என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 30 ஜூலை, 2015

இது அந்த நடிகரைப் பற்றிய பதிவு அல்ல



இது முற்றிலும் கற்பனைக் கதையே   நீங்கள் நினைக்கும் அந்த நடிகரை நினைத்து  எழுதப்பட்டது அல்ல
****************

    அந்த கிராமமே பரபரப்பாக இருந்தது. இருக்காதே பின்னே. பிரபல நடிகர் மரக்கன்றுகள் நடுவதற்கு அந்த ஊருக்கு வருகிறாரே. ஒரு திருவிழா போல அல்லவா ஏற்பாடு செய்ப்பட்டிருந்து.   ஏராளமான கூட்டம். ப்ளக்சில் அப்துல் கலாமோடு சிரித்துக் கொண்டிருந்தார் நடிகர்.  இன்னும் சிறிது நேரத்தில் வரப் போகிறார். தொடங்கப் போகிறது விழா 
"தனது சொந்தப் பணத்தில் இருந்து செலவு செய்து மரம் நடுகிறாராமே." "இதுவரை 2999999 மரக் கன்றுகள்  நட்டுவிட்டாராம் "
 "30 லட்சமாவது மரத்தை நம் ஊரில் நடப் போகிறாராம்"
"இந்த நடிகர் மத்த நடிகர்கள் மாதிரி இல்ல .நல்ல ஜெனரல் நாலேட்ஜ்  இருக்கறவர். படங்கள்ல நல்ல கருத்துகளை சொல்பவர்" .
"அப்துல் கலாமை பேட்டி கண்டவர் . அவர் சொன்னார் என்ற ஒரே வார்த்தைக்காக ஒரு மாபெரும் சேவையை செய்யறார் தெரியுமா. வேற எந்த நடிகனாவது இப்படி செஞ்சிருக்கானா?
இப்படி ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்தனர்  . 
    நடிகரின் வரவை ஊர் மக்கள் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கு முன் ஓட்டுக்கேட்க வரும் அரசியல் வாதிகளைத் தவிர வேறு யாரும் அந்த ஊருக்கு வந்ததில்லை. முதல் முறையாக  ஒரு நடிகரை பார்க்கும் ஆவலுடன் பலர் குழுமி இருந்தனர்.   இளைஞர்கள் பெரியவர்கள்  பல்வேறுசமூக ஆர்வலர்கள்  தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் குவிந்திருந்தனர். பெரிய மேடை அமைக்கப் பட்டிருந்தது. அற்புதமாக அலங்காரமும் செய்யப் பட்டிருந்தது   சுற்று சூழல் விழிப்புணர்வு வாசகங்கள் ஆங்காங்கே  பளிச்சிட்டுக் கொண்டிருந்தன.அவர் பல்வேறு  இடங்களில் மரம் நட்ட  காட்சி சிசி டிவியில் ஓடிக் கொண்டிருந்தது 

