|
சிறப்பாக பேசிய சுதா |
நான் தினந்தோறும் அலுவலகம் செல்ல மின்சார ரயிலைத்தான் பயன்படுத்துகிறேன். ரயிலில் திருநங்கைகள் நடமாடுவதைக் காண முடியும். அதற்கு முன்னர் அவர்களைப் பற்றி அவ்வளவாக சிந்தித்ததில்லை. இவர்கள் எங்கு தங்குவார்கள்? இவர்கள் எல்லோருமே இப்படித்தான் இரந்து வாழும் சூழ் நிலையில் இருக்கிறார்களா? சமுதாயத்தில் இவர்களை நாம் ஏன் ஏளனமாகப் பார்க்கிறோம். ?ஆண்கள் பெண்கள் என்று தனித்தனியான வசதிகளில் கழிவறை வசதி உட்பட பிற வசதிககள் இவர்களுக்கு கிடைக்கிறதா? என்ற கேள்விகள் எனக்கு இவர்களைப் பார்க்கும்போதெல்லாம் எழுவது உண்டு.
இவற்றில் சிலவற்றிற்கான விடைகள் எனக்கு கடந்த வார(08.07.14) நீயா நானாவில் கிடைத்தது.
விளம்பரத்திற்காகவோ அல்லது வியாபாரத்திற்காவோ இந்த நீயா நானா நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி இருந்தாலும் அதைபார்த்தவர் நெஞ்சில் சின்ன மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றே நினைக்கிறேன். மாற்றுத் திறனாளிகளை விட அரவாணிகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. அவர்களின் நியாயமான உரிமைகள் பற்றியோ தேவைகள் பற்றியோ யாரும் கவலைப்படுவதில்லை. தமிழ் சினிமாக்களில் அதிகம் கேலி செய்யப்படுபவர்களில் திருநங்கைகளுக்கு இடம் உண்டு.. வடிவேலுவின் "அவனா நீ" என்ற வசனம் மிகப் பிரபலம்..அவர்களை ஏளனமாக பார்த்தே பழக்கப் பட்டவர்களாக நாமும் நமது சமுதாயமும் இருக்கிறது.
அவர்கள் மிரட்டிக் காசு பறிப்பதையும் பாலியல் தொழில் செய்வதையும் பலரும் குறை கூறுவது வழக்கம். அவர்களை ஒட்டு மொத்தமாக விலக்கி வைத்ததே இதற்கு காரணம் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருநங்கைகள் சொன்னதில் உண்மை இருந்தது. திருநங்கைக்குவீ டு வாடகைவிட்ட ஒருவர் ," அவர்களை இந்த சமுதாயம் ஒதுக்கி வைத்திருகிறது அல்லவா அதற்கு தண்டனையாக காசு கொடுங்கள் என்று அவர்கள் கேட்பது நியாம்தான்" என்றார். அதுவும் உண்மைதானே!
