என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

வசந்த் அண்ட் கோ பரிசு அறிவிப்பு -ஏமாற்றம்

 Vasanthakumar: காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்! -  congress mp vasanthakumar health condition is too critical says hospital |  Samayam Tamil
 வசந்த் அண்ட் கோ வசந்தகுமார் பற்றிய அஞ்சலிப் பதிவுகள் அதிக அளவில் சமூக வலைத் தளங்களில் காணமுடிகிறது. .அவரைப் பற்றிய எதிர்மறை செய்திகள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. மிகச் சிறிய அளவில் தொடங்கி இன்று பல இடங்களில் கிளை பரப்பி புகழ் பெற்ற வீட்டு  உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனமாக விளங்கி வருவது  மகத்தான சாதனைதான். புகழ் பெற்ற மாடல்களையோ திரை நடிக நடிகையர்களோ தனது  கடைவிளம்பரத்திற்குப் பயன்படுத்தாமல்  எப்போதும் சிரித்த முகத்துடன் தன்னையே விளம்பர மாடலாக்கி விற்பனையில் சாதனை படைத்தவர் என்பதை கண்கூடாகக் கண்டிருக்கிறோம். குமரி அனந்தன் அவர்களின் சகோதார் என்றாலும் அரசியலிலும் தனக்கென அடையாளம் ஏற்படுத்திக் கொண்டார். அன்னாருக்கு ஆழ்ந்ந்த அஞ்சலிகள்.
     அவரை  ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அவரது விளம்பரம் இடம்பெறாத தொலைகாட்சி நிகழ்ச்சிகள் இல்லை. அந்த நிகழ்ச்சிகளில் நடத்தப்படும் போட்டிகளுக்கு தானே வந்து மிக்சி கிரைண்டர் என்று பரிசுப் பொருட்களை தன் கையால் வழங்குவார். 
      90 களின் இறுதியில் பெப்சி உமா ( பெப்சி உங்கள் சாய்ஸ்) தூர்தர்ஷனில்  ”வாருங்கள் வாழ்த்துவோம்” என்று ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியின் இறுதியில் விமர்சனக் கடிதங்களை தேர்ந்தெடுத்து  வாசித்துப் பாராட்டுவார் உமா. அது பெரும்பாலும் கவிதையாக இருக்கும். அவற்றில் ஒன்று மகுடம் சூடிய மடல் என்று தேர்ந்தெடுக்கப் படும். அக் கவிதைக்கான பரிசாக வசந்த் அண்ட்கோ நிறுவனம் மிக்சி ஒன்றை பரிசாக வழங்கும். அடுத்த வாரத்தில் அதனை வசந்தகுமார்  அவர்களே தன் கையால் வழங்குவார். அதுவும் தொலைக்காட்சியில் ஒளி பரப்பாகும்  . நானும் முதலில் இரண்டு கவிதைகளை அனுப்பினேன். வாசிக்கப் பட்டது பாராட்டப் பட்டதே தவிர பரிசு கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கான கடிதங்கள் குவிந்து  கிடப்பதை காட்டுவார்கள் அவற்றைப் பார்க்கும்போது நமது கடிதம் கண்ணில் படுமா என்ற சந்தேகம் வந்து விடும்.
      எப்படியாவது ஒரு முறையாவது பரிசை வாங்கிவிட வேண்டும் என்று முயற்சி செய்தேன். பரிசு கிடைக்கும் கடிதங்களை கவனித்தேன். கொஞ்சம் கவிதைத்தனமாக நிகழ்ச்சியை ஆஹா ஒஹோ என்று பாராட்டும் கடிதங்களுக்கு பரிசு வழங்கப் படுவது தெரிந்தது

