என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

புத்தகம் படிப்பவர்கள்தான் அறிவாளிகளா?

   
  புத்தகம் படிப்பவர்கள் சிலர் தங்களை அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்வது உண்டு. படிப்பவர்களுக்கே இப்படி என்றால் எழுதுபவர்கள் பற்றிக் கேட்க வேண்டாம். புத்தகம் படிப்பதும்  அதிக தகவல்களை தெரிந்துவைத்துக் கொள்வதுதான் சிறந்து அல்ல. புத்தகம் வாசிப்பது மட்டும்தான்  அறிவாளிகளின் அடையாளம் என்று சொல்ல முடியாது. வாசிக்கும் வழக்கம் இல்லாதவர்களை குறைத்து மதிப்பிடவும் கூடாது.

    உண்மையில் அறிவாளிகள் புத்தகத்தை படிப்பதற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். புத்திசாலிகள் அதை தூங்குவதற்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்

   மிகப் பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இப்படித்தான் சொல்கிறார்கள். இப்போது புத்தகம் வாங்கும் எண்ணமும்  படிக்கும்  பழக்கம் குறைந்துவிட்டது என்று. அவர்களே  இப்போது கண்டவனெல்லாம் பல் துலக்குவது முதல் பாத்ரூம் போவதுவரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.. புகழ் பெற்ற படைப்பாளர்கள் எல்லாம் படிப்பவர்கள் எண்ணிக்கை கூட வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர படைப்பவர் எண்ணிக்கை அதிகரிப்பதை விரும்புவதில்லை

   எல்லோருக்குமே  புத்தக வாசிப்பு பிடிக்கும் என்று கூற முடியாது. பள்ளிகளில் ஆண்டு விழாக்களில் புத்தக வாசிப்பை வளர்க்கிறோம் என்ற பெயரில்  பரிசு பெற்றவர்கள் அனைவருக்கும் புத்தகம் பரிசாக வழங்குவதை பார்த்திருக்கிறேன்.அதுவும் வழங்கப்படும் புத்தகங்கள் சுவையான கதைகளாக இல்லாமல் அறிவுரை சொல்பவையாகவே இருக்கும்.  அந்தப் புத்தகங்கள் படிக்கப் படாமலேயே அலமாரிகளில் அமைதியாக உறங்கிக்  கிடக்கும். அடுத்த சில ஆண்டுகளில் இடத்தை அடைத்துக் கொள்கிறது என்று சொல்லி பழைய பேப்பர்காரனிடம் தஞ்சம் அடைவதுண்டு. என்னைப் பொருத்தவரை விரும்பினால் தவிர புத்தகம் பரிசாக வழங்குவதை தவிர்க்க வேண்டும்.புத்தகங்கள் அறிவை வளர்க்கும் புத்தகங்கள் என்ற ரீதியிலேயே வழங்கப்படுகிறது. ஆனால் படிக்கப் படாமல் பயனற்றுக் கிடப்பதால் புத்தகங்கள் என்றாலே பயனற்றவை என்ற எண்ணம் சிறு வயதிலேயே ஏற்பட வாய்ப்பு உண்டு.

   தொடக்கத்தில் பொழுதுபோக்குக்காகத்தான்  புத்தக வாசிப்பு தொடங்குகிறது. என்றாலும் பின்னர் வாசிப்புக் களம் விரிவடைகிறது. சிறுவயதில் சிறுவர் கதைகளில் ஆரம்பித்து பின்னர் கவிதை நாவல், சிறுகதைகளில் ஆர்வம் ஏற்பட்டு வரலாறு அரசியல் சமூகம் சார்ந்த கட்டுரைகள் என்று வாசிப்புப் பயணம் தொடர்கிறது.  கவிதைகள் மீதான காதல் ஒரு காலகட்டத்தில் மனதை ஆக்கிரமிக்கிறது.  ஜனரஞ்சகமான எழுத்தை ரசிக்கும் வாசகர்களில் ஒரு பகுதியினர்  பின்னர் அதையும் தாண்டி எழுத்தில் வேறு பரிமாணங்களை எதிர்பார்க்கிறார்கள்..அதைத்தான் இலக்கியம் என்றும் கருதுகிறார்கள். அத்தகைய   படைப்புகளை இயற்றுபவனே சிறந்தவன் என்ற எண்ணத்தையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். .அதன் விளைவு வாசகனை படைப்பாளியாகத் தூண்டுகிறது. உண்மையில் யார் உயர்ந்தவர்கள்? வாசகர்களா? எழுத்தாளர்களா? என்றால் வாசகர்கள் என்று உறுதிபடக் கூற முடியும். வாசகன் எழுத்தாளனை நிராகரிக்க முடியும். எழுத்தாளன் வாசகனை நிராகரிக்க முடியாது.

