது என பின்னர் தெரிய வந்தது. 
ஆனாலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது ஏமாற்றமாக இருந்தது. விட மனமும் இல்லை. நிகழ்ச்சியின் ஸ்பான்சர் வசந்த் அண்ட்கோ என்பதால் தி.நகர் வசந்த் அண்ட்  கோ கடைக்கு சென்று அவரைச் சந்திக்க முடிவு செய்தேன்.
   இரண்டு மூன்றுமுறை முயற்சிக்குப் பிறகு அவரைச் சந்திக்க வாய்ப்பு வந்தது. தகவல் சொன்னதும் சிரித்த முகத்துடன் அவரே வெளியே வந்தார். நான் விஷயத்தை சொன்னதும் அப்படியா தம்பி வாழ்த்துகள் என்று கை குலுக்கிவிட்டு அந்த நிகழ்ச்சி முடிந்துவிட்டதே தம்பி விளம்பரம் வந்தாதானே தரமுடியும். சரி நான் விசாரித்துப் பார்த்து சொல்றேன் என்றார். ஏமாற்றத்துடன் திரும்பினேன். நமக்கு அதிர்ஷ்டம் அவ்வளவுதான் போல் இருக்கு என்று  நினைத்துக் கொண்டேன். விளம்பரம் இல்லாமல் அவர் மட்டும் எப்படித் தருவார் என்று சமாதானப்படுத்திக் கொண்டேன்.
  நண்பர் ஒருவர். பரிசுக்கு ஸ்பான்சர் பொறுப்பல்ல இதற்கு  நிகழ்ச்சி தயாரிப்பாளர்தான்  பொறுப்பு. அவரை அணுகிக் கேளுங்கள் என்றார். அதில் நிகழ்ச்சி தயாரித்த நிறுவனத்தின் முகவரி தெரியாது.  போஸ்ட் பாக்ஸ் நம்பர்தான் கொடுத்திருப்பார்கள்.  அதனை வைத்து போஸ்ட் ஆஃபிசைக் கண்டறிந்து அந்த நம்பருக்கான முகவரியைக் கண்டறிந்தேன். அவர்களை அணுக நிகழ்ச்சியை மீண்டும் ஆரம்பிக்கப் போகிறோம் அப்போது தந்துவிடுவோம் என்றனர். பலமுறை படையெடுப்பிற்குப் பின் வேற ஸ்பான்சர் மூலம் தர முயற்சி செய்கிறேன் என்று கூறினர். 6 மாதங்களுக்குப்பிறகு தொல்லை தாங்கமுடியாமல் எப்படியோ அட்ஜஸ்ட் செய்து Accurate Swiss என்ற கைக் கடிகாரத்தை கொடுத்தனர்.  வழங்கியது P.R.R&Sons ..கைக்கு எட்டியது கைக்கடிகாரமாகிவிட்டது.
 
பரிசாகக் கிடைத்த கைக்கடிகாரம்
 
 எங்காவது  வசந்த் அண்ட்கோ வை   கடந்து செல்லும்போதெல்லாம் இது எனக்கு நினவுக்கு வரும்.பரிசு கொடுக்காமல் விட்டுவிட்டாரே என்று ஆரம்பத்தில் வருத்தம் இருந்தது. அதில் அவர் தவறு ஏதும் இல்லை. என்றாலும்  இந்தப் பரிசு வாங்க இப்படி தேடிப் பிடித்து பரிசு வாங்கியதை நினைத்தால் இப்போதும் வெட்கமாக இருக்கிறது. 
புதன், 29 ஜூலை, 2020

ஏ.ஆர்.ரகுமான் புலம்பல் சரியா?


