என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 27 ஜூன், 2013

ஒண்ணுமே புரியல ! ராஜ்யசபா தேர்தல் வாக்கு கணக்கிடும் முறை

   .

   இன்னைக்கு பரபரப்பான சூழ்நிலையில் ராஜ்யசபா தேர்தல் நடந்துக்கிட்டு இருக்கு.
. ராஜ்ய சபா எம்.பி க்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களுக்கான தேர்தல் ரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடக்குதாம், அவர்களோட பதவிக் காலம்  ஆறு ஆண்டுகள்  ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு வெளிஆகும். அப்போதெல்லாம் பரபரப்பாக ஏதோதோ நடக்கும். என்னன்னா ராஜ்யசபா எம்பிக்களை அந்தந்த மாநில எம்.எல் ஏக்கள்தான் தேர்ந்தேடுக்கணுமாம். ஒரு மாநிலத்துக்கு எவ்வளவு ராஜ்யசபா எம்பிங்கறதை அந்த மாநில மக்கள் தொகையைப் பொறுத்து நிர்ணயம் செய்வாங்களாம். நம்ம தமிழ் நாட்டுக்கு ஆறு எம்பி சீட்டு. 1996 க்கு அப்புறம் வாக்குப் பதிவு இப்பதான் நடக்கப் போவுதாம்.. . 6 பேருக்கு 7 பேர் போட்டி போடறதால  ஓட்டுப் பதிவு நடத்தித்தான்  ஆகணுமாம்.
     இதுல வோட்டு எப்படி போடறது ஒட்டு எண்ணிக்கை எப்படின்னு சமீபத்தில பேப்பர்ல போட்டிருந்தத படிச்சேன். கொஞ்சம் தலைய சுத்தி பாதி புரிஞ்சும் பாதி புரியாமையும் இருந்தது. ஒரு சுவாரசியம் ஏற்பட்டு இந்த வாக்கு பதிவையும் ஒட்டுமதிப்பு கணக்கிடும் நடைமுறையும் தேடிப படிச்சேன். இன்னும் வேகமா தலைய சுத்த, நான் பெற்ற தலை சுற்றல் பெறுக இவ்வையகம்னு உங்க தலைகளையும் சுத்த வச்சுட்டு ரெண்டு நாள் தலை மறைவாயிடலாம்னு இருக்கேன்.

இது   தேர்தல்ல ஒட்டு போடறது   மாதிரி இல்ல. வாக்கு சீட்டில வேட்பாளர்களோட பேரும் பக்கத்தில ஒரு கட்டமும் இருக்கும். தனக்கு புடிச்ச வேட்பாளருக்கு நேரா 1 ன்னு போடணும் இன்னொரு வேட்பாளருக்கும் அடுத்த இடம் கொடுத்து ரெண்டுன்னு ரெண்டாவது முன்னுரிமை போடலாம். விருப்பட்ப்படி முதல் இடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம்னு ஒட்டு போடலாம். இப்படி எல்லாம் பெரும்பாலும் நடக்கிறது இல்ல. இருந்தாலும் அப்படி நடந்தா ஒட்டு எண்ணிக்கை எப்படி கணக்கிடுவாங்க. (நமக்கு இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பு இல்லன்னாலும் ஒரு ஆர்வம் காரணமா இந்த பதிவ போட்டுட்டேன். மன்னிச்சுக்கோங்க பாஸ்)

ஒரு எடுத்துக் காட்டு பாக்கலாமா?
பொதுவா அரசியல் கட்சிகள் இரண்டாவது முன்னுரிமை ஓட்டுக்களை போடுவதில்லை. ஒன்றை மட்டும் போட்டுவிட்டு மற்றவற்றை காலியாக விட்டு விடுவார்கள்.
உதாரணத்திற்கு 54  வாக்காளர்கள் (எம்.எல்.ஏக்கள்) இருக்கிறார்கள். ஏழு எம்.பி க்கள் தேர்ந்தடுக்கப்  படவேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.வேட்பாளர்கள் 16 பேர்  போட்டி போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
சிலர் ஒரு வோட்தோடு நிறுத்திக் கொள்ளாமல் ரெண்டாவது முன்னுரிமை ஓட்டும் போடுவதாக கருதிக் கொள்வோம்.
வாக்குப் பதிவு முடிந்துவிட்டது.
16 வேட்பாளர்கள் கீழ்க்கண்டவாறு ஒட்டு பெற்றிருக்கிறார்கள்.வேட்பாளர்களை A,B,C என்று பெயர்வைத்துக் கொள்ளலாம்.


CANDITATE VOTES CANDITATE VOTES CANDITATE VOTES CANDITATE VOTES
A
2
E
11
I
4
M
2
B
9
F
3
J
3
N
2
C
3
G
5
K
2
O
2
D
1
H
2
L
2
P
1
மொத்த வோட்டுக்கள் 54


  ஒவ்வொரு வேட்பாளருக்கும் கிடைத்த முதல் முன்னுரிமை அடிப்படையில் வாக்கு சீட்டுக்களை தனித்தனி கட்டுக்களாக கட்டி வைக்கவேண்டும்.
உதாரணத்திற்கு A பெற்ற ரெண்டு வாக்கால் கொண்ட வாக்கு சீட்டுகள் ஒரு கட்டு.
ஒவ்வொரு வாக்கு சீட்டுக்கும் மதிப்பு 100 கொடுக்கப் படும். வேட்பாளர் பெற்ற ஓட்டுகளின் மதிப்பை பெற அவர்கள் பெற்ற வாக்குகளுடன் 100 ஐ பெருக்க வேண்டும். அதாவது A-200  B- 900 .......
அனைத்து வாக்கு சீட்டுக்களின் மொத்தமதிப்பு 5400
எட்டு வேட்பாளர்கள் இருப்பதால் (5400/8)= 675
இதனுடன்  1 சேர்த்துக் கொள்ள வேண்டும் 676
ஒரு வேட்பாளர் 676 புள்ளிகள் பெற்றுவிட்டால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் படுவார்.
மேற்கூறிய எடுத்தாக்காட்டில் B யும்  E ம் 676 க்கு மேல் பெற்று விட்டதால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப் படும்.
இரண்டு பேர் மட்டுமே தகுதியான வாக்கு மதிப்புகள் பெற்றிருக்கிறார்கள் மற்றவர்கள்  பெற வில்லை.இன்னும் 5 பேர் தேர்ந்துக்கப் பட வேண்டும். அவர்கள் பெற்றுள்ள வாக்குகளின் அடிப்படையில் தேர்ந்டுக்க முடியாது. இங்குதான் சிக்கல் ஆரம்பிக்கிறது . என்ன செய்வது? இப்போது வாக்காளர்கள் அளித்த இரண்டாவது முன்னுரிமையை பரிசீலனை செய்ய வேண்டும். அதைதகுதியுள்ள வேட்பாளருக்கு மாற்றத்த தக்க ஓட்டுகளாக செய்ய வேண்டும்.
நிறைய பேர் ரெண்டாவது முன்னுரிமை வாக்குகளை அளித்திர்க்கக் கூடும் யாருடைய ரெண்டாவது முன்னுரிமைய முதலில் எடுத்துக் கொள்வது?
ஏற்கனவே அதிக வாக்குகள் பெற்ற E ன்(11வாக்குகள் வாக்கு மதிப்புகள் 1100) கூடுதல் வாக்கு மதிப்புகளைபிற வேட்பாளருக்கு மாற்றவேண்டும்
E இன் வாக்கு மதிப்பு           1100
தேர்ந்தெடுக்க போதுமானது      676
கூடுதலாக உள்ளது              424