  முன்பெல்லாம் வாசகன் எழுத்தாளனாக மாறுவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்யவேண்டும். பத்திரிகைகளுக்கு  அனுப்பப்படும் படைப்புகள்  நிராகரிக்கப்படும்போது அவன் எழுத்தாள ஆசை தகர்ந்து போகிறது. பிரசுரத்தை பார்க்காத எழுத்து பிரசவத்தை பார்க்காத தாயைப் போல ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

   ஆனால் இன்று  அத்தனை பேருக்கும்  இணையம் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. வாசகனாகவே வாழ்நாள் முழுதும் வாழவேண்டிய அவசியம் இப்போது இல்லை. தனக்கு தோன்றியதை எழுதலாம். எழுதியதற்குத் தக்கவாறு வரவேற்பும் அங்கீகாரமும்  கிடைக்கிறது.  வாசகர் வட்டம் உருவாகிறது. இதை புளியங்கொம்பாய் பிடித்துக் கொண்டு உயரத்தை தொடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை  ஒரு மாற்றத்தின் அறிகுறியாகக் கொள்ள முடியும்.அதை மெய்ப்பிக்கும் வகையில் பல பத்திரிகைகளும் வலையில் இருந்து எடுத்து  சில பக்கங்களை நிரப்புகின்றன.

  வலைப் பதிவுகளில் எண்ணங்களைப் பகிரலாம். காராசாரமாக விமர்சிக்கலாம். விரிவாக விவாதிக்கலாம். எத்தகைய எழுத்தாளரின் கருத்துக்களுக்கும் எதிர் வாதம் செய்யலாம். எத்தகைய பிரபலமாக இருந்தாலும் வாசகனுக்கு அஞ்சவேண்டிய நிலையை இணையம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. முன்பு போல வாசகனை ஏமாற்ற முடியாது.
   இணையத்தில் எழுதும் பலரும் ஒரு கட்டத்தில் தனது எழுத்துக்களை  புத்தக வடிவில் பார்க்கவே விரும்புகிறார்கள். தமிழ் இணையப் பயன்பாடு அதிகரித்திருக்கிறது என்றாலும் அதைப் பயன்படுத்தாதவர் எண்ணிக்கை (கணினியும் இணைய இணைப்பு இருந்தும்) அதை விட அதிகம். அவர்களை அடைவதற்கு புத்தகமே ஒரு சிறந்த வாகனம் என்று கருதி இணைய எழுத்தாளர்கள் புத்தகம் வெளியிட விரும்புகிறார்கள். இணையப் பிரபலம் அவர்களுக்கு கை கொடுக்கிறது.

