என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

என்னை நம்பி நான் பொறந்தேன்! போங்கடா போங்க!

(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது )
என்னை  நம்பி நான் இருந்தேன்  போங்கடா போங்க !
என் நேரம் வென்றது   நீங்க இப்போ  வாங்கடா வாங்க 
என்னை  நம்பி நான் இருந்தேன்  போங்கடா போங்க !
என் நேரம் வென்றது   நீங்க இப்போ  வாங்கடா வாங்க 


ரெட்டை இல எனக்கில்ல ஆனாலும் நான் தோக்கல்ல 
ரெட்டை இல எனக்கில்ல ஆனாலும் நான் தோக்கல்ல 
பட்ட நாமம் உங்களுக்கு   பரிசுதான் எங்களுக்கு 

        என்னை  நம்பி நான் இருந்தேன்  போங்கடா போங்க !
        என் நேரம் வென்றது   நீங்க இப்போ  வாங்கடா வாங்க 


அஞ்சு கொடுத்தா அரை  ஒட்டு  பத்து கொடுத்தா பல  ஒட்டு 
அஞ்சு கொடுத்தா அரை  ஒட்டு  பத்து கொடுத்தா பல  ஒட்டு 

மொத்தமா  கொடுத்தா ஓட்டம்மா  மக்கள் நினச்சா வேட்டம்மா
பானையில சோறுவச்சா பூனைகளும் ஓடிவரும் 
கேனையனா  நினச்சீங்க   தனியாளா ஜெயிச்சேண்டா 

          என்னை  நம்பி நான் இருந்தேன்  போங்கடா போங்க !
          என் நேரம் வென்றது   நீங்க இப்போ  வாங்கடா வாங்க 

திட்டமிருக்கு தெளிவாக இறங்கிவிட்டேன் துணிவாக  
திட்டமிருக்கு தெளிவாக இறங்கிவிட்டேன் துணிவாக 

நினத்ததை முடித்தேன் சரியாக! நான் யார் நீ யார் தெரிஞ்சிக்கடா 
சித்திரையில் வெதச்சது  மார்கழியில் அறுவடைதான் .
சத்தியமா சொல்லறேன் நான் சத்தமின்றி ஓடிவாடா   

       என்னை  நம்பி நான் இருந்தேன்  போங்கடா போங்க !
       என் நேரம் வென்றது   நீங்க இப்போ  வாங்கடா வாங்க 
    -----------------------------------------


முந்தைய பதிவு
சோதனை மேல் சோதனை


சனி, 25 நவம்பர், 2017

சோதனை மேல் சோதனை

 

                     (சும்மா  ஒரு கற்பனை -சிரிப்பதற்கு மட்டுமே)
 
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
சோதனை தான்  வாழ்க்கை என்றால் தாங்காது போ நீ!
                (சோதனை மேல் சோதனை )

நித்தம் ஒரு சேதி வந்து கதி கலங்குது-ஒரு
சத்தம் இன்றி ரெய்டு வந்தால் மதி மயங்குது
நித்தம் ஒரு சேதி வந்து கதி கலங்குது
சத்தம் இன்றி ரெய்டு வந்தால் மதி மயங்குது
                                                  (சோதனை மேல் சோதனை )

ஆதாரம் இருக்குதம்மா   ஆதரவில்லை-நான்
 அவதாரம் இல்லையம்மா தப்பித்து செல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல-எனது
அதிகாரம் செல்லலையே யாரிடம் சொல்ல
ஒரு நாளும்  நானிது போல் அழுதவனல்ல-அந்த
 திருநாளும் வந்ததை நான்  என்னென்று சொல்ல

                                                            (சோதனை மேல் சோதனை ) 

(மாமா!சொத்தை பறிகொடுத்தவன் எல்லாம் பறிச்சவனைப்  பாத்து பயப்படுவாங்க  . பறிச்சவனே பயந்து நின்னா
கடன் வாங்கினவன்  எல்லாம் கந்து வட்டிக்  காரனைப் பாத்து கலங்குவாங்க  . கந்து வட்டிக் காரனே கலங்கி நின்னா யாரால் ஆறுதல் சொல்ல முடியும்?)

சாப்பிடத்தான் நான் நினச்சேன் ரெண்டு இலையில-அட
ஒத்த இலைக்குக் கூட இப்ப வழியும் தெரியல
கூட வந்த கூட்டத்துக்கு குறைவே இல்லை-அதில்
ஒருத்தனையும் இப்போ இங்கே காணவும் இல்ல
கோடி கோடி பணம் இருந்தும் பயனும் இல்ல -ஒரு
மோடி வித்தை செய்தால்தான் தீரும் தொல்லை

                                                         (சோதனை மேல் சோதனை )


-----------------------------------------------------------------------------------------------------------


சனி, 21 அக்டோபர், 2017

சித்திரவதை

      
  நடிகை புஷ்பாஸ்ரீ  கையெழுத்தில்  "உங்கள் சித்திரவதை தாங்க  முடிய வில்லை என்னை  விட்டு விடுங்கள்"  என்ற துண்டு சீட்டை  நடிகை வீட்டு  வேலைக்காரி இன்ஸ்பெக்டர்  மோகனிடம் கொடுத்தாள்.
  நான்கு நாட்களாக புஷ்பாம்மாவைக் காணவில்லை என்றும் தெரிவித்தாள்.

" வீட்டில யாரெல்லாம் இருக்காங்க" விசாரித்தார்  மோகன்
"புஷ்பாம்மாவும் அவங்க புருஷன் ரவிவர்மன் மட்டும்தான்."
"அவர் என்ன பண்றார்"

 "உருப்படியா ஒண்ணும் இல்லீங்க . கத்தையா கத்தையா பேப்பர் வச்சுக்கிட்டு படம்  வரஞ்சிகிட்டு இருப்பார்". .

அவன்  கொடுமைக்காரனா?

"அப்படி ஒன்னும் இல்ல.  ஐயா! அடிக்கடி ரெண்டும் பெரும் சண்டை போடற சத்தம் கேக்கும். அப்புறம்  ஒண்ணாயிடுவாங்க  .

"இப்ப வீட்டில இருக்காரா?"

"ரூமுக்குள்லையே  இருக்கார் எவ்வளவோ  கூப்பிட்டுப்  பார்த்தும் வெளியே வர மாட்டேங்கறார்".

இன்ஸ்பெக்டர்  புஷ்பாஸ்ரீ வீட்டுக்கு   புறப்பட்டார்.

" ரவி வர்மன் கதவை திறங்க . போலீஸ் வந்திருக்கோம்" என்றார் .

 ரவி வர்மன் கதவை திறந்தான் . அறை  முழுவதும் அலங்கோலமாக கிடந்தது  பேப்பர்கள் சிதறிக் கிடந்தன .

  "உங்க மனைவி புஷ்பாஸ்ரீயை காணோம்னு இவங்க சொல்றாங்க . எங்க போனாங்க  "

"தெரியல சார். எங்கயாவது ஷூட்டிங் போயிருப்பாங்க ! நானும் அவங்க எங்க போனாங்கன்னு தெரியாம கவலை பட்டுகிடிருக்கேன்."
உங்க கிட்ட சொல்லலையா ".

"எப்பவும் சொல்லிட்டுதான் போவாங்க .ஆனா இப்ப சொல்லல . எம் மேல என்ன  கோவமோ தெரியல செல்போனையும் சுவிச் ஆஃப் பண்ணி வச்சுட்டாங்க. எப்படியும்  வந்துடுவாங்க சார்".

