என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 31 ஜூலை, 2015

இறைவனுக்கும் பூசை இல்லை


     மூன்று வாரங்களுக்கு முன்பு கவிஞர் மு.பி பால சுப்ரமணியம் அவர்கள் எழுதிய பஞ்சம் என்ற தலைப்பிலான கவிதையின் பாதியை மட்டும் வெளியிட்டிருந்தேன். பஞ்சப்பாட்டு பாடலாமா என்ற தலைப்பில் வெளியான அந்தப் பதிவை  படித்திருப்பீர்கள். படிக்காதவர்கள் இங்கே படித்து  விட்டு  மிச்சமுள்ள பஞ்சப் பாட்டை தொடருங்கள் 

பஞ்சப்பாட்டு முதற் பகுதி 
..................................

தொடர்ச்சி 

                               வேருக்குப் பஞ்சமெனில் மரமே வீழும் 
                                          விளைச்சலுக்குப் பஞ்சமெனில் விலைகள் ஏறும் 
                                  நீருக்குப் பஞ்சமெனில் நிலம்வெ டிக்கும்
                                             நேர்மைக்கு பஞ்சமெனில் உளம்து டிக்கும் 
                                  ஏருக்குப் பஞ்சமெனில் உழவே இல்லை 
                                            ஏணிக்குப் பஞ்சமெனில் ஏற்றம் எங்கே? 
                                  யாருக்கும் பஞ்சமெனில் அச்சம் தானே 
                                             இறைவனுக்கும் பஞ்சமெனில் பூசை ஏது? 


                               பண்புக்குப் பஞ்சமெனில் வாழ்வே மோசம் 
                                            பாட்டுக்குப் பஞ்சமெனில் இசையே நாசம் 
                                 அன்புக்குப் பஞ்சமெனில் நட்பே இல்லை 
                                            அறிவுக்குப் பஞ்சமெனில் நாளும் தொல்லை 
                                 பண்புக்குப் பஞ்சமெனில் பகைமை மிஞ்சும் 
                                            நாட்டிற்குள் பஞ்சமெனில் வறுமை கொஞ்சும் 
                                 தென்புக்கு பஞ்சமெனில் சோர்வே மிஞ்சும் 
                                            தெளிவுக்குப் பஞ்சமெனில் குழப்பம் துஞ்சும் 

                              தகுதிக்குப் பஞ்சமெனில் வேலை போகும்
                                            தரத்திற்குப் பஞ்சமெனில் மானம் போகும் 
                                பகுதிக்குப் பஞ்சமெனில் விகுதி இல்லை 
                                           பாலுக்குப் பஞ்சமெனில் தயிர்மோர் இல்லை 
                                 தொகுதிக்குப் பஞ்சம் எனில் வெற்றி இல்லை 
                                           மிகுதிக்குப் பஞ்சமெனில் குறைவே துள்ளும் 
                                 மேன்மைக்குப்  பஞ்சமெனில் கீழ்மை வெல்லும் 

                                பத்திரிகைத் துறைக்குந்தான் பஞ்சம் உண்டு 
                                              படத் துறையை அழிக்கும்பண் பாட்டுப் பஞ்சம் 
                                 சத்தியத்தின் நிழலில்தான் பொய்க்குப் பஞ்சம் 
                                             சந்து முனை அழைப்பினிலே கற்புப் பஞ்சம் 
                                  உத்தியோகத் துறைகளிலேநல் லெண்ணம் பஞ்சம் 
                                               உலகமுழு தும் இன்றோ எண்ணெய்ப்பஞ்சம் 
                                  எத்திக்கும் சூழுகின்ற உணவுப் பஞ்சம் 
                                             இந்தியத்தாய்  பெற்றெடுத்த ஒருமைச்  சின்னம் 

                                                               ****************

எச்சரிக்கை:

 இந்தியா சந்தித்த உண்மையான பஞ்சம் பற்றிய பதற வைக்கும் பதிவு விரைவில்




வியாழன், 30 ஜூலை, 2015

இது அந்த நடிகரைப் பற்றிய பதிவு அல்ல



இது முற்றிலும் கற்பனைக் கதையே   நீங்கள் நினைக்கும் அந்த நடிகரை நினைத்து  எழுதப்பட்டது அல்ல
****************

    அந்த கிராமமே பரபரப்பாக இருந்தது. இருக்காதே பின்னே. பிரபல நடிகர் மரக்கன்றுகள் நடுவதற்கு அந்த ஊருக்கு வருகிறாரே. ஒரு திருவிழா போல அல்லவா ஏற்பாடு செய்ப்பட்டிருந்து.   ஏராளமான கூட்டம். ப்ளக்சில் அப்துல் கலாமோடு சிரித்துக் கொண்டிருந்தார் நடிகர்.  இன்னும் சிறிது நேரத்தில் வரப் போகிறார். தொடங்கப் போகிறது விழா 
"தனது சொந்தப் பணத்தில் இருந்து செலவு செய்து மரம் நடுகிறாராமே." "இதுவரை 2999999 மரக் கன்றுகள்  நட்டுவிட்டாராம் "
 "30 லட்சமாவது மரத்தை நம் ஊரில் நடப் போகிறாராம்"
"இந்த நடிகர் மத்த நடிகர்கள் மாதிரி இல்ல .நல்ல ஜெனரல் நாலேட்ஜ்  இருக்கறவர். படங்கள்ல நல்ல கருத்துகளை சொல்பவர்" .
"அப்துல் கலாமை பேட்டி கண்டவர் . அவர் சொன்னார் என்ற ஒரே வார்த்தைக்காக ஒரு மாபெரும் சேவையை செய்யறார் தெரியுமா. வேற எந்த நடிகனாவது இப்படி செஞ்சிருக்கானா?
இப்படி ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்தனர்  . 
    நடிகரின் வரவை ஊர் மக்கள் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கு முன் ஓட்டுக்கேட்க வரும் அரசியல் வாதிகளைத் தவிர வேறு யாரும் அந்த ஊருக்கு வந்ததில்லை. முதல் முறையாக  ஒரு நடிகரை பார்க்கும் ஆவலுடன் பலர் குழுமி இருந்தனர்.   இளைஞர்கள் பெரியவர்கள்  பல்வேறுசமூக ஆர்வலர்கள்  தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் குவிந்திருந்தனர். பெரிய மேடை அமைக்கப் பட்டிருந்தது. அற்புதமாக அலங்காரமும் செய்யப் பட்டிருந்தது   சுற்று சூழல் விழிப்புணர்வு வாசகங்கள் ஆங்காங்கே  பளிச்சிட்டுக் கொண்டிருந்தன.அவர் பல்வேறு  இடங்களில் மரம் நட்ட  காட்சி சிசி டிவியில் ஓடிக் கொண்டிருந்தது 

  அந்த மைதானத்தில்நூற்றுக்கும் மேற்பட்ட  மரக் கன்றுகள் நடப்படுவதற்கு  தயாராக  நடிகருக்காக காத்துக் கொண்டிருந்தன. மரம் நட குழிகள் தோண்டப் பட்டிருந்தன.
நடிகரின் கார் மைதானத்தில் நுழைந்தது . முக்கியஸ்தர்கள் ஓடி வந்து வரவேற்றனர். மேடைக்கு அழைத்தனர். இல்லை நேரம் ஆகி விட்டது மரம் நடுவதை முடித்து விட்டு அப்புறம் மேடைக்கு செல்லலாம் என்று சொல்லி விட்டார்.  மைக்கில் அறிவிக்க 3000000 லட்சமாவது மரத்தை நட்டு தண்ணீரை ஊற்ற கூட்டம் கை தட்டியது. மேலும் சில மரங்களை நட போட்டோக்கள் பளிச்சிட்டன. மொபைல்களும்  ஹான்டி காம்களும், மரம் நாடும் காட்சியை கைப்பற்றிக்   கொண்டிருந்தன .  நடிகர் ஆர்வத்துடன் சிறுவர் சிறுமியரிடம் கை குலுக்கினார். 
     நடிகருக்கு பலவேறு தரப்பினர் சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகள் கொடுத்து பாராட்டினர்.  
   "நடிகர்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள். ஆனால் சமுதாயத்திற்கு எதுவும் செய்வதில்லை என்று கூறுவதுண்டு . ஆனால் நமது அண்ணன் நாட்டுக்காக சுற்று  சூழல் பாதுகாப்புக்காக உலகம் வெப்பமாகிக் கொண்டு வரும்  ஆபத்தை உணர்ந்து தன்னுடைய பங்காக மரம் நடும் இயக்கத்தை ஆரம்பித்து நான்கு ஆண்டுகளாக பல லட்சங்கள் மரங்கள் நட்டிருக்கிறார். எந்த எதிர்பார்ப்புமில்லாமல் அண்ணன் செய்யும் சேவையை நாம் போற்ற வேண்டும்............" மேடையில் ஆளுக்கு ஆள் புகழ்ந்தனர் 

