என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 30 ஏப்ரல், 2020

அன்றாட வாழ்வில் நகைச்சுவை-நான் ரொம்ப நல்லவன் சார்


தமிழ்ச்சரம் சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டிக்கான எழுதியது-இரண்டாம் பரிசும் பெற்றுவிட்டது
நான் ரொம்ப நல்லவன் சார்

    சார்! என்ன எல்லாரும் ரொம்ப நல்லவன்னு சொல்றாங்க. அப்படித்தான் எல்லார் கிட்டயும் பேர் வாங்கி இருக்கேன். அதுல என்ன கஷ்டம்னு கேக்கறீங்களா! அன்றாட வாழ்க்கையில நல்லவனா இருக்கறது. எவ்வளவு கஷ்டம்னு உங்களுக்குத் தெரியாது. சொன்னா சிரிப்பீங்க.
    வடிவேலுவோட பிரபலமான காமெடி ஒண்ணு எல்லோருக்கும் தெரியும்.  ஒரு படத்தில அவரை நல்லா அடிச்சி அனுப்புவாங்க.  அப்ப ஒருத்தி கேப்பா,  இவ்வளோ அடிச்சி அனுப்பி இருக்காங்களே,. நீங்க திருப்பி அடிக்கக் கூடாதான்னு கேட்க” “நானும் அடிக்கலாம்னுதான் நினச்சேன்; அப்ப ஒருத்தன் சொன்னான். இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான்டா ரொம்ப நல்லவன்டான்னு” என்று வடிவேலு சொல்வதைப் பார்த்து நாம் சிரிப்போம். அது உண்மைதான். மத்தவங்க நல்லவன்னு சொல்றதுக்காக நாம நம்மையே  மாத்திக்கறோம். அடிக்கடி இப்படி யாராவது சொல்லிக்கிட்டே இருக்கறது நம்ம மனசுல பதிஞ்சு போகுது
     எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே நான் ரொம்ப நல்லவன் சார். சின்னவயசுல. இருந்தே என்னை அப்படி வளத்துட்டாங்க. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.நான் குழந்தையா இருகும்போது, எங்கம்மா ஒரு நாள் ஹால்ல அரிசியை முறத்தில வச்சுட்டு துணி துவைக்க போய்ட்டாங்க. போறதுக்கு முன்னாடி "நீ ரொம்ப சமத்தாம். ரொம்ப ரொம்ப நல்ல பையனாம்.  அரிசிய இறைக்காம  விளையாடனும்"னு சொல்லிட்டு போனாங்க. அம்மா நல்லவன்னு சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது,  ஆனா அரிசிய கையில எடுத்து ஹால் பூரா இறைச்சு  விளையாடனும்னு ஆசையா இருந்தது.  என்ன பண்றது என்ன நல்லவன்னு சொல்லிட்டாங்களே! என் ஆசைய அடக்கிக்கிட்டேன்.  
  ஒரு முறை ஒடம்பு சரியில்லன்னு டாக்டர்கிட்ட எங்கம்மா அழைச்சிக்கிட்டு  போனாங்க. வெளிய டாக்டர பாக்கறதுக்காக காத்திருந்தோம். உள்ள ஒரு  பையன் ஓ..ன்னு அலறி அழுதுக்கிட்டிருக்கிற சத்தம் கேட்டது. கண்ண மூடிக்கோ வலிக்காம டாக்டர் ஊசி போடுவார்னு” ஒருத்தர் சொல்ல , ஆனாலும் அந்தப் பையன் கேக்கல. வெளிய வந்த நர்சு என்னப் பாத்துட்டு டக்குன்னு உள்ள கூட்டிட்டுப் போனாங்க. உள்ள டாக்டர் கையில் ஊசியோட நின்னுக்கிட்டிருந்தார்.  எனக்கு பயமா இருந்தது . வெளிய ஓடலாம்னா நர்சு என்ன கெட்டியா புடிச்சிக்கிட்டிருந்தாங்க. டாக்டர் என்னைக் காட்டி சொன்னார், "இதோ பாரு இந்தப் பையனுக்கும் நான் ஊசி போடப்போறேன். அந்தப் பையன் அழமாட்டான். அடம் புடிக்க மாட்டான் சிரிச்சிக்கிட்டே ஊசி போட்டுக்குவான். ரொம்ப நல்ல பையனாம், இல்லடா கண்ணா!” என்று சொல்ல நானும் மனசுக்குள்ள ரொம்ப பயமா இருந்தாலும் ஆமான்னு” தலையாட்டினேன்.  அப்புறம் எங்கம்மாவைக் கூப்பிட்டு எனக்கு என்ன ஒடம்புன்னு கேட்டு ஒரு  ஊசிய எடுத்து அந்தப் பையன் முன்னாடியே எனக்குப் போட,  ஏற்கனவே சொன்ன மாதிரி நானும் பல்ல கடிச்சிக்கிட்டு அமைதியா பொறுத்துக்கிட்டேன். அதைப் பாத்துக்கிட்டிருந்த அந்தப் பையனும் ஊசி போட்டுக்கிட்டான். எல்லாம் எதுக்காக? நல்லவன்னு சொன்ன அந்த வார்த்தைக்குத்தானே!
          எங்கப்பாவோட  ஃபிரண்டு ஒரு நாள் வந்தார் . பொறந்த நாளுக்கு ஒரு பொம்மைய வாங்கி எனக்கு பிரசன்ட் பண்ணார். அந்த பொம்ம எனக்கு பிடிக்கவே இல்லை. கீழ போட்டு உடைக்கலாம்னு நினைச்சேன். அப்பா அவர் எங்கப்பாகிட்ட சொன்னாரு "உங்க பையன் ரொம்ப நல்ல பையன்னு என் வைஃப் அடிக்கடி சொல்வா! என் பையன் இருக்கானே ரொம்ப மோசம் எந்த பொருளைக் கொடுத்தாலும் உடனே உடைச்சிடுவான்"