அன்புள்ள ரகுமான்!.
      90களில் இளைஞர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்களில் முக்கியமானவர்கள்  இரண்டு பேர். ஒருவர் சச்சின் டெண்டுல்கர். மற்றொருவர் நீங்கள் . நீங்கள் இருவருமே அமைதிக்குப் பெயர் போனவர்கள்  அதுவும் உங்கள் முகம் பேரமைதி கொண்டதாய்த் தெரியும். அளக்கப் பட்ட வார்த்தைகள்தான் உங்கள் உதட்டைக் கடந்திருக்கின்றன.  அநாவசியமாய் ஒரு வார்த்தை கூட உங்கள் நாவில் இருந்து வந்ததில்லை.  
         எனக்குத் தெரிந்து நீங்கள் மனம் திறந்து பேசியதாக நினைவு இல்லை.  ஆனால் சமீபத்தில் நீங்கள் சொன்னதாக வந்த செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. பாலிவுட்டில் உங்களுக்கு  எதிராக ஒரு குழு வதந்திகளைப் பரப்பி வருவதாகவும், ஹிந்தி சினிமாக்களில்  பணியாற்றும் வாய்ப்புகளை அந்தக்குழு தடுத்து வருவதாகவும் நீங்கள் சொன்னதாக, அறியப்படும் செய்திதான் அது. ஒரு வேளை அதில் உண்மையும் இருக்கலாம். ஆனால் அதற்காக வருத்தப்படும் ஆரம்ப நிலையிலா நீங்கள் இருக்கிறீர்கள்?.  உங்களை உச்சியில் வைத்து அழகு பார்த்ததும் பாலிவுட்தான். உங்களை உலகறியச் செய்ததும் பாலிவுட்தான். அவர்களும் உங்களைத் தென்னவராகப் பார்க்கவில்லை. அவர்களில் ஒருவராகத்தான் உங்களைக் கண்டனர். நீங்களும் வடவராகவே மாறிப் போனீர்கள். இன்றுவரை நீங்கள்தான் இந்தியத் திரைஇசை உலகின்  நம்பர் 1 என்று   கூகுளின்  பக்கங்கள் காட்டுகின்றன. உங்கள் வருத்தமும் ஆதங்கமும் உங்கள் தகுதிக்கு சரியானதுதானா? 
        சின்னச் சின்ன ஆசையில் தொடங்கி இன்றுவரை எத்தனை எத்தனை பாடல்கள்! உற்சாகம், ஆரவாரம், அமைதி, காதல், சோகம், வீரம், பக்தி என உணர்வுக் குவியல்கள் இசைக் கலவையாக உங்கள் வாத்தியங்களில் இருந்து புறப்பட்டு எங்கள் செவிகளை நிறைத்தன
      ’என்மேல் விழுந்த மழைத்துளியே’ போன்ற அமைதியான பாடலாகட்டும், ’முக்காபலா’ போன்ற ஆர்ப்பாட்டமான பாடலாகட்டும், ’ஸ்நேகிதனே! ஸ்நேகிதனே’  என்ற மனதை வருடும் பாடலாகட்டும், உயிரே! உயிரே! என்று உருகிய பாடலாகட்டும் நேற்றைய சிங்கப் பெண்ணே வரை உங்கள் இசையால் மயங்கிக் கிடக்கிறவர்கள் பல பேர். 
       சற்று சிந்தித்துப் பாருங்கள்!  முதல் அடி எடுத்த வைத்த நாளில் இருந்து நீங்கள் பணிபுரிந்தது எல்லாமே மணி ரத்தினங்களோடும் சங்கர்களோடும்தான்.
