என்னை கவனிப்பவர்கள்

தொழில்நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழில்நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 அக்டோபர், 2020

திருக்குறள் கற்பிக்க எக்சல் பயன்படுமா?

                 


மைக்ரோ சாஃப்ட் எக்சல்லின் பயன்கள் அளவிடற்கரியது. அலுவலகப் பயன்பாட்டில் எக்சல் கணக்கீடுகள் செய்வதற்கும் தரவுகள் சேமித்து வைப்பதற்கும் ஒரு  கருவியாக மட்டுமே பெரும்பாலோர்  இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.பாடங்கள் கற்பித்தலுக்கோ மதிப்பிடுதலுக்கோ இதனை பயன் படுத்துவது மிக அரிது.
   கணிதம் கற்பித்தலில் இதனைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் மொழிக் கற்பித்தலுக்கும் இதனைப் பயன்படுத்த முடியும் எனபது சிலருக்கு வியப்பாக இருக்கலாம். . குறிப்பாக தமிழ் கற்பித்தலுக்கும் எக்சல் விரிதாளை பயன்படுத்தலாம் என்பதற்கான முயற்சியே இது. ஆசிரியர்கள் ஆர்வமுள்ள பெற்றோர் என  ஒரு சிலருக்காவது உதவும் என்று நினைக்கிறேன்.
      இன்று அரசு பள்ளிகளில் கூட கணினி பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாணவர்கள் பயிற்சி செய்தும் வருகின்றனர்.
      மதிப்பீடு செய்வதற்கும் தானே கற்றலுக்கும் கணினியை எந்தப் பாட ஆசிரியரும் பயன்படுத்த முடியும்.  எக்சல் மூலம் சிறிய ஆர்வமூட்டும்  தேர்வுகள்  நடத்தி  மாணவனின் கற்றலை மேம்படுத்தலாம்.

      உதாரணத்திற்கு 6 ம் வகுப்பு தமிழில் திருக்குறள் கற்பித்தலுக்கு சுவாரசியமான உறுதுணையாக எக்சல் எவ்வாறு விளங்கமுடியும் என்று பார்க்கலாம். அதனை இங்கே பாடப் புத்தகக்த்தில் உள்ளவாறு பயன்படுத்தி இருக்கிறேன்.

    6 ம் வகுப்பில்  10 திருக்குறள் உள்ளன. ஆசிரியர் அதனைக் கற்பித்து முடிந்ததும் வழக்கமான வாய்மொழித் தேர்வோ, அல்லது எழுத்துவழித் தேர்வோ வைப்பார்கள். அது மாணவர்களுக்கு சில சமயங்களில் சலிப்பூட்டும். அதனையே கணினியில் எக்சல்லைப் பயன்படுத்தினால் எவ்வளவு சுவாரசியமாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்.   

      ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஏழு சீர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒவ்வொரு சீருக்கும்  ஒரு செல்  என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு செல்லை கிளிக் செய்தால் பக்கத்தில் ஒரு Down arrow தெரியும். அதனை க்ளிக் செய்ய Drop down menu தோன்றும். அந்த கீழ்நோக்குப்பட்டியில் இருந்து(Drop down menu)  சரியான சீரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு 7 சீர்களையும் சரியாக தேர்ந்தெடுத்து விட்டால் அனைத்தும் பச்சை நிறத்திற்கு மாறி விடும்  பக்கத்தில் ஒரு டிக் மார்க் வந்து விடும். அதன் பக்கத்தில் குறளின் சரியான பொருள்  தோன்றும்/  திருக்குறளில் தவறு இருந்தால் பொருள் காட்டாது. மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்..
   ஒரு திருக்குறளுக்கு 2 மதிப்பெண்கள். சரியாக குறள்களை அமைத்துவிட்டால் அதற்குரிய மதிப்பெண்கள் கீழே தெரியும் படி அமைத்திருக்கிறேன். நீங்களும் முயற்சி செய்து பார்த்து இது எப்படி இருக்கிறது என்று கூறினால் மகிழ்ச்சி அடைவேன்.
      இதனை டவுன்லோட் செய்து உங்கள் குழந்தைகளுக்கும், ஆசிரியர்களாக இருந்தால் உங்கள் மாணவர்களுக்கும் பயன்படுத்திப் பாருங்கள். மேலும் வேறு குறள்களுக்கும் இதனைப் பயன்படுத்தலாம். ஷீட் 1 இல் இதற்கான உள்ளீடுகள் உள்ளன. நீங்கள் விரும்பினால் Unprotect செய்ய பாஸ்வேர்ட் தருகிறேன். தரவுகளை மாற்றிக் கொள்ள முடியும்

  கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கிறீர்களா? இந்தக் கட்டத்திற்குள்ளே சரியான திருக்குறள் சீர்களை தேர்ந்தெடுங்கள்.  உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்
 (சரி தவறு     என்பதைக் குறிக்கும்  குறியீடுகள் ஆண்ட்ராய்ட் ஃபோனில் வேறுவிதமாகத் தெரியும் அதனால் பக்கத்தில் சரி,தவறு என எழுத்தில் தெரியுமாறு அமைத்திருக்கிறேன். விண்டோஸ் கணினியில் குறியீடுகள் சரியாகத் தெரியும்)

 

    மேலுள்ள எக்சல் ஃபைலின் இடது கீழ்ப்புறத்தில் டவுன்லோட் பட்டன் உள்ளது. அதனை கிளிக் செய்தால் இக்கோப்பு உங்கள் கணினியில் பதிவிறக்கம் ஆகிவிடும். பின்னர் இதனைத் திறந்து Save as Template  ஆக சேமித்தால் கேள்வித்தாள் போல் பயன்படுத்த முடியும். ஒவ்வொரு மாணவனும் இதனைப் பயன்படுத்தி தேர்வு எழுதி முடித்ததும் அதனை சேமித்தால் அப்படியே சேவ் ஆகாமல் இன்னொரு பெயரில்தான் சேமிக்க முடியும். இதனால் மீண்டும் இதே ஃபைலை இன்னொரு மாணவனுக்கும் கேள்வித்தாளாகப் பயன்படுத்தலாம்

இது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயன் உள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.

குறிப்பு: மேலே உள்ள ஃபிரேமுக்குள் அனைத்தும் காட்சி அளிக்க Ctrl பட்டனை அழுத்திக்கொண்டு மவுஸை ஃபிரேமுக்குள் வைத்து Scroll செய்தால் பார்வைக் கேற்றபடி உள்ளடக்கத்தை  அட்ஜ்ஸ்ட் செய்து கொள்ளலாம்.


 ------------------------------------------------------------------------------------------------------------

தொடர்புடைய பிற பதிவுகள்- விரும்பினால் இவற்றையும் படிக்கலாம்.

1.உங்களால் முடியுமா?ஓரு Excel சவால்
2.அதிகம் பயன்படுத்தப்படாத எக்சல் வசதிகள்.-Excel Past.Special.
3.எக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா   

4.EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற 

5.  எக்சல் தப்பா கணக்கு போடுமா?

 

 

திங்கள், 6 ஜூலை, 2020

அதிகம் பயன்படுத்தப்படாத எக்சல் வசதிகள்.-Excel Paste Special

Grouping worksheets in MS Excel | Philadelphia IT Company | IT ...

     அலுவலகங்களில்  மைக்ரோ சாஃப்டின் பயன்பாட்டில் வோர்டும் எக்சல்லும் இன்றும் கோலோச்சுகின்றன என்பதை மறுக்க முடியாது. எத்தனையோ இலவச  ஆஃபிஸ் செயலிகள் இருந்தாலும் மைக்ரோசாஃப்ட் கொடுக்கும் வசதிகளை கொடுக்க முடிவதில்லை. எக்சல்லை பயன்படுத்துவது எப்போதுமே ஒரு ஆனந்தம். நம்மில் பலருக்கு அடிப்படை எக்சல் பயன்பாடுகள் தெரிந்தாலும் அதில் உள்ள எளிய  பயன்பாடுகளை பயன்படுத்துவதில்லை. சுற்றி வளைத்துத்தான் செய்வதைப்  பார்த்திருக்கிறேன். நானும்தான். ஆனால் தேவை மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் அவ்வப்போது முயற்சிப்பது உண்டு. எக்சல் எனும் பிரம்மாண்டத்தில் எதையாவது புதிதாக கற்றுக் கொள்ள வாய்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது. இவ்வளவு நாள் இதை அறியாமல் இருந்தோமே என்று வெட்கப் பட்டதும் உண்டு. அப்படி ஒன்றுதான் இது
   ஒரு எக்சல் ஃபைலில் விவரங்கள் கீழே உள்ளவாறு இருந்தன ஆனால் சில மாவட்டங்களின் பெயர்கள்  ஒன்றின் கீழ் ஒன்றாக இல்லாமல் அதற்கு கிடையான அடுத்தடுத்த காலங்களில் இருந்தன ஆனால் அவை அனைத்தும் ஒரே காலத்தில் வரவேண்டும்.இதை அலுவலக எழுத்தர் ஒவ்வொரு மாவட்டமாக காப்பி செய்து முதல் காலத்தில் பேஸ்ட் செய்து கொண்டிருந்தார்.
    ”இத  ஈசியா செய்யறதுக்கு வழி இருக்கா?” என்றேன்  தெரியல என்றார்
நான் யோசித்தேன். இதில் விவரங்கள் குறைவு.  தனித்தனியாகக் கூட  செய்து விடலாம்.  ஆனால் 100 க்கும் மேற்பட்ட விவரங்கள் இருந்தால் என்ன செய்வது? அதற்கும் இதே முறையை கடைபிடித்தால் நீண்ட நேரம் ஆகுமே! நிச்சயம் எக்சல்லில் இதற்கான வழி இருக்கும். ஆனால் நமக்குத்தான் தெரிவதில்லை என்று நம்பினேன். சற்று முயற்சித்ததும் வழி கிடைத்தது. 
   இதுபோன்ற எளிய நுட்பங்களை அறிந்து கொள்ள சிலரேனும் விரும்பலாம். அவர்களுக்காகவே இந்தப் பதிவு. இது ஆசிரியர்கள் மாணவர்கள் எழுத்தர்களுக்கு டைப்பிஸ்டுகளுக்கு உதவியாக இருக்கும்.
   சரி எப்படி இதனை எளிதாகச் செய்வது என்று பார்க்கலாம்
கீழே மாவட்டங்களின் பெயர்கள் ஒன்றின் கீழ் ஒன்றாக இல்லாமல் அதற்கு கிடையாக வேறொரு செல்லில் இருக்கிறது
செய்ய வேண்டியது என்ன? மாவட்டங்களின் பெயர்களை ஒன்றின் கீழ் ஒன்றாக வரச் செய்ய வேண்டும்.  ஆனால் ஒவ்வொன்றாக காப்பி செய்யக் கூடாது.