  இணைய எழுத்தாளர்களுக்கு  புத்தகக் கண்காட்சி ஒரு வரப்பிரசாதம்தான்.  புத்தகக் கண்காட்சியில் எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை இணைய எழுத்தாளர்களின் புத்தகங்களை அதிகமாகக் காண முடிந்தது. வாங்கிய புத்தகங்களில் படித்த விஷயங்கள் பதிவுகளாவதும் பதிவுகள்  மீண்டும் புத்தகங்களாவதும் நீர் ஆவியாகி மீண்டும் மழையாக பொழிவது போல ஒரு சுழற்சி என்பதை சமீப புத்தகக் கண்காட்சியில் காண முடிந்தது.  அதுவும் இவ்வருடக் கண்காட்சியில் இணைய எழுத்தளர்களின் புத்தங்களின் விற்பனை குறிப்பிடத்தக்க இருப்பதாக சொல்கிறார்கள். சமீப காலமாக தினம் ஒரு பதிவு எழுதி வரும் "நிசப்தம்" வலைப்பூ  வா. மணிகண்டன் தனது புத்தகம் 800 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கிறார். இவை மற்ற வலைப்பதிவு எழுத்தாளர்களுக்கு உற்சாகமூட்டும் விஷயம்  என்றாலும் புத்தகக்  கண்காட்சியில் இலட்சக்கணக்கான புத்தகங்கள் குவிந்துவைத்திருப்பதை பார்த்தால் இந்தக் கடலில் நமது பெருங்காய மணம் உணரப்பபடுமா என்ற  ஐயம் ஏற்பட்டு புத்தகம் வெளியிடும் ஆசையே போய் விடும் என்பதும் உண்மை. பல்லாயிரம் படைப்புகள் சுவைப்பாரற்றுக் கிடப்பதையும் காண முடிகிறது
  புத்தகக் கண்காட்சிகள் புத்தகங்கள் மீதான தற்காலிக மோகத்தை ஏற்படுத்துகின்றன. அந்த மோகத்தை சில பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் புத்திசாலித் தனமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவற்றில் இணைய எழுத்தாளர்களும் அடங்குவர்.
பலரும் ஒப்புக் கொண்ட விஷயம் கடந்த முறை வாங்கிய  புத்தகங்களையே இன்னும் படிக்கவில்லை என்று. அதற்கு காரணம் தேர்ந்தெடுத்த புத்தகங்களே.  பலரும் படிக்க முயற்சி செய்திருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை. வெறும் சுவாரசியமான புத்தகங்களை வாசிப்பது உயர்தர வாசகனுக்கு உகந்தது அல்ல என்று நினைத்து தரமான எழுத்துக்கள் என்று நம்பும் புத்தகங்களை வாங்குவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும்

     புத்தகம் வாங்கிப் படித்துதான் தனது உலக  அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும் அல்லது பொழுது போக்க வேண்டும் என்ற சூழல் இப்போது இல்லை. தகவல் தொடர்பு சாதனங்கள்  போகிற போக்கில் தகவல்களை மனதில் பதியவைத்து சென்று விடுகிறது. கைபேசிகளும் கணினியும் புத்தகங்களின் இடத்தை  கொஞ்சம்  அபகரித்துக் கொண்டிருக்கின்றன. கைபேசி நம்மிடம் ஒட்டுண்ணியாகவும் நாம் கைபேசியின் சாருண்ணியாகவும் வாழும் சூழலை ஏற்படுத்தி விட்டது தொழில்நுட்ப மாற்றங்கள்.  இனி வரும் காலங்களில்  சமுதாய மாற்றங்களில் புத்தகங்களின் பங்கு குறைவாகவே இருக்கும். புத்தங்கங்களால் மட்டும்தான் தான்  மொழியையும் பண்பாட்டையும் காக்கமுடியும் என்பதிலும் மாற்றுக்கருத்துடையவர்கள் உண்டு. எத்தனையோ நூற்றாண்டுகளாக படித்தறியாத மக்களை சார்ந்தும் கடந்தும்தான் மொழியும் இலக்கியங்களும் வளமை பெற்றிருக்கின்றன. புத்தகங்களின் ஆளுமை எவ்வளவு காலத்திற்கு தொடரும் என்பதை காலமே முடிவு செய்யும். ஆனால் புத்தக வாசிப்பு ஒரு சிலருக்காவது மகிழ்ச்சி தரக்கூடியாக எப்போதும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

*********************************************************************************************************

கொசுறு: இம்முறை  புத்தகக் கண்காட்சியில் 6 புத்தகங்கள் மட்டுமே வாங்கினேன். அதுவே பட்ஜெட்டை தாண்டி விட்டது. இத்தனைக்கும் திடம் கொண்டு போராடு சீனு நடத்திய காதல் கடிதப் போட்டியில்( படிக்காதவர்கள் படிக்கலாம் ( என்னைக் கவுத்திட்டயே சரோ) பரிசாகக் கிடைத்த டிஸ்கவரி பேலசின் பரிசுக் கூப்பன் இன்னும் பயன்படுத்தப் படாமல் இருந்தது. கிட்டத்தட்ட  5 மாதங்கள்  ஆகிவிட்டதால் டிஸ்கவரி பேலஸ் வேடியப்பனிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பின் புத்தகம் வாங்க உபயோகப் படுத்திக் கொண்டேன். பலரும் புத்தகக் கண்காட்சி பற்றி எழுதிவிட்டாதால் இத்துடன் நிறுத்திக் கொள்வதே உசிதம் 
நன்றி !