  அவர் அப்படி சொன்னதும் நான் என்ன சார் பண்ண முடியும்? பொம்மைய தூக்கி போட்டு உடைக்கும் ஆசைய தூக்கி போட்டுட்டேன். புத்தகத்தை கிழிக்கனும் தண்ணியகொட்டணும், குளிக்கறதுக்கு அடம் பிடிக்கணும், ஓ ன்னு கத்தணும் இப்படி எல்லாம் செய்யணும்னுதான் நினைப்பேன்... ஊஹூம்
   எனக்கு ஒரு தங்கை உண்டு  சார். அவளை நைசா கிள்ளனும், முதுகில ஓங்கி அறையனும். அவ அழறத பாத்து சிரிக்கணும் நினைப்பேன். எங்க சார் அதெல்லாம் முடிஞ்சுது.? அக்கம் பக்கத்து வீட்டில இருக்கறவங்க எல்லாம் அவங்க பசங்க ஒருத்தருக்கொருத்தர் சண்டை போடறதா எங்க அம்மாக்கிட்ட சொல்வாங்க. உங்க பசங்க பரவாயில்லையே ஒத்துமையா இருக்காங்களேன்னு பாராட்டுவாங்க. அதுவும் உன் பையன் இருக்கானே அவன் சமத்தோ சமத்துன்னு சொல்வாங்க. அதுக்காகவே சண்டை போடறதில்லை சார்.
  வீட்டிலதான் இப்படின்னா ஸ்கூல்லயும் அப்படித்தான்.  நல்லவன்னா என்ன நெத்தியில எழுதி ஒட்டியா வச்சுருக்கும்? எங்க மிஸ்கூட அப்படித்தான் சொல்வாங்க. ஒரு நாள் ஒரு பையன் இன்னொரு பையனை கெட்ட வார்த்தை சொல்லி திட்டிட்டான். உடனே மிஸ்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிட்டான். உடனே மிஸ் என்னைக் காமிச்சி இவன் என்னைக்காவது கெட்ட வார்த்தை பேசி இருக்கானா? அவனை மாதிரி நீங்களும் எப்பவும் கெட்ட வார்த்தை பேசக்கூடாது என்று சொல்ல . சில சமயங்கள்ல கெட்ட வார்த்தை வாய் வரை வந்துட்டாலும் அடக்கிக்குவேன்.  இன்னைக்கு வரை திட்டறது கூட மரியாதையாத்தான் திட்டுவேன்
    இன்னொரு நாள் கிளாஸ்ல எல்லோருக்கும் டிக்டேஷன் குடுத்தாங்க. அதுல சிலதுல்லாம் எனக்கு தெரியல. சரி முன்னாடி இருக்கவன பாத்து எழுத எட்டிப் பாக்கலாம்னு நினச்சேன்.  இன்னொரு பையன் அவனுக்கு முன்னாடி இருந்த பையனை பாத்து எழுதிக்கிட்டிருந்தான், அதை பாத்துட்ட மிஸ் அவன் காதைத் திருகி அவன் கிட்ட என்னைக் கைய நீட்டி  காமிச்சி, "அவனைப்  பாரு! அவனுக்கு தெரியலன்னாகூட காப்பி அடிக்க மாட்டான். அவன மாதிரி நல்ல பையனா இருக்கணும்"னு  சொன்னதுக்கப்புறம் காப்பி அடிக்க மனசு வரல சார் எனக்கு. 
   பெரியவங்க இருக்கட்டும் என்கூட படிக்கிற  பிரண்ட்சுங்க கிட்ட கூட எனக்கு நல்ல பேருதான் சார். நாங்கெல்லாம் கிரிக்கெட் மேட்ச் விளையாடுவோம். எதிர் டீம் பசங்ககூட என் நேர்மைய பாராட்டுவாங்க சார். பேட்ல லேசா பட்டு கேட்ச் புடிப்பாங்க. அது அவங்களுக்கே தெரியாது.  அவுட் கொடுக்காமலே நானே வெளிய போய்டுவேன். இந்த மாதிரி மேட்சுல பேட்டிங் டீம்ல ஒருத்தர அம்பயரா நிப்பாங்க. யாரா இருந்தாலும் ரன் அவுட், ஸ்டம்பிங் , ஒத்தக்க மாட்டாங்க. நான் மட்டும் கரெக்டா அவுட் குடுத்துடுவேன். ஆப்பனன்ட் டீம்காரங்க நான்தான் அம்பயரா இருக்கணும்னு ஒத்தக்கால்ல நிப்பாங்கன்னா பாத்துக்கோங்களேன்.
  காலேஜ் போற காலம் வந்துச்சு சார். என்கூட படிக்கிற பசங்க எல்லாம் ஜாலியா பொண்ணுங்க கூட அரட்டை அடிப்பாங்க. கிண்டல் பண்ணி விளையாடுவானுங்க.  லேடீஸ் காலேஜ் வாசல்ல சைட் அடிக்க போவாங்க. நான் ரொம்ப நல்லவனாம். என்னை கூப்பிட்டுக்கிட்டுப் போக மாட்டாங்க. எனக்கும் ஆசையாத்தான் இருக்கும் ஆனா  அவங்கள மாதிரி என்னால இருக்க  முடியாது.
   அடிக்கடி கட் அடிச்சிட்டு பரங்கிமலை ஜோதியில சினிமா பாப்பானுங்க. அடுத்த நாள் அந்த சினிமாவைப் பத்தி பொண்ணுங்களோட பேசிக்கிட்டிருப்பாங்க. நான் பக்கத்தில போகும்போது நிறுத்திட்டு வேற மேட்டர் பேச ஆரம்பிச்சுடுவாங்க. ஆனாலும் இந்த பொண்ணுங்க ரொம்ப மோசம் சார். எங்கிட்ட பேசும்போது மட்டும் பாடத்தைப்பத்தி மட்டும்தான் பேசுவாங்க. நான் ரொம்ப நல்லவனாம் கன்னாபின்னான்னு பேச மாட்டேனாம். எப்படி இருக்கு பாருங்க சார். காலேஜ் லைஃப் இப்படியே முடிஞ்சு போச்சு .
