என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 5 அக்டோபர், 2020

திருக்குறள் கற்பிக்க எக்சல் பயன்படுமா?

                 


மைக்ரோ சாஃப்ட் எக்சல்லின் பயன்கள் அளவிடற்கரியது. அலுவலகப் பயன்பாட்டில் எக்சல் கணக்கீடுகள் செய்வதற்கும் தரவுகள் சேமித்து வைப்பதற்கும் ஒரு  கருவியாக மட்டுமே பெரும்பாலோர்  இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.பாடங்கள் கற்பித்தலுக்கோ மதிப்பிடுதலுக்கோ இதனை பயன் படுத்துவது மிக அரிது.
   கணிதம் கற்பித்தலில் இதனைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் மொழிக் கற்பித்தலுக்கும் இதனைப் பயன்படுத்த முடியும் எனபது சிலருக்கு வியப்பாக இருக்கலாம். . குறிப்பாக தமிழ் கற்பித்தலுக்கும் எக்சல் விரிதாளை பயன்படுத்தலாம் என்பதற்கான முயற்சியே இது. ஆசிரியர்கள் ஆர்வமுள்ள பெற்றோர் என  ஒரு சிலருக்காவது உதவும் என்று நினைக்கிறேன்.
      இன்று அரசு பள்ளிகளில் கூட கணினி பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாணவர்கள் பயிற்சி செய்தும் வருகின்றனர்.
      மதிப்பீடு செய்வதற்கும் தானே கற்றலுக்கும் கணினியை எந்தப் பாட ஆசிரியரும் பயன்படுத்த முடியும்.  எக்சல் மூலம் சிறிய ஆர்வமூட்டும்  தேர்வுகள்  நடத்தி  மாணவனின் கற்றலை மேம்படுத்தலாம்.

      உதாரணத்திற்கு 6 ம் வகுப்பு தமிழில் திருக்குறள் கற்பித்தலுக்கு சுவாரசியமான உறுதுணையாக எக்சல் எவ்வாறு விளங்கமுடியும் என்று பார்க்கலாம். அதனை இங்கே பாடப் புத்தகக்த்தில் உள்ளவாறு பயன்படுத்தி இருக்கிறேன்.

    6 ம் வகுப்பில்  10 திருக்குறள் உள்ளன. ஆசிரியர் அதனைக் கற்பித்து முடிந்ததும் வழக்கமான வாய்மொழித் தேர்வோ, அல்லது எழுத்துவழித் தேர்வோ வைப்பார்கள். அது மாணவர்களுக்கு சில சமயங்களில் சலிப்பூட்டும். அதனையே கணினியில் எக்சல்லைப் பயன்படுத்தினால் எவ்வளவு சுவாரசியமாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்.   

      ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஏழு சீர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒவ்வொரு சீருக்கும்  ஒரு செல்  என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு செல்லை கிளிக் செய்தால் பக்கத்தில் ஒரு Down arrow தெரியும். அதனை க்ளிக் செய்ய Drop down menu தோன்றும். அந்த கீழ்நோக்குப்பட்டியில் இருந்து(Drop down menu)  சரியான சீரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு 7 சீர்களையும் சரியாக தேர்ந்தெடுத்து விட்டால் அனைத்தும் பச்சை நிறத்திற்கு மாறி விடும்  பக்கத்தில் ஒரு டிக் மார்க் வந்து விடும். அதன் பக்கத்தில் குறளின் சரியான பொருள்  தோன்றும்/  திருக்குறளில் தவறு இருந்தால் பொருள் காட்டாது. மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்..
   ஒரு திருக்குறளுக்கு 2 மதிப்பெண்கள். சரியாக குறள்களை அமைத்துவிட்டால் அதற்குரிய மதிப்பெண்கள் கீழே தெரியும் படி அமைத்திருக்கிறேன். நீங்களும் முயற்சி செய்து பார்த்து இது எப்படி இருக்கிறது என்று கூறினால் மகிழ்ச்சி அடைவேன்.
      இதனை டவுன்லோட் செய்து உங்கள் குழந்தைகளுக்கும், ஆசிரியர்களாக இருந்தால் உங்கள் மாணவர்களுக்கும் பயன்படுத்திப் பாருங்கள். மேலும் வேறு குறள்களுக்கும் இதனைப் பயன்படுத்தலாம். ஷீட் 1 இல் இதற்கான உள்ளீடுகள் உள்ளன. நீங்கள் விரும்பினால் Unprotect செய்ய பாஸ்வேர்ட் தருகிறேன். தரவுகளை மாற்றிக் கொள்ள முடியும்

  கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கிறீர்களா? இந்தக் கட்டத்திற்குள்ளே சரியான திருக்குறள் சீர்களை தேர்ந்தெடுங்கள்.  உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்
 (சரி தவறு     என்பதைக் குறிக்கும்  குறியீடுகள் ஆண்ட்ராய்ட் ஃபோனில் வேறுவிதமாகத் தெரியும் அதனால் பக்கத்தில் சரி,தவறு என எழுத்தில் தெரியுமாறு அமைத்திருக்கிறேன். விண்டோஸ் கணினியில் குறியீடுகள் சரியாகத் தெரியும்)

 

    மேலுள்ள எக்சல் ஃபைலின் இடது கீழ்ப்புறத்தில் டவுன்லோட் பட்டன் உள்ளது. அதனை கிளிக் செய்தால் இக்கோப்பு உங்கள் கணினியில் பதிவிறக்கம் ஆகிவிடும். பின்னர் இதனைத் திறந்து Save as Template  ஆக சேமித்தால் கேள்வித்தாள் போல் பயன்படுத்த முடியும். ஒவ்வொரு மாணவனும் இதனைப் பயன்படுத்தி தேர்வு எழுதி முடித்ததும் அதனை சேமித்தால் அப்படியே சேவ் ஆகாமல் இன்னொரு பெயரில்தான் சேமிக்க முடியும். இதனால் மீண்டும் இதே ஃபைலை இன்னொரு மாணவனுக்கும் கேள்வித்தாளாகப் பயன்படுத்தலாம்

இது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயன் உள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.

குறிப்பு: மேலே உள்ள ஃபிரேமுக்குள் அனைத்தும் காட்சி அளிக்க Ctrl பட்டனை அழுத்திக்கொண்டு மவுஸை ஃபிரேமுக்குள் வைத்து Scroll செய்தால் பார்வைக் கேற்றபடி உள்ளடக்கத்தை  அட்ஜ்ஸ்ட் செய்து கொள்ளலாம்.


 ------------------------------------------------------------------------------------------------------------

தொடர்புடைய பிற பதிவுகள்- விரும்பினால் இவற்றையும் படிக்கலாம்.

1.உங்களால் முடியுமா?ஓரு Excel சவால்
2.அதிகம் பயன்படுத்தப்படாத எக்சல் வசதிகள்.-Excel Past.Special.
3.எக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா   

4.EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற 

5.  எக்சல் தப்பா கணக்கு போடுமா?

 

 

12 கருத்துகள்:

  1. மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் மிகவும் பயன்படும் உத்தி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. தரவிறக்கம் செய்துகொண்டேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  3. சிறப்பானதோர் முயற்சி. நானும் பயன்படுத்திப் பார்த்தேன். நன்றாக இருக்கிறது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு பயனுள்ள முயற்சி. பாராட்டுக்கள் முரளிதரன்

    பதிலளிநீக்கு
  5. சிறப்பு... Excel-ல் கற்றுக் கொண்டே இருக்கலாம்... இதுவும் சுளகுவும் ஒன்றுக்கு ஒன்று போட்டி...

    Excel-லில் செய்வதில் பாதி கூட வலைப்பூவில் (நுட்பம்) செய்யவில்லை...

