என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 25 அக்டோபர், 2013

கவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு?

    
  சமீபத்திய முக நூல் பரபரப்பு கவிஞர் தாமரை தன் முக நூலில் இட்ட நிலைக் குறிப்பு(status). கவிஞர் பாடலாசிரியர் என்ற வகையில் அவர்மீது மரியாதை உண்டு. வசீகரா பாடல் மூலம் தன்னை திரும்பிப் பார்க்க வைத்தவர். மன்னிப்பாயா பாடலால்  இளம் உள்ளங்களை உருக்கியவர் தாமரை. ஆண்களே திரைப் படப் பாடலாசிரியராக பரிமளிக்க  முடியும் என்ற மரபை உடைத்தவர். 

   பொறியியல் பட்டதாரியான தாமரை கோயம்பத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில் படித்தவர் . ஆர்வம் உந்தித் தள்ள தன் பார்த்த பணியை விட்டு விட்டு  கவிஞராகவும் பத்திரிகையாளராகவும் பயணத்தை தொடர்ந்தார். இவருடைய படைப்புகள் இயக்குனர் சீமானை ஈர்த்தன. வாய்ப்பும் அளித்தார். கொஞ்சம் கொஞ்சமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் தாமரை.

   பின்னர்   தமிழர் தேசிய இயக்க பொது செயலாளராக இருந்த
தோழர் தியாகுவோடு மணவாழ்க்கையில் இணைந்தார் தாமரை. இருவருக்கும் பழைய திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமையாத நிலையில் புது வாழ்வு வாழத் தொடங்கியதாகத் தெரிகிறது. 

   தியாகு நக்சலைட் இயக்கத்தில் இருந்தவர். கைது செய்யப் பட்டு மரண தண்டனை விதிக்கப் பட்டவர். மரண தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. தனது சிறை அனுபவங்களை தொடராக ஜூனியர் விகடனில் எழுதி வந்தார்.அது பெரும் வரவேற்பு பெற்றதாக அறிய முடிகிறது. தியாகு சிறையில் இருந்தபோது காரல் மார்க்சின் டாஸ் கேபிடல் என்ற புகழ் பெற்ற நூலை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 

   சமீப காலமாக இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. கடந்த ஆண்டே இவர்கள் இருவரைப் பற்றியும் பரபரப்பான செய்திகள் வெளிவந்ததை அறிந்திருக்கலாம். தியாகு தமிழ் தேசிய இயக்கத்திலிருந்து நீக்கப் பட்டார். தியாகுவின் லீலைகள் என்று விமர்சனத்துக்குரிய வீடியோக்களும் யூ ட்யூபில் உலா வந்தன.

   இலங்கையில் நடைபெற இருக்கின்ற காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சமீபத்தில் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார் தியாகு. பதினைந்து நாட்கள் நீடித்த பின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில்தான் தாமரையின் முக நூல் பக்கத்தில் படத்தில் உள்ள status வெளியாகி உள்ளது.

.............. இந்தத் துன்பமான காலகட்டத்தில் தன்னோடு துணை நிற்கும்படி மேற்கண்ட பதிவில் கூறப பட்டுள்ளது.  தன் உள்ளத்தை மன வருத்தத் தோடு பதிவு செய்திருப்பதற்கு தியாகுவிற்கும் இவருக்கும் உள்ள பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே சென்றது காரணம் என்று கூறப்படுகிறது. தியாகு உண்ணாவிரதம் இருக்கும் விஷயம் பத்திரிகைகளை பார்த்துத்தான் தெரிந்து கொண்டாராம்  தாமரை

   தன்னை தவிர்த்து வந்த தியாகுவிடம் அனைவரின் முன்னிலையில் நியாயம் கேட்க உண்ணாவிரத நிறைவு நாளன்று அங்கு சென்றதாக தமிழக அரசியல் பத்திரிக்கை தெரிவிக்கிறது.

   இதன்  பின்னர் வெளியானதுதன் தாமரையின் முகநூல் ஸ்டேடஸ்.செய்திகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒரு பெண் என்ற முறையில் தாமரையின் நிலை கவலைக் குரியதுதான். தைரியமும் மன உறுதியும் கொண்ட பெண்ணான தாமரை இதை எதிர் கொள்ள முடியாமல் உடைந்து போய் முக நூலில் நிலையை பதிவு செய்தது சற்று அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கிறது.  பிரபல கவிஞர் அதுவும் பெண் ஆயிற்றே வழக்கம்போல் முகம் காணா முக நூல் நட்புக் கூட்டம் கவலைப் படாதீர்கள்! உங்களுக்கு துணையாக நாங்கள் நிற்கிறோம் என்ற தொனியில் கம்மெண்டுகளை அள்ளி வீசினர். எந்த வகையில் துணை நிற்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.  சொந்த சோகங்களை பதிவு செய்து அதற்கு ஒரு அரசியல் வாதியைப் போலஆதரவு தேடுவது எதற்காக என்பது புரியவில்லை. காவல் நிலையம் நீதி மன்றம் அல்லது நேரடி பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முடியுமே!

