என்னை கவனிப்பவர்கள்

கணினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 மார்ச், 2015

பின் வாங்கிய கூகுள்+ஆபாசதளம் பார்ப்பவர் எத்தனை பேர்?+நண்பர் அனுபவம்

   

   2015 மார்ச் 23 முதல் ஆபாச படங்களை வீடியோக்களை பதிவுகளை அனுமதிக்காது அவற்றை நீக்கி விட வேண்டும் அல்லது வலைப்பூவை  யாரும் காண முடியாதபடி பிரைவேட்டாக செட்டிங்க்ஸ் மாற்றிக் கொள்ளவேண்டும் என்று அறிவிப்பு செய்திருந்தது.. கூகுள் . இது தொடர்பாக முந்தைய பதிவை
 எழுதி இருந்தேன். ஒருவாரத்திற்குள் தனது முடிவை வாபஸ் பெற்று எனக்கு பல்பு கொடுத்து விட்டது கூகுள்.
பல்லாயிரக் கணக்காணவர்களின் வேண்டுகோளை ஏற்று ஆபாச உள்ளடக்கம் பற்றிய அறிவிப்பை அமுல்படுத்தாது என்று ஒவ்வொரு ப்ளாக்கருக்கும் அறிவிப்பை அவர்களது டேஷ் போர்டில் தெரியச் செய்துள்ளது 
கூகுளின் தனது முடிவை மாற்றி வெளியிட்டுள்ள செய்தி இது. (பதிவர் வருண் அப்போதே கருத்திட்டுள்ளார் .)

An update on the Blogger porn content policy

This week, we announced a change to Blogger’s porn policy stating that blogs that distributed sexually explicit images or graphic nudity would be made private.
We’ve received lots of feedback about making a policy change that impacts longstanding blogs, and about the negative impact this could have on individuals who post sexually explicit content to express their identities.
We appreciate the feedback. Instead of making this change, we will be maintaining our existing policies.

What this means for blog owners

  • Commercial porn will continue to be prohibited.
  • If you have pornographic or sexually explicit content on your blog, you must turn on the adult content setting so a warning will show. If a blog with adult content is brought to Google’s attention and the content warning is not active, we will turn on the warning interstitial for you. If this happens repeatedly, the blog may be removed.
  • If you don't have sexually explicit content on your blog and you're following the rest of the Blogger Content Policy, you don't need to make any changes to your blog.

இது வயது வந்தோர்க்கு மட்டும் என்று சொல்லி விட்டால் போதுமா?
சிகரட் அட்டையில் புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று எழுதுவதும், குடி குடியைக் கெடுக்கும் என்று பாட்டிலில் குறிப்பிடுவதும் எந்த வகையிலும் மாற்றத்தையும் ஏற்படுத்தியதில்லை . ஒரு நல்ல முடிவை கூகிள் ஏன் வாபஸ் பெற்றுக் கொண்டது ? எல்லாம் வியாபாரம்தான்.விளம்பர வருமானத்தை விட யாருக்கு மனம் வரும். சில புள்ளிவரங்களை பார்க்கலாம்
  1. இந்தியாவில் மட்டுமல்ல உலகில் அதிகம் பார்க்கப்படும் முதல் 100 வலைத்தளங்களுக்குள் இரண்டு மூன்று  ஆபாச வலைதளங்கள் இடம்பெற்று விடுகின்றன.
  2. உலகம் முழுவதும் ஒரு மாதத்திற்கு 450 மில்லியன் பேர் ஆபாச தளங்களை பார்வையிடுகிறார்கள்.இவை Netflix, Amazon ,Twitter தளங்களின் மொத்த பார்வையாளர்களை விட அதிகம் 
  3. இந்தியாவில் வலைதள பார்வையாளர்களில் ஆபாச தளங்களில் சராசரியாக   ஒரு நாளைக்கு ஐந்து நிமிடம் செலவிடுகிறார்கள்( இதற்கு  எல்லோரும் பார்க்கிறார்கள் என்று அர்த்தம் அல்ல)
  4. ஒவ்வொரு ஆபாச தளமும் சராசரியாக ஒருமாதத்திற்கு 7.5 முறைகள் பார்வையிடப் படுகிறது 
  5. கைபேசியில் இத்தளங்களை பார்வையிடுவோர் எண்ணிக்கை 90 இலட்சம்
  6. இந்தியாவில் மொத்த வலைத்தள traffic இல் 30%  இவ்வகை தளங்களுக்கானவை 
  7. இவ்விவரங்கள் 2013 ஆண்டுக்கானவை 
     பாலியல் தொடர்பானவற்றை பார்ப்பதும் படிப்பதும் தவறு என்று முழுமையாக சொல்லி விடமுடியாது என்று சொல்லும் உளவியல் நிபுணர்கள், இவற்றுக்கு அடிமையாகி விடுவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரிக்கிறார்கள் 
    பல வலைத்தளங்கள் இயல்பான பாலியியல் உணர்வுகளை மிகைப் படுத்தி தவறான புரிதலை ஏற்படுத்தி விடுகின்றன. குறிப்பாக பதின்ம வயதுடையவர்களின் மனதில்  இவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. இவ்வகை வலைத்தளங்கள் இவர்களைக்கவர பல்வேறு தந்திரங்களை மேற்கொள்கின்றன. இவற்றால் கவரப்பட்டவர்களிடமிருந்து  மின்னஞ்சல் முகவரிகள்,தொலைபேசி எண்கள் புகைப்படங்கள் உள்ளிட்ட பல தனி  விவரங்கள் சேகரிக்கப் பட்டு விடுகின்றன. கணினி வைரஸ்களை பரப்புவதில்  இவ்வகைத்தளங்களே முக்கியப்பங்கு வகிக்கின்றன . 
  மூன்று வயதுக் குழந்தைகள் கூட கணினி, கைபேசியை திறமையாக கையாள்கின்றன. பள்ளி சிறார் சிறுமியர் கணினியிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். கைபேசியுடன்தான் உறவாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள்  என்ன செய்கிறார்கள் என்பதை திறமையாகக் கண்காணிக்கும் அளவுக்கு நமக்கு ஞானம் இருக்கிறதா என்பது ஐயமே! பாதுகாப்பையும் எச்சரிக்கை உணர்வையும் மட்டும் அவ்வப்போது வலியிறுத்துவது மட்டுமே நம்மால் முடிந்தது. 
********************

கொசுறு: பெற்றோர்களுக்கு எச்சரிக்கை 
எனக்குத் தெரிந்த ஒருவருக்கு  பள்ளி வயதில் ஒரு மகனும் மகளும் உண்டு. அடுத்த ஆண்டு ஒய்வு பெற இருப்பவர் அவர்.புதிதாக கணினியும் இணைய இணைப்பும் வாங்கினார். மெயில் பார்ப்பது அனுப்புவது மட்டுமே அவர் அறிந்தது.. மனைவியும் பிள்ளைகளும் கோடை விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்தபோது எதேச்சையாக  ஆபாச தளங்களை பார்க்க நேர்ந்தது. வீட்டில் யாரும் இல்லை என்ற தைரியத்தில் ஆர்வம் காரணமாக ஒரு வாரம் தினந்தோறும் பார்த்துக் கொண்டிருந்தார் போலிருக்கிறது. 
ஒரு வாரத்திற்குப் ஊருக்கு சென்றவர்கள் திரும்பி வர, அலுவலகத்திலி ருந்து மகிழ்ச்சியுடன்  மனைவி மக்களை காண வீடு சேர்ந்தவருக்கு  அதிர்ச்சி காத்திருந்தது .
"........இந்த வயசுல கண்றாவிப் படங்களை எல்லாம் ஒரு வாரமா பாத்தீங்களாமே. உங்கள் பையன் உங்க வண்டவாளத்தை கப்பலேத்திட்டான்  .இது மட்டும்தானா? நாங்கள் இல்லாத நேரத்தில வேற என்னவெல்லாம் செஞ்சீங்க . உங்களை நல்லவர்னு நினச்சேனே..." என்று பொங்கி எழ மனிதர் பாவம் பதில் சொல்ல முடியாமல் "ஞ" வரிசையில்  12 விதமாக விழித்தார் . 
பின்னர் என்னிடம் கேட்டார் "அவங்க இல்லாத நேரத்திலதான் பாத்தேன்.  எப்படி தெரிஞ்சிருக்கும் "
"பசங்க எல்லாம் இப்ப ரொம்ப அட்வான்ஸ்.உங்க பையனுக்கு கம்பியூட்டர் இன்டர்நெட் பத்தி நல்லா தெரிஞ்சிருக்கு. வீட்டுக்கு வந்ததும் browsing history ஐ பாத்திருப்பான் அதில நீங்க பாத்த வெப் சைட் எல்லாம் இருக்கும். உடனே அம்மாகிட்ட போட்டு கொடுத்திட்டான் ." என்றேன்.
"அதுல இவ்வளோ விஷயம் இருக்கா?கம்ப்யூட்டர்ல என்ன பண்ணாலும் தெரிஞ்சுடுமா " என்றார் அப்பாவியாக 
"அடுத்த முறை இந்த மாதிரி பாத்தவுடன் ஞாபகமா ஹிஸ்டரிய டெலிட் பண்ணிடுங்க." என்றேன் சிரித்துக் கொண்டே 
"ஆளை விடுப்பா . இனிமே கம்ப்யூட்டர் பக்கமே போகமாட்டேன்" என்றார் 


*************************


இதைப் படிச்சாச்சா ?



***************************************************************************************************



திங்கள், 29 டிசம்பர், 2014

மனம் வைக்குமா தமிழ்மணம்?