   அப்புறம் வேலை கிடைச்சது. அங்கயும் இதே கதைதான். நான் திறமையானவனாம் ரொம்ப பொறுமையானவனாம். எந்த வேலையா இருந்தாலும் முடியாதுன்னு சொல்ல மாட்டேனாம். என்கூடவேலை செய்யறவங்களும் அப்படித்தான் சொன்னாங்க. ‘சாருக்கு மட்டும் எப்படி கோவம் வராம இருக்குன்னு கேப்பாங்க’. அப்புறம் எனக்கு எப்படி சார் கோவம் வரும்?
   கல்யாணமாச்சு  சார் எனக்கு. மாமியார் வீட்டில எனக்கு ரொம்ப நல்ல பேரு. ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளுவாங்க. . என்ன சார் பண்றது. நல்லவனா இருந்துதானே ஆகணும். அப்புறம் என் மனைவிக்கும் என்மேல நல்ல அபிப்ராயம்னா பாத்துக்கோங்களேன். நம்ப முடியல இல்ல? நம்பறதெல்லாம் நடக்காததும், நம்பாததெல்லாம் நடக்கறதும்தனே வாழ்க்கை !
    ஒரு நாள் நான் கம்ப்யூட்டர்ல ஒக்காந்து ஏதோ பண்ணிக்கிட்டிருந்தேன். என் மனைவியும் அவங்க பிரண்டும் ஹால்ல  ஒக்காந்து பேசிக்கிட்டிருந்தாங்க. "எங்க ரொம்ப நாளா காணோமேன்னு' என் மனைவி கேட்க, 'அதை ஏன் கேக்கற. எங்க வெளியில வரமுடியுது. காலையில இருந்து  ராத்திரி வரை வீட்டு வேலை சரியா இருக்கு. எங்க வீட்டில எல்லோருக்கும் நாக்கு ஒரு மொழம் நீளம். விதம் விதமா சமைக்கறதுக்கே நேரம் சரியா இருக்கு. யாரும் துரும்பைக் கூட கிள்ளிப் போடமாட்டாங்க. ஆனா அது சரியில்ல இது சரியில்லன்னு குறை மட்டும் சொல்வாங்க . உங்க வீட்டுக்காரர் மாதிரி இருந்தா பரவாயில்லையே. எப்பவும் அமைதியா இருக்கார். ரோட்டில போகும்போது கூட இந்தப் பக்கம் அந்தப் பக்கம் பாக்கமாட்டார்?" என்று புகழ  
 ஆமாம். எங்க வீட்டுக்காரர் நல்லவர்தான். நான் எப்படி சமச்சு போட்டாலும் குத்தம் சொல்லவே மாட்டார். உப்புமா செஞ்சு பொங்கல்னு சொன்னாக் கூட சரின்னு ஒத்துக்குவார். எனக்கு வீட்டு வேலையில ரொம்ப ஹெல்ப் பண்ணலன்னாலும் எப்பவாவது லீவு நாள்ல டீ ல்லாம் போட்டு கொடுப்பார்" னு என் மனைவி சொன்னது என் காதில விழுந்தது.
  அப்புறம் என்ன நடந்திருக்கும்னு  நீங்க நினைக்கிறது சரிதான் சார். ஆமாம் நான் எப்படி சும்மா இருக்க முடியும். உடனே கிச்சனுக்குள்ள நுழைஞ்சு ரெண்டு பேருக்கும் டீ போட்டு எடுத்துட்டுப் போய் குடுத்தேன். 
    இப்படியே காலம் போய்க்கிட்டிருந்தது. ஒரு நாள் ஆபீசில் இருந்து வீட்டுக்கு திரும்பினதும் டேபிள்ல  5 வது படிக்கிற என் பையனோட ரேங்க் கார்டு பாத்தேன். மார்க்கெல்லாம் குறைவா இருந்தது. எனக்கு கோவமா வந்தது. ரெண்டு சாத்து சாத்தனும்.  கையெழுத்து போடக்கூடாதுன்னு முடிவு பண்ணேன். எங்க பையனைக் காணோமேன்னு தேடினேன். வெளிய ரோட்ல அவன் ஃப்ரெண்டு கூட பேசிக்கிட்டிருந்தான் அவன் என் பையனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்  "டேய்! எங்கப்பாகிட்ட  ரேங்க் கார்டு இன்னும் காட்டலடா. நான் வாங்கி இருக்கிற ரேங்க்குக்கு என்ன செம அடி அடிப்பாருடா? கையெழுத்து போடமாட்டார். உங்க அப்பா அடிப்பாரா"ன்னு கேட்டான். என் பையன் சொன்னான், "எங்கப்பா ரொம்ப நல்லவரு. அடிக்க மாட்டாருன்னு”.
   அதை  என் காதில கேட்டுட்டனே சார். அப்புறம் எப்படி நான் அடிக்க முடியும்? இனிமே நல்லா படின்னு கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டேன்.
      இப்பல்லாம் ஃபேஸ்புக், வாட்ஸாப்னு பிளாக்குன்னு  பொழுது போயிடுது. அங்க எவ்வளோ பேர் என்னென்னவோ எழுதறாங்க. நானும் எப்பவாவது எழுதறது உண்டு. ஆரம்பத்தில மத்தவங்க எழுதறதுக்கு  லைக்கும்  ”அருமை”, சூப்பர்” னு கம்மெண்ட் போடறது உண்டு. சாருக்கு நல்ல மனசு. எப்பவுமே எல்லோருக்கும் லைக்கும், பாசிட்டிவ்வாதான் கம்மெண்டும் போடுவாருன்னு ஒரு கருத்து உருவாகிடுச்சு. என்ன பண்றது எனக்குப் பிடிக்காத , என்கருத்துக்கு எதிரானதாக இருந்தாலும்  ஆஹா,ஓஹோன்னு புகழ்ந்து கம்மெண்ட் போடவேண்டியதா போயிடுது என்ன பண்றது.  அப்படி ஒரு இமேஜ் உருவாகிப் போச்சே!
       இன்னும் எவ்வளவோ இருக்கு சார் . எதை சொல்றது/ எதை விடறது?.