"நீங்க அவங்களை சித்திர வதை பண்றதா எழுதி வச்சுருக்காங்களே ! உண்மைய சொல்லுங்க அவங்களை என்ன பண்ணீங்க"

  " ஐயோ!அவங்க சம்மதம் இல்லாம என் விரல் கூட அவங்க மேல படாது சார்"
       
    வீட்டை சுற்றி பார்த்தார் . இந்த மாதிரி ஆளுங்க கிறுக்குப் பயலுங்களா இருப்பாங்க. அப்பாவி மாதிரி இருந்தாலும் ஏதாவது ஒரு வேகத்தில கொலை பண்ணனாலும் பண்ணிடுவாங்க என்று நினைத்துக் கொண்டு  எதற்கும் இவனை ஸ்டேஷனில் விசாரிக்கலாம் என்று அழைத்து  வந்து விட்டார். லாக் அப்பில் ஒரு நாள் முழுக்க வைத்து விசாரித்தும் பயனில்லை.  உளறிக் கொண்டும் அழுது கொண்டும் இருந்தானே தவிர உருப்படியாக ஒன்றும் சொல்லவில்லை .  என்ன செய்வது என்று தெரியாமல் .இன்ஸ்பெக்டர் யோசித்துக் கொண்டிருக்க   வாசலில் கார்! புஷ்பாஸ்ரீ  உள்ளே ஓடி வந்தாள்

இன்ஸ்பெக்டர் சார் அவரை விட்டுடுங்க அவர் அப்பாவி.
"என்னம்மா   இப்படியா  அவர் சித்திரவதை தாங்க முடியலன்னு எழுதி வச்சுட்டு சொல்லாம கொள்ளாமயா போறது ? தேவையில்லாம எங்கள டென்ஷன் ஆக்கிட்டீங்களே.பிரஸ்சுக்கு நியூஸ் போச்சுன்னா என்னாகும்  ஏன் அப்படி எழுதி வச்சீங்க?
.
"சொல்லிட்டுதான் போனேன்  அவர் குடிச்சி இருந்ததால்  மறந்து இருப்பார்..  சார், அவருக்கு பிரபல ஒவியரா ஆகணும்னு ஆசை.   பேர் என்னமோ  ரவி வர்மா .ஆனா சுமாராத்தான் வரைவார்.    என்னை போஸ் கொடுக்கச் சொல்லி விதம்  விதமா வரைவார்.  ஷூட்டிங்  போகாத நேரத்தில இவரை காதலிச்ச பாவத்துக்காக  இவர் வரையறதுக்கு மணிக்கணக்கா சகிச்சிக்கிட்டு  போஸ்  கொடுப்பேன்"

"அதுக்கு போய் சித்திரவதைன்னு எழுதி வச்சது ரொம்ப ஓவர் இல்லையா ?"

 ஒரு பேப்பரை புஷ்பாஸ்ரீ எடுத்துக் காட்டி , "என்னப் பார்த்து வரஞ்ச ஓவியத்தை  பாருங்க." என்றாள்

அதில்   20 வயது புஷ்பாஸ்ரீ 50 வயது தோற்றத்தில் இருந்தாள்.

"என் படத்தை இப்படி கன்றாவியா வரஞ்சுட்டு  'சித்திரம் பேசுதடி'ன்னு தலைப்பு  வேற.  எனக்கு எப்படி இருக்கும்?    கோவத்தில  என்னை  "சித்திர"வதை  செய்யாதீங்கன்னு பொயட்டிக்கா எழுதி வச்சேன்.. இப்படி ஆகும்னு  எனக்கு தெரியாது " என்று வெட்கத்துடன்  சொல்ல

தலையில் அடித்துக் கொண்டார் இன்ஸ்பெக்டர் மோகன்


**************************************************************

ஏதோ என்னாலான சித்திர வதை. 

திங்கள், 2 அக்டோபர், 2017

மகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்

    மகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே.உண்மை பேசுபவரகளையும் நேர்மையானவர்கையும் இவர் பெரிய காந்தி என்று கிண்டல் செய்வதுதான் வழக்கம். பணம் கொடுத்து வராவிட்டால் காந்தி கணக்கு என்று சொல்வதை அறிவோம். காந்தி மட்டுமல்ல யாருமே விமரசனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனாலும் உலக வரலாற்றில் காந்திக்கு ஒரு பெருமைக்குரிய இடம் உண்டு என்பதை மறுக்க இயலாது 
அவரைப் பற்றி எழுத நிறைய உண்டு . இதோ காந்தி பற்றிய சில சுவாரசிய தகவல்கள்

 1. மகாத்மா காந்தி 5 முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார்.  பாரத ரத்னா போல்   இறப்புக்குப் பின் யாருக்கும் நோபல் பரிசு வழங்கப் படுவதில்லை என்பதால் காந்திக்கு கிடைக்க வில்லை. பாரத ரத்னாவும் காந்திக்கு வழங்கப் படவில்லை. (இதைப் பற்றி இன்னொரு பதிவில்  விரிவாகப் பார்ப்போம் )
 2. மகாத்மா காந்தியின் இறுதி ஊர்வலத்தில் பல லட்சக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.வரிசை  நீளம் ஐந்து கிலோமீட்டருக்கு மேல் தாண்டிவிட்டதாம். Ganhiji's funeral procession in Delhi. It took a length of 8 km.
 3. பிரிட்டனின்  ஆதிக்கத்திற்கு எதிராக காந்தி போராடினார்.ஆனால் அவர் இறந்து 21 ஆண்டுகளுக்குப்  பின் அவரை தபால் தலை வெளியிட்டு கௌரவப் படுத்தியது இங்கிலாந்து  
 4. காந்தி நடைப் பயணத்தின்  மீது ஆர்வம் கொண்டவர்.அவர் வாழ் நாள் முழுதும் நடந்து சென்ற தூரத்தை கணக்கிட்டால் உலகை ஒருமுறை சுற்றி வந்து விடலாம்  என்கிறார்கள்.
 5. மகாத்மா காந்தி டால்ஸ்டாய், ஐன்ஸ்டீன் போன்றவர்களோடு மட்டுமல்லாது  ஹிட்லருக்கும்  கடிதம் எழுதி இருக்கிறார் 
 6. ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ்  ஜாப்ஸ் காந்தியின் மீது அபிமானம் கொண்டவர் . அவர் காந்தி அணிந்தது போன்ற மூக்குக் கண்ணாடியை அணிந்து பெருமிதம் கொண்டார் . 
 7. காந்தியின் ஆங்கில பேச்சு ஐரிஷ் பாணியில்  இருக்கும். காரணம் அவரது  ஆரம்ப கால  ஆங்கில ஆசிரியர் ஒரு ஐரிஷ் காரர் .
 8. இந்தியாவில் 53 பெரிய சாலைகளுக்கு காந்தியின் பெயர் வைக்கப் பட்டுள்ளது . காந்தி பெயர் வைக்கப் பட்டுள்ள சிறிய சாலைகள் தெருக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. வெளிநாடு களிலும் 48 சாலைகள் அவர் பெயரைத் தாங்கி உள்ளன 
 9. காந்தி தென் ஆப்ரிக்காவில் மூன்று கால் பந்தாட்டக் குழுக்களை உருவாக்கினர் . அதன் பெயர்  Passive Resisters Soccer Club
 10. காந்தியைப் பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம் ரிச்சர்ட் அட்டன் பாரோ இயக்கிய காந்திதான் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் 1940 லியே  தமிழரான ஏ.கே.செட்டியார் காந்தியைப் பற்றிய ஆவணப் படத்தை  தமிழில்  தயாரித்தார்  இதற்காக பல நாடுகளுக்கும் பயணம் செய்து படச் சுருள்களை சேகரித்து படத்தை உருவாக்கினார். ஆனால் அப்போதைய ஆங்கில அரசுக்கு அஞ்சி இப்படத்தை வெளியிட  எத்திரையங்கும் முன் வரவில்லை . 1948 இல் சுந்திர தினத்தன்று இத் திரைப்படம் டில்லியில் இந்தி மொழியில் வெளியிடப் பட்டது, பின்னரே தமிழிலும்  வெளியிட ப் பட்டது 
 11. காந்தியடிகளின் மனதில்  ஒத்துழையாமை இயக்கத்தின் வித்தை விதைத்தது  ஹென்றி சால்ட் என்பவர் எழுதிய ஹென்றி டேவிட் தொரேயூ என்பவரைப் பற்றிய நூலேயாகும். ஹென்றி டேவிட் ஒரு அமெரிக்கர். அநியாயமாக விதிக்கப் பட்ட  வரிகளை செலுத்த மறுத்தவர்.அதனால் சிறையில் அடைக்கப் பட்டவர் .அங்கிருந்தே ஒத்துழையாமை பற்றி எழுதினார் . 
 12. காந்தி புகைப்படம் எடுக்கப் படுவதை விரும்புவதில்லை எனினும் அக்காலத்தில்   அதிகமாக புகைப்படம் எடுக்கப் பட்ட மனிதராகத் திகழ்ந்தார் ..
 13. மாற்றுக் கருத்து கொண்டிருந்தபோதும்  சுபாஷ் சந்திரபோஸ் தான் காந்தியை இந்தியாவின் தந்தை என்று  முதலில்  அழைத்தார்
 14. காந்தியை மகாத்மா என்று முதலில் அழைத்தவர் ரபீந்திரநாத் தாகூர் 
 15.  காந்தி 1930 இல் டைம்  இதழின் TIME PERSON OF THE YEAR என்ற பட்டத்தை பெற்றார். இந்த பெருமையை அடைந்த ஒரே இந்தியர் காந்தி மட்டுமே 
Gandhi as 'Man of the Year 1930' on TIME Cover