   தமிழுக்காகவும் தமிழ் சமுதாயத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாக கூறும் ( சமுதாயத்திற்காக என்ன செய்தார் என்று தெரியவில்லை. ஒரு வேலை நான் அறியாமல் கூட இருக்கலாம்). என் மொழிப் பற்றும் இனப் பற்றும தான் என் அவல நிலைக்குக் காரணம் என்றும் கூறுகிறார். இது அவர்களது சொந்தப் பிரச்சனை. பிரச்சனைகள் தீர்ந்து  நல்லபடியாக வாழ பிரார்த்திக்கிறேன்.

       என்னை பொறுத்தவரை பெண்களோ ஆண்களோ தங்கள் குடும்ப விவகாரங்களை சமூக வலை தளங்களில் பகிர்ந்து ஆறுதல் தேடுவது சில சிக்கல்கள் உருவாக காரணமாக அமையக் கூடும்.   முகநூல் பயன் படுத்துபவர்கள் தங்கள் வீட்டில் நடந்த சிறு பிரச்சனையைக் கூட எல்லாரும் அறியும் வண்ணம் வெளியிட்டால் அந்த சூழலை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு அப்பாவிகளை, நல்லவர் போல் நடித்து ஏமாற்றும்  சமூக  வலை தளங்களில் வலம் கயவர்களுக்கு வாய்ப்பாக அமையும் அல்லவா?

    நல்ல  விஷயங்களை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் சொந்தக் குடும்ப பிரச்சனைகளை சமூக வலை தளங்களில் பகிர்ந்து கொள்வது நல்லதல்ல என்பதும் ஆறுதல் தேடும் களமாக சமூக வலை தளங்களை பயன்படுத்துவதில் ஆபத்து உள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும்

********************************************************************************************
முந்தைய பதிவுகள் 
*********************************************************************************************58 கருத்துகள்:

 1. [[[என்னை பொறுத்தவரை பெண்களோ ஆண்களோ தங்கள் குடும்ப விவகாரங்களை சமூக வலை தளங்களில் பகிர்ந்து ஆறுதல் தேடுவது சில சிக்கல்கள் உருவாக காரணமாக அமையக் கூடும்.]]]

  உண்மை!
  பொது தளங்களில் வெளியிடக்கூடாது; இதானால் நடக்கப் போவது ஒன்றும் இல்லை மன வருத்தம் இருந்தால். அதை தீர்க்க வேண்டிய இடம்--மருத்துவ மனையில்...இங்கு அல்ல! அல்லவே அல்ல!

  பதிலளிநீக்கு
 2. பதிவு இனமறியாத வேதனையைத்தான் மனதிற்குத் தருகிறது!

  பதிலளிநீக்கு
 3. சொந்த விஷயங்களை பொதுத் தளத்தில் பகிர வேண்டிய அவசியம் ஏன் என்று புரியவில்லை. அதே கேள்விதான் எனக்குள்ளும்....

  பதிலளிநீக்கு
 4. பிரச்சனை பெரிதாகும் தவிர குறைய வாய்ப்பே இல்லை... இருந்தாலும் அவர்களது சொந்தப் பிரச்சனை வருத்தம் அளிக்கிறது...

  பதிலளிநீக்கு
 5. உண்மைதான் வலையில் தவிர்த்திருக்கலாம்

  பதிலளிநீக்கு
 6. பிரச்சனை என்னவென்பதை தாமரை பகிர்ந்து கொள்ளவில்லை. தான் வேதனையில் இருப்பதை வெளிப்படுத்தி ஆறுதல்தான் தேடியிருக்கிறார். இருந்தாலும் சமூகத் தளங்களில் கவலைகளைப் பகிர்வதில் எனக்கும் (உங்களைப் போல) உடன்பாடில்லைதான்! அக்கறையுடன் கூடிய நல்ல பகிர்வு முரளி! பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதில் மற்றவர்கள் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. தெரிவில் நின்று போராடவா போகிறார்கள்.
   இதைப் போல் தியாகு ஒரு ஸ்டேடஸ் போட்டால் இதை விட வரவேற்பு இருக்கும்