******************************************************************************************
படித்து விட்டீர்களா?
கந்தா என்கிற கந்தசாமி 


44 கருத்துகள்:

  1. நல்ல நல்ல உதாரணங்கள் தந்து, சொல்ல வந்த கருத்துகளை ஆழமாகப் பதிய வைத்திருக்கிறீர்கள்.
    மெலிதான நகைச்சுவையும் இழையோடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பரமசிவம் ஐயா!
      தங்கள் வலைப் பதிவின் கம்மென்ட் பாக்சை திறந்து வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

      நீக்கு
  2. படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு ,படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு ...பாடலை நினைவுப் படுத்திய உங்களின் சிந்தனை வெகு எதார்த்தம் !
    த ம 2

    பதிலளிநீக்கு
  3. // புத்தகம் வாசிப்பது மட்டும்தான் அறிவாளிகளின் அடையாளம் என்று சொல்ல முடியாது. வாசிக்கும் வழக்கம் இல்லாதவர்களை குறைத்து மதிப்பிடவும் கூடாது.//

    உண்மையான வரிகள்...

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான்... வாசிப்பு என்பது இப்போது குறைந்து இருக்கிறது.
    பதிவர்களின் புத்தகங்கள் வெளியாவதில் சந்தோஷம்தான்... ஆனால் நீங்கள் சொல்வது போல் பெருங்காய மனம் இருக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  5. முரளி,

    ஹி...ஹி யாரோ புதுசா புத்தகம் போட்டவர் உங்களை உசுப்பிட்டாப்போல தோன்றுது அவ்வ்!

    # புத்தகம் எழுதுனவன் அறிவாளியா/புத்திசாலியா இல்லை அதை எல்லாம் படிச்சவனா என்பதெல்லாம் நமக்கு பொருட்டே அல்ல ,நாமளும் அறிவாளி/புத்திசாலினு நம்பிக்கை இருக்கனும்! அது போதும்!

    #// இணைய எழுத்தாளர்களுக்கு புத்தகக் கண்காட்சி ஒரு வரப்பிரசாதம்தான்.//

    அதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது, ஒன்னு கை காச போட்டு புத்தகம் போடணும் - உழைப்பு + பண விரயம்

    இல்லைனா கொஞ்சம் பிரபலம்,ஆனால் காசே இல்லாம சும்மா எழுதிக்கொடுத்து புத்தகமா வர வைக்கணும்- உழைப்பு விரயம்!

    பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஒரே டெம்ப்ளேட்டில் எழுதி பெர்செண்டேஜ்ல "எழுத்துக்கூலி" வாங்குற பத்திர எழுத்தர் விட தமிழ் நாட்டில் எந்த எழுத்தருக்கும் அதிக "பலன்" கிடைக்காது அவ்வ்!

    எனவே தமிழ்நாட்டில எழுதினவனும் சரி அதை காசு கொடுத்து வாங்கி படிச்சவனும் சரி அறிவாளியே இல்லை ,ஹி...ஹி ஆனால் என்னை போல ஓசில படிக்கிறவங்க கண்டிப்பா அறிவாளி :-))

    # தினம் இணையத்தில் ஏகப்பட்ட நேரம் விரயம் செய்து எழுதி "800" புத்தகம் விற்க அரும்பாடு படுவதால் யாருக்கு என்ன பலன்? எழுதினவனுக்கு " பஸ் செலவுக்கு" கூட ராயல்டி கொடுக்க மாட்டாங்க, அச்சுல பேரு பார்க்கணும்னு மோகத்தில எழுதி வைப்பது/கொடுப்பது தான் :-))

    எவனோ குனிய எவனோ சவாரி செய்ய என்று இணைய எழுத்தாளர்கள் "பேரு தெரிய வைக்க" என்றே புத்தகம் வெளியிடுகிறார்கள்,அதனைப்பார்த்து மற்றவர்களும் ஓடுவது தவறான முன்னுதாரணம் ஆகும்.

    ஒரு பக்கம் டிடிபி செய்ய ஆகும் கூலி அளவுக்காவது கணக்கு பண்ணி காசு கொடுத்தாங்க என எந்த "இணைய எழுத்தாளரும்" சொல்லிக்க முன் வராதப்போது , 800 பிரதி வித்துச்சுனு சொல்லுற வீம்புக்கு வெங்காயம் விக்குற இணைய எழுத்தாளர்கள் வச்சு எல்லாம் "எழுத்தாளுமை,அறிவுடைமை" என கணிக்க முயல்வது தேவை இல்லாதது!