 (இந்த ஃபைலை டவுன்லோட் செய்து முயற்சித்தும் பார்க்கலாம்)

       சாதரணமாக எக்சல்லில்  கண்டெண்ட்களை Ctrl+C மூலம் காப்பி செய்து Ctrl+V மூலம் பேஸ்ட்  செய்வோம் அப்படி செய்யும்போது ஏற்கனவே உள்ள செல்களில் உள்ளவை போய்விடும். ஒவ்வொன்றாக காப்பி செய்து காலி இடத்தில் நிரப்ப நேரம் அதிகம் எடுத்துக் கொள்ளும். இதனை எளிதாகச்  செய்ய  Paste Special  என்ற அதிகம் பயன்படுத்தப்படாத வசதியைப் பயன் படுத்தலாம் 



Step 1. District 2 காலத்தில் உள்ள அனைத்தையும் காப்பி  செய்ய வேண்டும்.


 2. District1 காலத்தில் அரியலூர் என்று உள்ள செல்லை ரைட் க்ளிக் செய்து பேஸ்ட்  ஸ்பெஷல் என்ற ஆப்ஷனை தேர்வுசெய்யவேண்டும்



3Past Special உள்ள Skip Blanks ஐ (டிக் மார்க்) Check செய்து ஓகே கொடுக்க வேண்டும்


4. பின்னர் District 2 காலத்தில் உள்ள அனைத்தும் இடது புறம் அதற்கு உள்ள காலி இடங்களில் பேஸ்ட் செய்யப்பட்டு விடும்  ஏற்கனவே உள்ளவையும் டெலிட் ஆகாமல் அப்படியே இருக்கும்





5.  இதே போல District 2 காலத்தில் உள்ளவற்றைத் தேர்வு செய்து அதே முறையில் காப்பி செய்து  District 1 இன் கீழ் வைத்து பேஸ்ட்  ஸ்பெஷல் மூலம் Skip Blanks செய்து ஓகே கொடுத்தால்  அவையும் ஒன்றன் கீழ் ஒன்றாக வந்து விடும் 
6. இப்போது தேவை இல்லாத இரண்டு காலங்களை டெலிட் செய்து விடலாம்.

மேலே சொன்னதை அப்படியே கீழே வீடியோ இணைப்பில் பார்க்கலாம்




     இன்னும் சற்று யோசித்த போது எனக்கு இன்னும் சில வழிகளும் புலப்பட்டன.   அவை என்னவாக இருக்கும் என்று தெரிந்தவர் கூறலாம் . 

சனி, 3 நவம்பர், 2018

உங்களால் முடியுமா?ஓரு Excel சவால்


கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்

நீங்கள் எக்சல்லில் பணிபுரிவதில் ஆர்வம் உள்ளவரா? அப்படி எனில் ஒரு சிறிய சவால்.  இதன் கடைசியில்
  கணினித் துறையில் பல்வேறு மாற்றங்கள் வந்தபோதும் கடந்த 15  ஆண்டுகளுக்கும் மேலாக எம்.எஸ்.ஆஃபீஸ் பயன்பாடு அரசு அலுவலகங்கள்,  கல்வி நிலையங்கள் தனியார் நிறுவனங்களிலும் இன்றுவரை ஆக்ரமித்துள்ளன என்பதை மறுக்க முடியாது. அதும் Word,Excel, Power point பயன் படுத்தாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அதற்கான தேவைகள் இருந்து கொண்டே உள்ளன.
ஆவணவங்கள் தயாரிப்பதற்கு வோர்டும், தகவல்களைப் பெற்று தொகுக்க எக்செல்லும் தனி மென்பொருள் வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு இன்று வரை வரப் ப்ரசாதமாகத் திகழ்கின்றன.

Stand up காமெடியில் ஒரு மென்பொருள் ஊழியர் கூறுவார். ”நான் CTS ஆஃபீசில் பணி புரிவதாக என் அம்மா பெருமையுடன் மற்றவர்களிடம் கூறுவார். ஆனால் நான் உண்மையில் இங்கு எம்.எஸ் ஆஃபீசில் பணிபுரிகிறேன் என்பார்”. பெரிய மென்பொருள் நிறுவனங்கள் கூட எம்.எஸ் ஆபீசை நம்பி இருக்கின்றன என்பதே உண்மை நிலை
   எனக்கு எக்சல்லில் கொஞ்சம் ஆர்வம் உண்டு. அதன் பிரம்மாண்டம் என்னை வியக்க வைக்கக் கூடாது.அதன் பயன்பாடுகள் பல அனைவராலும் பயன்படுத்தப் படுவதில்லை  ஒவ்வொரு முறையும் எக்சல்லில் நுழையும்போது புதிதாக ஏதாவது ஒன்று கிடைக்கிறது. அதனால் இன்றுவரை எக்சல்லில் கற்றுக் குட்டியாகவே இருகிறேன். அட இவ்வளவு நாள் இதனைப் பயன்படுத்தாமல் போனோமே என்று வருந்தியதுண்டு. சில நேரங்களில் சில பணிகளை செய்ய வெகு நேரம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் அதனை எக்சல்லில் எளிதாக செய்ய வழி இருக்கும். ஆனால் நாம் அறிந்திருக்க மாட்டோம்

  நான்  எனக்குத் தெரிந்த நான் அனுபவபூர்வமாக கற்றுக் கொண்ட விஷயங்களை கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள் என்ற தலைப்பில் பகிர்ந்து வந்திருக்கிறேன். தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு அது நிச்சயம் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.

போட்டி இதுதான்

      அலுவலகத்தில் நிறைய தகவல்கள் அடங்கிய எக்சல்  அட்டவணை ஒன்றை உயர் அலுவலருக்கு அனுப்ப வேண்டும். தகவல்களை உள்ளீடு செய்த பின்பும் அன்ப்புவதற்கு தாம்தம் செய்தார் எழுத்தர். காரணம் கேட்டதற்கு 1000 க்கும் மேற்பட்ட வரிசைகளும் 10000 மேற்பட்ட செல்கள் அடங்கிய அட்டவணயில் சில செல்கள் காலியாக இருந்தன. அவற்றை  காலியாக விடாமல்  விடாமல் NIL என்று நிரப்பித்தான் அனுப்ப வேண்டும். காலி செல்கள் சீராக இருந்தால் அவற்றை எளிதில் நிரப்பி விடுவேன் ஆனால் அவை ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால் செல்களை தேடித் தேடி நிரப்ப வேண்டி இருக்கிறாது அதனால் தாமதம் ஆகிறது என்றார்.

நான் எக்சல் அட்டவணையை பார்த்தேன். இதனை செய்வதற்கு எக்சல்லில் நிச்சயம் ஏதாவது வழி இருக்கும் என்று நம்பினேன். நான் நினைத்தது போலவே இவ்வேலையை எளிதாக்க வசதிகள் இருப்பதை கணடறிந்தேன். உடனே அதனை பயன்படுத்தி NIL ஐ  காலி செல்களில்  ஒரே நிமிடத்தில் கட்டங்களில் நிரப்பினேன். 
எப்படி?.

உதாரணத்திற்கு ஒரு சிறிய அட்டவணையைத் தருகிறேன். அவற்றில் காலி இடங்களை NIL என்று எளிதில் நிரப்புவதற்கான  எளிய வழி என்ன?  நான் எப்படி நிரப்பி இருப்பேன் அல்லது நான் செய்ததைவிட எளிமையான வழிகளும்  உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும்.  அவற்றை தெரிவித்தால் நானும் தெரிந்து கொண்டு பயன் அடைவேன்.


மேலே வலது புற்த்தில் ஊள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி எக்சல் ஃபைலை டவுன்லோட் செய்தும் முயற்சித்துப் பார்க்கலாம்.

சரியாக சொல்பவர்களுக்கு




தொடர்புடைய பிற பதிவுகள்

எக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா   

முதலில் வந்ததோடு சரியான விடை சொன்ன மதுரைத்தமிழனுக்கு வாழ்த்துகள். வேறு யாரேனும் சொல்கிறார்களா என்று பார்ப்பதற்கு விடையை தற்காலிகமாக மறைத்து வைக்கப்படும்.


வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

உங்கள் படைப்புகளை மின்னூலாக்கலாம் சென்னை முகாமுக்கு வாருங்கள்

       

   எழுத்தாற்றல் தம்மிடம் இருக்கிறது என்று நம்பும் ஒவ்வொருவருக்கும் தங்கள் படைப்புகளை நூல்களாக்க வேண்டும் என்ற கனவு இருக்கும்.முன்பெல்லாம் என்னதான் திறமை இருந்தாலும் தங்கள் எழுத்துக்களை அச்சில் பார்ப்பது எளிதானதாக இருக்கவில்லை. பத்திரிகைகளுக்கு  படைப்புகளை அனுப்பி சோர்ந்து போய் தங்கள் எழுத்துத்  திறமை இருப்பதயே மறந்து போனவர் பலர்.
      இணையத்தின் ஆதிக்கம் தொடங்கியதும் அது பலரையும் தன வசப் படுத்திக் கொண்டது. தகவல் தொடர்பின் பரிமாணங்கள் விரிவடைந்தன. நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள் நான் இருக்கிறேன் என்று கைகுலுக்கி அழைத்தது. படைப்புகளையும் எண்ணங்களையும்  இலவசமாக வெளிப்படுத்த வாய்ப்பு அளித்தன. அச்சுப் பத்திரிகைகள் அளிக்கத் ்தவறிய வாய்ப்பை  இணையம் வழங்கியது.  கதை கவிதை கட்டுரை அரசியல் , நகைச்சுவை என விரும்பிய வண்ணம் தங்கள் படைப்புகளை வெளியிட்டு மகிழ்ந்தனர். வலைப்பூகள், முகநூல், டுவிட்டர் என அவரவர்க்கு ஏற்ற களங்களில் தங்கள் எண்ணங்களை பல்வேறு  வடிவங்களில் கொட்டித்   தீர்த்தனர். ஒரு சிலர்தான்  எழுத்தாளராக ்முடியும் என்ற நிலை மாறி படைப்பாளிகளின் எண்ணிக்கை   எண்ண முடியாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டிருகிறது      பத்திரிகையில்  மட்டுமே எழுதிய பிரபலங்களும்  இணையத்திலும்  இயங்கவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகினர். ஆனாலும் அச்சு வடிவில் தங்கள் படைப்பைக் காண வேண்டும் என்ற ஆவல் காரணமாக பலரும் இணையத்தில் எழுதிய படைப்புகளை நூலாக வெளியிட்டு  மகிழ்ந்தனர்.

    காலத்தின் கட்டாயம் அச்சு நூல்களுக்கு இன்னொரு வடிவமாக     மின்னூல்  உருப் பெற்றது .   ஒரு  அறை முழுதும் நிரப்பக் கூடிய நூல்கள் கையடக்கக் கருவியில்  அடங்கி விடக் கூடிய நிலை உருவானது.   இணையத்தில் இலவசமாகவும் விலைக்கும்    ஏராளமான மின்னூல்கள் கிடைக்கின்றன. மின்னூல் படிப்பதர்கேன்றே கிண்டில் ரீடர் போன்ற சாதனங்களும் வந்துவிட்டன.

  இத்தகைய சூழலில் மின்னூல், படைப்பாளிகள் மற்றும்   வாசகர்கள் தவிர்க்க   இயலாத ஒன்றாக ஆகிவிட்டது .பொழுது போக்குக்காக எழுதி வருவோரும் தங்கள் படைப்புகளை மின்னூலாக்கி இலவசமாகவோ விலைக்கோ வழங்குவதற்கான வாய்ப்புகள் விரவிக் கிடக்கின்றன 

  இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கும் பலருக்கும் தங்கள் படைப்புகளை மின்னூலாக்கிப் பார்க்கும் ஆசை இருக்கக் கூடும் . கொஞ்சம் தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் தங்கள் படைப்புகளை தாங்களாகவே மின்னூலாக்க முடியும் என்றாலும் தொழில் முறையிலான மின்னூல் தரமும் வடிவமைப்பும் படிப்போரைக் கவர்வதாக இருக்கும். 
அத்தகைய ஒரு வாய்ப்பை புஸ்தகா  டிஜிடல்    மீடியா  http://www.pustaka.co.in/  ஏற்படுத்திக் கொடுக்க   முன் வந்துள்ளது.

   சமீபத்தில் புதுக்கோட்டையில் கவிஞர் முத்து நிலவன் அவர்களின் ஒருங்கிணைப்பில் வெற்றிகரமாக மின்னூல் ஆக்க முகாம் நடை பெற்றதை  அறிந்திருப்போம்.  ஏற்கனவே பல அருமையான நூல்களை எழுதியவரான கவிஞர் முத்துநிலவன் அவர்கள் தன்படைப்புகளையும் மின்னூலாக்கி கணித் தமிழ் வளர்ச்சியில் தன்பங்கை முன்னிறுத்தினார் . மேலும் பல கவிஞர்கள் எழுத்தாளர்கள் ,வலைப் பதிவர்கள் தங்கள் படைப்புகளை மின்னூலாக்குவதற்கான ஒப்பந்தம்  பெறப்பட்டது.
     பல்வேறு படைப்பாளிகளின்  வேடந்தாங்கலான  சென்னையிலும் இத்ததகைய மின்னூலாக்க முகாம் நடத்த சென்னையில் உள்ளவர்கள் கூட காட்டாத ஆர்வத்தைக் கவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்கள் காட்டி அதற்கான ஏற்பாடுகளில் உறுதுணையாய் நிற்கிறார்.அதற்கு அவருக்கு நன்றி  கூற கடமைப் பட்டிருக்கிறோம். நல்லதோர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வோம் 

சென்னையில்   சிறப்பான மின்னூலாக்க முகாம் ஏற்பாடு செய்யப்
பட்டுள்ளது   
 முகாம் நடை பெறும்   இடம் 

ஹோட்டல் ராஜ் பேலஸ் 
12/1 தணிகாசலம் சாலை ,
தி நகர் 
சென்னை 17 

நேரம் : 6.00 PM- 8.30 PM
நாள் ;   25.02.2017

ஆர்வம் உள்ளோர் இம் முகாமில்   கலந்து  கொண்டு தங்கள் படைப்புகளை  மின்நூலாக்கி  உலகெங்கும் உலவச் செய்யலாம். 
              ஏற்கனவே நூல் வெளியிட்டிருப்போர் தங்கள் நூலின் ஒரு பிரதியும் தனது புகைப்படமும் கொண்டு வந்தால் போதுமானது  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . வலைப்பூக்கள், முகநூல் போன்றவற்றில்  எழுதியவர்களும்ட   விரும்பினால்  தங்கள் படைப்புகளின்   மென்பிரதி    மூலம்   மின்னூலாக்கிக் கொள்ளலாம்   . 

மேலும் விவரங்களுக்கு 


கவிஞர் முத்து நிலவன் அவர்களை தொடர்பு கொள்ளவும் 

கைபேசி எண் 9443193293


மின்னஞ்சல் muthunilavanpdk@gmail.com

இத்தகவலை எழுத்தாளர்களுக்கும்  நண்பர்களுக்கும்  தெரிவித்து பயன் பெற வேண்டும்   என கேட்டுக் கொள்கிறேன் 

****************************************************************************************

சனி, 22 அக்டோபர், 2016

திண்டுக்கல் தனபாலனுக்கு ஒரு மடல்


அன்பு அன்பரே!

வணக்கம்.
    திண்டுக்கல் என்றால் பூட்டு என்று நினைத்துக்   கொண்டிருந்த எங்களை பூட்டை மறந்து திண்டுக்கல் என்றால் தனபாலன் என்றே மாற்றிவிட்ட அற்புதத்தைச் செய்த நீ இப்போது எங்கே இருக்கிறாய். உமது பின்னூட்டங்கள் இல்லாமல் களை இழந்து தவிக்கிறது வலைப் பதிவுகள். காலை எழுந்ததும் கணினி உன் முகத்தில் தானே விழிக்கும். சுறுசுறுப்புக்கு இன்னொரு பெயர் திண்டுக்கல் தனபாலன் அல்லவா?

    பின்னூட்டப் புயலே! என்னைப் போன்ற பலர் உனது பின்னூட்டங்களை நம்பித்தானே பதிவுகள் எழுதிக் கொண்டருந்தோம். நீ நுழையாத வலைப் பக்கங்கள் உண்டா? . வண்டு காணாத பூக்கள் இருக்கலாம். உன் பின்னூட்டம் காணாத வலைப் பூக்கள்  காண இயலாதே?  பல வலைப்பதிவுகளில் உனது பின்னூட்டம் மட்டுமே அல்லவா இருக்கும். உனது பின்னூட்டத்தால் யாரையும் காயப் படுத்தியது இல்லை. மோசமான பதிவு என்றாலும் பாரட்டித் தானே பின்னூட்டம் இடுவாய்.  பதிவு எழுதி முடிக்கும் அடுத்த வினாடி உனது பின்னூட்டம் எட்டிப் பார்க்குமே. எப்படி என்று நாங்கள் வியந்து போவோமே! 

   நீ பின்னூட்டத்தால் மட்டுமல்ல தரமான பதிவுகளாலும் அல்லவா எங்கள் உள்ளம் கவர்ந்தாய். திருக்குறளை வைத்து நீ எழுதிய பதிவுகள் அனைத்தும் முத்துக்களாயிற்றே! வள்ளுவன் இருந்தால் உமது சுவாரசியமான குறள் வலைப் பதிவுகள் இல்லாதது  கண்டு  வருத்தப் பட்டிருப்பான்.   திருக்குறளில் மட்டுமா திரைப்படப் பாடல்களில் நீ விற்பன்னன் அல்லவா?  எந்த ஒரு கருத்தாக  இருப்பினும் பொருத்தமான திரைப் பாடலை சுட்டிக்காட்டி அசத்திக் கொண்டிருப்பாயே!

   அதற்கும் மேலாக வலையுலக மந்திரவாதியாக அல்லவா விளங்கினாய். உனது வலைப் பக்கத்தில் விதம் விதமான தொழில் நுட்ப வித்தைகள் காட்டி எங்களை மகிழ்வித்தாயே!  உனது வலைப்பதிவுகளில்  எழுத்துகள் நடனமாடும் . படங்கள் பாடல் பாடும்.   சுட்டியை வைத்தால் ஒரு ஜாலம் எடுத்தால் இன்னொரு ஜாலம். சொடுக்கினால் பல வித்தை . உன்க வலைப்பூ காண்களுக்கும் மனதுக்கும் அறிவுக்கும் விருந்தாக திகழ்ந்ததே!  இவற்றை எல்லாம் எப்படிக்  கற்றுக் கொண்டாய் என்று நாங்கள் வியப்பால் விழிகள் விரிப்போம். நீயோ அமைதிப் புன்னகையால் எங்களை ஆட்கொள்வாய்.

  பதிவுகளில் தொழில்நுட்ப மாயாஜாலம் செய்த நீ உனக்கு தெரிந்தவற்றை மற்றவருக்கும் கற்றுக் கொடுக்க முன்வந்தததை நாங்கள் மறக்க முடியுமா? பலரது வலை வடிவமைப்பு உன்னுடைய  கைவண்ணம்தானே! தொழில் நுட்ப சிக்கல்கள் தீர்க்க  உதவி என்று சொல்லி மின்னஞ்சல் அனுப்பினால் போதும்  இருந்த இடத்தில் இருந்து மட்டுமல்ல தேவைப் பட்டால் நேரில் வந்தும் உதவும் பண்பாளர்   ஆயிற்றே. 