   நீக்கு
 7. நானும் படித்தேன் அண்ணா... தாமரை நல்ல மனிதர், நான் அவரது பேச்சை நேரில் கேட்டிருக்கிறேன்... தமிழிற்க்காக நிறைய தியாகங்களை செய்தவர்... வருத்தம் அளிக்கிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி என்ன தியாகத்தை செய்து விட்டார் தமிழுக்கு??? விடுதலை புலிகளை எதிர்ப்பவரெல்லாம் தமிழின துரோகி போல ஆதரிப்பவரெல்லாம் தமிழின தியாகிகளா???

   நீக்கு
 8. // நல்ல விஷயங்களை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் சொந்தக் குடும்ப பிரச்சனைகளை சமூக வலை தளங்களில் பகிர்ந்து கொள்வது நல்லதல்ல என்பதும் ஆறுதல் தேடும் களமாக சமூக வலை தளங்களை பயன்படுத்துவதில் ஆபத்து உள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும் //

  சகோதரரே! உங்களது கருத்தை அப்படியே வழிமொழிகின்றேன். இது ஆண் பெண் என்று எல்லோருக்கும் பொருந்தும்.

  பதிலளிநீக்கு
 9. பொதுவா நீங்க சொன்னது சரி தான், இப்போலாம் மனசுல இருக்குறத இந்த மாதிரி பேஸ் புக் ல சொல்றது சகஜமாகிடுச்சு. நான் கூட புலம்புவதுண்டு. ஆனா யாரையும் எதுக்காகவும் என்னோட சொந்த விசயங்கள்ல தலையிட அனுமதிக்குறது இல்ல. சோகமா இருந்தா ஆறுதல் சொல்றேன்னே நெருக்கமாகிட முயற்சி பண்றவங்க நிறைய பேர் இருக்காங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாமரை விஷயம் அறிந்தவர். அப்பாவிகள் அறியாமல் இதை பகிர்ந்து கொள்வதன் மூலம் இன்னல்களை அவர்களை அறியாமலேயே தேடிக் கொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது

   நீக்கு
 10. சொந்த விஷயங்களை குறிப்பாக சோகங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அனுதாபங்களை தேடிக்கொள்வது தவறுதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சோகத்தின் விளிம்பில் நிற்கும் பலரும் எந்த வழியிலாவது தங்களுடைய சோகத்திற்கு தீர்வு கிடைக்காதா என்றுதான் நினைப்பார்கள். போலீசுக்கு போகலாமே கோர்ட்டுக்கு போகலாமே என்றால் அது அவர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. நான்கு பேரிடம் சொன்னால் தீர்வு கிடைக்கவில்லையென்றாலும் மனதுக்கு ஆறுதலாவது கிடைக்குமே என்ற எண்ணத்தில் கூட தாமரை இதை எழுதியிருக்கலாம். அவருக்கு நண்பர்கள் அளிக்கும் ஒரு சில ஆறுதலான - அது வெறும் பேச்சுக்காக என்றாலும் - அதில் ஒருவேளை அவருக்கு ஆறுதல் கிடைக்கலாம். இதை அந்த கோணத்திலும் பார்க்கலாமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தியாகு விரக்தியுடன் ஒரு ஸ்டேடஸ் போட்டால் இதைவிட ஆதரவும் அனுதாபமும் கிடைக்கும்

   நீக்கு
 11. குடும்பம் தவிர மற்றவர்களிடம் தம்மை சார்ந்த விஷயங்களை ஒரு எல்லையோடுதான் பகிர வேண்டும்... அது யாராக இருந்தாலும்..! அதே போல் தொலைக்காட்சியில் குடும்ப பிரச்சினைகளை வீதிக்கு கொண்டு வரும் நிகழ்ச்சிகளை ரொம்ப அழகாக செய்து கொண்டிருக்கிறார்கள்.... இதற்கு பங்கு பெற வரும் சம்மந்தபட்டவர்கள் நிஜமாக வருகிறார்களா அல்லது ஒப்பந்தமா என்று தெரியவில்லை... யாரோ யாருக்கோ நடக்கிற பிரச்சினைகள் உலகம் முழுக்க தெரிவித்து சம்மந்தபட்டவர்கள் மேல் சேற்றை வாறி அப்புவது போல் இருக்கிறது..!