    # புத்தகம் வெளியிடுவது என்பதெல்லாம் கம்ப சூத்திரம் என யாரோ மாயை உருவாக்கி வச்சிருக்காங்க ,கையில காசு வாயில தோசை என்பது போல புத்தகம் வெளியிடலாம், காசு தான் தேவை,இல்லைனா நாமளா உழைச்சு எழுதிக்கொடுத்து யாருக்கோ வருமானம் வர எழுதிக்கொடுக்கணும் அவ்வ்!

    அதுக்கு இணையத்தில செலவேயில்லாமல்(இணைய இணைப்பு செலவு இருக்கு)சும்மா எழுதிட்டு இருக்கவன் எவ்ளோ மேல்!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே கூறியிருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை... சில நேரங்களில் அறியப்படுவதற்காக புத்தகம் வெளியிடுவது தேவையாகிப்போகிறதே....

      நீக்கு
    2. உங்கள் பார்வை உண்மையானது
      நிதர்சனமாக வாழும் உங்களை வாழ்த்துகின்றேன்

      நீக்கு
    3. எனவே தமிழ்நாட்டில எழுதினவனும் சரி அதை காசு கொடுத்து வாங்கி படிச்சவனும் சரி அறிவாளியே இல்லை ,ஹி...ஹி ஆனால் என்னை போல ஓசில படிக்கிறவங்க கண்டிப்பா அறிவாளி :-))//மிடில
      இப்போதிருக்கும் பிரபல எழுத்தாளர்கள் பலர் வேறு இடங்களில் தொழில் புரிந்துகொண்டு தான் எழுதி வருகிறார்கள்.10% உண்மையில் எதற்கும் காணாது தான்.

      நீக்கு
  6. சகோ..!
    நல்ல விதமாகவும் ஆழமாகவும் சொல்லீடீங்க...

    பதிலளிநீக்கு
  7. படிப்பவர்கள், படிப்பவர்கள் பற்றி சொல்லியிருப்பது நன்று. அறிவை வளர்த்துக் கொள்கிறோமோ இல்லையோ பொழுது போகிறது. பத்திரிகைகளின் கருனைப்பார்வைக்குக் காத்திராமல் உடனுக்குடன் எழுதி அதற்கான பதில்களையும் உடனுக்குடன் பார்ப்பது இணையத்தின் பலம்தான். பத்திரிகையில் உங்கள் படைப்பு வெளியானால் கூட மறு வாரம் உங்கள் படைப்புப் பற்றி ஒரு கடிதமாவது அவர்கள் வெளியிட்டால் ஆச்சர்யமே! நிறையபேர் படித்திருப்பார்கள் அல்லது பார்த்திருப்பார்கள் என்ற ஆறுதல் மட்டுமே மிஞ்சும்!

    பதிலளிநீக்கு
  8. காலத்திற்கும்
    வாழ்வின் நிலைப்பாட்டுக்கும்
    பின்னே ஓடியோடி
    புத்தகம் வாசிக்கும் பழக்கமே நின்றுபோய்விட்டது நண்பரே...
    ஒரு நல்ல புத்தகத்தை படித்து முடிக்கையில்
    கிடைக்கும் மன அமைதி வேறு எதிலும் இல்லை...

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    முரளி(அண்ணா)

    புத்தகம் படிப்பவர்கள்தான் அறிவாளிகளா? ...... இப்படியான வினாவை கேட்டு என்னையும் கவுத்திட்டடிங்கலே
    அண்ணா.... வாசிப்பு என்பது... ஒரு மனிதனை பூரணத்துவப்படுத்தும்.... வாசிப்பதால் மொழி ஆளுமை... கற்பனா சக்தி திறன். என்ற பல அம்சங்கள் வளரும் என்பதே என்கருத்து.... அற்காக எல்லோருரையும் அறிவாளிகள் என்று சொல்லமுடியாது...
    ............................................................................................................................................................
    இந்த தலைப்பு ஒரு கடல் போன்றது... அண்ணா.. விரிவாக்கம் மிக குறுகிய கருத்தில் சொல்ல முடியாது....
    ------------------------------------------------------------------------------------------------------------------------------