*********************


தொடர்புடைய பதிவுகள் 
**********************************

சனி, 30 செப்டம்பர், 2017

ரஜினியிடம் பாடம் கற்பாரா டி.ராஜேந்தர்?


   டி.ராஜேந்தர் அவ்வப்போது பரபரப்பாக ஏதாவது பேசி தான் இருப்பதை காட்டிக் கொள்வார். அடுக்கு மொழி பேசி நம்மையும்  கொல்வார். அவரது அடுக்கு மொழியை இன்னும் ரசிக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பதை  என்னவென்று சொல்வது.  அவரது தற்பெருமை பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டு நமக்கு அலுத்துப் போய்விட்டது என்றாலும் அவர் விடுவதில்லை. தன்னை கோமாளியாக பலரும் பார்ப்பதை அவர் உணர்ந்திருக்கிறாரா  என்று தெரியவில்லை. உலகத்திலேயே மிகச சிறந்த திறமை சாலி  தான்தான் என்று உண்மையாகவே நம்பிக் கொண்டிருக்கிறார் போலும். இளையவர்களுக்கு தன் நடத்தை மூலம் வழி  காட்ட  வேண்டியவர் அவர்கள் வெறுக்கும் அளவுக்கு பெயரைக் கெடுத்துக்  கொள்ளத் தவறுவது இல்லை. 

   இவரது சமீபத்திய பரபரப்பு நடிகை தன்ஷிகாவை அழ வைத்தது. "விழித்திரு" ஆடியோ வெளியீட்டில் பேசிய நடிகை  தன்ஷிகா( கபாலியில் ரஜினியுடன்  நடித்தவர்) மேடையில் உள்ளோர் அனைவரையும் பற்றி  பேசியவர் அவரது போதாத காலம்  டி.ராஜேந்தரைப் பற்றிக் குறிப்பிட மறந்து விட்டார். பின்னர் மைக்கைப்பிடித்த டி. ராஜேந்தர் சபை நாகரீகம் கற்றுத் தருவதாக சொல்லி தான் நாகரிகத்தை மறந்து தன்சிகாவை காய்ச்சி எடுத்து விட்டார். ரஜினி படத்தில் நடித்ததால்  என்னை மறந்து விட்டார் என்றார். தவறை உணர்ந்த தன்ஷிகா காலைத் தொட்டு மன்னிப்பு கேட்டும் விடாமல் வெறி பிடித்தவர் போல சாடியது பலரையும் சங்கடத்தில் ஆழ்த்தியதை அறியாமல் தொடர்ந்தார். உங்கள் மேல் நான் மதிப்பு வைத்திருக்கிறேன். என்று குறுக்கிட்டு சொன்ன தன்ஷிகாவை 'உன்னுடைய  மதிப்பை கொண்டு எந்த மார்க்கெட்ல விக்கப் போறேன்' நீ சொல்லிதான் நான் வாழனும்னு அவசியம் இல்லை.' என்று மேலும் தாக்கினார்.  மீண்டும் சமாதானம் சொல்லியும்  அதை ஒப்புக்கேனும் ஏற்கவில்லை  ஓரளவுக்கு மேல் தாங்க இயலாத தன்ஷிகா அழ ஆரம்பித்து விட்டார். 
    மூத்த கலைஞர்  டி.ராஜேந்தரின் இப் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரவித்துள்ளனர். ரஜினியின் மீது  பொறாமை கொண்டாற்போல் பேசிய டி.ஆர்,  ரஜினியிடம்  இருந்து பாடம் கற்க வேண்டும். 

   எந்திரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராய் பேசினார் . அப்போது படத்தின் தயாரிப்பாளர் , இயக்குனர் சங்கர், ஏ.ஆர்.ரகுமான் , அதில் பணியாற்றிய கலைஞர்கள் ஆடியன்ஸ் உள்ளிட்ட  அனைவருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்த ஐஸ்வர்யா ராய்  ரஜினியை மறந்துவிட்டு பேச்சை முடித்து விட்டார். மேடையில் இருந்து இறங்கு முன் சட்டென்று நினைவுக்கு வதவராக மீண்டும் வந்து நன்றி கூறினார். ரஜினி அதை தவறாகக் கருதவில்லை. தன்னைத் தூற்றுபவரையும் தன் வசப் படுத்தும் பண்பு அவரிடத்தில் இருந்தது. ஜெயலலிதாவுக்காக தேர்தல் மேடைகளில் தன்னை கண்டபடி தூற்றிய மனோரமாவைக் கூப்பிட்டு தன் படத்தில் நடிக்க வைத்தார்.ஒரு வேளை அது விளம்பரத்திற்காகவே செய்திருந்தாலும் பாதகமில்லை. .
 ஐஸ்வர்யா  ராய் ரஜினியை மறந்த வீடியோ டி.ராஜேந்தர் தான் ஒரு வாசமில்லா பெருங்காய டப்பி என்பதை உணர்ந்தால் நல்லது.

