என்னை கவனிப்பவர்கள்

புதன், 27 நவம்பர், 2013

கணையாழி படிக்க முடியுமா?


   மின்சார ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடைக்கு முன் நின்று தொங்க விடப்பட்டிருக்கும் தலைப்பு செய்திகளை (வெட்கத்துடன்)ஒன்று விடாமல் படிக்கும் சராசரித் தமிழர்களில் நானும் ஒருவன். ஒன்றிரண்டு வார இதழ்கள் வாங்கினாலும்  புத்தகக் கடைகளில் முன் நிற்கும்போது எனக்கு  எப்போதாவது அந்த ஆசை எழுவதுண்டு. பரபரப்பான தலைப்புகள் புத்தகக் கடையை சுற்றி தொங்கிக் கொண்டிருக்கும்போது அந்த ஆசை மறைந்துபோகும். 

   வேறு ஒன்றுமில்லை.கணையாழி,உயிர்மை போன்ற இதழ்களை ஒருமுறையேனும் வாங்கிப் படிக்க வேண்டும் என்பதே. தீவிர இலக்கியவாதிகள் புரியாதபடி எழுதுபவர்கள் விரும்பும் பத்திரிக்கை அல்லவா அது. நமக்கு பிடிக்குமா? நம் ரசனைக்கு ஒத்துவருமா? கொடுத்த காசுக்கு பலன் இருக்குமா? புத்தகம் வாங்கினால் வீட்டில் உள்ளவர்களும் படிக்க முடியுமா? நமக்குப் பிடித்திருந்தாலும் நம் ஒருவருக்காக வாங்கிப் படிக்கத்தான் வேண்டுமா? என்ற நடுத்தர மனோபாவத்துடன் யோசிப்பதில் பல புத்தகங்கள் வாங்க மனம் வருவதில்லை.

  ஆனால் இம்முறை கணையாழி புத்தகம் வாங்கி விட்டேன்.எப்போதோ சுஜாதாவின் கணையாழியில் கடைசி பக்கங்கள் எழுதி வந்தார் என்பதை கேள்விப் பட்டிருக்கிறேன்.. ஆனால் அவற்றை படித்ததில்லை.
     இப்போதும் "கடைசி பக்கங்கள்" பகுதி இருக்கிறதா என்று முதலில் புரட்டினேன. கடைசி பக்கங்களை இப்போது இந்திரா பார்த்தசாரதி எழுதி வருகிறார். இந்திரா பாரத்தசாரதியையும்  இந்திரா சௌந்தர ராஜனையும் குழப்பிக் கொள்வது வழக்கம். மேட்டிமை எழுத்தும் பாமர எழுத்தும் என்று ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். சுவாரசியமாகவே எழுதப் பட்டிருந்தது.
   நவம்பர்  மாத இதழில் மொத்தம் 11 கவிதைகள் வெளியிடப் பட்டிருந்தன. ஒரு சிலவற்றை தவிர மற்றவை எளிமையாகவே இருந்தன. சில கவிதைகள்ஏற்கனவே படித்தது போல் இருந்தன. அவை  ஹரணி பக்கங்கள் என்ற வலைப்பூவில் பேராசிரியர் திரு ஹரணி அவர்கள் எழுதியவை  என்பதை அறிந்து கொண்டேன். கரந்தை ஜெயக்குமார் அவர்களின் மூலமாக ஹரணி அவர்களை அறிவேன் அவ்வப்போது அவரது வலைப் பக்கம் செல்வது உண்டு . "இறுதி நிலை நோயாளி" பறவைகள் குறைந்து வருவதைப் பற்றி பேசியது.

   செம்மீன் புகழ் தகழி சிவசங்கரன்  பிள்ளை அவர்களின் சுய சரிதையில் இருந்து எடுத்து மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரை தகழியின் இளமைக் காலத்தை குறிப்பிட்டது. ஹோட்டலுக்கு பால் கறந்து கொடுத்து காசு வங்கிக் கொண்டு வருவாராம் தகழி. அந்தக் காசில் கொஞ்சம் எடுத்து வைத்துக்கொள்வாராம். அதை கதை எழுதி அனுப்பவும் பேப்பர் வாங்கவும் பயன்படுத்திக் கொள்வாராம். 