  அந்த மைதானத்தில்நூற்றுக்கும் மேற்பட்ட  மரக் கன்றுகள் நடப்படுவதற்கு  தயாராக  நடிகருக்காக காத்துக் கொண்டிருந்தன. மரம் நட குழிகள் தோண்டப் பட்டிருந்தன.
நடிகரின் கார் மைதானத்தில் நுழைந்தது . முக்கியஸ்தர்கள் ஓடி வந்து வரவேற்றனர். மேடைக்கு அழைத்தனர். இல்லை நேரம் ஆகி விட்டது மரம் நடுவதை முடித்து விட்டு அப்புறம் மேடைக்கு செல்லலாம் என்று சொல்லி விட்டார்.  மைக்கில் அறிவிக்க 3000000 லட்சமாவது மரத்தை நட்டு தண்ணீரை ஊற்ற கூட்டம் கை தட்டியது. மேலும் சில மரங்களை நட போட்டோக்கள் பளிச்சிட்டன. மொபைல்களும்  ஹான்டி காம்களும், மரம் நாடும் காட்சியை கைப்பற்றிக்   கொண்டிருந்தன .  நடிகர் ஆர்வத்துடன் சிறுவர் சிறுமியரிடம் கை குலுக்கினார். 
     நடிகருக்கு பலவேறு தரப்பினர் சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகள் கொடுத்து பாராட்டினர்.  
   "நடிகர்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள். ஆனால் சமுதாயத்திற்கு எதுவும் செய்வதில்லை என்று கூறுவதுண்டு . ஆனால் நமது அண்ணன் நாட்டுக்காக சுற்று  சூழல் பாதுகாப்புக்காக உலகம் வெப்பமாகிக் கொண்டு வரும்  ஆபத்தை உணர்ந்து தன்னுடைய பங்காக மரம் நடும் இயக்கத்தை ஆரம்பித்து நான்கு ஆண்டுகளாக பல லட்சங்கள் மரங்கள் நட்டிருக்கிறார். எந்த எதிர்பார்ப்புமில்லாமல் அண்ணன் செய்யும் சேவையை நாம் போற்ற வேண்டும்............" மேடையில் ஆளுக்கு ஆள் புகழ்ந்தனர் 

 நடிகர் புகழ்ச்சி மழையில் நனைந்து பேச எழுந்தார் 

"...................கனவு காணுங்கள் என்று சொன்னார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்  என்னிடம் கேட்டார் ,"நாட்டுக்காக நீ ஏதாவது செய்ய்யலாமே" என்றார் 
'சொல்லுங்கள் ஐயா! செய்கிறேன்' என்றேன்  
'இயற்கையை அழிப்பதன் காரணமாக உலக வெப்பமாகிக் கொண்டே வருகிறது. இது எதிர் காலத்துக்கு ஆபத்தாய் முடியும் .அதில் நீ கவனம் செலுத்த வேண்டும்.  நீ ஏன் மரங்கள் நடக் கூடாது?. உன்னைப் போன்ற பிரபல நடிகர்கள் இதுபோல் செய்தால் அவர்கள் ரசிகர்களும்  அதனை பின்பற்றுவர்கள் அல்லவா 'என்றார் 
 'மனிதன் பிறந்து பெரிதல்ல .  பணம் சம்பாதிப்பது பெரிதில்லை. ஆனால் நாட்டுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்பதை உணர்த்தி  விட்டீர்கள் ஐயா,உங்கள் வார்த்தைகளை சிரமேற்கொள்வேன். இன்றே மரக்கன்று நடும் இயக்கத்தை தொடங்கிவிடுகிறேன். ஒரு கோடி  மரங்கள் நடுவதுதான் என் இலக்கு என்று அப்துல் கலாம் ஐயாவிடம் சூளுரைத்தேன். இன்று 3000000 லட்சம் மரக்கன்றுகள் நட்டுவிட்டேன். பெரிய விழா எடுத்து  3000000 மாவது மரத்தை கலாம் ஐயா அவர்கள் கரங்களால்  நடவேண்டும் என்று நினைத்தேன். அந்தோ ஆனால் அவர் மறைந்து விட்டார் . தனி மரமாக என்னை மரம் நடவைத்து விட்டீர்களே ஐயா "
நடிகர் கண்கலங்க கூட்டம் அமைதியானது  கண்களை துடைத்துக் கொண்டு தொடர்ந்தார்.
"அவர் கனவை நனவாக்குவதில் என் சிறு முயற்சியை செய்வேன்.   எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.  ஓரு கோடிமரங்கள் நட்டு முடிக்கும் வரை ஓய மாட்டேன். என்னுயிர் பிரிவதற்குள் அதனை செய்து முடிப்பேன். நீங்களும் மரம் நடுவதில் என்னோடு இணையுங்கள். மரம் நடுவோம்! மழை பெறுவோம்!  இந்த பூமியை குளிரவைப்போம்.   " என்று உணர்ச்சிப் பெருக்கோடு பேச அனைவரும் கைதட்டினர் 
  பின்னர் (தன்னையே இன்னொரு கலாமாக நினைத்துக் கொண்டு ) அருகில் அரசு பள்ளிக்கு சென்று மாணவர்களை சந்திக்க சென்றார் . மாணவர்களுக்கு கலாமை எடுத்துக்காட்டி தன்னம்பிக்கை உறையாற்றினார் 
"மாணவர்களே! நீங்கள் ஏதேனும் கேள்விகள் என்னிடம் கேட்கலாம் 
பலரும் அவரது  இள வயது வாழ்க்கை ஊர் , கல்வி, அறிவியல் வரலாறு   என்று  கேள்விகள்  கேட்க அவரும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டே வந்தார் . ஆசிரியர்கள் நடிகருக்கு இவ்வளவு திறமையா என்று வியந்தனர் 
அப்போது ஒரு சிறுவன் குறுகுறுவென அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். அதை கவனித்த நடிகர் "தம்பி! நீ ஏதோ கேட்க விரும்புவதாக தெரிகிறதே! தைரியமாகக் கேள்' . 
"ஐயா நீங்கள் எத்தனை மரக் கன்றுகள் நட்டிருக்கிறீர்கள் "
சிரித்துக் கொண்டே " அதை நீ போஸ்டரில் பார்த்திருப்பாயே. இருந்தாலும் சொல்கிறேன். 30லட்சம்" 
" எத்தனை ஆண்டுகளாக இந்த பணியை செய்து வருகிறீர்கள் ஐயா"
"நான்கு ஆண்டுகளாக "
அடுத்த கேள்வி அதிர வைத்தது 
"30லட்சம் மரக் கன்றுகளில் எத்தனை உயிரோடிருக்கின்றன?"