இவரது பேச்சைக் கேட்டுவிட்டு வீட்டு அம்மணி சொன்னது " அஞ்சு நிமிஷம்  பேச்சை கேட்டதுக்கே இப்படி இருக்கே . பாவம்  உஷா  " திங்கள், 14 ஆகஸ்ட், 2017

காந்தி செய்தது சரியா? பாவம் கஸ்துரி பாய்

  
        காந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு இது ஒரு பாடம்
     காந்தி இரண்டாவது முறையும் தென்னாப்பரிக்கா சென்று அங்கு இந்தியர் நலனுக்காக போராடினார் எனபது அனைவருக்கும் தெரிந்ததே. பின்னர் இந்தியா திரும்ப விரும்பிய காந்தியை அவ்வளவு எளிதில் இந்தியா அனுப்ப விரும்பவில்லை அங்குள்ள மக்கள். காந்தி உறுதியாக இருக்கவே "நாங்கள் விரும்பினால் மீண்டும் நீங்கள் இங்கே வரவேணும் என்று அன்புக் கட்டளையுடன் இந்தியா திரும்ப சம்மதித்தனர். காந்தி தாய்நாட்டுக்கு புறப்பட்டபோது அவருக்கு ஏராளமான வெகுமதிகளை அவருக்கு அளித்தனர் தென்னாப்பரிக்க இந்தியர். அதை காந்தி விவரிப்பில் காண்போம்
     "1899-இல் நான் இந்தியாவுக்குப் புறப்பட்டபோதும் இத்தகைய வெகுமதிகளை எனக்குக் கொடுத்தனர். ஆனால், இத் தடவையிலோ, பிரிவுபசாரம் அளவு கடந்ததாக இருந்தது. வெள்ளி, தங்கச்சாமான்களும் அன்பளிப்பில் அடங்கியிருந்ததோடு, விலை உயர்ந்த வைரச் சாமான்களும் இருந்தன.
        இந்த வெகுமதிகளையெல்லாம் ஏற்றுக்கொள்ள எனக்கு என்ன உரிமை இருக்கிறது? இவைகளையெல்லாம் வாங்கிக் கொண்ட பிறகு,ஊதியம் பெறாமல் சமூகத்திற்குச் சேவை செய்து வந்திருப்பதாக நான் எண்ணிக் கொள்ளுவது எப்படி?என் கட்சிக்காரர்கள் கொடுத்த சில வெகுமதிகளைத் தவிர மற்றவை யாவும், சமூகத்திற்கு நான் செய்த சேவைக்கு என்றே முற்றும் எனக்கு அளிக்கப்பட்டவைகள் ஆகும். என் கட்சிக் காரர்களும் பொது வேலையில் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, கட்சிக்காரர்கள் வேறு, பொது ஊழியர்கள் வேறு என்று பாகுபாடு செய்துகொள்ளுவதற்கும் இல்லை.

கிடைத்த வெகுமதிகளில் ஒன்று தங்கச் சங்கிலி. அது 52 பவுன் பெறு மானம் உள்ளது. என் மனைவிக்கு என்று அதை அளித்தனர். ஆனால், அதுவும்கூட என்னுடைய பொதுச்சேவைக்கு அளிக்கப்பட்ட வெகுமதியே. ஆகையால் மற்றவைகளிலிருந்து அதை நான் தனியாக பிரித்துவிட முடியாது.

   ஒரு நாள் மாலை, இந்த வெகுமதிகளில் பெரும் பகுதியை எனக்கு அளித்தார்கள். அன்று இரவெல்லாம் என்னால் தூங்கவே முடியவில்லை. என் அறையில் அங்கும் இங்கும் இரவெல்லாம் உலாவினேன்; தீவிரமாகச் சிந்தித்தேன்.ஆனால், ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. ஆயிரக்கணக்கில் மதிப்புள்ள இந்த வெகுமதிகளை வேண்டாம் என்று துறந்து விடுவது எனக்குக் கஷ்டமாக இருந்தது. அவைகளை வைத்துக்கொள்ளுவதோ இன்னும்அதிகக் கஷ்டமாக இருந்தது அவைகளை நான் வைத்துக் கொள்கிறேன் என்றாலும் என் குழந்தைகளின் கருத்து என்ன? என் மனைவியின் விஷயம் என்ன? சேவைக்கு வேண்டிய வாழ்க்கை நடத்த அவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். சேவை ஒன்றே அதற்குரிய சன்மானம் என்றும் அவர்களுக்குச் சொல்லி வந்திருக்கிறேன்.

   வீட்டில் என்னிடம் விலை உயர்ந்த நகை எதுவும் இல்லை. எங்கள் வாழ்க்கையையே விரைவாக எளிமை ஆக்கிக்கொண்டு வந்திருக்கிறோம். அப்படியிருக்கத் தங்கக் கடிகாரங்களை நாங்கள் எவ்வாறு வைத்துக் கொள்ள சங்கிலிகளையும் வைரமோதிரங்களையும் நாங்கள் எவ்வாறு அணிந்துகொள்ள முடியும்? மக்கள், நகைகளின் மீது இருக்கும் ஆசையை விட்டுவிட வேண்டும் என்று பல தடவை நான் மக்களுக்கு உபதேசம் செய்தும் இருக்கிறேன். அப்படியிருக்க என்னிடம் வந்திருக்கும் நகைகளை நான் என்ன செய்வது?
இந்த வெகுமதிகளையெல்லாம் நான் வைத்துக்கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். இவற்றையெல்லாம்ச மூகத்திற்கே சொந்த மானதாக்கி விட வேண்டும். இதற்கு என் மனைவியைச் சம்மதிக்கச் செய்வதில் கொஞ்சம் சிரமம் இருக்கும் என்பதை அறிவேன். குழந்தை களைப் பொறுத்த வரையில் எந்தவிதமான கஷ்டமும் இராது என்பதும் எனக்குத் தெரியும். ஆகவே, அவர்களையே என் வக்கீல்கள் ஆக்கிக் கொண்டு விடுவது என்ற முடிவுக்கு வந்தேன்.
என் யோசனைகளைக் குழந்தைகள் உடனே ஏற்றுக் கொண்டு விட்டனர். “இந்த விலையுயர்ந்த வெகுமதிகள் நமக்குத் தேவை யில்லை. ஆகையால், அவற்றைச் சமூகத்திற்குத் திருப்பிக் கொடுத்து விடவேண்டியதே சரியானது.அவை நமக்கு எப்பொழுதாவது தேவைப்பட்டால் நாம் அவற்றை எளிதில் விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்” என்று குழந்தைகள் கூறினர்.
   நான் ஆனந்தம் அடைந்தேன். “அப்படியானால், உங்கள் தாயாரிடம் இதைக் குறித்து எடுத்துக் கூறி, அவளும் இதற்குச் சம்மதிக்கச் செய்வீர்கள் அல்லவா?” என்று கேட்டேன். “நிச்சயமாகச் செய்வோம். அது எங்கள் வேலை. அம்மாவுக்கு நகைகள் வேண்டியதில்லை. அவைகளை எங்களுக்காக வைத்திருக்க வேண்டும் என்றே அவர் விரும்புவார் அவை எங்களுக்கு தேவை இல்லை என்று நாங்கள் கூறும்போது, அவற்றைக் கொடுத்துவிட அம்மா ஏன் சம்மதிக்க மாட்டார்? என்றும் கூறினார்கள்.
      பேச்சளவில் இது எளிதாகத்தான் இருந்தது. ஆனால், காரியத்திலோ அது அதிகக் கஷ்டமாக இருந்தது. என் மனைவி கூறியதாவது: “இவையெல்லாம் உங்களுக்குத் தேவைப் படாமல் இருக்கலாம் . உங்கள் குழந்தைகளுக்கும் அவை வேண்டாம் என்று இருக்கலாம். அவர்களை நீங்கள் தட்டிக் கொடுத்தால், உங்கள் இஷ்டப்படியெல்லாம் அவர்கள் கூத்தாடுவார்கள்.நகைகளை நான் போட்டுக் கொள்வதை நீங்கள் அனுமதிக்காமலிருப்பதை நான் புரிந்து கொள்ளுகிறேன். ஆனால், என் மருமகப்பெண்கள் வரும்போது அவர்கள் விஷயம் என்ன?  நிச்சயம் அவர்களுக்கு நகைகள்வேண்டியிருக்கும் நாளை நம் நிலை எப்படி இருக்கும் என்பது யாருக்குத் தெரியும்? அதிக அன்போடு அளிக்கப்பட்ட இந்த வெகுமதிகளைத் திருப்பிக் கொடுத்துவிட நான் ஒரு போதும் சம்மதிக்கவே மாட்டேன்.”

