என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

புத்தகம் படிப்பவர்கள்தான் அறிவாளிகளா?

   
  புத்தகம் படிப்பவர்கள் சிலர் தங்களை அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்வது உண்டு. படிப்பவர்களுக்கே இப்படி என்றால் எழுதுபவர்கள் பற்றிக் கேட்க வேண்டாம். புத்தகம் படிப்பதும்  அதிக தகவல்களை தெரிந்துவைத்துக் கொள்வதுதான் சிறந்து அல்ல. புத்தகம் வாசிப்பது மட்டும்தான்  அறிவாளிகளின் அடையாளம் என்று சொல்ல முடியாது. வாசிக்கும் வழக்கம் இல்லாதவர்களை குறைத்து மதிப்பிடவும் கூடாது.

    உண்மையில் அறிவாளிகள் புத்தகத்தை படிப்பதற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். புத்திசாலிகள் அதை தூங்குவதற்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்

   மிகப் பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இப்படித்தான் சொல்கிறார்கள். இப்போது புத்தகம் வாங்கும் எண்ணமும்  படிக்கும்  பழக்கம் குறைந்துவிட்டது என்று. அவர்களே  இப்போது கண்டவனெல்லாம் பல் துலக்குவது முதல் பாத்ரூம் போவதுவரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.. புகழ் பெற்ற படைப்பாளர்கள் எல்லாம் படிப்பவர்கள் எண்ணிக்கை கூட வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர படைப்பவர் எண்ணிக்கை அதிகரிப்பதை விரும்புவதில்லை

   எல்லோருக்குமே  புத்தக வாசிப்பு பிடிக்கும் என்று கூற முடியாது. பள்ளிகளில் ஆண்டு விழாக்களில் புத்தக வாசிப்பை வளர்க்கிறோம் என்ற பெயரில்  பரிசு பெற்றவர்கள் அனைவருக்கும் புத்தகம் பரிசாக வழங்குவதை பார்த்திருக்கிறேன்.அதுவும் வழங்கப்படும் புத்தகங்கள் சுவையான கதைகளாக இல்லாமல் அறிவுரை சொல்பவையாகவே இருக்கும்.  அந்தப் புத்தகங்கள் படிக்கப் படாமலேயே அலமாரிகளில் அமைதியாக உறங்கிக்  கிடக்கும். அடுத்த சில ஆண்டுகளில் இடத்தை அடைத்துக் கொள்கிறது என்று சொல்லி பழைய பேப்பர்காரனிடம் தஞ்சம் அடைவதுண்டு. என்னைப் பொருத்தவரை விரும்பினால் தவிர புத்தகம் பரிசாக வழங்குவதை தவிர்க்க வேண்டும்.புத்தகங்கள் அறிவை வளர்க்கும் புத்தகங்கள் என்ற ரீதியிலேயே வழங்கப்படுகிறது. ஆனால் படிக்கப் படாமல் பயனற்றுக் கிடப்பதால் புத்தகங்கள் என்றாலே பயனற்றவை என்ற எண்ணம் சிறு வயதிலேயே ஏற்பட வாய்ப்பு உண்டு.

   தொடக்கத்தில் பொழுதுபோக்குக்காகத்தான்  புத்தக வாசிப்பு தொடங்குகிறது. என்றாலும் பின்னர் வாசிப்புக் களம் விரிவடைகிறது. சிறுவயதில் சிறுவர் கதைகளில் ஆரம்பித்து பின்னர் கவிதை நாவல், சிறுகதைகளில் ஆர்வம் ஏற்பட்டு வரலாறு அரசியல் சமூகம் சார்ந்த கட்டுரைகள் என்று வாசிப்புப் பயணம் தொடர்கிறது.  கவிதைகள் மீதான காதல் ஒரு காலகட்டத்தில் மனதை ஆக்கிரமிக்கிறது.  ஜனரஞ்சகமான எழுத்தை ரசிக்கும் வாசகர்களில் ஒரு பகுதியினர்  பின்னர் அதையும் தாண்டி எழுத்தில் வேறு பரிமாணங்களை எதிர்பார்க்கிறார்கள்..அதைத்தான் இலக்கியம் என்றும் கருதுகிறார்கள். அத்தகைய   படைப்புகளை இயற்றுபவனே சிறந்தவன் என்ற எண்ணத்தையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். .அதன் விளைவு வாசகனை படைப்பாளியாகத் தூண்டுகிறது. உண்மையில் யார் உயர்ந்தவர்கள்? வாசகர்களா? எழுத்தாளர்களா? என்றால் வாசகர்கள் என்று உறுதிபடக் கூற முடியும். வாசகன் எழுத்தாளனை நிராகரிக்க முடியும். எழுத்தாளன் வாசகனை நிராகரிக்க முடியாது.

