என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 8 ஜூன், 2014

இறைவனைத்தான் கேட்கின்றேன்!

 
           
ஜூனோ எங்கள் வீட்டில் வளர்ந்த செல்ல நாய். நீங்கள் படத்தில்  லேப்டாப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே அது ஜுனோதான். (பின்னணியில் உள்ள கட்டில் மற்றும் அறை மட்டும் நான் சேர்த்தது) எங்கிருந்தோ வந்தாலும் மனதோடு தங்கி விட்டது.தொடக்கத்தில் ஜுனோவை வளர்ப்பதில் ஆர்வம் இல்லாவிட்டாலும் மெள்ள மெள்ள எங்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டு விட்டது. முந்தைய இரவு வரை நன்றாக இருந்த ஜூனோ அடுத்த நாள் இறந்து போகும் என்று கனவிலும் நினைக்கவில்லை. நாக்குநீலமாகி இறந்து போன ஜூனோவின் இறப்பில் ஒரு மர்மம் இருந்தது.அந்த மர்மம் ஏற்படுத்திய பாட்டைத்தான் செல்ல நாயின் இறப்பு ஒரு மாதம் பரபரப்பு என்ற தொடர் பதிவாக எழுதினேன்   . அந்தப் பதிவிற்கு கிடைத்த வரவேற்பே  நான் இரண்டரை ஆண்டுகளாக  தொடர்ந்து பதிவுகள் எழுதக் காரணமாக இருந்தது.
    ஜூனோ இவ்வுலகத்தை பிரிந்தும்  மூன்று ஆண்டுகள் ஆகி விட்டன. அது புதைக்கப் பட்ட இடத்தில் பல செடிகள் முளைத்து மடிந்து  போய் விட்டது.ஆனால் இன்றும் அதன் நினைவுகள் மனதில் செடிகளாய் முளைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஜுனோவைப் பற்றி பேசாமல் இருக்க முடிவதில்லை.
   ஜுனோவிற்காக ஒரு இரங்கல் கவிதை எழுதினேன். ஜூனோவின் குறும்புகள்  அதன் பக்கம் திரும்ப வைத்தது. அதன் விளையாட்டுக்கள் எங்களை வலைபோட்டு இழுத்தன. இந்தக் கவிதையை நான் முனைந்து  எழுதவில்லை ; புனைந்தும் எழுதவில்லை. உணர்வுகளில் நனைந்துதான் எழுதினேன்.


                          சாவெனும் வடிவம் கொண்டு 
                                சடுதியில்  காலன் வந்து  
                          தாவென   உந்தன் உயிரை 
                               தட்டியே பறித்துச் சென்றான் 
                          போவென அவனைச் சொல்ல 
                                பூமியில் யாரும் இல்லை      
                          ஓ வென அலறி நின்றோம்        
                                ஜூனோ உன் பிரிவால் நாங்கள்

                           மடிமேல் அமர்ந்துகொள்வாய் 
                                   மையமாய்  வந்து நிற்பாய் 
                           படிமேல் ஏறிச் செல்ல 
                                  பக்குவமாய் காலை வைப்பாய்
                           அடிமேல் அடிதான்  என்று 
                                  அழுத்திச் சொன்னால் போதும் 
                           படிதாண்டிச்  செல்ல நீயும் 
                                      பயந்தது போலே நிற்பாய் 


                           காகத்தைப் பாரத்தால் உடனே 
                                  கத்தி அதைத் துரத்திடுவாய் 
                           தேகத்தை விதம் விதமாய்
                                    வளைத்து நீ உறங்கிடுவாய் 
                           சோகத்தை விதைத்துவிட்டு 
                                 சொல்லாமல் கொள் ளாமல் 
                           மேகத்தில் உதித் தெழுந்த 
                                    மின்னலாய் ஏன் மறைந்தாய் ?