   என்ன உசுப்பேத்தி உசுப்பேத்தியே நல்லவனாக்கிட்டாங்க சார்.   இனிமேலும்   நல்லவனா இருக்கவே முடிவு செஞ்சிட்டேன்.  என்ன சார் சொல்லறீங்க?.
----------------------------------------------------------------------------------------------

#tccontest2020-நகைச்சுவைக் கட்டுரை-


உறுதிமொழி

இது என் சொந்தப் படைப்பு என்றும் இந்தப் படைப்பு  இதற்கு முன் மற்ற இதழ்கள், இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் பிரசுரிக்கப்படவில்லை என்றும் உறுதி அளிக்கிறேன்.
                                                                                   --டி.என்.முரளிதரன்

வியாழன், 23 ஏப்ரல், 2020

நான் கிருஷ்ணதேவராயன் வித்தியாசமான சரித்திரக் கதை-ரா.கி.ரங்கராஜன்


     
          சரித்திரக் கதை ஆசிரியர்கள்  என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கல்கியும் சாண்டில்யனும். பிற சரித்திரக் கதை ஆசிரியர்களும் இவர்களைப் பின்பற்றியே இவர்களுடைய பாதிப்பில்தான் சரித்திரக் கதைகள் எழுதினார்கள். ஒரு காலத்தில் சரித்திர தொடர்கதை இடம் பெறாத பத்திரிகைகளே இல்லை எனலாம். சரித்திரக் கதையை வித்தியாசமான தனக்கே உரிய பாணியில் முயற்சித்தவர் சுஜாதா. அதைப் போலவே முற்றிலும் மாறான முயற்சியை  மேற்கொண்டவர் ரா.கி.ரங்கராஜன். இவர் பல்வேறு புனைப் பெயர்களில்  தனித்தனி பாணியில் எழுதிக் கலக்கியவர் என்பதை  பகிர்ந்திருந்தார் முகநூல் மற்றும் வலைப்பூ பிரபலம் நண்பர் பால கணேஷ் )
     நான் கிருஷ்ண தேவராயன் என்னும் முதல் சரித்திர நாவலை ஆனந்த விகடனில் தொடராக எழுதினார் ரா.கி.ரங்கராஜன். தலைப்பே என்னைக் கவர்ந்துவிட்டது. காரணம் இதுவரை தமிழ் சரித்திர நாவல்கள் படர்க்கையில்தான் எழுதப்பட்டுள்ளன. முதன்முறையாக தன்மையில்,  அதாவது தானே சொல்வது போல சரித்திரக் கதை யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. ஆனால் ஆங்கிலத்தில்  ’நான் கிளாடியஸ்’ என்ற நாவலை ராபர்ட் கிரேவ்ஸ் என்பவர் 1934 லேயே எழுதி விட்டாராம். இது ரோமப் பேரரசர் தானே எழுதுவது போல கூறப்பட்ட வரலாற்று நூலாகும். இதனை கமலஹாசன் தனக்கு பிடித்த  புத்தகம் என்றும் தமிழில் சொல்லுங்கள் என்று  கொடுத்ததாக  ரா.கி.ர. கூறுகிறார்.
              ரா.கி.ர முதலில் அதனை மொழிபெயர்த்து எழுத நினைத்தார். பின்னர் அதனை கைவிட்டு அதிகம் அறியப்படாத தமிழகத்தோடு தொடர்புடைய விஜயநகரப் பேரரசின் புகழ்பெற்ற  கிருஷ்ண தேவராயன் தன்வரலாறாக கூறுவது போல எழுதியுள்ளார். ஏகப்பட்ட நூல்களை குறிப்பு நூல்களாக பட்டியலிட்டு அதன் அடிப்படையில் எழுதி இருக்கிறார். சுஜாதா சொன்ன சில ஆலோசனைகளையும் மனதில் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
    (இவர் ஏன் ஆனந்த விகடனில் எழுதினார் என்பது தெரியவில்லை. நியாயமாக குமுதத்தில் தானே எழுதி இருக்க வேண்டும். தகவல் பெட்டகம் பால கணேஷ் கூறக் கடவது)

       சரி கதைக்கு வருவோம். சரித்திரக் கதைகளில் வரும் அடிக்குறிப்புகள் இதில் இல்லை சரித்திரக் கதைகளை தானே சொல்வது  போல் எழுதினால் அதிக கவனம் வேண்டும்.  சொல்லப்படும் காலத்திற்கு பிந்தைய வரலாற்று நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கக் கூடாது . இதனை கவனத்தில் கொண்டே எழுதி இருக்கிறார் ரா.கி.ர. சில இடங்களில் சுஜாதா டச் இருப்பதைக் காணமுடிகிறது.
      கதை என்ன? விஜயநகரப் பேரரசின் சக்கரவர்த்தி  கிருஷ்ணதேவராயரின் மனதை சின்னா தேவி என்ற  பெண் கொள்ளை கொள்கிறாள். விஜயநகர அரச வம்சத்தையே வெறுக்கும் ஒருவன். அவனின் நாடகக் கலை திறமை கொண்ட தங்கைதான் சின்னா தேவி.  முதலில் மன்னன் என்று அறியாத நிலையில் காதலை அங்கீகரிக்கும் அண்ணன் உண்மை அறிந்ததும் தங்கையை அழைத்துக் கொண்டு தலைமறைவாகிவிடுகிறான். காதலில்  தவிக்கும் தேவராயன் சின்னா தேவியை தேடிக்கொண்டிருக்கிறான். 
  அரசியல் காரணங்களுக்கக   ஸ்ரீரங்கப்பட்டினத்து இளவரசி திருமலாம்பிகாவை மணந்தாலும் சின்னாதேவியை கிருஷ்ணதேவராயரால் மறக்க இயலவில்லை. காயத்ரி ( இது கற்பனைப் பாத்திரம்)  என்பவளின் உதவியால் சின்னாதேவியை கண்டறிந்துவிட்டாலும்  அவளை மணமுடிக்க இயலவில்லை.   அவள்  கையில் சங்கும் சக்கரமும் பொறிக்கப்பட்டு இறை பணிக்கு அர்ப்பணிக்கப்பட்டு தேவதாசி ஆகி விட்டதாகவும் மனிதர்களை காதலிக்கும்  உரிமை இல்லை என்றும் கூறுகிறாள் .     ஆனாலும் காதலியை மறக்க இயலாத ராயர் தன் மன ஒட்டங்களையும் காதல்     தவிப்பையும்  தனது கால வரலாற்று சம்பவங்களின் ஊடே விவரிக்கிறார்

    கிருஷ்ணதேவராயனின்  பிரதான அமைச்சர் அப்பாஜி.  மிகுந்த செல்வாக்கு பெற்றவர். அரச குடும்பத்திர்கு விசுவாசமானவர். அவரது உன்மையான பெயர் திம்மராசு. இவர்தான்   கிருஷ்ணதேவராயருக்கு (அவரது தமையனார் வீர நரசிம்மருக்கும்) உறுதுணையாய் இருக்கிறார். இவர் சொல்வதை மன்னர் தட்டுவதில்லை. இவரது ஆலோசனைப்படிதான்  முடிவுகள் எடுக்கப்பட்டன. கிருஷ்ண தேவராயரை மன்னராக ஆக்கியது இவர்தான்.  அதுவும் எப்படிப்பட்ட சூழ்நிலையில்!  கிருஷ்ணதேவராயரின் தமையனார் வீரநரசிம்மர் தனக்குப் பின் தன் மகனுக்கு முடிசூட்ட வேண்டும் என்றும் தம்பி  கிருஷ்ணதேவராயரின் கண்னைப் பறித்து சிறையில் அடைத்து விடும்படி கூறி விடுகிறார். சரி என்று சொல்லிவிட்டு அவனைக் காப்பற்றி விடுவதோடு  வீரநரசிம்மர் இறந்ததும் கிருஷ்ண தேவராயனை முன்னிருத்தி அரசராக்கி விடுகிறார். அதனால் அப்பாஜி மீது அளவற்ற மதிப்பை கொண்டிருக்கிறார்கள் கிருஷ்ணதேவராயரும் அவரது தாயாரும். பிரச்சனை ஏதும் வரக்கூடாது என்பதற்காக வீரநரசிம்மனின் மகன்களான அச்சுதன் ரங்கன்  இருவரையும் அரண்மணைச் சிறையில் வைத்து விட்டார், 