  கவிஞர் முத்து நிலவன் அவர்கள் உங்களுக்கு  வலையுலகம் சார்பாக வலைச்சித்தர் என்று பட்டம் கொடுத்தார். சித்தர்கள் திடீரென்று திடீரென்று மறைவார்கள்.காட்சியளிப்பார்களாம் அது போல ஒளிந்து நின்று ஆட்டம் காட்டுகிறாயோ!
   புதுக்கோட்டை வலைப் பதிவர் சந்திப்பின் வெற்றிக்கு காரணமானவனே!  அந்த திருவிழாவிற்குப் பின்வலைப் பதிவிலும் உன்னை சந்திக்க முடியாமல்  ஏங்குகிறோம். வலை வாசம் செய்த நீ வனவாசம் போனது ஏன்? முகநூலிலாவது முகம் காட்டிக் கொண்டிருந்தாய்.இப்போது முகநூல் பக்கமும் காணவில்லையே!

   கணினியைத் தொடாமல் உன்னால் இருக்க முடியும் என்று எங்களால் நம்ப முடியவில்லை. வாழ்க்கையில் ஏற்றங்கள் இறக்கங்கள் இடர்பாடுகள் வந்து செல்வது வழக்கம்தான்., ஆனால் அவை  எல்லாம் வள்ளுவன் வழி அறிந்த உன்னை ஒன்றும் செய்ய இயலாது என்பதை அறிவோம்.. 
      காவிரி நீர் காணாத தமிழகம் போல உன்னனக் காணாமல் தவித்துக் கொண்டிருக்கிறது தமிழ் வலைப் பதிவுலகம். காவிரி நீரை அணை கட்டித் தடுக்கலாம். நீதிமன்ற  ஆணை மறுக்கலாம். ஆனால்  உன்னை வலைப் பக்கம் வர விடாமல் தடுத்தது எது? சொல்! உச்ச  நீதி மன்றம் சென்று உத்தரவு  பெற்று வருகிறோம்?

                                                                                      அன்புடன் 
                                                               உந்தன் வரவை எதிர்நோக்கும் 
                                                                           வலைப்பூ நண்பர்கள் 



ஞாயிறு, 20 மார்ச், 2016

கூகுளின் திருவிளையாடல்கள்

   

  பிறந்த குழந்தைக்குக்  கூட கூகுளில் தேடிப் பார்த்துத்தான் பேர்வைக்கிறார்கள். அதற்கு முன்பு கோலோச்சிக் கொண்டிருந்த  யாஹூ தேடுபொறியை ஓரம் கட்டிவிட்டு தேடு பொறியில் தன்னிகரில்லாத இடத்தை இன்றுவரை தக்கவைத்துக் கொண்டுள்ளது  கூகுள் .    2004 இன் முட்டாள்கள் தினத்தில்  மின்னஞ்சலை பொதுமக்களுக்கும் அறிமுகப்படுத்தி  yahoo, hotmail மின்னஞ்சல்களை பயன்படுத்தி வந்தோரை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டது. இன்று ஜிமெயில் அக்கவுண்ட் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லலாம்.  யாஹூமெயில்  ஹாட் மெயில் போன்ற மின்னஞ்சல்கள் உண்டு என்று தெரியாதவர்களும் உண்டு, இணையத்தின் பல பகுதிகளை ஆக்ரமித்துக் கொண்ட Google. கைபேசியிலும ஆண்ட்ராய்ட் மூலம் தனது ஆதிக்கத்தை  தொடர்ந்து வருகிறது. 

    தற்போது இணையப் பெரியண்ணனாக வலம் வரும்  கூகுள் நமக்கு வலைப்பூ வசதியை இலவசமாக (உண்மையில் இலவசம் என்று எதுவும் இல்லை. எல்லாம் ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்தே ) வழங்கி வருவதை அறிவோம்.வோர்ட் பிரஸ் போன்றவையும் வலைப்பூ வசதியை இலவசமாக வழங்கின. வோர்ட் பிரஸ்ஸில் ஏராளமானவர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ப்ளாக்கில் பல்வேறு வசதிகள் வழங்கி பயனாளர்களை ஈர்த்து வருகிறது கூகுள்.   கூகுள்+. ஜிமெயில் .மேலும் பல பயன்பாடுகளை ப்ளாக்கருக்கு துணை புரியும் வண்ணம் அமைத்திருக்கிறது.
      ஏராளமான சமூக வலைத்தளங்கள் இருந்தாலும் இணையம் பற்றி அதிகம் அறியாதவர்களும் தெரிந்து வைத்திருப்பதாக முகநூல் விளங்குகிறது. பெரும்பாலும்    நமக்கு நினைவுக்கு வருவது Facebook, Twitter.  ஆர்க்குட், Google Buzz , Google Friend Connect, கூகுள் +  போன்றவை   கூகுளின் சமூக வலை தளங்களாகும். ஆர்க்குட்  ஒரு கட்டத்தில் புகழுடன் விளங்கியதாக தெரிகிறது . அவை   ஒவ்வொன்றாக மூடப்பட்டுவிட்டன. தற்போது  கூகுள் + மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. 

     கூகுள் என்னதான் சீனியாரக இருந்தாலும்  சமூக வலை தளங்களைப் பொறுத்தவரை பின்னர் வந்த முகநூல் இன்றுவரை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.  டுவிட்டர் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது .கூகுளை ஆட்டம் காண வைத்த முகநூலுக்கும் வாட்ஸ் ஆப் போட்டியாக முளைக்க  விழித்துக்கொண்டு வாட்ஸ் ஆப் ஐ விலைக்கு வாங்கியது தனிக் கதை.   google +ஐ எவ்வளவுதான் கூகுள் தனது பிற பயன்பாடுகளின் மூலம் முன்னிலைப் படுத்த முனைந்தாலும் அதில் முழு வெற்றி  முடியவில்லை 
     என்னதான் போட்டியாளராக இருந்தாலும் சில சமயங்களில் இணைந்து கொள்வதும் ஒருவருக்கொருவர் துணை புரிவதும் அவசியமாகிறது. அதனை முன்னணி நிறுவனங்கள் உணர்ந்தே அவ்வப்போது செயல் திட்டங்கள் வகுக்கின்றன
        கூகுள் அவ்வப்போது சில மாற்றங்களை செயல்படுத்தும் என்பதை நாம் அறிவோம். 2014 இல்  திடீரென்று blogspot.com என்பதை  இந்தியர்களுக்கு blogspot.in என்று மாற்றியது. அதே போல்  ஒவ்வொரு நாட்டிற்கும் வெவவேறு விதமாக இறுதிப் பெயருடன் REDIRECT செய்தது . இதனால் திடீர் குழப்பம் ஏற்பட்டது. திரட்டிகள் திணறின. alexa தர வரிசையில் பின்னேற்றம் ஏற்பட்டது. பணம் கொடுத்து வலைமுகவரி பெறுவதை ஊக்குவிப்பதற்காகவே இதனை கூகுள் செய்வதாகவும் கருதினர். பயனாளர்கள் சும்மா விடுவார்களா என்ன அதற்கும் ஒரு குறுக்கு வழியை கண்டு பிடித்தனர் என்றாலும் பலர் இலவச வசதியை விடுத்து புதிய வலைமுகவரியை(Custom domain) காசு கொடுத்து வாங்க முற்பட்டனர். 
    சில வசதிகளை தருவதும் பறிப்பதுமாக கூகுள் தனது திருவிளையாடல்களை தொடர்ந்து கொண்டிருக்கிறது  காசு கொடுத்து வாங்கும் Domain களுக்கும் சில வசதிகளை  கூகுள் வழங்குவதில்லை. 
வலைப்பூக்களில் விரும்புவோர் பின்தொடர்வதற்கான வசதி இருப்பது வலைப்பூ பயன்படுத்துவோர் அனைவரும் அறிந்தது. Follower Widget இணைத்து விட்டால் பார்வையாளர்கள் தாங்கள் விரும்பும் வலைப்பூவை பின் தொடர முடியும். அவர்களுக்கு பதிவுகள் வலைப்பூ டேஷ்போர்டில் வந்து சேரும். வலைப்பூவை பின்தொடர்வோரின் profile புகைப்படங்கள் காட்சியளிப்பதை பார்த்திருக்கலாம். வலைப்பூவை தெரிந்தும் பின் தொடரலாம். வலைப்பூ நடத்துபவர் அறியாமலும் பின் தொடரலாம். பின்தொடர்வதை நிறுத்திக் கொள்ளவும் செய்ய முடியும். 
   எனது வலைப்பூவை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 350 க்கும் மேல் இருந்தது. திடீரென்று 325 ஆக குறைந்து விட்டது. ஒரு வேலை தொழில்நுட்பக் கோளாறாக இருக்கலாம் என்று நினைத்தேன். இருந்தாலும் ஒரு ஐயம் ஏற்பட துழாவிய போதுதான் தெரிந்தது இதுவும் கூகுளின் திருவிளையாடல் என்று.  உங்கள் வலைப்பூவில் கூட பின் தொடர்வோரின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம்.கவனித்திருக்கிறீர்களா?அது ஏன்?
    காரணம் கூகுள் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதற்கு முன்னர் கூகுள் அக்கவுன்ட்  இல்லாதவர்கள்கூட ஒரு கூகுள் வலைப்பூவை தொடர முடியும். அதாவது yahoo,facebook,twitter மூலமாகவும் பின்தொடர்வதற்கான வசதி இருந்தது. இப்போது அதனை நீக்கி விட்டது . கூகுள் மெயில் அக்கவுன்ட் உள்ளவர்கள் மட்டுமே தொடரமுடியும்.
முன்பு ஒரு வலைப்பூவை பின் தொடர நாம் என்ன செய்வோம்? அந்த வலைப்பூவில் உள்ள Follower widgetஇல்Join this site  கிளிக் செய்தால்  கீழே உள்ளது போன்று காட்சி அளிப்பதை கவனித்திருக்கலாம் . 