  
  
    தமிழ் வலைப் பூக்களில் தற்போது தொய்வு காணப்படுவதாக ஒரு கருத்து நிலவுகிறது. கடந்த ஆண்டுகளில் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்த பலர் இந்த ஆண்டு எழுதுவதைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் வலைப்பூக்கள் பக்கம் தலை வைத்துக் கூட படுப்பதில்லை . சிலர் முகநூல் ட்விட்டர் கூகிள் + க்கு சென்று விட்டனர் . ஆனாலும் புதிதாக பலரும் எழுத வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 
     நான் கவனித்தவரை நிறையப் பதிவர்களின்  அதிக பட்சமாக மூன்று ஆண்டுகள் வரைதான்  தொடர்ந்து  தீவிரமாக எழுதி இருக்கிறார்கள். பின்னர் வேகம் குறையத் தொடங்கியுள்ளதை காண முடிகிறது. காரணம் முதன் முதல் எழுத வாய்ப்பு கிடைக்குபோது சிறுவயதில் இருந்து மனதில் பதிந்துவந்த எண்ணங்களும்  அனுபவங்களும் தொடர்ந்து எழுத எதையாவது கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அவர்களது ஆகச் சிறந்த படைப்புகளை மூன்றாண்டுகளுக்குள் கொடுத்துவிடுகிறார்கள். பின்னர் ஒரு வறட்சி நிலவுகிறது. இப்படி எழுதி என்ன சாதித்தோம்  என்ற எண்ணம் ஏற்படுகிறது. சக பதிவரின் பாராட்டுகளும் ஊக்கமும் ஆரம்பத்தில் கொடுத்த மகிழ்ச்சி இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப்பின்  எந்தப் பரவசத்தையும் ஏற்படுத்துவதில்லை. இது வலைப் பூ மட்டுமல்ல முகநூல் ட்விட்டர் எல்லாவற்றுக்குமே பொருந்தும். 
    தினம் ஒரு பதிவு எழுதி  நீண்ட காலம் தமிழ் மண தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த  வீடு திரும்பல் மோகன் குமார் இப்போது  வலைப்பக்கம் எப்போதாவதுதான் வருகிறார் கடந்த ஆண்டு முகநூலில் மூழ்கிக் கிடந்த பலரை இப்போது காணவில்லை. ஆனால்   அதற்கு விதிவிலக்காக சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த சலிப்பையும் வெறுமைமையும் கடந்தவர்கள் அவர்கள். 'அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன்' ,'அட்ராசக்கை சிபி.செந்தில் குமார்','பழனி கந்தசாமி'  போன்றவர்கள் இந்தப் பட்டியலில் அடங்குவர். இவர்கள் அனைவரும் அசாதாரணமானவர்கள். என் கணிப்பின்படி புதிதாக வருபவரின் படைப்புக் காலம் மூன்று ஆண்டுகள்.ஒவ்வொருவரும் தான் இயங்கிய காலத்தை மட்டுமே பொற்காலம் என்று வர்ணிப்பது வழக்கம்.
     பதிவு திசைமாறிப் போய்க்கொண்டிருக்கிறது. நான் சொல்லவந்தது புதிதாக எழுத வருபவர்களை தமிழ்மண திரட்டியில் இணைப்பது   பற்றி. புதியவர் பழையவர் யாராக இருந்தாலும் ஒருவருடைய படைப்பை அடுத்தவர் அறிய வைப்பதில் திரட்டிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன . நான் எழுத வந்தபோது ஏராளமான திரட்டிகள் இருந்தன. பதிவர்களைப் போலவே மூன்று ஆண்டுகளில் பல திரட்டிகள் காணாமல்  போயின. அவற்றில் தாக்குப் பிடித்து நின்றது  தமிழ்மணம்,தமிழ் 10,இன்ட்லி போன்ற ஒரு சில மட்டுமே.
   திரட்டிகள் இல்லாவிட்டால் நமது பதிவுகளை யாருமே படிக்க மாட்டார்களா? நமது பதிவுகளை திரட்டி அளிப்பதால் அவர்களுக்கு என்ன நன்மை? திரட்டிகளும் ஒரு ஒரு வலைத்தளமே.எவ்வவளவு பேர் வந்து பார்க்கிறார்களோ அவ்வளுக்கவ்வளவு விளம்பரம் கிடைக்கும். ஒரு வேளை வணிக நோக்கம் இல்லாவிட்டாலும் நிறையப் பேர் பார்க்கவேண்டும்-அல்லது பயன்படுத்தவேண்டும் என்பதே இணையதளம் நடத்துவோரின் விருப்பமாக இருக்கும்.
  திரட்டிகள் அளிக்கும் வசதிகளை பொறுத்தே அதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அமையும். பிரபலமாக உள்ளவர்களுக்கு திரட்டிகளின் உதவி தேவை இல்லை. வாசகர்கள் தேடி வந்து படிப்பார்கள்.எஸ் ராமகிருஷ்ணன்,ஜெயமோகன்,சாரு போன்றோர் இதற்கு உதாரணம். முதலில் திரட்டிகளின்  உதவியால்  வாசகர்பெற்று பின்னர் சிறிது காலத்திற்குப்பின் பின் அந்த நிலையைத் தாண்டி திரட்டிகள் உதவி இன்றியே வாசகர்கள் வரும் நிலையை அடைந்தோரும் உண்டு.  கேபிள்சங்கர், அட்ராசக்க உள்ளிட்டோர் அடங்கிய பட்டியல் சிறியது.
   ஆனால் புதிதாக எழுதத் தொடங்குவோர்க்கு மிகவும் உதவிகரமாக இருப்பது திரட்டிகளே. இந்த வகையில் அதிக வலைப் பதிவர்களை கவர்ந்ததாக தமிழ் மணம், இன்ட்லி , தமிழ் 10 விளங்குகின்றன. குறிப்பாக தமிழ் மணத்தின் வசதிகள் அதிக வாசகர்களை வலைப்பக்கம் ஈர்ப்பதற்கு உதவுகின்றன. (என்னென்ன வசதிகள் என்பதை அறிய படிக்க
    மற்ற திரட்டிகளில் இணைப்பது மிகவும் எளிமையானது.உடனே அனுமதி கிடைத்து விடும். ஆனால் தமிழ்மணத்தில் தற்போது எளிதில் ஒப்புதல் கிடைப்பதில்லை. பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது
சமீபத்தில் தமிழ் மணத்தில் உள்ள குறைகளை மூத்த பதிவர்கள்  பழனி கந்தசாமிம் தருமி போன்றோர் சுட்டிக்காட்டி வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் வேண்டுகோளின்படி விளம்பரங்கள் மற்றும்  ஆபாசப் பதிவுகளை நீக்கியது தமிழ்மணம். தமிழ் மணத்தில் பல தானியங்கி செயல்பாடுகள் உள்ளன. ஆனால் பதிவுகளின் தரம் பற்றி அவை அறியாது. மேனுவலாகத்தான் அவற்றை சரி செய்ய வேண்டி இருக்கிறது. தானியங்கியாக செயல்பட்டாலும் மனித கண்காணிப்பு நிச்சயம் அவசியம். 
   பிற திரட்டிகளைப் போல தமிழ்மணத்தில் எளிதில்  உறுப்பினராகி விடமுடியும். ஆனால்  நமது வலைப்பூவை பட்டியலில் சேர்க்க  அனுமதி கிடைத்தபின்பே நமது பதிவுகளை இணைக்க முடியும். முன்பெல்லாம் விண்ணப்பித்து ஒரு வாரத்திற்குள் இந்த அனுமதி கிடைத்து வந்தது. தற்போது ஏதோ சிக்கல் காரணமாக மிகுந்த தாமதம் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட கடந்த ஆறுமாதங்களாக ஒருவலைப்பூவும் சேர்க்கப் படவில்லை. எவ்வளவு காத்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் ? 20? 30? 50? 100?
இல்லை! இல்லை! அதையும் தாண்டி 237 பேர் தமிழ் மண பட்டியலில் இணைவதற்காக காத்திருக்கிறார்கள்.
அந்த பட்டியல் இதோ


(வலதுபுறத்தில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி முழுப் பட்டியலையும் பார்க்கலாம்)

20.07. 2014 இல் இருந்து புதிதாக எந்த வலைப்பூவும் தமிழ் மணத்தில் இணைக்கப் படவில்லை.கடந்த முறையும் இதே போல பல மாத காத்திருப்பிற்குப் பின்னேதான் வலைப்பூக்கள் சேர்க்கப்பட்டன. ஏனிந்த தொய்வு  என்பதற்கான ரியான காரணம் தெரியவில்லை. முன்பு சராசரியாக ஒரு நாளைக்கு 200 பதிவுகள் இணைக்கப்பட்டன. தற்போது தமிழ்மணத்தில் வெளியாகும் இடுகைகள்  90 ஆக குறைந்துள்ளது . 

இந்த தொய்வை ஈடுகட்ட   உடனடியாக இவர்களை  தமிழ்மண விதிகளின்படி தகுதி இருப்பின் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்பதே எனது வேண்டுகோள் .  தருமி அவர்கள் கூறியுள்ள படி ஒருவேளை இவற்றை கவனிக்க தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் தேவை எனில்  நிபந்தனைகளின் அடிப்படையில் யாரையேனும்  பயன்படுத்த முயற்சிக்கலாம். தருமி அவர்கள் கூறியது போல திண்டுக்கல் தனபாலன் இதற்கு பொருத்தமானவர் என்று கருதுகிறேன்.அவர் கணினி நுட்பங்கள் அறிந்தவர் மட்டுமல்லாது சேவை மனப்பான்மையும் உடையவர் என்பது அனைவரும் அறிந்ததே.
எனது பதிவுகள பலரையும் சென்றைடய உதவியது தமிழ்மணம். இப்போதும் எனது வலைபூவிற்கு வருகை தருபவர்களில்  பெரும்பாலோர் தமிழ் மணம் மூலம் வருபவர்களே  அதேபோல் பற்றவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். தமிழ் வலைபதிவர்களை ஊக்குவிக்கும் இந்த நடவடிக்கையை தமிழ்மணம் உடனடியாக செய்யும் என்று நம்புகிறேன்.

**********************************************************************

கொசுறு: 1 இந்தப் பட்டியலில் ஒரு சிலர் ஏற்கனவே அதே தலைப்பில் நடத்தி வருகிறார்களே அவர்கள் எதற்காக மீண்டும் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். இதைப் பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம் 
கொசுறு 2:
தமிழ்மணம் கவனத்திற்கு மீண்டும் ஆபாச விளம்பரம் தலைகாட்டத் துவங்கியுள்ளது


***************************************************************************
தொடர்புடைய பிற பதிவுகள் 

  • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி?
  • முன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்...
  • உங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி?
  • உங்கள் வலையின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டுமா?
  • காபி,பேஸ்ட் செய்யப்பட்டதை அறிவது எப்படி?-பகுதி 2(250 வது பதிவு)
  •  இன்ட்லியால் ஒரு இன்னல்
  • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி? 
  • .காபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது?
  • தமிழ்மணம்,தமிழ் 10 இல் ஒட்டு போட்டவர்களை அறிய முடியுமா?