 நடிகர் புகழ்ச்சி மழையில் நனைந்து பேச எழுந்தார் 

"...................கனவு காணுங்கள் என்று சொன்னார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்  என்னிடம் கேட்டார் ,"நாட்டுக்காக நீ ஏதாவது செய்ய்யலாமே" என்றார் 
'சொல்லுங்கள் ஐயா! செய்கிறேன்' என்றேன்  
'இயற்கையை அழிப்பதன் காரணமாக உலக வெப்பமாகிக் கொண்டே வருகிறது. இது எதிர் காலத்துக்கு ஆபத்தாய் முடியும் .அதில் நீ கவனம் செலுத்த வேண்டும்.  நீ ஏன் மரங்கள் நடக் கூடாது?. உன்னைப் போன்ற பிரபல நடிகர்கள் இதுபோல் செய்தால் அவர்கள் ரசிகர்களும்  அதனை பின்பற்றுவர்கள் அல்லவா 'என்றார் 
 'மனிதன் பிறந்து பெரிதல்ல .  பணம் சம்பாதிப்பது பெரிதில்லை. ஆனால் நாட்டுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்பதை உணர்த்தி  விட்டீர்கள் ஐயா,உங்கள் வார்த்தைகளை சிரமேற்கொள்வேன். இன்றே மரக்கன்று நடும் இயக்கத்தை தொடங்கிவிடுகிறேன். ஒரு கோடி  மரங்கள் நடுவதுதான் என் இலக்கு என்று அப்துல் கலாம் ஐயாவிடம் சூளுரைத்தேன். இன்று 3000000 லட்சம் மரக்கன்றுகள் நட்டுவிட்டேன். பெரிய விழா எடுத்து  3000000 மாவது மரத்தை கலாம் ஐயா அவர்கள் கரங்களால்  நடவேண்டும் என்று நினைத்தேன். அந்தோ ஆனால் அவர் மறைந்து விட்டார் . தனி மரமாக என்னை மரம் நடவைத்து விட்டீர்களே ஐயா "
நடிகர் கண்கலங்க கூட்டம் அமைதியானது  கண்களை துடைத்துக் கொண்டு தொடர்ந்தார்.
"அவர் கனவை நனவாக்குவதில் என் சிறு முயற்சியை செய்வேன்.   எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.  ஓரு கோடிமரங்கள் நட்டு முடிக்கும் வரை ஓய மாட்டேன். என்னுயிர் பிரிவதற்குள் அதனை செய்து முடிப்பேன். நீங்களும் மரம் நடுவதில் என்னோடு இணையுங்கள். மரம் நடுவோம்! மழை பெறுவோம்!  இந்த பூமியை குளிரவைப்போம்.   " என்று உணர்ச்சிப் பெருக்கோடு பேச அனைவரும் கைதட்டினர் 
  பின்னர் (தன்னையே இன்னொரு கலாமாக நினைத்துக் கொண்டு ) அருகில் அரசு பள்ளிக்கு சென்று மாணவர்களை சந்திக்க சென்றார் . மாணவர்களுக்கு கலாமை எடுத்துக்காட்டி தன்னம்பிக்கை உறையாற்றினார் 
"மாணவர்களே! நீங்கள் ஏதேனும் கேள்விகள் என்னிடம் கேட்கலாம் 
பலரும் அவரது  இள வயது வாழ்க்கை ஊர் , கல்வி, அறிவியல் வரலாறு   என்று  கேள்விகள்  கேட்க அவரும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டே வந்தார் . ஆசிரியர்கள் நடிகருக்கு இவ்வளவு திறமையா என்று வியந்தனர் 
அப்போது ஒரு சிறுவன் குறுகுறுவென அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். அதை கவனித்த நடிகர் "தம்பி! நீ ஏதோ கேட்க விரும்புவதாக தெரிகிறதே! தைரியமாகக் கேள்' . 
"ஐயா நீங்கள் எத்தனை மரக் கன்றுகள் நட்டிருக்கிறீர்கள் "
சிரித்துக் கொண்டே " அதை நீ போஸ்டரில் பார்த்திருப்பாயே. இருந்தாலும் சொல்கிறேன். 30லட்சம்" 
" எத்தனை ஆண்டுகளாக இந்த பணியை செய்து வருகிறீர்கள் ஐயா"
"நான்கு ஆண்டுகளாக "
அடுத்த கேள்வி அதிர வைத்தது 
"30லட்சம் மரக் கன்றுகளில் எத்தனை உயிரோடிருக்கின்றன?"

....................
பதில் கிடைக்குமுன் ஆசிரியர்கள் ஓடிவந்து அவனை இழுத்து சென்றனர். 


*********************************************************************

செவ்வாய், 28 ஜூலை, 2015

அப்துல் கலாம் மறைவு! ஊடகங்களின் தவறான விடுமுறை அறிவிப்புகள்

      குடியரசுத் தலைவர் என்றாலே டாக்டர் ராதாகிருஷ்ணனும் அப்துல் கலாம் மட்டுமே உடனே நம் நினைவுக்கு வருவார்கள். அந்த அளவுக்கு அந்தப் பதவிக்கு  பெருமை சேர்த்தவர்கள் இவர்கள் . இருவருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதில் நாம் பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டிய ஒன்றல்லவா? 
     குழந்தைகள்,இளைஞர்கள் மீது அன்பும் நம்பிக்கையும் கொண்ட உலகம் போற்றிய உன்னத மனிதராகத் திகழ்ந்த  கலாம்  காலமானார்.  சின்னத் திரை, பத்திரிகைகள் முகநூல் டுவிட்டர் என இணையம் முழுவதும் அஞ்சலிகளால் நிறைந்துள்ளது. சாலை ஓரங்களிலும் பொது இடங்கள் அலுவலகங்களில் கூட அவரது உருவப் படம் வைக்கப் பட்டு அஞ்சலி செய்யப்படுவதைப் பார்க்கும்போது  எந்த அளவுக்கு மக்கள் மனதை வென்றிருக்கிறார் என தெரிகிறது. அவரது மறைவு இந்தியாவையே குறிப்பாக தமிழகத்தை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.  

       நேற்று இரவு அப்துல் கலாம் மறைந்தார் என்ற உறுதிப் படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன என்ற தொலைகாட்சி செய்தி கூறியது. சிறிது நேரத்தில் செய்தி உறுதிப் படுத்தப் பட்டுவிட்டது. இதனைத் தொடர்ந்து ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப் படும் என அறிவிக்கப் பட்டது. 

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற செய்தியும் வெளியானது. இணையத்திலும் நாளை (28.02.2015) விடுமுறை என்ற செய்தியை காண முடிந்தது.சில பள்ளிகளில்  இருந்தும் கல்லூரிகளில் இருந்தும் குறுஞ்செய்தியும் மின்னஞ்சலும் விடுமுறை தகவலை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் அனுப்பின. கட்டாயம் விடுமுறைதான் என்று பெற்றோரும் மாணவர்களும் நம்பினர். ஆனால் தமிழக அரசு விடுமுறை அறிவிக்கவில்லை.  காலையில் அறிவிக்கப் படக் கூடும் என்றுசிலர் எதிர்பார்த்தனர். ஆனால் அறிவிக்கப் படவில்லை.


. காலையில்  தொலைக் காட்சியிலும் பத்திரிகையிலும் விடுமுறை அறிவிப்பு  இல்லை. விடுமுறை என்ற உறுதிபடுத்தப் படாத செய்தியின் காரணமாக ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் குழப்பம் ஏற்பட்டது. 

குறிப்பாக அரசு பள்ளிகளே அதிக அளவில் பாதிக்கப் பட்டன.சில தனியார் பள்ளிகள் கல்லூரிகள் அறிவித்த விடுமுறையை ரத்து செய்யவில்லை

   தினமலரின் இணையப் பக்கத்தில்  அறிவிக்கப் பட்ட விடுமுறை செய்தி திடீரென்று காணாமல் போனது .  ஆனால் விடுமுறை என்பதை வெளியிட்ட ஊடகங்கள் தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்ற செய்தியை வெளியிடவில்லை

பத்திரிகைகளில் வெளியாகும்  செய்திகளை  நம் உண்மையென்று நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் பத்திரிகைகளோ பரபரப்புக்காக செய்திகளை  சரிபார்த்து உறுதிபடுத்தாமல் வெளியிட்டு விடுகின்றன. தமிழக அரசு அறிவித்தால் மட்டுமே விடுமுறை விடப்படவேண்டும். இது போன்ற விடுமுறை செய்திகளை முறையான அரசு அறிவிப்பு கிடைக்கப் பெற்ற பின்னரே வெளியிட வேண்டும்.

        இது மட்டுமல்ல பல செய்திகளை சரிபார்க்காமலும் உறுதிப் படுத்தாமலும் வெளியிடப்படுகின்றன  பார்க்காமலேயே கூட யாரோ காழ்ப்புணர்ச்சி கொண்டு  ஒருவர் புகைப்படம் தந்து வெளியிட சொன்னாலும் வெளியிட்டு விடுவார்கள். நிருபர்கள் சென்று அவற்றின் உண்மைத் தன்மையை அறிவது இல்லை .அவர்களுக்கு தேவை பரபரப்பு. சமீபத்தில்கூட ஒரு பத்திரிக்கை   70 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளியை  1000 மாணவர்களுக்கு மேல் படிக்கும் பள்ளியில் பாதுகாப்பில்லை. என்று செய்தி வெளியிட்டு விட்டது. உண்மையில் அம்மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அப்ப்ளியில் உள்ளன இதனால்  ஆசிரியர்களும் அலுவலர்களும்தான் பாதிக்கப் படுகிறார்கள். பெற்றோர்களோ குழப்பமடைகின்றனர்.
  முகநூல், வாட்ஸ்அப் போன்றவற்றில்தான் அதிகாரபூர்வமற்ற செய்திகள் , வதந்திகள்  பரவி வருகின்றன என்றால்  பத்திரிகைகளும் அவ்வாறே பொறுப்பற்ற முறையில்  செய்திகளை மிகைப் படுத்தியும் நம்பகத் தன்மை அற்ற வகையிலும் வெளியிடுவது அதிகரித்துள்ளது  இது தவிர்க்கப் படவேண்டும்.
   இப்போது தமிழக அரசு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் இறுதி சடங்குகள் நடை பெறும்  நாளான 30.07.2015 அன்று விடுமுறை அறிவித்துள்ளது
     
  இது போன்று  தலைவர்கள் அறிஞர்கள் இறப்பின்போது விடுமுறை விடப்படவேண்டுமா வேண்டாமா என்பது அரசின் விருப்பம் என்பதால் பத்திரிகைகள் அதை உணர்ந்து செய்திகளை வெளியிட வேண்டும்.
===================================================================