      ஒருகடையில் சோப்பு விளம்பரத்தில் வாசகம் ஒன்று கண்ணில் பட்டது. ”தொட்டால் தெரியும் பட்டின் மென்மை” என்ற வரிகள் என்னைக் கவர அதையே கவிதையில் முதல் வரியாக்கி 
தொட்டால் தெரியும் பட்டின் மென்மை
சுட்டாலும் தெரியும் சங்கின் வெண்மை
நுரையில் தெரியும் சோப்பின் தன்மை
உரையில் தெரியும் கவிதையின் தன்மை  
.........................
..................................
( மற்ற வரிகள் மறந்துவிட்டது பழைய டைரியில் தேடவேண்டும் பின்னர் தேடி எடுத்துப் போடுகிறேன்.)
        என்று இன்னும் பல தெரியும்களை அடுக்கி கடைசியில் நிகழ்ச்சியை ஒப்பிட்டு பாராட்டி முடித்தேன். நிச்சயம் பரிசு கிடைக்கும் என்று நம்பு அனுப்பி வைத்தேன். நான் நினைத்தது போலவே கடிதம் வாசிக்கப்பட்டது.  ”நல்லா ஐஸ் வச்சுருக்கீங்க முரளிதரன். இது போன்ற கடிதங்கள் எங்களுக்கும் தேவை” என்று முடித்தார உமா எல்லக் கடிதங்களுக்கும் இப்படியே சொல்ல இந்த முறையும் அவ்வளவுதான் என்று நினைத்தேன். அது சரி வாசிக்கவாவது செய்தார்களே அதற்கே சந்தோஷப்பட வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டேன். பல கடிதங்கள் வாசிப்பிற்குப்பின் கடைசியில்தான் இவற்றில் தேர்ந்தடுக்கப்பட்ட கடிதத்தை ”மகுடம் சூடிய மடல்” என்று அறிவிப்பார். கடைசியில் எனது கடிதத்திற்கு மிக்சி பரிசு என்று அறிவித்தார். அடுத்தவாரம் வசந்த குமார் அவர்களால் பரிசு வழங்கப்படும் வந்து பெற்றுக் கொள்ளலாம். வாழ்த்துகள் என்றார்.
     மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன். பரிசை விட டிவியில் வரப்போகிறோம் என்பது கூடுதல் சந்தோஷமாக நண்பர்களிடம் அனைவரிடமும் சொல்லிவைத்தேன். தகவலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். வரவே இல்லை. ஒரு வேளை அடுத்த வார நிகழ்ச்சியில் தகவல் சொல்வார்கள் என்று டிவி முன் காத்திருக்க  அதே நேரத்தில் வேறு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது அது வரை 52 வாரமாக நடந்த நிகழ்ச்சி முடிந்துவிட்டது என பின்னர் தெரிய வந்தது. 
ஆனாலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது ஏமாற்றமாக இருந்தது. விட மனமும் இல்லை. நிகழ்ச்சியின் ஸ்பான்சர் வசந்த் அண்ட்கோ என்பதால் தி.நகர் வசந்த் அண்ட்  கோ கடைக்கு சென்று அவரைச் சந்திக்க முடிவு செய்தேன்.
   இரண்டு மூன்றுமுறை முயற்சிக்குப் பிறகு அவரைச் சந்திக்க வாய்ப்பு வந்தது. தகவல் சொன்னதும் சிரித்த முகத்துடன் அவரே வெளியே வந்தார். நான் விஷயத்தை சொன்னதும் அப்படியா தம்பி வாழ்த்துகள் என்று கை குலுக்கிவிட்டு அந்த நிகழ்ச்சி முடிந்துவிட்டதே தம்பி விளம்பரம் வந்தாதானே தரமுடியும். சரி நான் விசாரித்துப் பார்த்து சொல்றேன் என்றார். ஏமாற்றத்துடன் திரும்பினேன். நமக்கு அதிர்ஷ்டம் அவ்வளவுதான் போல் இருக்கு என்று  நினைத்துக் கொண்டேன். விளம்பரம் இல்லாமல் அவர் மட்டும் எப்படித் தருவார் என்று சமாதானப்படுத்திக் கொண்டேன்.
  நண்பர் ஒருவர். பரிசுக்கு ஸ்பான்சர் பொறுப்பல்ல இதற்கு  நிகழ்ச்சி தயாரிப்பாளர்தான்  பொறுப்பு. அவரை அணுகிக் கேளுங்கள் என்றார். அதில் நிகழ்ச்சி தயாரித்த நிறுவனத்தின் முகவரி தெரியாது.  போஸ்ட் பாக்ஸ் நம்பர்தான் கொடுத்திருப்பார்கள்.  அதனை வைத்து போஸ்ட் ஆஃபிசைக் கண்டறிந்து அந்த நம்பருக்கான முகவரியைக் கண்டறிந்தேன். அவர்களை அணுக நிகழ்ச்சியை மீண்டும் ஆரம்பிக்கப் போகிறோம் அப்போது தந்துவிடுவோம் என்றனர். பலமுறை படையெடுப்பிற்குப் பின் வேற ஸ்பான்சர் மூலம் தர முயற்சி செய்கிறேன் என்று கூறினர். 6 மாதங்களுக்குப்பிறகு தொல்லை தாங்கமுடியாமல் எப்படியோ அட்ஜஸ்ட் செய்து Accurate Swiss என்ற கைக் கடிகாரத்தை கொடுத்தனர்.  வழங்கியது P.R.R&Sons ..கைக்கு எட்டியது கைக்கடிகாரமாகிவிட்டது.
 
பரிசாகக் கிடைத்த கைக்கடிகாரம்
 
 எங்காவது  வசந்த் அண்ட்கோ வை   கடந்து செல்லும்போதெல்லாம் இது எனக்கு நினவுக்கு வரும்.பரிசு கொடுக்காமல் விட்டுவிட்டாரே என்று ஆரம்பத்தில் வருத்தம் இருந்தது. அதில் அவர் தவறு ஏதும் இல்லை. என்றாலும்  இந்தப் பரிசு வாங்க இப்படி தேடிப் பிடித்து பரிசு வாங்கியதை நினைத்தால் இப்போதும் வெட்கமாக இருக்கிறது. 




8 கருத்துகள்:

  1. பரிசு பெற்றது சிறப்பு!
    ஆனால், கைக்கு எட்டவில்லையே!
    ஆனாலும் தாங்கள் விடவில்லை;
    கைக்கு எ(க)ட்டியது கைக்கடிகாரம்!!!

    பதிலளிநீக்கு
  2. ஆஹா...இது தங்கள் விடாமுயற்சிக்குக் கிடைத்த பரிசாகவும் கொள்ளலாம்...வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள்...

    மற்ற வரிகளை தேடிக் கண்டுபிடித்து தனிப்பதிவாக வெளியிட வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
  4. ஐய்யோ உங்க நேரம் பார்த்து நிகழ்ச்சி முடிவுக்கு வந்திடுச்சு...


    ஆனாலும் நீங்க சூப்பர் சார்.


    கைக்கடிகாரத்திர்க்கு வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் நல்ல கவிஞர் மட்டுமல்ல. விடா முயற்சியாளரும் கூட.. :)

    பதிலளிநீக்கு
  6. வசந்த் அண்ட் கோ - உங்கள் நினைவுகள் நன்று.

    முடிந்தால் கவிதை வரிகளைத் தேடி பகிர்ந்து கொள்ளுங்கள் முரளிதரன்.

    பதிலளிநீக்கு
  7. தங்களின் விடா முயற்சி போற்றுதலுக்கு உரியது ஐயா
    முழுக் கவிதையினையும் தேடி எடுத்துப் பகிருங்கள் ஐயா

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895