  • வியாழன், 13 நவம்பர், 2014

    பின்னூட்டத்தில் நம் வலைப்பதிவிற்கு இணைப்பு கொடுப்பது எப்படி?

    கற்றுக்குட்டியின் கணினிக் குறிப்புகள்.




           வலைப்பூவோ முகநூலோ ட்விட்டரோ எதுவாக இருப்பினும் நாம் பதிவு செய்தவற்றை நிறையப் பேர் பார்த்தால்தான் மகிழ்ச்சி.என் கடன் பதிவு செய்து கிடப்பதே பார்ப்போர் பார்க்கட்டும் பார்க்காவிட்டால் போகட்டும் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை  என்றும் நான் ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன் என்றும் ஒரு சிலர் சொல்வதுண்டு.  அது ஒப்புக்கு சொல்லப் படுவதே அன்றி வேறில்லை. ஆனால் அவர்களுக்கும் நமது பதிவுகள் படிக்கப் படவில்லையே என்ற ஆதங்கம் இருக்கத் தான் செய்யும் . 

           யாருமே வராத ஓட்டலுக்கு யாருக்காக மாவாட்டுவது? (எவ்வளவு நாள்தான் டீக்கடை உதாரணத்தையே சொல்வது). நாம் இருக்கிறோம் இணையத்தில் எழுதுகிறோம் என்று தெரிவிப்பது புதியவர்களுக்கு அவசியமாகிறது. அதற்கு பல வழிகளை கடைபிடிக்கிறோம். திரட்டிகளில் இணைப்பது .பிறரின் பதிவுகளில் கருத்திடுவது மின்னஞ்சல் அனுப்புவது, முகநூல் ட்விட்டர்களில் இணைப்பு  கொடுப்பது வழக்கத்தில் இருக்கிறது. சிலர் பிறருடைய கருத்துப் பெட்டியில் தன பதிவை படிக்க வருமாறு அழைப்பு விடுப்பதை பார்க்க முடியும்.அப்போது தன பதிவின் url ஐ ( உதாரணம் http://www.tnmurali.com/2014/11/idli-dosai-philosophy.html) காப்பி செய்து பின்னூட்டத்தில் இட்டு வைப்பர். தன பதிவுக்கு வருகை தந்தவரின் வலைபதிவிற்கு செல்ல அந்த முகவரியை தேர்ந்தெடுத்து காப்பிசெய்து அட்ரஸ்பாரில் பேஸ்ட் செய்து என்டர் தட்டினால் அந்தப் பதிவுக்கு சென்று படிக்க முடியும். ஆனால் இவற்றை செய்வதற்கு சோம்பல் பட்டோ அல்லது செய்யத் தெரியாமலோ சிலர் இருக்கக் கூடும். அவர் எளிதாக நமது வலைப்பதிவை அடைய வழி என்ன? பின்னூட்டத்தில் க்ளிக் செய்தால் பதிவை அடையும் வண்ணம் இணைப்பு இருந்தால் நன்றாக இருக்குமல்லவா? அதற்கான வழி ஒன்றை கூறுகிறேன். இது பெரும்பாலோருக்கு தெரிந்ததுதான் என்றாலும் ஒரு சிலருக்காவது பயனுள்ளதாக இருக்கும்
         ஆனால் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும் . இதை தேவைப்படும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட ந(ண்)பர் நமது பதிவைப் படித்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தால் அவருடைய வலைப்பதிவு பின்னூட்டத்தில் இதைப் உபயோகப்படுத்தலாம் . அடிக்கடி இதனை விளம்பரம் போல நாம் இடும் ஒவ்வொரு பதிவுக்கும் இதனைசெய்வதை பெரும்பாலோர் விரும்ப மாட்டார்கள் . எரிச்சல் அடையக் கூடும.அதனால்இடம்பொருள்அறிந்து இதனை பயன்படுத்துதல் சாலச் சிறந்தது 

       இப்போது வழிமுறையை பார்ப்போம். இந்த  குட்டி HTML நிரலை பயன் படுத்தலாம்  

    <a href="உங்கள் பதிவின் முகவரி">பதிவின் தலைப்பு</a> 

    இதை அப்படியே காப்பி செய்து வைத்துக் கொள்ளுங்கள் 

    உதாரணத்திற்கு எனது இட்லியும் தோசை சொல்லும் தத்துவங்கள்  என்ற பதிவுக்கு  இணைப்பு கொடுக்க விரும்புவதாகக் கொள்வோம்.
    இதன் url முகவரி 
    http://www.tnmurali.com/2014/11/idli-dosai-philosophy.html
    பதிவின் தலைப்பு: இட்லியும் தோசை சொல்லும் தத்துவங்கள்  
    மேற்கண்ட நிரலில் நீல வண்ணத்தில் உள்ள பதிவின் முகவரிக்கு பதிலாக என்ற இடத்தில் http://www.tnmurali.com/2014/11/idli-dosai-philosophy.html என்பதையும் பச்சை வண்ணத்தில் உள்ள பதிவின் தலைப்பு என்பதற்கு பதிலாக  இட்லியும் தோசை சொல்லும் தத்துவங்கள் என்பதையும் இட வேண்டும் 

    பதிவுக்கான இணைப்பு நிரல் இப்படி இருக்கும் 

    <a href="http://www.tnmurali.com/2014/11/idli-dosai-philosophy.html">இட்லியும் தோசை சொல்லும் தத்துவங்கள்</a> 

    இதை அப்ப்டியே காப்பி செய்து நண்பருடைய பின்னூட்டப் பெட்டியில் பேஸ்ட் செய்து பப்ளிஷ் செய்யுங்கள் . 
    இட்லியும் தோசை சொல்லும் தத்துவங்கள் என்ற தலைப்பு மட்டும் இணைப்புடன் கருத்துப் பெட்டியில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம் . நிரலில் உள்ள   மற்ற குறியீடுகள் எழுத்துக்கள் அதில் இடம் பெறாது .இதைக் க்ளிக் செய்து பதிவை  எளிதாக அடையலாம் 

    நண்பரின் பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை சொல்லி விட்டு  அது தொடர்பாக உள்ள உங்களது பதிவையும் இணைப்போடும் குறிப்பிடலாம் 
    உதாரணமாக "இட்லி தோசை சொல்லும் தத்துவங்கள்" என்ற பதிவுக்கு கீழ்க்கண்டவாறு பின்னுட்டமிட்டிருந்தார் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் .


    அவர் தன்னுடைய தோசைப் பதிவின் இணைப்பையும் எனது பதிவின் பின்னூட்டத்தில் தெரிவிக்க விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம் 

    கருத்துப் பெட்டியில் கீழ்க்கண்டவாறு 

     நல்ல ஒப்பீடு போங்க! சுவையாய் இருந்து . எங்கள் ப்ளாக்கின் தோசைப் பதிவுகள் படித்தீர்களோமுரளி? <a href="http://engalblog.blogspot.in/2014/08/140804-1.html">தோசையாயணம்</a> 



    என்று  டைப் செய்து பப்ளிஷ் செய்தால் 



    கருத்து மேலுள்ளவாறு தோன்றும். இதில் இணைப்புப் பகுதியான தோசையாயணம்  மட்டும் மாறுபட்டு  காட்சி அளிக்கும் . அதைக் க்ளிக் செய்தால் அந்தப் பதிவுக்கு நேரடியாக சென்று விடும்.
    இதை சோதித்து ப் பார்க்க  எனது இட்லி தோசை தத்துவங்கள்  பக்கத்திற்கு செல்லவும் 

    குறிப்பு  



    • இந்த நிரலில் மேற்கோள்குறி <   > / போன்ற குறியீடுகள் விடுபட்டுவிடக் கூடாது.
    • இந்த மாதிரி நிரலை அப்படியே காப்பி செய்து கருத்துப்பெட்டியில் பேஸ்ட் செய்து விட்டு உங்கள் பதிவின் தலைப்பையும் URL ஐயும் அதில் ரீப்ளேஸ் செய்து கொள்ளலாம்.
    • பதிவின் முகவரியை பதிவின் அட்ரஸ் பாரில் இருந்து நிரலில் பேஸ்ட் செய்து கொள்ளலாம் அவ்வாறு செய்யும்போது http:// கூடுதலாக இடம்பெற்றுவிட்டால் இது வேலை செய்யாது.


    கொசுறு:
    நான் பொதுவாக எனக்கு பின்னூட்டமிட்டவரின் வலைப் பதிவிற்கு செல்ல வேண்டுமென்றால்  பின்னூட்டத்தில் அவர் பெயரை க்ளிக் செய்தால் அவரது PROFILE பக்கத்திற்கு செல்லும் . அதன் வழியாக அவரது வலைப் பக்கத்திற்கு செல்வது என் வழக்கம் . என்னைப் போன்று பலரும் செல்ல கூடும். ஆனால் பல வலைப் பதிவர்கள் கூகிள் +  கம்மென்ட்டுக்கு மாறி இருக்கிறார்கள் . இதனால் அவர்களுடைய பெயரை க்ளிக் செய்தால் அவர்களுடைய கூகிள் + 
    பக்கத்திற்க்கு செல்லும் அதில் அவர்கள் பகிர்வு செய்த பிறருடைய பதிவுகளும் இடம் பெற்றிருக்கும். இதில் அவரது சமீபத்திய பதிவை கண்டறிவதில் சற்று இடர்பாடு உள்ளது . எனவே கூகிள்+ அதிகம் பயன்படுத்துபவர்கள் தவிர இதரர் பழைய ப்ளாக்கர் கம்மென்ட்ஸ் செட்டிங்க்சில் இருப்பது நல்லது  என்பது எனது கருத்து 

                                                           **************************

    எச்சரிக்கை:  முரளி!ஏதோ மதுரை வலைப் பதிவர் விழாவில் தொழில் நுட்பப் பதிவர்னு சொல்லிட்டாங்க. அதுக்காக  இப்படி எல்லாமா ஜுஜுபி  பதிவ போட்டு படுத்தறது 



    ********************
    இதர கற்றுக் குட்டிப் பதிவுகள் 






  • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி?
  • முன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்...
  • உங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி?
  • உங்கள் வலையின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டுமா?
  • காபி,பேஸ்ட் செய்யப்பட்டதை அறிவது எப்படி?-பகுதி 2(250 வது பதிவு)
  •  இன்ட்லியால் ஒரு இன்னல்
  • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி? 
  • .காபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது?
  • தமிழ்மணம்,தமிழ் 10 இல் ஒட்டு போட்டவர்களை அறிய முடியுமா?