                           உரத்த குரலில் எங்கள் பேச்சு 
                                  சண்டையாய்த் தெரியும் உனக்கு 
                           சிரத்தை ஆட்டி ஆட்டி 
                                 தடுத்திட ஓடி வருவாய் 
                           பெருத்த  குரலைக் கொண்டு 
                                பேரொலியும் எழுப்பிடுவாய் 
                           வெறுத்த மனங்களையும் 
                                    வெற்றிகொள் வாயே ஜூனோ 

                           எம்பிக் குதித் திடுவாய் 
                                  எட்டி நீ பார்த்திடுவாய் 
                           கம்பிமேல் ஏறிச் செல்வாய்
                                  கண்டதை கடித் திடுவாய்
                           தும்பி பிடித்து வருவாய் 
                                  துணிகளை கிழித்து விடுவாய் 
                            நம்பித்தான் ஏமாந் தோமே
                                  நல்லபடி இருப்பாய் என


                            அழகிய பொம்மை போலே 
                                  அனைவரையும் கவர்ந் திழுப்பாய் 
                            பழகிய நண்பன் போலே 
                                   பக்கத்தில் படுத் திருப்பாய் 
                            மெழுகெனவே உருக வைப்பாய் 
                                     மென்மேலும் குறும்பு செய்வாய் 
                             அழுகையே நிற்க வில்லை 
                                     ஐயோ ! நான் என்ன சொல்ல 

                             இரவில் உறங்குமுன்னே 
                                    இல்லத்துள் தானே இருந்தாய்?
                             அரவம் தாக்கி உந்தன் 
                                    ஆருயிர் போன தென்ன?
                             அரவம் கேட்கவில்லை 
                                    அறியாமல் இருந்து விட்டோம் 
                             உருவம் குலை  யாமல் நீ
                                     உறங்குவது போல் கிடந்தாய்  

                             தென்பட்ட இடமெல்லாம்நீயே
                                    திரிந்தலைந்த  இடமன்றோ
                             கண்பட்டுப் போகு மென்று 
                                   கனவிலும் நினைக் கவில்லை 
                             மென்பட்டு மேனி இன்று 
                                     மண்மூடும் காட்சி கண்டு 
                              புண்பட்டுப் போனதம்மா நெஞ்சம் 
                                        புலம்பியதை நிறுத்தவில்லை

                              கூவி நான் அழைக் கின்றேன்
                                     குதித்து நீ வரு வாயா?
                              தாவிவந் தமர்ந்து மடியில் 
                                      கொஞ்சத்தான் சொல்வாயா?
                              ஆவி பிரித்தெடுத்து உன்னை 
                                       அழைத்துப் போனதந்த விதியா?
                              பாவி இறைவன் அவன் 
                                        பாதகம் செய்தது சரியா? 

                              கண்ணயர்ந்த பின்பு கூட 
                                     கனவினிலும் நீயே வந்தாய் 
                              மன்னுயிர்கள் கோடி இங்கு 
                                     மகிழ்வாய் வாழ்ந்திருக்க 
                              உன்னுயிர் வாழ்வதற்கா 
                                       உலகத்தில் இடம் இல்லை?
                              எண்ணியே நான் பார்க்கின்றேன் 
                                     இறைவனைத்தான் கேட்கின்றேன்  


*********************************************************************************** 

 உண்மை சம்பவம் 

செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு


48 கருத்துகள்:

 1. கவிதையில் கூட அன்பு ஜீவனுக்கு இரந்து நிற்கும் கேள்வி அருமை சார்!

  பதிலளிநீக்கு

 2. இக்கவிதையில் தங்கள் உள்ளம் கண்டேன்
  தங்கள் அன்பு உள்ளம் கண்டேன்
  நன்றி ஐயா
  தம 1

  பதிலளிநீக்கு
 3. // ஜூனோ இவ்வுலகத்தை பிரிந்தும் மூன்று ஆண்டுகள் ஆகி விட்டன. அது புதைக்கப் பட்ட இடத்தில் பல செடிகள் முளைத்து மடிந்து போய் விட்டது.ஆனால் இன்றும் அதன் நினைவுகள் மனதில் செடிகளாய் முளைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஜுனோவைப் பற்றி பேசாமல் இருக்க முடிவதில்லை. //

  மறக்க முடியாத ஜூனோவின் நினைவுகள். உருக்கமான கவிதை.!

  கண்ணயர்ந்த பின்பு கூட
  கனவினிலும் நீயே வந்தாய்

  பதிவைப் படிக்கப் படிக்க எங்கள் வீட்டு ஜாக்கியும் கண்ணீரோடு நினைவுக்கு வந்தான். உங்களுக்கு ஒரு ஜூனோ. எங்களுக்கு ஒரு ஜாக்கி. http://tthamizhelango.blogspot.com/2013/09/blog-post_30.html
  த.ம.2

  பதிலளிநீக்கு
 4. //உணர்வுகளில் நனைந்துதான் எழுதினேன்//

  இதை நீங்கள் சொல்லியிருக்கத் தேவையில்லை; இந்த உங்கள் கவிதையே சொல்கிறது.