         குப்பன்  சுப்பன் பற்றி சொல்லும் கதைகளுக்கு அவர்களுடைய வாழ்க்கைக்கே உரிய கதைப்பாணியை பின்பற்றவதுதான் நல்லது. அயல்நாட்டுப் பாணி அவசியம் இல்லை என்று தகழி தெரிவிப்பதாக சொல்கிறது கட்டுரை.
ஆ பழனி என்பவர் எழுதிய மரண தண்டனை பற்றிய கட்டுரை புதிய தகவல்களை தருகிறது.பிற்கால சோழர்கள் மரண தண்டனையை புறக்கணித்ததை கல்வெட்டுகள் காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அக்காலத்தில் இயற்றப் பட்ட சுக்கிர நீதி என்ற நூல் கொலை தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறதாம்.திருக்குறளும் மரண தண்டனையை ஆதரிக்க வில்லை என்று ஒருவிளக்கத்தையும் தருகிறார் புலவர்.
இன்னொரு கட்டுரை பகவத் கீதை வெண்பா என்றஅரிய நூலைப்பற்றி விவரிக்கிறது. இதைத் தவிர  தமிழில் பகவத் கீதை செய்யுள் வடிவில் வேறு எதுவும் காணக்கிடைக்கவில்ல என்கிறார் கட்டுரை ஆசிரியர் நரசையா. இவ்வெண்பா நூலை  எழுதிய முத்து ஐயர் என்பவராம்.  மசூலிப் பட்டினத்த்தில் உள்ள ஹிந்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என அறிய முடிகிறது. 

   இடம் பெற்ற நான்கு சிறுகதைகளில் ஒன்றைத் தவிர மற்றவற்றில் பயமுறுத்தும் இலக்கியத் தன்மை இல்லாததால் எளிதில் படிக்கவும் புரிந்து கொள்ளவும் முடிந்தது. "வீட்டில சும்மாதான் இருக்காளா" என்ற சிறுகதை  மிடில் கிளாஸ் மன நிலையை அப்படியே பிரதிபலித்தது. 
மருந்து என்ற சிறுகதை தகழி சொன்னது போல கிராமத்து மனிதர்களை அப்படியே அவர்கள் போக்கிலேயே சொல்வதாக  அமைந்திருந்தது. எனக்கு மிகவும் பிடித்தது.

   இரண்டு நூல் அறிமுகங்கள் இந்த இதழில் செய்யபட்டிருந்தது. வெங்கடேஷ் என்பவர் எழுதிய "இடைவேளை" என்ற புத்தகம் கணினித் துறையில் ஏற்பட்ட திடீர் தொய்வால் வேலை இழந்த ஒருவனைப் பற்றியது. வெங்கட் சாமிநாதன் என்பவரின்  மதிப்புரை நூலை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது உண்மை.

   தற்போது பத்திரிகைகளில் தொடர்கதைகள் அவ்வளவாக இடம் பெறுவதில்லை. கணையாழியிலும் தொடர் ஏதும் இல்லை. எவ்வளவு சுவாரசியமாக இருந்தாலும் தொடர்கதைகளை வாசகர்கள் விரும்புவதில்லை. அவற்றை படிக்கும் அளவுக்கு பொறுமை இருப்பதில்லை என்பதை பத்திரிக்கைகள் உணர்ந்தே இருக்கின்றன. 

     கணையாழியின் எல்லாப் பகுதிகளும் என்னைப் போன்ற சாதாரண வாசகர்கள் படிக்கும் வகையில்தான் அமைந்திருக்கிறது.  மாறுதலுக்காக அவ்வப்போது வாங்கிப் படிக்கலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். 

******************************************************************************************* 


60 கருத்துகள்:

 1. முரளி,

  நான் ஒருக்காலத்தில் காலச்சுவடு,உயிர்மை,குமுதம் தீராநதிலாம் படிச்சுக்கிட்டு இருதேன் , தொடர்ந்து படிக்கவும் சலிப்பாகிடிச்சு, தொடர்ந்து படிச்சிங்கன்னா சலிப்பூட்டக்கூடும். இப்போ நான் குமுதம்,ஆனந்த விகடன் கூட படிப்பதில்லை எப்போவாது கையில சிக்கினா எடுத்து புரட்டுவது தான்.