....................
பதில் கிடைக்குமுன் ஆசிரியர்கள் ஓடிவந்து அவனை இழுத்து சென்றனர். 


*********************************************************************

26 கருத்துகள்:

  1. நானே கேட்க வேண்டுமென்று நினைத்ததை கடைசியில் சிறுவன் கேட்பதாக எழுதி உள்ளீர்கள். எந்த நடிகர் என்று நான் குழம்பப் போவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இத்தனை எண்ணிக்கையில் மரங்களை நட்டேன்.என்பதை விட நட்டதோடு அதைக் பெரிய மரங்களாகும் வரை தொடர்ந்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும் . கலாம் அவர்களும் அந்த நோக்கத்தோடுதான் மரம் வளர்க்க சொன்னார் . அவ்வளவு மரங்களில், 10 % மிச்சமிருந்தால் அதுவே சாதனை எனலாம்

      நீக்கு
  2. சரியான கேள்வி... பராமரிப்பு இல்லையென்றால் அனைத்தும் வீண்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை பள்ளிகளில் ஒவ்வோராண்டும் 100 மரங்கள் 200 மரங்கள் நடுவோம் ஆண்டுக்காண்டு அதே இடத்தில் நட்டுக் கொண்டிருப்பர்களே தவிர் அவற்றில் ஒன்றிரண்டு கூட பிழைப்பதில்லை.பொதுமக்களின் அலட்சியம் சுயநலம் வேண்டுமென்றே பிடுங்கி எறிதல் உடைத்தல் போன்றவற்றால் அவை வளர் வதில்லை

      நீக்கு
  3. சரிதான் உங்களைப்போன்றவர்கள் இருக்கும் தைரியத்தில்தான் நம்பிக்கையோடு அய்யா விண்ணுலகம் சென்றாரோ.?
    அய்யா எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும்,
    இப்பெரியவர் மறைந்த நிலையில்...? ஒரே ஒரு சாலை மறியல் இல்லை,...? அதிகாரம் மூலம் ஓர் கடையடைப்பு இல்லை.....? ஒரு வாகனம் கூட எரிந்ததாக தகவல் இல்லை..? .. யாரும் அதிர்ச்சியில் இறந்ததாகவும் தெரியவில்லை....? எப்படி ஒரு வேளை 2015 லேயே இந்தியா வல்லரசாக மாறி விட்டதோ. எப்படியோ அலட்டல் அரசியல்வாதிகளுக்கு அறிவு வந்தால் சரி..