  மிகச் சிறந்த இரங்கல் கவிதை. இது உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை.

  முரளி,

  இந்த ஒரு கவிதை போதும், நீங்கள் சிறந்ததொரு கவிஞர் என்பதற்குச் சான்றளிக்க.


  பாராட்டுகள்; வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

 5. மனதை தொட்ட கவிதை.... மிக அருமை ...நாயுடன் வாழ்பவர்களுக்கும் வாழ்ந்தவர்களுக்கு மட்டும் இது மனதை தொட்டுஸ் செல்லும்... எங்கள் வீட்டிலும் ஒரு செல்லக் குட்டி வளர்ந்து கொண்டிருக்கிறது அதை அணைத்து கொள்வதால் வரும் இன்பத்திற்கு இணை ஏதுமில்லை

  பதிலளிநீக்கு
 6. ஒரு நாயின் பிரிவே உங்களை இவ்வளவு வாட்டுகிறது என்று சொன்னால், என் மகனின் பிரிவு எவ்வளவு என்னை வாட்டும்?
  அற்புதமான உணர்வு வெளிப்பாடு.இந்த கவிதையை என் ப்ளாக்கில் ,உங்கள் பெயரில்தான், வெளியிடட்டுமா?அனுமதி தருகிறீர்களா?
  அன்புடன்,
  கார்த்திக் அம்மா

  பதிலளிநீக்கு
 7. ஜூனோ பெயர்க் காரணம் சுஜாதாவின் பாதிப்பா.?நாங்களும் நாய் வளர்த்தோம். பெண்நாய். என் மனைவி சொல்வாள் மாமியார் இல்லாத குறை தீர்க்க வந்தவள் என்று. செல்லப் பிராணிகள் வீட்டில் ஒரு உறுப்பினர் போல் வளர்ந்தால் பிரிவு சகிப்பது கடினம். கவிதை ஜோர்,

  பதிலளிநீக்கு
 8. ninda nala enga vittula oru nay valarkkanum asai .
  aanal engal vittilo atharkku ellam othukka mattarkal.
  oru murai nay valarppu patri thedum pothu ungaloda
  thodar padikkum vaayppu kidichathu sir.


  padichathum ningal nayin mithu evvalv pasam vaithu irunthirkal enpathai purinthu konden.


  intha kavithaiyum.

  athe tan unarthukirathu sir.

  பதிலளிநீக்கு
 9. சூப்பர் கவிதைங்க. நெஞ்சை உருக்கும் வரிகள். அருமை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. "கனவினிலும் நீயே வந்தாய்
  மன்னுயிர்கள் கோடி இங்கு
  மகிழ்வாய் வாழ்ந்திருக்க
  உன்னுயிர் வாழ்வதற்கா
  உலகத்தில் இடம் இல்லை?" என்ற வரிகளை விரும்புகிறேன்.
  சிறந்த கவிதைப் பகிர்வு!

  visit http://ypvn.0hna.com/

  பதிலளிநீக்கு
 11. ஷெல்லி சொன்னான்”our sweetest songs are those that tell of saddest thoughts" அது உண்மை என உங்கள் கவிதை உறுதி செய்கிறது.

  பதிலளிநீக்கு
 12. ஜூனோவா, ஜீனோவா?

  அந்த நாலுகால் ஜீவன்களை நானும் நேசிப்பவன்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜூனோ என்றுதான் பெயர் வைத்திருந்தோம். சுஜாதாவின் ஜீனோ வை சற்று மாற்றி வைத்தேன்.

   நீக்கு
 13. மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் இனிமையான கவிதை.

  பதிலளிநீக்கு
 14. கண்களில் கண்ணீர் கசியச்செய்யும் வரிகள். இதே போல் பாம்பு தீண்டி இறந்து போன எங்கள் ஜூடோவை நினைவுகூர்கிறேன். அன்புக்குரியவர்களின் இழப்பு என்றுமே ஆற்றுப்படுத்த இயலாதது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜூனோ ஜூடோ பெயர் பொருத்தம் போலவே அவற்றின் இறப்பிலும் பொருத்தம் அமைந்துவிட்டதே.
   நன்றி மேடம்

   நீக்கு
 15. உருக வைத்த வரிகள்...