  • வியாழன், 31 அக்டோபர், 2013

    எக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா?


    நான் கணினி முறையாகக் கற்றவனோ தொழில் நுட்பம் தெரிந்தவனோ அல்ல. நான் கற்றுக் கொண்டவற்றை ,பயன்படுத்தியவற்றை ஒரு கற்போர் நிலையில் இருந்து என்னைப்  போன்று இருப்பவர்களுக்கு உதவக் கூடும் என்றே இதை பகிர்கிறேன்.(கொஞ்சம் கற்பனை கலந்து)
    ஏற்கனவே கீழுள்ள இரண்டு பதிவுகளுக்கும் கிடைத்த வரவேற்பே இந்த பதிவு எழுத காரணமாக அமைந்தது
    காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா?
    EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற
    இவ்விரண்டு பதிவுகளில் மாதிரியாக நான் உருவாக்கி இணைத்த Excel கோப்புகளை தினமும் யாரேனும் ஒருவராவது டவுன்லோட் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

    தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்.

    கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்
     நண்பர் சொன்னார். "முரளி! நீதான் என்னை காப்பாத்தணும்.உன்னை  நம்பி சவால் விட்டிருக்கிறேன்..'" என்றார்.
    "என்ன சவால் ஒன்னும் புரியலையே! என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலியே" நண்பரை கேட்டேன்.
    "அதெல்லாம் ஒண்ணும் இல்ல. ஆபீஸ்ல ஒரு பெரிய ஒரு தகவலை தொகுத்து ஸ்டேட்ஆபிசுக்கு அனுப்பனும். அது என்னோடபொறுப்பு. எங்க ஆபீஸ்ல ரமேஷ்னு ஒருத்தர்தான் கம்ப்யூட்டர்ல இந்த வேலை எல்லாம் செய்வார். எக்சல்ல ஒர்க் பண்றதுக்கு அவருக்கு மட்டும்தான்  தெரியும். வோர்ட்ல பக்கம் பக்கமா அடிக்கறவங்க இருக்காங்க அவங்க எல்லாம் எக்சல்னு சொன்னாலே பயந்து ஓடறாங்க. இவரை நம்பி இருக்கறதாலே ரொம்ப அலட்டிக்குவார். தனக்குத்தான் எல்லாம் தெரியும்னு அலட்சியம் வேற. ஆனா அவரால ரெண்டுநாளா நாளா இந்த வேலையை முடிக்க முடியல.  நான் கூப்பிட்டு திட்டிட்டேன். அவரோ இது சாதரண வேலை   இல்ல. இதை யாராலையும் சீக்கிரமா முடிக்க முடியாது.நான் வேண்ணா சாலஞ் பண்ணறேன்னு சொன்னார். எனக்கு உன் ஞாபகம் வந்தது. நானும் சவால் விட்டேன். நான் பண்ணி காமிக்கிறேன்னு சொல்லிட்டேன். இன்னைக்கு சனிக்கிழமைதானே! ஆபீசுக்கு வந்துடு"
    "என்ன சார் இப்படி பண்ணீட்டிங்க. என்ன வேலைன்னே தெரியலையே. நானும் எனக்கு தெரிஞ்சத வச்சு  சும்மா வெட்டி பில்ட் அப் குடுத்துக்குட்டிருக்கேன்"
    "அதெல்லாம் தெரியாது. உன்னால முடியும் வா! பாத்துக்கலாம்"
    நம்மள  சிக்கல்ல மாட்டி விட்டுட்டாரே.இதை செய்யலைன்னா நம்ம இமேஜ டேமேஜ் ஆகிடுமே" என்று நினைத்த வாறே போனேன்.
    சனிக்கிழமை என்ற போதும் அனைவரும் வந்திருந்தனர். ஏதோ அவசர வேலை போல.
    என்னை வரவேற்ற நண்பர் கம்ப்யூட்டர் ஆசாமியிடம் அழைத்துப் போனார்.
    "ரமேஷ் இவர்கிட்ட சொல்லு."
    ரமேஷ் என்னைப் பார்த்த ரமேஷ் இரு இகழ்ச்சிப் புன்னகை புரிந்தார்.
    "நீங்க சாப்ட்வேர் தெரிஞ்சவரா? என்றார்
    "இல்லை."
    "ஏதாவது ஷார்ட் டெர்ம் கோர்ஸ் பண்ணி இருக்கீங்களா?
    "இல்லை"
    " பிராக்டிகல தெரிஞ்சிவச்சுருப்பீங்க போல இருக்கு" என்னால் இதை நிச்சயமாக செய்ய முடியாது என்ற முடிவுக்க வந்தவர் போல் தோன்றியது.
     "என்ன சார் பண்ணனும் "
    கணினியில் ஒரு எக்சல் கோப்பை திறந்து காண்பித்தார்
    " இதுல 5000க்கும் மேல  அட்ரசஸ் இருக்கு. ஆனா ஒவ்வொண்ணும் தனித்தனி காலத்தில இருக்கு.பேர் ஒரு செல்லுல இருக்கு. வீட்டு நம்பர் பக்கத்து செல்லுல இருக்கு. தெருபேர், ஊர்,மாவட்டம், மாநிலம் பின் கோடுன்னு அடுத்தடுத்த செல்லுல இருக்கு. இது எல்லாம் ஒரே செல்லில் கொண்டு வரணுமாம். எப்படி முடியும? மெர்ஜ் செல் போட்டு செய்ய முடியாது அது உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். மெர்ஜ் பண்ணா லெஃப்ட் செல்லில இருக்கிற கன்டென்ட் மட்டும்தான் இருக்கும்.ஒவ்வொரு செல்லிலும் இருக்கிற டெக்ஸ்டை காப்பி செய்து முதல் செல்லில் பேஸ்ட் பண்றதுதான் வழி. அதைத்தான் நான் செஞ்சுகிட்டு இருக்கேன். கிட்டத் தட்ட ஏழு எட்டு செல்லில் இருக்கராதை இணைக்கனுமே! 5000 த்துக்கும் மேல இருக்கிறதை எப்படி ஒரே நாளில் செய்வது. நீங்க என்னவோ செஞ்சுடுவீங்களாமே. உங்க நண்பர் சவால் விட்டிருக்கார். எங்க செஞ்சு காட்டுங்க  பாக்கலாம்" என்று சொல்லிவிட்டு கணினியை விட்டு எழுந்து எனக்கு இடம் கொடுத்தார் 
    என்னடா இது வம்பாகி விட்டதே என்று நினைத்துக் கொண்டேன். இதற்கு முன் இது போன்று செய்ததில்லை என்பதால் உடனே தீர்வு கிடைக்கவில்லை. முயற்சித்துக் கொண்டிருந்தேன்
    நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன். நீங்க ட்ரை பண்ணிக்கிட்டிருங்க என்று சொல்லி விட்டு வெளியே போனார் ரமேஷ்.
    நண்பரோ எப்படியாவது வழி கண்டுபிடிங்க என்றார். 
    நிச்சயம் எக்செல்லில் இதற்கு வழி இருக்கும் என்றே தோன்றியது.(அப்போது நான் இணையம் பற்றி அவ்வளவாக அறிந்ததில்லை)
    சிறிது நேர முயற்சிக்குப் பிறகு பலன் கிடைத்தது. 
    இரண்டு வழிகள் கிடைத்தன. ஒன்று Concatenate என்ற Function ஐ பயன் படுத்துவது. இன்னொன்று வெறும் "&" பயன்படுத்துவது


    மேற்கண்ட படத்தை பாருங்கள் A2 செல்லில் Raja என்ற பெயர் உள்ளது B2 இல் வீட்டு எண்ணும் அடுத்தடுத்து தெருவின் பெயர் ,இடம் மாவட்டம் உள்ளிட்ட விவரங்களும் உள்ளன. இவற்றை இணைக்க கடைசி விவரத்தில் (H2) பக்கத்து செல்லில் கிளிக் செய்து
     = குறியீட்டை டைப் செய்து பின்னர் இணைக்கவேண்டிய முதல் செல்லை கிளிக் செய்யவேண்டும்பின்னர் & குறியீட்டை டைப் செய்து அடுத்த  செல்லை கிளிக் செய்ய வேண்டும்ஒவ்வொரு சேலை கிளிக் செய்யுமுன் & டைப் செய்ய வேண்டும்
    அந்த FORUMLA இப்படி இருக்கும்
    =A2&B2&C2&D2&E2&F2&G2 இப்படி  FORMULA  BAR இல் காட்சியளிக்கும்
    இப்போது H2செல்லில் இந்த Formula வை டைப் செய்தால் இந்த செல்களில் உள்ளவை இணைக்கப் பட்டு ஒரே செல்லில் முகவரி காட்சி அளிக்கும். முகவரி விவரங்களுக்கு இடையில் ஒரு கமா குறியீடு அமைய வேண்டும்னில் FORMULA இப்படி  இருக்க வேண்டும்
     =A2&","&B2&","&C2&","&D2&","&E2&","&F2&","&G2
     அமைய வேண்டுமெனில் ஆனால் இதில் ஒரு குறைபாடு உண்டு பெயர் வீடு எண்,தெருவின் பெயர் போன்றவை ஒவ்வொரு வரியாக அமையாமல் தொடர்ந்து அமையும்.  இவை தனித்தனியான அமைய.Char(10) என்றFunction( அதாவது ஒரு செல்லுக்குள் புது வரிகளை அமைக்க) ஐ பயன் படுத்த வேண்டும்.(சாதரணமாக அடுத்தடுத்த வரிகளில் text அமைய வேண்டிய இடத்தில் கர்சரை வைத்து Alt+Enter விசையை பயன் படுத்துவது வழக்கம்)

    =A2&","&CHAR(10)&B2&","&","&C2&","&CHAR(10)&D2&","&CHAR(10)&E2&","&CHAR(10)&F2&","&CHAR(10)&G2 
     என்ற பார்முலாவை உள்ளீடு செய்தால் முகவரி அழகாக படத்தில் உள்ளது போல் கிடைக்கும். இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முகவரி இணைக்கப்பட்ட செல்கள் Wrap text Format இல் அமைய வேண்டும்.
    அதற்கு  ரிப்பனில் Home Tab இல் Wrap Text பட்டனை பயன் படுத்தலாம் அல்லது
     செல்லை வலது கிளிக் செய்து Format Cell தேர்ந்தெடுத்து Alignment Tab இல் Wrap text செக் பாக்சில் டிக் செய்யவேண்டும் .