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள அய்யா,

    திரு.விவேக்கின் முயற்சி மிகுந்த பாராட்டுக்குரியது. ‘மரம் வச்சவன் தண்ணீ ஊத்துவான்’னு சொல்ல முடியாது. வான் மழை ... ஒரு வேளை பொய்த்தாலும் பிள்ளைகளை பொறுப்பாக மரத்தை வளர்த்து காப்பாற்ற விழிப்புணர்வூட்ட பாடுபடவேண்டும்.

    நன்றி.
    த.ம. 2.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக பாராட்டுக்குரியதுதான்.அனால் தொடர் பராமரிப்பு இல்லை என்றால் அனைத்தும் வீணாகி விடும்.

      நீக்கு
  5. சரிதான் உங்களைப்போன்றவர்கள் இருக்கும் தைரியத்தில்தான் நம்பிக்கையோடு அய்யா விண்ணுலகம் சென்றாரோ.?
    அய்யா எனக்கு ஒரு 'உம்ம' தெரிஞ்சாகனும்,
    இம் மஹாத்மா மறைந்த நிலையில்...?
    ஒரே ஒரு சாலை மறியல் இல்லை,...?
    அதிகாரம் மூலம் ஓர் கடையடைப்பு இல்லை..?
    ஒரு வாகனம் கூட எரிந்ததாக தகவல் இல்லை.? .
    யாரும் அதிர்ச்சியில் இறந்ததாகவும் தெரியவில்லை....? தீக்குளிப்பும் இல்லை. !!! எப்படி ஒரு வேளை 2015 லேயே இந்தியா வல்லரசாக மாறி விட்டதோ?.
    எப்படியோ
    அலட்டல் அரசியல்வாதிகளுக்கு அறிவு வந்தால் சரி.

    பதிலளிநீக்கு
  6. உண்மையில் சிறுவனின் 2 கேள்வி நிஜாமானது விளம்பரமோகம் கூடிவிட்டது பலருக்கு.

    பதிலளிநீக்கு
  7. நெத்தியடி கேள்வி....ஆசிரியர்கள் இழுத்து செல்லவேண்டியது மாணவனை அல்ல...... விளம்பர மோகம் கொண்ட அந்த நடிகரை ......

    பதிலளிநீக்கு
  8. செடி துளிர்க்கும் வரையில் கட்டாயம் நீர் அவசியம். மாவட்டங்களின் பருவநிலை கால கணக்கில் செடிகளை நட்டால் வேர்துளித்த பின் செடி மரமாகி பிழைத்துக்கொள்ளும்.

    பதிலளிநீக்கு
  9. நியாயமான கேள்வி. எங்கெங்கெல்லாம் மரங்கள் நட்டிருக்கிறார் என்றும் அறிய ஆவல்.

    பதிலளிநீக்கு
  10. தொடர்ந்த பராமரிப்பு தேவை என்பதை நாசுக்காகக் -கூறியவிதம் நன்று.

