என்னை கவனிப்பவர்கள்

சனி, 13 ஏப்ரல், 2019

பட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா?


  தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. தமிழகத்தின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்கள் என அறிய அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர் முதல் கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலை தமிழகத்தில் வரும் 18 அன்று தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 
     ஃபேஸ்புக் டுவிட்டர்  வாட்ஸ் ஆப், யூடியூப் சமூக வலைதளங்களிலும் பிரச்சாரம் அனல் பறக்கிறது. வேட்பாளர்களின் கோமாளித்தனமான பேச்சுக்கள் செயல்களால் மீம்சுகள் பஞ்சமில்லாமல் நிறைந்து சுவாரசியம் கூடியுள்ளது.
      வதந்திகள் பொய்த் தகவல்களை கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சிகளும் முடிந்த அளவு பரப்புகின்றன. இவை எந்த அளவுக்கு கட்சிகளுக்கு  பலனளிக்கும் என்பது தெரியவில்லை.  எவை உண்மை பொய் எனபதை  பற்றிய கவலை இன்றி  ஃபார்வேர்ட் செய்து மகிழ்கிறார்கள்.
     சிலர் பயனுள்ள தகவல்கள் என்று அவர்களை அறியாமலேயே தவறான தகவல்களை பரப்புகிறார்கள் சர்க்கார் படத்தை பார்த்த பாதிப்பில்.(நான் இன்னும் சர்க்கார் படம் பார்க்க வில்லை  சில தேர்தல் விதிமுறைகளை அள்ளி விடுகிறார்கள்
     கடந்த வாரங்களில் அடிக்கடி என் கண்ணில் பட்ட தகவல்களில் ஒன்று  வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை எனில்  வாக்குச் சாவடி அதிகாரியிடம் சேலஞ்ச் வோட் (Challenge Vote) என்று கேட்டு வாக்களியுங்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது. 


          உண்மையில் இப்படி வாக்களிக்க முடியுமா என்றால் முடியாது என்பதே சரியான பதில்.  வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் நிச்சயம் வாக்களிக்க அனுமதிக்கப்படாது.  அவ்வாறு வாக்களிப்பதற்கான விதிமுறை இதுவரை இல்லை. 
        அப்படியானால் சேலஞ்ச் ஒட்டு என்று ஒன்று இருக்கிறதா? இல்லையா?

      ஆம்!சேலஞ்ச் வோட் என்று ஒன்று உள்ளது. அது  தவறான வாக்காளர் வாக்களிக்க வரும்போது செய்ய வேண்டிய நடைமுறை . வாக்காளரின் அடையாளத்தை எதிர்த்தல். அதாவது வந்திருப்பவர் தவறான வாக்காளர்  என வேட்பாளரோ அல்லது அவரது அனுமதி பெற்ற ஏஜெண்டோ  எதிர்த்தலைத்தான் சேலஞ்ச் வோட் என தேர்தல் ஆணையம் கூறுகிறது. 
        வாக்குப் பதிவு நேர்மையாகவும் விதிகளின்படியும் நடைபெறுகிறதா என்பதை அறிய வேட்பாளர்களுக்கு உரிமை உண்டு. அதனால் வாக்குப் பதிவு தொடங்கி முடியும் வரை வாக்குப் பதிவை கண்காணிக்க தனக்கான ஏஜெண்டுகளை -தங்கள் நம்பிக்கைக்கு உரிய உள்ளூர்வாசிகளை ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் வேட்பாளர்கள் நியமனம் செய்கிறார்கள். 
     வாக்குப் பதிவு தொடங்குவது முதல் ,வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீலிடுவது, மாதிரி வாக்குப் பதிவு நடத்துவ்து, வாக்காளர்களின் அடையாளங்களை உறுதிபடுத்துவது வாக்குப்பதிவு நிறைவு செய்து சீலிடுவது இவர்கள் முன்னிலையில்தான் நடைபெறுகிறது. அனைத்துக் கட்சி ஏஜெண்டுகளும் உள்ளே வரும் வாக்காளர்களை அடையாளம் கண்டு உறுதிப் படுத்துவார்கள்.  வருகின்ற வாக்காளர்  உண்மையானவர் இல்லை என நினைத்தால் ஏஜெண்டுகள் ஆட்சேபம் எழுப்பலாம்.  ஆள் மாறாட்டம் செய்பவர் என உறுதிபடத் தெரிந்தால் இவர்  பட்டியலில் உள்ள உண்மையான வாக்களர் அல்ல என சேலஞ்ச் செய்ய முடியும். வாக்குச்சாவடி முதன்மை அலுவலரிடம் முறையாக புகார் தெரிவித்தால் அலுவலர் அவரது அடையாள ஆவணங்களை சரிபார்த்து  உண்மையக இருக்கும் பட்சத்தில் வாக்களிக்க அனுமதிப்பார்.      
      அப்போதும் எதிர்ப்பு தெரிவிக்க நினைத்தால் உரிய கட்டணம் செலுத்தி 
 ( கட்டணம் 2 ரூபாய்-  இப்போதும் கட்டணம் மாறியதாக தகவல் இல்லை)  எதிர்ப்பை பதிவு செய்யலாம். தக்க ஆதாரங்களுடன் வந்திருப்பவர் உண்மையான வாக்காளர் அல்ல என அவர் நிருபித்தால் வந்திருப்பவர் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார். விதிகளின்படி அவரை காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.  எதிர்ப்புக் கட்டணம் திரும்ப வழங்கப் படும். எதிர்ப்புக்கான முறையான ஆதாரம் இல்லையெனில் எதிர்பை ரத்து செய்து வாக்களிக்க அவரை அனுமதிக்கலாம். ஆனால் எதிர்ப்புக் கட்டணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது. அரசுக் கணக்கில் சேர்க்கப் படும்.   