     ஒரு முறை பார்முலா அமைத்து விட்டால் மற்ற விவரங்களுக்கு ட்ராக் செய்து விடலாம்.
    Concatenate பயன் படுத்தி  எப்படி text ஐ இணைப்பது பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம் (இப்போதைக்கு இல்லை)
    இந்த முறையை பயன் படுத்தி  விவரங்கள் அனைத்தையும் தொகுத்து கொடுத்தேன். நண்பர் மகிழ்ச்சி அடைந்து  அதற்குள் வெளியே சென்றிருந்த ரமேஷ் திரும்பி வந்தார்.
    அவரால் நம்ப முடியவில்லை. நண்பர் ரமேஷைப் பார்த்து நான் சவாலில் ஜெயிச்சிட்டேன். என்றார்.
    ரமேஷின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. என்றாலும் நன்றி சொன்னார் ஏதாவது தவறு கண்ணில் படுகிறதா என்று பார்த்தார். கடைசியாக இணைக்கப்பட்ட முகவரிகள் அனைத்தையும் செலேக்ட் செய்து வேறு ஒரு ஷீட்டில் காபி செய்தார். அங்கே பேஸ்ட் செய்ய #REF! என்று பிழை அறிவிப்பு  இருந்தது.
    சரியா  வரலையே சார். என்றார்.
    நான் சொன்னேன் ஃபார்முலா இருக்கிற செல்லை காப்பி பேஸ்ட் செய்யும்போது பேஸ்ட் ஸ்பெஷல் ஆப்ஷனை பயன்படுத்த Values மட்டும்  செலக்ட் செய்து ஓ.கே கொடுக்க வேண்டும்.  என்றேன். அவ்வாறே செய்ய சிக்கல் தீர்ந்தது. சவாலில் வென்ற நண்பர் அனைவருக்கும் S.K.C வாங்கி கொடுத்தார்.
    இதற்கான மாதிரி Excel பைலை டவுன்லோட் செய்ய கீழ்க்கண்ட இணைப்பை கிளிக் செய்யவும்
    அல்லது  கீழே உள்ள படத்தில் Down Arrow வை கிளிக் செய்தும் டவுன்லோட் செய்யலாம்.



    ****************************************************************

    குறிப்பு: இது மாணவர்கள், ஆசிரியர்கள்,அலுவலக பணிகளுக்கு எப்போதேனும் பயன்பட வாய்ப்பு உண்டு


    1.காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா?
    2.EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற..


    **************************************************************************************


    வியாழன், 19 செப்டம்பர், 2013

    திசைக் குழப்பம் வந்ததுண்டா?திசை அறிய மொபைல் மென்பொருள்

    உங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில்  கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது? தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா?. புதிய இடங்களுக்கு செல்லும்போது இந்தக் குழப்பம் எனக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு. அந்த இடத்தில் வசிப்பவர்களை கேட்டுத்தான் திசை அறிய வேண்டி இருக்கிறது.  பகலில் சூரியனை வைத்து திசையை அடையாளம் கண்டு கொள்ள, முடியும் என்றாலும் சில நேரங்களில் சூரியன் சற்று மேலே இருந்தால்  திசைகளை சரியாக அறிந்து கொள்ள முடியவில்லை.  சாலைகளை வைத்தே திசைகளை அறிய முற்படுவதால் சரியான திசை தெரிவதில்லை.
        புதிய ஊர் மட்டுமல்ல பழகிய சென்னையிலும்  திசை இன்னமும் குழப்பத்தான் செய்கிறது. குறிப்பாக வட சென்னையில் கிழக்கு திசையை வடக்கு என்றே நினைத்துக் கொள்வேன்.
    உதாரணத்திற்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் என் கண்களுக்கு வடக்கு தெற்காக அமைந்திருப்பதாகத் தோன்றும் ஆனால் உண்மையில் அது கிழக்கு  மேற்காக அமைந்திருக்கிறது.
    தாம்பரத்தில் இருந்து தெற்கு வடக்காக செல்லும் ரயில் பாதை(சற்றே வடகிழக்கு திசையில் செல்லும்) நுங்கம்பாக்கம் வரை  ரயில் நிலையங்கள் ஓரளவிற்கு வடக்கு தெற்காகவே அமைந்திருக்கும். நுங்கம்பாக்கத்திலிருந்து கிட்டத்தட்ட அரை வட்ட வடிவில் இருப்புப் பாதை திரும்பி கிழக்கு நோக்கி செல்கிறது. சாலைகள் போல உடனே திருப்பம் இல்லாததால் ஒரே திசையில் செல்வது போல் தோன்றி கண்களை ஏமாற்றுகிறது. 
       அதுபோல் சிறு வயதில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம்  முகப்பு கிழக்கு நோக்கி அமைந்திருப்பதாக நினைத்துக் கொள்வேன். உண்மையில் தெற்கு நோக்கியே இருக்கிறது. இது தோற்றப் பிழை என்பதை அறிந்ததால் சரியான திசையை அறிவு சொல்லி விடுகிறது. 

      நமது மொபைலில் ஜி.பி.எஸ்  இருந்தால் அதைப் பயன்படுத்தி திசையையும் வழியையும் அறிந்து  கொள்ள முடியும். GPS வசதி இல்லாத மொபைல்களில் திசை அறிய  மென்பொருள் உண்டா தேடினேன்.
        ஜாவா எனேபில்டு கைபேசியாக இருந்தால் பயன்படுத்தக் கூடிய இலவச காம்பஸ் ஒன்று கிடைத்தது. இப்போது பெரும்பாலான கைபேசிகளில் Java இருப்பதால் இதை எளிதில் நிறுவ முடியும்.
    இந்த அப்ளிகேஷன் மூலம் நமது கைபேசியையே திசைகாட்டும் கருவி போல் பயன்படுத்தி திசையை அறிந்து கொள்ள முடிகிறது. இதை
    http://www.qcontinuum.org/compass/index.htm  என்ற முகவரியில் இருந்து
    • compass.jar (91K) என்ற பைல்களை டவுன்லோட் செய்து  செல்போனில் நிறுவிக் கொள்ளலாம். Games and Application Folder இல் காப்பி செய்தால் போதுமானது. இணைய இணைப்பு வசதி செல்லில் செயல்படுத்தி இருந்தால்  அதில் இருந்தே தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும்.  நிறுவிய பின்னர் பயன் படுத்த இணைப்பு தேவை இல்லை.
       இதை இயக்கும்போது படத்தில் உள்ளவாறு காட்சி அளிக்கும்.
     கீழ்ப் பகுதியில் உள்ள Options வழியாக நேரமண்டலம்,வசிக்கும் இருப்பிடம் தேர்ந்தெடுக்கலாம். சென்னையாக இருந்தால் 15டிகிரி வட  அட்சத்திலும் 80.15 டிகிரி தீர்க்க ரேகையிலும் அமைந்திருப்பதை காண முடியும். கீழே என்  LG மொபைலில் காட்சி தரும் காம்பசைத் தான் பார்க்கிறீர்கள் .இந்த மொபைலில் கேம்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் சென்று( ஒவ்வொரு செல்லிலும் இது வேறுபடும்) compass இயக்கினால் இது போல தோற்றமளிக்கும். 
    இன்று (19.09.2013)  காலை 5.54 க்கு சூரியன் மற்றும் சந்திரனின் நிலை வானத்தில் இவ்வாறு அமைந்திருக்கிறது. ( படத்தில் சூரியன் மஞ்சள் நிறத்திலும் சந்திரன் வெள்ளை நிறத்திலும் உள்ளது. நிறத்தையும் மாற்றிக் கொள்ள முடியும் ) இதை வைத்துக் கொண்டு திசை எப்படி அறிவது என்கிறீர்களா? இதன் மூலம் திசை அறிய வானில் சூரியன் இருக்க வேண்டும். மொபைலில் காம்பசை  இயக்கி விட்டு வானில் சூரியன் இருக்கும் நிலைக்கு, மொபைலில் சூரியன் படம் பொருந்துமாறு மொபைலை திருப்பிக் கொள்ளவேண்டும். அல்லது நமது நிழலின் திசையில் நிழலோடு பொருந்தும்படி மொபைலைப் பிடித்துக் கொண்டால் மொபைலின் மேற்புறம் வடக்கு திசையைக் குறிக்கும். வானில் சூரியன் இருந்தால் நாங்கள் திசையை எளிதில் கண்டுபிடித்து விடுவோம் என்கிறீர்களா? காலையில் கிட்டத்தட்ட 11 மணிக்கு மேல் ஏறக்குறைய 3 மணி வரை சூரியன் இருந்தாலும் திசையை துல்லியமாக அறிவது புதியவர்களுக்கு கடினமாகவே இருக்கும். 

       நாம் பார்க்கின்ற நேரத்தில் வானத்தில் சூரியன் மற்றும் சந்திரன் எந்த இடத்தில்   இருக்குமோ அது போலவே மொபைல் காம்பசிலும் சூரியன் சந்திரனும் அதே நிலையில் அமைந்திருக்கும்.

    உதாரணமாக இன்று காலை 5.50 மணி அளவில் சூரியனும் சந்திரனும் காம்பசில் இப்படித்தான் இருந்தது.



      மாலையில் சுமார் 6 மணி அளவில் வானில் உள்ளது போலவே சூரியன் சந்திரன் இடம் மாறி இருக்கும். இந்தக் காம்பஸ் நாம் பார்க்கின்ற நேரத்தில் சூரிய சந்திர நிலையை அப்படியே காட்டும்.