கொசுறு: பலரும் என்ன நினைக்கிறார்கள் என்றால் பள்ளிகளுக்கு இது போல் அடிக்கடி விடுமுறை விடப்படுகிறது.. வேலை நாட்கள் குறைந்துவிடும்..இது தேவையற்றது என்று. ஆனால் உண்மையில் இது போன்ற விடுமுறை விடப்பட்டால் அவை  ஈடு செய்யப் படவேண்டும். தொடக்க நடுநிலைப் பள்ளிகளாக இருந்தால் கட்டாயம் 220 நாட்கள் வேலை செய்யவேண்டும். எந்தக் காரணத்தைக்  கொண்டும் இந்த நாட்கள் குறையக் கூடாது.உள்ளூர் சிறப்பு நிகழ்வுகளுக்கு முன் அனுமதி பெற்று விடுமுறை விட அனுமதிக்கப் படும் என்றாலும்  மொத்த வேலை நாட்கள்குறைவுபடக் கூடாது.. குறைய நேருமாயின் சனிக்கிழமைகளில் வேலை செய்ய வேண்டும்.அதனால் இதுபோன்ற விடுமுறைகளை ஆசிரியர்கள்  விரும்புவதில்லை 


***************************************************************

திங்கள், 27 ஜூலை, 2015

சர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா?சசிதரூர் அதிரடி பேச்சு


     தற்போதைய இணைய உலகின் பரபரப்பு  காங்கிரஸ் எம்.பி  சசி தரூரின் பிரிட்டனை  அதிர வைத்த ஆக்ரோஷமான பேச்சு.    இங்கலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு யூனியன் என்ற அமைப்பு அவ்வப்போது முக்கியமான தலைப்புகளில் விவாதம் நடத்தும். கடந்த மே மாதம் 28 ம் தேதி 200 ஆண்டுகளாக காலனி ஆதிக்கம்  செலுத்திய நாடுகளுக்கு கடன்/கடமைப் பட்டிருக்கிறதா .என்ற தலைப்பில் விவாதம் நடத்தியது .
       இங்கிலாந்து கடன் பட்டிருக்கிறது என்ற தரப்பில் ஜமைக்கா தூதரக அதிகாரி அலௌன் தொம்பே அசம்பா  ,கானாவை சேர்ந்த ஜியார்ஜே  அயிட்டே , இந்தியாவை சேர்ந்த எம்.பி சசி தரூர்  ஆகியோரும்  இத் தரப்புக்கு எதிராக  சர் ரிச்சர் ஆட்டாவே என்ற பிரிட்டிஷ் அரசியல் வாதியும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க வரலாற்று அறிஞர்கள் ஜான் மெக்கன்சி ,வில்லியம் ரோஜர் லூயிஸ் ஆகியோரும் இன்னும் சிலரும் பங்கேற்றனர்.
   இங்கிலாந்து தனது காலனி நாடுகளுக்கு பல நன்மைகளை செய்துள்ளது அதனால் இழப்பீடு ஏதும் வழங்கத் தேவை இல்லை என்றுஅவர்கள் வாதாடினர். இந்த விவாதத்தில் பங்கேற்றார் காங்கிரஸ் கட்சி எம்.பி. சசி தரூர். இந்தியாவில் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருந்தாலும்  சசி தரூருக்கு இந்த விவாதப் பேச்சு பலரின் பாராட்டையும் பெற்றுத் தந்திருக்கிறது  மோடி கூட அவரது பேச்சை பாராட்ட, சோனியாவிடம் தரூர்  வாங்கிக் கட்டிக் கொண்டதாக கேள்வி
  ஆக்ஸ்போர்டு விவாத மன்றத்தில் ஆணித் தரமாக தனது கருத்துகளை எடுத்துரைத்ததோடு நகைச்சுவையாகவும் பேசி  15 நிமிடத்திற்குள் பல முறை  கைதட்டல்களை அள்ளிச் சென்றார் சசி தரூர் 
    கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே இந்த விவாதம் நடந்திருந்தாலும் சசி தரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு  வீடியோ இணைப்பு கொடுக்க www.bbc.com முக்கியத்துவம் கொடுத்து வெளியிட வைரஸாக  பரபரவென பரவியது. இதை யூ ட்யூப்பில்   பார்த்தவர்களின் எண்ணிக்கை 24இலட்சத்தை ஐ தாண்டிவிட்டது . ஏராளமானோர் சசி தரூரின் பேச்சை புகழ்ந்தாலும் எதிர் கருத்துகளையும் காண முடிந்தது.

       சசி தரூர் பேசிய உரையின் சாராம்சம்  தருண் தேஜ் பால் சென்னையில் சாருவின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த போது பேசிய பேச்சை ஒத்திருந்தது    
     உண்மையில் இந்தியா, பிரிட்டிஷ் காரர்களின் கறவை மாடாக திகழ்ந்தது. பிரிட்டிஷார் போதுமான அளவுக்கு இந்தியாவை  சுரண்டிய பின்னரே வெளியேறினர் என்று அழுத்தம் திருத்தமாக வாதிட்டார். உலகப் பொருளாதாரத்தில் ஆங்கிலேயர் வருமுன் 23% சதவீமாக இருந்த இந்தியாவின் பங்கு அவர்களின் வருகைக்குப் பின்  4% ஆக குறைந்தது என்று குறிப்பிட்டார்..இங்கிலாந்தின் தொழில் வளர்ச்சி இந்தியாவின் தொழில் வளர்ச்சியை அழித்ததானால்தான் அமைந்தது  என உறுதிபட உரைத்தார் . இராபர்ட் கிளைவ் கடுமையாக தாக்கிய தரூர். லூட்  என்ற ஹிந்தி சொல்லை ஆங்கிலத்துக்கு தந்தவர் அவர்தான் என்றார் கிண்டலாக. ஆனால் இந்தியாவில் கொள்ளைக் காரனாக திகழ்ந்த  அவரைக் கொண்டாடியது பிரிட்டிஷ் அரசு என்று சாடினார் 
   இந்தியாவில் போக்கு வரத்து வசதிகளை ஏற்படுத்தியது குறிப்பாக ரயில்வே வசதிகள் எல்லாம் ஏற்படுத்தியது  இந்திய  வளங்களை கொள்ளையடித்து செல்லத்தானே தவிர இந்தியர்களின் நலன்களுக்காக  அல்ல என்று அழுத்தம் திருத்தமாக உரைத்தார் .
    இந்தியாவில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டபோது லட்சக் கணக்கானோர் உணவுப் பற்றக் குறை காரணமாக உயரிழந்தனர்.ஆனால் சிறிதும் கருணையின்றி உணவுப் பொருள்களை இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் போர் வீரர்களுக்கு அனுப்ப உத்தரவிட்டார் சர்ச்சில். மக்கள் பஞ்சத்தால் வாடுவதை இங்கிருந்த அதிகார்கள்  சர்ச்சிலுக்கு கடிதம் மூலம் தெரிவித்தனர்.
   அதற்கு சர்ச்சில் அளித்த பதில் என்ன தெரியுமா?"அப்படியா! ஏன் காந்தி இன்னும் இறக்கவில்லை "
அப்ப்ப்பாஎந்த அளவுக்கு வெறுப்பும் துவேஷமும் உள்ள வார்த்தைகள் 



     இரண்டாம் உலகப்   போரில்   பிரிட்டன் படையில் ஆறில் ஒரு பங்கு இந்திய வீரர்கள் . வேறு எந்த நாட்டின் பங்களிப்பையும் விட இது பல மடங்கு அதிகம். இப்போரில் 54000  பேர்களுக்கு மேல் உயரிழந்தனர். 4000 பேர்களுக்குமேல் காணவில்லை

  வீட்டை கொள்ளையடித்தவரும் தனது பொருட்களை இழந்த வீட்டுக்காரரும் சம தியாகங்கள் செய்தார் என்று கூறுவது சரிதானா என்ற கேள்வி எழுப்ப அரங்கம் கை தட்டலால் அதிர்ந்தது.

      இந்தியாவுக்கு பிரிட்டன் நிதி உதவி செய்தது கூறுகிறது. அந்த உதவி இந்தியாவின் உற்பத்தியில் 0.4% .இதைவிட நாங்கள் உரங்களுக்கு கொடுக்கும் மானியம்கூட பல மடங்கு அதிகம் என உரைக்க மீண்டும் கைதட்டல் ஒலித்தது
       200ஆண்டுகளுக்குமேல்  இழைக்கப் பட்ட அநீதி ஒரு குறிப்பிட்ட தொகை இழப்பீடு வழங்குவதன் மூலம் ஈடு செய்து விட முடியாது. வேண்டுமானால் தவறென்று ஒப்புக்கொண்டு  மன்னிப்பு கேட்டு அதன் அடையாளமாக ஆண்டுக்கு 1 பவுண்டு வீதம் 200 ஆண்டுகளுக்கு  செலுத்தவேண்டும்  என்று சொல்லி முடிக்க பலத்த கர ஒலிகள் மூலம் பாராட்டுப் பெற்றார் . 

    இங்கிலாந்துக்கே சென்று அவர்கள் மீதே துணிச்சலாக குற்றம் சாட்டி வாதம் செய்து வென்றது பலரையும் கவர்ந்துள்ளது என்பது உண்மை.
சசிதரூர் தரப்புக்கு 185 வாக்குகள் பெற்று வாதத்தில் வென்றது.எதிர் தரப்புக்கு 56 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. பிரிட்டன் தனது காலனி நாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஆக்ஸ்போர்டு யூனியன் கருதுவதாக முடிவாகியது

   இந்தியாவில் சசி தரூர் மீது நிலவி வரும்  சர்ச்சைகள் சிறிதுகாலம் பொது மக்கள் மத்தியில் வலுவிழக்க இந்த அட்டகாசமான உரை உதவக் கூடும் . ஏதோ ஒரு குற்ற உணர்வு இருப்பதால்தான் இந்த விவாதங்களை பிரிட்டன் அனுமதிப்பதாக  தோன்றுகிறது. 
       இந்தியாவில் சொந்த நாட்டையே சுரண்டிய /சுரண்டும் பலரும் குற்ற உணர்வில் வாடும் வகையில் உணர்வு பூர்வமான  பேச்சை யாரேனும் தருவார்களா?