     அப்போதெல்லாம் தினமணியில் வாராவாரம் அதிகம் விற்பனையாகும் கேசட்டுகளின் பெயர்ப் பட்டியல் இடம் பெறும். அதில் உங்களுக்குத்தான் முதல் இடம்.  17 ஆண்டுகளாக முன்னணியில் இருந்த  தீவிர பக்தர்களைக் கொண்ட  இசைஞானி இளையராஜாவைத் தாண்டி இடம் பிடித்தீர்கள். இந்தியிலும் உங்கள் வெற்றிக் கொடி பறந்தது. வசீகரமான இளமைத் துள்ளல் இசையின் மூலம் இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்டீர்கள்.  ஒரு வருடத்திற்கு இசை அமைக்கும் படங்களின் எண்ணிக்கை  குறைவு என்றாலும் அத்தனை பாடல்களும் ஹிட் அடித்தன. உங்கள் நூதனமான இசை வடிவங்கள் மனதை வருடின.  ஆனால் நானறிந்தவரை சாதரண தயாரிப்பாளர்கள் நெருங்க முடியாத உயரத்தில் இருந்தீர்கள். இன்றுவரையிலும் அப்படித்தான் இருக்கிறீர்கள்
        ஏற்கனவே முன்னனி நடிகர்களும் இயக்குநர்களும் உங்கள் இசைக்காகக் காத்திருந்தார்கள். தொடர்ந்து இளையராஜாவோடு கூட்டணி வைத்தவர்கள் உங்கள் பக்கம் தாவினார்கள்.  பாரதிராஜாவே உங்களிடம் வந்து சேர்ந்தார். ஆனால்  என்னைப் புறக்கணிக்க சதிநடக்கிறது என்று இளையராஜா கூறவில்லை.  உங்கள் கூட்டணி  எப்போதுமே  பிரம்மாண்டக் கூட்டணியாக இருந்தது. படம் வெற்றியடையாவிட்டால் கூட உங்கள் பாடல்கள் வெற்றி பெற்றன. விதம்விதமான  ஒலியிசைகள் முலம் இன்பத் தேன் வந்து பாய்ந்தது எங்கள் காதுகளில்.
    உங்கள் வந்தே மாதரம் ஆல்பம் ஒலிக்காத இடம் உண்டா?. இன்றும் பள்ளி ஆண்டு விழாக்களில்  தாய்மண்ணே வணக்கம். ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது?. இதைவிட வேறென்ன பெருமை வேண்டும்? 
  சிலபடங்களுக்குப் பிறகு காணாமல் போய்விடுவீர்கள் என்றுதான் உங்களைப்பற்றிய  சிலர் ஆரூடம் கூறினார்கள். இளையராஜாவிற்குப் பிறகு யாரும் நீண்ட  காலம் நிலைத்திருக்க மாட்டார்கள் என்றுதான் கருதப்பட்டது. ஆனால் அதனை தவிடு பொடியாக்கி 25 ஆண்டுகளுக்கு மேல்  உச்சத்தில் இருந்தீர்கள்.  இருக்கிறீர்கள். தெற்கில் மட்டுமல்லாது வடக்கிலும் ஆட்சி புரிந்தீர்கள். நாடுகள் கடந்தது உங்கள் இசை. ஹாலிவுட்டிலும் தடம் பதித்து, உலகமே அண்ணாந்து பார்த்த ஆஸ்கார் விருதும் பெற்று,  ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப் படுத்தினீர்கள். ஆஸ்கார் மேடையில் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றே கூறியபோது பெருமிதம் கொள்ளாத தமிழர்கள் இல்லை. அந்த மேடையில் நீங்கள் விருது பெற்ற போது நாங்கள் பெற்றதாகவே .குதூகலித்தோம்; கொண்டாடினோம். 
       தமிழ்நாட்டுக்கு  எப்போதும் ஒரு பெருமை உண்டு.  திரை இசை மேதைகள் இங்கு போல் வேறேங்கும் இல்லை. எம்.எஸ்.வி இளையராஜா, நீங்கள். மூவரும் திரை இசை மும்மூர்த்திகளாக விளங்கி பெருமை சேர்த்தீர்கள். 
  வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக  அதிகம் இசை அமைத்து தரம் குறைத்துக் கொள்ளாமல் குறைவாக இசைத்தாலும்   நிறைவாக நின்றீர்கள். ஆனால் ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்தாலும் சம்பாதிக்க முடியாத செல்வம் உங்களை  அடைந்தது. இசை அறிவு மட்டுமல்ல.  முந்தைய தலைமுறை கலைஞர்களுக்கு அதிகம் இல்லாத   தொழில்நுட்ப அறிவு, காப்புரிமை மேலாண்மை,  இயல்பாகவே உங்களிடம் இருந்தது. அதைவிட அதிகம் பேசிப் பெயரைக் கெடுத்துக்கொள்ளாத புத்திசாலித்தனமும் உங்களிடம் இருந்தது  அமைதி உங்களுக்கு வாய்த்த பலமான ஆயுதம் .   இப்போது அமைதி கலைந்திருப்பது எங்களுக்கு அதிசயம்தான்.
             இளையராஜாவுக்குப் பின் இசையில் என்ன செய்து விடமுடியும் என்று இருந்த நிலையில் ஒரு புதிய பாணியை அறிமுகப்படுத்தி எங்களை உங்கள் பக்கம் ஈர்த்தீர்கள். எம்.எஸ்.வி.,இளையராஜா போல ஒரு ட்ரெண்ட் செட்டராகத் திகழ்ந்தீர்கள். உங்கள் கால்ஷீட் கிடைக்காதவர்கள் உங்கள் பாணியிலேயே இசை அமைக்கும் இசை அமைப்பாளர்களைத் தேடிப் போனார்கள்.      
    நீங்கள் வந்தபின் ஏராளமான பாடகர்களை அறிமுகப்படுத்தினீர்கள். இசையில் உதவிய கலைஞர்களின் பெயர்களையும்  கேசட் அட்டையிலும் சிடியிலும் பதித்து அவர்களுக்கு அங்கீகாரம் தந்தீர்கள்.  உங்கள் இசையில் ஒரு பாடல் பாடுவதற்கு முன்னனிப் பாடகர்களே தவம் கிடந்தார்கள். உங்கள் இசைக்கு ஒரு பாடல் எழுத வாய்ப்பு கிடைக்காதா என்று பாடலாசிரியர்கள் ஏங்கினார்கள்.  சில இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நீங்கள் எட்டாக் கனியாக விளங்கினீர்கள். அத்தனையும் உங்களுக்கு வாய்த்திருக்கிறது
     வயதானவர்களுக்கு  தாங்கள் ஒதுக்கப் படுகிறோம் என்று தோன்றுவது உண்டு. அதே போன்ற மனநிலை உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.    
எத்தனையோ திறமை இருந்தும்  கண்டு கொள்ளப் படாமல் வாய்ப்புக் கிடைக்காமல் அங்கீகாரமும் கிடைக்காமல் போனவர்கள் பலருண்டு. ஆனால் உங்களுக்கு அப்படி அல்ல. தமிழ்த் திரையுலகம் அடையாளம் கண்டது.  இந்தித் திரையுலகும்  கொண்டாடியது. ஹாலிவுட்டும் அரவணைத்தது. 
    மாற்றம் ஒன்றுதான் மாறாதது ,  ஒருகுறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அனைத்திலும் மாற்றம் நடந்து கொண்டிருக்கும். அதுவும்  கலை ரசனையில் நடக்கும் மாற்றம் வேகமானது  ஒன்றுபோய் இன்னொன்று இடம் பிடிக்கும். அதுவும் சில காலத்திற்கே.  அப்படிப்பட்ட மாற்றங்களை விரும்பியதால்தான் உங்களுக்கு  ஒரு மிகப் பெரிய இடம் கிடைத்தது. காலத்திற்கேற்ப நவீனப் படுத்திக் கொள்ளும் திறமை உங்களுக்கு இருந்ததால்தான் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குப் பிடிக்க முடிந்தது. அதுவே மிகப் பெரிய சாதனை. அதனை இனி வேறு யாராலும் நெருங்க முடியாது.  