    ஆனால் ஒரு கட்டத்தில் கிருஷ்ண தேவராயர் தன் 6 வயது பாலகன் திருமலைக்கு முடிசூட்ட நினைக்கிறார். அப்பாஜி அதை வேண்டாம் என்று ஆட்சேபிக்கிறார். ஆனாலும் ராயர் உறுதியாக இருக்கிறார். திடீரென இளவரசன்  திருமலை இறந்து விடுகிறார். அந்தப் பழி அப்பாஜி மேல் விழுகிறது. அவர் திருமலையை விஷம் வைத்துக் கொன்று விடுகிறார் என்று வதந்தி நிலவ கிருஷ்ண தேவராயர் கோபம் கொள்கிறார். அப்போது விஜய நகரம் முழுதும் விஷ ஜுரம்( அப்போதைய கொரோனாவோ? ) பரவிக் கொண்டிருந்தது. நிக்கோலஸ் என்ற இத்தாலிய மருத்துவன் விஜயநகரத்தில் மருத்துவ ஆராய்ச்சி செய்து வருகிறான். இளவரசனுக்கு முடிசூட்டு வைபவத்தில்   ஆறுகளில் இருந்து கொண்டு வரப் பட்டு நீண்ட நாளாக வைத்திருந்த புனித தீர்த்ததங்களைக் கொண்டு குளிப்பாட்டுகிறார்கள்.  சரியாக பாதுகாக்கப்படாத இந்த நீரின் காரணமாகத்தான் காய்ச்சல் வந்து இறந்து விடுகிறான் என நிக்கோலஸ் நிரூபிக்கிறான்.  
(இதில் நிக்கோலஸ் சொல்வதாக ஒரு வசனம் இந்த  விஷ  ஜுரத்திற்கு குமரனென்றும் தெரியாது, கிழவனென்றும் தெரியாது .சக்கரவர்த்தி என்றும் தெரியாது. ஆண்டி என்றும் தெரியாது-இப்போது கொரோனாவுக்கும் பொருத்தமாக உள்ளது ஆச்சர்யம்)
இதுவும் ஒருவகை கொரோனா சமுக இடைவெளிதான்

   அதன் பிறகு சமாதானம் அடைந்து அப்பாஜியிடம் மன்னிப்பு கோருகிறார். (ஆனால் சரித்திரம் கூறும் கதை வேறு கடைசியில் சொல்கிறேன்.)

பல்வேரு சம்பவங்களுக்குப் பின் ஆச்சார்ய வெங்கடத்தையா மூலமாக பரிகாரம் செய்யப்பட்டு இறைபணியில் இருந்து விடுவிக்கப் பட்டு  அவளை கிருஷ்ணதேவராயர் திருமணம் செய்து  கொள்வதாக கதை முடியும்

    தன் வரலாறாகச் சொல்வதால் தன்னையே  பெருமைப் படுத்திக் கொண்டு சொல்வது போல எழுது முடியாது என்பதை உணர்ந்து  எழுதி இருக்கிறார் ரா.கி.ரா. கிருஷ்ண தேவராயர் ஒரு அறிஞர்: கவிஞர்: தெலுங்கு, கன்னடம் சமஸ்கிருதம்  அறிந்தவர்: தமிழும் அறிந்திருந்தார். தெலுங்கு  இலக்கியத்தில்  போற்றப்படும்   ஆமுக்த மால்யதா என்ற நூல்  கிருஷ்ண தேவராயரால் எழுதப்பட்டது . இது ஆண்டாள் பாசுரங்கள் அடிப்படையில் எழுதப்பட்டது.    தெலுங்கு இலக்கியத்தில் முக்கிய இலக்கியமாக  இன்றும் கொண்டாடப் படுகிறது.

    ஏராளமான சுவாரசியமான தன் காலத்து வரலாற்றுத் தகவல்களை கிருஷ்ணதேவராயர்   சகஜமான உரையாடல்கள் மூலம்  நகைச்சுவையுடன் கூறுவது ரா.கி.ர வின் எழுத்துத் திறமைக்கு சான்று. பொதுவாக வரலாற்று நாவல்களில்  பேரரசர்கள் கிண்டலும் கேலியுமாக பேசமாட்டார்கள். ஆனால் இதில் கிருஷ்ணதேவராயர் எப்போது   நக்கல் நையாண்டியுடன் பேசுவது சுவாரசியம் கூட்டுகிறது.
     கிருஷ்ண தேவராயருக்கு   நகைச்சுவை உணர்வு  அதிகம் இருந்திருக்கும் என்பதற்கு சான்று அவரது அவையில் அஷ்ட திக்கஜங்கள் என்ற அறிஞர் பெருமக்கள் அவையை அலங்கரித்தனர் என்பதை நாம் படித்திருப்போம். தெனாலி ராமன் எனும் விகடகவியும் இதில் ஒருவர்.
இதை எப்படி கிருஷ்ணதேவராயர் கூறுகிறார் பாருங்கள்
     அஷ்டதிக்கஜங்கள் என்ற எட்டு அறிஞர்கள் இருந்ததாகக் கூறுகிறார்கள்  அவர்கள் அனைவரையும் ஒரு சேர நான் பார்த்ததில்லை. நவரத்தினங்கள் என்ற 9 அறிஞர்களை ஆதரித்த சந்திரகுப்தருக்கு இணையாக என்னை சொல்வதில் இவர்களுக்கு என்ன பெருமையோ என்று தன்னையே கிண்டலடித்துக் கொள்வார்
     ஒரு இடத்தில் இந்தக் கவிஞர்களின் தொல்லை தாங்கமுடியவில்லை என்பார். வடிவேலுவின் ’பாடித் தொலையும்’ என்பது நம் நினைவுக்கு வரும்
   இன்னோர் இடத்தில் ஓவியன் ஒருவன் கிருஷ்ணதேவராயனை அட்டகாசமான ஓவியமாக வரைந்து  காட்ட, அதைப் பார்த்து சிரித்துக் கொண்டே இப்படி ஆஜானுபாகுவாகவா இருக்கிறேன்?. நான் சராசரி பருமன், உயரம் உடையவன்தானே? எனது முகத்தில் அம்மை வடுக்கள் கூட இருக்கிறதே, மிகைப் படுத்திக் காட்டுவதில் கலைஞர்களுக்கு எப்போதுமே மோகம்தான் என்று கிண்டலடிப்பார். வரலாறு முக்கியம் அமைச்சரே என்ற  வடிவேலுவின் இம்சை அரசன் 23 ம் புலிகேசி காட்சி இதில் இருந்து உருவாக்கப் பட்டதாக இருக்கலாம்.