  ஆறுதலுக்காக பகிரும் விஷயங்கள் பின்னாளில் அவர்களது பலஹீனங்களாகத்தான் திருப்பி தாக்கப்படுகிறது.

  பதிலளிநீக்கு
 12. சமூக வலைதளங்களில் பரவிக் கிடக்கும் மாயைகளில் இதுவும் ஒன்று... இந்த மாயை எல்லார் மனதிலும் ஒருவித போதையை ஏற்படுத்துகிறது என்பது தான் உண்மை

  பதிலளிநீக்கு
 13. அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை, இணைந்து வாழ்கிறார்கள் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
  தமிழ் சமுதாயத்திற்காக அவர்களிருவரும் தாய்தமிழ்ப் பள்ளியைத் தொடங்கி நடத்திவருகிறார்கள்.

  நாத்தம் பிடித்த தமிழ்ப்பாடல்களுக்கிடையே தூய தமிழில், ஆங்கிலமும் அசிங்கமும் கலக்காமல் இனிய பாடல்களை எழுதியவர் கவிஞர் தாமரை.
  ஈழத்தமிழர் பிரச்சனைக்காக பலவிதமான போராட்டங்களில் பங்களித்திருக்கிறார். ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டர்களுக்காகவும் போராடி வந்திருக்கிறார். இவைகளுக்கு மேல் என்னென்ன செய்தார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அந்த நிலைத்தகவலில் அவர் தனது சொந்தப் பிரச்சனை குறித்து இல்லை என்றுதானே குறிப்பிட்டிருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 14. மரண தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாகியது. --இப்போது தண்டனைக் காலம் முடிந்து விட்டதா? சமூக வலைத் தளங்கள் எதற்கெல்லாம் உபயோகப் படுகிறது.?இத்தனை விஷயங்களும் பதிவு படித்துத்தான் தெரிந்தது. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 15. அருமையாக மிகச் சரியாக
  சமூக வலைத்தளங்களின் நிலைப்பாடு குறித்தும்
  அதனை எந்த அளவோடு நிறுத்திக் கொள்ளுதல்
  சரியென்றும் கூறிச் சென்றது மனம் கவர்ந்தது
  பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 16. தியாகுவின் தண்டனைக் காலம் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. [ஆயுள் தண்டனையும் குறைக்கப்பட்டது என்று நினைக்கிறேன்]

  பதிலளிநீக்கு
 17. தியாகுவின் தண்டனைக் காலம் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. [ஆயுள் தண்டனையும் குறைக்கப்பட்டது என்று நினைக்கிறேன்]

  பதிலளிநீக்கு
 18. நல்ல விஷயங்களை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் சொந்தக் குடும்ப பிரச்சனைகளை சமூக வலை தளங்களில் பகிர்ந்து கொள்வது நல்லதல்ல என்பதும் ஆறுதல் தேடும் களமாக சமூக வலை தளங்களை பயன்படுத்துவதில் ஆபத்து உள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும்//
  உண்மை. நன்றாக சொன்னீர்கள்.
  விழிப்புணர்வு கட்டுரை.

  பதிலளிநீக்கு
 19. தாமரை நல்ல கவிஞர்.
  தியாகு நல்ல சிந்தனையாளர்.
  இருவருக்குள்ளும் எழும் பிரச்சினைகளைத் தீர்க்க வலைதளம் சரியான வழியல்ல.
  தியாகுவின் முதல்திருமணம் அவர் ஆயுள்தண்டனை பெற்று உள்ளே இருந்தபோது கூட இருந்த லெனினின் மகளுடன் கந்தர்வக்கோட்டையில் நடந்தது. நான் கலந்துகொண்டேன். அதில் பெ.மணியரசன் பேசியது “மாமனும் மருமகனும் முதலில் காதலித்து இந்தத் திருமணம் நடக்கிறது!” ஆனால், லெனினின் மகளுடன் வாழ்ந்த தியாகுவைப் பிரித்து, தாமரை திருமணம் செய்துகொண்டார். பிறகு இவர்களுக்குள் கருத்து வேறுபாடு... சொந்த சிந்தனையில் முடிவு வராவிட்டால் சொல்லக்கூடியவர்களிடம் கேட்க வேண்டும். பொதுத் தளம் சரியான வழியல்ல. நீங்கள் சொன்னது சரிதான் முரளி. சரியான நேரத்தில் வந்த சரியான பதிவு. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது தொடர்பானது என்றே நினைக்கிறேன் -
   இந்த வார ஆனந்த விகடன் (தீபாவளி ஸ்பெஷல்-30-10-2013) இதழில் வந்திருக்கும் தாமரையின் கவிதை (பக்-68)-