இந்த 424 ஐ யாருக்கு பகிர்ந்தளிப்பது
E க்கு வாக்களித்தவர் 11 பேர் இந்த 11 பேர் ரெண்டாவது முன்னுரிமையாக யாருக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதை கணக்கில் எடுத்தக் கொள்ளவேண்டும். . 11 பேரில் 5 பேர் G க்கும் 3 பேர் H க்கும் 2 பேர் L க்கும் அடுத்த முன்னுரிம வாக்குகள் போட்டிருப்பதாகக் கொள்வோம். ஒருவர் இரண்டாவது முன்னுரிமை யாருக்கும் அளிக்கவில்லை (இவர்கள் அனைவரும் முதல் முன்னுரிமையாக E க்கு வாக்களித்தவர்கள்)



இந்த 424 ஐ 10 வாக்குசீட்டுகளுக்கு பகிர்ந்தளிக்க ஒரு வாக்கு சீட்டின் மதிப்பு  424/10 =42.4. அதாவது 42 (11 பேரில் ஒருவர் இரண்டாவது முன்னுரிமை வாக்கு குறிப்பிட வில்லை.)
G க்கு கிடைக்கும் கூடுதல் மதிப்பு 42 x 5 = 210
H க்கு கிடைக்கும் கூடுதல் மதிப்பு 42 x 3 = 126
L க்கு கிடைக்கும் கூடுதல் மதிப்பு  42 x 2 = 84

ஏற்கனவே G பெற்ற முதல் விருப்ப ஒட்டுகள் 500
2 வது முன்னுரிமைப்படி கூடுதல் ஒட்டு மதிப்பு= 210
இப்பொது G இன் ஒட்டு மதிப்பு 500+210=710
குறைந்த பட்ச தேவை 676. G பெற்றிருப்பதோ 710. எனவே மூன்றாவது வெற்றி பெற்ற வேட்பாளராக G  அறிவிக்கப் படுவார்.
இத்தோடு இது முடியவில்லை .இதே போல B  அதிக முதல் விருப்ப (பார்க்க பட்டியல்) ஒட்டுக்களை பெற்று  இரண்டாம் இடத்தில் உள்ளவர் யின் கூடுதல் மதிப்பை கணக்கிட்டு E இன் கூடுதல் மதிப்புகளை கணக்கிட்டு பகிர்ந்தளித்த வ்ழி முறையை பின் ப்ற்ற வேண்டும்
இதில் இன்னொரு விஷயமும் உண்டு.  G கூடுதலாக பெற்றுள்ள மதிப்பு 710-676 =34 . இந்த 34 ஐ Gக்கு முதலிடம் கொடுத்து வாக்களித்தவர்களின் வாக்கு சீட்டுக் கட்டில் இருந்து இரண்டாவது முன்னுரிமை தந்தவர்களுக்கு இந்த 34 மாற்றத் தக்க ஒட்டுகளாக. அமையும்.
  மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி அடுத்த நான்கு வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். 

தலை சுத்துதா? ஒ.கே.ஓ.கே.

தெளிவா குழப்ப என்னால மட்டும்தான் முடியும். ஹிஹி ஏதோ என்னால முடிஞ்சுது.

இன்னும் தெளிவா இருக்கவங்க மற்ற வேட்பாளர்கள் எப்படி செலக்ட் பண்ணும்னு தெரிஞ்சுக்க கீழே இருக்க இணைப்பை கிளிக் பண்ணுங்க 

http://tnmurali.blogspot.com/p/blog-page_27.html 
 ராஜ்ய சபா தேர்தல் -வோட்டு கணக்கிடும் முறை 
VOTING AND COUNTING METHOD FOR RAJYASABA ELECTION -MODEL
 

***********************************************************************************************

சனி, 22 ஜூன், 2013

EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற முடியுமா?


 கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்
Excel இல் எண் வடிவத்தில் உள்ள தொகையை எழுத்தால் எழுதுவது எப்படி?
 
   அரசு அலுவலகங்களில் கணினி தெரிந்தவர்களுக்கு தனி மரியாதை உண்டு. அதுவும் EXCEL தெரிந்தவர்களுக்கு கூடுதல் மதிப்பு உண்டு. மைக்ரோசாப்ட் வோர்டை எளிதில் கையாள்பவர்கள் கூட  எக்செல்லை கண்டு அஞ்சுகிறார்கள். பல்வேறு விவரங்களின் தொகுப்புகள், கணக்கீடுகள்,அறிக்கைகள் தயாரிப்பதற்கு எக்செல் உதவுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. மேலதிகாரியிடம் நம்மை கொஞ்சம் அறிவாளியாகக் காட்டிக் கொள்ள எக்செல் பயன்படும். எனக்குத் தெரிந்து எக்செல்லில்  உள்ள அனைத்து பயன்பாடுகளையும் அறிந்து பயன்படுத்தியவர்  மிகக் குறைவாகவே இருப்பார்கள். எத்தகைய கணக்கீட்டையும் செய்ய வல்லது எக்செல் என்று கூறுவர். அதில் கொஞ்சமாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம்.
   தேவை இருக்கும்போதுதானே  தேடுதல் தொடங்குகிறது? நிறைய தடவை எக்செல்லில் பல்வேறு அட்டவணைகள் தயாரிக்கும்போது எண்களை எழுத்துகளாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
ஒவ்வொரு  முறையும் எழுத்தால் எழுதுவது போல டைப் செய்ய வேண்டி இருந்தது. இதற்கு ஏதேனும் எக்செல்லில் பங்க்ஷன் இருக்கிறதா என்று தேடித் பார்த்தேன் எனக்கு கிடைக்கவில்லை..யாரிடமும் தக்க பதிலும் கிடைக்க வில்லை. இணையத்தில் தேடியபோது எக்செல்லில் இதற்கான நேரடியான வழி இல்லை என்று தெரிய வந்தது. 