    இவற்றில் கூகுள் ,டுவிட்டர், யாஹூ, AIM ,Open ID ஆகியவற்றின் மூலம் வலைப்பூவை இணைத்துக் கொள்ள முடியும்
இப்போது எப்படி இருக்கிறது என்று பாருங்கள்



   கூகுள் மட்டும்  தனியாக காட்சியளிப்பதை காணலாம். இப்படி புதிதாக இணைய விரும்பும் கூகுள்  அல்லாத கண்க்கு வைத்திருப்பவரை தடுத்து நிறுத்தியதோடு ஏற்கனவே Non Google Account  மூலம் இணைந்திருந்த அத்தனை பேரையும் நீக்கி விட்டது கூகுள். அதனால்தான் கிட்டத் தட்ட 30 பேர் பின்தொடர்பு பட்டியலில் காணாமல் போனார்கள்.( பின் தொடரும் பட்டியலில் உள்ளவர்கள் உண்மையில் நம் பதிவுகளை படிப்பார்களா என்பது வேறு விஷயம்)


இதில் இருந்த 30 பேரை காணோம் 


     இதற்கான அறிவிப்பை  சத்தமில்லாமல் 2015 டிசம்பர் 21 இல்  வெளியிட்டு அதில்  2016 ஜனவரி 11 முதல் அமுல் படுத்தப் போவதாக தெரிவித்திருந்தது. அதை நடைமுறைப் படுத்தியும் விட்டது. இனி கூகுள் மின்னஞ்சல் வைத்திருப்பவர்கள் மட்டுமே blogger வலைப்பூக்களை தொடரவோ இணைக்கவோ முடியும்.

   இணையத்தில் இலவசம் என்ற பெயரில் ஏராளமான சேவைகளை பெற்று வருகிறோம். உண்மையில் அவை எல்லாம் இலவசம்தானா என்பது விவாதத்திற்குரியது என்றாலும் அதனை பொருட்படுத்தாமல் நம்பி நமது படைப்புகளை பதிவுசெய்கிறோம். இலவசம் என்பதால் அவர்கள் செய்யும் மாற்றங்களை சகித்துக் கொள்ளவேண்டியதைத் தவிர வழியில்லை. நீங்கள் பதிவிட்டவை திடீரென்று காணாமல் போனாலும் கேள்வி கேட்க முடியாது. இது கூகுள் மட்டுமல்ல மற்றவற்றிற்கும் பொருந்தும். நான் கூற விரும்புவது நீங்கள் உங்கள் படைப்புகளில் முக்கியம் என்று கருதுபவற்றை Offline லும் சேமித்து  வைத்துக் கொள்ளுங்கள்.
     சில மாதங்களுக்கு முன்னர்  முகநூல் நிர்வாகம் இலவச  இண்டர்நெட்டை வலியுறுத்தி    ட்ராய்க்கு ஒரு மெசேஜ்  அனுப்புமாறு தனது உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. பலரும் அனுப்பி இருப்பீர்கள். ஆனால் எனக்கோ பூனைகள் எதற்காக எலிகளுக்காக அழ வேண்டும் என்றுதான்  தோன்றியது. இதைப் பற்றி இன்னொரு  பதிவில் பார்ப்போம் 

**********************************************************************


கொசுறு: முதலில்   Google  க்கு"கூகோல்" (googol)  என்றே பெயரிட விரும்பினர் அதை நிறுவியவர்கள்..அந்தப் பெயரை  வேறொருவர் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்தார். அதனை பணம் கொடுத்து  வாங்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் வேறு பெயர் தேடினர். தட்டச்சு செய்யம்போது googol என்பதற்கு பதிலாக தவறுதலாக  google என்று தட்டச்ச அதனையே பெயராக வைத்துக் கொண்டார்கள் google இன்றுவரை கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது 

நேரம் கிடைச்சா இதையும் படிச்சு பாருங்க.
கூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன்!




செவ்வாய், 5 ஜனவரி, 2016

தமிழ்மணம் மர்மங்கள் விலகுமா?


  எனது முந்தைய பதிவில்( 2015ல் கிழித்தது என்ன? பதிவர்கள் முகநூலுக்கு தாவுவது  ஏன் ) முகநூல். வலைப்பூக்கள் பற்றி எழுதி இருந்தேன்.   கொஞ்சம் விரிவாக கருத்துக்களை,படைப்புகளை, கட்டுரைகளை பதிவு செய்ய வலைப்பூக்கள் வசதியாக இருப்பதாக வலைப்பூ எழுதுபவர்களின் கருத்தாக உள்ளது. புதிதாக முகநூலில் நுழைவோருக்கு    நண்பர்கள் சேர்க்க பட்டியல் காட்டப்படுகின்றன. அவற்றில் நாம் அறிந்தவர்களோ நண்பர்களோ இருப்பின் தேர்ந்தெடுத்து முகநூலில் நட்புக் கோரிக்கை வைத்து நண்பர்களை இணைத்துக் கொள்ளலாம்.
    புதிதாக வலைப்பூ எழுதுபவர்கள் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்வது கடினமாக ஒன்றாக உள்ளது. பிற வலைப்பூக்களுக்கு  சென்று கருத்திடுவது அவர்களுடைய  வலைதளத்தில் இணைவது திரட்டிகளில் இணைப்பது  இவற்றின் மூலமாக மற்றவர்களின் பார்வையில் படுகிறார்கள்.. 
       தான் கஷ்டப்பட்டு எழுதிய பதிவு மற்றவர்களால் படிக்கப் படவேண்டும் என்று விரும்பாதவரும் உண்டோ? . தனது திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்க  வேண்டும்  என்று படைப்பாளிகள் விரும்புவது இயல்பானதுதானே!.

   தொடக்க நிலைப் பதிவர்கள் பெரிதும் நம்பி இருப்பது திரட்டிகளையே. பல திரட்டிகள் இருந்தாலும் தன்னிகரற்று விளங்குவது தமிழ்மணம் மட்டுமே. பல திரட்டிகள் காணாமல் போய்விட தமிழ்மணம் மட்டுமே இன்னும் செயல் பட்டு வருகிறது . அது இன்றும் தடங்கலின்றி இயங்கி வருவதற்கு அதன் அற்புதமான தானியங்கி கட்டமைப்புதான் காரணம் என்று நினைக்கிறேன். பதிவுகளை தானாக இணைத்துக் கொள்ளும் வசதி, தரவரிசைப் பட்டியல், வாக்குப் பட்டை, வாசகர் பரிந்துரை குறிசொற்கள் வாயிலாக பதிவுகளை காட்டுதல், மறுமொழி திரட்டுதல் தமிழ்மண மகுடம்  இன்றைய சூடான பதிவுகள், இந்த வார சூடான பதிவுகள் வாரந்தோறும்  முதல் 20 தரவரிசைப் பட்டியல்  போன்றவை இத சிறப்பு அம்சங்களாக அமைந்துள்ளன.வேறு எந்த திரட்டிகளும் இது போன்ற வசதிகளை பெற்றிருக்கவில்லை. இத்தனை சிறப்புகளை உடைய தமிழ்மணம்  சரியாக பரமாரிக்கப் படுகிறதா என்ற ஐயம் அவ்வப்போது வலைப்பதிவர்களுக்கு எழுந்து கொண்டுதான் இருக்கிறது. அது நிறுவனமா? தனிநபருக்கு சொந்தமானதா? தற்போது அதன் நிலை என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது. அதன் இணைப்புக்காக பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதே அது ஏன்? தமிழ்மண நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் யார்? திரட்டி நிர்வகிப்பில் அதிக ஆர்வம் காட்டாதது ஏன்? போன்ற கேள்விகளுக்கான விடை நம்மிடம் இல்லை.

 .  திரட்டி நடத்துவதால் பெரிய பயன் ஏதும் இல்லை என்பது ஒரு காரணமாக இருக்கக் கூடும் . மேலும்  நிர்வகிக்க பொருட்செலவும்  நேரமும் தேவைப்படும் .நிர்வாகிகள் பலரும் வெவ்வேறு தொழில் சார்ந்து இருக்கலாம். அவர்கள் நேரம் கிடைக்கும்போதுதான்  தமிழ்மண  செயல்பாடுகளை  கவனிக்க முடியும் என்ற நிலையில் உள்ளனர் என்றே நினைக்கிறேன். இதற்கென்று ஆட்களை நியமித்து நடத்த வேண்டுமென்றால் அதற்கான பொருட்செலவுக்கு வழிவகைகள் செய்யப்படவேண்டி  இருக்கும். அதற்குரிய வருமானம் திரட்டிகளில் கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்பது ஐயமே.
      இப்போதும் எனக்கு தமிழ்மணம் வாயிலாகத்தான் அதிக வாசகர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். பிரபலங்களுக்கும் ஏற்கனவே வளர்ச்சி அடைந்தவர்களுக்கும் திரட்டிகளின் உதவி தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்க நிலை வலைப் பதிவர்களுக்கு திரட்டிகளின் உதவி அவசியமானது..  பல  திரட்டிகள் செயல்படாத நிலையில் தமிழ்மணமும் பாராமுகமாய் இருப்பது புதிய வலைப் பதிவர்களுக்கு  ஒரு குறையாகவே இருக்கிறது  
  கிட்டத்தட்ட 9 மாதங்களாக தமிழ் மணத்தில் புதிய வலைப் பூக்கள் இணைக்கப் படாமல் உள்ளது . தமிழ்மணத்தில் இணைவதற்காக காத்திருப்போர் பட்டியலில்  180 க்கும் மேற்பட்டவர் உள்ளனர். டிசம்பர் கடைசி வாரத்தில் தமிழ்மண பக்கத்தை  கவனித்தபோது தமிழ் மண முகப்பில் புதிய பதிவர்களின் பதிவுகள் காட்சி அளித்தது மகிழ்ச்சியை தந்தது ஆனால் அவற்றை  உற்று நோக்கிய போது ஒரு உண்மை புலப்பட்டது. சமீபத்தில் தமிழ் மண இணைப்பு கோரியவர்களுக்கு அதாவது நவம்பர் டிசம்பர் மாதத்தில் கோரியவர்களுக்கு மட்டும்  தமிழ் மணத்தில் இணைக்கப் பட்டுள்ளது.. ஆனால் முன்னதாக   மார்ச் மாதத்தில் கோரியவர்களின் வலைப்பூ கூட இன்னும் இணைக்கப் படாமல்இருக்கிறது. மற்ற வலைப் பதிவுகளை ஏன் இணைக்கப்படவில்லை என்று தெரியவில்லை