   ”மெல்ல முன்நகர்ந்து
   கிடைத்த கம்பைப்
   பிடித்து எழுந்து
   இறுகப் பற்றிச் சுற்றிப்
   பிணைந்திருக்கும்
   இளம் அவரைக்கொடி
   நினைவுபடுத்துகிறது,
   கணவன் இல்லாத
   அல்லது இருந்தும் இல்லாத
   ஒற்றைப் பிள்ளை வைத்திருக்கும்
   எல்லாத் தாய்மார்களையும்.”

   போதுமா? இதைப் புலவர்கள் தற்குறிப்பேற்ற அணி என்பார்கள்.

   நீக்கு
  2. சுய சிக்கல்களை வெளியுலகிற்குக் கொண்டுவந்து விளம்பரம் தேடுவது சினிமாக்காரர்களின் இயல்பு. தாமரையும் அந்தக் கும்பலில் சிக்கிகொண்டிருப்பது வருத்தம் தருகிறது.

   நீக்கு
 20. வணக்கம் அய்யா. சொந்த பிரச்சமைகளை வெட்ட வெளிச்சமாக்கி ஆதரவு கேட்பதும் அதற்கு நண்பர்களும் நாங்கள் இருக்கிறோம் என்பது வெறும் காணல்நீர் போல தான். இரண்டுமே எதற்கும் உதவாது. தங்கள் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன். நல்லதொரு பகிர்வுக்கு நன்றீங்க அய்யா...

  பதிலளிநீக்கு
 21. சொந்தப் பிரச்சனைகளை தானாகவே தீர்த்து கொள்ளவேண்டும் மற்றவர்கள் சொல்லும் அறிவுரைகள் குழப்பத்தில்தான் சென்று முடியும். என் அம்மாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது எவ்வளவு பெரிய பிரச்சனைகள் இருந்தாலும் அதை நாலு சுவருக்குள்ளேயே வைத்து தீர்த்து கொள்ள வேண்டும் என்பதுதான்

  பதிலளிநீக்கு
 22. tவணக்கம்
  முரளி(அண்ணா)

  நீங்கள் சொல்வது உண்மைதான்... இறுதியில்சொன்னது போல ஆபத்து வருவது
  நிச்சயம்... .. மிக மிக அவதானம் தேவை...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 23. இனம் புரியாத சோகம் இருப்பது போல் தெரிகிறதே...

  பதிலளிநீக்கு
 24. “சொந்த பிரட்சனை“ என்பது
  அவரவர்களுக்கு மட்டுமே
  சொந்தமானதாக இருக்க வேண்டும்!!

  பதிலளிநீக்கு
 25. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 26. அவரின் பாடல்கள் எனக்கும் பிடிக்கும். 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை' பாடல் மிகவும் பிடிக்கும். மற்றபடி சொந்த விஷயங்கள் பகிரப்படுவது பற்றி உங்கள் கருத்துதான் எனக்கும்!

  பதிலளிநீக்கு
 27. பிரபலமாயிட்டாலே இதாம்மா பிரச்சனை..நான்லாம் ஸ்டேடஸ் போட்டிருந்தா நாலு பேர்கூட படிச்சிருக்க மாட்டாங்க.

  பதிலளிநீக்கு
 28. //ஆனால் சொந்தக் குடும்ப பிரச்சனைகளை சமூக வலை தளங்களில் பகிர்ந்து கொள்வது நல்லதல்ல என்பதும் ஆறுதல் தேடும் களமாக சமூக வலை தளங்களை பயன்படுத்துவதில் ஆபத்து உள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும்//
  சரியாச்சொன்னீங்க!

  பதிலளிநீக்கு
 29. நாட்டுல பலப்பேருக்கு இன்னமும் இணையமும்,சமூக வலைத்தளங்கள் குறித்தும் சரியான புரிதல் ஏற்படவேயில்லை என்பதற்க்கு இப்பதிவே ஒரு சான்று :-))

  சொந்தப்பிரச்சினையை சாமனியன் இணையத்தில் பகிர்வது வேறு ,பிரபலம் பகிர்வது வேறு,

  பிரபலங்கள் இவ்வாறு பகிர்வது ஒரு வகையான "பொதுஜனதொடர்பு" சேவை என்ற நோக்கில், இப்படி ஒரு பிரச்சினை இருக்கு அதை மீடியாவில் எழுதுங்க என மீடியாவை கூப்பிட்டு சொல்வதற்கு பதிலாக , மீடியாவை தேடி வர வைக்க சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் பகிர்கிறார்கள், இதைப்படிச்சுட்டு இன்னேரம் ஏதேனும் ஒரு ஊடகம் தாமரையை அனுகி செய்தி சேகரித்திருக்கும் விரைவில் "விரிவாக சிறப்பு கட்டுரையாக" வரலாம் அவ்வ்!