    நடைமுறையில் ஏஜெண்டுகள் அவ்வப்போது எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம் என்றாலும் அவற்றை பதிவு செய்வது இல்லை. அனைத்து ஏஜெண்டுகளும் தாங்களாகவே அடையாளம் பற்றிய ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். 

இதுதான் சேலஞ்ச் வோட்.   

(வேட்பாளர் தொகுதிப் பக்கம் வரலன்னா மக்கள் மறந்துடுவாங்க . நாமும் வலைப் பக்கம் வரலன்னா நம்மையும் வலை நண்பர்கள் மறந்துவிடுவார்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும் நம்ம ப்ளாக் பாஸ்வேர்டே  மறந்து விடும் அபாயம் இருப்பாதால்  நாம இன்னமும் பளக்கர்தான்  என்பதை நினைவு படுத்தவே இந்தப் பதிவு)

நன்றி: தேர்தல் ஆணையத்தின் வலைப்பக்கம் மற்றும் கையேடுகள்


அடுத்த பதிவில் டெண்டர் ஒட்டு, டெஸ்ட் ஓட்டு, மாதிரி வாக்குப் பதிவு இவற்றைப் பார்க்கலாம்

12 கருத்துகள்:

 1. எனக்கு சில சந்தேகங்கள்...

  1) இந்த VvPAT அனைத்து பூத்களிலும் வைக்கப்படுமா...? இல்லை குறிப்பிட்ட சில இடங்களிலா...? குறிப்பிட்ட இடங்களில் மட்டும் என்றால், என்ன காரணம்...?

  2) VvPAT இதன் பயன் நாம் அளித்த வாக்கை சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதற்கு... தவறாக வந்தால் என்ன செய்வது...? ஏனென்றால் 7 வினாடிகள் தான் ஒளிரும் என்று படத்தில் உள்ளது...

  3) வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்...? அதாவது EVM-ல் பதிவான பல்வேறு வாக்குகளும், VvPAT-ல் பிரிண்ட் ஆகி இருக்கும் பல்வேறு வாக்குகளும் சரியாக இருக்க வேண்டும்...?! அப்படித்தான் எண்ணிக்கை என்றால், நேர காலம்...?

  last but not the least

  4) இதற்கு ஏன் EVM மற்றும் Vvpat...? பழைய முறையான வாக்குச்சீட்டு முறையே போதுமே...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுருக்கமான பதில் முகனூலில் அளித்துள்ளேன். விரிவான பதில் அடுத்த பதிவில்

   நீக்கு
  2. VVPAT அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வைக்கப்படும். அதில் தகவல் தவறாக வந்தால் அங்குள்ள அலுவலரிடம் புகாரளிக்கலாம். ஒரு தொகுதியில் உள்ள ஏதேனும் ஒரு வாக்குச் சாவடியில் உள்ள வாக்குகள் மட்டுமே EVM மற்றும் VVPAT உடன் சரி பார்க்கப்படும். எல்லா இடங்களிலும் எண்ணப்படாது.

   நீக்கு
 2. சேலஞ்ச் வோட் பற்றிய விரிவான விளக்கத்திற்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 3. நல்ல பகிர்வு. பலர் விஷயம் தெரியாமல் தவறான செய்திகளை பகிர்வது வேதனை. சரியான தகவல்கள் பலருக்கும் பிடிப்பதில்லை!

  பதிலளிநீக்கு
 4. சிறப்பான பதிவு. போலியான தகவல்கள் தடுக்கப்பட வேண்டும்.

  பதிலளிநீக்கு
 5. தகவலுக்கு மிக்க நன்றி.

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 6. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 7. தகவல் என்னும் பெயரில் தவறான செய்திகள் பரப்பப் படுவதால் அவற்றில் நான் கவனம் செலுத்துவதில்லை

  பதிலளிநீக்கு
 8. சேலஞ்ச் ஓட் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 9. மிகவும் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். நாங்கள் ஓட்டு போட வேண்டும் என்பதற்காக சென்னை வரை சென்று விட்டு, ஓட்டர்ஸ் லிஸ்டில் பெயர் இல்லாததால் ஓட்டு போடாமல் திரும்பி வந்தோம்.


  மிகவும் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். நாங்கள் ஓட்டு போட வேண்டும் என்பதற்காக சென்னை வரை சென்று விட்டு, ஓட்டர்ஸ் லிஸ்டில் பெயர் இல்லாததால் ஓட்டு போடாமல் திரும்பி வந்தோம்.  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895