   இவ்வாறுஅவள், வாதங்களை சண்டமாருதமாகப் பொழிந்தாள். முடிவில் கண்ணீர் வடித்தும் அவற்றைப் பலப்படுத்தினாள். ஆனால், குழந்தைகளோ உறுதியுடன் இருந்தார்கள். நானும் அசையவில்லை. நான் சாந்தமாகப் பின்வருமாறு கூறினேன்: “குழந்தைகளுக்கு இனிமேல்தான் விவாகம் நடக்க வேண்டும். அவர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே விவாகம் செய்து வைத்துவிட நாம் விரும்பவில்லை. அவர்கள் வளர்ந்ததும், அவர்கள் காரியங்களை அவர்களே முடித்துக்கொள்ளுவார்கள். மேலும், நகைப் பித்துப் பிடித்த பெண்களை நம் குமாரர்களுக்கு நாம் மணம் செய்து வைக்கப் போவதில்லை என்பதும் நிச்சயம். அவர்களுக்கு நகை போட வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் அவற்றை வாங்கிக் கொடுக்க நான் இருக்கிறேன். அப்பொழுது நீ என்னைக் கேள்.”

    அதற்கு அவள், “உங்களைக் கேட்பதா?இவ்வளவு நாள் பழகியும் உங்களை எனக்குத் தெரியாதா? என் நகைகளைப் பிடுங்கிக் கொண்டீர்கள். அவற்றை நான் போட்டுக்கொண்டு நிம்மதியாக இருக்கவும் நீங்கள் என்னை விடவில்லை. இப்படிப்பட்ட நீங்கள் மருமகள்களுக்கு நகை வேறு செய்து போட்டுவிடப் போகிறீர்களாக்கும்! முடியாது. நகைகளை நான் திருப்பிக் கொடுக்கப்போவதில்லை. மேலும், என்னுடைய கழுத்துச் சரத்தைக் கேட்க, உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்றாள்.

“ஆனால், அந்தக் கழுத்துச் சரத்தை, உனக்குக் கொடுத்தது என் சேவைக்காகவா?, உன் சேவைக்காகவா?” என்று நான் கேட்டேன்.

  “உங்கள் சேவைக்காகவே என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால், நீங்கள் செய்த சேவை, நான் செய்த சேவையே அல்லவா? உங்களுக்காக இரவு பகல் நான் பாடுபட்டு உழைத்திருக்கிறேன். அதெல்லாம் சேவையல்லவா? போகிறவர்கள் வருகிறவர்களையெல்லாம் வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களுக்கெல்லாம் உழைத்து, நான் கண்ணீர் வடிக்கச்செய்தீர்கள். அவர்களுக்கெல்லாம் அடிமையாக உழைத்தேனே!” என்றாள், என் மனைவி.
சொல்லம்புகள் என் உள்ளத்தில் தைத்தன. அவற்றுள் சில ஆழப் பதிந்தன. ஆனாலும், நகைகளைத் திருப்பிக் கொடுத்துவிடுவது என்று நான் உறுதி கொண்டுவிட்டேன். இதற்கு அவளும் முடிவாகச் சம்மதித்துவிடும்படி செய்வதில் எப்படியோ வெற்றி பெற்றேன். 1896, 1901-ஆம் ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட அன்பளிப்புகள் யாவும் திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டன. ஒரு தருமகர்த்தாப் பத்திரம் தயாரித்தேன். அந்த வெகுமதிகளையெல்லாம் ஒரு பாங்கில் ஒப்படைத்தேன். என் விருப்பப்படியோ, தரும கர்த்தாக்களின் விருப்பபடியோ, இந் நிதியைச் சமூகத்தின் சேவைக்குப் பயன்படுத்துவது என்று ஏற்பாடு செய்தேன்.

    பொதுஜன காரியங்களுக்கு நிதி எனக்குத் தேவைப்பட்டு, ‘இந்தத் தரும நிதியிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டியதே’ என்று நான் எண்ணிய போதெல்லாம், தேவைக்கு வேண்டிய பணத்தை வெளியிலேயே வசூல் செய்துகொள்ள என்னால் முடிந்திருக்கிறது. ஆகையால், அந்த நிதி அப்படியே செலவாகாமல் இருந்தது. அந்த நிதி இன்னும் இருந்து வருகிறது. தேவைப்படும் போது செலவிட்டு வருகிறார்கள். ஒழுங்காக அந்நிதி சேர்ந்து கொண்டும் வருகிறது.
    இவ்வாறு இந்நிதியை உண்டாக்கியதற்காக நான் என்றும் வருந்தியதே இல்லை. சில ஆண்டுகளானதும், அப்படிச் செய்தது தான் புத்திசாலித்தனமானது என்பதை என் மனைவியும் அறிந்து கொண்டாள். எத்தனையோ ஆசைகளிலிருந்து அது எங்களைப் பாதுகாத்தது.
பொதுஜன சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள், விலை உயர்ந்த
வெகுமதிகளை   ஏற்றுக்கொள்ளவே கூடாது என்பது என்னுடைய
திடமான அபிப்பிராயம்.


 ***********************************************************

இதைப் படித்ததும் கீழக்கண்ட எண்ணங்கள் என் மனதில் தோன்றின

1.இப்படிக் கூட  ஒரு மனிதர் இருப்பாரா . இவைதான் மனிதரை மகாத்மா ஆக்கியிருக்கிறது 

2.மகாத்மாக்களுக்கு மனைவியாய் இருப்பதைப் போல துன்பம்  வேறில்லை 

3.மாமனிதர்கள் அவர்கள் குடும்பத்திருக்கு உவப்பானவர்களாக இருப்பதில்லை 

4. சலுகைகளோடு  வெகு மானங்களையும்   பொது சொத்தையும் குற்ற உணர்வின்றி அனுபவித்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் அதிகாரிகளை  இதனை ஒரு முறையாவது படிக்க செய்ய  வேண்டும்

--------------------------------------------------------------

தொடர்புடைய பதிவுகள்1. காந்தியைப் பற்றி சுஜாதா
2.நீதிபதியின் கேள்வி-மிஸ்டர் காந்தி! இது மோசடி வேலை .
3.வக்கீல் தொழில் பொய்யர்களின் தொழிலா? தெரிந்த வரலாறு...
2.அகிம்சை அண்ணல் சுடப்பட்டபோது
3.சர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா?சசித...
4.கோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி
5.காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்-
6 .காந்தி தேசத் தந்தை இல்லையா?