    மேலுள்ள படத்தில் சந்திரன் இல்லை. அப்படி என்றால் நம் பார்வைப் பரப்பில் சந்திரன் இல்லை என்று அர்த்தம். ஒவ்வொரு நிலையிலும் சூரியன் சந்திரனின் azimuth, altitude கோணங்கள் மற்றும் பல தகவல்களை இதன்மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. 
    இலவச ஜாவா அப்ளிகேஷனான இதன் சோர்ஸ் கோடையும் டவுன் லோட் செய்து கொள்ளலாம்.( ஜாவா நிரல் பத்தி எல்லாம் எனக்கு தெரியாது.)

    இதை  மூன்று ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறேன். எனக்கு உபயோகமாய்த்தான் இருக்கிறது. 

     *********************************************************************************

    இந்த நாளில் என்ன சிறப்பு ? அறிந்து கொள்ள கிளிக்குங்கள் 
      செப்டம்பர் 22 ஒரு அதிசய நாள்

    சனி, 27 ஜூலை, 2013

    கணினி! நீஒரு டிஜிட்டல் ரஜினி!



                                 கணினி!
                                 நீஒரு
                                 டிஜிட்டல் ரஜினி!
                                 சிறுவரையும் சிறை பிடிக்கிறாய்
                                 நடுவயதினருடனும் நட்பு  கொள்கிறாய்
                                 வயதானவர்களையும்
                                 வசீகரம் செய்கிறாய்.
                                 பெண்களையும்  பிடித்திழுக்கிறாய்
                                 மடிமேலும் அமர்ந்து கொள்கிறாய்
                                 கைக்குள்ளும் அடங்கி விடுகிறாய்
                                 நல்லதையும் காட்டுகிறாய்
                                 பொல்லாததையும் புகட்டுகிறாய்
                                 அந்தரங்கம் அலசுகிறாய்
                                 சொந்தமா  பந்தமா நீ
                                 உறங்கும் நேரம் தவிர
                                 உன்னுடனே இருக்கப்
                                 பிரியப் படுகிறாய் 
                                 "வல்லவன் நான்" எனக்குள்
                                 எல்லாம்  இருக்கிறதென்கிறாய்.
                                 உன்னைத்தாண்டியும் உலகம் இருக்கிறது
                                 அதை புரிந்து கொள்ளாதவரை
                                 நாங்கள் உனக்கு அடிமை-
                                 புரிந்து கொள்ளும் காலம் வரும்
                                 அப்போது நீ எங்களுக்கு அடிமை 

    ****************************************************************************************

    படித்து  விட்டீர்களா?
    என்னை கவுத்திட்டயே சரோசா!-காதல் கடிதம் போட்டி
    எனது முதல் கணினி அனுபவம் 
    மீண்டும் திருவிளையாடல்

    வெள்ளி, 26 ஜூலை, 2013

    என் முதல் கணினி அனுபவம்

    எனது மொக்கைகளின் பிறப்பிடம்
       என்னோட கணினி அனுபவத்தை நீங்கள் எல்லோரும் கேக்கனும்னு தலயில எழுதி இருந்தா சாரி கணிணியில எழுதி இருந்தா அதை யாரால தடுக்க முடியும்.?

       இதுக்கெல்லாம் காரணம் மதுரை தமிழன்தான். போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் மதுரை தமிழனுக்கே! 

       எல்லோர் வீட்லயும் கம்ப்யூட்டர் ஒரு ஆளா வந்து ஒக்காந்துகிட்டு இருக்கு. இது நல்லது பன்னுதா கேட்டது பன்னுதா கெட்டது பண்ணுதான்னு குழப்பமாத்தான் இருக்கு, .இருந்தாலும் அது இல்லாம இருக்க முடியல.

      கொஞ்சம் கொஞ்சமா பள்ளிகள் அலுவலகங்களை கணினி ஆக்ரமித்திருந்த நேரம். நாமளும் கத்துகிட்டு கொஞ்சம் பந்தா காட்டலாமே ன்னு ஒரு ஆசை. CSC இல  Exam எழுதி சலுகை விலையில படிங்கன்னு விளம்பரம் வேற தூண்ட, ஒரு கணினி  யோக கணினி  தினத்தில தேர்வு  எழுதி ரிசல்ட் வந்து உனக்கு 60% சலுகைன்னு சொல்லி 900 ரூபா கட்டி சந்தோஷமா சேர்ந்தேன்.அப்பறம்தான் தெரிஞ்சுது எல்லாரக்குமே 60 % சலுகைன்னு.

       முதல்  நாள் Introduction கிளாஸ். பைனரி நம்பர்,முதல் தலைமுறை ரெண்டாம் தலைமுறைன்னு சார்லஸ் பாபேஜ்.ன்னு எதை எதையோ சொல்லி பே பே ன்னு முழிக்க வைக்க அடுத்த நாள் வரலாமா வேணாமான்னு யோசனை பண்ண வச்சுட்டாங்க!. நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா.... அடிக்கடி அதைமாத்திக்குவேன். நாம வேலைக்கு போறதுக்கா படிக்கிறோம். சும்மாதான. என்ன ஆனாலும் ஆகட்டும்னு கிளாசுக்கு போக ஆரம்பிச்சிட்டேன். முதல்ல மௌஸ் புடிக்க கத்துக்கணும்னு சொல்லி பெயிண்ட் அப்ளிகேஷன திறந்து குடுத்து  இஷ்டத்துக்கு வரைய சொன்னாங்க. மௌஸை புடிச்சிக்கிட்டு கன்னாபின்னான்னு கிறுக்கினேன். ஸ்க்ரீன்ல அந்த தெரிய ரொம்ப சந்தோஷமா இருந்தது. அந்த கிறுக்கலை கிளியர் எரேசர் டூலை எடுத்து பேப்பர்ல  அழிக்க மாதிரி அழிக்க ஆரம்பிச்சேன். நிறைய கிறுக்கி இருந்ததால சீக்கிரம் அழிக்க முடியல . வேகமா மௌஸ நகத்தி அழிச்சேன் அழிச்சேன் அழிச்சு கிட்டே இருந்தேன். சத்தம் கேடு ஓடி வந்தார் ஒருத்தர். மௌச தேச்சிடுவீங்க போலஇருக்கேன்னு கதறினார்.(ஓனருக்கு சொந்தக்காரரா இருப்பாரோ?) எப்படி கிளியர் பண்றதுன்னு கத்து கொடுத்தார்.

       அப்புறம் அப்படியே ஒரு வாரம் பெயின்ட்ல தேசியக் கோடி, மயில் னு கொஞ்சம் சுவாரசியமா போச்சு. ஆனா நானோ எக்சல் வோர்ட், பவர் பாயின்ட் கத்துக்க வந்தேன். கத்துக் குடுத்தவங்கலாம் அங்கேயே இது மாதிரி கோர்ஸ் படிச்சவங்கதான். எல்லாம் அரட்டை அடிக்கறதுலதான் அதிக கவனம் செலுத்தினாங்க. அங்க எப்படி கத்து கொடுப்பங்கன்னா ஒரு கம்ப்யூடர்ல ஒருத்தர் ஒக்காந்துகிட்டு  இப்படி அப்படின்னு சொல்லி வேகமா சொல்லிகிட்டே போவார். சுத்தி பத்து பேர் நின்னு அதை கத்துக்கணும். ஒண்ணுமே புரியாது. அதுதான் Demonstration கிளாசாம். எல்லார்க்கும் ஒரு சிஸ்டத்தை குடுத்து சொல்லி கொடுத்த மாதிரி ஒர்க் பண்ணுங்க சொல்வாங்க. அவங்க சொல்லி கொடுத்தது MS Dos. அதுல கம்மேண்ட்ஸ் அது இதுன்னு குழப்ப இத கத்துகிட்டு என்ன பண்றது புரியல. நாம சின்சியரா தடுமாறி ஸ்டார்ட் பண்ணற நேரத்தில Instructor  வந்து எழுப்பி இன்னொரு சிஸ்டத்துக்கு அனுப்பிடுவார்.திரும்பி முதல்ல இருந்து ஆரம்பிக்கறதுக்குள்ள கிளாஸ் முடிஞ்சிடும். 
      
        கோர்ஸ் முடியற நேரத்தில வோர்ட் எக்சல் ஏதோ அரை குறையா சொல்லி கொடுக்க, ஒண்ணுமே புரியாமலேயே கோர்ஸ் முடிஞ்சிபோச்சு. அப்புறம் எக்ஸாம் எழுதனும்னு வேற சொன்னாங்க. எக்ஸாம் பாஸ் பண்ணா Certificate தருவாங்கலாம். ஒண்ணுமே தெரியாம என்னத்த எக்ஸாம் எழுத? அதோட CSC க்கு டாடா காட்டிட்டு வந்துட்டேன்.

        கொஞ்ச நாளைக்கு கம்ப்யூட்டர் ஆசைய மூட்டை கட்டி வச்சிட்டேன். திடீர்னு நான்  வேல செஞ்ச ஸ்கூலுக்கு பழைய கம்ப்யுயூட்டர் ஒண்ணு ஓசியில வந்தது. ஒண்ணும் தெரியலன்னாலும் அங்க இங்க படிச்சத வச்சு கம்ப்யூட்டர் பத்தி அப்பப்ப பேசுவேன். அதை பாத்து கம்ப்யூட்டர்ல நான் ஒரு அப்பாடக்கர்னு தப்பா நினச்சிட்டாங்க.அதுவரை கம்ப்யூட்டர் இல்லாததால நம்ம வண்டவாளம் தண்டவாளம் ஏறாம இருந்தது. இப்போ கம்ப்யூட்டர் வந்ததுக்கு அப்புறம் எல்லோம் ஒண்ணுகூடி கம்ப்யூட்டர்ல எதாச்சும் செய்து காட்ட சொல்லி நச்சரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்பாடக்கர் இமேஜ் டப்பா டக்கர் ஆகிடுமேன்னு கவலையாயிடுச்சு. என்ன பண்றதுன்னு தெரியாம முழுச்சிகிட்டிருந்தேன் .நல்ல காலம் பவர் கார்டு ரூபத்தில பகவன் ஹெல்ப் பண்ணார். அதாவது பவர் கார்டோட பின் ஒடஞ்சு போயிடுச்சு. அதை மாத்தினாத்தான் கம்ப்யுட்டர் வேலை செய்யும். அதை வாங்கனும்னு சொல்லி ஒரு பத்து நாள் ஓட்டினேன். அப்புறம் எர்த் சரியில்லன்னு சொல்லை கொஞ்ச நாள் தள்ளினேன். எக்சாம்லாம் முடியட்டும்னு ஒரு சாக்கு சொன்னேன். இப்படி சாக்கு போக்கு சொல்லி ஒருமாதத்துக்கு மேல ஆயிடுச்சு. 