   மைக்ரோசாப்ட் ஆபீஸின் எக்சல் என்னும் பிரம்மாண்டத்தில் எண்களை ஆங்கிலத்தில்கூட  எழுத்துக்களாக மாற்றும்  வசதி இல்லை என்ற போது ஆச்சர்யமாகத்தான்  இருந்தது. ஆனால் அமெரிக்க கரன்சியை எழுத்துக்களாக மாற்றும் நிரலை மைக்ரோசாப்ட் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதை எக்செல்லில் இணைத்துக் கொண்டால் எண்பெயர்களை எளிதில் மாற்ற முடியும். விசுவல் பேசிக் ஜாவா ஸ்க்ரிப்ட் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்பதால் மாற்று வழி தேடினேன்.
   நமது தேவை இந்திய ரூபாயை எழுத்துக்களாக மற்றும் வசதிதானே இன்னும் தேடிய போது இதற்கான சில  add inகள் கிடைத்தது.
அவற்றில்  ஒன்று

    கஸ்டம்ஸில் பணிபுரியும் சென்னையை சேர்ந்த சுரேஷ் என்பவர் எண் வடிவில் இருக்கும் ரூபாயை எழுத்தாக மாற்றக் கூடிய இந்த ADDIN ஐ உருவாக்கி இருக்கிறார். (அவர் மென்பொருளாளர் அல்ல என்றபோதும் கணினி பற்றி பல விஷயங்களை  DIGITAL QUEST என்ற வலைப் பக்கத்தில்  எழுதியுள்ளார்).

 இதை நிறுவ முதலில் கீழ்க்கண்ட இணைப்பை கிளிக் செய்து   கோப்பை பதிவிறக்கம்  செய்யவும்.

SureshAddin.xla பதிவிறக்கம் 

DIGITAL QUEST என்ற வலைப பக்கத்துக்கும் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://www.dq.winsila.com/

 1.பின்னர் ஒரு EXCEL 2007 ஐ  திறந்து கொள்ளவும். இடது மூலையில் உள்ள OFFICE BUTTON ஐ கிளிக் செய்யவும் அதில் Excel Options க்கு செல்லவும் 

 2.Excel Option விண்டோவில் add ins மற்றும் Go கிளிக் செய்க

 3. அடுத்த விண்டோவில் Browse ஐ கிளிக் செய்த ஏற்கனவே ல்வுன்லோது செய்த ஃபைல் இருக்கும் இடத்திற்கு சென்று கீழுள்ள படத்தில் உள்ளவாறு SureshAddin.xla கோப்பை தேர்வு செய்து ஒ.கே ஒ.கே கொடுக்கவும் 

 இப்பொழுது எண்களில் உள்ள ரூபாய் மதிப்பை எழுத்து வடிவில் மாற்றும் வசதி நிறுவப்பட்டு விடும்.
add in களின் பட்டியலில் இதுவும் சேர்ந்து விடும் 

  ஒரு எக்செல் ஃபைலை திறந்து ஏதாவது ஒரு செல்லில் ஏதாவது ஒரு எண்ணை டைப் செய்யவும் எடுத்துக்காட்டாக  A1 செல்லில் 15452.60 என்று உள்ளீடு செய்வதாகக் கொள்வோம்
அதற்கு கீழே உள்ள செல்லில் அதாவது A2 வில் கீழ்க்கண்டFORUMULA ஐ டைப் செய்தால்
=rswords(A1) 
இப்போது  Rupees Fifteen Thousand Four Hundred Fifty Two And Paise Sixty Only 
என்று மாறுவதை காணலாம் 



A2 செல்லில் உள்ளீடு செய்த Formula சிவப்பு வட்டமிட்ட FORUMULA BAR லும்  தெரிவதை பார்க்கலாம்.
A1 என்ற செல் Referense க்கு பதிலாக எண்ணையும் நேரடியாக குறிப்பிடலாம்
உதாரணத்திற்கு =rswords(98765.50) என்று டைப் செய்தால் 
Rupees Ninety Eight Thousand Seven Hundred Sixty five and Paise Fifty Only என்று வந்து விடும்.
இதன்  மூலம் 100 கோடி வரை எழுத்துருவிற்கு மாற்ற முடியும் 
வேறுசில Add in களும் உண்டு .

 பயனுள்ளதாக இருந்ததா? உங்களில் ஒரு சிலருக்கேனும் உதவக் கூடும்  என்று நம்புகிறேன்.

  எச்சரிக்கை: தமிழில் இது போல செய்ய வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். சரியாக அமைந்தால் பதிவிடுவேன்.

**************************************************************************************************************

 

வியாழன், 20 ஜூன், 2013

யாரோ உங்களை பாக்கறாங்க!

 

எட்டிப்  பார்த்து படித்த குட்டிக் கதை
                   யாரோ  பார்க்கிறார்கள்
.
  பேருந்து நிறுத்தத்தில் அந்த பெரியவர்  பேருந்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார், பேருந்து இன்னும் வரவில்லை. லேட்டாகப் போனால் முதலாளி திருப்பி அனுப்பி விடுவாரோ என்கிற கவலை அவர் முகத்தில் தெரிகிறது. கையைப் பிசைந்துகொண்டு கடிகாரத்தையும். சாலையையும் மாறி மாறி பார்த்த்துக்கொண்டிருக்கிறார். ஓர் வழியாக பேருந்து வந்து அதில் அவசரமாக ஏறுகிறார். உட்கார இடமும் கிடைத்துவிட்டது. இப்போது அவரது சிந்தனை தனது அவசர பணத் தேவையை எப்படி சமாளிப்பது என்பதில் இறங்கியது. முதலாளியைக் கேட்டால் கொடுப்பாரோ மாட்டாரோ தெரியவில்லை.
         கல்லூரியில்  படிக்கும் மகள் கேட்ட புத்தகங்கள் வாங்க வேண்டும். மனைவி சொன்ன மளிகைப் பொருட்கள்  வாங்க வேண்டும். என்ன செய்வது என்று புரியாமல் தனது இயலாமையை நினைத்து வருந்திக்கொண்டிருந்தார் .அவருக்கு அவர் மேலேயே கோபம் வந்தது.