  சமூக வலைத்தளங்கள் எல்லாம் இல்லாத காலங்களில் மீடியாவை வரவைக்க அவர்களுக்கு தொலைப்பேசி செய்து கூப்பிடனும், பல சமயம் வராமலே போய்விடுவாங்க, இப்போ அப்படிலாம் கஷ்டப்பட வேண்டாம் துவித்தர், முகநூல், பிலாக்னு எழுதி வச்சுட்டா சூடான செய்திக்கு ஆசைப்படும் ஏதேனும் ஒரு ஊடகம் தானா வந்து 'கவனிச்சுட்டு' போகும் :-))

  நம்ம நாட்டுல கொஞ்சம் பிரபலங்கள் தான் சமூக வலைத்தளங்களின் "சக்தியை" புரிந்துக்கொண்டு இருக்காங்க, மேலைநாடுகளில் எல்லாம் மிக திறமையாக சமூக வலைத்தளங்களைப்பயன்ப்படுத்தி 'தங்களைப்பற்றி ஊடகங்களை கவனிக்க வச்சுடுறாங்க" டிவோர்ஸ் செய்வதாக இருந்தாலும், புதுசா கேல் பிரன்ட் புடிச்சாலும், புள்ளைப்பெத்துக்கிட்டாலும் அதை ஊடகத்தில் செய்தியாக்க எளிய வழி ..சமூக வலைத்தளங்களே!

  அது புரியாம பழம்பஞ்சாங்கம் படிச்சிட்டு இருக்காங்கலே நம்ம மக்கள் , இன்னும் ஆயிரம் ஆண்டு ஆனாலும் விளங்க மாட்டாங்க அவ்வ்!

  # ஆனாலும் சமூக சேவகி போலவும்,இனத்துக்காக ,மொழிக்காக தியாகம் செய்த தியாகி அதனால் இந்நிலைக்கு ஆளாகிட்டேன் என சொல்வதை எல்லாம் கேட்டால் சிப்பு சிப்புத்தான் வருது அவ்வ்!

  எத்தனையோ மொழிப்போர் தியாகி, சுதந்திரப்போராட்ட தியாகி எல்லாம் இருத இடம் தெரியாமல் சோத்துக்கே கஷ்டப்பட்டு இறந்து இருக்கிறார்கள், இப்பவும் சுதந்திரப்போரட்ட தியாகி பென்ஷன் கேட்டு கலெக்டர் அலுவலத்தில் மனுக்கொடுக்கும் முதியோர்களும் இருக்காங்க,அவங்கலாம் இப்படி குமுறினா நாடு தாங்குமா?

  மேற்கு சைதாப்பேட்டையில அரங்கநாதன் சப்வேனு ஒன்னு இருக்கு அந்த அரங்கநாதன் யாருனு இக்கால இணைய சேகுவேராக்களுக்கு தெரியுமானே தெரியலை,தாளமுத்து,நடராசன் ,சின்னசாமி,தர்மாம்பாள், அரங்கநாதன்னு பலர் தமிழுக்காக உய்ரி நீத்துள்ளனர், அவர்கள் எல்லாம் யார்னே தெரியாமல் ஆனால் தாமரையை சமூக போராளினு சொல்லி கவலைப்பட ஒரு கூட்டமே கூடுது அவ்வ்!
  ==================
  பின்குறிப்பு:

  முரளி ,

  உங்கள் வலைத்தளம் எனக்கு ஃபையர்ஃபாக்ஸில் திறக்கவே மாட்டேங்கிறது, ஐ பேடில் பின்னூட்டப்பெட்டி காட்டவே மாட்டேங்குது, குரோமில் வந்தால் மட்டுமே சரியாக வேலை செய்கிறது, இது எனக்கு மட்டுமா எனத்தெரியவில்லை, முடிந்தால் என்னவென கவனிக்கவும்,ஆனால் இப்பிரச்சினை சில காலங்கள் முன்னர் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தகவுளுக்கு நன்றி. என்ன சிக்கல் என்று தெரியவில்லை. டெம்ப்ளேட் மாற்றிப் பார்க்கிறேன்.firfox எனது கணினியிலும் தாமதமாகவே திறக்கின்றது.

