என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 17 நவம்பர், 2020

குமுதத்தில் என் கதை -நியாயம்

 


   நீண்ட  நாட்களுக்குப் பிறகு குமுதம்  25.11.2020 தேதியிட்டு இதழில் என்  ஒரு  பக்கக்  கதை "நியாயங்கள்    பிரசுரமாகி உள்ளது.  அனுப்பி இரண்டு வாரங்களுக்குள் பிரசுரமாகி இருப்பது ஆச்சர்யம்தான். இதுவரை வெளியான எனது கதைகள் அதிகபட்சம் 3 வாரங்களுக்குள் வெளியிடபட்டுள்ளது. 4 வாரங்கள் ஆகிவிட்டால் வராது என்று  தெரிந்து கொள்ளலாம்.  குமுதம் ஆசிரியர் திரு பிரியா கல்யாணராமன் அவர்களுக்கு நன்றி  இதற்கு முன்பு குமுதத்தில்  ஒரு சிறுகதையும்  சில ஒரு பக்க கதைகளும் வெளியானது . மிக விரைவாக பரிசீலிப்பது மட்டுமல்லாமல் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் குமுதத்திற்கு  நன்றி 

இதோ கதை 

நியாயங்கள்

                                                                                        டி.என்.முரளிதரன்

          அந்தப் பேருந்து நிறுத்தத்தில் நிறையப்பேர் காத்துக் கொண்டிருந்தனர். நேரம் கடந்ததே தவிர பேருந்துகள் நிற்காமல் சென்றன. காத்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் பொறுமை இழந்து  கத்த ஆரம்பித்து விட்டார்.

       என்ன இது எந்த பஸ்ஸும் நிறுத்தாம போறான். இந்த ஸ்டாப்ல நிக்கறவன் எவனும் மனுஷனா தெரியலயா? அநியாயமா இருக்கேசும்மாவா ஏத்திக்கிட்டுப் போகப்போறான். காசு குடுத்துத்தானே போகப் போறோம்?”

    இங்க ஒயிட் போர்டு பஸ்தான் நிக்கும், மஞ்ச போர்டெல்லாம் நிக்காதுஎன்றார் இன்னொருவர்

பஸ் காலியாத்தான போகுது. நிறுத்தி ஏத்திக்கிட்டா என்ன குறைஞ்சா போயிடும்?. நாமளும் ஆஃபீஸ் போக  வேண்டாமா?. ஆஃபீஸ் நேரத்தில எல்லா பஸ்ஸும் இப்படியே வந்தா எப்படி?......”  கோபத்துடன் தொடர்ந்தார்.

        மஞ்சள் போர்டு பஸ்தான் வந்தது. ஆனாலும் நிறுத்தி ஏற்றிக் கொண்டார் டிரைவர். அவர் ரொம்ப நல்லவர்  போலிருக்கிறது. அடுத்தடுத்த எல்லா நிறுத்தத்திலும் பஸ்ஸை நிறுத்தி மக்களை ஏற்றிக் கொண்டார்.
        இது என்ன அநியாயமா இருக்கே. மஞ்ச போர்டு போட்டுட்டு எல்லா ஸ்டாப்லயும் நிறுத்தினா என்ன அர்த்தம்?. நாம நேரத்திற்கு ஆஃபீஸ் போக வேண்டாமா? காசு மட்டும் அதிகமா வாங்கறாங்க இல்ல?” என்று யாரோ சத்தம் போடும் குரல் கேட்டு அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.   சத்தம் போட்டவர், வேறு யாருமில்லை. பஸ் ஸ்டாப்பில் பஸ் நிற்கவில்லை என்று முன்பு பொங்கினாரே  அவரேதான்.

   -------------------
 
முந்தைய பதிவுகள்
 
 

13 கருத்துகள்:

  1. அதானே... தான் நினைத்தது முடிந்தபின்... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  2. குமுதத்தில் வந்தமைக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. இன்றைய யதார்த்தம்
    அருமை
    வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
  4. முரளி: இதுபோல் ஒரு யதார்த்த கதையை எழுதி குமுதத்தின் தரத்தை உயர்த்திட்டீங்க! :)

    பதிலளிநீக்கு
  5. அருமை. சிறப்பு. நேரத்திற்கேற்றாற் போல மாறும் மனித மனத்தை அழகாக படம் பிடித்திருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  6. குமுதத்துக்கோ விகடனுக்கோ கதை அனுப்புவது எப்படி? ஏதெனும் மின்னஞ்சல் உள்ளதா? தகவல் உதவி செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. ஒரு பத்திரிகைக்கு படைப்புகள் அனுப்பு முன் அந்தப்புத்தகத்தை வாங்கிப்படியுங்கள். அதில் ஒரு பக்கத்தில் தபால் முகவரி, மின்னஞ்சல் முகவரி ஆசிரியர் விவரம் முதலியவை இருக்கும்.ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு பாணி உண்டு. அதற்கேற்றவாறு படைப்புகளை அனுப்ப வேண்டும். குமுதம் மின்னஞ்சல் முகவரி edtl@kumudam.com

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895