       அப்போது ஒருவர் டிக்கெட் வாங்குவதற்காக தன் பாக்கெட்டிலிருந்து சில்லறை எடுக்கிறார். சில்லறை எடுக்கும்போது ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்று கிழே விழுகிறது.  அதை அவர் கவனிக்கவில்லை. பெரியவரின் காலடியில் அது நகர்ந்து வந்துவிடுகிறது. பெரியவர் அதை எடுத்து கொடுக்க நினைக்கும்போது காசை தவற விட்டவர் முன்னால் சென்றுவிடுகிறார். இப்போது பெரியவர் மனதில் சிறிது சலனம் ஏற்படுகிறது. யாரும்தான்  பார்க்கவில்லையே! அந்தப் பணத்தை நாம் எடுத்துக்கொண்டால் என்ன? நாமாகத் திருடினால் தானே தப்பு. தானாகக் கிடைப்பதை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அப்படியே ஏமாற்றுவதாக இருந்தாலும், எவ்வளோ பேர் எப்படி எல்லாமோ ஏமாற்றுகிறார்கள். கொள்ளை அடிக்கிறார்கள். இது பெரிய தவறு ஒன்றுமில்லை என்று தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கொண்டு அதை எடுக்கலாம் என்று கீழே குனியும் முன் சுற்றுமுற்றும் பார்க்கிறார். அப்போதுதான் கவனித்தார். சிறிது தூரத்தில் வெள்ளை சட்டையும் கூலிங் க்ளாசும் அணிந்த  ஒருவர் இவரையே பார்த்துக்கொண்டிருந்தார். லேசாக புன்னகைக்கவும் செய்தார். பணம் விழுந்ததை அவரும் பார்த்திருப்பாரோ?
       பெரியவருக்கு சிறிது நடுக்கம் ஏற்ப்பட்டது. தான் பணத்தை எடுக்க முற்பட்டதை பார்த்துவிட்டாரோ?. சரி சிறிது நேரம் பார்க்கலாம். ஒருவேளை அவர் இறங்கிவிட்டால் அப்போது எடுத்துக்கொள்ளலாம் என்று கொஞ்ச நேரம் சும்மா இருந்தார். கைக்கெட்டியது வாய்க்கு எட்டாது போல் தோன்றியது. முன்பின் பழக்கமில்லாத அந்த வெள்ளை சட்டைக்காரர் மேல் கோபமாக வந்தது.
      
       வெள்ளை சட்டைக்காரருக்கு பக்கத்தில் இருந்தவர் இறங்கினாரே தவிர,அவர் இறங்கவில்லை. அவரது இடத்தில் அடுத்த நிறுத்தத்தில் ஏறிய போலீஸ் காரர் அமர்ந்தார். போலீஸ் காரர் உட்கார்ந்ததும் அவரது பக்கத்தில் இருந்த வெள்ளை சட்டைக்காரர் அவரிடம் என்பக்கமாகப் பார்த்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். பணம் விழுந்ததைப் பற்றியும் தன்னைப் பற்றியும்தான் சொல்லிக் கொண்டிருக்கிறாரோ? பெரியவருக்கு பயம் வந்து விட்டது. அவருடைய பிரச்சனைகள் எல்லாம் மறந்து விட்டன. போலீஸ்காரரிடம் மாட்டிக்கொண்டால் அவமானமாகப் போய்விடுமே என்று நினைத்தவர், சுற்றுமுற்றும் பார்த்தார். பணத்தை தொலைத்தவர் அது தொலைத்தது தெரியாமலே தூரத்தில் நின்று கொண்டிருந்தார். நல்லவேளை! அவர் இறங்கவில்லை  நினைத்த பெரியவர் சட்டென்று அந்தப் பணத்தை கையில் எடுத்து பணத்தை தவற விட்டவரை அழைத்து, இந்தப் பணம் உங்களடையதுதானா பாருங்கள் என்று அவரிடம் கொடுத்தார்.
       அவர் தன் சட்டைப்பயில் கைவிட்டுப் பார்த்து அது அங்கு இல்லாதது கண்டுஅதிர்ச்சி அடைந்து  ஆமாம் சார், என்னோடதுதான்! டிக்கெட் எடுக்கும்போது விழுந்துடிச்சி போல இருக்கு. ரொம்ப நன்றி சார் என்ற சொல்லி பணத்தை பெற்றுக்கொண்டதோடு "உங்களை மாதிரி நல்லவங்க இருக்கறதாலதான் இன்னும் மழை பெய்யுது " என்று உணர்ச்சி வசப்பட்டார் 

      இப்போதுதான் பெரியவருக்கு திருப்தியாக இருந்தது. பெரியவர் வெள்ளை சட்டைக்காரரைப் பார்க்க அவர்  புன்னகையுடன்,"அந்த பணத்தை எடுத்திருந்தா இந்த திருப்தி கிடச்சிருக்குமா?" என்று கேட்பது போல் தோன்றியது.

      அடுத்த நிறுத்தம் வந்தது. அந்த வெள்ளை சட்டைக்காரர் மெதுவாக  எழுந்தார். போலீஸ்காரர் அவரிடம் பக்கத்தில் இருந்த ஸ்டிக்கை எடுத்துக் கொடுக்க அவர்  தடுமாறிக்கொண்டு இறங்குகிறார்.
      "அட! என்ன இது! அந்த கூலிங் க்ளாஸ் அணிந்த வெள்ளை சட்டைக்காரர் கண் தெரியாதவரா? இவரைப் பார்த்துதான் இவ்வளவு  நேரம் பயந்தேனா?
       இந்த உண்மை தெரிந்திருந்தால் நான் பணத்தை எடுத்து விட்டிருப்பேனே? நல்ல காலம்! என்னைக்  தவறு செய்யாமல் தடுத்த அவர் கண் தெரியாதவர் அல்ல. என் கண் திறந்த கடவுள்.
      இப்பொழுது அவர் மனதில் சொல்ல முடியாத திருப்தி நிலவியது.