        இதுக்குள்ள சனி ஞாயிறு, விடுமுறை வேற வேலை இருக்குன்னு சொல்லி ஸ்கூலுக்கு படை எடுத்து நாள் முழுதும் நான் மட்டுமே ஒக்காந்து  தட்டுத் தடுமாறி டெஸ்க் டாப் பிக்சர் மாத்தறது, விதம் விதமா ஸ்க்ரீன் சேவேர் செட் பண்றது வோர்ட்ல ஏதாவது  டைப் அடிச்சு சேவ் பண்றதுன்னு கத்துக்கிட்டேன். அப்பப்பா. இமேஜ் மெயின்டைன் பண்றது எவ்வளோ கஷ்டம்!
    .
          ஒரு நாள் திங்கக் கிழமை முதல்ல போய் கம்ப்யூட்டரை ஆன்பண்ணி Welcome ஸ்க்ரீன் சேவரை ஓட விட்டேன். எல்லாரும் பாத்து சந்தோஷமாயிட்டாங்க. அப்புறம் என்ன?  அப்படியே கொஞ்ச நாள் ஓட, இதுல தமிழ்வர்ற மாதிரி பண்ணுங்கன்னு ஆர்டர் போட்டுட்டாட்டாங்க. அப்பா தமிழ் ஃபான்ட்  பத்தி எல்லாம் தெரியாது. அந்த கம்ப்யூடர்ல பிளாப்பி டிரைவ் மட்டுமே இருந்தது.(ஓசியில குடுத்தவங்க சிடி டிரைவ்  கழட்டிகிட்டு குடுத்தாங்க போல இருக்கு )
    அப்ப நெய்வேலியில் இருந்த எங்க அண்ணன் கம்ப்யூட்டர் வச்சிருந்தார். 'குறள்' Software Install பண்ணா தமிழ்ல டைப் அடிக்கலாம்னார் மென்பொருளோட சைஸ்  1.5 MB க்கும் மேல அதனோட சைஸ் இருந்ததால Floppyயில காப்பி பண்ண முடியல. ஏதோ ஒரு பைல் ஸ்பிளிட்டரை யூஸ் பண்ணி மூணு Floppy ல ஸ்பிளிட்டிங் சாப்ட்வேரையும் காபி எடுத்து கொடுத்தார். அதைக் கொண்டு போய் கணினியில் இன்ஸ்டால் செய்து தனித் தனி பைல ஒண்ணா சேக்க படாத பாடு பட்டேன். எப்படி பண்ணியும் வரல. ஒரு பிரவுசிங் சென்டருக்கு போய் எப்படி பண்றதுன்னு கேட்டேன். அவன் பண்ணிட்டான். ஆனா எப்படி பண்றதுன்னு சொல்லத் தெரியல. எப்படியோ பலமுறை முயற்சி செஞ்சு "குறள்" மென்பொருளை இன்ஸ்டால் செஞ்சுட்டேன். அப்புறந்தான் தெரிஞ்சுது ஈசியான தமிழ் எழுத்துருக்கள் நிறைய  இருக்குன்னு. பாமினி,சன் fonts ஒரு இன்டர்நெட் சென்டர்ல காப்பி பண்ணி கொடுக்க வோர்ட் எக்சல்லில் தமிழ் பயன்படுத்தவும் கொஞ்சம் கொஞ்சமா கத்துகிட்டேன்.அப்புறம் பவர் பாயிண்டல  பிரசண்டேஷன் அனிமேஷனோட பண்ணவும் நானே தெரிஞ்சிக்கிட்டேன்.
      ஆர்வம்  மேலும் அதிகமாக ஆரம்பிச்சது.தினமலர்ல கம்ப்யூட்டர் மலர் வரும் அதை தவறாம படிப்பேன், அப்புறம் கம்ப்யூட்டர் உலகம்னு ஒரு பத்திரிக்கை சிடியோட விப்பாங்க. அந்த சிடிக்காகவே வாங்கினேன். இன்னொரு கணினி பத்திரிக்கை தமிழ் கம்ப்யுட்டரும் எனக்கு அறிமுகம் ஆச்சு. தமிழ் கம்ப்யூட்டர் கணினி கத்துக்கறவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும். அதன் மூலம் , மென்பொருளை, வன்பொருட்கள்,இணையம்  ஏரளமான விஷயங்களை தெரிஞ்சுக்க முடிஞ்சுது. இப்பவும் இந்த புத்தகத்தை வாங்கிட்டுதான் இருக்கேன்.

       இதை எல்லாம் டெஸ்ட் பண்ணி பாக்க கம்ப்யூட்டர் ஒண்ணு சொந்தமா இருந்தா நல்லா இருக்கும்னு நினச்சு ஒருபழைய கம்ப்யுடரை 5000 ரூபா கொடுத்து வாங்கினேன். அப்புறந்தான் தெரிஞ்சுது, அதனோட ஒரத் 3000 கூட இல்லன்னு. அதுல பல ஸ்பேர்களை வாங்கி இனைச்சேன். 

      கொஞ்சம் தெரிஞ்சிக்கறதுக்கும் நிறைய பந்தா காட்டறதுக்கும் COMPUTER ACTIVE, DIGIT,PC FRIEND போன்ற ஆங்கில இதழ்கள் உதவி செஞ்சுது. நான் CPU வை பெரும்பாலும் ஒப்பன் பண்ணியே வச்சிருப்பேன். இதனால உள்ள இருக்கிற பாகங்களை பத்தி தெரிஞ்சுக்க முடிஞ்சது. பார்ட்சை கழட்டறதும் மாற்றதுமா  எங்கிட்ட படாத பட்டுது. அப்பப்ப ரிப்பேர் ஆக ஒவ்வொரு முறையும் சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட 200, 300 ன்னு செலவானதால முடிஞ்சவரை அதையெல்லாம் நானே செய்யறதுன்னு முடிவு பண்ணிட்டேன். 

        ஹார்ட்  டிஸ்க், சி,டி டிரைவ்  O,S இதனால வர சின்ன சின்ன சிக்கல்களை என்னால தட்டுத் தடுமாறி சரிசெஞ்சுக்க முடிஞ்சுது
    போட்டோ  ஷாப்,விசுவல் பேசிக்,HTML, ஜாவா, சி இதெல்லாம் கத்துக்கணும்னு ஆசை. இதெல்லாம் நான் செய்கிற பணிக்கு நேரிடையா உதவப் போறதில்லங்கறதால அதையெல்லாம் விட்டுட்டேன்.

        இன்டர்நெட் வசதி இல்லாததாலே பிரவுசிங் சென்டருக்கு போய் பிரவுஸ் பண்ணி நிறைய விஷயங்கள் கத்துக்க முடிஞ்சுது, ஆனா அதிகமா செலவு ஆச்சு. அதனால நெட் Connection வாங்க முடிவு செஞ்சேன்.
        பி.எஸ்.என்.எல் ACCOUNT LESS INTERNET CONNECTION, ஹாத்வே  கனெக்சன்  கடைசியா இப்ப பி.எஸ்.என்.எல் பிராண்ட் பேன்ட் இணைப்பு கொடுத்திருக்கேன்.ஆரம்பத்தில limited பிளான் ல தான் இருந்தேன். சமீபத்தில்தான் Unlimited க்கு மாறினேன். தொடங்கற[ப்ப இணைய இணைப்பை அரசாணைகள் பாக்கறதுக்கு மட்டும்தான் பயன்பபடுத்தினேன். போகப் போக Net banking, EB Bill payment, Train Ticket resaervation ன்னு விரிவடஞ்சிகிட்டே போச்சு.

       தமிழ் வலைப் பக்கங்கள் நிறைய இருக்கும்னு நான் நினச்சிக் கூட பாக்கல. நானும் ஒரு வலைப்பூ ஆரம்பிச்சேன். மூணு பதிவு போட்டேன். யாரும் படிக்காததால அதை அப்படியே விட்டுட்டேன். அப்புறம் . ஒரு வருஷம் கழிச்சி 2011 அக்டோபர்ல திரும்பவும் எழுத ஆரம்பிச்சேன். திரட்டிகள்ள பதிவை இணைக்க படாத பட்டேன்.
      நண்பர்களுடைய  வலைப் பதிவுகள்ல  இருந்து நிறைய விஷயங்களை கத்துக்க முடிஞ்சுது. எப்படியோ சமாளிச்சு இன்னைக்கு வர ஓட்டிக்கிட்டு இருக்கேன். அதுக்கெல்லாம் காரணம் எப்படி எழுதினாலும் ஆதரவளிக்கிற உங்களோட பெரிய மனசுதான் 

       கணினியைப் பாக்கும்போதேல்லாம் 'கற்றது கடுகளவு, இன்னும் இருப்பது கணினி அளவு' ன்னு அது சொல்ற மாதிரியே இருக்கு.

    ******************************************************************************************
    கொசுறு: நண்பர் சுரேஷ் கூட கணினி அனுபவத்துக்கு பரிந்துரை செய்திருக்கிறார். அவருக்கு எனது நன்றி.
    நானும்  அஞ்சு பேரை கணினி அனுபவம் பற்றி எழுத பரிந்துரைக்கலாம்னு தேடிக்கிட்டிருக்கேன். ஏற்கனவே எனக்கு தெரிஞ்ச நிறையப் பேர் புக் ஆயிட்டாங்க. யாராவது சிக்கமலா போயிடுவாங்க!

    ரெண்டு பேர் சிக்கிட்டாங்க 
    உங்கள் முதல் கணினி அனுபவங்களை எழுதும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    1. பரிதி முத்துராசன்
    2. கரந்தை S.ஜெயகுமார்


    வியாழன், 25 ஜூலை, 2013

    மீண்டும் திருவிளையாடல்



                    மீண்டும் போட்டி  வைத்தார் 
                    சிவபெருமான் 
                    உலகை சுற்றிவர 

                    அம்மை அப்பனை சுற்றி வரும் 
                    அழுகுணி ஆட்டம் கூடாது 
                    அழுத்தி சொன்னார் முருகன் 

                     சம்மதித்தார்  சிவபெருமான்.