இதோ சசி தரூர் ஆற்றிய உரையின் காணொளி. ஆங்கில சப் டைட்டில்களுடன் உள்ளது . விரும்புவோர் காணலாம்



************************************************************




சனி, 25 ஜூலை, 2015

எங்கே என் எதிரி?



               என் எதிரியே
               எங்கே இருக்கிறாய்?
               எதிரில் வா!

                கண நேரத்தில்a
                என்னை
                களங்கப் படுத்துகிறாய்!

                சமயம்
                கிடைக்கும் போதெல்லாம்
                சங்கடப் படுத்துகிறாய்!

                காயப்படுத்துவதை
                களிப்புடன் செய்கிறாய் 

                என்
                மகிழ்ச்சியை
                மட்டுப் படுத்துவதில் 
                மட்டிலா மகிழ்ச்சி கொள்கிறாய் .

                நான்
                புலம்பும்போதேல்லாம்
                புன்னகைக்கிறாய்!

                உதவி செய்ய
                நினைக்கும்போதெல்லாம்
                ஓடி வந்து
                தடுக்கிறாய்!

                என்னை கோபப்படவைத்து 
                கொண்டாட்டம் கொள்கிறாய் 

                வெற்றியை நெருங்கும்போதெல்லாம்
                தட்டிப் பறிக்கிறாய்.

                தோல்விகளில்
                துவளும்போதும்
                துன்புறுத்தவே 
                நினைக்கிறாய்!

                உன்னை
                ஒழித்துக்கட்டாமல்
                நான்
                ஓயப் போவதில்லை

                துச்சமென உன்னை 
                துரத்தி அடிப்பேன்!

                எங்கே இருக்கிறாய்?
                அச்சம் இல்லையேல் 
                அருகில் வா!

                எதிரில் இல்லாத எதிரி
                ஏளனத்துடன்
                சொன்னான்
                "என்னை ஏன்
                 வெளியில்
                 தேடுகிறாய்

                 நான்
                 உன்னுள்
                 அல்லவா
                 உறைந்திருக்கிறேன்" 

***********************************************************



செவ்வாய், 21 ஜூலை, 2015

ஷர்மிலி மிஸ்! என் பொண்ண ஏன் அடிச்சீங்க?


நண்பர் ஸ்கூல் பையன் சரவணன்,ஷர்மிலி மிஸ் என்ற பதிவை தனது சொந்த அனுபவத்தை  அடிப்படையாகக் கொண்டு சிறுகதை போல அற்புதமாக எழுதி இருந்தார். உண்மையில் நெஞ்சம் நெகிழ வைத்தது என்று சொல்லலாம் . அதை இன்று காலையில் படித்ததும் என்னால் சும்மா இருக்க முடியவில்லை.ஒரு படைப்பின் வெற்றி தாக்கத்தை ஏற்படுத்துவதுதானே. பல்வேறு எண்ணங்கள் அலை மோத ஸ்கூல் பையனின்   இந்த பதிவிற்கு  இன்னொரு கற்பனை முடிவை பின்னூட்டத்தில் எழுத ஆரம்பித்தேன் நீளமாக ஆகிவிட்டதால் என்னுடைய வலைப்பதிவில் அதனைத் தொடர முடிவு செய்தேன்.

துளசிதரன்,கோவை ஆவி, குடந்தையூர் சரவணன் போன்ற குறும்பட ஆர்வலர்கள் ஸ்கூல் பையனின் பதிவோடு இதனையும் சேர்த்து இந்தக் கதையை குறும்படமாக்க முயற்சிக்கலாம் 

அவரது பதிவின் சுருக்கம்: எல்.கே.ஜி படிக்கும் தன் குழந்தையை பள்ளியில் அடித்து  விட்ட ஷர்மிலி டீச்சரை கோபம் கொண்டு கேள்வி கேட்க  தந்தை செல்ல அங்கு டீச்சரை பார்க்க முடியவில்லை.  காரணம் அவரது தந்தை இறந்து விட்டார் கோபத்தோடு  புறப்பட்டவர் இரக்கத்தோடு காத்திருப்பதகா முடிகிறது . ஸ்கூல் பையனின் பதிவு
ஸ்கூல் பையனியன்  பதிவைப் படிக்க கிளிக் செய்க ஷர்மிலி மிஸ்

ஒரு வேளை ஷர்மிலி மிஸ்ஸைப் பார்த்து கோபத்துடன்  பேசியிருந்தால் எப்படிப் போகும் கதை என்ற கற்பனையே எனது இப்பதிவு . ஸ்கூல் பையன் மன்னிக்கவும் 


அவருடைய பதிவில் கீழ்க்கண்டசிவப்பில் குறிப்பிட்ட  வாக்கியத்தை  தொடர்ந்து இதனை வாசிக்கவும் 
அடுத்த நாள் புதன்கிழமையன்று காலை நேரத்தோடேயே பள்ளிக்குச் சென்றுவிட்டேன்.
...ஸ்டாஃப்  ரூமில் ஷர்மிலி  மிஸ் இருப்பதாக சொல்ல கோபத்துடன் விரைந்தேன்.
ஷர்மிலி என்னை அடையாளம்  கண்டுகொண்டார். 
"நீங்க கற்பகாஸ்ரீ அப்பாதானே? "
ஷர்மிலி மிஸ்ஸின் மென்மையான குரல் எனது கோபத்தை குறைத்து  விடும் போல இருந்தது . அதை நான் விரும்பவில்லை. சற்றும் கடுகடுப்பு குறையாமல்  "ஆமாம்! கற்பகா வை  அடிச்சீங்களாமே!."
"இல்ல. அவ கொஞ்சம் குறும்பு பண்ணா அதுக்காக லேசா தட்டினேன். அவ்வளவுதான்அவங்க அம்மா கிட்ட கூட சொல்லிட்டனே!"என்றார் பதட்டத்துடன் 
 "குழந்தையை நீங்க எப்படி அடிக்கலாம் . ஆயிரக்கணக்குல பீஸ் கட்டி படிக்கவைக்கிறது உங்க கிட்ட அடி வாங்கவா?. இன்னும் எந்த காலத்தில இருக்கீங்க  ..." 
எனது  கோபத்தை எதிர்பார்க்காத ஷர்மிலி மிஸ்சின் முகம் பயத்தில் மாறியது 

நான் தொடர்ந்தேன் 
"அவ ஏதாவது தப்பு செஞ்சிருந்தா  எங்ககிட்ட தான் சொல்லணுமே தவிர நீங்க அடிக்கக் கூடாது. குழந்தைகளை அடிக்கறதுக்கு பெத்தவங்களுக்கே உரிமை இல்லை. நீங்க எப்படி அடிக்கலாம்? குழந்தைங்க என்ன கல்லா ? அசையாம அப்படியே இருக்கிறதுக்கு. பி.எட். ல சைல்ட் சைக்காலஜி படிச்சிட்டுதானே வந்தீங்க. குழந்தைகளை எப்படி ட்ரீட் பண்ணனும்னு தெரியாதா?.  சைல்ட் ப்ரொடெக்ஷன் சட்டம் இருக்கு தெரியுமா? இன்னொரு தடவை  இப்படி நடந்தா சும்மா இருக்க மாட்டேன் . பிரின்சிபால் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன். அவர் கேக்கலைன்னா சி இ ஓ கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன், அதுக்கு மேலயும் போவேன்" என்று கத்தினேன். 
 நான் சத்தம் போடுவதை கேட்டு ஓடிவந்த மற்ற டீச்சர்கள் "சார்! நீங்க போங்க பாத்துக்கறோம்  என்று  என்னை சமதானப் படுத்தி அனுப்பினர் 
ஆனாலும் குழந்தையை அடித்ததை மனம் ஏற்றுக் கொள்ளவில்லை  
    வீட்டுக்கு வந்ததும் சாப்பிட்டு விட்டு அலுவலகத்துக்கு புறப்பட்டேன். வேலையில் மூழ்கிப் போக ஷர்மிலி மிஸ் என்கோபத்தில் இருந்து தற்காலிகமாக விடுதலை பெற்றிருந்தார்..
      இரவு வீடு திரும்பும்போது கற்பகாவுக்கு பிடித்த ஸ்வீட்டை  அடையார் ஆனந்த பவனில் வாங்கிக் கொண்டேன். ரோட்டில் விற்றுக்கொண்டிருந்த பெரிய டெட்டி பியர் பொம்மையையும் வாங்கிக்கொண்டேன் கற்பகாவுக்கு ரொம்பப் பிடிக்கும். 
    பிளாட்ஸ் காம்பவுண்டுக்குள் நுழைந்ததும் எனது வாகன சத்தம் கேட்டு ஓடிவரும் கற்பகா இன்னும் வரவில்லை. ஏதோ ஹோம் ஒர்க் செய்து கொண்டிருப்பாள் அல்லது  மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருப்பாள் என்று நினைத்துக் கொண்டேன்.
மனைவி கதவை திறந்தார் மனைவியைத் தாண்டிப் பார்த்தேன் ஹாலில் குழந்தை  கண்ணில் படவில்லை .
"பிரபா, குழந்தை சாப்பிட்டாளா, அதுக்குள்ளயா தூங்கிட்டா? கற்பகா! உனக்கு அப்பா என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு !  அவளை கூப்பிடு"   என்று சொல்லிவிட்டு ஆடை மாற்றிக் கொண்டு வந்தேன். 
"ஏண்டி! உங்கப்பா கூப்பிடறது காதுல விழலயா?. நீங்க வர்ற வரைக்கும் நல்லாத்தான் விளையாடிக்கிட்டிருந்தா இப்பதான் ரூமுக்குள்ள  போனா. நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு. ரொம்பதான் செல்லம் கொடுத்து வச்சுருக்கீங்க "என்று அம்மாக்களின் வழக்கமான டயலாக்கை பேசினாள்
    அப்போதும் கற்பகாவரவில்லை நான் அவள் ரூமுக்குள் நுழைந்தேன். கட்டிலின் மூலையில் உம்மென்று உட்கார்ந்து கொண்டிருந்தது என் செல்லம்.. நான் போனதும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
 "ஒரு வேளை ஜுரமாக இருக்குமோ "  நேற்று டீச்சர் அடித்தது வேறு நினைவுக்கு வந்தது. அதனால்  காய்ச்சல் வந்திருக்குமோ? தொட்டுப் பார்த்தேன். நார்மலாகத் தான் இருந்தது 
"ஏம்மா? என்ன ஆச்சு? .டாடி உனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு."
...........................
"ஏன் கோவம்?  என் செல்லம்! உன்னை அடிச்ச  மிஸ்சைத்தான் நான் திட்டிட்டு வந்துட்டனே! நான் திட்டினதுக்காக உன்னை திரும்பவும் உன்னை அடிச்சாங்களா? இல்லை திட்டினாங்களா? சொல்லு. அந்த மிஸ்சை ஒரு வழி பண்ணிடறேன். என்ன நினைச்சிக்கிட்டிருக்காங்க . பயப்படாமா உண்மைய சொல்லு "  
பொம்மையையும் ஸ்வீட்டையும் கொடுத்தேன் . கோபத்துடன் தூக்கி எறிந்தாள் கற்பகா 