  இந்தப் பிரச்சனைக்குத்தான் நான் செல்லப் பிராணிகளை வளர்ப்பதில்லை...

  தொடர்புடைய பதிவு ஒன்று

  http://www.sivakasikaran.com/2013/06/blog-post_27.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் . ஜூனோவிற்குப் பிறகு வேறு ஒன்றை வளர்க்க ஆசை இருந்தபோதும் தவிர்த்து விட்டோம்.

   நீக்கு
 16. முன்பு எப்போதோ f.b யில் நாய் செத்த உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள் மேன்மையானவர்களாம் என கேலி செய்திருந்த ஒரு status பார்த்து கோபப்பட்டேன். ஆண்களுக்கு இந்த உணர்வே தெரியாதோ என நினைத்து ஒரு கதை கூட எழுதினேன். என் புஷ்(அப்போ ஜார்ஜ் புஷ் தன் பூனைக்கு இந்தியா என்று பெயர் வைத்ததால் இந்தியாவே கொதித்தெழுந்த காலகட்டம்:)) இறந்த பின் நான் கூட வேறு வளர்க்கவில்லை. என் இனிய (எந்திரா) புஷ்ஷை போல் உங்கள் ஜூனோ வின் மரணத்தை கவிதையில்உணரமுடிகிறது அண்ணா ! அருமையான கவிதை!

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் ஐயா
  எங்கள் வீட்டிலும் நான் சிறுகுழந்தையாக இருக்கும் போது ஜிம்மி (அப்போது பல நாய்க்குட்டிகளுக்கு அப்படி தான் பெயர் இருக்கும்) என்ற நாய்க்குட்டி என்னுடனே இருக்குமாம். என் தந்தையை காலை சரியாக 5.30 மணிக்கெல்லாம் முகத்தைத் தடவி எழுப்பி விடுவதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறது. எனக்கு விவரம் தெரியும் முன்பே திடீரென்று ஒரு நாள் இரவு இதே போல இறந்து விட்டதாம் .எதற்கும் கலங்காத என் தந்தை அழுததாக என் அன்னை சொல்லிருக்காங்க. அன்று முதல் எங்கள் வீட்டில் செல்லப்பிராணிக்கு இடமில்லை சின்ன வயதில் நாங்கள் முயன்று நண்பர் வீட்டில் நாய்க்குட்டி வாங்கி வந்தாலும் என் தந்தைக்கு தெரிவதற்குள் அடுத்தவர்களுக்கு கொடுத்து விடுவார் என் அம்மா. அப்போதெல்லாம் உணராத அதன் வலி இந்த கவிதையைப் படித்ததும் உணர முடிகிறது ஐயா. உங்களைப் போன்ற நல்ல மனதினர் அங்கங்கு இருப்பதினால் நான் இந்த உலகம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாக உணர்கிறேன். கண்ணீரைச் சுமந்து வந்த அற்புதமான கவிதை என் கண்களையும் நனைத்து செல்ல மறக்கவில்லை ஐயா. நன்றி..

  பதிலளிநீக்கு
 18. வெண்பா விருத்தத்தில் விளைந்த பெரும் துயர் கண்டு உன்பால் இருக்கும் அன்பிற்குத் தலை வணங்குகின்றேன் சகோதரா !! கவலைகள் வேண்டாம் கடவுள் படைத்த உயிர் அவன் காலடியில் உறங்குவதாக எண்ணி மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள் .ஒவ்வொரு வரிலும் உயிரோட்டம் நிறைந்த நற் பா !! ...

  பதிலளிநீக்கு
 19. செல்ல நாயின் இறப்பு ... இப்படி ஒரு பதிவரை உருவாக்குமா?
  கவிதை நாய்க்கு எழுதியதா?
  உங்களின் மொழித்திறன் அற்புதம்..
  இப்படியெல்லாம் பதிவுகளை பார்க்கிற பொழுது ஆயாசமாய் தோன்றும் ஒரு எண்ணம் "நாம இனி எழுதனும்மா?" இந்த பதிவு எழுதற வேலையெல்லாம் நமக்குத் தேவையா? என்பது தான் அது ..
  தொடர்க
  http://www.malartharu.org/2012/12/3_15.html

  பதிலளிநீக்கு
 20. தான் பெரிதும் விரும்பி வளர்த்த நாய் இறந்த போது கண்ணதாசன் எழுதிய வரிகள் நினைவிலாடுகின்றன அய்யா. அன்புக்கு உயிர் உண்டு உடல் வேறுபாடு இல்லை தானே

  பதிலளிநீக்கு
 21. "இறைவன்" என்ன வேணா செய்வாரு. அவரு பரம்பொருள். அவர் செய்றது எல்லாவற்றிலும் ஒரு அர்த்தம் இருக்கும்னுதான் பக்தர்கள் நம்புறாங்க. எம் எச் 370 எங்கே போச்சுனு அவருக்கு மட்டும்தான் தெரியும். ஜூனோவை ஏன் எடுத்துக்கிட்டாருனு அவருக்கு மட்டும்தான் தெரியும்..