  முன்பெல்லாம் வாசகன் எழுத்தாளனாக மாறுவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்யவேண்டும். பத்திரிகைகளுக்கு  அனுப்பப்படும் படைப்புகள்  நிராகரிக்கப்படும்போது அவன் எழுத்தாள ஆசை தகர்ந்து போகிறது. பிரசுரத்தை பார்க்காத எழுத்து பிரசவத்தை பார்க்காத தாயைப் போல ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

   ஆனால் இன்று  அத்தனை பேருக்கும்  இணையம் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. வாசகனாகவே வாழ்நாள் முழுதும் வாழவேண்டிய அவசியம் இப்போது இல்லை. தனக்கு தோன்றியதை எழுதலாம். எழுதியதற்குத் தக்கவாறு வரவேற்பும் அங்கீகாரமும்  கிடைக்கிறது.  வாசகர் வட்டம் உருவாகிறது. இதை புளியங்கொம்பாய் பிடித்துக் கொண்டு உயரத்தை தொடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை  ஒரு மாற்றத்தின் அறிகுறியாகக் கொள்ள முடியும்.அதை மெய்ப்பிக்கும் வகையில் பல பத்திரிகைகளும் வலையில் இருந்து எடுத்து  சில பக்கங்களை நிரப்புகின்றன.

  வலைப் பதிவுகளில் எண்ணங்களைப் பகிரலாம். காராசாரமாக விமர்சிக்கலாம். விரிவாக விவாதிக்கலாம். எத்தகைய எழுத்தாளரின் கருத்துக்களுக்கும் எதிர் வாதம் செய்யலாம். எத்தகைய பிரபலமாக இருந்தாலும் வாசகனுக்கு அஞ்சவேண்டிய நிலையை இணையம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. முன்பு போல வாசகனை ஏமாற்ற முடியாது.
   இணையத்தில் எழுதும் பலரும் ஒரு கட்டத்தில் தனது எழுத்துக்களை  புத்தக வடிவில் பார்க்கவே விரும்புகிறார்கள். தமிழ் இணையப் பயன்பாடு அதிகரித்திருக்கிறது என்றாலும் அதைப் பயன்படுத்தாதவர் எண்ணிக்கை (கணினியும் இணைய இணைப்பு இருந்தும்) அதை விட அதிகம். அவர்களை அடைவதற்கு புத்தகமே ஒரு சிறந்த வாகனம் என்று கருதி இணைய எழுத்தாளர்கள் புத்தகம் வெளியிட விரும்புகிறார்கள். இணையப் பிரபலம் அவர்களுக்கு கை கொடுக்கிறது.