7.எழுதியது யார்? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
8. தெரிந்த வரலாறு! தெரியாத சம்பவங்கள்!

ஞாயிறு, 18 ஜூன், 2017

தாயிடம் தோற்கும் தந்தைகள்


       பல்வேறு சூழல்களால்  பதிவு எழுத இயலவில்லை.   இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து  மீண்டும் வெளியிட  என்வலைப் பக்கம் வந்தபோது எனக்கு சிறு ஆச்சர்யம். பார்வைகளின் எண்ணிக்கை  7,07,571 ஐ  கடந்திருந்தது . அதிகம் எழுதாத நிலையிலும் மாதத்திற்கு  ஏறக்குறைய 8.000 பக்கப் பார்வைகள் கிடைத்தால் ஆச்சர்யப் படாமல் எப்படி இருக்க முடியும். 
ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. இனி அவ்வப்போது சந்திப்போம்.


--------------------------

   தாயை மட்டுமே போற்றி வந்த சமூகம்  சமீப காலமாக  தந்தையைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்கி இருக்கிறது. நிறைய கட்டுரைகள் கதைகள் திரைப்படங்கள் தந்தையின்  பெருமையைப்  பேசுகின்றன. முரடர்களாக கருதப்பட்ட அப்பாக்கள் இன்று இல்லை. தந்தைகள்  அன்பான அப்பாக்களாக  உருமாறினார்கள்.  தற்போதைய அப்பாக்கள் மகனாக இருந்தாலும் மகளாக இருந்தாலும் தோழமையான அப்பாக்களாக மாறிப்போனார்கள். அதற்கு இடம் கொடுத்த தாய் களுக்கும் நன்றி சொல்லத் தான் வேண்டும்.தந்தைக்கு  சிறப்புக்கள் எப்போதும் தாமதமாய்த்தான் கிடைக்கும்.
      . எனது தந்தையைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த தந்தையர் தினத்திற்கு நன்றிகள் . 

    என்னுடைய ஹீரோ ரோல் மாடல்  எங்கப்பாதான் என்று  பலரும் தங்கள் தந்தையைப் பற்றி கூறுவார்கள்.  அப்படி எல்லாம் நான் நினைத்ததில்லை. அப்பாவுக்கென்று பெரிதாக குறிக்கோள்கள் ஏதும் இருந்ததில்லை. அம்மாவின் விருப்பங்களை நிறைவேற்றுவதில்தான் கவனம் செலுத்தினார். பல வீடுகளில் அம்மாக்களின் அளவுக்கு மீறிய ஆளுமை தந்தையின் தனித்துவத்தை உணர விடாமல்  செய்து விடுகிறது. அப்படித்தான் எனது தந்தையும். எங்களை இதுதான் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப் பட்டதில்லை. எங்களை படி என்று வற்புறுத்தியதில்லை. படிப்புதான் வாழ்க்கை என்று மூளை சலவை செய்ததில்லை. ஒரு நாளும் அடித்ததில்லை; ஏன்? திட்டியது கூட இல்லை. அவர் மிகவும் நல்லவர் என்று பெயர் எடுத்திருக்கிறார் ஆனால் சாமர்த்தியசாலி என்று பெயர் எடுக்கவில்லை . அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தன. எந்தவித கெட்ட பழக்கமும் அவரிடம் இருந்ததில்லை.. வெற்றிலை கூட போடமாட்டார்.  அவரை ஒரு அப்பாவியாகவே பலரும் பார்த்தனர். இதுவே அவரது பலமாகவும் இருந்தது; பலவீனமாகவும் இருந்தது. நீண்ட நாட்களாக அவரை பற்றி எழுத வேண்டும் நினைத்திருப்பேன்.   அவரது  நினைவுகளை அசை போட வாய்ப்பளித்த தந்தையர் தினத்துக்கு நன்றிகள் .சொல்லத்தான் வேண்டும்
        எனது தந்தை ஒரு ஆசிரியர். அதுவும் தலைமை ஆசிரியர் என்பதால் நல்ல ஆசிரியருக்கு  உரித்தான் பல குணங்கள் அவரிடம்  இயல்பாகவே இருந்தன. .பிற்காலத்தில் அவை எனக்கும் தொற்றிக் கொண்டன.

   நான் பிறந்த நேரத்தில்  எனது தந்தை பள்ளியில் இருந்தததாகவும் கடுமையான புயல் மழை என்பதால் மாணவர்களை பாதுகாப்புக்காக இரவு முழுவதும் பள்ளியிலேயே தங்க வேண்டி இருந்தது என்றும் அம்மா(குறையாக) சொல்வார்கள். அந்த கிராமத்தில் வாத்தியார் என்றால் அதிக மரியாதை உண்டு. ஊரில் வசதியும் செல்வாக்கும் உள்ள ஒருவர்  இலவசமாகவே தங்கு வதற்கு  இடவசதி செய்து  கொடுத்திருந்தார். அவர்கள் வீட்டு மாட்டுக் கொட்டகையை ஒரு முனையை தடுத்து வீடாக்கி கொடுத்தார்கள்.வேலையில் சேர்ந்தபோது அந்த வீட்டுக்கு வந்த அப்பா  ஒய்வு பெறும் வரை  அந்த வீட்டில்தான் இருந்தார். எனது அண்ணன் அக்கா ஆகியோர் மருத்தவமனையில் பிறந்தவர்கள். நான் மட்டும் அந்த வீட்டில் பிறந்தவன் என்ற பெருமை எனக்குண்டு. (புயல் காரணமாக மருத்துவமனை செல்ல முடியவில்லையாம். )

  மாலை நேரங்களில் பெரிய  வீட்டுக் குழந்தைகள்  ட்யுஷன் படிக்க வருவார்கள். அம்மா ஆசிரியை இல்லை என்றாலும்  டீச்சர் என்றுதான் அழைப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து நானும் படிப்பேன்.ட்யுஷனுக்கு பணம் ஏதும் தரமாட்டார்கள்.  ஆனால்  தன் வயலில் விளையும் நெல், நிலக்கடலை, போன்றவற்றை அறுவடை நேரத்தில் எங்கள் வீட்டுக்கு  கொடுத்து அனுப்புவர் 

  அவர் தலைமை ஆசிரியராக பணியாற்றிய பள்ளியிலேயே என்னையும் சேர்த்தார். ஆறாம் வகுப்பு வரை அங்கேதான் படித்தேன். தந்தையே ஆசிரியராக இருக்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கே கிடைக்கும். அது எனக்கும் கிடைத்தது.  என் தந்தைக்கு விட்டுக் கொடுக்கும் குணம் உண்டு. அதனை பயன்படுத்திக் கொண்ட இன்னொரு பள்ளியின் தலைமை ஆசிரியர்  பணியாற்றிய இடத்தை விட்டு ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு பள்ளிக்கு ,  மனமொத்த மாறுதல் பெற்றுக்  கொண்டார். அந்தப் பள்ளிக்கு நடந்துதான் செல்லவேண்டும் .பேருந்து வசதியும் கிடையாது. அப்பாவுக்கு சைக்கிள் ஒட்டவும் தெரியாது. எங்கு சென்றாலும் நடந்துதான் செல்வார்.  நடராஜன் என்ற பெயருக்கு ஏற்ப நடராஜா சர்வீசிலேயே காலத்தை  கடைசி வரை கழித்து விட்டார்.