      'யாரோ பார்க்கிறார்கள் என்ற உணர்வுதான் நம்மை தவறு செய்ய விடாமல் தடுக்கிறது. அதுமட்டுமல்ல; நல்லது செய்யவும் அதுதானே தூண்டுகிறது. அந்த யாரோ சமுதாயமாகவும் இருக்கலாம் கடவுளாகவும் இருக்கலாம்.'
 *******************************************************************************************************

செவ்வாய், 18 ஜூன், 2013

TTR செய்தது சரியா?

     சமீபத்தில் குற்றாலம்  சென்றுவிட்டு சென்னை திரும்புவதற்காக தென்காசி ரயில்வே நிலையத்தில்  பொதிகை எக்ஸ்பிரஸ் க்காக இரவு  7.00  மணி அளவில் காத்துக்கொண்டிருந்தேன். ரயில் சிறிது நேரத்தில் வர இருப்பதையும் எந்தப் பெட்டி எங்கே  நிற்கும் என்பதையும் அறிவித்தார்கள். இந்த அறிவிப்பு நாம் ஏற வேண்டிய பெட்டியை தேடாமல் ஏற உதவியாக இருந்தது.

       நான் எனது இருக்கையை தேடி அமர்ந்துகொண்டேன். எதிர் இருக்கையில் ஏற்கனவே குழந்தையுடன் ஒரு இளம்பெண்ணும் (இருபது  வயதுக்குள்தான் இருக்கும்). நடுத்தர வயதுடைய ஒரு பெண்ணும் அமர்ந்து கொண்டிருந்தனர்.    ரயில்வே போலீஸ் ஒருவர் அவர்களிடம்  இந்த ஸ்டேஷன் இல் இறங்கி விடுங்கள் அல்லது முன்பதிவு இல்லாத பெட்டிக்கு சென்றுவிடும்படியும் கூறிக் கொண்டிருந்தார்.
      கவனித்ததில்  காரணம் தெரிந்தது. தக்கல் முறையில் முன்பதிவு செய்திருந்த  அவர்கள் அடையாள அட்டை எதுவும் கொண்டுவரவில்லை.
      எனக்கென்னம்மா? உங்க நல்லதுக்குத்தான் சொல்லறேன். TTR வந்தா நிச்சயம் ஒத்துக்கமாட்டார். ரொம்ப தூரம் போய்ட்டு நடுவழியில் இறக்கி விட்டுட்டா நீங்க ஊருக்கு  திரும்ப  போறது கஷ்டம். இங்கயே இறங்கி வீட்டுக்கு போய்டுங்க.இல்லன்ன  Unresevred  ல போங்க! கைகுழந்தை  வேற வச்சிருக்கீங்க. நான் சொல்றதை கேளுங்கம்மா?:"ன்று சொல்லிக்கொண்டிருந்தார்.
      அவர்களைப் பார்த்தால் விவரம் அறிந்தவர்களாக தெரியவில்லை. அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருப்பது சங்கடமாக இருந்தது.
      அடையாள அட்டை எடுத்து வரவேண்டுமென்று எங்களுக்கு தெரியாது என்றனர். அவர்கள் சொல்வது உண்மை என்றே தோன்றியது. அதற்குள் TTR வந்துவிட்டார்.
      டிக்கெட்டைப் பார்த்துவிட்டு அடையாள அட்டை கேட்டார்.
 எங்ககிட்ட இல்லீங்க. எங்களுக்கு தெரியாதுங்க.டிக்கெட் வாங்கி குடுத்தவங்க எங்களுக்கு சொல்லலைங்க. 
      அதுக்கு நான் என்ன பண்ணறது? தக்கல்ல புக் பண்ணா I.D எடுத்துக்கிட்டுதான் வரணும். இல்லன்னா அபராதம் கட்டனும். அதுவும் முடியலன்னா Unresevred கம்பார்ட்டுமென்ட்டுக்கு போய்டுங்க!
      அதற்குள் இன்னொரு பெண் இந்த ஒரு தடவை மன்னிச்சுக்குங்க சார்!   மெட்ராஸ்ல இறங்கினதும் என் மருமகன்  அடையாள அட்டை எடுத்து வர போன் பண்ணி சொல்லறேன். அப்படி இல்லன்ன பணம்கொண்டு வரசொல்லி கட்டிடறேன். ரொம்ப நாள் கழிச்சி என் பொண்ணு அவ புருஷனோடு சேந்து வாழ போவுது. எங்க வீட்டில நடந்த பிரச்சனையினால எங்களுக்கு எதுவெல்லாம் கொண்டு வரணும்னு தெரியலீங்க என்று பரிதாபமாக சொல்லிக்கொண்டிருந்தார்.
  இந்த சூழ்நிலையில் குழந்தை வேறு அழ ஆரம்பித்துவிட்டது. எரிச்சலில் அந்த இளம்பெண் குழந்தையிடம் சனியனே! நேரம் காலம் தெரியாம நீவேற அழுவாத என்று திட்ட ஆரம்பித்து விட்டார்
   உங்க சொந்த பிரச்சனைக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது.அடுத்து சங்கரன் கோயில் வருது. ஃபைன் கட்டுங்க இல்லன்ன அங்க இறங்கி UNRESERVED COMPARTMENT  ல ஏறிகோங்க. உங்களுக்கு பாவம் பார்த்தா என் வேலை போய்டும்.
 "எவ்வளோ பணம் கட்டனும்." என்று கேட்க
ஒருத்தர் 500 ரூபா கட்டனும். ரெண்டு பேருக்கு 1000  ரூபா கட்டனும்.என்றார் TTR  
  எங்க கிட்ட ஒரு 500 ரூபாதான் இருக்கு. ஒருத்தர் இங்க இருக்கோம்.இன்னொருத்தர்.வேற பெட்டிக்கு மாறிடறோம் என்று அந்தப் பெண் சொல்ல
  “இரண்டு பேர் பேரும் ஒரே டிக்கட்ல இருக்கு. போனா ரெண்டுபெரும்தான் போகணும்"
      அருகில் இருந்த பயணி ஒருவரிடம் "பாருங்க சார்! I.D  இல்லாம வந்து என் உயிரை எடுக்குறாங்க. என்ன சஸ்பென்ட் பண்ணிடுவாங்க. இது புரியாம இவங்க பேசிக்கிட்டிருக்காங்க!"
        அந்த பெண் நாங்க என்ன விதௌட் லயா ஏறி இருக்கோம். டிக்கெட்தான் வச்சிருக்கோம் இல்ல. பொம்பளங்கன்னு கொஞ்சம் கூட பாவம் பாக்காம பேசறீங்கசற்று வேகமாக சொல்ல,
      TTR  க்கு  கோபம் வந்துவிட்டது.
ஆமாம்மா!  I.D  இல்லன்ன விதௌட் தான். ரொம்ப திமிரா பேசற! என்று கத்த ஆரம்பித்துவிட்டார்.
   பக்கத்தில் இருந்தவர் ஏம்மா! அவர்தான் சொல்றாரு இல்ல. I.D கட்டாயம் கொண்டு வரணும்னு பேப்பர்ல போட்டிருக்கான் . ஸ்டேஷன் லயும் சொல்லிட்டுதான இருக்கான். அவரு சொல்றபடி செய்மா அதுதான் உங்களுக்கு நல்லது என்று TTR க்கு SUPPORT ஆக பேசத் தொடங்கினார்.