ஆனால் இன்றைய தலைமுறையின் ரசனை மாற்றம் அதிவேகமானது.  ரசனையின் வாழ்நாள் மிகக் குறுகியது. தயவு தாட்சயணமின்றி தூக்கி எறியத் தயங்கமாட்டார்கள். இவையெல்லாம் உங்களுக்குத் தெரியாததல்ல.
தேசியவிருதுகள் உங்களைப் போல் பெற்றவர் யாருமில்லை. விதம் விதமான விருதுகள் உங்களுக்குப் பெருமை சேர்த்தன; பெருமை அடைந்தன. 
        இத்தனை பெருமைகளைக் கொண்ட நீங்கள்  இந்தியில் எனக்கு வாய்ப்பு  திட்டமிட்டு மறுக்கப் படுகிறது, சதி செய்யப்படுகிறது  என்று வருந்தி  இருப்பதும்  இந்தித் திரை உலகம் உங்களைப் புறக்கணிப்பதாக புகார் கூறுவதும் ஏற்புடையதாகத் தோன்றவில்லை.   தமிழில் கூட உங்களுக்கு வாய்ப்பு  அதிகம் இல்லை. காரணம், நிச்சயம் புறக்கணிப்பாக இருக்க முடியாது.. ஆனால்   இன்னமும்   சாதாரண தமிழ்த் தயாரிப்பாளர்களுக்கு எட்டாத உயரத்தில்தான் இருக்கிறீர்கள். அதைப் பற்றி நீங்கள் கவலைப் படவில்லை. நீங்கள் தமிழ்ப்  பாடகர்களுக்கு வாய்ப்பளித்ததைடை விட வடக்கத்திய தமிழ் தெரியாத பாடகர்களையே அதிகம் ஆதரித்தீர்கள். உங்களுக்காக அவர்களையும் கொண்டாடினோம். நீங்கள் இந்திக்கே அதிக முக்கியத்துவம் அளித்தீர்கள். ஆனால் அப்போதும் நீங்கள் தமிழைப் புறக்கணிப்பதாகக் நாங்கள் கருதவில்லை. 
  நீங்கள் பல பாடகர்களுக்கு வாய்ப்பளித்தீர்கள். அதுபோல தயாரிப்பாளர்கள் பலருக்கு வாய்ப்பளிப்பதாக கருதிக் கொள்ளுங்கள். .  இவ்வளவு சாதனைக்குப் பின் இன்னமும் வாய்ப்பு இல்லை என்று புலம்புவது எங்கள் அபிமான ரகுமானுக்கு அழகல்ல. உங்கள் சாதனைகள் காலம் கடந்து நிற்பவை. உச்சம் தொட்ட இளையராஜா உங்கள் வருகைக்குப் பின் தளர்ந்து போகவில்லை. இன்னமும் இசை அமைத்துக் கொண்டு ரசிகர்  நெஞ்சங்களில் வீற்றிருக்கிறார்.உங்களாலும் அதுபோல் முடியும்.
        தனிக்குடித்தனம் போய் அவ்வப்போது தாய் வீடு வந்து போன பிள்ளை போலத்தான் இருந்தீர்கள்.  இங்கேயும் திறமையான இளம் இயக்குநர்கள்  தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மொத்த பட்ஜெட்  உங்கள் சம்பளத்துக்குக் காணாது. உங்கள் இரும்புக்கோட்டையை தளர்த்தி உங்கள் இசையை அவர்களுக்கும் கொடுங்கள்.               
     இந்தியை விட்டுத் தள்ளுங்கள். அவர்களை நீங்கள் புறக்கணியுங்கள்.  தமிழர்கள் என்றுமே உங்களைக் கொண்டாடு்வார்கள். எங்கள் இசைச் சிங்கம்  ஏ.ஆர் ரகுமானாக எப்போதும் கம்பீரமாக இசைகர்ஜனை புரியுங்கள்