  .  தமிழமணம் வெள்ள நிவாரணத்திற்காக ஒரு பக்கத்தை உருவாக்கி இருந்தது  யாருக்கேனும் தெரியுமா? டிசம்பர் 7 அன்று தமிழ்மண நிர்வாகம் கடலுரை சுற்றியுள்ள கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டதை வரைபடத்தில் சுட்டிக் காட்டி ஒரு பதிவு வெளியிட்டிருந்தது . அது தமிழ்மண முகப்பில் கூட வெளியாகி  இருந்ததா எனத் தெரியவில்லை. இரண்டு பேர் மட்டுமே அந்தப் பதிவிற்கு கருத்திட்டிருந்தார்கள் . ஒன்று கில்லர்ஜி, மற்றொருவர் ராஜநாடராஜன்...ஆனால் அந்த முயற்சி முழுமை பெற்றதா என அறிய முடியவில்லை. இந்தப் பதிவின் மூலம் நாம் அறிவது என்னவெனில் தமிழ்மண நிர்வாகம் அவ்வப்போது செயல்பாட்டில் ஈடுபடுகிறது என்பதே. 
     திரட்டிகளில் தனித் தன்மை உடைய தமிழ்மணம் மீண்டும் முழு வீச்சுடன் செயல்படவேண்டும் என்பதே பெரும்பாலான வலைப் பதிவர்களின் எண்ணம். தமிழ் மணம் மீதான சர்ச்சைகள் நான் பதிவு எழுத வருபவதற்கு முன்பே இருந்து வருகிறது. ஒரு திரட்டி, வலைப்பதிவர் அனைவரையும்  எல்லோரையும் திருப்திப் படுத்தும் வகையில் உருவாக்க முடியாது. ஏதேனும் சில விதிமுறைகளை பின்பற்றித் தான் கட்டமைக்கப் படவேண்டும். அந்த விதிமுறைகள் சிலருக்கு சாதகமாகவும் சிலருக்கு பாதகமகவும் அமைவதும் தவிர்க்க இயலாததே. அதனால் குறைகூறுபவர்களை மனதில் கொள்ளாமல் தமிழ்மணம் தொய்வின்றி செயல்படும் ஆண்டாக 2016 இருக்கும் என்று நம்புவோம்.

    டிசம்பர் 2014 இல் தமிழ்மணத்தில் இணைக்கப் படாத வலைப் பதிவர்களின் பட்டியலை சுட்டிக்காட்டி  தமிழ் மணத்திற்கு கோரிக்கை விடுத்தேன். காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக தமிழ் மனம் 233 வலைப்பூக்களை ஒரே நாளில் இணைத்து தமிழ்மணம் .
  தற்போது கீழ்க்கண்ட 185 வலைப்பூக்கள் இணைப்புக்காகக் காத்துக் கிடக்கின்றன. இவற்றை தமிழ்மணத்தில் விரைவாக இணைக்கும்படி  பதிவர்கள் சார்பாக தமிழ்மண நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன்
பட்டியலை முழுதாக பார்க்க வலது பக்கத்தில் ஸ்லைடரை நகர்த்திக் கொள்ளவும்
காத்திருப்போர் பட்டியல் 



====================================================================

கொசுறு 1: இந்த தமிழ் மணப் பட்டை இணைப்பது புதியவர்களுக்கு ஒரு அவஸ்தை. இணைத்தாலும் வேலை செய்யாமல் வேடிக்கை காட்டும். புதியவர்களுக்கு மட்டுமல்ல பல பழைய பதிவர்களின் பதிவுகளிலும் தமிழ்மண வாக்குப் பட்டை வேலை செய்யாமல் இருக்கிறது. திண்டுக்கல் தனபாலன், நான் , மற்றும் சில தொழில் நுட்பப் பதிவர்கள் பலருக்கு தமிழ் மணப்பட்டை இணைத்து தந்திருக்கிறோம். யாரேனும் உதவி தேவைப்பட்டால்  நீங்கள் விரும்பினால் உங்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் 


கொசுறு 2.புதிய திரட்டி ஒன்று உருவாகிக் கொண்டிருப்பதாக திண்டுக்கல்  தனபாலன் முகநூலில் தெரிவித்துள்ளார். நல்ல பதிவுகள் வாசகர்கள் சென்றடைய வேண்டும் அது எவ்வகையிலும் நடந்தாலும் நல்லதுதான். 2016 இல் இன்னும் நிறைய படைப்புகளை அளித்தும் வாசித்தும் இணையத் தமிழ் வளர்க்க நம் பங்கை ஆற்றுவோம்.

கொசுறு 2: இன்ட்லி திரட்டியின் கருவிப்பட்டை இணைத்துள்ள ஒவ்வொரு வலைப்பூவும் திறக்க அதிக நேரம் எடுக்கிறது. காரணம் இன்ட்லி திரட்டி  இப்போது இயக்கத்தில் இல்லை.  எனவே முடிந்தவரை அதை நீக்கி விடுங்கள். அதை நீக்கிவிட்டால் பாதகம் ஏதுமில்லை. ஒருவேளை மீண்டும் இன்ட்லி செயல்பாட்டாலும் நேரடியாக அதன் வலை தளத்தில் சென்று உங்கள் பதிவுகளை இணைத்துக் கொள்ள முடியும்
இன்ட்லி  நீக்கும் வழி முறை யை அறிய கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்யவும் .உதவி தேவைப்படின் தொடர்பு கொள்ளவும் 
இன்ட்லியால் ஒரு இன்னல்


=======================================================================

வெள்ளி, 4 செப்டம்பர், 2015

Follower விட்ஜெட் இணைக்கப் படாத வலைப்பூக்களை பின்தொடர முடியுமா?


கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள் 
புதியவர்களுக்கு இந்தப் பதிவு பயன்படக் கூடும் 
வலைப் பூக்களில் பல வசதிகளை கூகிள் வழங்கி வருகிறது.அவற்றில் சிலவற்றை மட்டுமே பயன்படுத்துகிறோம். அவற்றில் நான் பயன்படுத்திய கற்றுக்கொண்ட ஒரு சிலவற்றை உங்களுடன் அவ்வப்போது
கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்  என்ற தலைப்பில் பகிர்ந்து வருகிறேன் ஒரு சிலருக்காவது பயன்படும் அல்லவா?

   வலைப்பூவில் எழுதுவன் நோக்கம் படைப்புத் திறனை வெளிப்படுத்துவது மட்டுமன்று. யாரும் படிக்க வேண்டியதில்லை எனது ஆத்ம திருப்திக்காகத் தான் எழுதுகிறேன்.பார்வையாளர்களைப் பற்றிக் கவலை என்று ஒரு சிலர் சொன்னாலும்  நமது படைப்புகளை பிறர் படிப்பதாலும்  அங்கீகரிப்பதாலும் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பதே உண்மை .விவேக் ஒரு திறப்படத்துள் சொல்வது போல யாரும் இல்லாத கடையில் யாருக்காக டீ ஆற்ற வேண்டும்.
   நமது பதிவுகள்   நிறையப் பேரை சென்றடைய வேண்டும் என்று விரும்புவது அதற்கான முயற்சிகள் எடுப்பதும்   தவறில்லை. 
  அதன் பொருட்டே நமது பதிவை  படிப்பவர்களுக்கு  விரும்பினால் அவர்கள் பின் தொடர்வதற்கு ஏதுவாக Follower விட்ஜெட்  மற்றும்  EMAIL SUBSCRIPTION விட்ஜெட் இணைத்து வைத்திருப்போம். அதில் விவரங்கள் கொடுத்து    இணைப்பவர்களுக்கு நமது பதிவுகள் அவர்களது பிளாக்கர் டேஷ்போர்டுக்கு  போய் சேர்ந்து விடும். அதே போல பிறரது வலைப்பூக்களில் உள்ள இணைப்பு விட்ஜெட் மூலம் நமது பிளாக்கர் ஈமெயில் முகவரி கொடுத்து இணைத்துக் கொண்டால் அவர்களது பதிவு நமது பிளாக்கர் டேஷ் போர்டுக்கு  வந்து சேர்ந்து விடும். இணைத்ததற்கு அடையாளமாக  நம்முடைய profile படமும் அவரது follwer விட்ஜட் டில் காட்சி அளிப்பதை காணலாம் .
 மேலுள்ள விட்ஜெட் மூலம் உள்நுழைந்து பின்தொடர்வதற்காக இணைவோம் .
EMAIL SUBSCRIPTION மூலமும் நம்முடைய பதிவுகளை பிறரும் பிறருடைய வலைப் பதிவுகளை நாமும் தொடர்ந்து அறியலாம். இதனை பின்னர்  விரிவாக பார்ப்போம்.

   நமது வலைபதிவில் sign in செய்து உள்நுழைந்தால் பிளாக்கர் டேஷ் போர்டில் கீழ்க் கண்டவாறு  காண முடியும் இதில் நாம் இணைந்துள்ள வலைப் பூக்களின் பதிவுகளின் பட்டியலுடன் பதிவின்  சுருக்கத்தை காண முடியும். நாம் பின்தொடரும் வலைப் பதிவர்கள் புதிய பதிவுகள் இடும்போதெல்லாம் அவை சில நிமிடங்களில் நம்மை வந்தடைந்து விடும். விரிவாகப் படிக்க அதனை கிளிக் செய்தால் அவரது வலைப் பக்கத்துக்கு சென்றுவிடும் . இதே போல நம்மை  பின்தொடர்பவர்களுக்கும் நமது பதிவுகள்  சென்றடையும்.