"போங்க டாடி! எங்க மிஸ்ஸை ஏன் திட்டினீங்க? பாவம்! ஷர்மிலி மிஸ். இன்னைக்கு   பூரா அழுதுக்கிட்டே இருந்தாங்க. 'உன்னாலதான்  மிஸ் அழறாங்கன்னு என் பிரண்ட்செல்லாம் என்னை திட்டினாங்க.  . என்கிட்ட கொஞ்ச பேர் டூ கூட விட்டுட்டாங்க. அப்புறம் நான் மிஸ் கிட்ட போய் சாரி மிஸ்! இனிமே எங்கப்பாகிட்ட சொல்லமாட்டேன்னு சொன்னேன்.. இனிமே நீங்க ஸ்கூலுக்கு வராதீங்க டாடி" என்று சொல்லிவிட்டு மீண்டும் முகத்தை திருப்பிக்கொண்டாள் 
என்ன சொல்வதென்று தெரியாமல் நான் திகைத்து நிற்க

காபி கொண்டு வந்த பிரபா என்னைப் பார்த்து  புன்னகைத்தாள். ஏளனமாய்!

                                           *********************************

பாத்திரங்கள் : 
தந்தை : சரவணன் 
மகள் : கற்பகாஸ்ரீ
தாய் : பிரபா 
மிஸ் : ஷர்மிலி 

நன்றி; ஸ்கூல் பையன் 


சனி, 18 ஜூலை, 2015

இசைப்பறவை எம்.எஸ்.வி -அவருடைய பாடல்களை இப்படிக் கண்டுபிடிப்பேன்.


    உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்த எம் எம்ஸ்.வி யை மருத்துவமனையில் சந்தித்து தன் வீட்டில் இருந்து கொண்டு சென்ற உணவை ஊட்டினார் என்ற செய்தியைப் எனது பெட்டிக் கடைப் பதிவில் பகிர்ந்திருந்தேன். அதற்குள்  எம்.எஸ். வியின் மரணச் செய்தி  வரும் என்று எதிர்  பார்க்கவில்லை.

"ஆளுக்கொரு தேதி வச்சு ஆண்டவன் அழைப்பான்
அப்போ யார் அழுதா அவனுக்கென்ன காரியம் முடிப்பான்"

என்று எம். எஸ். வி யின் பாடல் உண்டு. ஆம் காலதேவன் கணக்கை முடித்தான்.

   எம்.ஜி.ஆர்.  என்.டி.ஆர், .  டி.எம்.எஸ்,எஸ்.பி.பி என்று மூன்று எழுத்து சுருக்கம் வைத்திருப்பவர்களுக்கு   சிறப்புகள் பல உண்டு. இவர்களெல்லாம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள். அந்த வரிசையில் எம்.எஸ்.வி யையும் சொல்லலாம்.
   எம். எ.ஸ். வி பற்றி எழுதும் அளவுக்கு இசை அறிவு பெறாதவன் நான். ஆனால் ஒன்று மட்டும் சொல்ள முடியும். எந்த இசை   சாதாரண மக்களையும்  ஈர்க்கிறதோ அந்த இசையே சிறந்த இசை. எம். எஸ். வியின் இசை அப்படிப் பட்டது. ஆனால் அவரது இசை   பாமரர்களை  மட்டுமல்ல மேதைகளையும் ஆச்சர்யப் படவைத்தது.
     பழைய பாடல்கள் என்றாலே எம்.எஸ். வி இசை யாகத் தான் இருக்கும் என்று நம்புவன் நான்.இந்த மேதையின் ஹார்மோனியத்தில் பிறந்த மெட்டுக்கள் இன்னமும் நம் காதோரம் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இவரது கைவிரலில் இருந்து விளைந்து கவிதை ஆடை அணிந்து நம் மனதை கொள்ளை கொண்ட பாடல்கள் ஆயிரம் ஆயிரம். பொதுவாக பெரும்பாலான  இசை அமைப்பாளர்களின் குரல்வளம் கொண்டவர்களாக இருப்பதில்லை. இவரது குரலும் அதற்கு விதி விலக்காக அமையவில்லை  என்றாலும் அவரது குரலில் ஒருகவர்ச்சி உண்டு. ஆனால் அவர் பாடிய  பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்றைப் பெற்றிருக்கின்றன.

 பல்வேறு தரப்பினர் எம்.எஸ்.வி க்கு இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர் . இளையராஜா தனது இரங்கல் செய்தியில்

 "எம்.எஸ்.வி அண்ணாவின் இசைப் புலமையை பற்றி நன்றாக அறிந்தவர்கள் இங்கு யாருமே இல்லை என்பது என்னுடைய திட்டவட்டமான கருத்து. அவர் தன்னுடைய இசையமைப்பில் மிகவும் உயர்தரமான இசை நுணுக்கங்களை யெல்லாம் கொண்டுவந்தார். அதை ஊன்றி கவனித்ததால்தான் நான் ஒரு இசையமைப்பாளராகவே ஆனேன் என்பதை சத்தியமாக சொல்லுகிறேன்" 
என்று குறிப்பிட்டிருந்தார் .


 அவர் கூறியுள்ளது நூற்றுக்கு நூறு உண்மை .மெல்லிசையைப் பொறுத்தவரை எம்.எஸ்.வி.வி யின் தாக்கம் இல்லாமல் இசை அமைப்பது கடினம் என்று பல இசை அமைப்பாளர்களும் கூறி இருப்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தன் இசை  பாடல் வரிகளுக்கும் கதைக்கும் துணைபுரியும் விதத்தில்தான் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தனது மேதைமை வெளிப்படவேண்டும் என்று அவர் விரும்பியதில்லை
     எம்.எஸ். வி. யின் காலத்தில் பெரும்பாலும் இது எம்.ஜிஆர் பாடல்; இது சிவாஜி பாடல்; இது கண்ணதாசன் பாடல் , இது டி.எம்.எஸ்  என்று பாடல்கள் அடையாளம் காணப்படும். ஆனால்  இவர்களுடையை பெரும்பாலான பாடல்களுக்கு இசை அமைத்தவர் எம்  எஸ்.வியாகத்தான் இருப்பார். இவர் இசை அமைத்த பாடல்களின் பெருமை நடிகர்,பாடகர், பாடலாசிரியர் எல்லோருக்கும் பரவலாக போய்ச்  சேர்ந்தது. ஆனால் எம். எஸ்.வி அதை பொருட்படுத்தியதும் இல்லை;  வெளிப்படுத்தியதும் இல்லை. தற்போது  பெரும்பாலும் பாடல்களுக்குரிய பெருமை அனைத்தும் இசை அமைப்பாளர்களுக்கே கிடைத்து வருவது குறிப்பிடத் தக்கது .

 இப்போதைய இசை அமைப்பாளர்களைப் போல  பாடகர்களை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்  எம்.எஸ்.விக்கு குறைவாகத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கறேன். கதைக்கும் பாடல் வரிகளுக்கும் நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தாரே தவிர  தனது இசையை முன்னிலைப் படுத்திக் கொள்ள விரும்பியதில்லை. இத்தனை கட்டுப்பாடுகளுக்குள்ளும் அற்புதமான இசையை தர எம். எஸ்.வி யைத் தவிர வேறு யாருக்கு சாத்தியமாகும்?
  இந்த சாதனையாளருக்கு ஒரு முறை கூட தேசிய விருது வழங்கப்படாதது அந்த விருதுக்குத் தான் அவமானமே தவிர வேறில்லை. அள்ளித் தெளிக்கப்படும் பத்ம விருதுகள் கூட இவருக்கு வழங்கப் படாதது வருத்தத்திற்குரியது,

     வைரமுத்து இரங்கல் செய்தியில் சொன்னார், "இனிமேல் இவருக்கு பத்ம விருது ஏதும் வழங்கி அவரை இழிவு படுத்தாதீர்கள். முடிந்தால் பாரத ரத்னா விருது வழங்குங்கள் என்றார்" 
   இந்நாள் முதல்வர் முதல் முன்னாள் முதல்வர்கள் வரை பலரிடம் பணியாற்றி இருந்தும் அதனை இவர் பயன்படுத்திக் கொள்ள விரும்பியதில்லை . யாரும் இவருக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தர முனையவில்லை. டி.எம்.எஸ்.கூட தன்னுடைய பாடல்களால்  எம்.ஜிஆர், சிவாஜி  பெருமை பெற்றார்கள். ஆனால் யாரும் எனக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தரவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய செய்தியை படித்திருக்கிறேன். ஆனால் எம். எஸ். வி ஒரு போதும் அப்படி சொன்னதாகத் தெரியவில்லை.