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்

    த.ம 4வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  11. //முன்பெல்லாம் வாசகன் எழுத்தாளனாக மாறுவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்யவேண்டும். பத்திரிகைகளுக்கு அனுப்பப்படும் படைப்புகள் நிராகரிக்கப்படும்போது அவன் எழுத்தாள ஆசை தகர்ந்து போகிறது. பிரசுரத்தை பார்க்காத எழுத்து பிரசவத்தை பார்க்காத தாயைப் போல ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது//

    உண்மை தான் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி, அவற்றின் கடைக்கண் பார்வை பட்டு நம் எழுத்து கதி மோட்சம் அடைந்துவிடாத என ஏங்க வேண்டிய அவசியம் இன்று இல்லை. புத்தக வாசிப்பை பற்றி அர்த்தமுள்ளதாக இந்த அலசல் சிந்தனையை தூண்டியது!

    பதிலளிநீக்கு
  12. வாசிக்கும் வழக்கம் இல்லாதவர்களை குறைத்து மதிப்பிடவும் கூடாது.// என்னையும் ஆதரித்து எளிதியமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞர் சார்,

      எழுதியமை என்று எழுதனும் தமிழைத் தப்பு தப்பா எழுதிப் படுத்தாதீக.

      சிவஞானம்

      நீக்கு
  13. ஏற்கனவே எனது மின்னூல் பற்றிய பதிவில் நாசூக்காக சில வரிகளை மட்டும் எழுதியிருந்தேன்... இன்றைக்கு இத்தனை புத்தகம் வாங்கினேன் என்பது ஒரு பேசன்...! தம்பட்டம் கூட்டம் அதிகம்... ஜால்ரா கூட்டம் அதைவிட... படிப்பது முக்கியமில்லை... அதனால் நம்மிடையே ஒரு நல்ல மாற்றம் வந்தால் சிறப்பு... அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால் அதை விட சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணேன்...நம்ம வலைப்பதிவர் சந்திப்பில் வாங்கிய ஏழு புத்தகங்களில் இன்னும் ஒரு புத்தகத்தைக்கூட படிக்கவில்லை.......வயிற்றுப்பாட்டை பார்க்கவே நேரம் சரியாக இருக்கு

      நீக்கு
  14. புகழ் பெற்ற படைப்பாளர்கள் எல்லாம் படிப்பவர்கள் எண்ணிக்கை கூட வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர படைப்பவர் எண்ணிக்கை அதிகரிப்பதை விரும்புவதில்லை//

    இது சத்தியமான உண்மை, வைரமுத்து மீது இப்படி ஒரு பெரிய குற்றசாட்டு முன்பு வந்தது உண்டு.

    பதிலளிநீக்கு
  15. இணையத்தளங்கள் வந்தபிறகு சுத்தமாக புஸ்தகம் வாசிப்பு எனக்கு நின்று போனது என்பது உண்மை...

    ஆனால்...ரொம்பநாளைக்கு பிறகு நிலமெல்லாம் ரத்தம் என்ற முன்னூற்றி நாற்பது பக்கம் கொண்ட புஸ்தகம் வாசித்தேன்...!

    பதிலளிநீக்கு
  16. ///புத்தகம் படிப்பவர்கள்தான் அறிவாளிகளா? ///

    வாழ்க்கை புத்தகத்தை படிப்பவன் மட்டுமே அறிவாளி.

    பதிலளிநீக்கு
  17. புத்தகம் வாசிப்பது மட்டும்தான் அறிவாளிகளின் அடையாளம் என்று சொல்ல முடியாது. வாசிக்கும் வழக்கம் இல்லாதவர்களை குறைத்து மதிப்பிடவும் கூடாது.//

    நெத்தியில அடிச்சா மாதிரி சொல்லியிருக்கீங்க. அருமை.

    பதிலளிநீக்கு
  18. கற்க கசடற கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக.

    நல்ல புத்தகங்களை படிக்கலாம். குப்பை என்று பார்த்தால் தவிர்க்க முடியாதுதான், சாய்ஸ் நம் கையில்.