   அப்பா மாணவர்களை அடிக்க மாட்டார், அடிக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் கையைக் குவித்து முதுகில் லேசாக அடிப்பார். சத்தம் மட்டும்  பெரிதாக கேட்கும்; வலிக்காது என்று அவரிடம் படித்தவர்கள் கூறுவார்கள். அப்பாவுக்கு சில விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். பாட்மிண்டன்  நன்றாக ஆடுவார்.

   பம்பரம் வாங்கிக் கொடுத்து பம்பரம்  விடுவதற்கு எனக்கு கற்றுத் தந்தார். அதில் சில வித்தைகளையும் செய்து காட்டுவார். வழக்கமாக பம்பரத்தை தரையில் சுற்றவைத்தது விட்டு பின்பு அதை கையில் லாவகமாக எடுப்பார்கள். அனால் அப்பா சாட்டையை வீசி அப்படியே பாமபரத்தை கையிலேயே நேரடியாக பிடித்து சுழலச் செய்வார். அதை பலமுறை செய்து நானும் கற்றுக் கொண்டேன்,
  சர்க்கசில் செய்வது போல மூன்று பந்துகளை மாற்றி மாற்றி கைகளில் தூக்கிப்போட்டு பிடித்துக் காட்டுவார்.நீண்ட குச்சியை விரல்களில் நிற்கவைத்துக் காட்டுவார். அதோடு அதை தூக்கிப் போட்டு அதன் மறுமுனையை அப்படியே விரல்களில் விழாமல் பிடிப்பார். 

    பனை ஓலையில் காற்றாடி செய்து கருவேல முள் கொண்டு வேகமாக சுழலச் செய்வார். பட்டம் செய்து கொடுப்பார். பட்டத்திற்கு சூத்திரம் போடுவது எப்படி என்று சொல்லித் தருவார். பட்டம் விடும்போது நூல் வழியே ஓலைத் துண்டை அனுப்பு வார். அது சுற்றிக்கொண்டே வேகமாக உயரே சென்று பட்டத்தை சென்றடயும். அதை தந்தி என்று சொல்லி மகிழ்விப்பார்.

  விநாயகர் சதுர்த்தி வந்து விட்டால் போதும்; குடை செய்ய ஆரம்பித்து விடுவார். ஒரு மாதத்துக்கு முன்பே மூங்கில், காகிதம் இவற்றை சேகரித்து வைப்பார். விதம் விதமாக அழகான குடைகள் கடைகளில் கிடைத்தாலும் அவர் கையால் செய்து அதை பயன்படுத்துவதுதான் அவருக்கு பிடிக்கும். இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

  இவை எல்லாம் அப்போது எனக்கு ஆச்சர்யமாக தோன்றவில்லை. ஆனால் இப்போது நினைத்துப் பார்த்தால் வியப்பை ஏற்படுத்துகிறது. 

   ஏற்கனவே சொன்னது போல அப்பாவின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால் தாத்தாவின் சொத்தில்( சென்னையின் முக்கியப் பகுதியில் இருந்தது  )  தன் உரிமையை  விட்டுக் கொடுத்தார்.  அதனால் கோபம் அடைந்த  அம்மாவின் வற்புறுத்தலால் சென்னையின் புறநகர் பகுதியில் மனை வாங்கினார். வீடு கட்டி உறவினர் முன் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பது அம்மாவின் ஆசை. அதை நிறைவேற்ற முனைந்தார் . அண்ணனின் மேல் படிப்புக்காக சென்னைக்கு இடம் பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது.   எப்படியோ கஷ்டப்பட்டு வீடும் கட்டி விட்டார்.  நாங்கள் இங்கே தங்கி இருக்க அப்பா ஊரிலேயே இருந்தார். மாதம் ஒரு முறைதான் வருவார். 

   அப்பாவுக்கு சங்கீத  ஞானமும் கொஞ்சம் உண்டு. ராகங்களை அடையாளம் கண்டுபிடித்து விடுவார். "தீராத விளையாட்டுப் பிள்ளை" என்ற பாடல் அப்பாவுக்கு மிகவும் படிக்கும். எங்களை தூங்க வைக்க அந்த பாடலையே பாடுவார் . அப்பாவுக்கு சமைக்கவும் தெரியும். ருசித்து  சாப்பிடவும் செய்வார்.  கதை புத்தகங்களில் அவருக்கு ஆர்வம் இருந்ததில்லை. செய்தித்தாளை வைத்துக் கொண்டு நாள் முழுதும் வாசித்துக் கொண்டிருப்பார்.

    அப்பாவுக்கு எப்போதுமே எல்லோரும் நல்லவர்கள்தான் என்றே எண்ணுவார். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் முதலில் நம் மீது தவறு இருக்குமோ என்றுதான் சிந்திப்பார். 

   ஒல்லியான தோற்றம் அவருடையது .அவருக்கு நடையே உடற்பயிற்சியாக இருந்ததால் ப்ரெஷர், சுகர் என்று எதுவும் அவருக்கு வந்ததில்லை.அவரது வாழ்நாளின் இறுதி நாட்களில் மட்டுமே சிறிது சிரமப் பட்டார். அவருக்காக மேற்கத்திய கழிப்பறை அமைத்தோம்.சில நாட்கள் மட்டுமே பயன் பட்டது. 
 ஆனாலும் நடந்தே பல இடங்களுக்கும் சென்ற அவரால் கழிப்பறை செல இயலவில்லை. நான் மெது வாக அழைத்து செல்வேன். என் மகனும் உதவுவான். என் மனைவியும் முகம் சுளிக்காமல் தன் பங்கை செய்தார்.  பணிக்குசெல்லுமுன்  டயபர்  கட்டி விட்டு செல்வேன்.  மாலையில் வந்து  வேறு மாற்றுவேன்.
    ஒரு நாள் காலை அப்பா லேசாக நெஞ்சடைக்கிறது என்று சொல்ல ஒன்றுமில்லை காப்பி சாப்பிடுங்கள் என்று காபியை கொடுக்க, விழுங்க முடியாமல் அவதிப் பட்டார். பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவரது உயிர் மெல்லப் பிரிந்தது.  அதை மனம் நம்ப மறுத்து சினிமாவில் வருவது போல மார்பில் லேசாக இரு கைகளாலும் வேகமாக தட்டிப் பார்த்தேன். பயன் ஏதுமில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் சில நிமிடங்கள் திகைத்து நின்றேன். உடனே அழுகை வரவில்லை. பின்னர் கண்கள் கலங்க ஆரம்பித்தன. ஓ! வென்று கதற நினைத்த நான் அடக்கிக் கொண்டேன்.  கடைசி நேரத்தில் அவரது அருகில் இருந்தமைக்காக லேசான திருப்தியுடன் அடுத்த பணிகளை கவனிக்க சென்றேன்.அவரை பொருத்தவரை நிறைவாகவே வாழ்ந்திருப்பார் என்று நம்புகிறேன். 