திருப்பதி கோவிலில் ராயர்
   ஒரிடத்தில் திருமலாதேவியும் சின்னா தேவியும் ஒருவரை ஒருவர் அக்காஜி என்று அழைத்துக் கொளவார்கள் இதில் யார் அக்காஜி யார் தங்கை ஜி என்று கிண்டல் செய்வார் ராயர்.
 (கிருஷ்ணதேவராயர்- சின்னாதேவி, திருமலாம்பாவோடு காட்சி தரும் சிலைகள் இன்றும்  திருப்பதியில் காணலாம்)

 பல  சுவாரசியமான தகவல்களைத் நிறைந்தது இந்நூல்  
      ராயரின் தாயார் தனயனின் காதலை ஆதரித்தாலும் ஆச்சார்யர் வெங்கட தத்தையாவின் அனுமதி கோருகிறார் .அவர் மறுக்கிறார். நீங்கள் அனுமதிக்காவிட்டால் அவன் சைவனாக மாறிவிடுவான் மதமாற்ற பிளாக்மெயில் செய்ய  அவரும் பயந்து பரிகாரம் கூறுவது சுவாரசியம். 
        கிருஷ்ணதேவராயர் இஸ்லாமியர்களையும் மதித்தார். அவரது படையில் முஸ்லீம்கள் இருந்தனர். அரசரைப் பார்க்க வரும் முஸ்லிம் பெரியவர்கள் தலைகுனிந்து  வணக்கம் செலுத்துவதில் சங்கடப் படுவதை உணர்ந்த ராயர். ஒரு சிம்மாசனம் செய்து அதில் குர்ஆனை வைத்தாராம். அதனால் சங்கடம் இன்றி வணக்கம் செலுத்தினர் (என்னா ஐடியா?)

        பல அதிர்ச்சி தரும் மூடப்பழக்கங்கள் இக்காலத்தில் வழக்கத்தில் இருந்தன.  உடன் கட்டை ஏறுதல் எனபதை அறிந்திருப்போம், ஆனால் இதில் கூறப்படும்  முறை  கொஞ்சம் பயங்கரமானது. ஆழமான குழி தோண்டி இறந்த கணவனை  குழியில் இறக்கி கூடவே மனைவியையும்  உயிருடன் குழியில்  இறக்கி  கொஞ்சம் கொஞ்சமாக  மண்ணைப்போட்டு மூடுவதே அது. 
   
   ஒரு நல்ல வித்தியாசமான சரித்திர நாவல் படித்த அனுபவம் என்றாலும் இதில் குறைகள் இல்லையா என்றால்  இருக்கிறது. தற்கால வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தியது. சில வரலாற்று உண்மைகளைக் கூறாமல் விட்டது  கற்பனைப் பாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது என்பன அவற்றில் சில.
     கிருஷ்ணதேவராயன் தன் மகனைக் கொன்றுவிட்டதாக கோபம் கொண்டு  தான் அதுவரை போற்றி மதித்துவந்த மந்திரி அப்பாஜி என்ற திம்மராசு  மற்றும் அவரது  மகனின்   கண்களைப் பறித்து சிறையில் அடைத்ததாக வரலாறு சொல்கிறது. பின்னர் இதனை தவறென்று உணர்ந்து வருந்தியதாக கூறப்படுகிறது.  ”கிருஷ்ண தேவராயர்”  தெலுங்குப் படத்திலும் இப்படித்தான் காட்டுகிறார்கள். ஆனால் ரா.கி.ர. இதனைக் குறிப்பிடவில்லை 
அப்பாஜி சிறை வைக்கப்பட்ட இடம்
       கிருஷ்ண தேவராயருக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பு உண்டு. தமிழ்நாட்டில் தெலுங்கு பேசும் மக்கள் குடியேறியதற்கு முக்கியக் காரணம் விஜயநகர ஆட்சிதான்   மதுரையில் நாயக்கர் ஆட்சிக்கு அனுமதித்ததும் கிருஷ்ணதேவராயர்தான்.
      இந்நூலும்   சு வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டத்தின் முற்பகுதி ஒரே வரலாறைத்தான் சொல்லுகின்றன. ஆனால் இருவரும் அவரவர் விருப்பத்திற்கேற்ப கொஞ்சம் மாற்றி எழுதியுள்ளதாக  தெரிகிறது. கிருஷ்ண தேவராயரின் தளபதி நாகம நாயக்கர் விஜயநகரத்தின் கீழுள்ள தமிழ்நாட்டின் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டார். ஆனால் அவர் கிருஷ்ணதேவராயருக்கு கீழ்ப்படியாது தானே அரசு அமைக்க முற்பட அவரை அடக்க  நாகம நாயக்கரின் மகனான விஸ்வநாத நாயக்கனை அனுப்புகிறார். அவனும் தந்தையை சிறைப்பிடித்து கிருஷ்ணதேவராயர் முன் நிறுத்துகிறார். அவனது வீரத்தையும் விசுவாசத்தையும்  மெச்சி தமிழகப் பகுதியை சில நிபந்தனைகள் விதித்து ஒப்படைத்து விடுகிறார். அதில் இருந்து மதுரையில் நாயக்கர் ஆட்சி  தொடங்கியது. இந்த வம்சத்தில் சிறப்பு பெற்ற்வர் திருமலை நாயக்கர்,  இராணி மங்கம்மாள், இராணி மீனாட்சி இவர்கள் வழிவந்தவர்களே. 