    பதிலளிநீக்கு
  6. நான் பலமுறை மகள்களிடம் சொல்வதுண்டு. குறைந்தபட்சம் மைக்ரோசாப்ட் மென்பொருள் சார்ந்த விசயங்களை கொஞ்சம் ஆராய்ச்சி மனப்பான்மையில் கற்றுக் கொள்ளுங்கள் என்று. ஆனால் திருக்குறளுக்கு இந்த அளவுக்கு உதவும் என்று நினைத்துப் பார்த்தது இல்லை. வியப்பாக உள்ளது. என் மகள்கள் படிக்கும் அரசு பள்ளியில் உள்ள ஆசிரியர்களை குத்தி நான் வேலை வாங்கிக் கொண்டு இருக்கிறேன். இந்த கொரானா காலத்தில் அவர்கள் உறக்கம் மறந்து எழ தயாராக இல்லை. கடந்த வாரம் முழுக்க போராடி இப்போது தான் ஆன் லைன் வகுப்பில் அக்கறை செலுத்தி உள்ளனர். இருந்த போதிலும் முழுமையான அர்ப்பணிப்பு இல்லை. கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் போன்ற அனைவரும் ட்விட்டர் வாயிலாக தகவல் தெரிவித்தாலும் அவர்கள் அரசியல்வாதிகளுக்கு மாவட்டச் செயலாளர் போலவே செயல்படுகின்றனர். ஆனால் உங்களுக்கு அங்குள்ள அரசு பள்ளிக்கூடங்கள் பாடம் நடத்துவதும் உங்களுக்கு தகவல் தெரிவிப்பது குறித்து எழுதி இருந்தீங்க. மகிழ்ச்சியாக இருந்தது. இவர்களுக்கு தொழில் நுட்பம் தெரியவில்லை என்பதனை விட அதனை கற்றுக் கொள்ள ஆர்வம் இல்லை என்பது தான் முக்கிய பிரச்சனை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் அர்ப்பணிப்பு அவசியம். அரசு பள்ளி ஆசிரியர்கள் நிறையப்பேர் திறமை வாய்ந்தவர்கள். தொடர் கண்கானிப்பு, மேற்பார்வை ஊக்கப்ப்டுத்துதல் தேவை. அது இல்லாததன் காரணமாக மெத்தனப் போக்கு உருவாகி விடுகிறது. அது தலைமை ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் கையில்தான் உள்ளது.ஆனால் அதிகாரிகளுக்கு வெற்றுப்புள்ளி விவரங்களை அளிப்பதிலும் பணி செய்ய முடியாமல் ஆய்வுக் கூட்டங்களிலும் நேரம் விரயமாகிறது. அதிகமான ஆய்வுக் கூட்டங்கள் கல்வித்துறையில்தான் என நினைக்கிறேன்.
      உங்களைப் போன்று இன்னும் சில பெற்றோர் இருந்தால் போதும் அரசு பள்ளிகளை வழிக்குக் கொண்டு வந்து விடலாம்.
      கடந்த சில நாட்களாக தனியார் பள்ளிகளி RTE 25% மாணவர் சேர்க்கைக்கு கல்வித் துறை அயராமல் பாடுபட்டு வருவதை என்னென்பது? . எந்த மக்கள் நல இயக்கங்களோ, போராளிகளோ, கட்சிகளோ அரசு பணத்தை தனியார் பள்ளிகளுக்கு ஏன் வழங்க வேண்டும் என்ற கேள்வி எழுப்பவில்லை.முதலில் RTE சேர்க்கையை தனியார் பள்ளிகள் எதிர்த்தன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வரவேற்கின்றன. மாணவர்களிடம் கட்டணம் வசூலுக்கக் கூடாது. ஆனாலும் வசூலித்து விடுவார்கள். பெற்றோரும் இதனை எதிர்த்து புகார் கொடுப்பதில்லை. இப்போது தனியார் பள்ளிகளுக்கு இது இரட்டை வருமானம்.கொஞ்சம் முரண்டுபிடிப்பவர்களைமட்டும் விட்டு விடுவார்கள்.
      1 கி.மீ சுற்றளவில் அரசு பள்ளிகள் இல்லாத நிலையில் இந்த சலுகை பொருத்தமாக இருக்கும். ஆனால் அரசு பள்ளிகள் 1 கி,மீ சுற்றளவில் இருந்தும் RTE சேர்க்கை அனுமதிக்கப் படுகிறது. தமிழ்நாட்டுக்கு இது முற்றிலும் பொருந்தாது. மத்திய அரசு வீணாக இதற்கு நிதி வழங்குகிறது.

      நீக்கு
    2. அடுத்த இரண்டு வருடத்திற்குள் மகள்கள் மூவரும் படிக்கும் அரசு பள்ளியில் பல மாறுதல்களை உருவாக்கி விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

      நீக்கு
  7. அருமை முரளிதரன்!

    கடவுச்சொல் அளித்தால் எனக்குப் பிடித்த பல திருக்குறள்களைச் சேர்க்க வசதியாய் இருக்கும்.

    - சுப இராமநாதன், சியாட்டில்

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895