                                                                                                              அன்புடன்
                                                                                           உங்கள் ரசிகர்களில் ஒருவன்.

------------------------------------------------------------------------------------------------------------------------
கொசுறு: 1

ஏ.ஆர்.ரகுமானின் இந்த கருத்து பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பிய நிலையில் சல்மான் கான் படத்திற்கு இசையமைப்பது குறித்து ஏ.ஆர்.ரகுமான் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சில வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது. அதில் ரஹ்மான் ஆவரேஜ் மியூசிக் கம்போசர் என்று ஜோக்காக சொவதுபோல ரகுமானிடமே சரியா என்று கேட்பார். (இதற்கு சல்மானுக்கு கடும் கண்டனங்களை இந்தி ரசிகர்கள் பதிவு செய்தனர்)  ரகுமான் எப்போதும் அமைதிப் புன்னகைபுரிவார்
       மேலும் அந்த வீடியோவில் ரகுமானிடம் சல்மான் கான் எப்போது எனது படங்களுக்கு இசையமைப்பாளர் என்று கேட்பார். ஆனால் ரகுமான் அப்போது அமைதியாக இருப்பார்.  சல்மான்கான் கைகுலுக்க முயற்சிக்கும்போது ரகுமான்  கையை சட்டைப்பாக்கெட்டில் இருந்து எடுக்காமல் பதிலடி கொடுப்பார். பின்னர் செய்தியாளர் ஒருவர் சல்மான் கான் படத்திற்கு எப்போது இசையமைப்பீர்கள் என்று கேள்வி எழுப்புவார். அதற்கு பதிலளிக்கும் ஏ.ஆர்.ரகுமான், “அவர் எனக்கு விருப்பமான படங்களை நடிக்க வேண்டும்“ என்று சிரித்து கொண்டே கூறுவார்.