      இது தொடராக வந்தபோதே படித்திருந்தாலும் மீண்டும் படித்து ரசிக்க வாய்ப்பு கொடுத்தது கொரோனா ஊரடங்கு.  மறு வாசிப்பும் சுவாரசியம்தான். 
கொரோனா ஊரடங்கின் ஆரம்பத்தில்  எழுதிய பதிவு சரி பார்த்து இன்றைய இன்று உலக புத்தக தினத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சி
---------------------------------------------------------செவ்வாய், 14 ஏப்ரல், 2020

கிணற்றுத் தவளைகள்


                                           கிணற்றுத் தவளைகள்

 குதித்து விளையாடிய தவளை 
கிணற்றிடம்சொன்னது
உன்னைவிடப் பெரிய
கடல் இல்லை

வெள்ளம் வந்து 
கிணறு மூழ்கியது
வெள்ளத்தில் அடித்து சென்ற தவளைக்கு 
இடம் கிடைத்தது  
இன்னொரு கிணற்றில் 

தவளைக்கு தலைகால் புரியவில்லை
புதிய கிணற்றை பெருங்கடல்
என்று கொண்டாடியது

காலப்போக்கில் தவளைக்கு
கிணறு தாவுதல் சகஜமானது

பிழைக்கத் தெரிந்த தவளை 
கிணறுகளை கடல்களாக்கிக் 
கொண்டிருந்தது

தவளை மட்டுமல்ல 
தன்னையே 
கடலாக வரித்துக் கொண்டிருக்கும் 
கிணறுகளுக்கும் 
ஒரு போதும் தெரியப் போவதில்லை 
கடல் என்று ஒன்று இருப்பது


---டி.என்.முரளிதரன்-
**********************************************************************************

 முந்தைய பதிவு படித்து விட்டீர்களா?
தமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி?
சனி, 11 ஏப்ரல், 2020

தமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி?


        தமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சுகாதாரத் துறை பம்பரமாக சுழன்று வருகிறது. கொரோனா ஏற்படுத்தும் அச்சம் ஒருபுறம் இருக்க,  21 நாள் ஊரடங்கு உத்தரவு வேறு வித விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. உலகப் போர்களின்போது இந்த அளவு பதட்டம் இருந்திருக்குமா என்பது ஐயமே.  பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலம் இன்னும் மோசமாக இருக்கும் என்று அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறது. உலகம் முழுதுமே இது பேரிடரை எதிர்கொள்ள தடுமாறி வருகிறது  கூட்டம் கூடுவதை தடுப்பது சவாலான பணியாக உள்ளது 
        இந்நிலையில் மருத்துவ  சோதனை செய்யவும் போதுமான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும் மேலும் கொரோனா பரவாமல்  தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை சமாளிக்கவும் ஏராளமான நிதி தேவைப்படுவதை நாம் அறிவோம்.. தமிழக முதல்வர் அவர்கள் 13000 கோடி ரூபாய் கோரியுள்ளார். எதிர்கட்சிகளும் அதிக நிதி ஒதுக்கக் கோரியுள்ளன
     மத்திய அரசு மாநிலங்களுக்கான பேரிடர் மேலாண்மை நிதியை மாநிலங்களுக்கான தன் பங்கில்  50% விடுவித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு 510 கோடி முதல் தவணையாக விடுவிக்கப் பட்டுள்ளது.
    பாதிப்பு நிலையில் இரண்டாவதாக உள்ள தமிழ்நாட்டிற்கு குறைவான நிதி பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களுக்கு அதிகமான நிதி இது எப்படி சரியாகும்.  என்று  கேள்விகள் எழுந்துள்ளன மத்திய அரசு பாரபட்சம் பார்த்து நிதி ஒதுக்கி உள்ளது என்று கோபம் கொள்வதும் இயல்பானதே . 
         எப்படித்தான் இந்த ஒதுக்கிடு செய்யப்படுகிறது  என்பதை அறிய  முயற்சி செய்தேன்.விடை கிடைத்தது. நான் இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.
   ஒதுக்கீட்டை நியாயப் படுத்துவதற்காக எழுதுபட்டது அல்ல என்பதை தெரிவித்துகொள்கிறேன். எப்படி செய்யப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளும் முயற்சியே இந்த பதிவு
   இதுபோன்ற ஒதுக்கீடுகள். செய்வதற்கு ஏதாவது ஒரு  மூலம் இருக்க வேண்டும் அல்லவா. அது எது?
    கடைசியாக  அமைக்கப்பட்ட  நிதிக்குழுவின் அறிக்கைதான் அது. அதன் பரிந்துரைப்படிதான் மானியங்கள்,வரிப்பங்கீடுகள் உள்ளிட்ட  நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன மாநிலங்கள் வாரியான ஒதுக்கீடு மாநிலங்களில் பெறப்பட்ட நிதித் தகவல்களின் அடிப்படையில் பல்வேறு காரணிகளைக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது. நிதிகுழுக்களின் பரிந்துரைகளுக்கும் மாநிலங்கள் ஆட்சேபம் தெரிவிக்கவும் செய்கின்றன.
   15 வது நிதிக் குழு என்.கே .சிங் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டு முதல் அறிக்கையை நவம்பர் 2019 இல் அளித்துள்ளது.அதில் உள்ள பல்வேறு அம்சங்களில்  பேரிடர் நிதி ஒதுக்கீடு மற்றும் பேரிடர் வாய்ப்புக்குறியீட்டு எண் (Disaster Risk Index) அடிப்படையாகக் கொண்டு இரண்டு விதமான பேரிடர் நிதிகளுக்கு நிதி பரிந்துரைக்க்பட்டு உள்ளன
மாநில பேரிடர் வாய்ப்பு நிர்வாக நிதி (State Disaster Risk Management Fund)
தேசிய பேரிடர் வாய்ப்பு நிர்வாக நிதி (National Disaster Risk Management Fund)

  இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள  கணக்கீட்டின் அடிப்படையில் (SDRMF) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும்  மத்திய அரசின் நிதி எவ்வளவு மாநில அரசு தன்பங்குக்கு உருவாக்க வேண்டிய நிதி எவ்வளவு என வரையறை செய்துள்ளது இந்நிதிக்குழு.. அது எவ்வாறு கணக்கிடப்பட்டது என விளக்கமும் கொடுக்கப் பட்டுள்ளது.
        வெள்ளம் வறட்சி  புயல் பூகம்பம், மற்றவை என   ஏற்படக் கூடிய  பேரிடர்களின் சாத்தியங்கள் மற்றும் ஏழ்மை நிலையின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டு குறியீட்டு எண்  நிர்ணயிக்கப் படுகிறது.
அதன் படி 15 வது நிதிக் குழுவின்  Disaster Risk Index  கீழே உள்ள அட்டவணையில் காணலாம்

  இந்தக் குறியீட்டு எண்  வெள்ளம்,வறட்சி,பூகம்பம், புயல் மற்றவற்றால் மாநிலங்களின் நில அமைப்புக்கேற்ப  பாதிக்கப் படும் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது
மேலுள்ள் குறியீட்டு எண்ணைப் பயன்படுத்தி எப்படி கணக்கிடு செய்யப்படுகிறது என பார்க்கலாம்