  படித்தறிந்த ஒருவன், எல்லாம் தெரிந்த ஒருவன், தெரியாதவனுக்கு, புரியாதவனுக்கு, குழப்ப நிலையில் உள்ளவனுக்கு தனக்கு தெரிந்ததை சொல்லித் தந்தால்தான் அவனுக்கு மரியாதை அவனை மதிக்கத் தோணும்..

  எனக்கு எல்லாம் தெரியும், நான் எதையும் விளக்க மாட்டேன். நீயா கண்டுபிடிச்சுக்கோனு அவன் சொன்னால், அவன் இருந்தால் என்ன செத்தால் என்ன? அவனுக்கு தெரிந்தால் என்ன? தெரியலைனா என்ன?

  நான் இங்கே படித்தறிந்த ஒரு தற்குறியை விமர்சிக்கிறேன். பக்தர்கள் எல்லாம் தப்பா நெனைச்சுக்காதீங்கப்பா!

  Anyway, sorry to know you miss juno a lot! :( I can understand that part and I too feel sorry for you, murali!

  பதிலளிநீக்கு
 22. உங்கள் செல்ல நாய் மரணம் பற்றிய பதிவை அப்போதே படித்துள்ளேன்.
  இலங்கையில் இருந்த போது என் வீடு ஒரு சிறு மிருகக்காட்சிச் சாலை எனலாம். வளர்ப்புப் பிராணிகள் மேல் மோகம் . என் முதல் நாய் ஜிம்போ- சுமார் 50 ஆண்டுகளுக்கு முன். படமெடுத்து வைக்கவில்லை. ஆனால் அதன் கம்பீர முகம் இன்றும் மறையவில்லை.
  உங்களுக்குத் தமிழ் படிகிறது. கவிதை லயத்துடன் அருவிபோல் , எந்த வரியும் ஒதுக்கமுடியாதது.
  அருமை!
  என் வீட்டுக்கருகில் செயின் நதி ஓரத்தில் மிக ரம்மியமான சூழலில் பாரிசுக்கும், அதன் புற நகர்ப்பகுதிக்குமான செல்லப்பிராணிகளின் இடுகாடு
  உள்ளது. அங்கே அடக்கம் செய்தவர்கள் விடுமுறை நாட்களில் வந்து தம் அன்பைச் பகிர்வதைக் கண்டுள்ளேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி யோகன். ஏற்கனவே தொடக்கத்தில் பதிவிட்ட கவிதைதான் . அப்போது படித்தவர்கள் குறைவு

   நீக்கு
 23. ஜூனோவிற்காகான இரங்கல் கவிதை அருமை மனதைத் தொட்டு உலுக்கிவிட்டது! தங்கள் தமிழ் அற்புதம்! இந்த உலகில் வாழும் உயிர் ஒன்றுதான்....உருவம்தான் வேறு! தங்கள் கவிதை கண்டு எங்கள் இருவர் வீட்டில் வளரும் மூன்று செல்லங்களும்...(கீசர் -ஆண் துளசியின் வீட்டில், கண்ணழகி, ப்ரௌனி - இரண்டு பெண்களும் - கீதாவின் வீட்டில்) எப்படி எங்களிடம் அன்புடன் இழைகின்றன! அப்படி ஒரு அன்பு! அவர்களை அணைக்கும் போதும், கொஞ்சும் போதும் இந்த உலகமே மறந்து போகும்! எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு அன்பு! unconditional Love!
  நாய் விரும்பி வளர்க்கும், வளர்த்த அனுபவம் உள்ளவர்களுக்கு நிச்சயமாகத் தங்கள் கவிதையின் உணர்வுகள் புரியும் தங்களின் மனமும் புரியும்!

  அருமையான ஒரு பதிவு!

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895