   நீக்கு
  2. தகவலுக்கு நன்றி. என்ன சிக்கல் என்று தெரியவில்லை. டெம்ப்ளேட் மாற்றிப் பார்க்கிறேன்.firfox எனது கணினியிலும் தாமதமாகவே திறக்கின்றது.

   நீக்கு
  3. முரளி,

   ஃபயர்ஃபாக்ஸில் உங்களுக்குமே மெதுவாத்தானா ,அப்போ ஓகே :-))

   # பிரபலமாக இருக்கவங்க சமூகவலைத்தளத்தில் பிரச்சினையை பகிர்வது ,மீடியாவை கவர ஒரு பக்கம் என்றால் இன்னொன்றும் இருப்பதாக இப்போப்படுது, மீடியாவுல சொல்லும் முன்னர் சம்பந்தப்பட்ட யாருக்கோ மெசேஜ் சொல்லவும் பயன்ப்படுத்தி இருக்கலாம், அதாவது சமூக வலைத்தளத்தில் இத்தகவலைப் பார்த்த பின்னரும் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துக்கொண்டு சமாதான பேச்சு வார்த்தைக்கு வரவில்லை எனில் , மீடியா., அல்லது அடுத்தக்கட்டம் என போகலாம்.

   எனவே பிரபலங்கள் பகிர்வதன் பின்னாலும் ஒருக்காரணம் இருக்கும்.

   எனவே இதனை டிரயிலராக தான் பார்க்கனும்,எப்படியும் நம்ம பத்திரிக்கைகள் புலனாய்வு செய்யாமலா போகப்போகுது.

   நீக்கு
 30. சரியாகச் சொன்னீர்கள் ஐயா. தனிப் பட்ட விவரங்களை, சொந்தக் குடும்பப் பிரச்சனைகளை சமூக ஊடகங்களில் வைப்பது சரியான செயலல்ல. ஒரு தவறான முன்னுதாரனத்தை ஏற்படுத்தி விடுவாரே என்ற கவலையும் உடன் வருகிறது.நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 31. சொந்தக் குடும்ப பிரச்சனைகளை சமூக வலை தளங்களில் பகிர்ந்து கொள்வது நல்லதல்ல
  Vetha.Elangathilakam.

  பதிலளிநீக்கு
 32. உண்மைதான் . சொந்தப் பிரச்சனைகளை உறவுகளிடமே சொல்லத் தயங்கும் மக்களிடம் இவ்வாறான தளங்களில் வெளிப்படுத்தி ஆறுதல் தேடுவதும் விளம்பரம் தேடுவதுமிப்போது சகஜமாகிவிட்டது. சரியாக பொருத்தமான நேரத்தில் இப்பதிவு தந்திருக்கின்றீர்கள்

  பதிலளிநீக்கு
 33. வளரும் கவிதை அறிமுகத்துக்கு பின் இங்கு வந்தேன் .அருமையான பதிவுகளை இதனை நாளாய் தவறவிட்டுருக்கிறேன் .சரிதான் தாமரை பொது வெளியில் ஆதரவு தேடுவது அவரது குழப்பமான மனநிலையை தான் காட்டுகிறது.

  பதிலளிநீக்கு
 34. "நல்ல விஷயங்களை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் சொந்தக் குடும்ப பிரச்சனைகளை சமூக வலை தளங்களில் பகிர்ந்து கொள்வது நல்லதல்ல என்பதும் ஆறுதல் தேடும் களமாக சமூக வலை தளங்களை பயன்படுத்துவதில் ஆபத்து உள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும்." என்ற தங்கள் வழிகாட்டலை முற்றுமுழுதாக வரவேற்கிறேன்.

  பதிலளிநீக்கு
 35. பதில்கள்
  1. Whatever may their marriage status but being a human being and also having social status an appeal before the society either for their union or for making a decision to contineu their life especially for their child life is to be considered by all in a humanitic manner. That is the TAMIL CULTURE system and I hope that a good decision will be taken by the intelectual persons THIYAGU AND THAMARI very soon and i pray for that aspect also. by Ad Ramasami Chelliah

   நீக்கு
  2. Whatever may their marriage status but being a human being and also having social status an appeal before the society either for their union or for making a decision to contineu their life especially for their child life is to be considered by all in a humanitic manner. That is the TAMIL CULTURE system and I hope that a good decision will be taken by the intelectual persons THIYAGU AND THAMARI very soon and i pray for that aspect also. by Ad Ramasami Chelliah