  இதே போல சுஜாதா,பாலகுமரன் போன்றோரின் கதைகளும் தொடர்ந்து படிக்கையில் சலிப்படைய செய்தவையே காரணம் எல்லாத்தையும் படிக்கவும், அவங்களுக்குன்னு உள்ள ஒரு மொழி நடையில ...குறிப்பிட்ட கதைக்கரு வட்டத்துக்குள்ள எழுதுவது புலப்பட ஆரம்பித்ததே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஒரு எழுத்தாளர் ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டால் அதிலிருந்து மாற முடிவதில்லை. ஆரம்பத்தில் பலமாக இருந்தவை பின்னர் அதே பாணி பலவீனமாக மாறி விடுகிறது.

   நீக்கு
 2. கணைபாழி இதழ் குறித்து அறிந்து மகிழ்ந்தேன் ஐயா. நானும் தங்களைப் போலத்தான், நம்மால் படிக்க இயலாது என்று எண்ணியே இதுவரை வாங்கியதில்லை. தங்களின் கட்டுரையினைப் படித்த பிறகுதான் வாங்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவசியம் வாங்கிப் படிக்கின்றேன் ஐயா.
  ஹரணி அவர்கள் ஒரு கவிஞர், கதை ஆசிரியர், கட்டுரை ஆசிரியர் என எழுத்தில் அவர் தொடாத துறைகளே இல்லை.
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வழியாகத் தான் அவரது வலைப்பூ சென்றேன். சிறப்பான படைப்புகள் அவருடையது

   நீக்கு
 3. வணக்கம்
  முரளி(அண்ணா)

  எவ்வளவு சுவாரசியமாக இருந்தாலும் தொடர்கதைகளை வாசகர்கள் விரும்புவதில்லை. அவற்றை படிக்கும் அளவுக்கு பொறுமை இருப்பதில்லை என்பதை பத்திரிக்கைகள் உணர்ந்தே இருக்கின்றன..நீங்கள் சொல்வது உண்மைதான்.... பதிவு அருமை வாழ்த்துக்கள் அண்ணா...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. ஒரு இதழ் படிக்கும்போது எல்லாம் படிக்கத் தோன்றும். நான் அது மீண்ட காலத்திலிருந்து மாதா மாதம் வாசித்து வருகிறேன். அப்பா எனக்கு சந்தா கட்டி விட்டார். அது பாட்டுக்கு வரும். சிலகாலம் முன்பு வரை அசோகமித்திரன் ஏதாவது அதில் எழுதிக் கொண்டிருந்தார். (நட்புக்காக அவர் கணையாழி ஆசிரியர் குழுவில் இருந்ததாக 'தினமணி தீபாவளி மலரில் ஞானி சொல்லியிருக்கிறார்) இப்போது வருவதில்லை. வெங்கட் சாமிநாதன் புகழ்பெற்ற அந்தக் கால எழுத்தாளர். அவரைப்பற்றி இங்கு படிக்கவும்.

  http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D

  பதிலளிநீக்கு
 5. எனக்கும் கணையாழியைப் படிக்கும் ஆவலைத்தூண்டும் விமர்சனம் தந்துவிட்டீர்கள்

  பதிலளிநீக்கு
 6. பார்த்தவர் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டியதற்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. இந்த பதிவில் உங்கள் எழுத்து நடையே வித்தியாசமாக இருக்கிறது ஒரு வேளை இலக்கியவாதிகள் எழுதி இதழை படித்ததாலோ?? tha.ma 4

  பதிலளிநீக்கு
 8. எங்களுக்கு இங்கு வெகுஜனப் பத்திரிக்கை கிடைப்பதே கஷ்டமாக இருக்கிறது, எப்போதாவது தமிழ் நாட்டுக்கு வந்தால் வாங்கிப் படிக்க முயற்சி செய்ய வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா! வெளி மாநிலங்களில் மற்றும் வெளி நாட்டில் வாழும் பலரும் இதே கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்

   நீக்கு
 9. //என்னைப் போன்ற சாதாரண வாசகர்கள்...//

  இதுக்குப் பேர்தான் முரளி தன்னடக்கம்.