    எம்.எஸ். வி யின் இசையமைத்த படங்களில் அவரது பெயர் டைட்டிலில் காட்டப்படும்போது தொடர்ந்து  இசை   உதவி ஜோசப் கிருஷ்ணா என்ற பெயர் காட்டப் படுவதைப் பார்த்திருக்கலாம் . அதிக  தொழில் நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில்  தரமான பாடல்களை பதிவாக்கித் தந்தவர் எம்.எஸ்.வி.  மெட்டு என்பது இசை அமைப்பாரால் உருவாக்கப்பாட்டலும் அது பாடலாக்குவதற்கு கூட்டு முயற்சி தேவை. இசைக் கோர்வைகளை பொருத்தமாக அமைத்து  தனித்தனியாக  பாடப்படும் பல்லவி சரணங்களை தாள லயம் கெடாமல்  இணைப்பது அப்போதைய தொழில் நுட்பத்துக்கு சவாலான செயல். இவற்றில் துணை புரிந்த தனது இசைக் குழுவில் உள்ளவரின் பெயரையும் கூட போடுமாறு   பணித்த பெருந்தன்மை எம்.எஸ்.விக்கே உரித்தானது.
  பொதுவாக வயதான கலைஞர்கள் தற்போதைய நிலையை குறை கூறுவது வழக்கம். இப்போதெல்லாம் என்ன இசை அமைக்கிறார்கள். ஒரே  சத்தம் பாடல் வரிகள் புரியவில்லை.  என்றெல்லாம் கூறுவார்கள் ஆனால் எம். எஸ். வி  தன் காலத்தக்கு  பிந்தைய இசை அமைப்பாளர்களையும் மனமார பாராட்டவே செய்தார்  மற்ற இசை அமைப்பாளர்களையும்  மதித்தார்

     இப்படி எல்லோர் மனத்திலும் இடம் பிடித்த எம்.எஸ். வி என்ற இசைப் பறவை நம்மை விட்டு பிரிந்து பறந்து சென்றுவிட்டது. ஆனால் அது விட்டு சென்ற இசை பேச்சிலும்  மூச்சிலும் எப்போதும் கலந்திருக்கும் . எக்காலத்தும் நிலைத்திருக்கும்

**************************
கொசுறு 
நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? 
ஒரு பாடல் எம்.எஸ்.வி இசை அமைத்த பாடல்தானா என்பதை அறிந்து கொள்ள நான் சில அம்சங்களை கவனிப்பேன்.நிறையப் பாடல்களில் சரணத்தின் கடைசி வரி இரண்டு  தடவை பாடப்படுவதைக் காணலாம்'. இரண்டாவது முறை சற்று மெதுவாக பாடப்படும் வரிகள் சரணத்தின் கருத்தை இன்னொரு தடவை மனதில் பதிய வைத்து நம் மனதை அள்ளிச் செல்லும். இந்த உத்தி எனக்கு மிகவும் பிடிக்கும்.

உதாரணமாக
தரை மேல் பிறக்க வைத்தான், அதிசய ராகம்,  போன்ற பாடல்கள்   புல்லங்குழல் கொடுத்த மூங்கில்களே உள்ளிட்ட  தனிப்பாடல்களின் சரணங்களிலும்  இந்த முத்திரையைக் காணலாம்.ஆனால் அது எந்தப் பாடலுக்கு பொருத்தமாக இருக்கிறதோ அங்குதான்  இதனைப் பயன்படுத்தி  இருப்பார்.

பாடகர்களாக விரும்புவர்களுக்கும் இசை அமைப்பாளராக விரும்புவர்களுக்கும் இவரது  இசை ஒரு பாடம்.  


                                    ***********************************


புதன், 15 ஜூலை, 2015

பாபநாசம் வெற்றி ஏன்?-யோசிக்கப்பட்டு சேர்க்கப் படாத காட்சி

  கடந்த ஞாயிறு அன்று தியேட்டருக்கு சென்று ஏதேனும் படம் பார்க்கலாம் என்று விரும்பினோம். பாகுபலி,பாபநாசம் இரண்டும் பரவலாக விமர்சகளின் பாராட்டைப் பெற்றிருந்தால் இரண்டில் ஒன்று முடிவானது. வீட்டுக்கு அருகில்  பாகுபலி ஓடாததால் பாபாநாசம் படம் பார்க்க அருகிலுள்ள குமரன் தியேட்டரை அடைந்தோம்.  ஆச்சர்யம்! நல்ல கூட்டம். சமீபத்தில் இவ்வளவு கூட்டத்தை நான் படத்திற்கு சென்றபோது  பார்த்ததில்லை. ஆனால் ரசிகர் மன்ற பேனர்கள் ஒன்று கூட இல்லாதது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. திரையில் கமல் பெயர் காட்டப் பட்டபோதுகூட எந்த கைதட்டலும் இல்லை. தாத்தாக்கள் பாட்டிகள், நடுத்தர ,இளைய அம்மா அப்பாக்கள் கூட்டம் கூட்டமாக பிள்ளைகளுடன் பார்க்க முடிந்தது. என்னதான் நல்ல படம் என்று பாராட்டப் பட்டாலும் இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை அதுவும் இரண்டாவது வாரம்.நல்ல வேளையாக முந்தைய தினமே முன்பதிவு செய்திருந்ததால் சிரமம் ஏதுமில்லை . 
     குடும்பமாக கூட்டத்திற்கு வரவழைத்த பெருமை கமலுக்கா, கதைக்கா என்றால் கதையே முன்னிலை வகிக்கிறது. நடிப்பு வரக் கூடிய நல்ல நடிகர்கள் யார் நடித்திருந்தாலும் படம் வெற்றிபெற்றிருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.என்றாலும் கமல் நடித்திருப்பது கூடுதல் பலம்.கதையின் மையம் கமலின் மகளை செல்போனில் அவளறியாமல் படம்  எடுத்து மிரட்டிய  ஐ.ஜி.யின் மகனை , கமலின்  மகள்  கொன்றுவிட  அந்த கொலையை மறைக்க நடக்கும் போராட்டமே கதை. 
      செல்போன் தொழில் நுட்பம் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு பெற்றுள்ள வளர்ச்சி பெண்களுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப் பட்டதால் நிகழும் நிகழ்வையும் அதன் விளைவுகளையும் சொன்னது ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம். குடும்பத்துடன் வந்தவர்களைப் பார்த்தபோது இப்படத்தை ஏதோ ஒரு படமாக அல்ல  பாடமாகவே பார்க்க வந்தது போல்தான் தோன்றியது. 
இதற்கு முன் வழக்கு எண் 18 போன்ற படங்களும் இது போன்ற படம் தான் என்றாலும் கமல் நடித்திருப்பதால் கூடுதல் கவன ஈர்ப்பு பெற்றிருக்கிறது 
  செய்தித்தாளில் பத்திரிகைகளில் இது போன்ற செய்திகள் ஏற்படுத்தாத  லேசான திகிலை பெற்றோருக்கு - குறிப்பாக பெண்பிள்ளை பெற்றோருக்கு தங்களையும் அறியாமல்  ஏற்படுத்தி இருக்கிறது என்றே நினைக்கறேன். இதுவே குடும்பங்களை தியேட்டருக்கு அழைத்து வந்திருக்கிறது 
   ஏற்கனவே பலரும் இதன் கதையை அக்கு வேறு ஆணி வேறாக அலசி விட்டதால் நான் அதிகமாக  சொல்லப் போவதில்லை.திரிஷ்யம் படம் பார்க்காததால் ஒப்பீட்டிற்கும் அவசியமில்லாமல் போய்விட்டது.
  ஆரம்பத்தில் மிகவும் மெதுவாக நகர்ந்த கதை ஐ.ஜி.யின் மகனின் கொலைக்குப் பிறகு விறுவிறுப்படைந்து விட்டது . இதில் பின்னால் நடக்கப் போகிற ஒவ்வொரு நிகழ்வையும்  எதிர் நோக்குவது போலே தொடக்கக் காட்சிகள் அமைத்திருப்பதில் இயக்குனரின் திறமை தெரிகிறது . ஆனால் கமல் பேசும் வட்டார மொழி சட்டென்று  புரியவில்லை . கமல் உருவாக்கும் அலிபை(alibi) க்கள்

அலிபை என்பது உண்மையில் ஒருவர் இருந்தது ஓரிடம் . ஏதோ ஒரு காரணத்திற்காக இன்னோர் இடத்தில் இருப்பதாக ஆதாரங்களைக் காட்டுவதே. மனைவிக்குத் தெரியாமல் தண்ணி அடிப்பவர்கள் ஏதோ ஒரு கல்யாணப் பத்திரிகையை ஆதாரமாக வைத்துக் கொண்டு அன்றைய தினம் தண்ணி அடித்து விட்டு கையில் தாம்பூலப் பையுடன் வீடு திரும்பவதும் ஒரு வித அலிபைதான் என்கிறார் நண்பர் ஒருவர் ஹிஹி