  இணைய எழுத்தாளர்களுக்கு  புத்தகக் கண்காட்சி ஒரு வரப்பிரசாதம்தான்.  புத்தகக் கண்காட்சியில் எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை இணைய எழுத்தாளர்களின் புத்தகங்களை அதிகமாகக் காண முடிந்தது. வாங்கிய புத்தகங்களில் படித்த விஷயங்கள் பதிவுகளாவதும் பதிவுகள்  மீண்டும் புத்தகங்களாவதும் நீர் ஆவியாகி மீண்டும் மழையாக பொழிவது போல ஒரு சுழற்சி என்பதை சமீப புத்தகக் கண்காட்சியில் காண முடிந்தது.  அதுவும் இவ்வருடக் கண்காட்சியில் இணைய எழுத்தளர்களின் புத்தங்களின் விற்பனை குறிப்பிடத்தக்க இருப்பதாக சொல்கிறார்கள். சமீப காலமாக தினம் ஒரு பதிவு எழுதி வரும் "நிசப்தம்" வலைப்பூ  வா. மணிகண்டன் தனது புத்தகம் 800 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கிறார். இவை மற்ற வலைப்பதிவு எழுத்தாளர்களுக்கு உற்சாகமூட்டும் விஷயம்  என்றாலும் புத்தகக்  கண்காட்சியில் இலட்சக்கணக்கான புத்தகங்கள் குவிந்துவைத்திருப்பதை பார்த்தால் இந்தக் கடலில் நமது பெருங்காய மணம் உணரப்பபடுமா என்ற  ஐயம் ஏற்பட்டு புத்தகம் வெளியிடும் ஆசையே போய் விடும் என்பதும் உண்மை. பல்லாயிரம் படைப்புகள் சுவைப்பாரற்றுக் கிடப்பதையும் காண முடிகிறது
  புத்தகக் கண்காட்சிகள் புத்தகங்கள் மீதான தற்காலிக மோகத்தை ஏற்படுத்துகின்றன. அந்த மோகத்தை சில பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் புத்திசாலித் தனமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவற்றில் இணைய எழுத்தாளர்களும் அடங்குவர்.
பலரும் ஒப்புக் கொண்ட விஷயம் கடந்த முறை வாங்கிய  புத்தகங்களையே இன்னும் படிக்கவில்லை என்று. அதற்கு காரணம் தேர்ந்தெடுத்த புத்தகங்களே.  பலரும் படிக்க முயற்சி செய்திருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை. வெறும் சுவாரசியமான புத்தகங்களை வாசிப்பது உயர்தர வாசகனுக்கு உகந்தது அல்ல என்று நினைத்து தரமான எழுத்துக்கள் என்று நம்பும் புத்தகங்களை வாங்குவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும்

     புத்தகம் வாங்கிப் படித்துதான் தனது உலக  அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும் அல்லது பொழுது போக்க வேண்டும் என்ற சூழல் இப்போது இல்லை. தகவல் தொடர்பு சாதனங்கள்  போகிற போக்கில் தகவல்களை மனதில் பதியவைத்து சென்று விடுகிறது. கைபேசிகளும் கணினியும் புத்தகங்களின் இடத்தை  கொஞ்சம்  அபகரித்துக் கொண்டிருக்கின்றன. கைபேசி நம்மிடம் ஒட்டுண்ணியாகவும் நாம் கைபேசியின் சாருண்ணியாகவும் வாழும் சூழலை ஏற்படுத்தி விட்டது தொழில்நுட்ப மாற்றங்கள்.  இனி வரும் காலங்களில்  சமுதாய மாற்றங்களில் புத்தகங்களின் பங்கு குறைவாகவே இருக்கும். புத்தங்கங்களால் மட்டும்தான் தான்  மொழியையும் பண்பாட்டையும் காக்கமுடியும் என்பதிலும் மாற்றுக்கருத்துடையவர்கள் உண்டு. எத்தனையோ நூற்றாண்டுகளாக படித்தறியாத மக்களை சார்ந்தும் கடந்தும்தான் மொழியும் இலக்கியங்களும் வளமை பெற்றிருக்கின்றன. புத்தகங்களின் ஆளுமை எவ்வளவு காலத்திற்கு தொடரும் என்பதை காலமே முடிவு செய்யும். ஆனால் புத்தக வாசிப்பு ஒரு சிலருக்காவது மகிழ்ச்சி தரக்கூடியாக எப்போதும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

*********************************************************************************************************

கொசுறு: இம்முறை  புத்தகக் கண்காட்சியில் 6 புத்தகங்கள் மட்டுமே வாங்கினேன். அதுவே பட்ஜெட்டை தாண்டி விட்டது. இத்தனைக்கும் திடம் கொண்டு போராடு சீனு நடத்திய காதல் கடிதப் போட்டியில்( படிக்காதவர்கள் படிக்கலாம் ( என்னைக் கவுத்திட்டயே சரோ) பரிசாகக் கிடைத்த டிஸ்கவரி பேலசின் பரிசுக் கூப்பன் இன்னும் பயன்படுத்தப் படாமல் இருந்தது. கிட்டத்தட்ட  5 மாதங்கள்  ஆகிவிட்டதால் டிஸ்கவரி பேலஸ் வேடியப்பனிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பின் புத்தகம் வாங்க உபயோகப் படுத்திக் கொண்டேன். பலரும் புத்தகக் கண்காட்சி பற்றி எழுதிவிட்டாதால் இத்துடன் நிறுத்திக் கொள்வதே உசிதம் 
நன்றி !

******************************************************************************************
படித்து விட்டீர்களா?
கந்தா என்கிற கந்தசாமி