  பதிலளிநீக்கு
 10. பேராசிரியர் திரு ஹரணி அவர்கள் அவர்களின் கவிதைகள் உள்ளது குறித்து மகிழ்ந்தேன்... கணையாழி பற்றி விவரம் அறிந்தேன்... நன்றி...

  பதிலளிநீக்கு
 11. இந்த மாதிரி புத்தகங்களை திரும்பி பார்ப்பதே இல்லை சார் ... ஒரு முறை முயற்சி செய்யலாம் போலிருக்கிறது உங்களின் சொல் ...// தலைப்பு செய்திகளை (வெட்கத்துடன்)ஒன்று விடாமல் படிக்கும் சராசரித் தமிழர்களில் நானும் ஒருவன்.//

  இதில் என்ன சார் வெட்கம் இருக்கிறது ... எந்த பத்திரிக்கை உருப்படியான நடுநிலை செய்தி கொடுக்குறாங்க ,வாங்கி படிப்பதற்கு ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது போன்ற புத்தகங்கள் நம் ரசனைக்கு ஒத்து வராது என்றுதான் நினைத்தேன். ஆனால் சராசரி வாசகர்கள் படிக்கும் அளவிற்குத்தான் உள்ளது

   நீக்கு
 12. என் மாமனார் இது போன்ற நிறைய மாத இலக்கிய இதழ்களுக்கு சந்தா கட்டி வைப்பார்... படிக்க என்னிடம் கொடுப்பார்.. நிறைய புத்தகங்கள்... தமிழ் புலமை, இலக்கணம் அறிந்தவர்களால் மட்டுமே ஆர்வமாக படிக்க முடியும். ஆனால் எனக்கு அது போன்ற புத்தகங்களை படிக்க பொறுமை கிடையாது. அறிவு சார்ந்த விஷயங்கள் அவ்வளவு சீக்கிரம் யாரையும் சலனப்படுத்தாது. ஆனால் ரசனை சார்ந்த விஷயங்கள் சீக்கிரமே மனதுக்குள் இடம் பிடித்து விடும். அந்த ரசனைகள் ஏற்படுத்தும் கற்பனைகளை பாமரனும் புரிந்து கொள்ளும்படி எழுதுவதுதான் அழகான இலக்கியமாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாக சொல்லி இருக்கிறீங்க மேடம்

   நீக்கு
  2. நானும் இவை நம் ரசனைக்கு ஒத்து வாறது என்றுதான் நினைத்தேன். ஆனால் கணையாழி சாதாரண வாசகர்களையும் திருப்திப் படுத்தும் அளவிற்கு இருக்கிறது.அதிக இலக்கிய அச்சுறுத்தல்கள் இல்லை. உங்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன்.

   நீக்கு
 13. "கணையாழியின் எல்லாப் பகுதிகளும் என்னைப் போன்ற சாதாரண வாசகர்கள் படிக்கும் வகையில்தான் அமைந்திருக்கிறது. மாறுதலுக்காக அவ்வப்போது வாங்கிப் படிக்கலாம் என்று உத்தேசித்திருக்கிறேன்." எனக் கணையாழியை அறிமுகம் செய்தமையை வரவேற்கிறேன்.

  பதிலளிநீக்கு
 14. நானும் கணையாழியை பல ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் ரயில் பயணத்தின்போது படித்திருக்கிறேன். ஆனால் நாற்பத்தைந்து வயதுக்குப் பிறகு கணையாழி மட்டுமல்லாமல் வார சஞ்சிகைகளை படிக்கும் பழக்கம் விட்டுப்போனது. பணிச்சுமையும் ஒரு காரணம் என்று சொல்லலாம். எனக்கு கணையாழியில் வெளிவரும் அனைத்து பகுதிகளும் மிகவும் பிடித்திருந்தது. இப்போதும் அதே தரத்துடந்தான் வெளிவருகிறது என்பதை உங்கள் பதிவின் மூலம் தெரிந்துக்கொண்டேன். பகிருவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறுவயதில் இருக்கும் தேடி வாசிக்கும் பின்னர் குறைந்துவிடுவது இயல்புதான். பனி மற்றும் இதர சூழல்கள் அதற்குக் காரணம்

