. (இந்தப் பதிவை இடுவதில் சிறிது தயக்கம் இருந்தது. இதற்கு வரவேற்பு எப்படி இருக்கும் ஐயம் இருந்தாலும் இன்றைய தினத்தில் இந்தப் பதிவு பொருத்தமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.பள்ளி வயதில் இருக்கும் உங்கள் பிள்ளைகள், அல்லது தம்பி தங்கைகளுக்கு சொல்வதற்கு ஏற்றதாக இருக்கும் என்றும் நினைக்கிறேன்.)
நமக்குள்ள பல பிரச்சனைகளில் சில விஷயங்களை கவனிக்க நேரம் இருப்பதில்லை. பல சுவாரசியமான நிகழ்வுகள் விண்வெளியில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பூமியிலும் இவ்வாறு நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21(சில சமயங்களில் மார்ச் 20) க்கும் செப்டம்பர் 22(சில சமயங்களில் செப் 23) க்கு தனி சிறப்பு உண்டு. இவ்விரு நாட்களிலும் இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக இருக்கும். மற்ற நாட்களில் பகல் இரவு நேரங்களில் வித்தியாசம் இருக்கும். அதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.
பூமி தனி அச்சில் 23.5 டிகிரி சாய்வாக சுற்றுகிறது. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்பது நமக்குத் தெரியும்.தன்னைத் தானே சுற்றிக் கொள்வதால்தான் இரவுபகல் ஏற்படுகிறது.என்பதும் நாம் அறிந்ததே! சில காலங்களில் பகல் பொழுது அதிகமாகவும் இரவு பொழுது குறைவாகவும் இருக்கும். சில காலங்களில் இரவுப் பொழுது அதிகமாகவும் பகல் குறைவாகவும் இருக்கும். பூமியின் நீள் வட்டசுற்றுப்பாதை ஒரு சாலை என்று கொண்டால் அந்தப் பாதைக்கு நேர் செங்குத்தாக பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்வதில்லை. சற்று சாய்வாக அதாவது 23.5 டிகிரி சாய்வாக தனது அச்சில் சுற்றுகிறது.
இதுவே இரவு பகல் நேரங்களில் வித்தியாசம் ஏற்படுவதற்கு காரணம்.பூமியில் கோடைகாலம் குளிர்காலம் போன்ற பருவ காலங்கள் ஏற்படுவதற்கும் இந்த சாய்வே காரணமாக அமைகிறது. வேறு மாதிரி சொல்வதென்றால் பூமி செங்குத்தாக தன்னைத் தானே சுற்றிக் கொண்டால் பருவ காலங்கள் ஏற்படாது. அதாவது பூமியில் ஓரிடத்தில் எந்தவிதமான காலம் இருக்கிறதோ ஆண்டு முழுதும் மாற்றமின்றி அப்படியே இருக்கும்.
இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
பூமி அச்சின் இரு முனைகளையே வட துருவம் தென் துருவம் என்கிறோம். ஒரு குறிப்பிட்ட நாளில் மேல்முனை சூரியனை நோக்கி சாய்ந்து இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
கீழுள்ள படத்தைப் பாருங்கள்
|
படம் 1 |
ஆறு மாதங்களுக்குப் பின் பூமி பாதி சுற்று சுற்றி எதிர்புறம்
வந்திருக்கும் அப்போது அதன் மேல் முனை பூமியை நோக்கி இருக்காது.இப்போது
கீழ் முனை பூமியை நோக்கி இருக்கும். அதாவது பூமியின் அச்சு அதே நிலையில்
இருக்கிறது.
இதோ இந்தப் படத்தைப் பாருங்கள்
|
படம் 2 |
பூமியின் சுற்றுப் பாதையை ஒரு கம்பியாகவும் பூமியை ஒரு மணியாகவும் வைத்துக் கொள்ளுங்கள் கம்பியில் கோர்த்தபடி மணி சுற்றுவது போல் பூமி சுற்றினால் கீழுள்ள படத்தில் உள்ளது போல் 6 மாதங்களுக்குப் பிறகும் அதன் வடமுனை எப்போதும் பூமியை நோக்கியே சாய்ந்திருக்கும்.
|
படம் 3 |
ஆனால் இயற்கையில் அவ்வாறு நிகழவில்லை.இப்படி பூமி சுற்றினால் கால மாற்றங்கள் நிகழாது.
