இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். அதனை மெய்ப்பித்து விட்டார் நடிகர் விவேக். பேர் சொல்வதையும் தாண்டி மக்களை நன்மை செய்ய வைத்ததுதான் மிகப் பெரிய சாதனை.
எத்தனையோ பேர் ஆங்காங்கே மரக்கன்றுகளை நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியதை தொலைக்காட்சியில் காணமுடிந்தது .நேரிலும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்த மாலைகளோடு வந்தவர்களைவிட மரக்கன்றுகளோடு வந்தவர்கள்தான் அதிகம். நேற்று சில ஆயிரக்கணக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கும். இன்னும் நடவும் செய்வார்கள். எந்த அளவுக்கு அவர் மரம் வளர்க்கும் சிந்தனையை வளர்த்திருக்கிறார் என்பது உண்மையில் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. எனக்குத் தெரிந்து யாருடைய இறப்பின்போதாவது அஞ்சலி செலுத்துவது கூட நற்செயலாக இருந்ததாக நான் அறிந்ததில்லை.
எத்தனையோ மக்களின் அபிமானத்தைப் பெற்ற ஆளுமைகள் மண்ணில் இருந்து மறைந்திருக்கிறார்கள். அவர்கள் மறைவுக்கு மக்கள் கண்ணீர்விட்டு கலங்கி இருக்கிறார்கள். அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் நின்று தங்கள் இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்கள். பாடகர் SPB அவர்களின் மறைவின்போது கோடிக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். இவ்வளவு அன்பு தன் தந்தையின்மீது வைத்திருக்கிறார்கள் என்பதை இப்போதுதான் எங்களுக்குத் தெரிகிறது என்றார் எஸ்பிபியின் மகன். .
அது போலவே விவேக்கின் அருமையும் அவர் இறப்பின்போது வெளிப்பட்டிருக்கிறது.
தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டதோடு. விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முன்வந்தார். நடிகர்கள் சொல்லியா மக்கள் கேட்கப் போகிறார்கள் இவருக்கு எதற்கு விளம்பர மோகம் என்றுதான் பலரும் நினைத்திருக்கக் கூடும் . நானும் அப்படித்தான் நினைத்தேன்.ஆனால் அவரது இறப்பிற்குப் பின்தான் தெரிகிறது அவர் சொல்வதையும் மக்கள் கேட்கத் தயாராக இருந்தார்கள் என்பது. கையில் மரக்கன்றுகளோடு அவருக்கு அஞ்சலி செலுத்தியது உருக்கமான நிகழ்வு. அவர் உயிரோடிருந்திருந்தால் தடுப்பூசி விழிப்புணர்வு நிச்சயம் இன்னும் பலரை சேர்ந்திருக்கும் போலிருக்கிறது.
எவ்வளவு சிறந்த கலைஞனாக இருந்தாலும் அவனது புகழுக்கு ஒரு உச்சம் உண்டு. அதனைத் தொட்டபின் புகழ் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கும். இது இயற்கை நியதி அந்தத் தலைமுறை மட்டுமே அவரைக் கொண்டாடும். அடுத்த தலைமுறையினரிடம் அதனை எதிர்பார்க்க முடியாது. அப்படி மக்கள் மனதில் நிலைபெற வேண்டுமெனில், ஊருக்காக நாட்டுக்காக, சமுதாயத்திற்கு ஏதாவது செய்தால் தவிர நிலைத்திருக்க முடியாது.. அதனைத்தான் விவேக் செய்தார். மறைந்த அப்துல் கலாம் அவர்களின் வேண்டுகோளை ஏற்று இலட்சக்கணக்கான மரங்களை நட்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
அப்துல் கலாம் போன்ற அறிஞர்களுக்கே விவேக்கின் நகைச்சுவை பிடித்திருக்கிறது என்றால் நம்மைப் போன்ரவர்களுக்கு பிடிக்காமலா போகும்?. . பொதுவாக கதாநாயகனுக்கு உரிய தோற்றப் பொலிவு கொண்டவர்கள் நகைச்சுவை நடிகனாக மிளிர்வது அரிது. பெரும்பாலான புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்களாக உருவம் தோற்றம் நிறம் இவற்றை பகடி செய்து நகைச்சுவைக் காட்சிகள் அமைந்திருப்பது பழைய திரைப்படங்களிலில் இருந்து இன்று வரை தொடரும் ஒன்றுதான். ஆனால் இந்த விதியை தகர்த்தெறிந்தவர் விவேக்.தனக்கென்று ஒரு நகைச்சுவைப் பாணியை ஏற்படுத்திக் கொண்டு மக்கள் மனம் கவர்ந்தார். முன்பெல்லாம் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்கள் நடிகைகள் பெரும்பாலான வீட்டு வேலைக்காரர் பாத்திரங்களாகவே இருக்கும். நாகேஷ் மனோரமா உள்ளிட்ட லெஜெண்ட்களுக்கும் இதே நிலைதான். கோவை சரளாவுக்கு கிடைக்கும் பாத்திரங்கள் இப்போதும் அப்படித்தான். இவர் மட்டும்தான் அது போன்ற பாத்திரங்களில் நடிக்கவில்லை என நினைக்கிறேன்.