    அஞ்சு நிமிஷத்தில வரேன் அதுக்குள்ள ஒரு முடிவு எடுங்க என்று  TTR கிளம்ப அவருக்கு ஆதரவாக பேசியவர் இன்னும் ஒரு சிலர் அவர் பின்னாலேயே சென்றனர்.
    பின்னர்தான் தெரிந்தது அவர்கள்  R.A.C  பயணிகள்.அந்தப் பெண்கள் இறங்கி விட்டால் தனக்கு பர்த் தரும்படி கேட்கவே அவர்கள் TTR பின்னால் சென்றனர் என்பது. சுய நலம் எப்படி ஆட்டிப் படைக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.
    
    செய்வதறியாது திகைத்து நின்ற அவர்களுக்கு எப்படி உதவுவது என்று தெரியவில்லை நான் அவர்களிடம் TTR  வரட்டும் இன்னொரு தடவை கேட்டுப் பாக்கலாம். அப்படி ஒத்துக்கலன்னா Fine கட்டறதுக்கு வேணும்னா நான் ஹெல்ப் பண்றேன். என்றேன்.

      பின்னர் TTR வந்ததும் நான் கேட்டேன். இவங்களுக்கு வேற எதுவும் வழி எதுவும் இல்லையா? மினிமம்  FINE வாங்கி கிட்டு உதவி பண்ணுங்க இவங்கள பாத்தா இன்னொருத்தர் டிக்கட்ல ட்ராவல் பண்ற மாதிரி இல்ல. நீங்க நினைச்சா உதவி செய்யலாம் .
      என்ன சார்.படிச்ச நீங்களே இப்படி பேசலாமா? சீனியர் டிக்கட் செக்கர் வந்தால் நான் லஞ்சம் வாங்கிகிட்டு இவங்க ட்ராவல் பண்ண  நான் உதவி செஞ்சன்னு என்மேல நடவடிக்கை  எடுப்பாங்க! இந்த மாதிரி பரிதாபப் பட்டவங்க எவ்வளோ பேர் மாட்டிக்கிட்டுருக்காங்க தெரியுமா? இவங்களுக்காக நான் ரிஸ்க் எடுக்க முடியுமா?
     முனகிக் கொண்டே அவர்களைப் பார்த்து சரிம்மா, நீங்க மாட்டிகிட்டா என்ன மாட்டி விட்டுடாதீங்க. நீங்களா தொலச்சதா சொல்லிடுங்க" என்று சொல்லிவிட்டு புலம்பிக்கொண்டே போனார்.
இறங்கும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. TTR  க்கு பணம் கொடுக்க முனைந்தபோது கூட அவர் பெற்றுக்கொள்ளவில்லை என்று அந்தப் பெண் இறங்கும்போது சொன்னார் .  
 
     கிராமத்து ஏழை பெண்கள் அடையாள சான்றுக்காக எதை எடுத்து செல்ல  முடியும். அவர்கள் வைத்திருக்கும் ஒரே I.D ரேஷன் கார்டுதான். அதை அவர்கள் பயணம் செல்லும்போதெல்லாம் எடுத்துசெல்ல முடியுமா? அதிலும் குடும்பத் தலைவரின் புகைப்படம் இருக்குமே தவிர குடும்ப உறுப்பினர்கள் வேறு யாரேனும் பயணம் செய்தால் என்ன செய்வது.? இது போன்ற ஒரிஜினல் ஆதாரங்களை கொண்டு செல்லும்போது தவற விட்டுவிட்டால் பெறுவது எளிதா என்ன?
 
    பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன என்று சில விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம் கடைபிடிப்பது சரியானதுதான் என்றாலும் இதனால் அதிகமாக பாதிக்கப் படுபவர்கள் ஏழை மக்களே. முறைகேடுகளை செய்பவர்கள் போலி ஆதாரங்களை காட்டி தப்பித்து விடுகிறார்கள்.
    அந்த டிக்கட் பரிசோதகர் பரிதாபப்பட்டு விதிகளை    விட்டுக்கொடுத்தது சரியா? அல்லது ரயில்வே விதிகளின் படி பயணம் செய்ய அனுமதிக்காமலிருப்பது சரியா?   எனக்கென்னவோ மனிதாபிமான அடிப்படையில் பயணம் செய்ய அனுமதித்தது சரி என்றே தோன்றுகிறது.
 
  ********************************************************************

  கொசுறு : டிக்கெட் பரிசோதகரை TTR என்று அழைக்கிறோம். அதன் விரிவாக்கம் என்ன?
விசாரித்துப் பார்த்ததில் TTR என்பது தவறு TTE என்பதே சரி! TRAVELLING TICKET EXAMINER  என்பதே அதன் விரிவாக்கம் என்று தெரிந்து கொண்டேன்.   TTR என்பதற்கும் THROUGH TURNOUT  RENEWAL என்றும் ரயில்வேயில் விளக்கம் காணப்படுகிறது
 =======================

திங்கள், 17 ஜூன், 2013

தாயிடம் தோற்கும் தந்தைகள்

 தந்தையர் தினத்தை ஒட்டி எழுதப்பட்டது. நேற்று வெளியிட முடியவில்லை. தந்தைக்கு  சிறப்புக்கள் எப்போதும் தாமதமாய்த்தான் கிடைக்கும் போலிருக்கிறது.