   நீக்கு
 15. உங்களைப் போலவே யோசித்து பல புத்தகங்களை வாங்காமல் விட்டதுண்டு

  பதிலளிநீக்கு
 16. சகோதரருக்கு வணக்கம்
  வாசிப்பை சுவாசிப்பாய் வைத்திருக்கும் தங்களைப் போன்றோர்களின் வழிகாட்டுதல் மிக உதவியாக உள்ளது எனக்கு. மிக அழகாக படித்ததைத் தொகுத்து ஒவ்வொரு தலைப்பிலும் தனித்தனியாக ஆய்ந்து விளக்கிய விதம் ரசிக்க வைத்தது. நான் அவ்வப்போது படிக்கும் பழக்கத்தை இப்போது தொடர்ந்திருக்கிறேன். அவசியம் பார்க்கிறேன். தொடருங்கள். பகிர்வுக்கு நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 17. அனைத்தும் படித்தறிந்தேன்.
  மிக்க நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 18. சில சமயங்களில் கணையாழி வாங்கி படித்ததுண்டு.... வெகுஜன பத்திரிகைகளே தில்லியில் கிடைப்பது கடினம் - இதில் கணையாழி எங்கே! :)

  த.ம. 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ்ழகத்திற்கு வெளியே வாழும் பலரும் இக் கருத்தை தெரிவித்திருக்கிறார்கள் நன்றி வெங்கட்

   நீக்கு
 19. இதுவரை படித்ததில்லை.. ஒருமுறை முயற்சிக்கிறேன்..நன்றி பகிர்வுக்கு..

  பதிலளிநீக்கு

 20. இலக்கிய தாகம் இல்லாத நாட்களில் அந்தப் புத்தகங்களை கண்ணால் கூட சீண்டுவதில்லை. தற்போது படிக்கவேண்டும் என்கிற ஆவல் மேலோங்கியிருக்க இதுமாதிரி புத்தகங்கள் கண்ணில் படுவதில்லை. ஊருக்கு வந்தால் நிறைய வாங்கிவரலாம் என்றிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் எப்போதோ ஓரிருமுறை கன்னிமாரா நூலகத்தில் கணையாழி படித்திருக்கிறேன். அதன் பிறகு இப்போதுதான் படிக்கிறேன
   நன்றி மணிமாறன். விரும்பும்போது வாங்கிப் படித்தால் போதுமானது

   நீக்கு
 21. நிறையப் புத்தகங்களை வாசிக்கும் ஆர்வம் மிகுந்தவர் என்பது தங்களின்
  ஆக்கத்தினூடாக உணர முடிகிறது சகோதரா .படிக்கின்ற வயதில் வாசிப்பதில் இருந்த
  ஆவல் வெளிநாட்டிற்கு வந்த பின் ஏனோ தானோ என்றாகிவிட்டது எங்கள்
  நிலை. இதற்கு ஓய்வின்மையும் ஒரு காரணமாகி விட்டது .வெளி நாடுகளில்
  புத்தகங்களைப் பெற்றுக் கொள்வதும் அவ்வளவு எளிதல்ல .தாங்கள் கொடுத்த
  தகவல்களைப் பார்க்கும் போது மீண்டும் இது போன்ற புத்தகங்களை வாங்கிப்
  படிக்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்துள்ளது .சிறப்பான பகிர்வு .பகிர்ந்து
  கொண்டமைக்கு உங்களுக்கு என் நன்றி கலந்த வாழ்த்துக்கள் சகோதரா .