முந்தைய ஆண்டுகளில் எவ்வளவு தொகை பேரிடர் சார்ந்து செலவழிக்கப் பட்டுள்ளது , மக்கள் தொகை, பரப்பளவு இதுவரை பாதிக்கப்ட்ட விவரங்கள் முதலியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகிறது,

ஃபார்முலா இதுதான்:
ஒதுக்கீட்டுத்தொகை =  W * DRI + W
   இதில் W = AE70 + A15 + P15
DRI =மேலே பட்டியலில் உள்ள பேரிடர் குறியிட்டு எண்

AE70 = கடந்த 7 ஆண்டுகளில் செலவுசெய்யப்பட்ட சராசரித் 
            தொகையில் 70%
A15  =    பரப்பளவில் 15%
P15 =   மக்கள்தொகையில் 15%

 மேலுள்ள மூன்றையும் கூட்டி அதனுடன் DRI குறிட்டு எண்னை தமிழகத்துக்கு (0.550) பெருக்கி இதனுடன் மூன்றின் கூடுதலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
அதாவது  W * DRI + W
இதனுடன் சேர்த்து ஆண்டுக்கு5% சத வீத பண வீக்கமும் சேர்க்கப்பட வேண்டும். இவ்வாறு கணக்கிடப்பட்டு கீழ்க்கண்டவாறு இத்தொகையில் 75% மத்திய அரசு வழங்கும் 25%  மாநில அரசு நிதி ஒதுக்க வேண்டும்.தமிழகத்தை பொறுத்தவரை 1020 கோடியில் முதல் தவணையாக  தற்போது 510 கோடியை விடுவித்துள்ளது.

தேசிய பேரிடர் வாய்ப்பு நிர்வாக நிதி (National Disaster Risk Managent Fund) இந்த நிதி நாடுமுவதும் பொதுவான செலவினத்திற்கானது. இதில் இருந்தும் நிதி வழங்கலாம்.


             State-wise Allocation of SDRMF (2020-21     
State               Total                                                    Central
                      Share
                   State 
                    share
AndhraPradesh 1491 1119 372
Arunachal prades 278 250 28
Assam 858 772 86
Bihar 1888 1416 472
Chhattisgarh 576 432 144
Goa 15 12 3
Gujarat 1765 1324 441
Haryana 655 491 164
Himachal 454 409 45
Jharkhand 757 568 189
Karnataka 1054 791 263
Kerala 419 314 105
Madhya 2427 1820 607
Maharashtra 4296 3222 1074
Manipur 47 42 5
Meghalaya 73 66 7
Mizoram 52 47 5
Nagaland 46 41 5
Odisha 2139 1604 535
Punjab 660 495 165
Rajasthan 1975 1481 494
Sikkim 56 50 6
Tamil 1360 1020 340
Telangana 599 449 150
Tripura 76 68 8
Uttar 2578 1933 645
Uttarakhand 1041 937 104
West 1348 1011 337
All 28983 22184 6799    இது எப்படிக் கணக்கிடப் படுகிறது என்பதை அறிவதற்காக ஆர்வக் கோளாறால் எழுதப் பட்டது இப்பதிவு என்பதை ஏற்கனவே கூறிவிட்டேன்.

இந்த நிதிக்குழு அறிக்கை மாநிலங்களுக்கு கட்டாயம் தெரிவிக்கப் பட்டு இருக்கும். மாநிலங்களின் பிரதிநிதிகளும் இதில் இடம் பெற்றிருப்பர். மக்கள் பிரதிநிதிகள் இதுபோன்ற அறிக்கைகளை நன்கு அறிந்து விவாதித்து அதன் குறைகளை போக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். எதன் அடிப்படையில் நிதி வழங்கப் படுள்ளது அதன் மூலக் காரணிகளை அறிந்து ஆட்சேபத்தை தெரிவிக்க வேண்டும்., (இன்றுதான் நிதிக் குழு சார்ந்த கோரிக்கைகளை  மத்திய அரசிடம் எழுப்பி உள்ளது. (இப்போதுதான் படித்திருப்பார்களோ?))

இக்குழு 2020-21 க்கான அறிக்கையினை மட்டுமே சமர்ப்பித்துள்ள நிலையில் நிதிக்குழுவின் காலம் அக்டோபர் 2020 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது 2025-26 வரையிலான நிதிப் பரிந்துரைகளை அளிக்க உள்ளது.

        சில புள்ளி விவர கணக்கீட்டு முறைகள்( இவை அறிவியல் ஏற்றுக் கொண்ட முறைதான்) நடைமுறைகளுக்கு முரணாக இருப்பது வழக்கம்.
முன்பு ஒருமுறை திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா  ஒரு இந்தியனின் தனி நபர் நுகர்வு சராசரியாக நாளொன்றுக்கு ரூ 32-க்கு குறைவாக இருந்தால் அவர் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவராகக் கருதப்படுவார். என்று கூறியது நினைவிருக்கலாம்.

   கிரிக்கெட் விளையாட்டில் டக் ஒர்த் லூயிஸ் முறையில்  13 பந்துகள் 22 ரன்கள் வெற்றிபெறத் தேவை என்ற நிலையில் மழையால் ஆட்டம் தடைபட மீண்டும் ஆட்டம் தொடங்க,  பந்துகள் குறைக்கப்பட்டு 1 பந்து 21 ரன்கள் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம், இந்தக் கணக்கீட்டு முறை சிக்கலானது.

பாபி பிரேகன் என்பவர் சொன்னபடி
ஒரு கால்  நெருப்பிலும் இன்னொரு கால் ஐஸ் கட்டியின் மீதும் இருந்தால்  சராசரி வெப்ப நிலைப்படி உங்களுக்கு பிரச்சனை ஏது மில்லை என்று சொல்வதுதான் புள்ளி இயல்
எப்படி இருப்பினும்  எல்லாப் பேரிடரையும் ஒன்றாகக் கருதாமல் இதனை தனிப்பட்டதாகக் கருதி கூடுதல் நிதி ஒதுக்கப் படவேண்டும்  என்பதே எனது கோரிக்கையும் விருப்பமும் ஆகும்.  பிஎம் கேர்ஸ் இதை நிறைவேற்றுமா எனப் பார்ப்போம்

---------------------------------------------------------------------------------------------------
நன்றி:https://fincomindia.nic.in/

15 வது நிதிக்குழு அறிக்கை
 https://fincomindia.nic.in/ShowContent.aspx?uid1=3&uid2=0&uid3=0&uid4=0