 புத்திசாலித்தனமானது என்றாலும் பொய் என்று நிருபிக்க முடியாதது அல்ல. ஆனால் கொலையை மறைக்க கமல் தவிக்கும் தவிப்பு நமக்கும் தொற்றிக்கொள்வதால் இந்தக் காட்சிகள் நம்மை கை தட்ட வைத்து விடுகிறது. (கமல் சினிமாக்களைப் பார்த்த ஞானத்தை வைத்தே பல விஷயங்களை கற்றுக் கொள்வது போல போல Alibi  என்ற வார்த்தையை கற்றுத் தந்த பெருமை. சுஜாதா ராஜேஷ்குமார் போன்ற க்ரைம் கதை எழுத்தாளர்களைச் சாரும். ஹிஹி
பதிவின் தலைப்புக்கு வருகிறேன்.
யோசிக்கப்பட்டு சேர்க்கப் படாத காட்சி 
படத்தில் கமலின் மனைவியும் மகளும் கமலை கார் வாங்கவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். மாருதி கார் என்று சொன்னதாக நினைவு.
தற்செயலாக அவர்கள் வாங்க நினைத்த அதே மாடல் காரைத்தான் தவறான நோக்கத்துடன் வரும் ஐ.ஜி.யின் மகன் கொண்டு வருகிறான். கொலையுண்ட  பின் அந்தக் காரை எடுத்துக் கொண்டு போய் யாரும் அறியாமல் குவாரிக் குளத்தில் தள்ளி விடுகிறான் . கமல் காரை ஒட்டி செல்வதைப் பார்த்த போலீஸ் சாட்சி  சொன்னாலும் தன்னுடைய காரில்தான் சென்றார் என்று நிருப்பிக்க அதேமாடல் காரை முந்தைய தினமே தான் வாங்கி வைத்திருப்பது போல்  ஆதாரம் உருவாக்குவது போல் கதை அமைத்திருப்பார்கள் என்று நினைத்தேன்.  ஆனால் அது போன்ற காட்சி இல்லை . ஒரு வேளை லாஜிக் மீறல்கள் அதிகம் இருப்பதால் அதைத் தவிர்த்திருக்கலாம். அல்லது எனது மட்டமான கற்பனையா? அப்படி அமைத்திருந்தாலும் மக்கள் ஏற்றுக் கொண்டுதான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

     இது போன்ற  அதிக செலவில்லாத  சுவாரசியமான கதைகளை படமாக எடுக்காமல் பிரமாண்டம் தத்ரூபம்  வித்தியாசம் என்ற பெயரில் படம் எடுத்து சர்ச்சைகளில்  ஏன் சிக்கிக் கொள்கிறார் என்பது பலரின் கேள்வி. ஆனால் இந்தப் படத்திலும் ஒரிஜினல் படத்தில் கிறித்துவக்  குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப் பட்ட படத்தை வேண்டுமென்றே இந்துக் குடும்பத்தில் நடப்பதாகக் காட்டி விட்டார் என்று ஒரு சாரார் குற்றம் சாட்ட பிரிக்க முடியாதது "கமலும் சர்ச்சையும்" என்று மீண்டும் நிருபித்திருக்கிறார்  கமல் 


******************************************************************


ஐந்து லட்சம் பக்கப் பார்வைகளை எட்டிப் பிடிக்க உதவிய அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் திரட்டிகளுக்கும் நன்றி 


சனி, 11 ஜூலை, 2015

பெட்டிக்கடை -இளையராஜா எனும் புதிர்+வாட்ஸ் அப் வக்கிரங்கள்

பொய்யாய் பழங்கதையாய் போன நட்பு 

பெட்டிக்கடை திறந்து நீண்ட நாட்களாகி விட்டது. இனி மாதம் ஒருமுறையாவது திறக்கவேண்டும் 
இளையராஜா எனும் புதிர்
வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கியை தன் உன் சமையல் அறையில் என்ற படத்தில் பாடல் எழுத அழைத்திருந்தாராம் பிரகாஷ்ராஜ். கார்க்கியும் ஒப்புக் கொள்ள படத்தின் இசை அமைப்பாளர் இளையராஜா, கார்க்கி பாடல் எழுத சம்மதிக்கவில்லை. அதேபோல ருத்ரம்மாதேவி படத்திலும் கார்க்கி பாடல் எழுத மற்றவர்கள்  விரும்பினாலும் இளையராஜா வேண்டாம் என்று சொல்லி விட்டாராம்  "அப்பாவின்மீதான  ராஜா சாரின் கோபம் அடுத்த தலைமுறை வரையும் இருக்கிறது" என்று கார்க்கி வருத்தப்படுள்ளதாக செய்தி படித்தேன்
சமீபத்தில் உடல் நலமின்றி இருந்த மெல்லிசை மன்னர் எம். எஸ் விஸ்வநாதனை  மருத்துவமனையில் சென்று பார்த்து நல விசாரித்ததோடு தன் வீட்டில் இருந்து உணவு எடுத்து சென்று ஊட்டி விட்ட செய்தியையும் படித்தேன் . இளையராஜா ஒரு புதிர்தான்

இதோ
Enthiran Robo   என்ற ராஜா ரசிகரின் ஆதங்கம் 

நான் இளையராஜா அவர்களின் பாடல்களை தீவிரமாக ரசிப்பவன். அவர் இசை ஒன்றுதான் மனதை கவர்ந்து என்னை மெய்மறக்க செய்வது. என்னதான் மனகசப்புகள், கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் மன்னித்து மறந்து ஒப்புரவாககூடிய குணமுடைய மனிதனே அன்போடுகூடிய சிறந்த மனிதன் எனபடுவான், ஒரு நல்ல மனிதனுக்கு அழகும் கூட. 1987-ல் இந்த இணை பிரிந்த பிறகு, இதுவரை ஒப்புரவாகவில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயம். இதில், இமாலய புகழ்பெற்ற திரு. இளைய ராஜா அவர்களின் இந்த வைராக்கியம், கடின உள்ளம், இந்த குணம் நல்லதல்ல என்றுதான் தோன்றுகிறது. திரு. இளைய ராஜா அவர்களின் மனைவி இறந்தபோது திரு.வைரமுத்து அவர்களும் அவர் வீட்டுக்கு வந்து துக்கம் விசாரித்த போதும், திரு. இளையராஜா அவர்கள் அவரை கண்டுகொள்ளாதது போல் இருந்ததையும் வீடியோ வில் பார்க்க முடிந்தது. சகோதரி ஜீவா, நான் எப்போது இளையராஜா வீட்டுக்கு சென்றாலும் அவருடைய கரங்களால் உணவு பரிமாறி எனக்கு உணவளித்து உபசரித்ததை என்னால் எப்படி மறக்கமுடியும் என்று பழைய நினைவுகளை இரங்கல் செய்தியோடு பகிர்ந்திருந்தார். ஏன்.., வைரமுத்து அவ்வளவு தீண்டதகாதவரா..? தவறு செய்திருந்தாலும் மன்னிக்க பட கூடாதவரா..? அப்படிஎன்றால், 87 க்கு முன்பு பத்து/பனிரெண்டு ஆண்டுகள் எப்படி அவரோடு மிகவும் நட்போடு இருந்தார்?. அப்படியே, வைரமுத்து தவறு செய்திருந்தாலும், இளையராஜா தானே சென்று அவரிடம் பரிவாக பேசி ஒப்புரவாகி இருந்தால், புடமிடப்பட்ட தங்கம் போன்ற சிறந்த மனிதனாக காணபட்டிருப்பாரே திரு.இளையராஜா அவர்கள்.. ரமணரை கும்பிட்டாலும், ஏதோ ஒரு தாயை தெய்வம் போன்று கும்பிட்டாலும், அல்லது ஏதோ கல்லை கடவுள் என்று கும்பிட்டாலும், அவைகள் எல்லாவற்றையும் விட மேலானது, தவறுகளை மன்னித்து, பகைவனிடமும் அன்பு செலுத்தி, ஒப்புரவாகி, மனதின் வைராக்கியம் என்ற கடின கற்பாறையை  அகற்றி மென்மையான பஞ்சுபோன்ற இதயத்தை வைத்திருந்தால் அதுவே சிறந்தது. ஒருவேளை, இன்று மரித்தாலும் குற்றவுணர்வு அகன்று, குறை இல்லாத நிறைவான சாந்தியோடு மறுமையில் பிரவேசிக்க ஏதுவாய் இருக்குமே.... இது ஏன் மனிதர்களுக்கு தெரியவில்லை .. பிடிவாதம் என்பது மனிதனை சமாதானமற்ற/நிம்மதியற்ற நிலைக்கு எடுத்து செல்லும் ஒரு கொடிய நோய்... மனதில் அன்பை விதைத்து அன்பில் நிலைத்திருங்கள்.. அதில் எல்லா நன்மைகளும் அடங்கியுள்ளன..
ராஜாவின் செயல்களை நியாயப் படுத்த முனைந்தாலும்  உண்மையான ராஜா ரசிகர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது  என்பதை அவர் உணர்வாரா?
***************************************************************************************
நண்பர் வைத்த குட்டு 
 என்னுடன் பணிபுரியும் நண்பர் சரவணன் என்னுடைய வலைப்பூவை பார்த்து விட்டு "கவிதை எல்லாம் எழுதுகிறீர்களே உங்களுக்கு கவிஞர் பல்லவனை தெரியுமா. புகழ் பெற்றவர்தான்" என்றார்
"இல்லை" என்றேன்
"திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர்" என்றார்
ம ஹூம் 
"ஹைக்கூ பாணியில் கவிதை எழுதுபவர். நீங்கள் கவிஞராக இருந்தும்  அவரைத் தெரியவில்லையா" என்று ஒரு குட்டு வைத்தார். உடனே இணையத்தில் தேடினேன். பல்லவன் என்னும் கவிதை வல்லவன் கிடைத்தார் 
சாம்பிளுக்கு ஒரு கவிதையும்  கிடைத்தது

மம்மி என்றது குழந்தை
அம்மா என்றது மாடு

அசந்து போனேன் . எனது இணையத் தமிழ் என்ற  கவிதையில் இருபது வரிகளில் சொன்னதை இரண்டு வரிகளில் நறுக்கியிருந்தார் . எனக்கு நானே குட்டிக் கொண்டேன்


நமது எங்கள் ப்ளாக் ஸ்ரீராமும் அவரது கவிதை ஒன்றை பகிர்ந்திருந்ததை இப்போதுதான் அறிந்தேன் 
என்ன செய்து கிழித்தாய்?
 நாள் தோறும் கேட்கும்
 நாட்காட்டி 
இவரைப் பற்றி விரிவாக இன்னொரு பதிவில் எழுத இருக்கிறேன்.