    பதிலளிநீக்கு
  11. மரத்தை வைத்தவனே தண்ணீர் ஊற்ற வேண்டும் என்றால் நடக்கிற காரியமா ?அவருக்கு மக்களும் ஒத்துழைப்பு கொடுப்பது சரியாகயிருக்கும் ,இதையாவது செய்கிறாரே அவரை ஊக்கப் படுத்த வேண்டாமா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரத்தை நடுவது பாராட்டுக் குரியது என்பதில் ஐயமில்லை. ஆனால் மரம் நடுவது எளிது. அதை வளர்ப்பது பராமரிப்பது கடினம் . ஒவ்வோர் ஆண்டும் பள்ளிகளில் ஆயிரக் கனக்கான மரஙகள் நட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் அவற்றை பராமரிப்பதில் கவன்ம் செலுத்தாதால் நட்ட மரஙள் அனைத்தும் வீணாகத் தான் போகிற்து இது அனுப்வத்தில் நான் கண்டது 30 லட்சம் ம்ரங்கள் வளர்ந்த்து இருந்தால் 20 சதுர கி.மீ பரப்பளவில் ஓரு காடு உருவாகி இருக்கும். அஸ்ஸாமில் தனி மனிதர் ஒருவர் 1500 எக்கரில் ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார். பொது மக்களின் ஒத்துழைப்பு இன்றி இவற்றை நிறை வேற்றுவது கடினம். 30 லட்சம் மரக் கன்று களுக்கு ஆகும் செலவில் பாதியை பராமரிப்புக்கு பயன் படுத்தினால் உண்மையில் பலன் கிடைக்கும். வனத் துறையினர் இலவசமாக ஏராளமான மரக்கன்றுகளை தருகிறார்கள்

      நீக்கு
  12. நியாயமான கேள்வி... அவங்கவங்க வீட்டெதிரே இரண்டு மரம் வைத்து வளர்த்தாலே போதும்... இது அந்த நடிகருக்கு மட்டுமல்ல...அதே போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவருக்குமே... (ஊட்டியில் ஒரு அமைப்பு ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நட்டாங்க அவை என்ன ஆச்சு?)

    பதிலளிநீக்கு
  13. லட்சங்களில் நட்டிருக்கிறேன் என்று சொல்லி பெருமிதம் கொள்பவரிடம் கேட்டானே ஒரு கேள்வி.... நியாயமான கேள்விதான்...

    பதிலளிநீக்கு
  14. அந்த நடிகரைப் பற்றி அல்ல என்று சொல்லி, அவர் படத்தையும் போட்டு, சொல்ல வந்ததை பொட்டில் அடித்தாற்போல சொல்லிவிட்டீர்கள். பாராட்டுக்கள்! மரம் நடுபவர்கள் அதன் தொடர்ந்த பராமரிப்பிற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம்,
    தாங்கள் சொல்வருவது சரியே, ஆனாலும் இது போல் சொல்லாமல் நாமும் செய்ய முயற்சிப்போம். மாணவன் கேட்டது சரி தான், நானும் இதனை கேட்டதுண்டு, ஆனால் அது அவரின் ஊக்கத்தைக் குறைப்பதாக, பிறர் முயல்வதை தடுப்பதாக இருந்துவிடக் கூடாது பாருங்கோ,
    நாமும் அமைதியாக செய்வோமே,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரது ஊக்கத்தை குலைப்பதற்கு என்று கொள்ளாமல் வலுப்படுத்துவதற்கு என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா

      நீக்கு
  16. நடுவது பெரிதல்ல வளர வாழ நீர் விடுவது தான் முக்கியம்!

    பதிலளிநீக்கு
  17. லட்சக்கணக்கில் மரங்களை நட்டு பராமரிக்காமல் விடுவதை விட சில நூறு மரங்களை நன்கு பராமரித்தலே நலம்! பையன் கேட்ட கேள்வி சூப்பர்! அந்த நடிகருக்கு விளம்பர மோகம் அதிகம்!

    பதிலளிநீக்கு
  18. சிந்திக்க விடாமல் இழுத்துட்டு போறதுதான் வாத்தியார்கள் வேலை என்பதை பதிவு செய்ததற்கு நன்றி....
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உள்ளுக்குள்ள அவங்களுக்கு சந்தோஷம்தான் இருந்தாலும் நடிகரை சங்கடப் படுத்த வேண்டாம்னுதான் இழ்த்துட்டுப் போயிருப்பாங்களோ?

      நீக்கு
  19. குழந்தைகளை பெற்று அப்படியே விட்டு விடுகிறோமா.... அதுபோலத் தான் மரங்களையும் நட்டால் மட்டும் போதாது. வளர்த்து பராமரிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895