  என்னுடைய ஹீரோ ரோல் மாடல்  எங்கப்பாதான் என்று  பிரபலங்கள் தங்கள் தந்தையைப் பற்றி கூறுவார்கள்.  அப்படி எல்லாம் நான் நினைத்ததில்லை. அப்பாவுக்கென்று பெரிதாக குறிக்கோள்கள் ஏதும் இருந்ததில்லை. அம்மாவின் விருப்பங்களை நிறைவேற்றுவதில்தான் கவனம் செலுத்தினார். பல வீடுகளில் அம்மாக்களின் அளவுக்கு மீறிய ஆளுமை தந்தையின் தனித்துவத்தை உணர விடாமல்  செய்து விடுகிறது. அப்படித்தான் எனது தந்தையும். எங்களை இதுதான் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப் பட்டதில்லை. எங்களை படி என்று வற்புறுத்தியதில்லை. படிப்புதான் வாழ்க்கை என்று மூளை சலவை செய்ததில்லை. ஒரு நாளும் அடித்ததில்லை; ஏன்? திட்டியது கூட இல்லை. அவர் மிகவும் நல்லவர் என்று பெயர் எடுத்திருக்கிறார் ஆனால் சாமர்த்தியசாலி என்று பெயர் எடுக்கவில்லை . அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தன. எந்தவித கெட்ட பழக்கமும் அவரிடம் இருந்ததில்லை.. வெற்றிலை கூட போடமாட்டார்.  அவரை ஒரு அப்பாவியாகவே பலரும் பார்த்தனர். இதுவே அவரது பலமாகவும் இருந்தது பலவீனமாகவும் இருந்தது. நீண்ட நாட்களாக அவரை பற்றி எழுத வேண்டும் நினைத்திருப்பேன்.   அவரது  நினைவுகளை அசை போட வாய்ப்பளித்த தந்தையர் தினத்துக்கு நன்றிகள் .சொல்லத்தான் வேண்டும்
 
  எனது தந்தை ஒரு ஆசிரியர். அதுவும் தலைமை ஆசிரியர் என்பதால் நல்ல ஆசிரியருக்கு  உரித்தான் பல குணங்கள் அவரிடம் ஒட்டிக் கொண்டிருந்தன.பிற்காலத்தில் அவை எனக்கும் தொற்றிக் கொண்டன.

   நான் பிறந்த நேரத்தில்  எனது தந்தை பள்ளியில் இருந்தததாகவும் கடுமையான புயல் மழை என்பதால் மாணவர்களை பாதுகாப்புக்காக இரவு முழுவதும் பள்ளியிலேயே தங்க வேண்டி இருந்தது என்றும் அம்மா சொல்வார்கள். அந்த கிராமத்தில் வாத்தியார் என்றால் அதிக மரியாதை உண்டு. ஊரில் வசதியும் செல்வாக்கும் உள்ள ஒருவர்  இலவசமாகவே தங்கு வதற்கு  இடவசதி செய்து  கொடுத்திருந்தார். அவர்கள் வீட்டு மாட்டுக் கொட்டகையை ஒரு முனையை தடுத்து வீடாக்கி கொடுத்தார்கள்.வேலையில் சேர்ந்தபோது அந்த வீட்டுக்கு வந்த அப்பா  ஒய்வு பெறும் வரை  அந்த வீட்டில்தான் இருந்தார். எனது அண்ணன் அக்கா ஆகியோர் மருத்தவமனையில் பிறந்தவர்கள். நான் மட்டும் அந்த வீட்டில் பிறந்தவன் என்ற பெருமை எனக்குண்டு. (புயல் காரணமாக மருத்துவமனை செல்ல முடியவில்லையாம். )

  மாலை நேரங்களில் பெரிய  வீட்டுக் குழந்தைகள்  ட்யுஷன் படிக்க வருவார்கள். அம்மாவையும் டீச்சர் என்றுதான் அழைப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து நானும் படிப்பேன்.ட்யுஷனுக்கு பணம் ஏதும் தரமாட்டார்கள்.  ஆனால்  தன் வயலில் விளையும் நெல், நிலக்கடலை, போன்றவற்றை அறுவடை நேரத்தில் எங்கள் வீட்டுக்கு கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். 

 அவர் தலைமை ஆசிரியராக பணியாற்றிய பள்ளியிலேயே என்னையும் சேர்த்தார். ஆறாம் வகுப்பு வரை அங்கேதான் படித்தேன். தந்தையே ஆசிரியராக இருக்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கே கிடைக்கும். அது எனக்கும் கிடைத்தது.  என் தந்தைக்கு விட்டுக் கொடுக்கும் குணம் உண்டு. அதனை பயன்படுத்திக் கொண்ட இன்னொரு பள்ளியின் தலைமை ஆசிரியர்  பணியாற்றிய இடத்தை விட்டு ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு பள்ளிக்கு ,  மனமொத்த மாறுதல் பெற்றுக்  கொண்டார். அந்தப் பள்ளிக்கு நடந்துதான் செல்லவேண்டும் .பேருந்து வசதியும் கிடையாது. அப்பாவுக்கு சைக்கிள் ஒட்டவும் தெரியாது. எங்கு சென்றாலும் நடந்துதான் செல்வார்.  நடராஜன் என்ற பெயருக்கு ஏற்ப நடராஜா சர்வீசிலேயே காலத்தை  கடைசி வரை கழித்து விட்டார்.

   அப்பா மாணவர்களை அடிக்க மாட்டார், அடிக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் கையைக் குவித்து முதுகில் லேசாக அடிப்பார். சத்தம் மட்டும்  பெரிதாக கேட்கும்; வலிக்காது என்று அவரிடம் படித்தவர்கள் கூறுவார்கள். அப்பாவுக்கு சில விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். பாட்மிண்டன் ஆடுவார்.

   பம்பரம் வாங்கிக் கொடுத்து பம்பரம்  விடுவதற்கு எனக்கு கற்றுத் தந்தார். அதில் சில வித்தைகளையும் செய்து காட்டுவார். வழக்கமாக பம்பரத்தை தரையில் சுற்றவைத்தது விட்டு பின்பு அதை கையில் லாவகமாக எடுப்பார்கள். அனால் அப்பா சாட்டையை வீசி அப்படியே பாமபரத்தை கையிலேயே நேரடியாக பிடித்து சுழலச் செய்வார். அதை பலமுறை செய்து நானும் கற்றுக் கொண்டேன்,
  சர்க்கசில் செய்வது போல மூன்று பந்துகளை மாற்றி மாற்றி கைகளில் தூக்கிப்போட்டு பிடித்துக் காட்டுவார்.நீண்ட குச்சியை விரல்களில் நிற்கவைத்துக் காட்டுவார். அதோடு அதை தூக்கிப் போட்டு அதன் மறுமுனையை அப்படியே விரல்களில் விழாமல் பிடிப்பார். 