ARR is unaffordable’

       ....... former Stardust editor-turned-filmmaker Ramkamal Mukherjee, who has made award-winning films like Cakewalk and Season’s Greetings, says that the claim that Oscar winners are being kept out are far from reality.
“The fact is it’s tough for filmmakers to afford Rahman. As a filmmaker, I would love to collaborate with Rahman, but will he work within the budget that our film can afford? Unfortunately, none of the music companies is paying producers for the songs.
The days are gone when the rights of movie songs would fetch lakhs and crores. But now music companies ask us to give it away as a complimentary deal against a marketing spend, which is not even clearly shared with the producers.
-----------------------------------------------------------------------------------------------------------------------------

தொடர்புடைய முந்தைய பழைய பதிவுகள் கீழே
 ஏ.ஆர்.ரஹ்மான் - வாழ்த்துக் கவிதை!
இளையராஜா செய்த தவறு
 

செவ்வாய், 14 ஜூலை, 2020

காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 5------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி 5
அப்படி யாருடைய படத்தை திறக்க சொல்லிக் கேட்டனர்? 

         தெரிந்து கொள்வதற்கு முன்பு சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். சென்னையின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் ஒரு கிராமம். ஜூலை 15 பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் அதாவது காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. விழாவிற்கு பஞ்சாயத்துத் தலைவரும் ஒன்றியக் கவுன்சிலரும் வந்திருந்தனர். காமராஜர் படம் திறக்கவும் கொடி ஏற்றவும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. படத்தை பஞ்சாயத்து தலைவர் திறக்க, தேசியக் கொடியினை ஏற்ற ஒன்றியக் கவுன்சிலரை அழைத்தார் தலைமை ஆசிரியை அவ்வளவுதான் வந்தது வினை. கோபித்துக் கொண்டு வெளியேறினார் பஞ்சாயத்து தலைவர். எவ்வளவு சமாதானப் படுத்தியும் முடியவில்லை. தன்னை அவமதித்தாக நினைத்தார் பஞ்சாயத்து தலைவர். இத்தனைக்கும் ஒன்றியக் கவுன்சிலரும் இவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள்தான்.(உண்மையில் பஞ்சாயத்து தலைவர் இல்லை. அவரது மனைவிதான் தலைவர். ஆனால் தலைவராக நடந்துகொள்வது இவர்தான்.) 
     இதற்கு ஆறு மாதத்திற்கு முன் பள்ளியில் நடந்த பிரச்சனையைக் கையில் எடுத்தார். பிரச்சனை நடந்தபோது சுமுகமாகத் தீர்த்து வைத்தவரும் இவரே. ஆனால் இப்போது நிலை வேறல்லவா? புகார் மனு பறக்க இரண்டே நாட்களில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். பணிநீக்கம் முடிந்து பணியில் சேர வந்த போது தலைமை ஆசிரியரை மட்டும் பள்ளியில் சேர அனுமதிக்கவில்லை. லோக்கல் தலைவர்களே இப்படி. இதைமனதில் வைத்துக் கொண்டு காமராசர் காலத்திற்குப் போவோம். 
        அழைப்பிதழைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததற்குக் காரணம் பள்ளிக் கல்வி இயக்குநர் திரு நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் திருவுருவப் படத்தை காமராசர் திறந்து வைப்பார் என அச்சடிக்கப் பட்டிருந்தது. 
    தனக்குக் கீழ் பணிபுரியும் ஒரு அதிகாரியின் அதுவும் வயதில் இளையவரின் படத்தை திறக்க முதலமைச்சரை அழைப்பதா என வெகுண்டார் உதவியாளர். காமராசர் நிர்வாகிகளை உள்ளே அனுப்பும்படி கூறினார். அவர்களும் காமராசரைப் பார்த்து அழைபபிதழைக் கொடுத்துவிட்டு சென்றனர். காமராசரின் எண்ணத்தை அறிய இயலாத நிலையில் நெ.துசுவுக்கு தகவல் தெரிவித்தார் உதவியாளர். பதறி அடித்துக் கொண்டு ஓடிவந்தார் நெ.து.சு.. 
         காமராசரைப் பார்த்து ”ஐயா இந்த விவகாரம் எனக்குத் தெரியாது, என்னைக் கேட்காமல் அழைப்பிதழ் அச்சடித்து விட்டார்கள். பணியில் இருப்பவரின் படத்தை திறப்பது மரபல்ல. தாங்கள் அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டாம். படத்திறப்பை ரத்து செய்யச் சொல்லி விடுகிறேன்” என்றார், 