   எங்கள் பகுதியில் முதலில் வீடு கட்டியது அப்பாதான். அவர் பணியாற்றிய போது ஆசிரியர்களின் சம்பளம் மிகக் குறைவு. அதனால் வீடு கட்டியதை பெருமையாகக் கருதினார். 

   இன்று அது பழமையானதாக மாறி விட்டது அதன் பின்னர் கட்டிய பல வீடுகள் இன்று பிளாட்டுகளாக மாறி விட்டது.அந்த வீட்டை இடித்து விட்டு புதிதாக கட்ட நினைத்துள்ளோம் ஆனால் மனம் வரவில்லை. ஒவ்வொரு கல்லும் என்னை இடிக்காதே என்று சொல்வது போல் எனக்குத் தோன்றியது .. ஆனாலும் வேறு வழியின்றி வீடு இடிக்கும் பணி துவங்கப் பட்டது.  வீடு இடிக்கும் வேலைக்கு வந்தவர்    கடப்பாறையால் ஓங்கி முதல் இடி இடித்தார். கொஞ்சம் மெல்ல இடியுங்க என்றேன். மெதுவா இடிச்சா எப்படி சார் இடிக்க முடியும். நீங்க போங்க சார்! என்றான். மனதை என்னவோ செய்தது. குற்ற உணர்வுடன் அங்கிருந்து வெளியேறினேன். நான் கட்டிய வீட்டை இடிச்சிட்டயேடா  என்று என் தந்தை கேட்பது போல் தோன்றியது.  அன்று  இரவு முழுதும் உறக்கம் வரவில்லை. 
  இப்போது புதியதாக வீடு கட்டும் பணி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. தனி வீடு கட்டுவதில் எவ்வவளவு சிரமங்கள் இருக்கின்றன என்பதை என்னால் உணர முடிந்தது. இடிக்கப்பட்ட வீட்டின் சில கட்டிடத் துண்டுகள் ஆங்கே கிடக்கின்றன என் மனதைப் போலே. அவை எனது தந்தையை நினைவு படுத்திக் கொண்டிருக்கின்றன. வீடுகள் செங்கல் மணல், சிமென்ட்  ஜல்லிக் கலவைகளால்  மட்டும் கட்டப்படுவதில்லை . அந்தக் கலவையில் கண்ணுக்குத்  தெரியாத  உணர்வுகள் கலந்து கிடக்கின்றன.  

   தாய்களைப் போலவே பெரும்பாலான தந்தைகளும் தனக்காக வாழ்வதில்லை. தாய்களிடம் தோற்றுப் போவதை தந்தைகள் பெரிது படுத்துவதில்லை. இறந்தபின்பு அவரை போற்றுவதை விட, இருக்கும்போது நம்மைத் தாங்கிய தந்தையை கடைசி வரை தாங்குவதே மகன் தந்தைக்காற்றும் உதவியாகக் கொள்வோம். 
நம் பிள்ளைகளும் நம்மை நினைவு கூறும் அளவுக்கு நடந்திருக்கிறோமா?  தெரியாது ! தெரிய பல காலம் ஆகலாம்.  ஏன்? தெரியாமலேகூட போகலாம் .


*******************************


                

வியாழன், 9 மார்ச், 2017

பிரேக்கிங் நியூஸ் குமுத்தில் என் கதை-   கடந்த வாரம் குமுதத்தில்(08/03/2017) எனது ஒரு பக்கக் கதை ஒன்று பிரசுரமாகி இருந்தது. முகநூலில் அந்த தகவலை மட்டும் 
பகிர்ந்திருந்தேன். கதையை வெளியிட வில்லை.ஒரு வாரம் ஆகி விட்ட படியால் அக் கதையை வலைப் பதிவில் பதிவிடுகிறேன். குறுகிய காலத்தில் பரிசீலித்து வெளியிட்ட குமுதம் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி..இதுவரை  மூன்று கதை குமுதத்தில் பிரசுரிக்கப் பட்டுள்ளது

இக்கதைக்கு நான் வைத்த தலைப்பு பிரேக்கிங் நியூஸ். ஆனால் குமுதத்தில் யமுனா என்று  மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அந்த இதழ் பெண்கள் சிறப்பிதழ் என்பதால் பெண்களின் பெயர்கள் மூன்று ஒரு பக்கக் கதைகளுக்கும் வைக்கப் பட்டிருந்தன.

       பிரேக்கிங் நியூஸ்
                                          (ஒரு பக்கக் கதை )

             எல்லா பரபரப்பும் அடங்கியும்   பிரேக்கிங்  நியூஸ்  ஃபோபியா ராஜியை விட்ட பாடில்லை...  பள்ளியில் இருந்து திரும்பிய மகள் யமுனாவைக் கூட கவனிக்காமல் மீண்டும் மீண்டும் செய்திச் சேனல்களை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள். சே!  உருப்படியாக ஒன்றும் இல்லை.
   “என்னம்மா இப்படி பண்றியேம்மாபசிக்குது ஏதாவது குடும்மாஎன்றாள் யமுனா .
   “ஒரு அஞ்சு நிமிஷம் இருடி. ஏதாவது பிரேக்கிங் நியூஸ் வருதான்னு பாத்துட்டுப் போறேன். அதுக்கு முன்னாடி சமயக்கட்டுல  ஜூஸ் பிழிஞ்சு வச்சுருக்கேன் எடுத்துக் குடிஎன்று தலையைத் திருப்பாமல் கூறினாள் ராஜி.
   “அம்மா! கொஞ்ச நாளா  உனக்கு என்னமோ ஆயிடிச்சிஎன்று சொல்லிக் கொண்டே ஜூசைக் எடுத்துக் கொண்டு வந்து  சோபாவில் ராஜியின்   பக்கத்தில் அமர்ந்து குடிக்கத் தொடங்கினாள் யமுனா
 அதற்குள் விளம்பர இடைவேளை வர இதோ பாருடி உனக்கு நான் மேகி செஞ்சு கொண்டு வரேன். அதுவரைக்கும்  ஜூஸ் குடிச்சிக்கிட்டே  டிவி  பாத்துக் கிட்டு இரு. ஏதாவது பிரேக்கிங் நியூஸ் வந்தா உடனே என்னை கூப்பிடு . சரியா
என்று சொல்லி விட்டு வேகமாக சமையலறை  சென்றாள்.  
   ஒரு சில நிமிடங்களிலேயே யமுனாவின் குரல் ஒலித்தது அம்மா ஒரு பிரேக்கிங் நியூஸ். சீக்கிரம் வா!"
என்ன? என்ன? கையில் கரண்டியுடன் டிவியைப் பார்த்துக் கொண்டே ஓடிவந்தாள் ராஜி..
அம்மா! ஓடிவராதே! கீழே பாத்து வா!என்று கத்த  ராஜி கீழே பார்த்தாள்.ஜூஸ் டம்பளர் கீழே விழுந்து  சுக்கு நூறாக உடைந்திருந்தது .
அடியே! உன்ன... என்று கரண்டியை தூக்கி வீச யமுனா நகர்ந்து கொள்ள கரண்டி டிவியை நோக்கி பறந்து கொண்ருந்தது யமுனா சிரித்துக் கொண்டே கலாய்த்தாள் 
" அம்மா! இன்னொரு பிரேக்கிங் நியூஸ்"