    பனை ஓலையில் காற்றாடி செய்து வேல முள் கொண்டு வேகமாக சுழலச் செய்வார். பட்டம் செய்து கொடுப்பார். படத்திற்கு சூத்திரம் போடுவது எப்படி என்று சொல்லித் தருவார். பட்டம் விடும்போது நூல் வழியே ஓலை துண்டை அனுப்பு வார். அது சுற்றிக்கொண்டே வேகமாக உயரே சென்று பட்டத்தை சென்றடயும். அதை தந்தி என்று சொல்லி மகிழ்விப்பார்.

  விநாயகர் சதுர்த்தி வந்து விட்டால் போதும்; குடை செய்ய ஆரம்பித்து விடுவார். ஒரு மாதத்துக்கு முன்பே மூங்கில் காகிதம் இவற்றை சேகரித்து வைப்பார். விதம் விதமாக அழகான குடைகள் கடைகளில் கிடைத்தாலும் அவர் கையால் செய்து அதை பயன்படுத்துவதுதான் அவருக்கு பிடிக்கும். இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

  இவை எல்லாம் அப்போது எனக்கு ஆச்சர்யமாக தோன்றவில்லை. ஆனால் இப்போது நினைத்துப் பார்த்தால் வியப்பை ஏற்படுத்துகிறது. 

   ஏற்கனவே சொன்னது போல அப்பாவின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால் தாத்தாவின் ( மாம்பலத்தில் ) சொத்தில் தன் உரிமையை  விட்டுக் கொடுத்தார்.  அதனால் கோபம் அடைந்த  அம்மாவின் வற்புறுத்தலால் சென்னையின் புறநகர் பகுதியில் மனை வாங்கினார். அண்ணனின் மேல் படிப்புக்காக சென்னைக்கு இடம் பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது.   எப்படியோ கஷ்டப்பட்டு வீடும் கட்டி விட்டார்.  நாங்கள் இங்கே தங்கி இருக்க அப்பா ஊரிலேயே இருந்தார். மாதம் ஒரு முறைதான் வருவார். 

   அப்பாவுக்கு சங்கீத  ஞானமும் கொஞ்சம் உண்டு. ராகங்களை அடையாளம் கண்டுபிடித்து விடுவார். "தீராத விளையாட்டுப் பிள்ளை" என்ற பாடல் அப்பாவுக்கு மிகவும் படிக்கும். எங்களை தூங்க வைக்க அந்த பாடலையே பாடுவார் . அப்பாவுக்கு சமைக்கவும் தெரியும். ருசித்து சாப்பிடவும் செய்வார்.  கதை புத்தகங்களில் அவருக்கு ஆர்வம் இருந்ததில்லை. செய்தித்தாளை வைத்துக் கொண்டு நாள் முழுதும் வாசித்துக் கொண்டிருப்பார்.

    அப்பாவுக்கு எப்போதுமே எல்லோரும் நல்லவர்கள்தான் என்றே எண்ணுவார். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் முதலில் நம் மீது தவறு இருக்குமோ என்றுதான் சிந்திப்பார். 

   ஒல்லியான தோற்றம் அவருடையது .அவருக்கு நடையே உடற்பயிற்சியாக இருந்ததால் ப்ரெஷர், சுகர் என்று எதுவும் அவருக்கு வந்ததில்லை.அவரது வாழ்நாளின் இறுதி நாட்களில் மட்டுமே சிறிது சிரமப் பட்டார். அவருக்காக மேற்கத்திய கழிப்பறை அமைத்தோம். சில நாட்கள் மட்டுமே பயன் பட்டது. 

    ஒரு நாள் காலை அப்பா லேசாக நெஞ்சடைக்கிறது என்று சொல்ல ஒன்றுமில்லை காப்பி சாப்பிடுங்கள் என்று காபியை கொடுக்க, விழுங்க முடியாமல் அவதிப் பட்டார். பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவரது உயிர் மெல்லப் பிரிந்தது. அதை மனம் நம்ப மறுத்து சினிமாவில் வருவது போல மார்பில் லேசாக இரு கைகளாலும் வேகமாக தட்டிப் பார்த்தேன். பயன் ஏதுமில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் சில நிமிடங்கள் திகைத்து நின்றேன். உடனே அழுகை வரவில்லை. பின்னர் கண்கள் கலங்க ஆரம்பித்தன. ஓ! வென்று கதற நினைத்த நான் அடக்கிக் கொண்டேன்.  கடைசி நேரத்தில் அவரது அருகில் இருந்தமைக்காக லேசான திருப்தியுடன் அடுத்த பணிகளை கவனிக்க சென்றேன்.அவரை பொருத்தவரை நிறைவாகவே வாழ்திருப்பார் என்று நம்புகிறேன்.

   எங்கள் பகுதியில் முதலில் வீடு கட்டியது அப்பாதான். அவர் பணியாற்றிய போது ஆசிரியர்களின் சம்பளம் மிகக் குறைவு. அதனால் வீடு கட்டியதை பெருமையாகக் கருதினார்.

   இன்று அது பழமையானதாக மாறி விட்டது அதன் பின்னர் கட்டிய பல வீடுகள் இன்று பிளாட்டுகளாக மாறி விட்டது.அந்த வீட்டை இடித்து விட்டு புதிதாக கட்ட நினைத்துள்ளோம் ஆனால் மனம் வரவில்லை. ஒவ்வொரு கல்லும் என்னை இடிக்காதே என்று சொல்வது போல் எனக்குத் தோன்றும்.. அதனால் இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறோம்

   தாய்களைப் போலவே பெரும்பாலான தந்தைகளும் தனக்காக வாழ்வதில்லை. தாய்களிடம் தோற்றுப் போவதை தந்தைகள் பெரிது படுத்துவதில்லை. இறந்தபின்பு அவரை போற்றுவதை விட, இருக்கும்போது நம்மை தாங்கிய தந்தையை கடைசி வரை தாங்குவதே மகன் தந்தைக்காற்றும் உதவியாகக் கொள்வோம். 
நம் பிள்ளைகளும் நம்மை நினைவு கூறும் அளவுக்கு நடந்திருக்கிறோமா? 
அது  தெரிய இன்னும் பல காலம் காத்திருக்க வேண்டும்.


****************************************************************************************