நடிகர்களில் பொது அறிவு அதிகம் உடைய மிகச் சிலரில் இவரும் ஒருவர். . தனது நகைச்சுவையில் ஆங்காங்கே பொதுத் தகவல்களை அள்ளித் தெளிப்பார்
சில நேரங்களில் இவரது நகைச்சுவையை ரசிக்க கொஞ்சம் முன்னறிவு தேவைப்படும்.
ஒரு படத்தில் ஜோதிகாவைப்பார்த்து இப்பவும் ரெண்டு இட்லிக்கு ஒரு லிட்டர் நல்லெண்ணெய் ஊத்தி சாப்பிடற பழக்கம் இருக்கா என்பார். (ஜோதிகா அப்போது இதயம் நல்லெண்ணெய் விளம்பரத்தில் இதுபோல் சாப்பிடுவார். )
திருமலை படத்தில் (a + b)2 = a2 + 2ab +b2 என்று ஒரு ஆட்டோக்காரர் இந்த ஃபார்முலாவை சொல்வது போல காட்சி அமைத்திருப்பார். அப்போதே நான் நினைத்தேன் இவர் வித்தியாசமானவர் என்று.
இன்னொரு படத்தில் மும்தாஜிடம் காதலைச் சொல்ல கேரளாவைப் பற்றி செய்திக்ளை அடுக்குவார்.
இனி எண்ட ஸ்டேட் கேரளா
எண்ட சிஎம் ஈகே நாயனார்
எண்ட நடனம் கதகளி. எண்ட நாதம் செண்டை என்று நகைச்சுவையாக சொல்வது சிரிக்காதவரையும் சிரிக்க வைக்கும். சிரிப்பாக இருந்தாலும் சொன்னது கேரளா பற்றிய தகவல் ஒரு பாடம் போலிருக்கும்
அந்நியன் படத்தில் கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதின வைரமுத்து மாதிரி நடக்கறதப் பாரு என்பார்.
இவருக்கு வாசிக்கும் வழக்கம் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு இது.நாட்டு நடப்புகளை அப்டேட் செய்து நகைச்சுவையில் இணைப்பது இவருக்கே உரித்தானது.
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.
யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துற
உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?
இந்த வசனங்கள் பலராலும் இன்று பயன்படுத்தப்படுகிறது.
ட்ராபிக் போலீஸை வைத்து இவர் செய்த காமெடிகள் நினைத்து நினைத்து சிரிக்கக் கூடியவை
பிரபல ஹீரோக்கள் இவரைத் தவிர்க்கவே செய்வார்கள் இவரது புத்திசாலித்தனமும் அறிவும் சங்கடம் ஏற்படுத்தும். மற்ற நகைச்சுவை நடிகர்கள் போல இவரை ஹீரோக்கள் கையாள்வது கடினம். ஹீரோக்களின் நண்பனாக வந்தாலும் ஹீரோவை கலாய்க்கும் நகைச்சுவை நடிகர் இவரே. (இவருக்குப் பின் சந்தானம்).
நகைச்சுவை நடிப்பில் மட்டுமல்லாது குணச்சித்திர நடிப்பிலும் தன் திறமையை நிருபித்தவர் விவேக்.
ஆனால் இத்தனையும் தாண்டி அவரது சமூக சிந்தனையும் மரம் நடுதல் என்ற செயல்பாடும்தான் சினிமாவை விரும்பாதவரையும் அவரை விரும்பவைத்தது. இவரை முன்வைத்து தமது பிரபல்யத்தை பயன்படுத்தி நாமும் இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று மேலும் சிலராவது முன்வந்தால் இது விவேக்கிற்கு கிடைத்த இன்னொரு வெற்றியாக அமையும்.
அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்