  பதிலளிநீக்கு
 22. கணையாழியின் நீண்டநாள் வாசகன் நான். ஏ4 வடிவத்தில் வந்ததில் இருந்து, அதில் பாதியான வடிவம்... இடையில் நின்றுபோகுமுன் -இப்போது திரைப்படக் கவிஞராகப் புகழ்பெற்றிருக்கும்- யுகபாரதி இணையாசிரியராக இருந்தபோது அவரது கவிதையைப் பாராட்டிப் பேசியதுண்டு. சுஜாதா எழுதிய கடைசிப்பக்கங்களில் ஒன்றில் நான் ஓசூரில் அவருடன் பேசிய -சங்க இலக்கியம் பற்றிய கூட்டத்தைப் பற்றி- “நகைச்சுவை ததும்ப ஒரு தமிழாசிரியர் பேசியதாக“ என்பெயர் குறிப்பிட்டு எழுதியதும், பின்னர் எனது கட்டுரை ஒன்று கணையாழியில் வெளிவந்ததும், அதை “தமிழம் வலை“ நசன் அய்யா பாராட்டி எ டுத்துப் போட்டதும் நினைவில் நீங்கா... இப்போது மீண்டும் வரும் கணையாழி பற்றி நீங்கள் எழுதியது மகிழ்வளித்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா தாங்கள் இலக்கிய ஆர்வமும் அறிஞர் தொடர்புகளும் ஆச்சர்யப் பட வைக்கின்றன.. சிறுவயது முதல் இன்று வரை தமிழின்மீதான ஈடுபாடும் காலத்திற்கேற்றவாறு படைப்புகளை வழங்கும் திறனும் மெச்சத் தகுந்தன. சுஜாதா அவர்களின் பாராட்டைப் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. தங்கள் நட்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

   நீக்கு
 23. இலக்கியப் பூச்சாண்டி போல்
  கணையாழி இருந்த காலத்திலேயே
  சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னமேயே
  கணையாழி வாசகனாய் இருந்த காரணத்தால்
  தற்போதைய கணையாழியின் மாறுதலை
  நீங்கள் சிறப்பாகச் சொல்லிப்போனதைப்
  புரிந்து கொள்ளமுடிகிறது
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 24. சுஜாதாவின் கணையாழியின் கடைசிப் பக்கங்கள் இணையத்தில் படித்திருக்கின்றேன். ஆனால், கணையாழி இதழ் படித்ததில்லை. முயற்சிக்கிறேன்...
  பகிர்விற்கு நன்றி...!

  பதிலளிநீக்கு
 25. எங்கள் பேராசிரியர் வீட்டில் கணையாழி அவ்வப்போது வாசித்திருக்கிறேன்.
  இங்கு வந்த பிறகு பத்திரிக்கை வாசிப்பு குறைந்து விட்டது ஐயா.

  பதிலளிநீக்கு
 26. ஆய்வுக் கட்டுரையாய் கணையாழியை அலசினீர்கள்.
  நானும் தாயகம் வரும்போது வாங்கிப் படிக்கலாம்
  என்று எண்ண வைத்துவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 27. :) இலக்கிய சிற்றிதழ்கள் அதிகம் விற்கப்படாமல் இருப்பதற்கான காரணம் "அட நமக்கெல்லாம் இது புரியாது பா" என்கிற மனப்பாங்கு தான் !, என்ன சார் நீங்க ,சாதரண வாசகர் என்று உங்களை குறிப்பிட்டுக்கொள்கிறீர்கள் ..!. ( நான் நம்ப மாட்டேன்:) ) ,எங்கள் ஊர் நூலகத்தில் தீராநதி,புத்தகம் பேசுது,உயிர்மை ,மஞ்சரி போன்ற இதழ்களை புரட்டியிருக்கிறேன்,இப்போது ,சில சிற்றிதழ்கள் இணையத்திலேயே கிடைக்கின்றன !... இலக்கியப் பத்திரிக்கை நடத்தி புகழ் பெற முடியும், பணம் பெற முடியாது என்று "தென்றல்" என்ற பெயரில் தான் நடத்திய இலக்கியப் பத்திரிகையைப் பற்றி தனது சுய சரிதையில் புலம்பியிருக்கிறார் கவியரசர் ! .

  பதிலளிநீக்கு
 28. நான் இதுவரையில் கணையாழி வாசித்ததில்லை, சுஜாதாவின் கடைசிப்பக்கங்கள் வாசித்திருக்கிறேன் !.,கணையாழி அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சார் !

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895