திருநங்கைகளுக்கு வாடகை வீடு கிடைப்பது எவ்வளவு கடினம் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. "குடிசைப் பகுதிகளை சேர்ந்தவர்கள்தான் எங்களுக்கு வாடைக்கு இடம்
கொடுக்கிறார்கள். அவர்களில் ஒருவராக மதிக்கிறார்கள் மத்திய தரப்பினரோ அல்லது
உயர் தரப்பினரோ எங்களை மனிதர்களாகக் கூட நினைப்பதில்லை என்று மூத்த
திருநங்கை ஒருவர் கூறியது சமுதாயத்தை ஓங்கி அறைந்தது போல் இருந்தது. உண்மையில் வசதியுள்ள உயர் பின்னணயில் உள்ள குடும்பத்தில் பிறந்திருந்தாலும் திருநங்கையாய் இருந்தால் பிரிந்து வந்து இவர்களுடன்தான் வசிக்கிறார்கள்.இங்கே சாதி வேறுபாடு இல்லை என்றார் எழுத்தாளர் மாரி செல்வராஜ்
இவர்கள் பெண்ணாக வாழவே பிரியப் படுபவர்கள். பிறப்பால் ஆண்களாய் இருந்தாலும் பெண்மை உணர்வுகள் இவர்களை ஆட்கொள்ள அதை வெல்ல இயலாமல் சமுதாயத்தின் ஏளனத்தையும் பொருட்படுத்தாது தன்னைப் போன்றவர்களோடு இணைந்து ஆண்களாய் இருப்பதற்கான உடல் அடையாளங்களை இழப்பதற்கு முடிவு செய்து அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். அதை ஒருதிருநங்கை விவரித்த விதம் உண்மையில் உருக்கமானது. நிகழ்ச்சியில்திருநங்கை சுதா பிறப்பால் பெண்ணாகப் பிறந்தவர்களுடைய பெண்மை உணர்வுகளுக்கு எங்கள் உணர்வுகள் கொஞ்சமும் குறைந்தது அல்ல என்பதை உணர்த்தவே பிரயத்தனப் படுகிறார்கள்.என்பதை தெளிவாகவும் நகைச்சுவையாகவும் எடுத்துக் கூறினார்.
தங்களை திருநங்கை என்று அடையாளம் அறியாமல் ஒரு பெண் என்றே நினைத்து தன்
பக்கத்தில் ஒரு பெண் அமர்ந்தால் .மிகுந்த மகிழ்ச்சி அடைவோம் என்றும் பேசினால்
இன்னும் அதிக மகிழ்ச்சி அடைவோம் என்றும் ஒரு ஆண் தங்களை பெண் என்று
நினைத்து விட்டால் அந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை என்றும் குறிப்பிட்டது
அவர்களது உணர்வுகளை விளக்கி விட்டது . இந்த சமுதாயம் தங்களை பெண் என்றுதான் நம்பவேண்டும்
நினைக்கவேண்டும் நடத்த வேண்டும் என்பதே அவர்கள் முக்கிய எதிர்பார்ப்பு.முதலில் பெற்றோர் அவர்களைப் புரிந்து கொள்ளவேண்டும். இத்தகைய மன
உணர்வுகளுடன் பிறந்தது அவர்களுடைய தவறு அல்ல.
மாற்றுத் திறனாளிகளைக் கூட பெற்றோரும் குடும்ப உறுப்பினர்கள் வெறுப்பதில்லை.ஆனால் இவர்கள் தங்கள் குடும்பத்தவர்களாலேயே வெறுக்கப் படுகிறார்கள் என்பது வேதனை.. திரு நங்கைகள் தங்கள் குடும்பத்துடன் வசிப்பது அபூர்வம். இப்போது மாற்றம் வந்திருகிறது. சில திருநங்கைகள் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்ததை நிகழ்ச்சியில் அறிய முடிந்தது. உண்மையில் சமுதாயத்தில் இதுஒரு சிறிய முன்னேற்றம் என்றுதான் கூற வேண்டும்.
இதில் கலந்து கொண்ட திருநங்கைகள் படித்தவர்கள். ஒரளவிற்கு நல்ல நிலையில்
இருப்பதாக தெரிகிறது. இவர்களின் அறிவிலும் ஆற்றலிலும் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தினார்கள்.ஆனால் பலர் மிக மோசமான நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் அமையவேண்டும்
சமீபத்தில் இவர்களை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதி மன்றம் .பாலின அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை உரிமைகள் மறுக்கப்படுவதையும் ஏற்க முடியாது என்று கூறிய நீதிமன்றம் அவர்களை இதர பிற்பட்டவர் பிரிவில் சேர்த்து சலுகைகள் வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது . பிரச்சனைகளை கவனிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டு அவர்களின் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தீர்வுகளை அமுல்படுத்த வேண்டும் என்றும் நீதி மன்றம் கூறியுள்ளது ..
என்னதான் சட்டம் இயற்றப்பட்டாலும் சமூக ரீதியான அங்கீகாரமே இவர்களை மகிழ்விக்கும்வாழ்க்கையை இடையூறின்றி நடத்த வழி வகுக்கும்.