     அமைதியாகத் தலையை ஆட்டிவிட்டு ”ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு சுருக்கமாக முடித்து அனுப்பிவிட்டார். காமராசரின் மன ஓட்டத்தை அறிய முடியாமல் அங்கிருந்து வெளியேறினார் நெ.து.சு
      வேண்டாம் என்று பலர் தடுத்தும் காமராசர் அந்த விழாவில் கலந்து கொண்டு நெ.துசுவின் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.
“என்னைக் கேட்டுத்தான் விழாவிற்கு ஏற்பாடு செய்தனர். வழக்கத்தை மீறி நான் ஒப்புக் கொண்டதற்குக் காரணம் அவர் பணியின்மீது அனைவரும் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். திண்ணைப் பள்ளிக்கூடம்கூட இல்லாத சின்ன கிராமத்தில் பிறந்து படிப்படியாக இந்த நிலையை அடைந்திருக்கிறார்.என்றால் அவர் உழைப்பையும் திறமையையும் மற்றவர் அறிய வேண்டாமா? அவரது படத்தைக் தினமும் மாணவர்கள் பார்க்கும்போது இவரைப் போல படித்து நாமும் உயர வேண்டும் என்ற எண்ணமும் நம்பிக்கையும் வரும். மாணவர்களின் நன்மைக்காகவே படத்தை மகிழ்ச்சியுடன் திறந்து வைக்கிறேன் என்று கூறினார். 
     நான் முன்பு கூறிய சம்பவத்தையும் இந்த சம்பவத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். சாதாரண பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு அகங்காரம் இருந்தது. ஆனால் மாநிலத்தின் முதலமைச்சருக்கோ தன் கீழ் பணிபுரியும் நூற்றுக்கணக்கான அலுவலர்களில் ஒருவரின் உருவப் படத்தை திறந்து வைக்கும் பெருங்குணம் இருந்தது. எப்பேர்ப்பட்ட செயல்! காமராசருக்குப் பின் வந்த தலைவர்களில் யாருக்கேனும் இதுபோன்று செய்திருப்பார்களா? அந்த அலுவலரின் நிலை என்னவாகி இருக்கும். இதுதான் காமராசர். 
    ஏழை மக்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த காமராஜருக்கு துணையாய் அமைந்தது பிரதமர் நேருவின் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டம்.
   மொத்த விழுக்காட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவர்களுக்கான வேலை வாய்ப்பும் குறைவாகவே இருந்தது. பள்ளி இறுதி வகுப்போடு நிறுத்திக் கொண்டு குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளவர்கள் அதிகரித்தனர்.வேலைவாய்ப்பின்மை அதிகரித்தால் சமூக சிக்கல் அதிகரிக்கும் என்பதை உணர்ந்த நேரு வேலையில்லாத படித்தவர்களுக்கு வேலை என்ற அதிரடித் திட்டத்தை உருவாக்கினார். 
          இத்திட்டத்தின்படி ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளி இறுதி வகுப்புவரை படித்து தேர்ச்சி பெற்றவர்களைப் பயன்படுத்தி பள்ளி இல்லா ஊரில் பள்ளிகளைத் தொடங்கி அவர்களுக்கு ஆசிரியர் பணி அளித்து வேலைவாய்ப்பை அதிகரிப்பது. இன்னொரு கூடுதல் லாபம் பள்ளி இல்லாத ஊர்களின் எண்ணிக்கையையும் குறைக்க முடியும் என்று எண்ணினார். இத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சில ஆயிரம் பேர்கள் ஒதுக்கப்பட்டது. இதற்கான செலவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என் அறிவிக்கப்பட்டது. 
        ஏற்கனவே கல்விக்காக என்ன செய்யலாம் என்று துடித்துக் கொண்டிருந்த காமராசர் இவ்வாய்ப்பைத் தவற விடுவாரா? இயக்குநரை முடுக்கி விட்டு அரசியல் பாரபட்சமின்றி எந்த ஊர்களுக்கு மிக அவசியமாக பள்ளிகள் தேவை என்பதைக் கண்டறிந்து எல்லா மாவட்டங்களுக்கும் பயனளிக்கும் வகையில் பள்ளிகள் திறக்க ஆணையிட்டார் 
மகராஜர் காமராஜர் வந்தார்; பள்ளிக்கூடம் வந்தது என மக்கள் வாழ்த்தினர். 
     மேலும் கல்வி நிலை குறித்து ஆராய்ந்து மேம்படுத்த டாக்டர் அழகப்ப செட்டியார் தலைமையில் தொடக்கக்கல்விக் குழு அமைக்கப்பட்டு பல்வேறு ஊர்களுக்குச் சென்று நிலைமையை ஆராய்ந்து கருத்துகளைத் திரட்டியது. அறிஞர்கள்,அலுவலர்கள் பொதுமக்கள் என அனவைரும் தங்கள் ஆலோசனைகளைத் தெரிவித்தனர். 
அக் குழுவில் முக்கியப் பரிந்துரை ஒன்று அதிகமாக விவாதிக்கப் பட்டது. அரசல் புரசலாக வெளியே தெரிந்த அப்பரிந்துரை அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது. 


அது என்ன? 


--------------------------------------------------------------------------------------------------------------