    பதிலளிநீக்கு
  19. தலைப்பை இப்படிப் போட்டு பயமுறுத்திட்டீங்களே முரளிதரன் .. ஏன்னா நான் அடுத்ததா ஒரு புத்தக விமர்சனம் தான் எழுதிக்கிட்டிருக்கேன்.. எல்லாரும் புத்தகக் கண்காட்சி குறித்து எழுதியிருந்தாலும் நீங்க வித்தியாசமான ஒரு பார்வையில் எழுதியிருக்கீங்க... சில முரண்பாடுகளும் உள்ளது.. மறைந்து கொண்டிருக்கும் மொழி நடை, குறிப்பிட்ட இடங்களின் பண்பாடு, நடைமுறை வாழ்க்கை குறித்த ஒரு தகவலாகவாவது புத்தகங்கள் இருக்குமல்லவா? வரலாறு முக்கியங்க....எத்தனையோ புத்தகங்கள் படிக்க ஆசைப்பட்டும் பட்ஜெட்டும், நேரமும் இடம் தராததால் தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கின்றது... ஏகப்பட்ட புத்தகங்கள் வெளியாகிறது நாம் தான் அன்னப்பறவையாய் மாற வேண்டும்

    பதிலளிநீக்கு
  20. இணையத்தில் எழுதி புகழ் பெறுவது என்பது மாயை. அதேபோல் புத்தகம் வெளியிட்டு பெயரும் புகழும் சம்பாதிப்பவர்களும் மிகக் குறைவு. மாயையின் பிடியில் கட்டுண்டவர்களே அதிகம். மற்றபடி அறிவாளியாக எழுதுவதோ வாசிப்பதோ மட்டும் போறாது பட்டறிவு என்று சொல்லப் படும் அனுபவமும் முக்கியம். பல விதமான கருத்துக் கோவையாக எழுதி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  21. நல்ல பதிவு முரளி அண்ணேன்....வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  22. தங்கள் ஆழ்ந்த சிந்தனையை அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.. நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  23. முரளியண்ணா,

    மற்ற மீடியாக்களின் தாக்கத்தால் புத்தகங்கள் வழக்கொழியும் என்ற உங்கள் வாதத்தை பனிவுடன் மறுதளிக்க விரும்புகிறேன். புத்தகம் என்றைக்கும் தன் இடத்தை இழக்காது.
    புத்தகத்தின் மான்புகள் கீழே

    1. படுத்துக் கொண்டே படிக்கலாம்.
    2, பிடித்த இடத்தை கோடிட்டு வைக்கலாம்
    3. ரயில் பயணங்களில் அறுவைகளை தவிர்க்க உதவும்
    4. புத்தக அலமாரி /ஷெல்ப் இருப்பதே வீட்டின் அழகைக் கூட்டும்
    5. படிக்கும் போது சார்ஜ் இறங்கி விடுமோ என்று கனணி / ஐபேட் போல பயப்பட வேண்டாம்.
    6. புதுப் புத்தகத்தும் பழைய புத்தகத்துக்கும் தனித்தனி வாசம் உண்டு. அதுவே படிப்பதை பரவசமாக்கும்.
    7.புத்தகம் ஒளித்திரை போல் கண்ணை ரிப்பேர் ஆக்காது.
    8.ஐபேடுகளில் புரட்டினால் இரண்டு மூன்று பக்கம் விறு விறு என்று ஒடும் ஆனால் புத்தகத்தின் பக்கத்தை , ஒட்டியிருக்கா ஒட்டியிருக்கா என்று பார்த்துத் திருப்புவதே அலாதியானது.
    7. பழைய வாரப்பத்திரிக்கைகளின் பைண்ட் படித்தால் அந்த காலகட்டத்தில் வந்த 32 -ம் பக்க மூலை, மிஸ்டர் எக்ஸ் போன்ற துனுக்குகள் கண்ணில் படும்.
    8.டவுன்லோடு மாதிரி இல்லாது எங்க கிடைக்கும் எங்க கிடைக்கும் என்று அழைந்து வாங்குவதே நமது படிப்பனுபவத்தை பல மடங்காக மாற்றும்.

    எல்லாத்துக்கும் மேலே புத்தகத்தை வைத்து படிக்கும் போதே அது மனதில் பதிகிறது.
    கனாக்டிகட் பலகலைக்கழகத்தில் 100 இளைஞர்களுக்கு புத்தகத்தையும் 100 இளைஞர்களுக்கு ஒளித்திரை கொடுத்து படிக்க சொல்லி , டெஸ்ட் வைத்திருக்கிறார்கள். அதில் புத்தகம் படித்தவர்கள் 90 -95% மதிப்பெண்களும் ஒளித்திரைகாரர்கள் 50-65% மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருக்கிறார்கள்.