படம் 1 இல் காணப்படும் நிலை ஜூன் 21 அன்று ஏற்படுகிறது. தென் துருவம் சூரியனிடமிருந்து சற்று விலகி இருப்பதைக் காணாலாம் அன்று ஆண்டில் மிக நீண்ட பகலாக இருக்கும். இந்த நாளில் நில நடுக்கோட்டுக்கு மேலுள்ள வட அரைக் கோளத்தில் சூரிய ஒளி அதிகமாகவும் தென் அரைக்கோளத்தில் குறைவாகவும் விழுகிறது. அன்றிலிருந்து பகல் நேரம் சிறிது சிறிதாக குறைந்து இரவு நேரம் சிறிது சிறிதாக அதிகரிக்கும். செப் 23 அன்று இரவும் பகலும் சம நிலையை அடைகிறது.
இந்த நாட்களில் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர்வதைப் போல் தோற்றமளிக்கும் இதை தட்சணாயணம் என்று கூறுவது வழக்கம். செப் 23 அன்று நில நடுக்கோட்டுக்கு செங்குத்தாக சூரிய ஒழி விழுவதால் வட அரைக் கோளத்திலும் தென் அரைக் கோளத்திலும் சம அளவு ஒளி விழுகிறது.அதாவது வட துருவமும் தென் துருவமும் சம தொலைவில் உள்ளது. இதனால் இரவும் பகலும் சமமாக உள்ளது. இதே நிலைய மார்ச் 21 அன்றும் ஏற்படுவதால் அன்றும் இரவும் பகலும் சமமாக அமைகிறது.
இதற்கிடையில் (படம் 2)டிசம்பர் 21(சில சமயங்களில் டிசம்பர் 22) அன்று ஜூன் 21 அன்று உள்ள நிலைக்கு நேர் எதிரான சூழ்நிலயில் பூமி அமைவதால் அன்று மிக நீண்ட இரவாகவும் குறைந்த பகலாகவும் காணப்படும்.அன்றிலிருந்து சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்வது போல் தோற்ற மளிக்கும் இதை உத்தராயணம் என்று கூறுவார்கள்.
சரி! இவையெல்லாம் விண் வெளியில் நிகழ்கிறது.நாம் எப்படி இதை அறிவது. நாம் கண்ணால் என்ன மாற்றங்களை பார்க்க முடியும்
1. இன்று சூரியன் உதிப்பது சரியான கிழக்கு திசையின் மையத்தில்
2. இன்றிலிருந்து நிழல் வடக்குப்புறம் சாய்வாக விழத் தொடங்கும்
3 இன்று பகல் பன்னிரண்டு மணிக்கு 90 டிகிரி செங்குத்தாக ஒரு வளைவில்லாத குச்சியை வைத்தால்(பூமத்திய ரேகைப் பகுதியில்) அதன் நிழல் தரையில் விழாது. தலைக்கு மேல் நேராக சூரியன் இருக்கும்.
4 தமிழகத்தில் நெய்வேலியைத் தவிர இதர இடங்களில் சரியான கிழக்கு மேற்காகவோ ,வடக்கு தெற்காகவோ சாலைகள் இல்லை அதனால் திசைகளை அறிவது சில வேளைகளில் கடினமாக உள்ளது. இன்றைய சூரியனை வைத்து திசைகளின் அமைப்பை அறிந்து கொள்ளலாம்.
இதோ இந்தப் படங்கள் அதை விளக்கும் என்று நம்புகிறேன்.படத்தில் உள்ள குச்சியின் நிழலை கவனியுங்கள்.
ஜூன் 21 அன்று டிசம்பர் 21 அன்று
இன்று செப்டம்பர் 22 அன்று
இவை யாவும் நில நடுக்கோட்டுப் பகுதியில் உள்ளவர்களுக்கு100 சதவீதம் பொருந்தும். மற்ற இடங்களில் நிழலில் மாறுபாடு காணப்படலாம். தமிழகத்தை பொறுத்தவரை நிலநடுக் கோட்டுக்கு வட பகுதியில் அமைந்துள்ளதால் நிழல் சற்று வடக்குப்புறம் சாய்வாக விழும்.ஆனாலும் இரவு பகல் நேரங்கள் சமமாகவே இருக்கும்.
சுருக்கம்: 1.மார்ச் 21 &செப்டம்பர் 22 சம இரவு பகல் நாட்கள்
2. ஜூன் 21 நீண்ட பகல் குறுகிய இரவு
3. டிசம்பர் 21 நீண்ட இரவு குறுகிய பகல்
பதிவு பயனுள்ளதாக இருந்ததா?
தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்.உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்.
************************************************************************************************************
தொடர்புடைய பதிவு