 
எல்லா வலைப்பதிவர்களும் தன வலைப்பக்கத்தில் folower விட்ஜெட் இணைப்பதில்லை. Follower விட்ஜெட் இணைக்கப் படாத வலைப்பூகளை நாம் பின்தொடர முடியுமா அதாவது அவர்களது பதிவுகளை அறிவதற்கு வழி இருக்கிறதா? இருக்கிறது. நீங்கள் விருபுகிற வலைப் பூவை உங்கள் வாசிப்புப் பட்டியலில் இணைத்து அவரகளது பதிவுகளின் அறிவிப்பை அறியலாம்
 உதாரணமாக  எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வலைத்தளம் WWW.JEYAMOHAN.IN அவரது வலைப் பதிவை நமது படிக்கும் பட்டியலில் சேர்க்க வேண்டுமெனில்


கீழே படத்தில் உள்ளதை கவனியுங்கள் அதில் சிவப்பில் வட்டமிடப் பட்டுள்ள ADD ஐ கிளிக் செய்தல் அருகில் உள்ளவாறு ஒரு தகவல் பெட்டி தோன்றும்





அதில் Add from URL இல் நீங்கள் தொடர விரும்பும் வலைப்பூ முகவரியை அதாவது (எ.கா www.jeyamohan.in ) என்று இட்டு Follow பட்டனை அழுத்தவேண்டும் இனி அவர் புதிய பதிவு இடும்போதெல்லாம் உங்கள் டேஷ் போர்டுக்கு தானாக வந்து சேர்ந்து விடும்.

 பதிவுகளை  பதிவு எழுதுபவர் அறியும் வண்ணம் தொடர்வதற்கு  Follow publicly என்ற  ஆப்ஷன் உள்ளது. இதன் நீங்கள்  தொடர்வதை வலைப்பூஎழுதுபவர் அறிவார். உங்கள் profile விவரம் அறிய முடியும்..
       சில  நேரங்களில் அவரையும் அறியாமல் பின் தொடர விரும்பினால் follow anonymously என்ற ஆப்ஷனும் உள்ளது . நீங்கள்தான் பின்தொடர்கிறீர்கள் என்று அவர்களுக்கு தெரியாது உங்கள் profile படமும் விவரமும் மறைக்கப் பட்டுவிடும்.சில நேரங்களில் சில  காரணத்திற்காக  மற்றவர்களின் பதிவுகளை தொடர்கிறோம் என்பதை தெரிவிக்காமல் இருக்க சிலர் விரும்புவது உண்டு. அவர்களுக்கு இது பயன் படும்.
கீழுள்ள படத்தின் மூலம் எளிதில் புரிந்து கொள்ளலாம்



மேலே following option இல் நீங்கள் விரும்பிய ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.


இதன் மூலம் நாம் தெரிந்து கொள்வது Follower விட்ஜட் இணைக்காதவர்களின் பதிவுகளை தொடர முடியும் என்பதே


சிலர் தினந்தோறும் எழுதிக் குவித்துக் கொண்டிருப்பார்கள். அவை நமது டேஷ் போர்டை நிறைத்து எரிச்சலை உண்டாக்கும் .இதனால் நமது ரீடிங் லிஸ்டில் அரிதாக நல்ல பதிவுகள்  கண்ணில் படாமல் போக வாய்ப்பு உள்ளது. 
      அப்படியானால் ஏதோ ஒரு ஆர்வத்தில் இணைந்த வலைபூக்களை தொடர்வதை நிறுத்தினால் நன்றாக இருக்குமே? என்ற எண்ணம் தோன்ற வாய்ப்பு உள்ளது .
அப்படி நிறுத்த விரும்பினால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் 
Email subscption பற்றியும் இன்னொரு பதிவில் பார்ப்போம்  

****************************************************************************** 

கற்றுக் குட்டியின்  முந்தைய கணினிக் குறிப்புப் பதிவுகள்


  • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி?
  • முன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்...
  • உங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி?
  • உங்கள் வலையின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டுமா?
  • காபி,பேஸ்ட் செய்யப்பட்டதை அறிவது எப்படி?-பகுதி 2(250 வது பதிவு)
  •  இன்ட்லியால் ஒரு இன்னல்
  • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி? 
  • .காபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது?


  • தமிழ்மணம்,தமிழ் 10 இல் ஒட்டு போட்டவர்களை அறிய முடியுமா?
  • எக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா?
  •  கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்-Font Shortcut-Word 2007 
  • காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா? 
  • விண்டோஸ் 7 ன் பயனுள்ள டூல் 
  • லேசா பொறாமைப் படலாம் வாங்க! 
  • எக்சல் எக்ஸ்பர்ட்டா நீங்கள்?சொல்லுங்கள்!எக்சல் தப்பா கணக்கு போடுமா? 
  • EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற முடியுமா?

     

     
  • சனி, 7 மார்ச், 2015

    பின் வாங்கிய கூகுள்+ஆபாசதளம் பார்ப்பவர் எத்தனை பேர்?+நண்பர் அனுபவம்

       

       2015 மார்ச் 23 முதல் ஆபாச படங்களை வீடியோக்களை பதிவுகளை அனுமதிக்காது அவற்றை நீக்கி விட வேண்டும் அல்லது வலைப்பூவை  யாரும் காண முடியாதபடி பிரைவேட்டாக செட்டிங்க்ஸ் மாற்றிக் கொள்ளவேண்டும் என்று அறிவிப்பு செய்திருந்தது.. கூகுள் . இது தொடர்பாக முந்தைய பதிவை
     எழுதி இருந்தேன். ஒருவாரத்திற்குள் தனது முடிவை வாபஸ் பெற்று எனக்கு பல்பு கொடுத்து விட்டது கூகுள்.
    பல்லாயிரக் கணக்காணவர்களின் வேண்டுகோளை ஏற்று ஆபாச உள்ளடக்கம் பற்றிய அறிவிப்பை அமுல்படுத்தாது என்று ஒவ்வொரு ப்ளாக்கருக்கும் அறிவிப்பை அவர்களது டேஷ் போர்டில் தெரியச் செய்துள்ளது 
    கூகுளின் தனது முடிவை மாற்றி வெளியிட்டுள்ள செய்தி இது. (பதிவர் வருண் அப்போதே கருத்திட்டுள்ளார் .)

    An update on the Blogger porn content policy

    This week, we announced a change to Blogger’s porn policy stating that blogs that distributed sexually explicit images or graphic nudity would be made private.
    We’ve received lots of feedback about making a policy change that impacts longstanding blogs, and about the negative impact this could have on individuals who post sexually explicit content to express their identities.
    We appreciate the feedback. Instead of making this change, we will be maintaining our existing policies.

    What this means for blog owners

    • Commercial porn will continue to be prohibited.
    • If you have pornographic or sexually explicit content on your blog, you must turn on the adult content setting so a warning will show. If a blog with adult content is brought to Google’s attention and the content warning is not active, we will turn on the warning interstitial for you. If this happens repeatedly, the blog may be removed.
    • If you don't have sexually explicit content on your blog and you're following the rest of the Blogger Content Policy, you don't need to make any changes to your blog.

    இது வயது வந்தோர்க்கு மட்டும் என்று சொல்லி விட்டால் போதுமா?
    சிகரட் அட்டையில் புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று எழுதுவதும், குடி குடியைக் கெடுக்கும் என்று பாட்டிலில் குறிப்பிடுவதும் எந்த வகையிலும் மாற்றத்தையும் ஏற்படுத்தியதில்லை . ஒரு நல்ல முடிவை கூகிள் ஏன் வாபஸ் பெற்றுக் கொண்டது ? எல்லாம் வியாபாரம்தான்.விளம்பர வருமானத்தை விட யாருக்கு மனம் வரும். சில புள்ளிவரங்களை பார்க்கலாம்
    1. இந்தியாவில் மட்டுமல்ல உலகில் அதிகம் பார்க்கப்படும் முதல் 100 வலைத்தளங்களுக்குள் இரண்டு மூன்று  ஆபாச வலைதளங்கள் இடம்பெற்று விடுகின்றன.
    2. உலகம் முழுவதும் ஒரு மாதத்திற்கு 450 மில்லியன் பேர் ஆபாச தளங்களை பார்வையிடுகிறார்கள்.இவை Netflix, Amazon ,Twitter தளங்களின் மொத்த பார்வையாளர்களை விட அதிகம் 
    3. இந்தியாவில் வலைதள பார்வையாளர்களில் ஆபாச தளங்களில் சராசரியாக   ஒரு நாளைக்கு ஐந்து நிமிடம் செலவிடுகிறார்கள்( இதற்கு  எல்லோரும் பார்க்கிறார்கள் என்று அர்த்தம் அல்ல)
    4. ஒவ்வொரு ஆபாச தளமும் சராசரியாக ஒருமாதத்திற்கு 7.5 முறைகள் பார்வையிடப் படுகிறது 
    5. கைபேசியில் இத்தளங்களை பார்வையிடுவோர் எண்ணிக்கை 90 இலட்சம்
    6. இந்தியாவில் மொத்த வலைத்தள traffic இல் 30%  இவ்வகை தளங்களுக்கானவை 
    7. இவ்விவரங்கள் 2013 ஆண்டுக்கானவை 
         பாலியல் தொடர்பானவற்றை பார்ப்பதும் படிப்பதும் தவறு என்று முழுமையாக சொல்லி விடமுடியாது என்று சொல்லும் உளவியல் நிபுணர்கள், இவற்றுக்கு அடிமையாகி விடுவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரிக்கிறார்கள் 
        பல வலைத்தளங்கள் இயல்பான பாலியியல் உணர்வுகளை மிகைப் படுத்தி தவறான புரிதலை ஏற்படுத்தி விடுகின்றன. குறிப்பாக பதின்ம வயதுடையவர்களின் மனதில்  இவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. இவ்வகை வலைத்தளங்கள் இவர்களைக்கவர பல்வேறு தந்திரங்களை மேற்கொள்கின்றன. இவற்றால் கவரப்பட்டவர்களிடமிருந்து  மின்னஞ்சல் முகவரிகள்,தொலைபேசி எண்கள் புகைப்படங்கள் உள்ளிட்ட பல தனி  விவரங்கள் சேகரிக்கப் பட்டு விடுகின்றன. கணினி வைரஸ்களை பரப்புவதில்  இவ்வகைத்தளங்களே முக்கியப்பங்கு வகிக்கின்றன . 
      மூன்று வயதுக் குழந்தைகள் கூட கணினி, கைபேசியை திறமையாக கையாள்கின்றன. பள்ளி சிறார் சிறுமியர் கணினியிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். கைபேசியுடன்தான் உறவாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள்  என்ன செய்கிறார்கள் என்பதை திறமையாகக் கண்காணிக்கும் அளவுக்கு நமக்கு ஞானம் இருக்கிறதா என்பது ஐயமே! பாதுகாப்பையும் எச்சரிக்கை உணர்வையும் மட்டும் அவ்வப்போது வலியிறுத்துவது மட்டுமே நம்மால் முடிந்தது. 
    ********************