                     இம்முறை   தோற்கக்  கூடாது;
                     முடிவுடன் விமானம் ஏறி விரைந்தார்
                     வேலன் .

                      மவுசுடனேயே இருக்கும்
                      புத்திசாலிப் பிள்ளையார் 
                      கணினி முன் அமர்ந்தார்
                      சொடுக்கினார் மவுசை
                      அழைத்தார் கூகுளை
                      வலம் வந்தார் பூமியை 
                      நொடியிலே முடிந்தது
                      பழம்  கிடைத்தது 
                      கணினி கைகொடுத்தது 

                      மீண்டும் திருவிளையாடல் 

    *********************************************************

    எச்சரிக்கை:எனது கணினி அனுபவம் இன்று மாலை அல்லது நாளை 

    வெள்ளி, 12 ஜூலை, 2013

    லேசா பொறாமைப் படலாம் வாங்க!


      
    வீட்டில் திட்டு வாங்கிக் கொண்டு வெட்டியாக  பதிவு எழுதுபவரா நீங்கள்? வாங்க இவங்களை பாத்து கொஞ்சம் பொறாமைப் படலாம்.
    கூகிள் பதிவு எழுதுபவர்கள் சம்பாதிப்பதற்கு ஆட்சென்ஸ் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட வலைப்பூக்களுக்கு கூகிள் விளம்பரங்களை வழங்குகிறது. அதன் மூலம் கணிசமான வருமானம் பெறுபவர்கள் உண்டு. ஆனால் தமிழில் எழுதுபவர்களுக்கு இந்த விளம்பரங்களை கூகிள் தருவதில்லை. தமிழில் எழுதுபவர் சிலரும் எப்படியோ கூகிள் ஆட்சென்ஸ் மூலம் விளம்பரம் பெறுவதை பார்க்க முடிகிறது. இவர்களுக்கு எந்தஅளவுக்கு வருமானம் கிடைக்கறது என்று தெரியவில்லை
     
       சமீபத்தில் ஆட்சென்ஸ்  மூலம் அதிகமாக சம்பாதிக்கும்  முதல் 10 இந்திய பதிவர்களைப் பற்றி அறிய நேர்ந்ததது. இதோ அந்த விவரம்.இவர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் எழுதுபவர்கள்
    பெருமூச்சு விட்டுட்டும் படிக்கலாம் படிச்சிட்டும் பெருமூச்சு விடலாம்.


    முதல் இடத்தில் இருப்பவர் அமீத் அகர்வால்.இவரது வலைப பூவின் பெயர் digital insipration; வலைபூ முகவரி www.lebnol.org.  I.I.T இல படித்த பொறியியல் பட்டதாரியான கணினி தொழில் நுட்பப் பற்றி எழுதிவரும் இவர் இந்தியாவின் முதல் முழுநேர தொழில்முறைப் பதிவராம்.இவரது சராசரி வருமானம் $40000. வருடத்திற்கு அல்ல மாதத்திற்கு.




     
    2 வது இடம் அமித்பவானி  amitbhawani tech blog என்ற வலைபூ இவருடையது. வலைபூ முகவரி amitbhawani.com/blog கணினி தொழில் நுட்பம், பற்றியே  எழுதுகிறார். இவரது வருமானம்  $20000..இவரது வலைப் பூ எளிமையானவடி வமைப்பில் உள்ளது.




     
    3. Shout Me Loud என்ற வலைப்பூவின் உரிமையாளர்  ஹர்ஷ் அகர்வால் .ஒரு மென்பொருள் பொறியாளர் .முன்னணி கணினி தொழில் நுட்ப நிறுவனமான அக்செஞ்சர் நிறுவனத்தில் கிடைத்த வேலையை ஒதுக்கி விட்டு முழு நேர வலைப் பூ எழுதுபவராக மாறினார்.அவர் குடும்பத்தினர் இதை எளிதில் ஏற்றுக் கொள்ளவில்லையாம்..இன்று மாதம் 15000$  வருமானம்  ஈட்டுகிறார். முகவரி http://www.shoutmeloud.com/




    4.மாதம் 11000$ ஈட்டும் ஜஸ்பால் சிங் http://savedelete.com/ என்ற ப்ளாக் நடத்துகிறார். பெயருக்கேற்ற வகையில் கணினி குறிப்புகள் இவரது வலைப்பூவில் நிறைந்து காணப்படுகிறது.இவரும் மற்றவர்களைப் போலவே பொறியியல் பட்டதாரிதான். ஆனால் மெக்கானிக்கல் படித்தவர்.கணினியின் மீது தீராத  காதல் கொண்ட இவர் தூங்குபோது கூட மடிக் கணினி யுடன்தான் தூங்குவாராம்


    5. கணினி அல்லாத துறையில் எழுதுபவர்களில்  முன்னணியில் இருக்கும் பிளாக்கர்  அருண் பிரசாத் தேசாய். பிசினஸ், மார்கெட்டிங் ட்ரெண்ட் பற்றிய செய்திகள் இவரது  trak.in வலைப்பூவில் அதிக அளவில் இடம்பெற்றிருக்கின்றன .இவரது மாத வருமானம் 10000$ களாம். IT பொறியாளராக இருந்த போதும் பிசினஸ் தான் இவரை கவர்ந்திருக்கிறது.

     
    6. நிர்மல் பாலச்சந்திரன்: கணினி செல்போன் நுட்பங்கள்  பற்றி எழுதி முன்னிலையில் இருக்கும்  பதிவர் கொச்சியை சேர்ந்த இவர் சிவில் இஞ்சினியர்.முன்னணி ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றிய இவர்    அதனை துறந்து 24 மணி நேர வலைப பதிவர் ஆனார்.இவரது வலைபூ http://www.nirmaltv.comநிர்மல் டிவி.காம் இன் மாத வருமானம் 9000$ 

     
    7.  blogsolute.com ஐ தொடங்கி கணினி தொடர்பான செய்திகளை எழுதி வரும் ரோஹித் லாங்டே ஒரு மெக்கானிக்கல் இஞ்சினியர் .இவர் ஈட்டும் டாலர் வருமானம் 8500.கணினி சிக்கல்களுக்கு தீர்வு சொல்லும் இவர் இணையம் கணினி தொடர்பான சொற்பொழிவுகளும் ஆற்றுகிராரம் .

     
     
     8. ராகுல் பன்சால் :இவரது வலைபூ Devil Workshopகணினி கைபேசி சார்ந்தே இவரது பதிவுகளும் அமைந்திருக்கின்றன . இவரது பொருளீட்டல் மாதந்தோறும் 7000 $.



     
    9. இன்னும் ஒரு முன்னணி கணினி, வலைபதிவுகள்  சார்ந்து வலைபதிவர் ஹனிசிங் .இவரது வலைப்திவின் பெயர்  Honeytechblog.com.  வருமானம்  6000$ மாதந்தோறும் அட்சென்ஸ் மூலமாக சம்பாதித்து வருகிறார்

     .
     
    10. இந்த வரிசையில் இடம் பெற்றுள்ள  தமிழ்நாட்டை சேர்ந்த  ஸ்ரீனிவாசின் வலைபூ 9lessons. முகவரி http://www.9lessons.info/. கணினி மொழிகள் நிரல்கள், தொடர்பாகவே எழுதும் இவரது வருவாய் மாதம்  5000$ . சென்னையில் வசிக்கும் இவர் DR. MGR பல்கலைக் கழகத்தில் படித்த மென்பொறியாளர்


      இவர்களைத் தவிர முன்னிலையில்  இருக்கும் இன்னும் பலரும் உண்டு.

           இவர்களைப் பற்றிய விவரங்களில் இருந்து சில விஷயங்களை  புரிந்து கொள்ளலாம். பெரும்பாலும் கணினி தொடர்பான தகவல்களை  ஆலோசனைகளை பற்றி எழுதுபவர்கள் தான் பிளாக்கில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். அதுவும் ஆங்கிலத்தில் எழுதினால் மட்டுமே உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற முடியும் என்ற நிலையே தற்போது உள்ளது. இந்த நிலை ஒருநாள் மாறக் கூடும் 

       இவர்கள் யாரும் ஒரே நாளில் இந்த நிலையை அடைந்து விடவில்லை. Adsense  மூலம் வருமானம் ஈட்டுவதற்கு கடின உழைப்பும் உடனடி மேம்படுத்திக் கொள்ளுதலும் அவசியம் என்பதை இவர்களது பதிவுகள் உணர்த்துகின்றன. 
        கூகுளின் adsense அங்கீகாரம் பெற்ற மொழிகளில் தமிழ் இல்லை.  இந்தி மொழிக்கும் Adsense அப்ரூவல்  கிடைக்கவில்லை. இணையத் தொடர்பான முன்னேற்றம் இந்தியாவில் இன்னும் வளர வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது.

       அதீதமான நம்பிக்கையும்  உள்ளார்ந்த ஈடுபாடும், திட்டமிட்ட செயல்பாடும்   ஆழ்ந்த அறிவும் உடையவர்கள் எப்போதுமே வெற்றி பெறுகிறார்கள்.


    நன்றி : தமிழ் கம்ப்யூட்டர் இதழ்  மற்றும் பல்வேறு இணைய  தளங்கள்

    *********************************************************************************
    எச்சரிக்கை: 1
    பல்லு  இருக்கறவன் பக்கோடாவுக்கு ஆசைப்படலாம் பல்லு இல்லாதவன் "பன்"னோட நிறுத்திக்கணும்

    எச்சரிக்கை  2 :  இந்தப் பதிவை அவங்கங்க பெட்டர் ஹாப் கிட்ட(ஏன் Best Half ன்னு சொல்ல மாட்டேங்கிறாங்க?) காட்டக்கூடிய தைரியமும் தன்னம்பிக்கையும் இருந்தால்  (அடி வாங்கினாலும் வெளிய சொல்லாத) காட்டலாம்

    எச்சரிக்கை 3
    இந்த top 10 வரிசையை பலர் பலவிதமாக வெளியிட்டுள்ளனர். இது எந்த அளவுக்கு உண்மை என்று உறுதிப் படுத்தப் படவில்லை,


    *************************************************************************************** 

    எழுத்துக்கள்  சிறியதாக காட்சி அளித்தால் தெரிவிக்கவும்