****************************************************************************
புள்ளி விவரங்களை நம்பலாமா 

புள்ளி விவரங்களை வைத்துதான் திட்டங்கள் தீட்டப் படுகின்றன. ஏதோ சில புள்ளி விவரங்களை கொண்டுதான் திட்டக் கமிஷன் அலுவலர் அலுவாலியா நகரங்களில் 32 ரூபாய்க்கு மேல் சம்மதிப்பவர்களும் கிராமப் புறங்களில் 26 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் வறுமைகோட்டுக்கு கீழ் வரமாட்டார்கள் என்று அபத்தமான வரையறையை அறிவித்தார்.   இதில் இருந்தே புள்ளி விவரங்களின் நம்பகத் தன்மையை அறிந்து கொள்ள முடியும். இத்தனைக்கும் புள்ளி விவரங்களை ஆராய்ந்து கணக்கிடும் முறையான புள்ளியியல் அறிவியல் முறைப்படியானது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது

"ஒரு காலை பனிக்கட்டியிலும் மற்றொரு  காலை நெருப்பிலும் வைத்தால் நலமாக இருப்பதாகக் கூறுவதுதான் புள்ளியியல்" என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது .

************************************************************************
பல்பு வாங்கினேன் 


தர்மம் தலைகாக்கும் என்பது இதுதானோ? 
புஷ்பா மாமியின் புலம்பல்கள் பதிவில் ஹெல்மட் பற்றி எழுதி இருந்தேன். அதில் ஏதோ புதிதாக சிந்திப்பதாக  நினைத்து  ஒரு ஹெல்மட் படத்தைப் போட்டு  தர்மம் தலைகாக்கும் என்று எழுதி இருந்தேன். எனக்குத் தெரிந்த அளவில் போட்டோ ஷாப்பில் கஷ்டப்பட்டு ஹெல்மட்டின் பெயரை பிராண்ட் பெயர் ஆங்கிலத்தில்( Dharmam)  தர்மம் என்று இருப்பது போல் அமைத்தேன் .ஒருவரையும் அது கவராமல் போக பல்பு வாங்கினேன் .

திடீர்னு ஹெல்மெட் கட்டாயம்னு சொல்லீட்டீங்க .ரொம்ப டிமான்ட் கிடைக்கவே இல்லை அதான். 
இந்த பக்கெட் எல்லாம் கூட ஐ.எஸ்.ஐ தான் சார் 
*******************************************************************************
வேதனை:-வாட்ஸ் அப் வக்கிரங்கள் 
மூன்று வயது  சிறுவனுக்கு பீர் கொடுத்து அருந்தச் செய்து அட்டகாசம் செய்த இளைஞர்களை நினைத்த போது எழுந்த கோபத்துக்கு அளவே இல்லை . தவறு செய்ததோடு அல்லாமல் அதைக் கொண்டாடி வீடியோ எடுத்து வாட்ஸ் அப் மூலம் பரவ செய்த வீர தீர செயலை  நினைத்து புல்லரிக்கிறது.  இந்த இளைஞர்களின் கையில்தான் இந்தியாவின் எதிர்காலம் சிக்கிக் கொள்ளப் போகிறதோ என்ற தவிப்பும் உண்டானது..டாஸ்மாக்கின் டாஸ்க் இதுதான் போலிருக்கிறது .
 இது போதாதென்று எல்லா விதத்திலும்  ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்று பள்ளிக்கு கட் அடித்து விட்டு ஹோட்டலுக்கு  சென்று மது அருந்தி நிருபித்துள்ளனர் சில மாணவிகள் 
பெற்றோர்தான் விழித்து கொள்ள வேண்டும் . அரசும் சிந்திக்க வேண்டிய தருணம் இது
*********************************************************************************

தாத்தா சொல்லை தட்டாதே !

நமக்கு ஆங்கிலேயர்கள் இல்லாத ஆங்கிலேய ஆட்சி வேண்டும் என்று சொல்கிறீர்கள். உங்களுக்குப் புலி வேண்டாம். ஆனால் புலியின் இயல்பு வேண்டியிருக்கிறது... இதுவல்ல நான் விரும்பும் தன்னாட்சி - காந்தி

==============================================================




வியாழன், 9 ஜூலை, 2015

பஞ்சப்பாட்டு பாடலாமா?


உங்களுக்கு எஸ்.பி. பாலசுப்ரமணியம் பற்றி தெரியும். மு.பி.பால சுப்பிரமணியம் யார் தெரியுமா?  மு.பி.பால சுப்பிரமணியம் பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றிய தமிழ்ப் பேராசிரியர்.  சிறந்த கவிஞர். குயில் இதழில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் பாராட்டப் பட்டவர் . 
பள்ளி நூலகத்தில் அவரது "கவிதை மேகங்கள்" என்ற கவிதை நூல் கிடைத்தது. இக்கவிதை நூல்முழுதும் மரபுக் கவிதைகளால் நிரம்பியவை . இவரது சில கவிதைகள் சில பாடப் புத்தகங்களிலும் இடம்பெற்றிருந்ததாக நினைவு 
இவரது கவிதைகளின் எளிமையும் இனிமையும் சந்த நயமும் என்னைக் கவர்ந்தது. ஒருமுறை    புத்தகத்தில் உள்ள முகவரியை வைத்து அவருக்கு கவிதையில் ஒரு பாராட்டுக் கடிதம் எழுதினேன். நன்றி தெரிவித்து கடிதம் எழுதியதோடு அவரது நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பு விடுத்தார். அப்துல் ரகுமான்,ஈரோடு தமிழன்பன் ஆகியோர் கலந்து கொண்ட விழாவில் கவிதை பாட எனக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இவரது கவிதைகளில் பல எனக்குப் பிடித்திருந்தாலும்  பஞ்சம் என்ற  தலைப்பில் எழுதிய எண்சீர் விருத்தக் கவிதை எனக்கு பிடித்திருந்தது.

அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

                                        பா ரதத்தில் ஊர்பவரே பஞ்சம் என்றால் 
                                               பைந்தமிழ் நாட்டெல்லையுடன் நின்றிடாதீர்
                                        பாரதத்தின் ஒருமைப்பா டெங்கே  என்று  
                                                 பக்குவமாய் சொல்வேன் பஞ்சத்தில் என்று 
                                        நீரதனை மறுத்தாலும் வெறுப்பே இல்லை 
                                                நீர் இடித்து நீர் விலகிப் போமோ சொல்வீர்!
                                        யார் எதனை சொன்னால்தான் என்ன பஞ்சம் 
                                               இந்தியஒற் றுமைகூறும் நல்ல சாட்சி 

                                        கடைப்பஞ்சம் பதுக்குவதால் தோன்றும் பஞ்சம் 
                                                கருப்பஞ்சம் நம்நாட்டில் இல்லாப் பஞ்சம் 
                                        'கடைப்'பஞ்சம் நாணயத்தை விலைக்கு விற்கும் 
                                                நதிப் பஞ்சம் நாடுகளை நலியச் செயும் 
                                         படைப் பஞ்சம் தோல்விக்கு படி அ மைக்கும்
                                                 பணிப் பஞ்சம் வேதனைக்கு வழி வகுக்கும் 
                                         உடைப் பஞ்சம் எதைக் காட்டும் உடலைக் கட்டும் 
                                                  உருப்படாமல் போவதற்கு வழியைக் காட்டும் 

                                         விடைப் பஞ்சம் மாணவரை விழிக்க வைக்கும் 
                                                  விழிப்பஞ்சம் குருட்டுலகில் தவிக்க செய்யும் 
                                         இடைப் பஞ்சம் அக்கால மகளிர்க்குண்டாம் 
                                                  எழில் பஞ்சம் இக்கால மகளிர் சொத்தாம் 
                                          எடைப் பஞ்சம் சந்தையிலே நமை ஏமாற்றும் 
                                                   இரைப் பஞ்சம் வறுமையிலே தூக்கித் தள்ளும் 
                                           மடைப் பஞ்சம் கபினியிலே என்றால் தஞ்சை 
                                                     மண்பஞ்சத்தால் நலிதல் நீதியாமோ 

                                            முடிப் பஞ்சத்தால் தலையில் வழுக்கை தோன்றும் 
                                                     முழுப் பஞ்சத்தால் நாட்டில் வறுமை  தோன்றும் 
                                             குடிப் பஞ்சத்தால் குடும்பம் செழித்தே ஓங்கும் 
                                                     கொடைப் பஞ்சத்தால் ஏழ்மை கலங்கிப் போகும் 
                                             இடிப் பஞ்சத்தால் வானம் வறண்டு தோன்றும் 
                                                         இதழ்ப் பஞ்சத்தால் மலரும் காம்பாய்ப் போகும் 
                                              பொடிப் பஞ்சத்தால் தவிக்கும் சிலமூக்குக்கள் 
                                                        புகழ்ப்பஞ்சத்தால் தவிக்கும் சில நெஞ்சங்கள்  

                                              மீன் பஞ்சத்தால் கொக்கு கவலை கொள்ளும் 
                                                        மின்சாரப் பஞ்சமெனில் இருட்டே மிஞ்சும் 
                                              வான்பஞ்சம் தாய் என்றால் வாட்டம் சேய்தான்;
                                                          வண்ணங்கள் பஞ்சமெனில் உருவம் பேய்தான் 
                                               ஊன்பஞ்சம் நல்லுடலை நலியச் செய்யும் 
                                                           உண்மைக்குப் பஞ்சமெனில் மகிழும் பொய்யே 
                                                தேன்பஞ்சம் ஆகிவிட்டால் மலரோ வாடும் 
                                                          தினம் பஞ்சம் வந்து விட்டால் வாழ்வே வேகும் 



இன்னமும் சில பஞ்சங்கள் இருக்கின்றன கொஞ்சம் நீளமாக இருப்பதால் பஞ்சப் பாட்டு அடுத்த பதிவிற்குப்பின் தொடர இருக்கிறேன் 

***********************************************************************
முந்தைய பதிவு