    கொசுறு: பெற்றோர்களுக்கு எச்சரிக்கை 
    எனக்குத் தெரிந்த ஒருவருக்கு  பள்ளி வயதில் ஒரு மகனும் மகளும் உண்டு. அடுத்த ஆண்டு ஒய்வு பெற இருப்பவர் அவர்.புதிதாக கணினியும் இணைய இணைப்பும் வாங்கினார். மெயில் பார்ப்பது அனுப்புவது மட்டுமே அவர் அறிந்தது.. மனைவியும் பிள்ளைகளும் கோடை விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்தபோது எதேச்சையாக  ஆபாச தளங்களை பார்க்க நேர்ந்தது. வீட்டில் யாரும் இல்லை என்ற தைரியத்தில் ஆர்வம் காரணமாக ஒரு வாரம் தினந்தோறும் பார்த்துக் கொண்டிருந்தார் போலிருக்கிறது. 
    ஒரு வாரத்திற்குப் ஊருக்கு சென்றவர்கள் திரும்பி வர, அலுவலகத்திலி ருந்து மகிழ்ச்சியுடன்  மனைவி மக்களை காண வீடு சேர்ந்தவருக்கு  அதிர்ச்சி காத்திருந்தது .
    "........இந்த வயசுல கண்றாவிப் படங்களை எல்லாம் ஒரு வாரமா பாத்தீங்களாமே. உங்கள் பையன் உங்க வண்டவாளத்தை கப்பலேத்திட்டான்  .இது மட்டும்தானா? நாங்கள் இல்லாத நேரத்தில வேற என்னவெல்லாம் செஞ்சீங்க . உங்களை நல்லவர்னு நினச்சேனே..." என்று பொங்கி எழ மனிதர் பாவம் பதில் சொல்ல முடியாமல் "ஞ" வரிசையில்  12 விதமாக விழித்தார் . 
    பின்னர் என்னிடம் கேட்டார் "அவங்க இல்லாத நேரத்திலதான் பாத்தேன்.  எப்படி தெரிஞ்சிருக்கும் "
    "பசங்க எல்லாம் இப்ப ரொம்ப அட்வான்ஸ்.உங்க பையனுக்கு கம்பியூட்டர் இன்டர்நெட் பத்தி நல்லா தெரிஞ்சிருக்கு. வீட்டுக்கு வந்ததும் browsing history ஐ பாத்திருப்பான் அதில நீங்க பாத்த வெப் சைட் எல்லாம் இருக்கும். உடனே அம்மாகிட்ட போட்டு கொடுத்திட்டான் ." என்றேன்.
    "அதுல இவ்வளோ விஷயம் இருக்கா?கம்ப்யூட்டர்ல என்ன பண்ணாலும் தெரிஞ்சுடுமா " என்றார் அப்பாவியாக 
    "அடுத்த முறை இந்த மாதிரி பாத்தவுடன் ஞாபகமா ஹிஸ்டரிய டெலிட் பண்ணிடுங்க." என்றேன் சிரித்துக் கொண்டே 
    "ஆளை விடுப்பா . இனிமே கம்ப்யூட்டர் பக்கமே போகமாட்டேன்" என்றார் 


    *************************


    இதைப் படிச்சாச்சா ?



    ***************************************************************************************************



    வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

    23மார்ச்2015 முதல் ஆபாசத்திற்கு ஆப்பு கூகுள் முடிவு

    இணையத்தில் தமிழ்ப் பயன்பாடு முன்பைவிட அதிகரித்திருக்கிறது  தமிழில் பல்லாயிரக்கணக்கான இணைய தளங்கள் இணைய சேவைகள் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. தமிழில் தேடும் வசதிகளும் மேபடுத்தப் பட்டுள்ளன. இணையத் தமிழ் பயன்பாட்டை நல்ல விதமாக பயன்படுத்துபவர்களை விட ஆபாசம் பாலியல் தூண்டல் போன்றவற்றிற்கே அதிகம் பயன்படுத்துகிறார்களோ என்ற அச்சமும் கூகுளில் தமிழில்தேடுதல் மேற்கொள்ளும்போது ஏற்படுகிறது.இந்த கூகுளில் தமிழில் தட்டச்சு செய்து தேடுதல் மேற்கொள்ளும்போது கவனமாக இருக்கவேண்டும். அம்மா அப்பா,தங்கை அத்தை என்று உறவுமுறையை தப்பித் தவறிக் கூட தட்டச்சு செய்துவிடக் கூடாது  அவ்வளவுதான் ஏராளமான தமிழின் ஆபாச தளங்களை பட்டியலிட்டுக் காட்டிவிடும். தமிழ் எழுத்தாளர்கள் இவ்வளவு பேர் இருக்கிறார்களா என்று ஆச்சர்யத்தை ஏற்படுத்திவிடும்.இவை கூகுளின் Content Policy க்கு எதிரானது என்றாலும் தடுக்க இயலவில்லை. இவற்றை தடை செய்ய அல்லது கட்டுக்குள் கொண்டு வர முடிவதில்லை. கூகுள் பல்வேறு மொழிகளில் வலைப்பதிவுகளை அனுமதிப்பதால் ஒவ்வொன்றின் உள்ளடக்கத்தையும் தணிக்கை செய்வது நடைமுறை சாத்தியம் இல்லாதது . புகார் கொடுக்கப்பட்டால் வலைப்பதிவுகள் கூகுளால் நீக்கப் பட்டுவந்தன . எத்தனை முறை நீக்கினாலும் அதனை விட வேகமாக புதியவை முளைத்து விடுகின்றன. கூகுள் அவ்வப்போது எச்சரிக்கை செய்து  கொண்டுதான் இருக்கிறது.
        இரண்டு மூன்று  நாட்களுக்கு முன் ஒரு பதிவை போஸ்ட் செய்வதற்காக ப்ளாக்கரில் நுழையும் போது கூகுள் டேஷ் போர்டில் கீழ்க்கண்டவாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்ததை காணமுடிந்தது. நீங்களும் கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.


    இம்முறை 23 மார்ச் 2015 முதல்  ப்ளாக்கில் வெளிப்படையாக பாலுணர்வைத் தூண்டும் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிர்வதை  கட்டாயம் அனுமதிக்காது என்று எச்சரித்துள்ளது கூகுள். ஆனால் நிர்வாணப் படங்கள்  கலையுணர்வு கல்வி,ஆவணப் படங்கள் , அறிவியல் விளக்கங்கள் போன்றவற்றிற்காக மட்டும் பயன்படுத்தப்பட அனுமதிக்கப் படும் என கூகுள் தெரிவித்துள்ளது. மார்ச் 23 க்குப் பிறகு என்ன நடக்கும்?. ஏற்கனவே பழைய பிளாக்கர் வலைப் பதிவுகளில் ஆபாசப் படங்களோ வீடியோக்களாக இருந்தால் உங்கள் வலைப் பதிவு ப்ரைவேட்டாக மாற்றப்படும். அதாவது இவ்வலைப் பதிவுகளை அதன் உரிமையாளர் மட்டுமே காணமுடியும்.மற்ற வலைப்பதிவுகளை காண்பது போல அனைவரும் காணமுடியாது . மார்ச் 23 க்கு முன்னதாக் ப்ளாக் தொடங்கியவர்கள் கூகுளின் இந்தக் கொள்கைக்கு மாறாக உள்ள ஆபாச படங்களையும் வீடியோக்களையும் நீங்களே நீக்கி விடுங்கள் அல்லது  உங்கள் வலைப்பதிவை  யாரும் பார்க்க முடியாத படி ப்ரைவேட்டாக மாற்றிவிடுங்கள் என்று எச்சரித்துள்ளது. உள்ளடக்கம் பற்றி ஏற்கனவே ஏற்கனவே கூகுள் விதிமுறைகள் வகுத்துள்ளன . அவற்றை அறிய விரும்பினால் இங்கே செல்லவும் நீங்கள் காணும் பிளாக்கர் வலைப்பூவின் உள்ளடக்கம் ஆபாசம், பாலியல் தூண்டல் வன்முறை முதலியவற்றை கொண்டதாக அமைந்து நீக்கவோ தடை செய்யவேண்டியது என்று நீங்கள் கருதினால்
    https://support.google.com/blogger/answer/76314 என்ற இணைப்பிற்கு சென்று அங்கு ஆட்சேபத்துக்குரிய வலைப்பூவின் முகவரியை அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூகுள் கூறியுள்ளது 


    இவை ப்ளாக்கர் வலைப்பூகளுக்கு மட்டுமே பொருந்தும்.Wordpress போன்றவற்றிற்கு பொருந்தாது 

    என்னதான் சட்டங்களும் விதிமுறைளும் வகுத்தாலும் ஓரளவிற்கே இவற்றை தடை செய்ய முடியும். தனி மனிதன் திருந்தினால் மட்டுமே இவை முழுமையாக சாத்தியப்படும்.
    ஊதுகிற சங்கை ஊதுவோம் என்றாவது ஒருநாள் விடியாமலா போகும்?


    ****************************************************************