கல்வி உரிமை சட்டத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் பிரிவில் இவர்களும்
இணைக்கப் பட்டுள்ளார்கள். இதன் மூலம் தனியார் பள்ளிகளில் சேர்வதற்கு இந்தப்
பிரிவில் வாய்ப்பு அளிக்க வழிவகை செய்யப்படுள்ளது. உண்மையில் இவர்களே தங்களை
அடையாளம் கண்டு கொள்வதே பதின்ம வயதின் பிற்பகுதியில்தான்.இந்த
சூழ்நிலையில் இவை எப்படி இவர்களுக்கு உதவும் என்பது தெரியவில்லை.
ஏற்கனவே அரவாணிகள் நல வாரியம் ஒன்று இருப்பதாக ஞாபகம். அது என்ன செய்தது அல்லது செய்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை..
தற்போது சென்னை மாநகராட்சி இவர்களுக்கென காப்பகங்கள் அமைக்க இருப்பதாக ஒரு செய்தியை படித்தேன். அவை ஓரளவிற்கு இவர்களுக்கு உதவக் கூடும்.
பெற்றோர்களுக்கும் சமுதயத்திற்கும் இவர்களை எப்படி கையாள்வது என்ற விழிப்புணர்வை அரசுதான் ஏற்படுத்த வேண்டும்.. மருத்துவ ரீதியான ஆலோசனைகளும் பாதுகாப்பும் வழங்க முன் வரவேண்டும்
இவற்றைப் பற்றியும் நீயா நானாவில் விவாதித்திருந்தால் நிகழ்ச்சி இன்னும் பயனுடையதாக இருந்திருக்கும் .
***************************************************************************
திருநங்கைகளின் பரிதாப நிலை ஏற்படுத்திய பாதிப்பில் விளைந்த என்னுடைய கவிதை .
நாங்கள் யார்?
நாங்கள் யார்?
எங்களுக்கே ஐயமுண்டு!
நாங்கள்
பாலினம் அறியாத
படைப்புப் பழுதுகள்!
வேராய் மாற முடியாத
வெற்று விழுதுகள்!
ஆணாய்ப் பிறந்தாலும்
பெண்மை உணர்வுகளால்
பேதப் பட்டுப்போனவர்கள்!
பெற்ற அன்னையும்
வெறுத்ததொதுக்கும்
பெரும்பாவம் செய்தவர்கள்!
அலிகள் என்று
உங்களால் கேலி செய்யப்படும்
கேள்விக் குறிகள்!
கடுங்குரலும் கடுமுடியும்
காட்டிக் கொடுக்க
கழிப்பறைக்குள் கூட
அனுமதிக்கப்படாத
அருவெறுப்பு பிண்டங்கள்
எங்களுக்கும் ஆசைதான்!
கூடப் பிறந்தவர்களுடன் கூடி வாழ,
அன்னையின் மடியில்
அழுதபடி தலை சாய்க்க,
தங்கையின் பூப்பெய்தலில்
பூரிப்படைய,
அண்ணனின் திருமணத்திற்கு
அலங்காரமாய்ச் செல்ல!
என்ன செய்ய?
தெருவோரம் நின்றால்கூட
துரத்தப்படும்
தெருநங்கைகளான
திருநங்கைகள் ஆகிவிட்டோமே!
கடவுளாய் இருந்தால்
கை கூப்பி தொழுகிறீர்கள்!
மனிதராய்ப் பிறந்தால்
கைகொட்டி சிரிக்கிறீர்கள்!
ஆனாலும்
நீங்களெல்லாம் பெருந்தன்மை
கொண்டவர்கள்தான்!
ஒரிலக்க எண்களில்
மிகப்பெரியதை எங்களுக்கே
சொந்தமாக்கி இருக்கிறீர்களே!
*******************************************
தொடர்புடைய கவிதை
காகிதப் பூக்கள்
.