   நீக்கு
 36. சொந்தப் பிரச்சினை என்று நினைத்துப் பதிலளித்திருக்கும் எல்லோருக்கும் என் நன்றி... இது சொந்தப் பிரச்சினை போல் தோற்றமளிக்கும் பொதுப் பிரச்சினை. முகநூலில் வெளியிட்டால் என்னாகும் என்று தெரியும். எல்லாம் தெரிந்துதான் பதிவிட்டிருக்கிறேன்... அப்படியொரு பதிவு அந்த நேரத்தில் தவிர்க்கமுடியாது என்பதால் இடப் பட்டது. ஒரு செய்தி... சிலர் நான் விளம்பரத்துக்காக அப்படிச் செய்தேன் என்று கூறியிருக்கிறார்கள்.. மிகவும் வருந்துகிறேன் - எனக்கு இப்படியொரு விளம்பரம் தேவையேயில்லை. நான் சார்ந்த திரைப்படத்துறையில் கிடைக்காத விளம்பரமா ?. போலிஸ், கோர்ட், பொது நண்பர்கள், பேச்சுவார்த்தை என்று பலரும் அறிவுறுத்தியுள்ளீர்கள் - நன்றி, நானும் அந்த வழிகளை அறிவேன்.
  இருந்தும் முகநூலுக்கு வரவேண்டியிருந்தது எனில் அதற்கான காரணங்கள் வலுவாக இருக்கக் கூடுமல்லவா ?. உங்கள் அனைவரின் நேரத்திற்கும் நன்றி !. இன்னுமொரு தகவல் - நான் தியாகுவின் சட்டப்படியான மனைவி. இருவரும் முறையான மணமுறிவு பெற்று இந்தத் திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணம், மனைவி என்பதற்கான மரியாதைகள் இன்னும் இந்த சமூகத்தில் இருக்கின்றன என்று நம்பி, அதற்கான பாதுகாப்பைக் கோரி அதே சமூகத்தின் முன் வந்தேன். (சட்டப் பாதுகாப்பு இப்போதும் உண்டு. அதையும் மீறி தர்மம், தார்மீகம் , நெறி என்ற சில வார்த்தைகள் உண்டல்லவா தமிழ்ச்சமூகத்தில் ?). நன்றி மீண்டும் உங்கள் அனைவருக்கும். இன்றுதான் நான் இதைப் பார்க்க நேர்ந்தது. கவிஞர் தாமரை.

  பதிலளிநீக்கு
 37. கவிஞர் தாமரை அவர்களுக்கு,
  வணக்கம்
  தங்கள் கருத்தை தெரிவித்தமைக்குமிக்க நன்றி . இந்தப் பதிவினால் தங்கள் மனம் புண்படுமானால் அதற்கு வருந்துகிறேன். எதையும் உறுதியாக எதிர் கொள்ளும் மனப பக்குவம் படைத்த தாங்கள் மனம் வருந்திப் பதிவு செய்யும் அளவுக்கு ஏதோ ஒன்று இருக்கும் என்பதை உணரமுடிகிறது.
  நீங்கள் பிரபலமானவர். உங்கள் முகநூல் பக்கத்திற்கு வருகை தருபவர்கள் அதிகம் இருப்பார்க. இளம்பெண்கள், குடும்பப் பெண்களும் தங்களைப் பார்த்து சோகங்களையும் பிரச்சனைகளும் முகம் அறியாதவர்களுடன் பகிர்ந்து கொள்வது பிரச்சனையை தர வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் பெண்மனம் மென்மையானது. சொல்வதெல்லாம் உண்மை என்று நம்பக்கூடியவர்களாக நிறையப் பேர் இருக்கிறார்கள். தீ மணம் படைத்தோர் ஆறுதல் கூறுவது போல நடித்து ஏமாற்றக் கூடும் என்பதே என்னைப் போன்றவர்கள் கவலை.அவ்வப்போது பத்த்ரிகைகளிலும் இது போன்ற செய்திகள் வருவதை காண முடிகிறது.
  கவலை வேண்டாம் .தாங்கள் சிக்கல் தீர்ந்து நலமும் வளமும் பெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 38. நான் கவிஞர் தாமரை பிரச்சனை குறித்து மனதில் தோன்றிய எண்ணங்களை உங்கள் எழுத்து வடிவில் படித்தேன். தாமரையின் பொறுமையான பதிலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895