    நடனசபாபதி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //’ அழைந்து ’//
      என்ன கொடுமை சபாபதி

      அச்சுப் புத்தகத்தில் இது மாதிரி பிழைகள் வராது, அதை ப்ரூப்ரீடர்ஸ் களைந்து விடுவார்கள். ஆனால் வலைப்பதிவு மாதிரி சமாச்சாரங்களில் உங்களை மாதிரி ஆட்கள் தப்பும் தவறுமாக எழுதுவது அப்படியே வந்து தொலைக்கும்.
      சிவஞானம்

      நீக்கு
  24. நல்ல அலசல்! முரளி! பயன் தரும்!

    பதிலளிநீக்கு
  25. முரளிதரன், உங்களின் சில கருத்துக்களும், வவ்வாலின் சில கருத்துக்களும் திரு நடன சபாபதியின் கருத்துக்களும் ஒன்றாகச் சேரும்போது இந்தக் கட்டுரைக்கான சரியான பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  26. உண்மையில் யார் உயர்ந்தவர்கள்? வாசகர்களா? எழுத்தாளர்களா? என்றால் வாசகர்கள் என்று உறுதிபடக் கூற முடியும். வாசகன் எழுத்தாளனை நிராகரிக்க முடியும். எழுத்தாளன் வாசகனை நிராகரிக்க முடியாது.//எழுத்தாளர்களில் பலர் நல்ல வாசகர்களாக இருப்பார்கள் ஆனால் வாசகர்களில் சிறுபகுதியினரே நன்றாக எழுதக் கூடியவர்கள்

    பதிலளிநீக்கு
  27. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

    வாசிப்பவர் நாடுவாரின்றிப் பாரும்
    பொத்தகக் கடைககளில் தூக்கில் தொங்குகிறது
    "அருமையான பொத்தகங்கள்!"

    பதிலளிநீக்கு
  28. பட்ச்சிக்கினவன் பாட்டக் கெட்த்துக்கினான்... எய்திக்கினவன் ஏட்டக் கெட்த்துக்கினான்...! இத்துக்குமேல இன்னாத்த சொல்ல...?

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    பதிலளிநீக்கு
  29. புத்தகத்தை இரவல் வாங்க முடியும்- எப்படி மென்புத்தகத்தை இரவல் கொடுப்பது ?
    புத்தகத்தை பரிசாக கையெழுத்து போட்டு கொடுக்கலாம். - மென் புத்தகத்தில் முடியாது
    புத்தகத்தின் முதல் பக்கத்தில நம் பெயர் எழுதிக்கலாம்- மென் புத்தகத்தை எவன் காசுகொடுத்து வாங்கினான்னு கண்டுக்கவே ஏலாது.
    புடிக்காத புத்தகங்களை எடைக்கு போடலாம்- மெந்க்கு ரீசேல் வால்யுவே இல்ல மென்புத்தகத்தை துப்பரவா அழிக்கக் கூடமுடியாது. அழித்தாலும் ஹார்டிஸ்க்-ல் அதன் தடம் இருக்க தான் செய்யும்

    செழியன்

    பதிலளிநீக்கு
  30. அற்புதமான அலசல்.

    வெள்ளை அடிமைகள் மின் நூல்

    http://freetamilebooks.com/ebooks/white-slaves/

    பதிலளிநீக்கு
  31. நல்ல கட்டுரை சார்.வாழ்த்துக்கள்.
    .படிப்பவர் மட்டுமே அல்ல ,எழுதுபவர் மட்டுமே அல்ல,எல்லோரும் அறிவாளிகே இந்நாட்டில்.மிகவும் துச்சமாகவும்,எள்ளி நகையாடல் தனத்துட்டனும் உதாரணம் காட்டப்படும் ”மாடு மேய்க்கிறவன்” என்கிற அடைமொழிக்குட்பட்டவருக்கு இருக்கிற அனுபவ அறிவு மிக உயர்ந்ததாய்/

    பதிலளிநீக்கு
  32. உலகத்தை வாசித்துக்கொண்டு போவதால் என்னிடம் புத்தக வாசிப்பு ரொம்ப குறைச்சல்தான்.............

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895